ஆஸ்திரேலிய தேர்தல் முடிவுகள்: தொழிற்கட்சி மற்றும் தாராளவாத-தேசிய கூட்டணி மீது ஆழ்ந்த விரோதத்தைக் காட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சனிக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலிய பொதுத் தேர்தல் இரு கட்சி அமைப்பில் ஒரு வரலாற்று நெருக்கடியை வெளிப்படுத்தியது. முதலாளித்துவ ஆட்சியின் பாரம்பரியக் கட்சிகளான தொழிற்கட்சி மற்றும் தாராளவாத-தேசிய கூட்டணி மீது மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் விரோதத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் டோக்கியோவில் நடைபெறும் நாற்கர (Quad) கூட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார் [படம்: அந்தோனி அல்பானிஸ் ட்விட்டர் கணக்கு]

தொழிற்கட்சியும் கூட்டணியும் வரலாற்றில் மிகக் குறைந்த கூட்டு முடிவுகளைப் பதிவு செய்துள்ளன, அதாவது முதன்மை வாக்குகளில் சுமார் 68.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. ஒப்பிடுகையில், கடந்த 2019 தேர்தலில் 74 சதவீதமாகவும், 2010 தேர்தலில் 81 சதவீதமாகவும் இது இருந்தது. சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என அழைக்கப்பட்டவர்களும் மொத்தத்தில் 31.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதும் சாதனையாக உள்ளது.

கூட்டணியின் பிரதமர் ஸ்காட் மோரிசன் சனிக்கிழமை மாலை தோல்வியை ஒப்புக்கொண்டதுடன், ‘ஸ்திரத்தன்மையை’ உறுதி செய்வதே தனது முன்னுரிமை என்று அறிவித்தார். தொழிற்கட்சித் தலைவர் அந்தோனி அல்பானிஸ் முன்னெப்போதும் இல்லாத அவசரத்துடன் இன்று (23.05.2022) காலை பிரதமராகப் பதவியேற்றார். ஆனால் தற்போது பிரதிநிதிகள் சபையில் 72 இடங்களைக் கொண்டுள்ள தொழிற்கட்சி பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 76 இடங்களைப் பெறுமா என்பது முற்றிலும் தெளிவாகத் தெரியவில்லை.

முடிவைப் பொருட்படுத்தாமல், தான் 'வேலையில் இறங்குகிறேன்' என அல்பானிஸ் கூறுவதன் மூலம், தேர்தல் முடிவு வெளிப்படுத்திய பெரும் நெருக்கடியை மறைக்க முடியாது. தொழிற் கட்சிக்கு மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான வாக்குகளே கிடைத்தன, இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு புதிய அரசாங்கத்தின் மோசமான முடிவாகும்.

தொழிற்கட்சி மற்றும் கூட்டணி இரண்டுமே மக்கள் ஆதரவை இழந்துவிட்டன. வெகுஜனங்களின் உணர்வுகளுக்கும் மற்றும் வங்கிகள், பெருநிறுவனங்கள், இராணுவ-உளவுத்துறை எந்திரம் ஆகியவற்றுக்கு சேவை செய்யும் மாற்றியமைக்க முடியாத அரசியல் ஸ்தாபகத்திற்கும் இடையே பல தசாப்தங்களாக ஒரு பெரிய இடைவெளி உருவாகியுள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக, கூட்டணி அரசாங்கத்தில் குழப்பம் ஏற்பட்டது, கோஷ்டி மோதல்கள் வெளிப்படையான சண்டையாக வளர்ந்தது. காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களை அலட்சியப்படுத்தியது, இந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை கைவிட்டது, மற்றும் வைரஸின் பாரிய எழுச்சியை தூண்டிய ‘பரவ விடும்’ தொற்றுநோய் கொள்கையை பின்பற்றியது ஆகியவற்றால் மோரிசன் வெகுஜன வெறுப்புக்கு ஆளானார்.

