உலகளவில் 86 மில்லியன் மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையத்தின் (IDMC) ஆண்டு உலகளாவிய வருடாந்த அறிக்கையின்படி, உலகெங்கிலும் உள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை 2021 இன் இறுதியில் 59.1 மில்லியனை எட்டியது. இது 2020 மற்றும் 2019 முறையே 55 மில்லியனாகவும் 50 மில்லியனாகவும் இருந்தது. மேலும் 26.6 மில்லியன் பதிவு செய்யப்பட்ட அகதிகள் அவர்கள் பிறந்த நாட்டிற்கு வெளியே வாழ்கின்றனர். இதனால் பலவந்தமாக இடம்பெயர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 86 மில்லியனாக உள்ளது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் டிஜிபோ, புர்கினா ஃபாசோவில் உதவிக்காக காத்திருக்கின்றனர். மே 26, 2022 வியாழன். (AP Photo/Sam Mednick)

இந்த எண்ணிக்கையை எடுத்துக்காட்டுவதற்கு: ஜேர்மனியின் மக்கள் தொகைக்கு சமமான மக்கள் அல்லது உலகின் 7.9 பில்லியன் மக்கள்தொகையில் ஒரு சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து விரட்டப்பட்டுள்ளனர். மேலும் இது பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை மட்டுமே. உண்மையான எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தின் (UNHCR), கட்டாய இடப்பெயர்வு பற்றிய வருடாந்திர உலகளாவிய போக்கு பற்றிய அறிக்கை ஜூன் 16 அன்று வெளியிடப்பட உள்ளது. அது புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட மொத்த எண்ணிக்கை 100 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது என்கிறது.

ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டப்பட்ட அல்லது நேரடியாக நடத்தப்பட்ட போர்கள், மோதல்கள் மற்றும் வன்முறைகள் மற்றும் உலகின் மாபெரும் பெருநிறுவனங்கள் மற்றும் அவற்றின் அரசாங்கங்களின் செயல்பாடுகளால் அடிக்கடி உருவாக்கப்பட்ட அல்லது மோசமாக்கப்படும் இயற்கைப் பேரழிவுகளின் விளைவாக உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் (IDPs) எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக உள்ளது.

ஆபிரிக்காவில் மிகவும் பாதிக்கப்பட்ட துணை-சஹாரா பகுதி உள்ளடங்கலாக கடந்த ஆண்டு 38 மில்லியன் புதிய இடம்பெயர்ந்த மக்கள் உருவாக்கப்பட்டனர். எத்தியோப்பியாவில் மட்டும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இது ஒரு வருடத்தில் ஒரு நாட்டிலும் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். இது அண்டை மாகாணங்களுக்கு பரவிய Tigrayan கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான உள்நாட்டுப் போரின் காரணத்திலாகும். கொங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC), ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளும் 2021 இல் முன்னோடியில்லாத எண்ணிக்கையிலான உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களைப் பதிவு செய்துள்ளன.

கொங்கோ ஜனநாயகக் குடியரசு பல தசாப்தங்களாக, பெரும்பாலும் வெளியில் அறிவிக்கப்படாத மற்றும் மறக்கப்பட்ட போர்களின் களமாக உள்ளது. இப்போர் நாட்டின் பரந்த கனிம வளங்களைக் கட்டுப்படுத்த அண்டை நாடுகள் மற்றும் அவர்களுக்காக பணியாற்றும் உள்ளூர் சுரண்டல் ஆட்சியாளர்களின் உதவி மற்றும் ஆதரவுடன் வேறுபட்ட கூட்டணிகளால் நடாத்தப்பட்டது. மின்சார வாகனங்கள் (கோபோல்ட் கொண்டவை), மின்னணு சாதனங்கள் (டன்டாலும், தகரம் மற்றும் தங்கம் கொண்டவை) மற்றும் உள்கட்டமைப்பு (கடத்திகளுக்கான கம்பிகளுக்கான தாமிரம்) ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் மின்கலங்களின் உலகளாவிய உற்பத்திக்கு இவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கசாய், டாங்கன்யிகா, இடூரி மற்றும் கிவு பிராந்தியங்களில் வன்முறை காரணமாக 4.5 மில்லியனுக்கும் அதிகமான கொங்கோ மக்கள் நாட்டினுள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர், அதே நேரத்தில் 864,000 கொங்கோ அகதிகள் 2021 இல் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கொங்கோ ஜனநாயகக் குடியரசு அண்டை நாடுகளில் இருந்து ஏராளமான அகதிகளையும் கொண்டிருக்கின்றது.

சிரியா, லிபியா மற்றும் ஈராக் ஆகியவற்றில் அமெரிக்காவால் திட்டமிடப்பட்ட மோதல்கள் ஓரளவிற்கு தணிந்து வாஷிங்டனின் கவனம் ரஷ்யாவில் குவிந்துள்ளதால் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா 10 ஆண்டுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான புதிய உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களைப் பதிவு செய்துள்ளன. பிரிவினைவாத வன்முறையால் தொடரப்பட்ட வெளியேற்றங்கள், மரண அச்சுறுத்தல்கள் மற்றும் இனச் சுத்திகரிப்பு ஆகியவற்றிலிருந்து தப்பியோடியவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் பொதுவாக இளம் வேலையில்லாத ஆண்கள், ஒற்றைத் தாய்மார்கள் மற்றும் துணையில்லாத குழந்தைகள் மிக அதிகமாகவே உள்ளனர்.

