ரஷ்ய நூல்கள் இறக்குமதி மற்றும் ரஷ்ய இசை நிகழ்ச்சிகளை நடாத்துவதை உக்ரேன் தடை செய்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூன் 19 அன்று, உக்ரேனிய வெர்கோவ்னா ராடா (நாடாளுமன்றம்) ரஷ்ய இலக்கியம் மற்றும் இசை நிகழ்ச்சிகளைத் தணிக்கை செய்யும் மற்றும் வானொலியில் பாடும் மற்றும் பேசும் உக்ரேனிய மொழியின் அளவை அதிகரிக்கும் இரண்டு பிற்போக்கு மசோதாக்கள் பரந்த பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட்டது. மூன்றாவது சட்டம் உக்ரேனிய மொழியில் உள்ளடக்கத்தை வெளியிடுவதை ஊக்குவிக்க முயல்கிறது. இது உக்ரேனிய தேசிய பேரினவாதிகளால் ரஷ்ய மொழி ஒரு மொழியாக இருப்பதை அடக்குவதற்குப் பயன்படுத்தப்படும்.

சட்டம் 7273-D எந்தவொரு ரஷ்ய குடிமகனின் இசை ஒளிப்பதிவுகள் உட்பட 'பகிரங்க நிகழ்ச்சி, காட்சி, அரங்கேற்றம்' ஆகியவற்றை தடை செய்கிறது. ரஷ்ய கலைஞர்கள் உக்ரேனின் மீதான அவர்களின் நாட்டின் படையெடுப்பை பகிரங்கமாக எதிர்த்தாலும், மேற்பார்வையிடப்பட்டதும் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பட்டியலில் இருந்தால் மட்டுமே அங்கு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுவார்கள்.

ரஷ்ய கலைஞர்களின் அரசியலை பொருட்படுத்தாமல், உலகெங்கிலும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய இசைப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான பரவலான தணிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த புதிய நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

அத்தகைய நடவடிக்கைகளின் பட்டியலில் New York Philharmonic நடத்துனர் தூகான் சோகிவ்வை தடை செய்ததும் அடங்கும்; மார்ச் மாதம் வான்கூவர் மற்றும் மொண்ட்ரியாலில் பியானோ கலைஞர் அலெக்சாண்டர் மலோஃபீவ் நிகழ்ச்சிகளை இரத்து செய்தல்; மற்றும் மூனிச் பில்ஹார்மோனிக் இசைக்குழுவில் இருந்து ரஷ்ய நடத்துனர் வலேரி கெர்கீவ் வெளியேற்றப்பட்டமை உள்ளடங்கும். ஏப்ரல் மாதத்தில் Sibelius வயலின் போட்டியில் ரஷ்ய போட்டியாளர்களை வெளியேற்றுவதற்கான முடிவு மற்றும் மே மாதம் டச்சு ஹார்ப் விழாவில் இருந்து அலெக்சாண்டர் போல்டாச்சேவ் தடைசெய்யப்பட்டது ஆகியவை இந்த அவமானத்தின் பட்டியலில் அடங்கும்.

டெட்ராய்டில் நடந்த Movement இசை விழா, நெதர்லாந்தில் உள்ள Crave மற்றும் ஜேர்மனியின் டோர்ட்முண்ட் நகரில் உள்ள PollerWiesen இல் ரஷ்ய DJ மற்றும் கலைஞரான நினா க்ராவிஸ் போன்ற பிரபல இசை கலைஞர்களும் ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரத்தினுள் சிக்கியுள்ளனர்.

உக்ரேனிய ராடா

மேற்கு நாடுகளில் உள்ள முக்கிய ஊடகங்கள் கடுமையான உக்ரேனிய தணிக்கைக்கு பெரும்பாலும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இது உலகில் வேறு எங்கும் செயல்படுத்தப்பட்டிருக்குமானால் சீற்றத்தின் கூச்சலை தூண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக, சட்டம் 7273-D, 'உக்ரேனில் இசை மூலம் சாத்தியமான விரோதப் பிரச்சாரத்தின் அபாயங்களைக் குறைக்கும் மற்றும் கலாச்சாரத்துறையில் தேசிய இசை தயாரிப்புகளின் அளவை அதிகரிக்கும்' என்று பிபிசி குறிப்பிட்டது.

