முன்னோக்கு

உக்ரேன் தீவிரப்படுத்தலில் அமெரிக்கா ரஷ்யாவை ஆத்திரமூட்ட முயல்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நியூ யோர்க் டைம்ஸூம் NBC News உம், அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், உக்ரேன் மோதலை நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒரு நேரடி மோதலாக வேண்டுமென்றே தீவிரப்படுத்தும் முயற்சிக்கு நிகரான செய்திகளை வெளியிட்டுள்ளன.

டைம்ஸ் புதன்கிழமை மாலை இணையத்தில் வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், வெள்ளை மாளிகை அதிகாரிகளை மேற்கோளிட்டு, ரஷ்ய தளபதிகளை இலக்கு வைத்து கொல்ல பயன்படுத்தப்பட்ட உளவுத்தகவல்களை அமெரிக்கா உக்ரேனிய இராணுவத்திற்கு வழங்கி இருப்பதை உறுதிப்படுத்தியது, அவர்களில் சுமார் 12 பேர் இந்த போரின் போது கொல்லப்பட்டுள்ளனர்.

Ukrainian tanks move down a street in Irpin, on the outskirts of Kyiv, Ukraine, Monday, April 11, 2022. (AP Photo/Evgeniy Maloletka) [AP Photo/Evgeniy Maloletka]

'அடிக்கடி இடம் விட்டு இடம் பெயரும் ரஷ்ய இராணுவத்தின் மொபைல் தலைமையகத்தின் அமைவிடம் மற்றும் பிற விவரங்களை வழங்குவதில் அமெரிக்கா ஒருமுனைப்பட்டுள்ளது' என்று டைம்ஸ் எழுதியது. இது 'ரஷ்ய அதிகாரிகளைக் கொன்ற பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் பிற தாக்குதல்களை நடத்த' உக்ரேனியப் படைகளை அனுமதித்துள்ளது.

அமெரிக்காவின் தலையீடு 'போர்க்களத்தில் தீர்க்கமான தாக்கத்தை' கொண்டிருந்தது. 'ரஷ்ய துருப்புக்களின் நகர்வுகள் சம்பந்தமாக அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியுள்ள நடவடிக்கை-மேற்கொள்ளத்தக்க உளவுத்தகவல்களின்' அளவுக்கு 'வெகு சில முன்னுதாரணங்களே உள்ளன' என்பதையும் அது சேர்த்துக் கொண்டது.

அடுத்த நாள், NBC News குறிப்பிடுகையில், பல தசாப்தங்களில் இல்லாதளவுக்கு அந்த மிகப் பெரிய ரஷ்ய இராணுவப் பேரழிவில், ரஷ்ய கருங்கடல் கடற்படையின் முதன்மையான போர்க்கப்பல் மொஸ்க்வா மூழ்கடிப்பை ஒருங்கிணைப்பதில் அமெரிக்கா மிக முக்கிய தலையீடு செய்ததாக குறிப்பிட்டது.

இன்னும் வேகத்தை அதிகரிக்கும் விதத்தில், அமெரிக்க உதவியுடன் ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 'ரஷ்ய எல்லைக்குள் தொடர்ச்சியான தாக்குதல்களையும் மற்றும் ரஷ்ய இலக்குகள் மீது விவரிக்கப்படாத குண்டுவெடிப்புகளையும்' வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் சுட்டிக்காட்டியது.

இந்த தாக்குதல்கள் 'மேற்கு நாடுகளுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான அதிகரித்த உளவுத்தகவல் பகிர்வின் விளைவாக இருக்கலாம்' என்று வெளியுறவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த எழுத்தாளர் ராப் லீயை அந்த கட்டுரை மேற்கோளிடுகிறது.

நேட்டோ சக்திகள், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கா, இந்த உக்ரேன் மோதலில் நேரடியாக பங்கேற்கவில்லை என்ற எந்தவொரு கருத்தும் இங்கே பொய்யென சுக்குநூறாக சிதறுகிறது. அமெரிக்கா ஒரு போரிலோ, அல்லது ஒரு பினாமிப் போரிலும் கூட ஈடுபட்டுள்ளது என்பது 'உண்மை இல்லை' என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனின் அறிவிப்பு பட்டவர்த்தனமான ஒரு பொய்யாகும். அமெரிக்காவும் நேட்டோவும் பத்து பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிலான இராணுவத் தளவாடங்களை வழங்கி வருவதுடன், இந்த அறிக்கைகளே ஆவணப்படுத்துவது போல, உக்ரேனிய இராணுவம் மற்றும் அதிவலது கூலிப்படைகள் பயன்படுத்தும் விதத்தில் நேரடியாக உளவுத்தகவல்களையும் வழங்கி வருகின்றன.

