கண்டவுடன் சுடும் உத்தரவுடன் இலங்கை ஜனாதிபதி இராணுவத்தை திரட்டுகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, நாடு முழுவதும் இராணுவத்தை திரட்டி, 'கலவரக்காரர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும்' கண்டவுடன் சுடவும் உத்தரவிட்ட பின்னர் நேற்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

கோட்டாபய இராஜபக்ச [Credit: AP Photo/Eranga Jayawardena]

திங்களன்று கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான குண்டர் தாக்குதலைப் பற்றி குறிப்பிடுகையில், இராஜபக்ஷ பாசாங்குத்தனமாக 'துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை' என கண்டித்ததோடு, முழுமையான விசாரணையை ஆரம்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த தாக்குதல், பொலிஸ்-அரசு நடவடிக்கைகளை சுமத்துவதற்கான சாக்குப்போக்காக ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) ஆல் திட்டமிடப்பட்டது. பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ உரையாற்றிய பின்னர், பொல்லுகள் மற்றும் தடிகளுடன் ஆயுதம் ஏந்திய நூற்றுக்கணக்கான ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. குண்டர்கள், அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டனர். பின்னர் காலி முகத்திடலை ஒரு மாதமாக ஆக்கிரமித்திருப்பவர்களுக்கு எதிராகவும் வெறித்தனமாக ஏவி விடப்பட்டனர்.

ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை இராஜினாமா செய்யக் கோரி இடம்பெறும் பரந்த நாடு தழுவிய போராட்டங்கள், பெரும் விலைவாசி உயர்வு, அத்தியாவசிய உணவு, மருந்துகள், எரிபொருள் ஆகியவற்றின் கடுமையான தட்டுப்பாடு மற்றும் நீண்ட நாள் மின்வெட்டு ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட சமூகப் பேரழிவால் தூண்டிவிடப்பட்டுள்ளன.

இராஜபக்ஷ தனது தேசிய உரையில், காலிமுகத்திடல் எதிர்ப்பாளர்கள் மீதான தாக்குதலுக்குப் பின்னர் நாடு முழுவதும் உள்ள ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு வெளியே வெடித்த வன்முறை மோதல்கள் குறித்து கவனம் செலுத்தினார். இந்த மோதலில் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் பலர் இறந்தனர்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), மே 10 அன்று வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்ததைப் போல, இந்த மோதல்கள் இராஜபக்ஷ மற்றும் அரசு எந்திரத்தின் கைகளில் நேரடியாக பயன்படுகின்றன. பொலிஸ் மற்றும் முப்படையினருக்கும் 'கலவரக்காரர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக' ஜனாதிபதி அறிவித்தார்.

இராஜபக்ஷ ஏற்கனவே கடந்த வெள்ளியன்று அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியிருந்தார். பாரிய ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் மற்றும் முழு அடைப்பும் நாட்டின் பொருளாதாரத்தை முடக்கியதுடன் ஆளும் வர்க்கத்தினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. அவசரகாலச் சட்டமானது அதிகாரங்களுடன் ஆயுதப் படைகளை நிலைநிறுத்துவதற்கும், ஆட்களை பிடி ஆணை இன்றி கைது செய்வதற்கும், வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கூட்டங்களைத் தடை செய்வதற்கும், ஊரடங்குச் சட்டம் மற்றும் ஊடகத் தணிக்கையை விதிப்பதற்கும் மற்றும் அரசியல் கட்சிகளைத் தடை செய்வதற்குமான பரந்த அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்குகிறது.

நேற்று நாடளாவிய ரீதியில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டமை, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால பிற்போக்கு இனவாதப் போரை நினைவுபடுத்துகிறது. கொழும்பில் கவச வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் இராணுவத்தினர் வீதிகளில் ரோந்து வருகின்றனர். கனரக ஆயுதம் ஏந்திய சிப்பாய்கள், வாகனங்களையும் மக்களையும் நிறுத்தி சோதனையிடுவதற்கும் வீதித் தடைகளுடன் முழுமையான சோதனைச் சாவடிகளை அமைத்து வருகின்றனர்.

கொழும்பில் கனரக ஆயுதம் ஏந்திய படையினரும் இராணுவ வாகனமும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துகின்றன. [Image: Facebook]

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், அனைத்து பிரதான நகரங்களின் நுழைவாயில்களிலும், நெடுஞ்சாலைகளில் உள்ள மூலோபாய இடங்களிலும் படையினர் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர்.

