மே தினம் 2022: போர் மற்றும் முதலாளித்துவ அவலங்கள் வேண்டாம்! இலத்தீன் அமெரிக்காவில் சோசலிசப் புரட்சிக்காக!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் தோமஸ் காஸ்டன்னீரா வழங்கிய அறிக்கை இது. இவர் பிரேசிலில் உள்ள சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினர். அனைத்து உரைகளையும் பார்க்க, wsws.org/mayday ஐப் பார்வையிடவும்.

Tomas Castanheira, Leading member of the Socialist Equality Group in Brazil

தோழர்களே நண்பர்களே,

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மே தினத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை ஏகாதிபத்தியப் போர், முடிவில்லாத கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் இவை இரண்டிற்கும் உண்மையான காரணமான அழுகிய நிலையிலுள்ள முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த போராட்டத்தில் சேர அழைப்பு விடுக்கிறது.

பிரேசிலில் உள்ள சோசலிச சமத்துவக் குழுவின் சார்பாக, பிரேசிலிய மற்றும் இலத்தீன் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை இந்தப் போராட்டத்தில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். சர்வதேச சோசலிசத்தின் முன்னோக்கின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மற்றும் ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தினருக்கு இடையிலான ஒத்துழைப்பு மட்டுமே உலகம் முழுவதிலும் உள்ள ஏகாதிபத்தியத்தை தூக்கியெறிந்து முழு மனிதகுலத்தின் அபிவிருத்திக்கும் உத்தரவாதம் அளிக்க முடியும்.

சமீப ஆண்டுகளில், ஒவ்வொரு நாட்டிலும், முதலாளித்துவ வர்க்கம் சமுதாயத்தின் மீது அதன் ஆட்சியைத் தொடர முற்றிலும் திறனற்றதாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சமூக சமத்துவமின்மை நிலவும் ஒரு பிராந்தியமான இலத்தீன் அமெரிக்காவில், பில்லியனர்கள் தொற்றுநோய்களுக்கு மத்தியில் பெருகிவிட்டனர், அதே நேரத்தில் வெகுஜனங்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தினை பொறுத்தவரையில் பல தசாப்தங்களுக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளில் உக்ரேனில் போரின் தாக்கம் 10 மில்லியனுக்கும் அதிகமான இலத்தீன் அமெரிக்கர்களை வறுமையில் வைத்திருப்பதற்கு பொறுப்பாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டாலும், நிதிய உயரடுக்கு போரினால் திறக்கப்பட்ட இலாபத்திற்கான வாய்ப்புகளை பற்றி ஊகத்தில் ஈடுபட்டுள்ளது. 'ரஷ்யாவிலிருந்தும் உக்ரேனிலிருந்தும் இறக்குமதி செய்யும் அதே உற்பத்திகளை இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் இருந்தும் பல நாடுகள் இறக்குமதி செய்கின்றன. அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வோம்,' என்று அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான அபிவிருத்தி வங்கியின் தலைவர் அறிவித்தார்.

இலத்தீன் அமெரிக்க முதலாளித்துவ பிரதிநிதிகள் மற்றும் அவர்களது ஊடகங்களின் ஏகாதிபத்திய போர் நெருப்புடன் தூரத்தில் இருந்து விளையாட முடியும் என்ற மாயைகள், தொழிலாள வர்க்கம் அவசரமாக நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் எடுக்க வேண்டும் என்பதை சமிக்கை காட்டுகின்றன.

அதன் அளவில் முந்தைய இரண்டு போர்களுடன் ஒப்பிட முடியாத ஒரு புதிய உலகப் போர் இலத்தீன் அமெரிக்காவை மோதலின் வரைபடத்தில் கண்டிப்பாக இருத்தும். உக்ரேனில் ரஷ்யாவுடன் நடத்தும் பினாமிப் போரை, சீனாவிற்கு எதிரான இராணுவ விரிவாக்கத்தின் முதல் கட்டமாக அமெரிக்கா பார்க்கிறது. பிரேசில், சிலி, பெரு மற்றும் ஆர்ஜென்டினா போன்ற நாடுகளால் உற்பத்தி செய்யப்படும் மூலப்பொருட்களின் மீது சீனா சார்ந்திருப்பதும், இலத்தீன் அமெரிக்காவின் சந்தைகளில் அதன் முதலீடுகளும் ஏகாதிபத்திய சக்திகளின் போர்க் கணக்கீடுகளில் மூலோபாய புள்ளிகள் ஆகும்.

