இங்கிலாந்தின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, சுனக்கின் ஒரு-முறை பண கொடுப்பனவை அற்பமாக்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தொழிற்சங்க காங்கிரஸ் (Trades Union Congress - TUC) நேற்று வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள், வீட்டு எரிசக்தி கட்டணங்கள் ஊதியத்தை விட 23 மடங்கு வேகமாகவும், சமுக உதவிகளை விட 38 மடங்கு வேகமாகவும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

அக்டோபரில் திட்டமிடப்பட்ட 800 பவுண்டுகள் எரிபொருள் கட்டண உயர்வு என்பது – ஏப்ரலின் 32 சதவிகித அதகரிப்புக்கு மேலாக – எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களை ஒரே வருடத்தில் 119 சதவிகிதம் உயர்த்தும். இதற்கு நேர் மாறாக, ஊதியங்கள் வெறும் 5.2 சதவிகிதமும், சமுக உதவிகள் வெறும் 3.1 சதவிகிதமும் மட்டுமே உயரும்.

சான்சிலர் ரிஷி சுனக்கின் 15 பில்லியன் பவுண்டுகள் வாழ்க்கைச் செலவினப் பொதி, பல மில்லியன் மக்களை மூழ்கடித்துள்ள வாழ்க்கைச் செலவின நெருக்கடியில் ஒரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.

Joseph Rowntree அறக்கட்டளையின் கூற்றுப்படி, 14.5 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்கின்றனர். இரண்டு இளம் குழந்தைகளைக் கொண்ட ஒரு சாதாரண குடும்பத்திற்கான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைக்கு கடந்த ஆண்டை விட ஒரு மாதத்திற்கு 400 பவுண்டுகள் அதிகம் செலவாகும் என்று Loughborough பல்கலைக்கழகத்தின் தரவு தெரிவிக்கிறது. அத்துடன், எரிசக்தி விலைகளும் உயர்ந்துள்ளதால், குடும்பங்களின் மாதாந்திர செலவுகள் மேலும் 120 பவுண்டுகள் அதிகமாகிறது, பெரும்பாலும் மலிவான கட்டணங்கள் முடிவடைந்துவிட்டன.

ஜோன்சன் அரசாங்கம் “வறுமையிலிருந்து விடுபட வேலை ஒன்றே சிறந்த வழி”, என்று கூறியுள்ள நிலையில், 57 சதவிகித வறிய பிரித்தானியர்கள் —அதாவது சுமார் 8 மில்லியன் மக்கள்— ஏற்கனவே வேலையில் உள்ளனர். 2008 ஆம் ஆண்டை விட இப்போது ஊதியம் குறைவாக உள்ளது, 2025 ஆம் ஆண்டு வரை ஊதியம் 2008 க்கு முந்தைய நிலைகளுக்கு திரும்பாது என வரவு-செலவுத் திட்ட பொறுப்புக்கான அலுவலகம் (Office for Budget Responsibility) முன்கணித்துள்ளது.

“உண்மையான வாராந்திர ஊதியங்கள் 2008 க்கு முந்தைய விகிதத்தில் தொடர்ந்து வளர்ந்திருந்தால், அவை இப்போது வாரத்திற்கு 111 பவுண்டுகள் அதிகமாக இருக்கும்,” என்று TUC கண்டறிந்தது. பொதுத்துறை ஊதியம் மார்ச் மாதத்தில் மட்டும் 30 பவுண்டுகள் குறைந்துள்ளது, அதே நேரத்தில் சராசரி வாராந்திர வருவாய் வாரத்திற்கு 16 பவுண்டுகள் குறைந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் TUC மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் மீதான அதிர்ச்சியூட்டும் சுய-குற்றச்சாட்டாகும், அவை 17 ஆண்டுகளாக நேரடி ஊதிய ஒடுக்குமுறைக்கு தலைமை தாங்கியுள்ளன – இது வாட்டர்லூ போருக்குப் பின்னர் சில மதிப்பீடுகளில் மிக நீண்ட ஊதிய முடக்கமாகும்.

