முன்னோக்கு

மே தினம் உரை 2022

நேட்டோ-ரஷ்யா போரும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பணிகளும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் டேவிட் நோர்த் வழங்கிய தொடக்க அறிக்கையை இங்கு வெளியிடுகிறோம். நோர்த் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும், அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியத் தலைவருமாவர்.

இந்த ஆண்டு மேதினம் அசாதாரண சூழ்நிலைகளின் கீழ் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பூகோளத்தில் உயிர்வாழ்க்கையையே இல்லாதொழித்து விட அச்சுறுத்தும் ஒரு அணு ஆயுதப் போரின் விளிம்பில் உலகம் நிற்கிறது. தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்கான இன்றைய தினத்தின் நிகழ்வு, நேட்டோ-ரஷ்ய போரை அணு ஆயுதப் போருக்கு குற்றவியல்தனமாகவும் பொறுப்பற்ற விதத்திலும் தீவிரப்படுத்துவதை தடுத்து நிறுத்தவும், அதனை முடிவுக்குக் கொண்டுவருவதை நிர்ப்பந்தம் செய்யவும் உலகத்தின் பரந்த வெகுஜன மக்களது ஒரு உலகளாவிய இயக்கத்தினை ஆரம்பிப்பதே 2022 மே தினத்திற்கான சவாலாக இருக்கவேண்டும்.

இந்த இயக்கத்தின் ஒழுங்கமைப்பு, அபிவிருத்தி மற்றும் வெற்றிக்கு இந்த போரின் காரணங்கள் மற்றும் அது சேவை செய்கின்ற நலன்கள் குறித்த ஒரு தெளிவான புரிதல் தேவையாக உள்ளது.

சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ரஷ்யாவுடன் மோதலைத் தூண்டுவதற்காக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களை ஐயத்திற்கிடமின்றி கண்டனம் செய்கிறது. இது உக்ரேனிலோ அல்லது உலகின் வேறெந்த பகுதியிலுமோ ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு போராக இல்லை. இது உலகை மறுபங்கீடு செய்கின்ற, அதாவது, உலகின் பொருளியல் வளங்களை புதிய விதத்தில் ஒதுக்கீடு செய்கின்ற நோக்குடனான ஒரு போராக உள்ளது.

ரஷ்யா, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலக்காகி இருப்பது புட்டின் ஆட்சியின் எதேச்சாதிகார குணத்தினால் அல்ல. மாறாக, முதலாவதாக, சீனாவுடனான அதன் போர் தயாரிப்புகளின் மத்தியில் உள்ள உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் முனைப்புடன் மோதும் ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களை புட்டினின் ஆட்சி பாதுகாப்பதாகும். மற்றும் இரண்டாவதாக ரஷ்ய பிராந்தியத்தின் பரந்துவிரிந்த வெளியானது பெரும் மதிப்புமிக்க மற்றும் மூலோபாய முக்கியத்துவம் கொண்ட கச்சாப் பொருட்களது (ஒரு சிலவற்றை மட்டும் குறிப்பிடுவதானால், தங்கம், பிளாட்டினம், பல்லாடியம், துத்தநாகம், பாக்சைட், நிக்கல், பாதரசம், மாங்கனீஸ், குரோமியம், யுரேனியம், இரும்புத் தாது, கோபால்ட், மற்றும் இரிடியம்) மூலவளமாக இருப்பதால் அதனைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.

அதைப்போலவே, அமெரிக்காவுடன் கூட்டணி சேர்ந்துள்ள மற்ற பெரிய ஏகாதிபத்திய சக்திகளும், தமது சொந்த பிற்போக்குத்தனமான பொருளாதார மற்றும் புவிமூலோபாய நலன்களைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றன. உக்ரேனிலான மோதல் 1941க்கும் 1945க்கும் இடையில் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஒரு அழித்தொழிக்கும் போரை நடத்திய ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு, நாஜி ஆட்சியின் உருக்குலைவுக்குப் பிந்தைய காலத்தின் மிகவும் பாரிய மறுஆயுதமாக்கல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கான வாய்ப்புவளத்தை இது வழங்கியிருக்கிறது. எப்போதும் போல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமானது, அமெரிக்காவுடனான அதன் “தனிச்சிறப்பான உறவு” போரின் கொள்ளையிலான சிந்தல்சிதறல்களில் அதற்கு ஒரு சாதகமான பங்கு கிடைக்கச் செய்யும் என்ற நம்பிக்கையில் அமெரிக்க தலைமையிலான போரில் பங்குபெறுவதற்கு ஆர்வத்துடன் இருக்கிறது. பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகள், எத்தனை தயக்கத்துடன் என்றபோதிலும், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு ஒப்புதல் அளிப்பதன் மூலமாக, ஆபிரிக்காவிலான பிரான்சின் நடவடிக்கைகளில் அமெரிக்கா தலையிடாது என்று நம்பிக்கை கொள்கின்றனர். நேட்டோ கூட்டணியின் வலிமைகுறைந்த சக்திகளும் கூட அமெரிக்க தலைமையிலான போரை வழிமொழிவதற்கான பிரதிபலனாக கூலி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றன. உதாரணத்திற்கு, உக்ரேனில் உள்ள Lviv நகரம் ஒருகாலத்தில் Lwow என்றழைக்கப்படும் போலந்து நகரமாக இருந்தது என்பதை போலந்து மறந்திருக்கவில்லை.

ஒரு இறையாண்மையுள்ள தேசமாக விரும்பினால் நேட்டோவில் சேர்வதற்கு உக்ரேன் கொண்டிருக்கும் புனித உரிமைக்கு அமெரிக்கா அழைப்புவிடுவதைப் பொறுத்தவரையில், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் காணக் கூடிய தேசப் பாதுகாப்பு நலன்களைக் கொண்ட எந்தவொரு நாட்டுக்கும் அந்த உரிமையை நீட்டிப்பதை குறித்து வாஷிங்டன் கண்டுகொள்வதில்லை. உக்ரேனில் நெருக்கடி கட்டவிழ்கின்ற வேளையிலும் கூட, அமெரிக்கா, அமெரிக்க மேற்குக் கரையில் இருந்து 6,000 மைல்கள் தூரத்திலுள்ள சாலமன் தீவுகளை, சீனாவுடன் ஒரு பாதுகாப்பு உறவுக்குள் நுழைவதற்கு எதிராக தடுத்து நிறுத்த இராணுவ நடவடிக்கையை காட்டி மிரட்டிக் கொண்டிருக்கிறது.

மூர்க்கமான ரஷ்யா, தொலைத்து விட்ட “சோவியத் சாம்ராஜ்யத்தை” மீட்கின்ற நோக்கத்துடன், அரசியல்ரீதியாக எந்த குற்றமும் செய்யாத உக்ரேன் மீது “ஆத்திரமூட்டல்கள் இல்லாமல்” நடத்தியிருந்த படையெடுப்புக்கு எதிராக நேட்டோ பதிலிறுப்பு செய்து கொண்டிருக்கிறது என்பதான கூற்றுகள் ஒரு தொகை பொய்களாகும். போரின் பின்னணி குறித்த ஒரு புறநிலை ஆய்வு செய்தால், பெப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா நடத்திய படையெடுப்பானது நேட்டோவின் பொறுப்பற்ற விரிவாக்கத்திற்கான ஒரு பிரயாசையுடனான பதிலிறுப்பாக இருந்தது என்பதை தெளிவாக விளங்கப்படுத்துகிறது. கடந்த இரண்டு மாத காலத்தின் போர் அபிவிருத்தி தெளிவாகக் காட்டுவதைப் போல, அமெரிக்காவும் நேட்டோவும், ரஷ்யாவுக்கு எதிராக ஒரு பினாமிப் போரை நடத்துவதற்காக, அசோவ் படைப்பிரிவுடன் தொடர்புபட்ட நவ-நாஜி பிரிவுகளுடன் நெருக்கமாக வேலைசெய்து, உக்ரேனிய படைகளுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் அளித்திருக்கின்றன.

ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் பாரிய அணிதிரட்டலானது ஒரு முன்னெதிர்பாராததாக, திட்டமிடாததாக, மற்றும் படையெடுப்புக்கான மேம்பட்ட பதிலிறுப்பாக இருந்தது என்பதான பாவனைகள் எல்லாம் அரசியல் ஏமாளிகளுக்கு கூறப்படுகின்ற கட்டுக் கதைகளாக உள்ளது. இது அமெரிக்காவும் நேட்டோவும் விரும்பிய, உருவாக்கிய, தயாரிப்புடன் இருந்த மற்றும் தூண்டிய ஒரு போராகும். ஆரம்பகட்ட 2005 “ஆரஞ்சு புரட்சி” முதலாக, அதிலும் குறிப்பாக ரஷ்யா ஆதரவு யானுகோவிச் அரசாங்கத்தை பதவியிறக்குவதற்காக 2014 இல் ஒபாமா நிர்வாகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட மைதான் சதி கவிழ்ப்பு நடவடிக்கைக்குப் பின்னர், அமெரிக்கா ரஷ்யாவுடன் ஒரு போருக்கான பாதை உருவாக்கியவாறே இருந்திருக்கிறது.

அமெரிக்காவும் நேட்டோவும் போருக்குத் திட்டமிடவில்லை அல்லது தூண்டவில்லை என்பதான சிடுமூஞ்சித்தனமான கூற்று அனைத்துலகக் குழு விடுத்த தொடர்ச்சியான எச்சரிக்கைகள் மூலம் மிக சக்திவாய்ந்த விதத்தில் மறுக்கப்படுகின்றது. 2014 இல், மைதான் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து சில மாதங்களுக்குப் பின்னர், அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் நடத்திய முதலாவது மே தின இணையவழிப் பேரணியில் நாங்கள் பின்வருமாறு எச்சரித்தோம், “உக்ரேனிய நெருக்கடியானது கியேவ் கவிழ்ப்பு ஏற்பாட்டின் மூலம் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் திட்டமிட்டு தூண்டப்பட்டதாகும். உக்ரேனை அமெரிக்கா மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து வைக்கத்தக்க ஒரு ஆட்சியை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதே இந்த கவிழ்ப்பின் நோக்கமாய் இருந்தது. இந்த கவிழ்ப்பு நடவடிக்கையானது ரஷ்யாவுடன் ஒரு மோதலுக்கு இட்டுச் செல்லும் என்பதை வாஷிங்டன் மற்றும் பேர்லினில் உள்ள சதிகாரர்கள் புரிந்து வைத்துள்ளனர். உண்மையில், ஒரு மோதலைத் தவிர்ப்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு, ஜேர்மனியும் சரி அமெரிக்காவும் சரி அவற்றின் தொலைநோக்கான புவி அரசியல் நலன்களை அடைவதற்கு ரஷ்யாவுடன் ஒரு மோதல் அவசியமாயுள்ளது என்று நம்புகின்றனர்.”

சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக இதேதினத்தில், 2016 மே தினப் பேரணியில், உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதலானது அதனை ரஷ்யா மற்றும் சீனாவுடனான போரின் பாதையில் நிறுத்தியிருந்தது என்று நாங்கள் எச்சரித்தோம். நாங்கள் பின்வருமாறு கூறியிருந்தோம்:

”பென்டகன் மற்றும் சிஐஏ மூலோபாயவாதிகளது ஒரு கணிசமான பிரிவு நம்புவது என்னவென்றால் சீனாவை மூலோபாயரீதியாக தனிமைப்படுத்த ஆசிய-பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியங்களை அமெரிக்கா கட்டுப்பாட்டில் கொண்டிருந்தால் மட்டும் போதாது. “உலகத் தீவு” என சர்வதேச புவியரசியல் பாடப் புத்தகங்களில் சித்தரிக்கப்படும் யூரோசியாவிலும் அமெரிக்கா மேலாதிக்கம் செய்தாக வேண்டும். இந்த மூலோபாய நோக்கமே அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான பெருகிவரும் மோதலின் அடித்தளமாக இருப்பதாகும்.

சர்வதேச உறவுகள் 1930களின் பிற்பகுதியில் இரண்டாம் உலகப் போரையொட்டி நிலவிய பதட்டங்களது ஒரு மட்டத்தை ஒருவேளை அதனைத் தாண்டி சென்றிருக்கவில்லை என்றாலும் அதன் மட்டத்தை எட்டியிருக்கின்றது. ஜேர்மனி மற்றும் ஜப்பான் உள்ளிட அத்தனை பெரிய ஏகாதிபத்திய சக்திகளும் தமது இராணுவ கடமைப்பாடுகளை அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான ஒரு மோதல் அணுஆயுதங்கள் இடம்பெற்றதாக இருக்கக் கூடும் என்பது ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டிருக்கிறது. ஏகாதிபத்திய சக்திகளின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களோ, அல்லது பெய்ஜிங் மற்றும் மாஸ்கோவில் உள்ள அவர்களது மிரட்சியூட்டப்பட்ட எதிரிகளோ, அணுஆயுதப் போரின் நாசகரமான பின்விளைவுகளது அபாயத்தை ஒருபோதும் கையிலெடுக்க மாட்டார்கள் என்று அனுமானிப்பது மரணகரமான தவறாகவே இருக்கும்.”

ஒரு ஆண்டு கழித்து, 2017 மே தினப் பேரணியில், வருங்காலத்தின் ஒரு இராணுவ மோதலில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியத்தைக் குறித்து அமெரிக்க மூலோபாயவாதிகள் மத்தியில் நடந்து வருகிற விவாதங்களுக்கு நாங்கள் கவனம் ஈர்த்தோம். அணுஆயுத பயன்பாடு சூழ்ந்த பல்வேறு மூலோபாயங்களை நாங்கள் மேற்கோளிட்டோம், அவற்றில் இவையும் இடம்பெற்றிருந்தன, 1) அணு-ஆயுதமில்லாத ஒரு எதிரிக்கு எதிராக அணுஆயுதத்தைப் பயன்படுத்துவது; 2) ஒரு எதிரி நாட்டின் பதிலடி கொடுக்கும் திறனை அகற்றும் நோக்குடனான, முதலே தாக்குதல் நடாத்துதல்; 3) ஒரு எதிரியைப் பின்வாங்கச் செய்வதற்காக அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு மிரட்டுவது மற்றும் 4) வரம்புக்குட்பட்ட அணுஆயுதப் போரைத் தொடுப்பது. நாங்கள் பின்வருமாறு வினவினோம்:

இந்த மூலோபாயத்தை வகுத்த கிறுக்கர்கள் யார்? இந்த மூலோபாயங்களில் எதாவதொன்றையும் பரிசீலிப்பதற்கான விருப்பம் கூட ஒரு பைத்தியக்காரத்தனத்தின் அறிகுறியாக இருக்கும். அணுஆயுதப் பயன்பாடு என்பது கணக்கிட முடியாத பின்விளைவுகளைக் கொண்டதாய் இருக்கும். இந்த உண்மை ஆளும் வர்க்கங்கள் போரில் இறங்குவதைத் தடுக்கக் கூடியதாக இருக்குமா? இருபதாம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த வரலாறும், மேலும் இருபத்தியொன்றின் முதல் 17 ஆண்டுகளது அனுபவத்தைக் குறித்து சொல்லவும் தேவையில்லை இத்தகைய ஒரு நம்பிக்கையான அனுமானத்திற்கு எதிராகவே வாதிடுகிறது. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மூலோபாயமானது யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டுமே அன்றி, தன்னைத் தானே ஏமாற்றுகின்ற நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டதாய் இருக்கக் கூடாது.”

