முன்னோக்கு

அமெரிக்காவில், வருகின்ற இலையுதிர்கால மற்றும் குளிர்கால நோய்தொற்று எழுச்சியின்போது நூறு மில்லியன் கொரோனாவைரஸ் நோய்தொற்றுக்கள் உருவாகும் என முன்கணிக்கப்பட்டுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வரவிருக்கும் இலையுதிர் மற்றும் குளிர்கால மாதங்களில் 100 மில்லியன் புதிய கோவிட்-19 தொற்றுக்களை அமெரிக்கா பதிவு செய்யும் என்று எதிர்பார்ப்பதாக பைடென் நிர்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. தகவலை வெளிப்படுத்திய வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையின்படி, அரசாங்கம் 'குறிப்பிடத்தக்க இறப்பு அலை' குறித்தும் எச்சரித்தது.

இந்த கணிப்புகள் ஒரு தனிப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் ஒரு அநாமதேய வெள்ளை மாளிகை அதிகாரியால் வெளியிடப்பட்டன, இது பற்றிய விபரங்கள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ‘தொற்றுநோயின் வெளிப்புற மாதிரிகளின்,’ அடிப்படையில் நிர்வாகம் மதிப்பீடு செய்துள்ளது என்று போஸ்ட் இன் பெரும்பாலான அறிக்கைகள் கூறுகின்றன, இவை அனைத்தும் ஓமிக்ரோன் மற்றும் அதன் துணை மாறுபாடுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதாகக் கருதுகின்றன.

2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் ஆல்பா மாறுபாடு முதன்முதலில் கண்டறியப்பட்டதில் இருந்து நோய்தொற்று எழுச்சி மீண்டும் மீண்டும் நிகழ்ந்தது போல், அமெரிக்காவிலும் புதிய மற்றும் அதிக வீரியம் மிக்க மாறுபாடுகள் தோன்றுமானால் இந்த கணிப்புகள் இன்னும் மோசமாகிவிடும்.

இத்தகைய மட்டங்களிலான பாரிய நோய்தொற்றின் தாக்கங்கள் திகைக்க வைக்கின்றன. 83 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுநோய்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையை விட, நூறு மில்லியன் புதிய தொற்றுக்கள் இரண்டு மடங்கு அதிகமாகும். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் செய்தியிதழ் ஏப்ரல் மாதம் வெளியிட்ட ஆய்வின் அடிப்படையில், 100 மில்லியன் புதிய நோய்தொற்றுக்கள் என்பது, 43 மில்லியன் புதிய நெடுங்கோவிட் நோய்களையும் குறிக்கும். மேலும் 100 மில்லியன் புதிய நோய்தொற்றுக்களானது, வைரஸின் ஏற்றுக்கொள்ளப்பட்ட இறப்பு விகிதமான 0.5 சதவீதம், அதாவது 500,000 புதிய இறப்புக்கள் நிகழும் என்பதையும் குறிக்கிறது.

டிசம்பர் 14, 2021, செவ்வாய்க்கிழமை, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பிராவிடன்ஸ் ஹோலி கிராஸ் மருத்துவ மையத்தில் கொரோனா வைரஸால் இறந்த நோயாளியின் உடல் பையில் பதிவுசெய்யப்பட்ட செவிலியர் பிரையன் ஹோஃபிலினா ‘கோவிட் நோயாளி’ என்ற ஸ்டிக்கரை இணைக்கிறார். [AP Photo/Jae C. Hong] [AP Photo/Jae C. Hong]

வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணி ஒருங்கிணைப்பாளர் ஆஷிஷ் ஜாவின் நேர்காணலை உள்ளடக்கிய கணிப்புகள் குறித்த ABC News இன் அறிக்கை ஒரு மோசமான வரைபடத்தை வழங்கியது. அதாவது “இப்போதிருந்து இலையுதிர் மற்றும் குளிர்காலத்திற்கு இடையில், நாம் புதிய மாறுபாடுகளை எதிர்கொள்வதற்கு அதிக சாத்தியம் [உள்ளது]” அவை மிகுந்த தொற்றும் தன்மையுள்ளவையாக இருக்கும் என்பதை ABC இன் டேவிட் முயரிடம் ஜா உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில், புதிய அலை தாக்கும் போது, “நம்மிடம் தடுப்பூசிகள் இருக்கப் போவதில்லை… அதற்கான சிகிச்சைகளும் தீர்ந்துவிடும்… நாம் நோயறிதல் சோதனைகளையும் செய்யப் போவதில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர தடுப்பூசிகள் அனைத்து நோய்களையும் தீர்க்கும் ஒரு சஞ்சீவி மருந்து என்பது போன்ற வெள்ளை மாளிகை மந்திரத்தைத் தவிர ஜா எதையும் முன்மொழியவில்லை. “நீங்கள் தடுப்பூசியும் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டிருந்தால், கடுமையான நோய்க்கு எதிராக உங்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பு கிடைக்கும்” என்று ஜா கூறினார், அதேவேளை முகக்கவசம் அணிவது போன்ற அடிப்படைத் தணிப்பு நடவடிக்கைகளைக் கூட அவர் குறிப்பிடவில்லை.