அமெரிக்க ஊடகங்களில் வரும் செய்திகள் தெள்ளத்தெளிவாக வெள்ளை மாளிகையால் திட்டமிட்டு முடுக்கிவிடப்படுகின்றன.

டைம்ஸ் எழுதுகிறது, 'போர்க்கள உளவுத்தகவல்களில் பெரும்பான்மை ஒரு தீவிரப்பாடாக பார்க்கப்பட்டு, ஒரு பரந்த போருக்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் வி. புட்டினை ஆத்திரமூட்டும் என்று அஞ்சி, அவற்றை இந்த நிர்வாகம் இரகசியமாக வைக்க முயல்கிறது.”

அப்படியென்றால், இந்த நிர்வாகம் போரில் அது நேரடியாக ஈடுபடுவதை இப்போது ஏன் விளம்பரப்படுத்துகிறது?

நிர்வாகத்தின் பல அதிகாரிகளது ஆவணப்படுத்தப்படாத அறிக்கைகளின் அடிப்படையில் டைம்ஸூம் NBC உம் இந்த தகவல்களை வெளியிடுவது, நேட்டோ படைகளுக்கு எதிராக பதிலடி கொடுக்குமாறு ரஷ்ய அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரிப்பதற்கான பைடென் நிர்வாகத்தின் ஒரு திட்டமிட்ட முயற்சியாகும். இது அமெரிக்க துருப்புக்களை நேரடியாக ஈடுபடுத்துவது அல்லது நேட்டோ ஷரத்து 5ஐ பயன்படுத்துவது வரை மற்றும் அவை உட்பட கூடுதல் அமெரிக்க தீவிரப்பாட்டுக்கான சூழலை உருவாக்கும்.

நேட்டோவுடனான உக்ரேனின் உறவுக் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுத்தும், ரஷ்ய எல்லைக்கருகில் உள்ள ஓர் ஆயுத முகாமாக உக்ரேனை மாற்றியதன் மூலம் உக்ரேன் மீது படையெடுக்க ரஷ்யாவை ஆத்திரமூட்டுவதில் அமெரிக்கா வெற்றி பெற்றதைப் போலவே, அதன் திறமையான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உக்ரேனிய படைகள் மூலமாக ரஷ்ய இராணுவத்தின் மீது தாக்குதல்களை நடத்தி 'தீவிரப்பாட்டுக்கான சுமையை' ரஷ்யா மீது சுமத்த அது முயன்று வருகிறது.

'உக்ரேனியர்களுக்கு நாங்கள் இந்தளவுக்கு உதவுகிறோம் என்பதை ரஷ்யர்கள் ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெளிவாக நாங்கள் விரும்புகிறோம். அதைச் செய்வதை நாங்கள் தொடர்வோம்,' என ஒபாமா நிர்வாகத்தில் ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கான முன்னாள் பாதுகாப்புத் துறை அதிகாரியான ஈவ்லின் ஃபர்காஸ் கூறியதாக டைம்ஸ் அவரை மேற்கோளிடுகிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மொஸ்க்வாவில் இருந்த ரஷ்ய தளபதிகள் மீது அமெரிக்க உதவியுடன் நடத்தப்பட்ட தாக்குதல்களும், மற்றும் ரஷ்ய எல்லைக்குள் நடத்தப்பட்ட தாக்குதல்களும் அதிகபட்சமாக ஆத்திரமூட்ட வடிவமைக்கப்பட்டுள்ளன, அதேநேரத்தில் டைம்ஸின் வார்த்தைகளில் 'மறுக்கக் கூடியவையாக' உள்ளன. அமெரிக்காவின் இலக்கு துல்லியமாக 'ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் வி. புட்டினை ஒரு பரந்த போருக்குத் தூண்டுவது' ஆகும்.

இந்த போரின் இலக்குகள் மற்றும் நோக்கத்தை அமெரிக்கா விரிவுபடுத்தும் அதேவேளையில், அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரச்சாரகர்கள் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையை இயல்பிலேயே தற்காப்பு நடவடிக்கையாக கூற அனுமதிக்கும் விதமான ஒரு ரஷ்ய விடையிறுப்பைச் சீண்டிவிட முயன்று வருகிறது.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ரஷ்யா பேச்சுவார்த்தைகளை நடத்த முற்படும் அதேவேளையில், ரஷ்யாவின் ஒட்டுமொத்த இராணுவ தோல்வி, கிரிமியா மற்றும் டொன்பாஸின் மறுஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு குறைவாக இந்த மோதலுக்கான எந்தவொரு தீர்மானத்திற்கும் அமெரிக்கா அதன் எதிர்ப்பை தெளிவாக்கியுள்ளது.