இன்னும் ஒரேயொரு மேற்கோள்: 2019 மே தினப் பேரணியில், அமெரிக்காவில் அரசியல் நெருக்கடி பெருகிச் சென்ற பின்புலத்தில், நாங்கள் இதனை கூறினோம்:

உள்நாட்டுக் கொள்கைகளது நடத்தையில் அரசியல்சட்ட நிர்ணயங்கள் மீறப்படுவதும் வெளியுறவுக் கொள்கையில் கொள்ளைக்கார வழிமுறைகளில் இறங்குவதற்குமான வேர்கள், இறுதிப் பகுப்பாய்வில், முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியில் அமைந்துள்ளன. ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்தான போட்டியாளர்களிடம் இருந்து புவி அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு முகம்கொடுக்கும் நிலையில், தனது உலக மேலாதிக்க நிலையை தக்கவைக்க அமெரிக்கா செய்கின்ற விரக்தியடைந்த முயற்சிகள் ஒரு நிரந்தரமான மற்றும் அதிகரிக்கின்ற போர் நிலையை அவசியமாக்குகிறது.

“இந்த பொறுப்பற்ற கொள்கை ட்ரம்ப் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீடிக்கும். சொல்லப் போனால், ஜனநாயகக் கட்சியை பீடித்திருக்கும் ரஷ்ய-விரோத வெறிக்கூச்சலானது, அது வெள்ளை மாளிகைக்குத் திரும்பும்பட்சத்தில் ஒரு உலகப் போரின் அபாயம் இன்னும் பெரியதாக இருக்கும் என்று சந்தேகிப்பதற்கான நியாயத்தை வழங்குகிறது.”

நிகழ்வுகள் எங்களது எச்சரிக்கைகளை ஊர்ஜிதம் செய்திருக்கின்றன. ஏகாதிபத்தியப் போர் மற்றும் அதன் பின்விளைவுகளது பயங்கரமான தர்க்கம் கட்டவிழ்வதை முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கத்தை தவிர்த்து வேறு எதுவொன்றாலும் தடுத்துநிறுத்த முடியாது. அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்தியம் மீதான எங்களது கண்டனத்தின் கீழாக மட்டுமல்ல, உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடர்பான எங்களது அணுகுமுறையின் கீழும் அமைந்திருப்பது இந்த முன்னோக்கே ஆகும்.

சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் பார்வையில், நேட்டோவால் நடத்தப்படும் போரின் ஏகாதிபத்திய தன்மையானது, உக்ரேன் மீது படையெடுக்கும் முடிவை ரஷ்ய அரசாங்கம் எடுப்பதற்கான நியாயத்தை வழங்குவதில்லை. இந்த படையெடுப்பு அரசியல்ரீதியாக பிற்போக்குத்தனமானது என்று அனைத்துலகக் குழு கண்டனம் செய்கிறது. புட்டின் அரசாங்கத்தின் படையெடுப்பின் முடிவானது ஊழலடைந்த கியேவ் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எந்தவிதத்திலும் பொறுப்பாகாத அப்பாவி உக்ரேனியர்கள் ஆயிரக்கணக்கானோரை கொன்றிருப்பதுடன், காயப்படுத்தி ரஷ்ய மற்றும் உக்ரேனியத் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தியிருக்கிறது. வாஷிங்டன் டிசி மற்றும் வேர்ஜினியாவின் லாங்க்லியில் (சிஐஏ தலைமையகம்) உள்ள ஏகாதிபத்திய மூலோபாயவாதிகளின் கரங்களில் விளையாட்டுப் பொருளாகி இருக்கிறது. ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு பாரிய அளவில் மறுஆயுதபாணியாவதற்கான வாய்ப்பையும் இது வழங்கியிருக்கிறது.

ரஷ்யா இன்று முகம்கொடுக்கிற அபாயங்கள், இறுதிப் பகுப்பாய்வில், 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதன் பின்விளைவாக இருக்கின்றன. 1917 அக்டோபர் புரட்சியை வழிநடத்திய சோசலிச சர்வதேசியவாதக் கோட்பாடுகளின் மீதான ஸ்ராலினிச மறுதலிப்பின் விளையனாக சோவியத் ஒன்றிய அழிப்பானது, சோவியத் அதிகாரத்துவத்தால் ஆர்வத்துடன் தழுவப்பட்டிருந்த மூன்று பேரழிவுகரமான பொய்க் கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

முதலாவது, முதலாளித்துவத்தின் மீட்சியானது ரஷ்யா துரிதமாக செழிப்படைவதில் சென்றுமுடியும். இரண்டாவது, அதிகாரத்துவ ஆட்சியின் கலைப்பானது முதலாளித்துவ ஜனநாயகத்தின் மலர்ச்சியை உருவாக்கும். மூன்றாவது, முதலாளித்துவ ரஷ்யா அதன் புரட்சிகர பாரம்பரியத்தை மறுதலித்தமையானது அது தேசங்களது ஒரு பேரானந்த சகோதரத்துவ முறைக்குள் அமைதியான ஒருங்கிணைப்பு காண்பதில் விளையும். இந்த சுயஏமாற்று எதிர்பார்ப்புகள் யதார்த்தத்தால் தகர்த்தெறியப்பட்டுள்ளன.

லியோன் ட்ரொட்ஸ்கி அவரது 1936 ஆம் ஆண்டில் எழுதிய காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி யில் அற்புதமாக எடுத்துரைத்த எச்சரிக்கைகள் ஊர்ஜிதம் பெற்றிருக்கின்றன. முதலாளித்துவ மீட்சியானது ரஷ்ய மக்களின் மிகப்பெரும் பகுதியினர் வறுமைப்படுவதில் சென்றுமுடியும்; அதிகாரத்துவ ஆட்சி சர்வாதிகார சிலவராட்சியால் பிரதியிடப்படும்; அத்துடன் ரஷ்யாவின் உடைவு ஏகாதிபத்திய சக்திகளின் கட்டுப்பாட்டிலான அரைக் காலனித்துவ சிறுஅரசுகளாய் உடைந்து சிதறும் உடனடி அச்சுறுத்தல் உள்ளது.

ரஷ்யா முகம்கொடுக்கும் அபாயங்களுக்கு பதிலிறுப்பாக, உக்ரேன் மீது படையெடுப்பது, மற்றும் இப்போது நேட்டோவின் ஆத்திரமூட்டல்களுக்கு ஒரு அணுஆயுத பதிலிறுப்பைக் கொண்டு மிரட்டுவது ஆகியவற்றைத் தவிர்த்த வேறு பதிலிறுப்பை புட்டின் ஆட்சியால் கொடுக்க முடியவில்லை என்ற உண்மையானது முதலாளித்துவ மீட்சியினது ஆட்சியின் அரசியல் திவால்நிலைக்குச் சாட்சியம் கூறுகிறது. தொழிலாளர்’ அரசின் தேசியமயமாக்கப்பட்ட சொத்துக்களை படிப்படியாக சூறையாடுவதில் இருந்து செல்வந்தரான ரஷ்ய முதலாளித்துவ சிலவராட்சியானது சோவியத் ஒன்றியத்தின் சமூக மற்றும் அரசியல் அடித்தளங்களில் முற்போக்காக இருந்த அத்தனையையும் மறுதலித்தது.