திங்கட்கிழமை அமுல்படுத்தப்பட்ட 24 மணி நேர ஊரடங்குச் சட்டம் இன்று காலை 7 மணிக்கு நீக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்த போதிலும், ஏழு மணித்தியாலங்கள் மாத்திரமே தளர்த்தப்பட்டு சனிக்கிழமை காலை வரை அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

திங்களன்று நடந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான குண்டர் தாக்குதலைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் ஒற்றுமையைக் காட்ட ஊரடங்குச் சட்டத்தையும் பாதுகாப்புப் படையினரையும் மீறி காலி முகத்திடலில் குவிந்தனர். எவ்வாறாயினும், நேற்று மாலை, மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டக்காரர்கள் ஊரடங்குச் சட்ட விதிகளை மீறியுள்ளதாக பொலிஸ் அறிவித்தது. இது அவர்களை வலுக்கட்டாயமாக அகற்றுவதற்கான தயாரிப்புகளைக் குறிக்கிறது.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட குண்டர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டியில் நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள் ஊர்வலம் சென்றனர் [Image: WSWS media]

சமூக ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறையும் பட்டியலில் உள்ளது. ஒடுக்குமுறை கணினி குற்றச் சட்டம் மற்றும் பிற குற்றவியல் சட்டங்களின் கீழ் 59 சமூக ஊடக தளங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடங்கியுள்ளதாகவும் பொலிஸ் நேற்று தெரிவித்துள்ளது.

தங்களது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ள தொழிலாள வர்க்கத்துடன் ஒரு மோதலுக்கு இராஜபக்ஷ திட்டமிட்ட வகையில் தயாராகி வருகின்றார் என்பதற்கான ஒரு கூர்மையான எச்சரிக்கையே, பரந்தளவிலான இராணுவ நிலைநிறுத்தங்களும் பொலிஸ்-அரசு வழிமுறைகளை நாடுவதுமாகும்.

ஏப்ரல் 28 மற்றும் மே 6 பொது வேலைநிறுத்தங்களில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இது போராட்டம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்று கணக்கிட்டிருந்த தொழிற்சங்கங்கள் உட்பட, முழு அரசியல் ஸ்தாபகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அரசாங்க மற்றும் எதிர்க் கட்சியுமாக அனைத்து முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், ஒரே வகையில், சர்வதேச நாணய நிதியத்துடன் அவசரகால பிணையெடுப்பிற்காக ஒரு கடன் ஒப்பந்தத்தை எட்டுவதற்கும், அதனுடன் வரும் கடுமையான அவசரகால நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும் உறுதியளித்துள்ளன. அரசியல் “ஸ்திரத் தன்மை வேண்டும்” என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை அவர்கள் அனைவரும் ஆதரிக்கின்றனர் -வேறுவிதமாகக் கூறினால், தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்க வேண்டும் என்பதகும்.

இலங்கை வர்த்தக சம்மேளனம், இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் மற்றும் கூட்டு ஆடை உற்பத்தியாளர் சம்மேளன ஒன்றியம் உட்பட 12 வர்த்தக அறிவுரைக் குழுக்கள், ஒரு பிரதமரை நியமிக்குமாறும் அனைத்து முன்னணி பாராளுமன்ற அரசியல் கட்சிகளால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அமைச்சரவையை நியமிக்குமாறும் இந்த வாரம் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரியுள்ளன.

பெருவணிக குழுக்கள், 'நாட்டில் சட்டம், ஒழுங்கு மற்றும் பொருளாதார செயற்பாடுகளை மீட்டெடுக்க அவசர நடவடிக்கை எடுப்பதற்கும், சர்வதேச நாணய நிதியத்துடனான 'பேச்சுவார்த்தைகளுக்கு' இடையூறு ஏற்படாமல் இருக்கவும் இந்த நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்' என்று அறிவித்தன.

இராணுவம் நிலைநிறுத்தப்பட்ட போதிலும், ஜனாதிபதி இராஜபக்ஷ பலவீனமான நிலையிலேயே இருக்கிறார். அரசாங்க சார்பு குண்டர்களின் தாக்குதலால் உழைக்கும் மக்கள் சீற்றம் அடைந்துள்ளதோடு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு பகுதியினர் வேலை நிறுத்தம் செய்துள்ளனர் என்பது தெளிவானதை அடுத்து, பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ, திங்களன்று அமைச்சரவையுடன் இராஜினாமா செய்தார். ஜனாதிபதி, தனது பரந்தளவிலான நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி, தற்போது அனைத்து அமைச்சரவை பதவிகளையும் வகிக்கிறார்.

இராஜபக்ஷ தனது தேசிய உரையில், 'பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கோரும் மற்றும் மக்களின் நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ளும்' ஒரு புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் ஒரு வாரத்திற்குள் நியமிப்பேன் என்றார். 'பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும்' 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். தற்போது ஜனாதிபதி தனது சொந்த விருப்பத்தின் பேரில் அமைச்சர்களை அல்லது முழு அரசாங்கத்தையும் பதவி நீக்கம் செய்ய முடியும்.

எவ்வாறாயினும், தற்போது எந்தக் கட்சியும் பாராளுமன்ற பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை, அவை அனைத்தும் ஆழமாக மதிப்பிழந்துள்ளன. 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 65 உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), நேற்று அரசாங்கத்தை அமைக்க முன்வந்த போதிலும், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று அறிவித்தது.

இதேபோல், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (தே.ம.ச.) ஒரு இடைக்கால அரசாங்கத்தை நியமிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்த போதிலும், இராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று கோருகிறது. அதற்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ள போதிலும், மற்ற கட்சிகளை ஆதரிக்க வலியுறுத்தியுள்ளது. ஒரு இடைக்கால ஆட்சியை வெளியில் இருந்து ஆதரிப்பதாகவும் அது அறிவித்துள்ளது.

