ஜேர்மன்-ஐரோப்பிய போர் திட்டங்கள்: மக்ரோனின் தேர்தல் வெற்றியை அரசியலும் ஊடகங்களும் கொண்டாடுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரெஞ்சு ஜனாதிபதியாக இமானுவல் மக்ரோன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜேர்மன் அரசியல்வாதிகள் மத்தியில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.

சரியாக பிரான்ஸ் தேர்தலின் மாலையில், ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ் (சமூக ஜனநாயகக் கட்சி - SPD) ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டார்: “அன்பான ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு, வாழ்த்துக்கள், மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வாக்காளர்களும் இன்று ஐரோப்பாவிற்கான உங்கள் கடமைப்பாடு குறித்த வலுவான செய்தியை அனுப்பியுள்ளனர். நாம் நமது ஒத்துழைப்பை சிறப்பாகத் தொடருவோம் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!”

மார்ச் 10, 2022 அன்று வேர்சாய் அரண்மனைக்கு ஐரோப்பி ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு வருகை தரும் ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸை பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் (இடது) வரவேற்கிறார் (AP Photo/Michel Euler, File)

அரசாங்கத்திலும் எதிர்க் கட்சியிலும் உள்ள முன்னணி பிரதிநிதிகளும் இதேபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தினர். “இப்போது என் மனதில் மகிழ்ச்சி நிரம்பி இருப்பதை நான் மட்டும் உணரவில்லை என்று உறுதியாக நான் நம்புகிறேன். ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கும் எனது சகாவான ஜே. டுனோர்மாண்டிக்கும் வாழ்த்துக்கள்!” என பசுமைக் கட்சியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மந்திரி செம் ஒஸ்டெமிர் கூறினார்.

SPD தலைவர் சஸ்கியா எஸ்கென், “நான் கொண்டாடுகிறேன்! இமானுவல் மக்ரோனுக்கும் எங்கள் பிரெஞ்சு நண்பர்களுக்கும் பெரும் நிம்மதி, மேலும் அவர்களுக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள்!” என்று குறிப்பிட்டார்.

தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (FDP) தலைவரும் ஜேர்மனியின் நிதி அமைச்சருமான கிறிஸ்டியான் லிண்ட்னர், மக்ரோனின் வெற்றியை ‘திசை அமைக்கும் தேர்தல்,’ என்று விவரித்தார், அதாவது, “ஐக்கிய ஐரோப்பா இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியாளராக உள்ளது. பிரான்ஸ் வாழ்க, ஐரோப்பா வாழ்க” என்கிறார்.

தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீட்டு கட்சி (AfD) தவிர, அதன் தலைவர் டினோ சுருபல்லா ‘எங்கள் பங்காளி மரின் லு பென்னை’ வாழ்த்தினார் என எதிர்க் கட்சிகளும் கோரஸில் இணைந்து கொண்டன.

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்தின் (CDU) தலைவர் Fredrich Merz மக்ரோனுடன் “ஐரோப்பாவும் இன்று வெற்றி பெற்றுள்ளது” என்று அறிவித்தார். மேலும் துரிங்கியா மாநில பிரதமர் போடோ ரமேலோ (இடது கட்சி) இவ்வாறு கூறி மகிழ்ந்தார்: “ஜனாதிபதி மக்ரோனின் தேர்தல் ஐரோப்பாவிற்கும் பிராங்கோ-ஜேர்மன் உறவிற்கும் சிறந்தது. ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு வாழ்த்துக்கள்.”

அரசியல்வாதிகளும் ஊடகங்களும் தேசியவாதம் மற்றும் வலதுசாரி தீவிரவாதத்தை தாங்கள் எதிர்ப்பதாகக் கூறி மக்ரோனை ஆதரிக்கும் தங்கள் மந்திரத்தை நியாயப்படுத்துகின்றனர். உதாரணமாக, பசுமைக் கட்சித் தலைவர் ஓமிட் நூரிபூர், “பிரெஞ்சு தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரவாதப் பேச்சுக்களை இயல்பாக்குவது ஒரு எச்சரிக்கை ஆகும்,” என்று ட்விட்டரில் எச்சரித்தார். “ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்காக நமது முழு பலத்துடன் நின்று நமது ஐரோப்பிய மதிப்புகளை பாதுகாப்பது” இப்போது அவசியமாக உள்ளது.

இவையனைத்தும் வெளிப்படையாக அபத்தமானவையே. உண்மையில், மக்ரோன் கடந்த ஐந்து ஆண்டுகளாக தீவிர வலதுசாரிகளின் திட்டத்தை அதிகளவில் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி வருகிறார். மக்ரோனின் உள்துறை மந்திரியும், பிரான்ஸின் தீவிர வலதுசாரி நடவடிக்கை அனுதாபியுமான ஜெரால்ட் டார்மானனின், முஸ்லீம் சங்கங்களுக்கு எதிராக பாரபட்சமான சட்டங்களை இயற்றினார் என்பதுடன், லு பென் இஸ்லாம் குறித்து மிகவும் ‘மென்மையாக’ இருப்பதாக பகிரங்கமாக அவரை விமர்சித்தார்.