புட்டின், 2022 பிப்ரவரி 21 அன்றான அவரது உரையில், 1917 இல் தூக்கிவீசப்படுவதற்கு முன்பாக ஜாரிச ஆட்சியால் கொடூரமாக ஒடுக்கப்பட்டு வந்த தேசியங்களது ஜனநாயக உரிமைகளை போல்ஷிவிக் ஆட்சி பாதுகாத்ததன் மீது ஒரு வெளிப்படையான மற்றும் கடுமையான கண்டனத்தைக் கொண்டு உக்ரேன் மீதான படையெடுப்பை நியாயப்படுத்தினார் என்பது தற்செயலாக இருப்பது அரிது. சோவியத் உக்ரேன் உருவாக்கமானது “போல்ஷிவிக் கொள்கையின் விளைவாக இருந்தது என்பதால் விளாடிமிர் லெனினின் உக்ரேன் என்று நியாயமாக அழைக்கப்பட முடியும். அவர்தான் அதன் உருவாக்குநர் மற்றும் நிர்மாணித்தவர்” என்று புட்டின் அறிவித்தார்.

Vladimir Lenin

ஆம், லெனின்தான் சோவியத் உக்ரேனின் உருவாக்குநராக இருந்தார். ஒடுக்கப்பட்ட தேசியங்களது உரிமைகளை, குறிப்பாக உக்ரேனில், போல்ஷிவிக்குகள் பாதுகாத்தமை அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து வந்த உள்நாட்டுப் போரில் ட்ரொட்ஸ்கியின் தலைமையிலான செம்படையின் வெற்றியில் ஒரு முக்கிய காரணியாக இருந்தது. சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவ சீரழிவு நிகழ்ச்சிப்போக்கானது அதன் ஆரம்ப வெளிப்பாட்டை ரஷ்யா அல்லாத தேசியங்களின் உரிமைகளை லெனின் பாதுகாத்ததை பலவீனப்படுத்துவதற்கு ஸ்ராலின் முன்னெடுத்த முயற்சிகளில் தான் வெளிப்பட்டிருந்தது என்பதை குறிப்பிடுவதை புட்டின் கவனத்துடன் தவிர்த்து விட்டார்.

இந்த கோட்பாடுகள் 1920 மார்ச்சில் ட்ரொட்ஸ்கியால் வரைவு செய்யப்பட்ட ஒரு ஆவணத்தில் மிக அழகாக எடுத்துரைக்கப்பட்டிருந்தன. உக்ரேனின் இன்றியமையாத பிரச்சினையை அது குறிப்பாக பேசியது. பிற்போக்கான முதலாளித்துவ தேசியவாதிகளுக்கு எந்தவித சலுகைகளும் கொடுக்காமல், ட்ரொட்ஸ்கி எழுதினார்: ”உக்ரேன் கலாச்சாரம் பல நூற்றாண்டுகளாக ஜாரிசத்தாலும் ரஷ்யாவின் சுரண்டும் வர்க்கங்களாலும் ஒடுக்கப்பட்டு வந்திருக்கிறது என்ற உண்மையைக் கொண்டு பார்த்து, ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவானது, உக்ரேன் மொழியும் கலாச்சாரமும் சுதந்திரமாக அபிவிருத்தி காண்பதற்கு உள்ள அத்தனை முட்டுக்கட்டைகளையும் அகற்றுவதற்கு ஒவ்வொரு வழியிலும் உதவி செய்வதை கட்சியின் அத்தனை உறுப்பினர்களுக்கும் கடமையாக ஆக்குகிறது.”

சோசலிசத்தினதும் மற்றும் அக்டோபர் புரட்சி பாரம்பரியத்தின் ஒரு கடுமையான எதிரியான புட்டின், உக்ரேனிய தொழிலாள வர்க்கத்திற்கு எந்த உண்மையான ஜனநாயக மற்றும் முற்போக்கான அழைப்பையும் விட திறனற்றவராய் இருக்கிறார். பதிலாக ஜாரிச மற்றும் ஸ்ராலினிச மகா ரஷ்ய பேரினவாதத்தின் பிற்போக்குத்தனமான பாரம்பரியத்தை அவர் இழுக்கிறார்.

உக்ரேன் மீதான புட்டின் படையெடுப்புக்கான நான்காம் அகிலத்தின் எதிர்ப்பானது லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகளை பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். ஆனால் அந்தக் கோட்பாடுகளின் பாதுகாப்பானது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் பிற்போக்குத்தனமான பொறிகளை சளைக்காது எதிர்த்துநிற்பதை அவசியமாக்குகிறது.

ஒரு அணுஆயுத மூன்றாம் உலகப் போரின் உடனடி அபாயமானது சோவியத் ஒன்றியத்தின் கலைப்பைத் தொடர்ந்த உலகளாவிய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் பிற்போக்குத்தனம் மற்றும் ஏகாதிபத்திய வன்முறையினது அலையின் உச்சமாக இருக்கிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலரான அன்டோனியோ குட்டேரஸ் சென்ற வாரத்தில் கியேவ் வீதிகளில் நடந்து சென்றபோது, இருபத்தியோராம் நூற்றாண்டில் போர் என்பது ஒரு “அபத்தம்” என்று விரக்தியுடன் பிரகடனம் செய்தார். திருவாளர் குட்டேரஸ் உக்ரேனுக்கு வந்து பார்த்தபின்னர் தான் இந்த மெய்யியல் உட்பார்வைக்கு வந்துசேர்ந்தார் என்றால், கடந்த 22 ஆண்டுகளாய் அவர் எங்கே ஒளிந்திருந்தார் என்று தான் ஒருவர் வியப்பு வெளிப்படுத்த வேண்டியிருக்கும். இப்போதும் இளையதாக இருக்கும் இந்த நூற்றாண்டு ஒரேயொரு தருணம் கூட சமாதானத்தைக் கண்டிருக்கவில்லை. உண்மையில், கடந்த 30 ஆண்டுகள் ஏகாதிபத்திய வன்முறையின் முடிவில்லாத மற்றும் கட்டுப்பாடற்ற ததும்பலையே கண்டிருக்கிறது. இதன் பிரதான காரணகர்த்தாக்களாக வெள்ளை மாளிகை வாசிகளே இருந்திருக்கிறார்கள்.

குட்டேரஸின் கருத்து ஏதோ சென்ற மூன்று தசாப்தங்களின் அமெரிக்க மற்றும் நேட்டோ போர்கள் நடக்காததைப் போன்று உக்ரேன் போரை அதற்கு முன்வந்த அத்தனையில் இருந்தும் பிரித்துக் காட்டுவதற்கு உதாரணமாய் திகழ்கிறது. உக்ரேனின் வன்முறையும் உயிரிழப்பும் நவீனகாலத்தில் முன்னுதாரணமற்ற ஒரு பயங்கரத்தைப் போல வெகுஜன ஊடகங்களில் சித்தரிக்கப்படுகிறது. ரஷ்யா இழைத்திருக்கும் குற்றங்கள் நாஜிக்களின் அட்டூழியங்களுடன் மட்டுமே ஒப்பிடத்தக்க அளவுக்கு மிகவும் தீவிரமான தன்மை கொண்டவை என்பதாக காட்டப்படுகிறது. உக்ரேன் மீதான படையெடுப்பு ஒரு இனப்படுகொலை நடவடிக்கையாக பிரகடனம் செய்யப்படுவதோடு, போர்க் குற்றங்களது ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு ஆகக்குறைந்தது விளாடிமிர் புட்டின் விசாரணை செய்யப்படவேண்டும் என்றும் முன்வைக்கப்படுகிறது. இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் புட்டின் அகற்றப்படுவதற்கு, அதாவது ரஷ்யாவில் ஆட்சிமாற்றத்திற்கு விடுத்த அழைப்பை நியாயப்படுத்துவதற்காக பைடெனால் முன்தள்ளப்பட்டிருக்கின்றன.