தடுப்பூசிகள், தொற்றுநோயை எதிர்த்துப் போராட தேவையான கருவிகளில் ஒன்றாகும். எவ்வாறாயினும், அமெரிக்காவில் தடுப்பூசி விகிதங்கள் உயராமல் ஸ்தம்பித்து விட்டன, அதாவது மக்கள்தொகையில் 67 சதவீதம் பேர் மட்டுமே முழு ஆரம்பகட்ட தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர், மேலும் 31 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இத்தகைய குறைந்த விகிதங்கள் குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் இருவராலும் ஊக்குவிக்கப்பட்ட ஒரு விஞ்ஞான விரோத சமூக மற்றும் கலாச்சார சூழலில் மட்டுமே சாத்தியமாகும். இதன் விளைவாக, Peterson-KFF சுகாதார அமைப்பு கண்காணிப்பு அமைப்பானது, ஜூன் 2021 முதல் குறைந்தது 234,000 பேர் இறந்துள்ளனர் என்று மதிப்பிடுகிறது, அதாவது அவர்களுக்கு தடுப்பூசியும் பூஸ்டர் தடுப்பூசியும் முழுமையாக போடப்பட்டிருந்தால், அவர்கள் வாழ்ந்திருப்பார்கள் என்கிறது.

மேலும், கொரோனா வைரஸ் மாறுபாடுகள், அதிலும் குறிப்பாக ஓமிக்ரோன் மாறுபாடுகள், தடுப்பூசிகளால் வழங்கப்படும் நோயெதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கும் திறனை அதிகரித்தளவில் கொண்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில், அமெரிக்காவில் நிகழ்ந்த ஒட்டுமொத்த கோவிட்-19 இறப்புக்களில் முறையே 42 மற்றும் 40 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாவர், இவர்களில் 12 மற்றும் 15 சதவீதம் பேர் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியும் பெற்றவர்களாவர்.

இதன் பொருள், இந்த ஆண்டு கோவிட்-19 நோயால் 500,000 இறப்புக்கள் ஏற்பட்டால், அவர்களில் குறைந்தது இரண்டு அளவு தடுப்பூசிகளைப் பெற்ற 200,000 க்கும் அதிகமானவர்கள் இருப்பார்கள். மேலும் ஒவ்வொரு மாதமும், ஏற்கனவே வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் செயல்திறன் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பைடென் நிர்வாகத்தின் கணிப்பு, தொற்றுநோயின் வரவிருக்கும் அலைகளை குறைத்து மதிப்பிடுவதாக நிரூபிக்கும் அனைத்து சாத்தியங்களும் உள்ளன. அதாவது, உத்தியோகபூர்வ நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சராசரியாக 70,000 ஆக உள்ள அதேவேளை, வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME), தற்போது ஒவ்வொரு நாளும் 492,000 க்கும் அதிகமான புதிய நோய்தொற்றுக்கள் உருவாவதாக மதிப்பிடுகிறது, அதாவது பரிசோதனை பற்றாக்குறை மற்றும் கோவிட்-19 தரவுகளின் பாரிய மூடிமறைப்பு ஆகியவற்றிற்கு மத்தியில் பெரும்பாலானவை கண்டறியப்படாமல் போய்விட்டன என்கிறது.

அத்தகைய விகிதத்தில், மற்றொரு நோய்தொற்று எழுச்சி நிகழாமல் கூட, ஆண்டு இறுதிக்குள் 115 மில்லியனுக்கும் அதிகமான புதிய நோய்தொற்றுக்கள் இருக்கும். முதலாளித்துவத்தின் முன்னணி பிரதிநிதிகளில் ஒருவரான மைக்ரோசாஃப்ட் ஸ்தாபகர் பில் கேட்ஸ் கூட, தொற்றுநோயால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தல் மிகவும் மோசமாக உள்ள நிலையில், “இந்த தொற்றுநோய் ஒரு புதிய மாறுபாட்டை உருவாக்கும் அபாயத்தில் நாம் இன்னும் இருக்கிறோம், அது இன்னும் அதிகம் பரவக்கூடியதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும்” என்று பைனான்சியல் டைம்ஸூக்கு கருத்துத் தெரிவித்தார். கேட்ஸ் மேலும், “இந்த தொற்றுநோய் மேலும் 5 சதவீத அபாயத்தை கொண்டுள்ளது, நாங்கள் இதை விட மோசமானதைப் பார்க்கவில்லை” என்றும் கூறினார்.