கூட்டணியின் ஆரம்ப வாக்குகள் சுமார் 5.7 சதவிகிதம் சரிந்து 16 இடங்களை இழந்தாலும், தொழிற் கட்சியின் பங்கும் 0.5 சதவிகிதம் சரிந்தது. போர் மற்றும் இராணுவவாதத்திற்கான ஆதரவு, இலாப நோக்கம் கொண்ட கோவிட் கொள்கைகள் அல்லது தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிரான தாக்குதல்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரை இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்பதற்கான அங்கீகாரம் அதிகரித்து வருகிறது.

தேர்தல் பிரச்சாரம் ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகுந்த வலதுசாரிகளிடையே நடந்தது. கணிசமான பிரச்சினைகள் இருப்பதை ஒப்புக்கொள்ளும் அதேவேளை, தொழிற்கட்சியும், கூட்டணியும், ஊடகங்கள் மற்றும் பிற பாராளுமன்ற கட்சிகளின் உதவியுடன், கீழ்த்தரமான விவாதங்களையும் மனதை மயக்கி திசைதிருப்பும் பேச்சுவார்த்தைகளையும் நடத்தி தர்க்கத்தை மட்டுப்படுத்த முயன்றன.

அதே நேரத்தில், மோரிசனும் அல்பானிஸூம், சீனாவுடனான மோதலுக்கான அமெரிக்க தலைமையிலான திட்டங்களில் ஆஸ்திரேலியாவின் முன்னணிப் பங்கை அதிகரிப்பதற்கான, மற்றும் பெருவணிகத்தால் கோரப்படும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வணிக சார்பு மறுசீரமைப்பை நீட்டிப்பதற்கான ஒரு சிறந்த அரசியல் வாகனமாக ஆளும் உயரடுக்கின் முன் தம்மைத் தாமே முன்நிறுத்திக் கொள்கின்றனர்.

தொழிற் கட்சியும் கூட்டணியும் சீனாவிற்கு எதிரான ‘போருக்கு தயாராவது’ அவசியம் என அறிவித்து, இருதரப்பும் ‘காக்கி தேர்தலை,’ (போர்க்கால தேர்தலை) உறுதி செய்ய முயன்றன, ஆனால் ஒரு போர்க்கால சூழலைத் தூண்டும் முயற்சிகள் மக்களின் எந்தவொரு கணிசமான பிரிவிலும் அதிர்வை ஏற்படுத்தவில்லை.

போர் பற்றிய கேள்வி ஒருபுறம் இருக்க, முதலாளித்துவ அமைப்பின் ஆழமடைந்து வரும் உலகளாவிய நெருக்கடி பற்றி விவாதிப்பதை முக்கிய கட்சிகள் தவிர்க்க முயன்றன. யதார்த்தத்தை மீறி, தொற்றுநோய் முடிந்துவிட்டதாக அறிவிக்கும் அதேவேளையில், ஆஸ்திரேலியா ஒரு அற்புதமான பொருளாதார மீட்சியின் உச்சத்தில் இருப்பதாக அவர்கள் கூறினர்.

ஆனால் சோசலிச சமத்துவக் கட்சி மட்டும் விளக்கியது போல், 2022 தேர்தல் ஆஸ்திரேலியா மீதான முக்கிய சர்வதேச முன்னேற்றங்களின் நேரடி தாக்கத்தால் குறிக்கப்பட்டது. பிரச்சாரத்தின் மத்தியில், கோவிட் எழுச்சி தீவிரமடைந்த நிலையில், நாளாந்தம் சுமார் 50,000 நோய்தொற்றுக்களும் 40 அல்லது அதற்கு அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டன.

உத்தியோகபூர்வ பணவீக்கம் 30 ஆண்டுகளில் உச்சபட்ச அளவாக 5.1 சதவீதத்தை எட்டியதால், உலகளாவிய வாழ்க்கைச் செலவின நெருக்கடியும் முன்னுக்கு வந்தது. ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி 11 ஆண்டுகளில் முதல் முறையாக அதன் வட்டி விகிதத்தை அதிகரித்தமையானது மில்லியன் கணக்கான அடமானக் கடன் வாங்குபவர்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடியை தீவிரப்படுத்தியது.

வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய வெடிப்பும் தன்னை உணர வைத்தது. முந்தைய பிரச்சாரங்களுக்கு மாறாக, வேலைநிறுத்தங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களை தொழிற் கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கங்களால் தடுக்க முடியவில்லை. அதாவது, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள், முதியோர் பராமரிப்புப் பணியாளர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பிற முக்கிய பணியாளர்களின் கணிசமான வேலைநிறுத்தங்கள் அங்கு நடத்தப்பட்டன.

தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் அரசியல் தீவிரமயமாக்கலானது, தொழிற் கட்சிக்கான ஆதரவின் தொடர்ச்சியான வீழ்ச்சியில் அதன் கூர்மையான வெளிப்பாட்டைக் கண்டது.

2019 இல், தொழிற் கட்சி அதன் முதன்மை வாக்குகளில் 33 சதவீத வீழ்ச்சியை எதிர்கொண்டு, ‘இழக்கக் கூடாத’ தேர்தலை இழந்தது, இது 1934 க்குப் பின்னைய அதன் மிகக் குறைந்த வாக்குகள் ஆகும். ஊசலாட்டம் தொழிலாள வர்க்க வாக்காளர்களில் கூர்மையாக இருந்தது. அந்தப் போக்கு 2022 தேர்தலில் மீண்டும் நிகழ்ந்துள்ளது, தொழிற் கட்சியின் முதன்மை வாக்குகள் மீண்டும் 0.5 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. மேற்கு புறநகர் பகுதிகளான சிட்னி மற்றும் மெல்போர்னில் அது தேக்கமடைந்துள்ளது அல்லது மேலும் சரிந்துள்ளது.

முன்னாள் கார் உற்பத்தி மையமான Broadmeadows ஐ உள்ளடக்கிய மெல்போர்னில் உள்ள கால்வெல் போன்ற சில இடங்களில், தொழிற் கட்சியின் வாக்குகள் 7 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துவிட்டது. சிட்னியின் மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஃபவுலரின் ‘பாதுகாப்பான’ தொழிற் கட்சி இடத்தை கட்சியின் மூத்த தலைவர் கிறிஸ்டினா கெனிலி (Kristina Keneally) இழந்தார்.

நாடு முழுவதும், மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு (WA) வெளியே நான்கு புதிய இடங்களை மட்டுமே தொழிற் கட்சி வென்றது, அதே நேரத்தில் பிரிஸ்பேனில் பசுமைக் கட்சியிடம் ஒரு இடத்தை இழந்தது. மெல்போர்னில் சிஷோல்ம் மற்றும் ஹிக்கின்ஸ் உள்ளிட்ட வசதியான பகுதிகளில் அது இடங்களை வென்றது.

கூட்டணி வாக்குகள் 5.7 சதவீதம் சரிந்தன. தாராளவாத கட்சிக்கான முடிவுகள் 1983 க்குப் பின்னர் மிகவும் மோசமாக இருந்தது, அதாவது குறைந்தது 16 இடங்களை இழக்கும் அளவிற்கு அதன் போக்கு இருந்தது. இது, 1944 இல் தாராளவாதக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து ‘நீல-ரிப்பன்’ வாக்காளர்களை உள்ளடக்கியது. மோரிசனுக்குப் பதிலாக தாராளவாதக் கட்சியின் தலைவராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பொருளாளர் ஜோஷ் ஃபிரைடன்பேர்க், மற்ற முக்கிய கட்சிப் பிரமுகர்களைப் போலவே மெல்போர்னில் உள்ள கூயோங் தொகுதியில் இடத்தை இழந்தார்.

தாராளவாதிகள் பெரும்பாலும் ‘Teal’ சுயேட்சை வேட்பாளர்களிடம் தோற்றனர், அவர்கள் நாட்டின் சில செல்வந்த இடங்களில் போட்டியிட்டனர், மற்றும் பெண்ணிய முழக்கம் மற்றும் வணிக சார்பு பொருளாதாரக் கொள்கைகளுடன், காலநிலை மாற்றம் பற்றிய கருத்துக்களை ஒருங்கிணைத்தனர்.