வியாழன் அன்று தனது நடவடிக்கைகளின் தொகுப்பை வழங்கிய சுனக், “எந்தவொரு அரசாங்கமும் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது, குறிப்பாக பணவீக்கத்தின் சிக்கலான மற்றும் உலகளாவிய சவாலை தீர்க்க முடியாது” என்று தெரிவித்தார். ஆனால் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு என்பது, நிதிய தன்னலக்குழுவை வளப்படுத்த முதலாளித்துவ அரசாங்கங்களால் பின்பற்றப்படும் கொள்கைகளின் நேரடி விளைவாகும்.

ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட உலகளாவிய வருமான சமத்துவமின்மை குறித்த சமீபத்திய அறிக்கையின்படி, பெருநிறுவன இலாபங்கள் அதிகரித்து வரும் பணவீக்கத்தில் 60 சதவிகித அதிகரிப்புக்கு காரணமாகின்றன. வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் கருவூலங்களில் அரசாங்கங்கள் டிரில்லியன் கணக்கான ‘பிணையெடுப்பு’ நிதிகளை செலுத்தியதால், பெருநிறுவன இலாபங்கள் முந்தைய 23 ஆண்டுகளில் இருந்ததை விட தொற்றுநோய்களின் போது அதிகமாக வளர்ந்ததாக கண்டறிந்தது.

இந்த ஆண்டின் சண்டே டைம்ஸ் பணக்காரர்களின் பட்டியல், கடந்த 12 மாதங்களில் 30 பில்லியன் பவுண்டுகள் அதிகரித்து, கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ள 20 முன்னணி புது பணக்காரர்களின் சொத்துக்களைக் காட்டுகிறது. உயர் ஊதிய மையம் (High Pay Centre - HPC) அதிக வருமானம் ஈட்டுபவர்களின் வருமானத்தைக் கண்காணிக்கிறது, இது, 2012 இல் இருந்து 20 புது நபர்கள் பணக்காரர்கள் பட்டியலில் நுழையும் அதே விகிதத்தில் குடும்பச் செல்வம் வளர்ந்திருந்தால், ஒவ்வொரு இங்கிலாந்து குடும்பமும் 205,000 பவுண்டுகள் பெற்று சிறப்பாக இருக்கும் என்று இந்த வாரம் தெரிவித்தது.

HPC, 'பட்டியலில் உள்ள முதல் 20 நபர்களின் செல்வத்தில் 30 பில்லியன் பவுண்டுகள் அதிகரிப்பதன் வித்தியாசத்தை கற்பனை செய்து பாருங்கள். மருத்துவமனைகள், பள்ளிகள், பசுமை எரிசக்தி, பொதுப் போக்குவரத்து அல்லது உலகின் ஏழ்மையான நாடுகளுக்கான ஆதரவில் முதலீடு செய்திருந்தால், எப்படியும் ஏற்கனவே கோடீஸ்வரர்களாக இருந்தவர்கள் மேலும் சேமித்து வைப்பதற்குப் பதிலாக செய்திருக்க முடியும்” என கருத்து தெரிவித்தது.

சமீபத்திய வாரங்களில், உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) செய்தியாளர் குழுக்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பின் தாக்கம் குறித்துப் பேசியுள்ளனர்.

சாலி, மருத்துவமனையின் உணவக சேவை உதவியாளரான இவர், “எங்கள் வீட்டில் நான் மட்டுமே சம்பாதிப்பதால், குறிப்பாக எரிவாயு, மின்சாரம், உணவு, பேருந்துக் கட்டணம் போன்ற அன்றாட செலவினங்கள் அதிகரித்து வருவதை நான் கவனித்தேன், இவை ஒவ்வொன்றும் இப்போது உழைக்கும் அனைவரிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என WSWS இடம் தெரிவித்தார்.

சாலி (WSWS Media)

“இது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கிறது, அதிலும் இப்போது முன்னெப்போதையும் விட மோசமாக உள்ளது. 80 களை நினைவுகூரும் போது, நான் பள்ளியை விட்டு வெளியேறிய நேரத்தில் வேலையின்மை மிகவும் அதிகமாக இருந்தது. இது இன்னும் மோசமாகி வருவதாகத் தெரிகிறது.”