இயற்கை பேரழிவுகள் மிகவும் உள் இடப்பெயர்வுகளைத் தூண்டினாலும், மோதல்கள் மற்றும் வன்முறை ஆகியவை இந்த பேரழிவுகளின் அளவைக் கூட்டி மக்கள் பல முறை வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மொசாம்பிக், மியான்மர், சோமாலியா மற்றும் தெற்கு சூடானில் பல, ஒன்றுக்கு மேல் ஒன்றாக உருவாகிய நெருக்கடிகள் உணவுப் பாதுகாப்பைப் பாதித்து, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேலை இழப்பு மற்றும் உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கோவிட் தொற்றுநோயினால் உருவாகிய விளைவுகளும் நிலைமையை மோசமாக்கியது.

உலகில் உள்ள இடம்பெயர்ந்தவர்களில் சுமார் 25.2 மில்லியன் (41 சதவீதம்) பேர் 18 வயதிற்குட்பட்டவர்கள். அவர்கள் உளவியல் பாதிப்பு உட்பட, மோசமான அகதிகள் முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளால் வாழ்நாள் முழுவதும் தீமைகளை சந்திக்க நேரிடும். இவை உலகின் பாதிக்கப்படுபவர்களுக்கான சிறைகளைபோல் இருப்பது மட்டுமல்லாது அங்கு நோய் மற்றும் சுரண்டலின் ஆதிக்கம் நிறைந்துள்ளது.

ஏகாதிபத்தியத்தால் தூண்டப்பட்ட உள்நாட்டுப் போரின் விளைவாக லெபனான், ஜோர்டான், ஈராக், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் சுமார் 6.7 மில்லியன் சிரியர்களுடன், உலகின் 25 சதவீதத்திற்கும் அதிகமான அகதிகள் சிரியாவிலிருந்து வந்தவர்களாக உள்ளனர். முறையான முகாம்கள் இல்லாத லெபனானில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிரியர்கள் நாடு முழுவதும் பெரும்பாலும் நெரிசலான தற்காலிக தங்குமிடங்களில் சிதறிக்கிடக்கின்றனர்.

ஜோர்டானில் உள்ள ஸாதாரி அகதிகள் முகாமின் காட்சி, 2017(Credit: Flickr / UN Photo/ Sahem Rababah)

உலக அகதிகளில் சுமார் 10 சதவீதமான 2.6 மில்லியன் பேர் பிறப்பால் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் ஈரானில் வாழ்கின்றனர். ஆப்கானிஸ்தானில் இன்னும் தங்கள் சொந்த நாட்டில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் மோதலால் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளதுடன் தொடர்ச்சியான உள் இடப்பெயர்வுகளுக்கு கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள். வெள்ளம், நிலச்சரிவு, நிலநடுக்கம், வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களையும் நாடு சந்தித்துள்ளது.

கிட்டத்தட்ட நான்கு மில்லியன் தெற்கு சூடான் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். சுமார் 2.6 மில்லியன் மக்கள் சூடான், உகாண்டா, எத்தியோப்பியா, கென்யா மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். 2013 டிசம்பரில், புதிதாக கண்டுபிடுக்க்கப்பட்ட தெற்கு சூடானின் எண்ணெய் வளங்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஆளும் உயரடுக்கின் போட்டிப் பிரிவுகளுக்கு இடையே போர் வெடித்தது.

2019 ஏப்ரலில் நடந்த இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் அதைத் தொடர்ந்து இராணுவ ஆட்சிக்குழுவின் வன்முறை ஆகியவற்றிற்கு இடையேயான வெகுஜன எதிர்ப்புகளைத் தூண்டிய வறுமை, வறட்சி மற்றும் பஞ்சத்தின் மத்தியில் அண்டை நாடான சூடானில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் வெளியேறி வருகின்றனர். தெற்கு சூடானில் இருந்து வந்த அகதிகளின் அதிகளவானோர் உட்பட அதே நேரத்தில் அகதிகளுக்கான ஐந்தாவது பெரிய நாடாக சூடான் உள்ளது.

ஆகஸ்ட் 2017 முதல் மியான்மரில் நடந்து வரும் வன்முறையால் 1.1 மில்லியனுக்கும் அதிகமான ரொஹிங்கியா அகதிகள் வெளியேறியுள்ளனர். பல நாடற்ற ரொஹிங்கியாக்கள் பங்களாதேஷின் கொக்ஸ் பஜாரில் உள்ள உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் வந்தடைந்துள்ளனர்.

மத்திய ஆபிரிக்கக் குடியரசில் (CAR), 2012ல் இருந்து நடந்து வரும் மற்றொரு குழுவாத மோதல், நாட்டின் ஐந்து மில்லியன் மக்கள்தொகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமான ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை இடம்பெயர்ந்துள்ளது.