மக்ரோன் நாஜி ஒத்துழைப்பாளரான பிலிப் பெத்தானை ‘சிறந்த சிப்பாய்’ என்று அழைத்தார், மேலும் ‘மஞ்சள் சீருடையுடன்’, ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மற்றும் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எதிராக இழிவான வலதுசாரி பிரெஞ்சு பொலிஸ் படையை மீண்டும் மீண்டும் அவர் அணிதிரட்டினார். தொற்றுநோய் காலத்தில், ‘பணக்காரர்களின் தலைவரான’ அவர் நிதியச் சந்தைகளின் நலன்களுக்காக பாரிய தொற்றுநோய்க்கு வழிவகுக்கும் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை வேண்டுமென்றே பின்பற்றினார், அவர் அகதிகளை மொத்தமாக நாடு கடத்தினார், மற்றும் வெளியுறவுக் கொள்கையில் இராணுவவாதம் மற்றும் போரைப் பின்பற்றினார்.

ஜேர்மனியில், இப்போது மக்ரோனைக் கொண்டாடும் அதே கட்சிகளும் தீவிர வலதுசாரி வேலைத்திட்டத்தையே பின்பற்றுகின்றன. கடந்த நவம்பரில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, SPD, FDP மற்றும் பசுமைக் கட்சி ஆகிய கட்சிகளின் ‘போக்குவரத்து விளக்கு’ கூட்டணியானது, சமூக சிக்கனத்தை சீராக தீவிரப்படுத்தியுள்ளது, அரசின் அதிகாரங்களை முடுக்கிவிட்டுள்ளது, ஜேர்மன் இராணுவத்தை (Bundeswehr) பெருமளவில் மறுஆயுதமயமாக்கியுள்ளது, மற்றும் கடுமையான சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை அமல்படுத்தியது. இது கோவிட்-19 க்கு எதிரான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தது மற்றும் இடதுபுறத்தில் அரச ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ளது.

உக்ரேன் மீதான புட்டினின் பிற்போக்குத்தனமான படையெடுப்பு, ஜேர்மனியின் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை மும்மடங்கு உயர்த்துவதற்கான ஒரு சாக்குபோக்காக உடனடியாக அந்த அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டது, இது ஹிட்லர் காலத்திற்குப் பின்னைய மிகப்பெரிய மறுஆயுதமயமாக்கல் செலவாகும். சோவியத் ஒன்றியத்தின் மீதான ஜேர்மன் படையெடுப்பிற்கு எண்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அனைத்து சோகமான விளைவுகளுடன் கூட பேர்லின் மீண்டும் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் போரை நடத்துகிறது. ஜேர்மன் வரலாற்றில் இருண்ட காலங்களை நினைவுபடுத்தும் வகையில் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ரஷ்ய எதிர்ப்பு சூனிய வேட்டையில் இறங்கியுள்ளனர்.

மக்ரோனுக்கான ஜேர்மன் ஆதரவின் பின்னணியில் துல்லியமாக இந்த தற்காப்பு இலட்சியங்கள் உள்ளன. கடைசியாக 2014 ஆம் ஆண்டில் இருந்து, ஆளும் வர்க்கம் அதன் உலகளாவிய புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களைத் தொடர ஜேர்மன் தலைமையின் கீழ் ஐரோப்பாவை இராணுவமயமாக்கும் இலக்கை வெளிப்படையாகப் பின்பற்றி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவாளராகவும், மிக சுதந்திரமான ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுபவராகவும், மக்ரோன் ஜேர்மன்-ஐரோப்பிய பெரும் சக்தி தாக்குதலை செயல்படுத்துவதில் ஒரு கூட்டாளியாக பார்க்கப்படுகிறார்.

குறிப்பிடத்தக்க வகையில், Frankfurter Allgemeine Zeitung (FAZ) இல் “பாரிஸில் ஒரு பங்காளி தைரியமாக அமர்ந்திருக்கிறார்” என்ற தலைப்பில் ஒரு சமீபத்திய விளக்கவுரை வெளியானது. பிரெஞ்சு வாக்காளர்களில் பெரும் எண்ணிக்கையிலான ‘தவறான உள்ளடக்கங்கள்’ இருந்தபோதிலும், “தந்திரோபாய ஐரோப்பிய ஒன்றிய ஐயுறவுவாதத்தில் தனது இரட்சிப்பைத் தேடவில்லை” என்பதற்காக அது மக்ரோனைக் கொண்டாடுகிறது. மாறாக, 'உலகமயமாக்கலின் பிரச்சினைகளுக்கு, சடத்துவ மற்றும் அடையாளத்தின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தை ஊக்குவிக்கும் தைரியம்' கொண்டிருந்தார் என்கிறது.