கடந்த உலக மகா யுத்தம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எழுச்சியை உலக அரங்கில் கொண்டு வந்தது. 1940 இல் எழுதப்பட்ட 'ஏகாதிபத்தியப் போர் மற்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சி பற்றிய நான்காம் அகிலத்தின் அறிக்கை'யில், அமெரிக்காவின் கொடூரமான ஆயுதமயமாக்கல் மேற்கு அரைக்கோளத்தில் உள்ள சிக்கலான முரண்பாடுகளுக்கு ஒரு வன்முறைத் தீர்வைத் தயாரித்தது என்று ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டினார். இலத்தீன் அமெரிக்காவில், அமெரிக்க 'நல்ல அண்டை நாடு' என்ற கொள்கை விரைவில் இரும்பு முஷ்டி ஆதிக்கத்தால் மாற்றப்படும்.

இந்த கணிப்புகள் போருக்குப் பிந்தைய காலத்தில் சோகமாக உறுதிப்படுத்தப்பட்டன. ஆக்கிரமிப்புக்கள், சதிகள் மற்றும் 1964 இல் பிரேசிலில் நடந்த சதி, 1973 இல் சிலியில், 1976 இல் ஆர்ஜென்டினாவில், 1980 களில் நிகரகுவாவில் நடந்த கொன்ட்ரா போர் மற்றும் பல மிருகத்தனமான இராணுவ சர்வாதிகாரங்களை ஊக்குவிப்பதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் இளம் இலத்தீன் அமெரிக்க பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர உணர்வை இரத்தத்தில் மூழ்கடித்தது.

அமெரிக்காவினால் தூண்டப்படும் புதிய ஏகாதிபத்தியப் போர் அமெரிக்க முதலாளித்துவத்தின் வலிமையின் வெளிப்பாடல்ல, மாறாக அதன் வரலாற்று வீழ்ச்சியின் வெளிப்பாடாகும். அதன் நெருக்கடியான காலகட்டத்தில், உலக மேலாதிக்கத்திற்கான தேடலில் அமெரிக்காவின் இராணுவ சக்தி தன்னை மிகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் நேர்மையற்றமுறையிலும் திணிக்கிறது.

ஆனால், மார்க்ஸ் கூறுவதுபோல், ஏகாதிபத்திய முதலாளித்துவம், தான் வரவழைத்த நரக சக்திகளைக் கட்டுப்படுத்த முடியாத சூனியக்காரனை ஒத்திருக்கிறது. அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் விரக்தியில் அது எடுக்கும் ஒவ்வொரு இராணுவ நடவடிக்கையும் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் ஒரு புதிய மற்றும் கட்டுப்படுத்த முடியாத வெடிப்பை உருவாக்குகிறது.

முதலாளித்துவத்தின் கீழ் வெகுஜனங்களின் வாழ்க்கைத் தரங்கள் அழிக்கப்படுவது, இலத்தீன் அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தை ஆளும் முதலாளித்துவ சக்தியுடன் மோதலுக்கு இட்டுச் செல்கிறது.

உக்ரேனில் நடந்த போரின் உடனடி விளைவாக, பெருவில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக வெகுஜனப் போராட்டங்கள் வெடித்தன. இதே நிலைமைகள் பிரேசிலில் டஜன் கணக்கான பொருளாதாரத் துறைகளில் வேலைநிறுத்தங்களின் அலையைத் தூண்டுகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், கண்டத்தின் மிகப்பெரிய எஃகு ஆலையில் CSN தொழிலாளர்களால் தன்னில்பான வேலைநிறுத்தம் தூண்டப்பட்டது. 1988ல் CSNல் கடைசியாக நடந்த பெரிய வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, தொழிற்சங்கங்களால் திட்டமிட்ட முறையில் திணிக்கப்பட்ட இழப்புகளை தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர்.