இந்த முடிவுகள் கூட்டணியின் மிக சமீபத்திய எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. கூட்டணி உடைந்து தாராளவாதக் கட்சியில் மேலும் பிளவுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் இருப்பது பற்றி மூத்த கட்சித் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

பிரிஸ்பேனின் உட்பகுதியில் பசுமைக் கட்சி இரண்டு புதிய இடங்களை வென்றது மற்றும் மெல்போர்னில் ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டது. இந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேனில் காலநிலை செயலற்ற தன்மை குறித்த கண்டனங்களுக்கு பதில் கிடைத்தது. ஆனால், பசுமைக் கட்சியினரும், Teal சுயேட்சை வேட்பாளர்களைப் போல, காலநிலை பேரழிவிற்கு காரணமான முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்கின்றனர்.

குறிப்பிடத்தக்க வகையில், பிரதானக் கட்சிகளுக்கான ஆதரவு சரிந்துவிட்ட போதிலும், தீவிர வலதுசாரி ஜனரஞ்சகக் கட்சிகள் எந்தப் பலனையும் பெறவில்லை என்பது, உழைக்கும் மக்களிடையேயான மாற்றம் வலது நோக்கியது அல்ல, இடது நோக்கியது என நிரூபிக்கிறது.

தொழிற்கட்சி வாக்குகள் அதிகரித்த ஒரே மாநிலம் மேற்கு ஆஸ்திரேலியா மட்டுமே, இது பிரதிநிதிகள் சபையில் நான்கு இடங்கள் கிடைக்கும். மேற்கு ஆஸ்திரேலியா அதன் கோவிட் ஒழிப்புக் கொள்கைகளை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்த மோரிசனுக்கு இப்போதைய வாக்குகள் மூலம் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு சற்று முன்பு, ஏற்கனவே கோவிட் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கைவிட்டுவிட்ட மற்ற மாநிலங்களுடன் சேர மேற்கு ஆஸ்திரேலிய தொழிற்கட்சி அரசாங்கம் எடுத்த முடிவானது, ஆஸ்திரேலியா முழுவதும் நூறாயிரக்கணக்கான நோய்தொற்றுக்களையும் ஆயிரக்கணக்கான இறப்புக்களையும் விளைவித்தது.

பெருநிறுவன ஊடகங்கள், தற்போதைய அரசியல் அமைப்பின் இருத்தலியல் நெருக்கடி பற்றி எச்சரிக்கும் பல கருத்துக்களுடன், தேர்தல் முடிவுகளுக்கு பதட்டத்துடன் பதிலளித்தன. மோரிசனை ஆதரித்த முர்டோக் (Murdoch) பத்திரிகையின்படி, உறுதியாக இருப்பது கடினம் என்றாலும், பெரும்பான்மை அரசாங்கத்தை அல்பானிஸ் கொண்டிருப்பார் என்று அறிவித்தது. மேலும், பசுமைவாதிகளும் மற்றும் Teals வேட்பாளர்களும் ‘பாராளுமன்ற ஸ்திரத்தன்மைக்கு’ பாடுபடுவதாக உறுதியளித்துள்ளனர்.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டும் எச்சரித்தபடி, எந்த கட்சியோ அல்லது கட்சிகளோ அடுத்த அரசாங்கத்தை அமைத்தாலும், அதன் நிகழ்ச்சிநிரல், தீவிரமடைந்து வரும் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியால் வடிவமைக்கப்படும். மேலும், சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் எதிரான உலகப் போருக்கான அமெரிக்காவின் போக்கு மற்றும் ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கான வணிக உயரடுக்கின் கோரிக்கைகள் ஆகியவை அரசாங்கத்தின் போக்கைத் தீர்மானிக்கும்.