எரித்திரியாவின் மக்கள்தொகையில் சுமார் 10 சதவிகிதமான 492,000 க்கும் அதிகமான மக்கள் மூலவளங்களைக் கட்டுப்படுத்தும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் முயற்சியால் தூண்டப்பட்ட சமூக மற்றும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் வன்முறை மற்றும் மத்திய கிழக்கின் எண்ணெய் ஏற்றுமதிகள் கடந்து செல்கின்ற செங்கடலில் அமைந்துள்ள அதன் மூலோபாய நிலைமையினால் தூண்டப்பட்ட வன்முறை காரணமாக அகதிகளாக வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.

ஏகாதிபத்திய சக்திகளால் ஆபிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் சந்தைகள் மற்றும் கனிம வளங்களுக்கான தேடுதலில் உருவாக்கப்பட்ட போர் மண்டலங்களில் இருந்து வெளியேறும் முயற்சியில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். UNHCR இன் படி கடந்த ஆண்டு மத்தியதரைக் கடல் மற்றும் அட்லாண்டிக் கடக்க முயன்றபோது 3,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் அல்லது காணாமல் போனதாகக் கூறப்படுகின்றது. அகதிகளை ஏற்க மறுப்பதன் மூலம் புகலிட உரிமையை அழித்தொழிக்கும் பாரிய கொலைக் கொள்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவுவதற்கும் பாதுகாப்பதற்கும் 163.5 மில்லியன் டாலர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஐ.நா அமைப்பு அழைப்புவிட்டது. மனிதாபிமான உதவிக்காக ஐ.நா. அமைப்புகளின் இதுவும் மற்றும் இதே போன்ற அழைப்பீடுகளும் செவிடன் காதில் ஊதிய சங்காகின. பெரும் வல்லரசுகள் உக்ரேனில் நடந்த போரையும், உலகையே சூழ்ந்துள்ள மந்தநிலையையும் பயன்படுத்தி, ஏற்கனவே மிகக்கூடுதலான உபரி உழைப்பாளர்களாகக் கருதப்படும் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட மனிதாபிமான உதவிகளைக் குறைப்பதற்கான சாக்குப்போக்காகப் பயன்படுத்துகின்றன.

உலகின் பத்திரிகைகளில் சமீபத்திய இடப்பெயர்வு புள்ளிவிவரங்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. போர்கள், மோதல்கள் மற்றும் பேரழிவுகள் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் துயரங்கள் சாதாரணமாக்கப்படுவது மட்டுமல்லாமல், உலகின் ஏழ்மையான நாடுகளில் உள்ள பெரும் ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அவர்களின் கைப்பாவை ஆட்சிகளின் தேர்வுக்குரிய கொள்கையாக மாறியுள்ளது.

இடம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளின் எண்ணிக்கை விபரங்கள் ஏற்கனவே காலாவதியாகியுள்ளன. பெப்ரவரி 24 இல் தொடங்கிய உக்ரேனில் போர் மே மாத தொடக்கத்தில் உக்ரேனின் 44 மில்லியன் மக்களில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வழிவகுத்தது. மேலும் 6.8 மில்லியன் பேர் உக்ரேனுக்கு வெளியே தஞ்சம் புகுந்தனர். நான்கு மில்லியன் உக்ரேனியர்களான கிட்டத்தட்ட 10 சதவிகித மக்கள் போரின் காரணமாக சர்வதேச அளவில் இடம்பெயர்வார்கள் என்று UNHCR இன் ஆரம்ப மதிப்பீட்டை விட இது அதிகமாக உள்ளது.

பெரும்பாலானோர் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி மற்றும் சுலோவாக்கியா ஆகிய நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். நோர்வே அகதிகள் பேரவையின் பொதுச்செயலாளர் ஜான் எகெலாண்ட் கருத்துத் தெரிவிக்கையில், 'உக்ரேனில் போரில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட கிட்டத்தட்ட எட்டு மில்லியன் மக்களை உள்ளடக்கியிருக்கவில்லை என்பதால், நமது அதிகூடிய எண்ணிக்கையில் கூட குறிப்பிடுவதை விட இன்றைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.' உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க/நேட்டோ பினாமிப் போர் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் மிகப்பெரிய இடப்பெயர்வு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டனும் நேட்டோவும் உக்ரேனில் போரை பெருமளவில் விரிவுபடுத்தி சீனாவை அச்சுறுத்துவதால், உலகளவில் இடம்பெயர்ந்த மற்றும் அகதிகளின் எண்ணிக்கை 2022 இன் இறுதியில் ஒரு புதிய உச்சத்தை எட்டக்கூடும். தொற்றுநோயால் தீவிரமடையும் முதலாளித்துவத்தின் தொடர்ந்தும் ஆழமடைந்து வரும் நெருக்கடி, ஏகாதிபத்தியப் போர் மற்றும் வறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு பாரிய போர் எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கம் மற்றும் தொழிலாள வர்க்கத்தினுள் ஒரு சோசலிச தலைமையை கட்டியெழுப்புவதற்கான அவசரத் தேவையை இன்னும் வெளிப்ப்படையாக முன்வைக்கிறது.

Loading