ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் உக்ரேனுக்கு நெடுந்தூர ஏவுகணைகளை அமெரிக்கா இரட்டிப்பாக்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் ஒரு பகுதியாக உக்ரேனுக்கு அனுப்பப்படும் நடுத்தர மற்றும் நெடுந்தூர ராக்கட் ஏவுகணைகளின் எண்ணிக்கையை அமெரிக்கா இரட்டிப்பாக்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த வாரம் அறிவிக்கப்பட்ட மற்றொரு ஆயுத தொகுப்பின் ஒரு பகுதியாக, ஏற்கனவே அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள நான்குக்கு கூடுதலாக, மேலும் நான்கு உயர் இயக்கம் கொண்ட பீரங்கி ராக்கெட் அமைப்புகளை (High Mobility Artillery Rocket - HIMAR) அமெரிக்கா அனுப்பும்.

இந்த தொகுப்பில் பென்டகனின் கூற்றுப்படி, “நான்கு உயர்-இயக்க பீரங்கி ராக்கெட் அமைப்புகள்; 105 மிமீ 36,000 தோட்டாக்கள்; 155 மிமீ பீரங்கிகளை இழுக்கும் 18 கவச இராணுவ வாகனங்கள், 1,200 கையெறி ஏவுகணைகள்; 2,000 இயந்திர துப்பாக்கிகள்; 18 கடலோர மற்றும் நதி ரோந்து படகுகள்; உதிரிப் பாகங்கள் மற்றும் பிற உபகரணங்கள்” அடங்கும்.

இந்த சமீபத்திய தொகுப்பு, பிப்ரவரி முதல் உக்ரேனுக்கான பதின்மூன்றாவது ஆயுத விநியோகமாகும். போர் தொடங்கியதில் இருந்து, அமெரிக்கா 6.1 பில்லியன் டாலர்கள் பெறுமதியான ஆயுதங்களை வழங்க உறுதியளித்துள்ளது.

உக்ரேனுக்கு தொடர்ச்சியான குறிப்பிடத்தக்க இராணுவ பின்னடைவுகளுக்கு மத்தியில் போரில் அமெரிக்க ஈடுபாட்டின் புதுப்பிக்கப்பட்ட விரிவாக்கம் வருகிறது.

வெள்ளியன்று, உக்ரேனிய இராணுவம் கிழக்கு உக்ரேனில் ரஷ்ய தாக்குதலின் முக்கிய மையமான செவெரோடோனெட்ஸ்க் (அல்லது சீவிரோடோனெட்ஸ்க்) நகரத்திலிருந்து அதன் துருப்புக்களை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது. இந்த நகரம் லுகான்ஸ்க் (லுஹான்ஸ்க்) பிராந்தியத்தின் தலைநகரம் ஆகும், இது ஏற்கனவே 90 சதவீதத்திற்கும் அதிகமாக ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது.

அருகிலுள்ள நகரமான லைசிசான்ஸ்க் மட்டுமே ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் இல்லாத பிராந்தியத்தில் எஞ்சியிருக்கும் ஒரே பெரிய குடியேற்றமாகும். ரஷ்யா இப்போது உக்ரேனிய நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் உக்ரேன் ஒரு நாளைக்கு 500 முதல் 1,000 உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது.

'துரதிர்ஷ்டவசமாக... பின்வாங்குவது அவசியம்' என்று கிழக்கு லுகான்ஸ்க் பிராந்தியத்தின் பிராந்திய ஆளுநர் செர்ஹி ஹேடே கூறினார் என பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

“அழிக்கப்பட்ட இடங்களை பல மாதங்களாகப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு அர்த்தமற்ற சூழ்நிலை இப்போது எங்களுக்கு உள்ளது, பல மாதங்களாக அங்கு இருப்பதில் அர்த்தமில்லை. ஏனெனில் ஒவ்வொரு நாளும், பாதுகாப்பற்ற நிலைகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரத்தில் அதிகரிக்கும்,” என்று ஹேடே மேலும் கூறினார்.

நியூ யோர்க் டைம்ஸ், “உக்ரேனிய வீரர்கள் சிறிய படகுகளில் ஆற்றின் குறுக்கே மக்களை அனுப்பி வருகின்றனர். சில துருப்புக்கள் நீந்த வேண்டியிருந்தது” என செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த இராணுவ பின்னடைவுகள் அமெரிக்காவையும் அதன் நேட்டோ நட்பு நாடுகளையும் போரில் தங்கள் ஈடுபாட்டை இரட்டிப்பாக்க மட்டுமே தூண்டியது. வியாழன் அன்று, ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனை 'வேட்பாளர் உறுப்பினர்' (candidate member) ஆக்கியது.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள டிரான்ஸ்னிஸ்ட்ரியா எனப்படும் பிரிந்து செல்லும் பகுதியின் தாயகமான மால்டோவாவும் இதில் சேரும்.

அடுத்த வாரம், ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடென் கலந்து கொள்கிறார். உச்சிமாநாட்டில், 'நேட்டோவின் பாதுகாப்பு மற்றும் தடுப்பு தோரணையை வலுப்படுத்த புதிய படை உறுதிப்பாடுகளை தலைவர்கள் அறிவிப்பார்கள்' என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி கூறினார்.

“கூட்டாளிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படும் பெரிய புதிய பங்களிப்புகளுடன் ஐரோப்பிய பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை அமெரிக்கா அறிவிக்கும்,” என கிர்பி மேலும் கூறினார்.