அல்பானிஸ் உடனடி சமிக்ஞைகளை விடுத்துள்ளார். திங்களன்று, அவர் சீனாவிற்கு எதிரான அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் நடைமுறை மூலோபாய கூட்டணியான நாற்கர கூட்டணி அமைப்பின் (Quad) கூட்டத்தில் கலந்துகொள்ள ஜப்பான் செல்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோசப் பைடென் நேற்று அல்பானீஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார், இது ஆசிய-பசிபிக் போருக்கான அமெரிக்க தயாரிப்புகளுக்கு ஆஸ்திரேலியாவின் முக்கிய மூலோபாய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அல்பானிஸ் தனது ‘பொருளாதாரக் குழு’ இன்று காலை முதல் தனது வேலையைத் தொடங்கும் என அறிவித்தார், மேலும் அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் வணிகத்தை உள்ளடக்கிய ‘உச்சிமாநாட்டிற்கான’ முன்னேற்பாடுகளை அது தொடங்கியுள்ளது. தேசியக் கடன் ஒரு டிரில்லியன் டாலர்களை நெருங்கி வருவதுடன், பணவீக்கமும் அதிகரிக்கிறது, மேலும் வட்டி விகித உயர்வுகள் உடனடியான நிலையில், உலக ஆளும் உயரடுக்கினரைப் போல் தொழிலாள வர்க்கத்தை நேருக்கு நேர் தாக்குவதற்கு தொழிற்கட்சி அரசாங்கம் ஒரு பெருநிறுவன கும்பலைத் தயாரித்து வருகிறது.

இந்த வேலைத்திட்டம் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களின் கோபத்தையும் விரோதத்தையும் மேலும் ஆழப்படுத்தும். தேர்தல் பிரச்சாரத்தின் போதான வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும், வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் நிகழவிருக்கும் வர்க்கப் போராட்டத்தின் முக்கிய வெடிப்புகளுக்கான முன்னறிவிப்பாகும்.

இருப்பினும், கோபமும் எதிர்ப்பும் மட்டும் போதாது. அதிகரித்தளவில் பிளவுபட்டு வரும் பாராளுமன்ற அமைப்பிற்குள் தொழிலாளர்கள் முன்னோக்கிச் செல்லும் வழியைக் காண முடியாது, அல்லது எந்த கட்சியினரும் அதை ஊக்குவிக்க மாட்டார்கள் என்பது இந்த தேர்தலில் இருந்து கிடைத்த படிப்பினையாகும். இந்நிலையில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களுக்காகப் போராடும் ஒரு அரசியல் முன்னோக்கும் மற்றும் கட்சியும் தேவையாகும்.

அதைத்தான் சோசலிச சமத்துவக் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில் முன்னெடுத்தது. மற்ற எல்லாக் கட்சிகளாலும் நசுக்கப்பட்ட முக்கிய சர்வதேச பிரச்சினைகளை அது மட்டுமே எழுப்பியதுடன், போர், சிக்கன நடவடிக்கைகள், ‘பரவ விடும்’ கோவிட் கொள்கைகள், மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் போராட்டங்களுக்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்தது.

NSW, குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியாவில் உள்ள செனட்டிற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்கள், குறைந்த, ஆனால் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றனர், பல ஆயிரம் மக்கள் உண்மையான புரட்சிகர, சோசலிச மாற்றீட்டிற்கான தங்கள் ஆதரவைப் பதிவு செய்தனர். எங்கள் வேட்பாளர்கள் இணைக்கப்படாத சுயேச்சைகளாக வாக்குச் சீட்டில் தோன்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏனென்றால் கடந்த ஆண்டு தொழிற் கட்சியும் கூட்டணியும் பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக கொண்டு வந்த ஜனநாயக விரோத சட்டத்தின் விளைவாக சோசலிச சமத்துவக் கட்சி தேர்தலுக்கு முன்பு பதிவு நீக்கப்பட்டது. சோசலிச சமத்துவக் கட்சிக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் ஒரு சோசலிச முன்னோக்கிற்கான நனவான வாக்குகளாகும்.

இன்றே சோசலிச சமத்துவக் கட்சியை தொடர்பு கொள்ளவும், அதில் சேரவும், தொழிலாள வர்க்கத்தின் புதிய வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்பவும் முன்னோக்கிச் செல்லும் வழியை எதிர்பார்க்கும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் அழைக்கிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தொடர்பு விபரங்கள்:

Phone: (02) 8218 3222
Email: sep@sep.org.au
Facebook: SocialistEqualityPartyAustralia
Twitter: @SEP_Australia
Instagram: socialistequalityparty_au
TikTok: @SEP_Australia

Loading