இந்தப் போராட்டங்கள் எதிர்வரவிருக்கும் வர்க்கப் போர்களின் முதல் அறிகுறிகளாகும். கோவிட்-19 தொற்றுநோயிற்கு முன்னும் பின்னும் சிலி, பொலிவியா, ஈக்குவடோர், கொலம்பியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் பரவிய பல தசாப்தங்களில் மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்ட அலைகள் அடித்துச் செல்கின்றன.

ஒரு சமூக நேர வெடிகுண்டை கையில் வைத்துக்கொண்டு, இலத்தீன் அமெரிக்க முதலாளித்துவம் நெருக்கடியில் இருக்கும் ஒரு அரசாங்கத்திலிருந்து இன்னொரு அரசாங்கத்திற்கு செல்கிறது. பிராந்தியத்தில் 'இளம் சிகப்புநிற எழுச்சியின்' ஒரு புதிய அலை ஏற்கனவே அதன் பிற்போக்கு முகத்தை உலகிற்குக் காட்டுகிறது. பதவிக்குவந்த ஒரு சில மாதங்களிலேயே, பெருவின் ஜனாதிபதியும் தொழிற்சங்கத் தலைவருமான பெட்ரோ காஸ்டிலோவின் கைகளில் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் இரத்தம் உள்ளது. சிலியில், போலி-இடதான போரிக், அதே பாதையை பின்பற்றி, வெறுக்கப்படும் இராணுவப் பொலிஸாரை தெருக்களில் ஒழுங்கை கொண்டு வர அழைப்பு விடுத்துள்ளார்.

பிரேசிலில் தொழிலாளர் கட்சியின் லூலா தலைமையிலான புதிய அரசாங்கம் வேறுபட்டதாக இருக்காது. அமெரிக்காவில் ஜனவரி 6ம் தேதி டிரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பைப் போலவே தேர்தல் ஆட்சிக் கவிழ்ப்புக்கு தீவிரமாகத் தயாராகி வரும் பாசிச ஜெயர் போல்சனாரோவுக்கு சவால் விடுத்து, லூலா தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து, நாடுகடந்த நிறுவனங்களை நாட்டில் தொடர்ந்தும் வைத்திருக்க அவற்றின் இலாபத்திற்கு உத்தரவாதம் அளிப்பதில் தனது உறுதிப்பாட்டை அறிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் நலன்கள் இந்தப் போலி முதலாளித்துவ மாற்றீடுகளால் பூர்த்தி செய்யப்படமாட்டாது. தொழிலாள வர்க்கத்தின் முழுமையான அரசியல் சுயாதீனத்துக்காகப் போராடுவது அவசியம்!

இப்பொது இருப்பதுபோல் புறநிலை நிலைமைகள் சர்வதேச சோசலிசப் புரட்சிக்கு ஒருபோதும் சாதகமாக இருந்ததில்லை. இலத்தீன் அமெரிக்கா மற்றும் பிற முன்னாள் காலனிகளில், தொழிலாள வர்க்கம் இப்போது சமூகத்தின் பெரும்பான்மையாக உள்ளது. அது பெரிய பெருநகரங்களில் வாழ்வதுடன் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்துடன் முதலாளித்துவ உற்பத்தி நிகழ்முறை மற்றும் இணையத் தளத்தினால் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சக்திவாய்ந்த புறநிலை நிலைமைகளை போர், தொற்றுநோய் மற்றும் சமூக சமத்துவமின்மை மற்றும் சர்வதேச சோசலிசத்திற்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நனவான இயக்கமாக மாற்றுவதே இந்த மே தினத்தை நாம் எதிர்கொள்ளும் பெரும் பணியாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவான சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புவதுதான் இந்த நிகழ்ச்சிப்போக்கின் இன்றியமையாத கூறுபாடாகும். எதிர்காலத்திற்கான இந்த போராட்டத்தில் இணையுங்கள்!

Loading