மேலும், ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சார பரப்புரை ரஷ்ய மக்களை குற்றவியல்படுத்திக் காட்டுவதற்காக நீட்சி செய்யப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் எழுத்தாளர்கள், இசைக் கலைஞர்கள், தடகள வீரர்கள், விஞ்ஞானிகள், இன்னும் ரஷ்ய கலாச்சாரத்தின் உலக வரலாற்று சாதனைகளும் கூட கூட்டுத் தண்டனைக்காய் குறிவைக்கப்படுகின்றனர். இந்த நச்சுத்தனமான தாக்குதல் ரஷ்யாவின் மீது கண்மூடித்தனமான வெறுப்பை ஊக்குவித்து, முழுவீச்சிலான போருக்கு அவசியமான வெறிகொண்ட சூழலை உருவாக்கும் நோக்குடையதாக இருக்கிறது. இது பிரச்சார பரப்புரைகளது ஒரு நன்கறிந்த தந்திரமாக இருப்பதாகும். அது அதன் நவீன வடிவத்தில் முதலாம் உலகப் போரில் இருந்து விளைந்ததாய் இருக்கிறது. 1933களில் வரலாற்றாசிரியர் ரோபர்ட் ஹேஸ்வெல் லுட்ஸ் ஆல் விவரிக்கப்பட்டவாறாக, “புதிய ஆசைகளை உருவாக்குவது, குழுவாக மனோவசியம் செய்வது, எதிர்பரப்புரைகளை தனிமைப்படுத்துவது, தேர்ந்தெடுத்த மற்றும் ஒருதரப்பான தகவல்களைக் கொண்டு பொதுமக்கள் அபிப்ராயத்தை நிரப்புவது” ஆகியவை அதன் நோக்கமாய் உள்ளன.

இந்த நுட்பங்களது அபிவிருத்தி அமெரிக்காவில் துல்லியப்படுத்தப்பட்டிருக்கிறது, ஈராக் “பேரழிவு ஆயுதங்களை” கொண்டிருந்தது என்பதாக முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட புஷ் நிர்வாகத்தின் கூற்றில் இது மிகத் திறம்படப் பயன்படுத்தப்பட்டது. 2003 இல் Columbia Journalism Review விளக்கியதைப் போல, இந்த பரப்புரையின் பயன்வீச்சானது, “சதாம் உசேனால் அமெரிக்காவுக்கு முன்நிறுத்தப்பட்ட அபாயம் குறித்த நிர்வாகத்தின் ஒவ்வொரு மோசடியான கூற்றையும் விமர்சனமற்று ஒப்பித்த அதற்கு கீழ்ப்படிந்த ஊடகங்களை பெருமளவில் சார்ந்திருந்தது”.

ரஷ்ய இராணுவத்தால் இழைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற குறிப்பிட்ட குற்றங்கள் உண்மையாகவே இருந்தாலும், புஜ்ஜா (Bucha) அட்டூழியம் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்தவிதத்திலும் நம்பகரமாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்காத போது கடந்த முப்பதாண்டு காலம் நடத்திய போர்களின் பாதையில் அமெரிக்காவினால் இழைக்கப்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட குற்றங்களின் பரிமாணங்களுக்கு கூட அது நெருக்கமாக வரமுடியாது.

அமெரிக்கா 1991 முதலாக, ஈராக், சோமாலியா, சேர்பியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா மற்றும் சூடான் ஆகிய நாடுகள் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியிருக்கிறது அல்லது படையெடுத்திருக்கிறது. இது முழுமையான பட்டியல் இல்லை என்றபோதுமே கூட இந்த தாக்குதல்களில் விளைந்த உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை ஏழு மில்லியன்கள் ஆகும்.

அமெரிக்க ஊடகங்கள், அமெரிக்க ஏகாதிபத்திய நோக்கங்களை மறைப்பதற்கான ஒரு வழிவகையாக 'இனப்படுகொலை' குற்றச்சாட்டுகளை எடுக்கின்றன. இவ்வாறு செய்கையில், அவை அந்த வார்த்தையின் நிஜமான அர்த்தத்தை குறைத்துவிடுகின்றன. ஆனால் இந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டுமானால், வெறும் கடந்த மூன்று தசாப்தங்களில் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் நடத்தப்பட்ட அமெரிக்க தலையீடுகளின் விளைவுகளுக்கு இதைப் பயன்படுத்தப்படலாம். பைடென் புட்டினை ஒரு போர்க் குற்றவாளியாகவும், அவர் ஹேக் தீர்ப்பாயத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கண்டிக்கிறார். ஒருவேளை அவ்வாறு இருக்கலாம். ஆனால் அமெரிக்கா செய்த குற்றங்களின் ஆவணப்படுத்தப்பட்ட பதிவுகளின் அடிப்படையில், புட்டினுடன் அந்த விசாரணைக் கூண்டில் பல அமெரிக்க ஜனாதிபதிகளும் உயர்மட்ட அரசு அதிகாரிகளும் சேர்ந்து நிற்க வேண்டும்.

ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போர், உக்ரைனுக்கு எதிரான எந்த தூண்டுதலும் இல்லாத ஆக்கிரமிப்புக்கான விடையிறுப்பு என்ற வாதம் வெறும் ஒரேயொரு கற்பனை மட்டுமல்ல. இந்த வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் பைடென் கூறிய சமீபத்திய கருத்துக்களில், 'சுதந்திரத்திற்கான அதன் போராட்டத்தில் உக்ரேனை ஆதரிக்க' இன்னும் 33 பில்லியன் டாலர்களை ஒதுக்குமாறு காங்கிரஸ் சபையிடம் அவர் கோரி வருவதாக அறிவித்தார். ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை அதன் 2020 அறிக்கையில் உக்ரேனின் நிலவிய 'சுதந்திரம்' பற்றிய நிலைமையை இப்படித் தான் பின்வருமாறு விவரித்திருந்தது:

சட்டவிரோத அல்லது எதேச்சதிகார படுகொலைகள்; சித்திரவதை மற்றும் கொடூரமான, மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் அல்லது இழிவாக நடத்துதல் அல்லது சட்ட அமலாக்க அதிகாரிகளைக் கொண்டு கைது செய்யும் விஷயங்கள்; சிறைகள் மற்றும் தடுப்புக் காவல் மையங்களில் கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலைமைகள்; எதேச்சதிகார கைது அல்லது தடுப்புக்காவல் நடவடிக்கைகள்; நீதித்துறையின் சுதந்திரம் சம்பந்தப்பட்ட கடுமையான பிரச்சனைகள்… என குறிப்பிடத்தக்க மனித உரிமை பிரச்சினைகள் உள்ளடங்கி உள்ளன.