ரோசாலிண்ட், இலண்டனில் வசித்து வரும் மற்றும் கல்வித்துறையில் பணியாற்றும் இவர், “வாழ்க்கைச் செலவின நெருக்கடி உண்மையில் மக்களைப் பாதிக்கிறது; பிரிவுகள் பெரிதாகிவிட்டன. எனது உள்ளூர் பகுதியில் பெரும்பாலான மக்கள் நம்பிக்கையிழந்து வாழ்வதை நான் காண்கிறேன். பல்பொருள்அங்காடியில் இருந்து அடிப்படை பொருட்களை வாங்கி சமைப்பதன் மூலம் மக்கள் எவ்வாறு பணத்தை மிச்சப்படுத்த முடியும் என அரசியல்வாதிகள் பேசுவதைக் கேட்பது உண்மையில் அவமானமாக இருக்கிறது. ஏனென்றால், குக்கர் கூட இல்லாதவர்கள் அல்லது எரிவாயுவைப் பயன்படுத்த முடியாதவர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று கூறினார்.

E.ON எரிசக்தி முதலாளி மைக்கேல் லூயிஸ், எரிசக்தி விலை உயர்வு ‘முன்னோடியில்லாதது’ என்றும், அக்டோபர் மாதத்திற்குள் அதன் வாடிக்கையாளர்கள் 40 சதவிகிதம் எரிபொருள் பற்றாக்குறையில் இருப்பார்கள் என்றும் கூறினார். E.ON வாடிக்கையாளர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் ஏற்கனவே எரிபொருள் பற்றாக்குறையில் இருந்தனர், குடும்பங்கள் தங்கள் செலவழிக்கக்கூடிய வருமானத்தில் 10 சதவிகிதத்தை அல்லது அதற்கு மேலான தொகையை எரிபொருளுக்காக செலவிடுவதாக வரையறுக்கப்படுகிறது.

எரிசக்தி கட்டுப்பாட்டு நிறுவனம் Ofgem ஏப்ரல் மாதத்தில் எரிவாயு மற்றும் மின்சார கட்டணங்களின் விலை வரம்பை உயர்த்தி, வீட்டு எரிசக்தி கட்டணங்களில் 700 பவுண்டுகள் சேர்த்து, கட்டணத்தை 1,971 பவுண்டுகளாக உயர்த்தியது. Ofgem இன் தலைமை நிர்வாகி Jonathan Brearley, அக்டோபரில் நிகழவுள்ள மேலதிக விலை உயர்வு ஆண்டு எரிபொருள் கட்டணத்தை 2,800 பவுண்டுகளாக உயர்த்தும் என்று எச்சரித்தார்.

சுனக்கின் பொருளாதார அறிக்கைக்கு முன்னதாக, Resolution Foundation, இந்த நெருக்கடியைத் தணிக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், இந்த குளிர்காலத்தில் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை 9.6 மில்லியனாக இருக்கும் என்று எச்சரித்தது. மக்கள்தொகையில் 30 சதவிகித ஏழைகளில், 75 சதவிகித குடும்பங்கள் ‘எரிபொருள் நெருக்கடியில்’ விழலாம்.

மறுபுறம், Shell இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 7 பில்லியன் பவுண்டுகள் இலாபம் ஈட்டியுள்ளது, அதேவேளை BP 5 பில்லியன் பவுண்டுகள் இலாபம் ஈட்டியுள்ளது, இது கடந்த 10 ஆண்டுகளில் அதன் உச்சபட்ச இலாபமாகும். அவர்களுக்கு இடையே இந்த ஆண்டு சுமார் 50 பில்லியன் பவுண்டுகள் இலாபம் சம்பாதிக்கவுள்ளனர், இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட பேரழிவுகர சமூக நெருக்கடிக்கு சுனக் ஒதுக்கிய 15 பில்லியன் பவுண்டுகளை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