ஆனால் இப்போது பிரெஞ்சு ஜனாதிபதியும் ஐரோப்பிய ஒன்றியமும் 'தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்'. மேலும் அது ‘சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸ்’ மற்றும் ‘வெளியுறவுக் கொள்கையில் திருப்புமுனை’ இல்லாமல் சாத்தியமில்லை. FAZ இன் நம்பிக்கை இவ்வாறு உள்ளது: “இராணுவம் மற்றும் அரசியல் அடிப்படையில் ஜேர்மனியை ஐரோப்பிய இறையாண்மையின் தூணாக மாற்றுவதில் ஷோல்ஸ் வெற்றி பெற்றால், பிராங்கோ-ஜேர்மன் இயந்திரம் சற்று சக்தியைப் பெறும்.”

“பாதுகாப்பு மற்றும் தற்காப்பிற்கான மூலோபாய திசைகாட்டி” என்று அழைக்கப்படுவதை பார்த்தால், நடைமுறையில் இதன் பொருள் என்ன என்பதைக் காட்டுகிறது. மார்ச் 21 அன்று ஐரோப்பிய கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஆவணம், மிகவும் சுதந்திரமான ஐரோப்பிய போர் கொள்கைக்கான ஒரு வரைபடத்தைப் போன்றதாகும். “மூலோபாய போட்டி” மற்றும் “பெரும் புவிசார் அரசியல் மாற்றங்கள்” நிறைந்த ஒரு சகாப்தத்தில், அது “எங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்கான” விஷயமாக இருக்க வேண்டும் என்று அதன் அறிமுகத்தில் கூறுகிறது.

பின்வருபவை, ஐரோப்பாவை ஒரு உண்மையான போர் சங்கமாக மாற்றக்கூடிய, அமெரிக்கா மற்றும் நேட்டோவில் இருந்து சுயாதீனமாக கூட இராணுவ தலையீடு செய்யும் திறனுள்ள இராணுவ மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பட்டியல் ஆகும். “ஒரு நெருக்கடி வெடிக்கும் போதெல்லாம் நாங்கள் விரைவாகவும் வலுவாகவும் செயல்பட முடியும், முடிந்தால் கூட்டாளர்களுடன் மற்றும் தேவைப்பட்டால் தனியாக கூட இருக்க வேண்டும்,” என்று ஆவணம் கூறுகிறது.

“அந்த முடிவுக்காக”, ஐரோப்பிய ஒன்றியமானது 1) அதன் “சிவில் மற்றும் இராணுவ பொது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கை [Common Security and Defense Policy-CSDP) பணிகள் மற்றும் செயல்பாடுகளை” வலுப்படுத்த வேண்டும், 2) அனுமதிக்காத சூழலில் விரைவாக 5,000 துருப்புக்களை நிலைநிறுத்த எங்களை அனுமதிக்கும் வகையிலான ஐரோப்பிய ஒன்றிய விரைவு நிலைநிறுத்தல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் […], மற்றும் 3) “எங்கள் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்புகளை, குறிப்பாக இராணுவத் திட்டமிடல் மற்றும் நடத்தை திறனை” வலுப்படுத்த வேண்டும்.

தேவையான போர் திறன்களை அடைவதற்கு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் “பாதுகாப்பிற்காக அதிகமாகவும் சிறப்பாகவும் செலவிடுவதிலும்” மற்றும் பாரிய மறுஆயுதமயமாக்கலிலும் தம்மை ஈடுபடுத்துகின்றனர். மற்றவற்றுடன், “உயர்-நிலை கடற்படை தளங்கள், எதிர்கால போர் விமான அமைப்புகள், விண்வெளி அடிப்படையிலான திறன்கள் மற்றும் முக்கிய போர் டாங்கிகள்” போன்ற அனைத்து செயல்பாட்டு பகுதிகளிலும் “கூட்டாக அதிநவீன இராணுவ திறன்களை உருவாக்குவதுதான்” நோக்கமாகும்.

இவற்றில் சில திட்டங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு வருகின்றன. உதாரணமாக, மொத்தம் 100 பில்லியன் யூரோ மதிப்பிலான “ஜேர்மன் இராணுவத்தின் சிறப்பு சொத்துக்கள்” “பன்னாட்டு ஆயுதத் திட்டங்களுக்காக” சுமார் 34 பில்லியன் யூரோவை வழங்குகிறது. இதில், புதிய ஐரோப்பிய எதிர்கால போர் விமான அமைப்பு (European Future Combat Air System), FCAS, மற்றும் பிராங்கோ-ஜேர்மன் முக்கிய தரைப்படை போர் அமைப்பு (Main Ground Combat System-MGCS) போன்ற பிராங்கோ-ஜேர்மன் பெரும் திட்டங்கள் அடங்கும்.