போரில் தொடர்ச்சியான பேரழிவுகரமான பின்னடைவுகளை எதிர்கொள்ளும் நிலையில், அமெரிக்கா, ஆயுத விநியோகத்தின் அளவு மற்றும் போரின் புவியியல் எல்லை ஆகிய இரண்டையும் விரிவுபடுத்துவதன் மூலம் மோதலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

முதன்முறையாக நேட்டோ உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் கொரிய குடியரசு ஆகிய நாடுகளின் உத்தியோகபூர்வ தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என கிர்பி கூறினார். 'ஐரோப்பா அல்லது இந்தோ-பசிபிக் பிராந்தியமாக இருந்தாலும் சரி, அமெரிக்காவும் நமது நட்பு நாடுகளும் பங்காளிகளும் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் கொள்கைகளைப் பாதுகாப்பார்கள்' என்று கிர்பி கூறினார்.

நேட்டோவை ஒரு ஐரோப்பிய ரஷ்ய-எதிர்ப்பு கூட்டணி என்பதில் இருந்து, பசிபிக் பகுதியில் செயல்படும் ஒரு முழு அளவிலான போரிடும் படையாக மாற்றுவது, உக்ரேன் போர் கட்டுப்பாட்டை மீறி எழுந்தாலும், சீனாவுடனான அமெரிக்க மோதலின் விரைவான முடுக்கத்தை சுட்டிக்காட்டுகிறது.

உச்சிமாநாட்டின் மைய நோக்கமானது, ரஷ்யாவுடன் பரந்த நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் சுவீடன் மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகளின் வேட்புமனுவை விரைவாகக் கண்காணிப்பதே ஆகும். இந்த நாடுகள் இணைவதற்கு துருக்கியின் ஆட்சேபனைகளைக் குறிப்பிட்டு, நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அவர் கூறினார்: 'இந்த இரு நாடுகளும் விரைவில் எங்கள் கூட்டணியில் சேர ஒரு பொதுவான பாதையைக் கண்டுபிடிப்பதே எனது குறிக்கோள்.'

உறுப்பு நாடுகளின் இராணுவ செலவினங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பொருளாதார உற்பத்தியின் பங்கை விரிவுபடுத்துவதில் உச்சிமாநாடு கவனம் செலுத்தும் என்று ஸ்டோல்டன்பேர்க் கூறினார். 'நாங்கள் தொடர்ந்து அதிக முதலீடு செய்ய வேண்டும். மேலும் நேட்டோவில் அதிக முதலீடு செய்யுங்கள்,” என்றார்.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் இடைவிடாத இராணுவ விரிவாக்கத்திற்கு மத்தியில், ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இந்த வாரம் ஒரு ரஷ்ய அதிகாரியால் செய்யப்பட்ட மிக அப்பட்டமான மதிப்பீட்டை வெளியிட்டார். ரஷ்யாவிற்கு எதிரான போரை அதிகரிக்க அமெரிக்கா மற்றும் நேட்டோ முயற்சிகளை இது பகுப்பாய்வு செய்கிறது.

உக்ரேனை ஏற்றுக்கொள்வதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவும், ஃபின்லாந்து மற்றும் சுவீடனை உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளும் நேட்டோவின் முடிவும் ரஷ்யாவை குறிவைக்கும் 'புதிய கூட்டணி' உருவாவதை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என லாவ்ரோவ் எச்சரித்தார்.

'சோவியத் யூனியனுக்கு எதிரான போருக்காக, தனது பதாகையின் கீழ் ஹிட்லர் ஐரோப்பிய நாடுகளின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை ஒன்று திரட்டினார்,' என்று லாவ்ரோவ் கூறினார். அவர் தொடர்ந்தார், 'இப்போது, ஐரோப்பிய ஒன்றியம் நேட்டோவுடன் இணைந்து மற்றொரு நிலைப்பாட்டிற்காகவும், இறுதியில், ரஷ்ய கூட்டமைப்புடன் போருக்காகவும் மற்றொரு –நவீன- கூட்டணியை உருவாக்கி வருகிறது.'

இதற்கிடையில், போரின் பொருளாதார விளைவுகள் தொடர்ந்து எதிரொலிக்கின்றன. ஜேர்மன் ஃபெடரல் நெட்வொர்க் ஏஜென்சியின் இயக்குனர் கிளவுஸ் முல்லர் ஒரு பேட்டியில், ரஷ்யா, நாட்டிற்கான எரிவாயு விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்தால், ஜேர்மனிய பொதுமக்கள் வரவிருக்கும் மாதங்களில் எரிசக்தி விலையை மூன்று மடங்காக எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறினார்.

ரஷ்யா ஏற்கனவே ரஷ்ய-ஜேர்மன் நோர்ட் ஸ்ட்ரீம் 1 எரிவாயு குழாய் மூலம் அனுப்புவதை குறைத்துள்ளது மற்றும் ஜேர்மனிக்கான எரிவாயு ஏற்றுமதியை அது முற்றிலுமாக நிறுத்தக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வருகின்றன.

முல்லர் 'விலையில் மிகப்பெரிய ஏற்றம்' பற்றி எச்சரித்தார், 'இரட்டிப்பு அல்லது மும்மடங்கு சாத்தியம்' என்று கூறினார்.

விலைவாசி உயர்வு மற்றும் கட்டுப்பாட்டை மீறிய இராணுவச் செலவுகள் ஆகிய இரண்டிலும், உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கம் வேகமாகப் பரவி வரும் போருக்கான கட்டணத்தை செலுத்துமாறு சொல்லப்படுகிறது. போராட்டத்திற்குள் நுழைவதன் மூலம், போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான கோரிக்கையை, அவர்கள் தங்கள் சமூக மற்றும் பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இன்றியமையாத அங்கமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

Loading