'கடுமையான ஊழல் நடவடிக்கைகள்; பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மீது பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் விசாரணை இல்லாமை; யூத-எதிர்ப்புவாதத்தால் தூண்டப்பட்ட வன்முறை அல்லது வன்முறை அச்சுறுத்தல்கள்; ஊனமுற்றவர்கள், சிறுபான்மை இனக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பெண் ஓரினச் சேர்க்கையாளர்கள், ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபாலின சேர்க்கையாளர்கள், திருநம்பிகள்/திருநங்கைகள் அல்லது கலப்பினச் சேர்க்கையாளர்கள் என இவர்களைக் குறிவைத்த வன்முறை அச்சுறுத்தல்கள் அல்லது வன்முறையை உள்ளடக்கிய குற்றங்கள்; மற்றும் மோசமான வடிவங்களின் குழந்தைத் தொழிலாளர்கள் அங்கிருப்பது' குறித்தும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

உக்ரேன் அரசாங்கம், 'துஷ்பிரயோகங்களைச் செய்த பெரும்பாலான அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடரவோ அல்லது தண்டிக்கவோ போதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால், இது தண்டனையிலிருந்து தப்பித்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்தி உள்ளது. அரசு பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மீது குறிப்பிடத்தக்களவில் விசாரணைகள் இல்லை என்று மனித உரிமைக் குழுக்களும் ஐக்கிய நாடுகளும் சபையும் குறிப்பிட்டன,” என்றும் அந்த அறிக்கை குறைகூறியது.

உக்ரேனிய அரசாங்கம் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மற்றும் பல அரசியல் அமைப்புகளுக்கும் தடை விதித்துள்ளது, ரஷ்ய மொழி பயன்பாட்டை ஒடுக்கும் நோக்கில் சட்டங்களையும் நிறைவேற்றி உள்ளது.

இந்த 'குறைபாடுகள்' ஊடகங்களால் எப்போதும் கூறப்படுவதில்லை, அவை இப்போது உக்ரேனின் 'துளிர்விடும் ஜனநாயகம்' குறித்தும் அதன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியையும் பெருமைபீற்றி வருகின்றன. ஆனால் சமீபத்தில், சர்வதேச நாணய நிதியமும் மேற்கத்திய வங்கிகளும், உக்ரேன் மீது கடுமையான நிதி சிக்கன முறையை சுமத்தியதுடன், ஊழலில் ஊறிப் போன ஓர் அரசாங்கத்தின் தலைவராக ஜெலென்ஸ்கியைக் கடுமையாக கண்டனம் செய்தன. அந்த வறிய நாட்டின் பொருளாதாரத்தை வெறும் ஒரு சில விரல் விட்டு எண்ணக்கூடிய பில்லியனர்கள் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது நன்கு அறியப்பட்ட உண்மை என்றாலும் கூட, ரஷ்ய தன்னலக்குழுக்களைக் கண்டிப்பதில் தயக்கம் காட்டாத பைடென், உக்ரேனில் உள்ள அவர்களே போன்றவர்கள் குறித்து மரியாதையுடன் மவுனம் காக்கிறார்.

ஆனால் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனை ஒரு பகடைக்காயாக நேட்டோ பயன்படுத்துவதைச் நியாயப்படுத்தும் இந்த அத்தனை பொய்புரட்டுகளிலும், மிகவும் நயவஞ்சகமாகவும் அரசியல்ரீதியில் அம்பலப்படுவதாகவும் இருப்பவை என்னவென்றால் உக்ரேனின் பாசிச தேசியவாதத்தின் கேடுகெட்ட வரலாற்றை மூடிமறைப்பதாகும், அது இரண்டாம் உலகப் போரின் போது போலந்து மக்கள் மற்றும் யூதர்களைக் கும்பல் கும்பலாக படுகொலை செய்திருந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது உக்ரேனிய தேசியவாதிகள் அமைப்புக்குத் (OUN) தலைமை தாங்கிய பாரிய கொலைகாரர் ஸ்டீபன் பண்டேராவை (Stepan Bandera) ஒரு தேவதூதர் அந்தஸ்திற்கு உயர்த்தியதைக் குறித்து ஊடகங்கள் மவுனமாக உள்ளன. பண்டேராவையும் உக்ரேனிய தேசியவாதிகள் அமைப்பு (OUN) மற்றும் அதன் ஆயுதப்படைப் பிரிவான உக்ரேனிய கிளர்ச்சி இராணுவத்தின் உறுப்பினர்களையும் தேசிய மாவீரர்களாக மகிமைப்படுத்துவது, ஆரஞ்சு புரட்சிக்குப் பின்னர் விக்டொர் யுஷ்செங்கோ (Viktor Yushchenko) ஜனாதிபதி பதவிக்கு வந்ததுடன் தொடங்கியது. 2014 க்குப் பின்னர், இனப்படுகொலை தேசியவாதத்தின் இத்தகைய பாசிச மற்றும் வெறித்தனமான யூதவிரோத மாவீரர்களை இழிவுபடுத்துவது ஒரு குற்றமாக மாறியது.

Supporters of far-right parties carry torches and a banner with a portrait of Stepan Bandera during a rally in Kiev, Ukraine, January 1, 2019. The banner reads, 'Nothing can stop an idea whose time has come'. (AP Photo/Efrem Lukatsky) [AP Photo/Efrem Lukatsky]

இந்த வரலாற்றைப் பொய்மைப்படுத்தல், இன்றைய உக்ரேனிய இராணுவத்தில் ஆயுதமேந்திய பாசிசப் படைப்பிரிவுகளைச் சட்டப்பூர்வமாக்குவதற்கு இன்றியமையா சித்தாந்த அடித்தளமாக சேவையாற்றுகிறது. இத்தகைய படைப்பிரிவுகளில் அசோவ் பட்டாலியன் மிகவும் இழிவார்ந்த கூறுபாடாகும். கிழக்கு உக்ரைனில் 2014 இல் இருந்து 14,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ள இரத்தக்களரி உள்நாட்டுப் போரில் அசோவ் பட்டாலியன் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. அதன் செல்வாக்கு உக்ரைனுடன் மட்டுப்பட்டதில்லை. அசோவ் அமைப்பின் செயல்பாடுகளை ஆய்வு செய்த ஒரு நிபுணர் விளக்கியவாறு, “இது உலகெங்கிலுமான மற்ற அதிவலது இயக்கங்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் உத்வேகம் அளிக்கும் அமைப்பாகவும் சேவையாற்றியுள்ள மற்றும் சேவையாற்றக்கூடிய ஓர் இயக்கமாகும். வன்முறை மற்றும் அதன் இலட்சியங்களைத் தழுவிய அதன் இரட்டை முகம் அதிகரித்தளவில் சக்தி வாய்ந்த பன்னாட்டு அதிவலதின் பாகமாக இருப்பதால் அது உக்ரேனின் எல்லைகளைக் கடந்தும் ஓர் அச்சுறுத்தலாக ஆகிறது.

இத்தகைய பிற்போக்கு சக்திகளுடன் கூட்டு சேர்ந்து, அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் உலகை ஓர் அணுஆயுத பேரழிவின் விளிம்புக்குக் கொண்டு வந்துள்ளன. குற்றகரமான பித்துப்பிடித்த நடவடிக்கைகளுக்கு நிகரான பொறுப்பற்றத்தன்மையின் மட்டத்திற்கு பைடென் நிர்வாகம் செயல்படுகிறது. பனிப்போர் காலம் முழுவதும், அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான ஆயுத மோதல் ஒரு பேரழிவுகரமான அணுஆயுத தாக்குதலைத் தீவிரப்படுத்தும் சாத்தியக்கூறைக் கொண்டிருந்ததால் அதை தவிர்க்க வேண்டியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1962 கியூபா ஏவுகணை நெருக்கடியின் போது, வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவில் உள்ள தலைவர்களால் எதிரியின் நோக்கங்களை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டால் அது அணுஆயுதப் போருக்கு வழிவகுக்கும் என்பது ஜனாதிபதி கென்னடியின் மேலான பயமாக இருந்தது. பைடென் நிர்வாகமும், இலண்டன் மற்றும் பேர்லினில் உள்ள அதனைப்போன்றவர்களும், இந்த ஆபத்து குறித்து முற்றிலும் அலட்சியமாக இருப்பதாக தெரிகிறது.