தேர்தல் பிரச்சாரத்தில், லு பென் இந்த திட்டங்களை இரத்து செய்வதாக அச்சுறுத்தி ஜேர்மனியை “பிரெஞ்சு மூலோபாய அடையாளத்தின் முழுமையான எதிர்மறை” என்று அழைத்தார். பிராங்கோ-ஜேர்மன் பதட்டங்கள் புறநிலை காரணங்களைக் கொண்டுள்ளன, மேலும் மக்ரோனின் கீழ் அது தீவிரமடையும், என்றாலும் ஜேர்மனியில் உள்ள ஆளும் வர்க்கம் ஒத்துழைப்பை முடிந்தவரை தொடரவும், அதன் சொந்த மறுஆயுதமயமாக்கல் திட்டங்களுக்கு அதைப் பயன்படுத்தவும் நம்புகிறது.

“வெடிகுண்டை நேசிக்க நான் எப்படி கற்றுக்கொண்டேன்” என்ற தலைப்பிலான டெர் ஸ்பீகலின் சமீபத்திய வர்ணனை, ஜேர்மன் அணு ஆயுதங்களுக்காகவும் மற்றும் பிரான்சின் ‘அதிரடிப் படையில்’ இல் பங்கேற்கவும் பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறது, அத்துடன் அமெரிக்காவுடனான அதிகரித்து வரும் பதட்டங்களின் பின்னணிக்கு எதிராக உள்ளது.

“எரிசக்தி விஷயத்தில் நாங்கள் ரஷ்யாவைச் சார்ந்திருப்பதை விட, பாதுகாப்பு அடிப்படையில் அமெரிக்காவையே நாங்கள் மிகவும் சார்ந்திருக்கிறோம்,” என Bild Zeitung இன் முன்னாள் தலைமை ஆசிரியரும் எழுத்தாளருமான Nikolaus Blome புகார் கூறுகிறார். அதனால்தான் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. “புட்டின் பதவியில் நீடித்தால், அடுத்த அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றால்,” “2024 ஆம் ஆண்டின் இறுதியில் ஜேர்மன் இராணுவம் பெரும்பாலும் தனித்து நிற்கும்” என அவர் கூறுகிறார். ஏனென்றால் ட்ரம்ப் “ஜேர்மனிக்காகவோ அல்லது ஐரோப்பாவுக்காகவோ அணு ஆயுதப் போரை நடத்தும் ஆபத்தில் இறங்க மாட்டார், அதை நடத்துவது ஒருபுறம் இருக்க.”

Blome இன் உலகின் ஒட்டுமொத்த அழிவை விவரிக்கும் முடிவு இதுதான்: பேர்லின் மட்டுமே இதை செய்ய முடியும்! “ஜேர்மனி அணு ஆயுதங்களை ஏந்துவதை இன்னும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. அதிலும் பிரான்சும் ஐரோப்பிய ஒன்றியம் குறித்து ஒரு கூட்டு அணுசக்தி குடையை விரிக்கும் என்பதால்.” மக்ரோனின் 'பாதுகாக்கும் ஐரோப்பா' போன்ற சொற்றொடர்களையும் அவர் இழிந்த முறையில் ஜேர்மன் மொழியில் கூறுகிறார். கொரோனா வைரஸ் தொற்றுநோயின் போது ஏற்கனவே பொருத்தமான வெளிப்பாடு இப்போது “புட்டின் காரணமாக இன்னும் சிறப்பாக… நீண்ட காலமாக, இன்னும் சிறப்பாக” பொருந்துகிறது.

இத்தகைய நோயியல்ரீதியான போர்க்குணமிக்க கருத்துக்கள் ஆளும் வர்க்கம் மற்றும் அதன் சமூக அமைப்பின் அடிப்படை குற்றவியல் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. தொற்றுநோய் காலத்தில் முதலாளித்துவ இலாபத்திற்காக மில்லியன் கணக்கான உயிர்களை அது ஏற்கனவே தியாகம் செய்துள்ளது, அவர்களில் 135,000 க்கும் அதிகமானோர் ஜேர்மனியைச் சேர்ந்தவர்களாவர். இப்போது அணுசக்தி மூன்றாம் உலகப் போரில் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் உயிர்வாழ்வையும் ஆபத்தில் ஆழ்த்த அது தயாராகவுள்ளது. சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதுதான் இந்தப் பேரழிவைத் தடுப்பதற்கான ஒரே வழி.

Loading