தரவரிசை அதிகாரிகள் மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் கருத்துப்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோய் ‘முடியவில்லை’ அல்லது ‘நிரந்தரமானது’ என்பதை பைடென் நிர்வாகம் இப்போது வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறது. மாறாக, டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் ஓமிக்ரோன் மாறுபாட்டால் உருவெடுத்த பெரும் நோய்தொற்று அலைகளைக் கூட விஞ்சும் திறன் கொண்ட புதிய நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் சுனாமியாக இது உருவாகி வருகிறது.

இருப்பினும், ஊடகங்கள் இந்த விவகாரத்தை ஒரு பிரச்சினையாகவே பார்க்கவில்லை. தொற்றுநோய் பற்றிய செய்திகள் பெரும்பாலும் தொலைக்காட்சி செய்திகள் மற்றும் அச்சு ஊடகங்களால் கைவிடப்பட்டுவிட்டன. ABC News அறிக்கையானது, பரவி வரும் பொது சுகாதாரப் பேரழிவு குறித்த புதிய விவரங்களைக் காட்டிலும், பல மாதங்களில் தொற்றுநோய் குறித்த வலைத் தளத்தின் முதல் குறிப்பிடத்தக்க அறிக்கையாக இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகையை பொறுத்தவரை, அது அதன் கணிப்புக்களை வெறுமனே அறிவித்துள்ளது, மாறாக அதைத் தடுக்க எந்த நடவடிக்கையையும் முன்மொழியவில்லை. இந்நிலையில், அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் அபாயம் குறித்து எச்சரிக்கவோ அல்லது அதைத் தவிர்ப்பதற்கான வழிகாட்டுதலை வழங்கவோ ஒரு செய்தியாளர் மாநாட்டை கூட அது நடத்தவில்லை.

குடியரசுக் கட்சியினரின் கீழ் இருந்ததைப் போலவே, பாரிய நோய்தொற்றுக் கொள்கை ஜனநாயகக் கட்சியினரின் கீழும் மிகுந்த உயிர்ப்புடன் உள்ளது. நூறு மில்லியன் நோய்தொற்றுக்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் நூறாயிரக்கணக்கான இறப்புக்கள் மற்றும் மில்லியன் கணக்கான நெடுங்கோவிட் நோய்தொற்றுக்கள் ஆகிய அனைத்தும், வோல் ஸ்ட்ரீட் கஜானாவை நிரம்பி வழியச் செய்வதற்கான வணிகச் செலவாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஆளும் உயரடுக்கு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து உபரி மதிப்பைப் பிரித்தெடுக்கும் திறனுக்கு இடையூறு விளைவிக்காத வரையில், எந்த அளவிலான மரணமும் ஏற்கத்தக்கது என்பதை வெள்ளை மாளிகை மாநாடு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. பல்வேறு தொற்றுநோய் கண்காணிப்பு அமைப்புகள் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டி இறப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக கணக்கிட்டுள்ளன, மேலும் பத்திரிகைகளில் இவ்வளவு பெரிய உயிரிழப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இறப்புக்கள் குறைந்தது 1.5 மில்லியன் அளவிற்கு உயரும் என்பதை இப்போது மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில், தொழிலாள வர்க்கத்தின் பதிலானது நோய்தொற்று மற்றும் மரணத்தின் உடனடி அலைக்கு எதிராக போராடுவதாக இருக்க வேண்டும். அதாவது, வைரஸ் பரவுவதைத் தடுக்க, தடுப்பூசி மற்றும் பிற தணிப்பு நடவடிக்கைகளுடன், அத்தியாவசியமற்ற உற்பத்தி இடங்கள் மற்றும் பள்ளிகளை மூடுவது உட்பட, ஒவ்வொரு பொது சுகாதார நடவடிக்கையையும் தீவிரமாக செயல்படுத்தும் வகையிலான உலகளாவிய ஒழிப்புக் கொள்கையின் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

அத்தகைய கொள்கை, தொழிலாள வர்க்கத்தின் பாரிய இயக்கத்தின் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட முடியும், இது தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை சமத்துவமின்மை, சுரண்டல், போர் மற்றும் நுகர்வுப் பொருட்களின் விலையுயர்வு ஆகியவற்றுக்கு எதிரான உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் வளர்ந்து வரும் போராட்டங்களுடன் இணைக்கிறது. தொற்றுநோயின் பேரழிவுகர தாக்கத்திற்கு அடிப்படை பொறுப்பாளியாகவுள்ள புரையோடிய முதலாளித்துவ அமைப்பின் கட்டுக்குள் இருக்கும் பூமியை சுத்தப்படுத்த தொழிலாள வர்க்கத்தால் ஒரு நனவான புரட்சிகரமான போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

Loading