பைடென் கூறிய கருத்துக்கள் வெளிப்படையான முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஓர் இராணுவ மோதல் மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்று சில வாரங்களுக்கு முன்பு தான் பைடென் கூறினார். ஆனால் இப்போது அவர் உக்ரேனுக்குள் ஆயுதங்களைப் பாய்ச்சி நேரடியாக அந்த மோதல் சாத்தியக்கூறை பல மடங்கு அதிகரிக்கிறார். ரஷ்ய சிப்பாய்களுக்கு எதிராக உக்ரேன் உயிர்பறிக்கும் ஆயுதங்களை பயன்படுத்த அவற்றை வினியோகிக்கும் நாடுகளை நேரடியாக தாக்குவதற்கு, அரசியல் மற்றும் இராணுவப் பரிசீலனைகளின் அடிப்படையில், புட்டின் நிர்பந்திக்கப்பட்டதாக உணரும் ஒரு சூழலைக் கற்பனை செய்வதொன்றும் பெரிய கடினமில்லை. ஒரு நேட்டோ உறுப்பு நாட்டுக்கு எதிராக ரஷ்யா பதிலடி கொடுத்து, அது நடக்கக்கூடியதே என்கின்ற நிலையில், அந்த நிகழ்ச்சிப்போக்கில் அமெரிக்கப் படைகளைத் தாக்கினால் பைடென் நிர்வாகம் எவ்வாறு விடையிறுக்கும்?
ஒருபுறம், அணுஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான புட்டினின் அச்சுறுத்தல்களை வெறும் விரக்தியின் வெளிப்பாடுகள் என்று பைடென் நிராகரிக்கிறார். ஆனால் அது துல்லியமாக விரக்தியின் உணர்வு தான் என்றாலும் அணுஆயுதங்களை நாடுவதற்கான ஆபத்தை அது அதிகரிக்கிறது. ஆனால் இது பைடெனைக் கவலைப்படுத்துவதாக தெரியவில்லை. அமெரிக்காவுடன் போரில் ஈடுபட்டுள்ளதாக கருதி புட்டின் செயல்படலாம் என்று அவருக்கு கவலை உண்டா என்று பைடெனிடம் நேரடியாக கேட்கப்பட்ட போது, 'அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்' என்ற கூறி பைடென் அந்த கேள்வியை உதாசீனப்படுத்தினார்.

நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் அணு ஆயுதப் போராக தீவிரமடையும் சாத்தியம் உள்ளது என்பதை அமெரிக்கா ஒப்புக் கொள்கிறது என்பதை மட்டுமே இது குறிக்கும். ஆனால் பைடெனோ அல்லது நேட்டோ நாடுகளின் வேறு எந்தத் தலைவரோ இந்த ஆபத்தைத் தெளிவாக ஒப்புக் கொள்ளவும் இல்லை அல்லது அணு ஆயுதப் போரின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை பகிரங்கமாக குறிப்பிட்டதும் இல்லை.

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரால் ஏற்படக்கூடிய சாத்தியமான பேரழிவுகரமான விளைவுகளை வேண்டுமென்றே இவ்வாறு மூடிமறைப்பது, வரலாற்றுரீதியாக பாரிய அளவுகளில் ஒரு குற்றமாகும்.

போரின் ஆபத்தை, நிராகரிக்காவிட்டாலும், குறைத்து மதிப்பிடுவதை நோக்கி ஒரு பொதுவான போக்கு உள்ளது. அணு ஆயுதப் போரின் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும் என்பதால், புத்தி பேதலித்தவர்கள் மட்டுந்தான் அதை நடக்க அனுமதிப்பார்கள் என்று பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். 'பகுத்தறிவு' கடைசியில் தான் மேலோங்குகிறது.

ஆனால் இருபதாம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த வரலாறும், மற்றும் இருபத்தியோராம் நூற்றாண்டின் இந்த முதல் இரண்டு தசாப்தங்களும் அத்தகைய சுய-உத்தரவாத சுயதிருப்திக்கு எதிரானதையே ஊர்ஜிதப்படுத்துகின்றன. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் பத்து மில்லியன் கணக்கானவர்கள் பலியான நிலையில் தான் அவை நடந்தன. அந்த போர் வெடிப்பு தனிநபர்களது பைத்தியக்காரத்தனத்தின் விளைவல்ல மாறாக முதலாளித்துவத்தின் படுமோசமான முரண்பாடுகளின் விளைவாகும்.

இருபத்தியோராம் நூற்றாண்டில் போர் என்பது ஓர் அபத்தம் என்று ஐ.நா பொதுச் செயலாளர் குட்டெரெஸ் (Guterres) கூறுகிறார். ஆனால் இந்த 'அபத்தம்' மற்ற பல 'அபத்தங்களுடன்' பிரிக்கமுடியாத வகையில் இணைந்துள்ளது: அதாவது, வர்க்க சமூகம் என்ற அபத்தம், உற்பத்தி சாதனங்களின் தனிச்சொத்துடைமை என்ற அபத்தம், பில்லியன் கணக்கானவர்கள் முடிவில்லா வறுமையில் வாழ்ந்து பட்டினியை முகங்கொடுக்கின்ற அதேவேளையில் உலக மக்களில் ஒரு சிறிய அற்ப சதவீதத்தினரிடம் அபரிமிதமான செல்வம் குவிக்கப்படும் அபத்தம், இப்புவியின் சுற்றுச்சூழலை அமைப்புரீதியில் சீரழிக்கும் அபத்தம், எல்லாவற்றையும் விட மிகப்பெரிய அபத்தமாக, சமூகத்தை ஆட்சி செய்யும் பெருநிறுவன-நிதிய தன்னலக்குழுக்களின் நலன்களுக்கு மட்டுமே சேவையாற்றும் விதத்தில் முடிவில்லா மற்றும் அவசியமில்லா மோதல்களைத் தூண்டிவிடும் வகையில் பண்டைய காலம் முதல் மனிதகுலம் தேசிய-அரசுகளாக பிரிக்கப்பட்டிருக்கும் அபத்தம்.

ஏறக்குறைய 20 மில்லியன் உயிர்களைப் பலிகொண்ட Sars-CoV-2 வைரஸை முற்றிலுமாக ஒழிக்க, உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அரசாங்கங்கள், நன்கறியப்பட்ட தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்க மறுத்துவிட்டன என்பது 'அபத்தம்' இல்லையா, இந்த பெருந்தொற்றைச் சர்வசாதாரணமாக அலட்சியப்படுத்துவதே இதற்கான தீர்வு என்று அது நம்புவது 'அபத்தம்' இல்லையா?

ஆனால் இந்த பெருந்தொற்றுக்குக் காட்டிய பேரழிவுகரமான விடையிறுப்புக்கு தலைமை தாங்கிய அதே தலைவர்கள் தான் இப்போது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் முடிவுகளை எடுத்து வருகிறார்கள்.

