ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இலங்கை பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, இரண்டு டசின் பேர் காயமடைந்தனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கொழும்பில் இருந்து வடகிழக்கே 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரம்புக்கனையில் சமீபத்திய எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இலங்கை பொலிஸ் நேற்று ஒருவரை சுட்டுக் கொன்றதுடன் சுமார் 27 பேர் காயமடைந்தனர்.

ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில் முறையே இலங்கை-இந்திய எண்ணெய் நிறுவனம், அரசுக்கு சொந்தமான பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியதை எதிர்த்து, நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு அலைகள் வெடித்தன.

சமிந்த லக்ஷான் (Photo: Facebook)

திங்கள்கிழமை 18ம் தேதி நடந்த கொடூரமான பொலிஸ் தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர், இறந்தவர் ரம்புக்கனைக்கு அருகிலுள்ள நாரம்பெத்த கிராமத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதான சமிந்த லக்ஷான் என்று உலக சோசலிச வலைத் தளத்திடம், கூறினார். அவர் தனது லாரியில் செல்வந்தர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் யானைகளுக்கு தீவனம் விநியோகம் செய்பவராவார்.

ஏனைய பிரதேசங்களைப் போன்று கடந்த மூன்று நாட்களாக ரம்புக்கனை எரிபொருள் விநியோக நிலையத்தில் பெற்றோல் அல்லது டீசல் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்திருந்தனர். திங்கள்கிழமை இரவு, பெட்ரோல் தாங்கி ஒன்று எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு வந்தது. நேற்றைய தினம் விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட போது, பல நாட்களாக காத்திருந்தமையினால் மக்கள் முந்தைய விலைக்கே எரிபொருளைக் கோரினர்.

அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, மக்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில் பாதைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரம்புக்கனை மற்றும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். நண்பகலில் நிலைமை மிகவும் பரபரப்பானது. மக்கள் செல்ல மறுத்ததால், பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். திடீரென்று, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், பொலிசார் கூட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

காட்டியன் ஊடகம் வெளியிட்ட வீடியோ காட்சிகள், 'ஒரு சிரேஷ்ட அதிகாரி முழு கலக தடுப்பு உடை அணிந்திருந்த மற்றவர்களுக்கு, 'சுடு, சுட்டு அவர்களை விரட்டு' என்று கட்டளையிட்டார்.

ஏப்ரல் 19, 2022 அன்று ரம்புக்கனையில் பொலிஸ் தாக்குதலுக்குப் பின்னர் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் (Photo: Facebook)

காயமடைந்தவர்கள் ரம்புக்கனை மற்றும் கேகாலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லக்ஷான் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த 5 பேர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாலையில் ரம்புக்கனை பொலிஸ் பகுதியில் காலவரையற்ற ஊரடங்குச் சட்டத்தை பொலிஸார் அறிவித்தனர். மக்கள் அப்பகுதி வழியாக செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொலிசார் அவர்களின் கொடூரத்தனத்திற்குப் பேர்போன சிறப்பு அதிரடிப் படைப் பிரிவுகளையும் திரட்டியுள்ளனர். கற்களை வீசியதை அடுத்தே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்றைய போராட்டத்திற்கு உடனடி காரணம் சமீபத்திய எரிபொருள் விலையேற்றம் ஆகும். எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனக் கோரி இலட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் இப்போது இரண்டு வாரங்களுக்கும் மேலாக வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் சுமார் 10,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடி “கோட்டா வீட்டுக்கு போ” என்ற கோஷத்தை எழுப்பியுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பணவீக்கம், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை, நீடித்த மின்வெட்டு ஆகியவற்றால் மக்கள் கோபமடைந்துள்ளனர்.

இதே கோஷத்தை முன்வைத்து அண்மைய நாட்களில் ரம்புக்கனையிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

19 ஏப்ரல் 2022 அன்று ரம்புக்கனை இரயில் பாதையை மறித்து எரிபொருள் கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் (Photo: Facebook)

ரம்புக்கனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீதான பொலிசாரின் வன்முறைத் தாக்குதல் முன்னறிவிப்பின்றி நடத்தப்பட்டது. இது வேண்டுமென்றே எதிர்ப்பாளர்களை மிகவும் பரந்த அளவில் அச்சுறுத்தும் முயற்சியாகும். மணிக்கணக்கில் இரயில் பாதையை மறித்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது என்ற முடிவு மேல் மட்டத்தில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கும்.

அரசாங்கம் முன்னெப்போதும் இல்லா வகையில் ஒரு பொருளாதார அரசியல் மற்றும் சமூக நெருக்கடியை எதிர்கொள்கிறது, அதற்கு உழைக்கும் மக்கள் மீது புதிய சுமைகளை சுமத்துவதைத் தவிர வேறு பதில் இல்லை. மத்திய வங்கி வெளிநாட்டுக் கடன்களை தற்காலிகமாகத் திருப்பிச் செலுத்தவில்லை என அறிவித்துள்ளதுடன் இலங்கையின் பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) அவசர உதவிக்காக கெஞ்சுவதற்கு தற்போது வாஷிங்டனில் உள்ளனர்.