பெக்கி, ஷெஃபீல்டில் வசிக்கும் ஒரு இளம் தாயும் மருத்துவமனை செயலருமான இவர், “எனது ஊதியத்தில் பாதி குழந்தை பராமரிப்பு செலவினங்களுக்கும், எஞ்சிய தொகை வீட்டு வாடகை மற்றும் பிற செலவுகளுக்கும் செலுத்துகிறேன். அது என் கணவர் இல்லாவிட்டால் [ஒரு தொழிலாளி] அடிப்படையில் எனக்கு எதுவும் இருக்காது” என்று WSWS இடம் தெரிவித்தார். சமீப காலத்தில் அதிகரித்து வரும் செலவுகள் அவரது குடும்பத்தை பொருளாதார ரீதியாக எவ்வாறு பாதித்தது என்று கேட்டதற்கு, “கடந்த ஆண்டு ஜூலை முதல், எரிபொருள் கட்டணங்கள் அதிகரித்தன, பின்னர் மீண்டும் குளிர்காலத்திலும் அதிகரித்தன. வெளிப்படையாகச் சொன்னால், எல்லா நேரத்திலும் வெப்பத்தை பயன்படுத்துவது கடினமாக இருந்தது. எனவே கண்டிப்பாக கட்டணங்கள் உயர்ந்துள்ளன. தரமான மளிகை சாமான்களின் விலைகளும் உயர்ந்திருப்பதை நான் கவனித்தேன். எனவே, அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என பெக்கி பதிலளித்தார்.

வறுமை எதிர்ப்பு தொண்டு நிறுவனமான Joseph Rowntree அறக்கட்டளையைச் சேர்ந்த பீட்டர் மேட்ஜிக், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் விலைவாசி உயர்வால் எவ்வாறு கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன என்று BBC க்கு இவ்வாறு கூறினார்: “வாழ்க்கைச் செலவில் நாம் காணும் அதிரடி உயர்வுகளின் மோசமான விளைவுகளை வறுமையில் உள்ள குடும்பங்கள் உணர்கிறார்கள், ஏனெனில் அவர்களின் வரவு-செலவுத் திட்டத்தில் பெரும்பகுதி அத்தியாவசியப் பொருட்களுக்காக செலவிடப்படுகின்ற நிலையில், அவர்களின் வருமானம் மட்டும் தொடர்ந்து அப்படியே இருக்க முடியாது.”

இங்கிலாந்தின் சால்ஃபோர்டில் உள்ள உணவு வங்கி (Credit: Salford Foodbank/Facebook) [Photo: Salford Foodbank/Facebook]

Which? நுகர்வோர் உரிமைகள் குழுவின் கூற்றுப்படி, இங்கிலாந்து முழுவதும் உள்ள கடைக்காரர்கள் கிட்டத்தட்ட அனைத்து வகையான மளிகைப் பொருட்களிலும் ‘எதிர்பாரா நிகழ்வை’ (‘shelf shock’) எதிர்கொள்கிறார்கள். மேலும், சில பொருட்களின் விலைகள் 20 சதவிகிதத்திற்கு அதிகமாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் இந்த வாரம், பல முக்கிய வியாபார சரக்குகளுக்கு இரட்டை இலக்கங்களில் விலைகள் அதிகரித்துள்ளதாகக் காட்டியதை Which? கண்டறிந்தது.

ஜேம்ஸ், ஷெஃபீல்டில் உள்ள மென்பொருள் மேம்பாட்டாளரான (software developer) இவர், “இப்போது எனது வாடகை எனது ஊதியத்தில் மூன்றில் இரண்டு பங்காக உள்ளது. எனது ஊதியம் உயர்ந்தது, ஆனால் பணவீக்கத்தைப் போல் அல்ல. மளிகை சாமான்களின் விலையும் மிகவும் உயர்ந்துள்ளது. எனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருக்கு சிறப்பு உணவுகள் தேவைப்படுகின்றன, மேலும் உணவுப் பொருட்களின் விலையும் மிக அதிகம். உண்மையில், உயர்மட்டத்தில் இருப்பவர்கள் தங்களுக்காக இலாபம் ஈட்டித் தரும் மக்கள் மீது அக்கறை காட்டுவதை விட, தங்களின் இலாபத்தின் மீதே அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்பதை தொற்றுநோய் காட்டியுள்ளது” என்று WSWS இடம் தெரிவித்தார்.

Loading