ஜனாதிபதி இராஜபக்ஷ, தான் இராஜினாமா செய்யப் போவதில்லை என பலமுறை வலியுறுத்தி வரும் அதேவேளை, ஏதோ ஒரு வகையில் இடைக்கால அரசாங்கமொன்றை செயல்படுத்துவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டநிரலை நடைமுறைப்படுத்துவதற்கும் கால அவகாசம் பெற திரைமறைவில் தீவிமான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

தொழிற்சங்கங்களோ அரசியல் ரீதியாக ஒரு குற்றவியல் பாத்திரத்தை வகிக்கின்றன. திங்களன்று அரசாங்க விரோத எதிர்ப்பாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் தொழிலாளர்களின் பரந்த பிரிவுகளின் சீற்றத்திற்கு விடையிறுக்கும் வகையில், தொழிற்சங்கங்கள் திங்கள்கிழமை மாலை காலவரையற்ற பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.

24 மணி நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், பல தொழிலாளர்கள் நடைமுறையில் 'வேலைநிறுத்தத்தில்' இருந்தனர் - அதாவது, அவர்கள் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தோட்டங்கள் மற்றும் சுதந்திர வர்த்தக வலையங்களில் உள்ள தொழிலாளர்களின் பிரதான பிரிவினர் பொலிஸ் மற்றும் தொழிற்சங்கங்களின் அனுமதியுடன் வேலைக்குச் சென்றனர்.

இப்போது இராஜபக்ஷ ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தியுள்ளதால், தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழு (TUCC) நேற்று தமது 'பொது வேலைநிறுத்தத்தை' கைவிட்டது, நாடு 'அராஜகத்திற்குள்' வீழ்வதைத் தடுக்க 'பொதுச் சேவைகளை வழமையாக்குவது' அவசியம் என்று அது ஊடகங்களுக்குக் கூறியது. அவர்கள் 'புதிய வடிவில் மக்கள் போராட்டத்திற்கு பங்களிப்போம்' என்று அறிவித்தனர்.

அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராடாமல், அரசாங்கத்திற்கான, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பின் அடித்தளத்தை கட்டுப்படுத்தவும், திசை திருப்பவும் மற்றும் நசுக்கவும் அதேபோல் முதலாளித்துவ ஆட்சிக்கு முண்டு கொடுக்கவும் செயற்பட்டன. அவர்களின் கோரிக்கைகள், அரசாங்கத்தின் இராஜினாமா மற்றும் ஒரு புதிய முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது போன்ற கிட்டத்தட்ட எதிர்க் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு இணையாக இருக்கின்றன.

சர்வதேச நாணய நிதிய மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் சந்தை சார்பு திட்டநிரலை செயல்படுத்திய ஸ்தாபகக் கட்சிகள் மீதோ அல்லது கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிலாளர்களின் ஒவ்வொரு போராட்டத்தையும் நாசமாக்கி காட்டிக் கொடுத்த தொழிற்சங்க கைக்கூலிகள் மீதோ தொழிலாள வர்க்கம் நம்பிக்கை வைக்கக் கூடாது.

சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கம் தனது போராட்டத்தை தன் சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்வதற்கான அவசர தேவையை வலியுறுத்துகிறது. நாங்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கத் தொடங்கியுள்ளதுடன் தீவு முழுவதும் தங்கள் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்காகப் போராடுவதற்கான நடவடிக்கைக் குழுக்களின் வலையமைப்பை விரைவாக அமைக்குமாறு தொழிலாளர்களுக்கு வலியுறுத்துகிறோம்.

அதன் மே 10 அறிக்கையில், அரசாங்க சார்பு குண்டர்களின் தாக்குதல்களில் இருந்து தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களை பாதுகாக்க, நடவடிக்கை குழுக்களுடன் இணைந்து, பாதுகாப்புக் குழுக்களையும் பாதுகாப்புக் காவலர்களையும் அமைக்குமாறு தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி, அழைப்பு விடுத்தது.

அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தையும் நிராகரித்தல் மற்றும் வங்கிகள், பெருநிறுவனங்கள், பெருந்தோட்டங்களை தேசியமயமாக்கல், அத்துடன் உற்பத்தி மற்றும் விநியோக வழிமுறைகளை தொழிலாள வர்க்கக் கட்டுப்பாட்டின் கொண்டுவருதல் உட்பட, உழைக்கும் மக்களின் அவசர சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு சோசலிச சமத்துவக் கட்சி ஒரு தொடர் கொள்கைகளை விரிவுபடுத்தியுள்ளது.

ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்திற்கு வெளியே தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் சமூகப் பேரழிவிற்கு தீர்வு கிடையாது. தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் வலையமைப்பு நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளைத் தன் பக்கம் அணிதிரட்டி, சோசலிச அடிப்படையில் சமுதாயத்தை மாற்றுவதற்கு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கு அடித்தளம் அமைக்க முடியும்.

மேலும் படிக்க

Loading