புட்டின் ஏன் இன்னும் ஆக்ரோஷமாக ஆகவில்லை என்று யோசித்து புதன்கிழமை கட்டுரையை எழுதிய அதே நபர்களில் ஒருவர் இணைந்து எழுதிய டைம்ஸின் ஒருர முந்தைய கட்டுரை மூலம் இது இன்னும் கூடுதலாக ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

'புட்டின் ஏன் போர்க்களத்தில் கடுமையாக தாக்கவில்லை?' என்ற கட்டுரை குறிப்பிடுகையில், 'ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் தந்திரோபாயங்கள், கிழக்கு உக்ரேனில் மெதுவாக நகர்ந்து தாக்குதல், உக்ரேனிய உள்கட்டமைப்பைக் கைப்பற்றுவதில் ஒரு கட்டுப்பாடான அணுகுமுறை மற்றும் நோட்டோவுடன் மோதலைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளைத் தவிர்ப்பது என சமீபத்திய வாரங்களில் குறிப்பிடத்தக்களவில் எச்சரிக்கையாக இருப்பதாக தெரிகிறது என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளும் கூறுகின்றனர்,” என்று குறிப்பிட்டது.

வாஷிங்டன் பகிரங்கமாக ரஷ்யாவின் 'முழுமையான போரை' கண்டித்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் அமெரிக்க அதிகாரிகள் புட்டினின் 'குறிப்பிடத்தக்க எச்சரிக்கையால்' குழப்பமடைந்துள்ளனர். நாஜி ஜேர்மனிக்கு எதிரான சோவியத் ஒன்றியத்தின் வெற்றியை நினைவுகூரும் நாளான மே 9 ஐ வாஷிங்டன் அதன் பார்வையில் வைத்துள்ளது, புட்டினின் உரை மற்றும் அறிவிப்புகளில் தீவிர நடவடிக்கைகளுக்குத் தூண்டும் வகையில் புட்டினை ஆத்திரமூட்ட அது கருதுகிறது.

புட்டின் 'அதிகாரத்தில் நீடிக்க முடியாது' என்று மார்ச் மாதம் பைடென் அவரது பிரகடனத்தில் தெளிவுபடுத்திய நிலையில், ரஷ்யாவில் ஆட்சி மாற்றமும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அதை முழுவதுமாக அடிபணிய செய்வதுமே அமெரிக்காவின் இறுதி நோக்கமாக உள்ளது.

ஆனால் உள்நாட்டு அழுத்தங்கள் மாபெரும் பாத்திரம் வகிக்கவில்லை என்றாலும் சமமான பங்கை வகிக்கின்றன. மிகப் பெரியளவிலான உள்நாட்டு பதட்டங்களை வெளிப்புறமாகத் திசைதிருப்பும் வகையில், அமெரிக்கா இந்த போரை மிகப் பெரியளவில் தீவிரப்படுத்த முயன்று வருகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருகின்றன. தொழிலாளர்களின் சம்பள அழுத்தங்களைச் சமாளிக்க, பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் கடுமையாக அதிகரித்து வருகிறது, அனேகமாக இது ஒரு பின்னடைவுக்கு வழிவகுக்கக்கூடும். மேலும் கோவிட்-19 பெருந்தொற்றும் கட்டுப்பாட்டில் இல்லை.

போரைத் தீவிரப்படுத்த வெள்ளை மாளிகையின் அவநம்பிக்கையான முயற்சிகள், பாரிய எதிர்ப்பால் சுற்றி வளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டதாக தன்னைக் காணும் ஓர் ஆளும் வர்க்கத்தின் நடவடிக்கைகளாகும். அது உள்நாட்டு எதிர்ப்பைச் சட்டத்திற்கு விரோதமானதாக ஆக்க, போர் மற்றும் அதனுடன் சேர்ந்து ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தாக்குதல்கள் மூலம் செய்ய முயல்கிறது.

உழைக்கும் மக்கள் அமெரிக்க இராணுவத் தீவிரப்பாடு முன்நிறுத்தும் தீவிர ஆபத்துகளுக்கு எதிராக கவனமாக இருக்க வேண்டும். சமூக சமத்துவமின்மை, வறுமை, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் இந்த முதலாளித்துவ இலாப அமைப்பும்முறைக்கு எதிரான போராட்டத்துடன் போருக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்து, போருக்கு எதிராக ஒரு புதிய மற்றும் சக்தி வாய்ந்த இயக்கத்தை உருவாக்குவது அவசரமான தேவையாகும்.

Loading