இராஜபக்ஷ ஆட்சி தமக்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் வகையில், போராட்ட இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறது. ஜனாதிபதி இராஜபக்ஷ தனது புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் ஆற்றிய உரையில், 'சந்தர்ப்பவாதிகள் போராட்டத்தை கலவரமாக மாற்ற அனுமதிக்க வேண்டாம்' என்று எதிர்ப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்து மெல்லிய எச்சரிக்கையை விடுத்தார்.

எவ்வாறாயினும், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு உணவை பகிர்ந்து உயிர்வாழ்வதை கடினமாக்கும் நிலைமைகள் விரைவாக மோசமடைந்து வருவதால் எதிர்ப்புக்களுக்கு உந்தப்படுகின்றனர்.

இந்த வார அதிகரிப்புடன், இந்த ஆண்டு மட்டும் பெட்ரோல் விலை 91 சதவீதமும், டீசல் விலை 139 சதவீதமும் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் எண்ணெய் விலையை உயர்த்திய உக்ரேன் போரின் நேரடி விளைவு இதுவாகும்.

எரிபொருள் விலையில் மிகப்பெரிய உயர்வானது சங்கிலித் தொடர் விளைவைக் கொண்டிருக்கிறது. இது போக்குவரத்து மற்றும் பல பொருட்களின் விலையை உயர்த்துகிறது. பஸ் கட்டணத்தை 35 சதவீதம் உயர்த்த அரசு நேற்று பச்சைக்கொடி காட்டியது. மேலும், அனல் மின் உற்பத்திக்கு தேவையான டீசலுக்கு கட்டணம் செலுத்த முடியாததால், தினசரி மின்வெட்டு தொடர்கிறது.

நேற்று, தீவின் பிரதான கோதுமை மா உற்பத்தி நிறுவனம், ஒரு கிலோகிராம் மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிப்பதாக அறிவித்தது. உடனடியாக, பேக்கரி உரிமையாளர்கள் 400 கிராம் பாணின் விலையை 30 ரூபாவினால் அதிகரித்ததுடன், ஏனைய பொருட்களின் விலையையும் உயர்த்தியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்யப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் தவிர்க்க முடியாமல் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை கொண்டு வருவதன் காரணமாக, உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் நிலைமை இன்னும் மோசமடையும். IMF ஏற்கனவே ஒரு பிணை எடுப்பு கடனுக்காக என்ன கோரும் என்பதை பொது வார்த்தைகளில் வகுத்துள்ளது. இதில் வரவு-செலவு திட்ட பற்றாக்குறையை பாரியளவு குறைத்தல், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் பெறுமதி சேர்ப்பு வரிகளை அதிகரிப்பது ஆகியவையும் அடங்கும். இது மக்களில் ஆகவும் வறிய பகுதியினரை கடுமையாகப் பாதிக்கும்.

இந்த நடவடிக்கைகள் பொதுத்துறை வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களில் பாரிய வெட்டுக்கள், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் தனியார்மயமாக்கல் அல்லது கூட்டுத்தாபனமாக்கல், சமூக திட்டங்களை அகற்றுதல் மற்றும் இலவச பொதுக் கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் இன்னும் ஆழமான வெட்டுக்களாக முன்னெடுக்கப்படும்.

இந்த சிக்கன நடவடிக்கை திட்டத்தை ஜனநாயக ரீதியாக திணிக்க முடியாது. இது உழைக்கும் மக்களிடமிருந்து உறுதியான எதிர்ப்பை சந்திக்கும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) நேற்று ரம்புக்கன எதிர்ப்பாளர்கள் மீதான கொடூரமான தாக்குதலை சமரசமின்றி இடமின்றி கண்டிக்கிறது. அரசாங்கம் திரைக்குப் பின்னால் எவ்வாறு தயாராகிறது என்பதற்கு -எதிர்ப்பு இயக்கத்தை வன்முறையாக ஒடுக்குவதற்கு இராணுவம் மற்றும் பொலிசைப் பயன்படுத்துவது- இது ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி உழைக்கும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காகப் போராடுவதற்கான உரிமையைப் பாதுகாக்கிறது. இந்த விடயத்தில், தங்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள நியாயமான விலையில் எரிபொருளை பெறக்கூடியதாக இருக்க வேண்டும். அரசாங்கமும் பெருநிறுவனங்களும் இலாயக்கற்றவையாக இருந்தால், எரிபொருள், உணவு, மருந்துகள் மற்றும் பிற அடிப்படைப் பொருட்கள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்ய தொழிலாள வர்க்கம் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகள், வேலைத் தளங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புறநகர்ப் பகுதிகளில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை அமைக்க சோ.ச.க. வலியுறுத்துகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் இழப்பில் செல்வந்தர்களின் தேவைகளுக்கு சேவை செய்கின்ற இந்த இலாப நோக்கு அமைப்பைப் பாதுகாத்துவரும் தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளில் இருந்து சுயாதீனமாக இந்த நடவடிக்கைக் குழுக்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காக போராடுவதற்கான ஒரு சோசலிச வேலைத் திட்டத்தை அபிவிருத்தி செய்கின்றது.

Loading