ஜனாதிபதி பைடென், பிரதம மந்திரி ஜோன்சன், ஜனாதிபதி மக்ரோன், சான்சிலர் ஸ்கோல்ஜ் மற்றும், அந்த விஷயத்தில், ஜனாதிபதி புட்டினும், அவர்களின் தனிப்பட்ட விவாதங்களில், ஓர் உலகப் போர் ஒரு சமூகப் பேரழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதை அவர்களுக்குள் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் இருபதாம் நூற்றாண்டில், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்குள் தங்கள் நாடுகளை கொண்டு சென்றவர்களும், உலகளாவிய மோதலின் விளைவுகளைக் குறித்து அஞ்சி இருந்தனர். அவர் செயல்கள் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்பதை ஹிட்லரே கூட புரிந்து வைத்திருந்தார். ஆனால் அது அவர்களைத் தடுத்துவிடவில்லை. முடிவில், தீர்க்க முடியாத சிக்கலான அரசியல் மற்றும் சமூக-பொருளாதார நெருக்கடிகளில் இருந்து வெளியேற போர் மட்டுமே ஒரே வழி என்று அவர்கள் முடிவெடுத்தனர்.

இது தான் இன்றைய நிலையும். உலக முதலாளித்துவ அமைப்புமுறை ஒரு சிக்கலான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளில் சிக்கி உள்ளது, இதற்கு அமைதியான தீர்வுகள் எதுவும் இல்லை. உலக முதலாளித்துவ பெருஞ்சுழலின் வெடிப்பார்ந்த மையப்புள்ளியான அமெரிக்கா, அதன் உலகளாவிய மேலாதிக்க அந்தஸ்தை இழப்பதையும், அதன் பொருளாதாரத்தின் தீர்க்க முடியாத சீரழிவையும், அதன் உள்நாட்டு அரசியல் அமைப்புகள் மற்றும் சமூக சமநிலையின் உடைவு மிகவும் முன்னேறி இருப்பதையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டுள்ளது.

அதிகரித்து வரும் பொருளாதார பொறிவின் அபாயத்தால் மிரண்டு போயுள்ளதும், தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் சமூக தீவிரமயப்படலின் அறிகுறிகளால் பீதியடைந்துள்ளதுமான ஆளும் வர்க்கம், ஆழமாகப் பிளவுபட்டுள்ள நாட்டை செயற்கையாக 'ஒன்றுபடுத்தி', உள்நாட்டு பதட்டங்களை வெளிப்புறமாக திருப்பி விடுவதற்கான ஒரு வழிவகையாக போரில் இறங்குவதைக் காண்கிறது.

ஆனால் போரை நாடுவது அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் நெருக்கடியைத் தீவிரமாக்கும். பணவீக்கம் மற்றும் வாழ்வையே அச்சுறுத்தும் விதமாக உணவு மற்றும் பிற அத்தியாவசிய வாழ்க்கைத் தேவைகளின் குறைவில் ஏற்கனவே போரின் துணைவிளைவுகள் உணரப்படுகின்றன. இத்தகைய நிலைமைகள் பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டியுள்ளன.

உலகப் போரை அச்சுறுத்தும் இந்த முரண்பாடுகள் உலக சோசலிசப் புரட்சிக்கான நிலைமைகளையும் உருவாக்குகின்றன. தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் சவால் இதுதான்: உலகப் போருக்கு இட்டுச் செல்லும் புறநிலைப் போக்குகளை வலுவிழக்கச் செய்து பலவீனப்படுத்தி, அதேவேளையில் புரட்சிக்கு இட்டுச் செல்லும் புறநிலை போக்குகளைப் பலப்படுத்தி வேகப்படுத்த வேண்டும்.

Leon Trotsky

தொழிலாள வர்க்க இயக்கமே போருக்கு எதிரான போராட்டத்திற்கு அடிப்படையானது. அதுவே போரை நிறுத்தவும், முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், தேசிய எல்லைகளைத் தகர்க்கவும், உலக சோசலிச சமூகத்தைக் கட்டமைக்கவும் வல்லமை கொண்ட மாபெரும் சமூக சக்தியாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளும் மற்றும் குழுக்களும் தேசிய அரசைப் பாதுகாப்பதற்கான எல்லாவித பேரினவாத அழைப்புகளையும் நிராகரிக்கின்றன. நாம் 1934 இல் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதிய சர்வதேசவாத கொள்கைகளை தாங்கிப் பிடிக்கிறோம், அதாவது:

“தேசியப் பாதுகாப்பைப் போதிக்கும் ஒரு ‘சோசலிசவாதி’, சிதைந்து வரும் முதலாளித்துவத்தின் சேவையில் ஈடுபடும் ஒரு குட்டி முதலாளித்துவ பிற்போக்குவாதி ஆவார். போர்க்காலத்தில் தேசிய அரசுடன் தன்னைப் பிணைத்துக் கொள்ளாமல், போரின் வரைபடத்தை அல்ல, வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தைப் பின்பற்றுவது, ஏற்கனவே அமைதிக் காலத்தில் தேசிய அரசின் மீது சமரசமற்ற போரைப் பிரகடனப்படுத்தி உள்ள கட்சிக்கு மட்டுமே சாத்தியம்.

'ஏகாதிபத்திய அரசின் புறநிலையான பிற்போக்கு பாத்திரத்தை முழுமையாக உணர்ந்துகொள்வதன் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்க முன்னணிப் படையால் சமூக தேசபக்தியின் அனைத்து வகைகளில் இருந்தும் பாதிக்கப்படாமல் இருக்க முடியும். சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நிலைப்பாட்டில் இருந்து மட்டுமே 'தேசியப் பாதுகாப்பு' என்ற சித்தாந்தம் மற்றும் கொள்கையுடனான ஓர் உண்மையான முறிவு சாத்தியமாகும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது.'

ஆகவே ஏகாதிபத்திய போர் முனைவுக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதே மையப் பணியாகும். பொறுப்பற்றத் தீவிரப்படுத்தலை நிறுத்த வேண்டும். உக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வர தொழிலாள வர்க்கத்தின் பலத்தை அணிதிரட்ட வேண்டும்.

அனைத்துலகக் குழு ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள துணிச்சலான மற்றும் வர்க்க நனவுப்பூர்வமான தொழிலாளர்களுக்கு ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுக்கிறது. உங்கள் முதலாளித்துவ அரசாங்கங்களின் பிற்போக்குத்தனமான கொள்கைகளை நிராகரியுங்கள். இந்த பயங்கரமான போருக்கு வழிவகுத்துள்ள இந்த ஒட்டுமொத்த முதலாளித்துவ மீட்டமைப்பு திட்டத்தையும் நிராகரியுங்கள்.

ஒரு காலத்தில் உங்கள் நாடுகளின் உழைக்கும் மக்கள் பேரார்வத்துடன் ஈர்க்கப்பட்டிருந்த மார்க்சியம் மற்றும் போல்ஷிவிசத்தின் மரபுகளுக்குத் திரும்புங்கள். அந்த மரபுகள் பெருந்திரளான மக்கள் நனவில் இன்னமும் உயிர் வாழ்கின்றன என்பதும், அவை கூட்டு நடவடிக்கையில் மீண்டும் எழுச்சி பெறும் என்பதை நாம் அறிவோம்.

சர்வதேச தொழிலாள வர்க்கம் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போரை அறிவிக்க வேண்டும். சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தைக் கட்டியெழுப்புவது தான் அனைத்து அரசியல் பணிகளிலும் மிகவும் முக்கியமானதாகும். இந்த முன்னோக்குடன் உடன்படுபவர்கள் மற்றும் எங்கள் அணியில் சேர்ந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக இருப்பவர்கள் அனைவருக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

Loading