புதிய சட்டத்தின் மற்றொரு பகுதி, அலைவரிசைகளில் உக்ரேனின் அளவை அதிகரிக்க முயல்கிறது. வானொலியில் நாற்பது சதவீத பாடல்களும், தினசரி செய்திகள், பகுப்பாய்வு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் 75 சதவீதமும் உக்ரேனிய மொழியில் இருக்க வேண்டும். இது 2016 சட்டத்தில் செய்யப்பட்ட ஒதுக்கீட்டிலிருந்து இன்னும் அதிகரிக்கின்றது.

2019 ஆம் ஆண்டு சட்டம் ஏற்கனவே உக்ரேனிய மொழியை ஒரே உத்தியோகபூர்வ 'அரசு மொழி' ஆக்கியுள்ளது. உக்ரேனின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் ரஷ்ய மொழியை முதல் மொழியாகப் பேசுகின்றனர். மேலும் பல்கேரிய, ஹங்கேரிய, போலிஷ், ருமேனியன், டார்டர் மற்றும் கராயிட் மற்றும் பிற மொழிகளைப் பேசும் சிறுபான்மையினரும் உள்ளனர்.

பேசும் வார்த்தையில் ரஷ்ய கலாச்சாரம் இல்லாதுபோக வேண்டும் என்றால், ரஷ்ய மொழியில் அச்சிடப்பட்டதும் இல்லாதுபோக வேண்டும். சட்டம் 7459 ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து 'உக்ரேனில் வெளியிடப்படும் பொருட்களின் இறக்குமதி மற்றும் விநியோகத்தை' தடை செய்கிறது மற்றும் 'ஆக்கிரமிப்பு அரசின் மொழியில் வெளியிடப்பட்ட' (அதாவது, ரஷ்யன்) அச்சிடப்பட்ட பொருட்களை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை தடை செய்கிறது. உக்ரேனின் வாசகர்களின் தடைக்கு வியக்கத்தக்க வகையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு டால்ஸ்டாய் மற்றும் புஷ்கின் படைப்புகள் உட்பட சில ரஷ்ய படைப்புகளுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒடுக்குமுறையானது, எந்த காலகட்டத்திலும் அல்லது அரசியல் தூண்டுதலிலும் நிகழ்ந்தாலும் உக்ரேனிய ஆட்சியின் ரஷ்ய இலக்கியத்தின் 'இன-கலாச்சார சுத்திகரிப்பு' முயற்சியின் தொடர்ச்சியாகும். இந்த முயற்சியில் கலாச்சார அமைச்சகத்தின் ஒரு பிரிவான உக்ரேனிய புத்தக அமைப்பின் (Ukrainian Book Institute - UBI) இன் முன்மொழிவுகளும் செயல்களும் அடங்கும். UBI இன் செய்தித் தொடர்பாளர் சமீபத்தில் புஷ்கின் மற்றும் டொஸ்தோயெவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை 'மிகவும் தீங்கு விளைவிக்கும் இலக்கியம்' என்று அழைத்து, மேலும் அவை பொது மற்றும் பள்ளி நூலகங்களிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

உக்ரேனிய 'கல்வி அமைச்சகத்தின் பணிக்குழு ஏற்கனவே லியோ டால்ஸ்டாய், அலெக்சாண்டர் புஷ்கின், பியோடர் டொஸ்தோயெவ்ஸ்கி மற்றும் மைக்கேல் [sic] புல்ககோவ் ஆகியோர் உள்ளடங்கலாக 40 ரஷ்ய அல்லது சோவியத் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து அகற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது' என Deutsche Welle அறிவித்தது.

சட்டம் 7459 ஆனது சட்டம் 6287 உடன் இணைக்கப்படுகிறது, இது 'உக்ரேனிய புத்தக சந்தையை ... தேசிய பாதுகாப்பில் ஒரு முக்கிய காரணியாக' மேம்படுத்த முயல்கிறது. ரஷ்ய புத்தகங்களை விற்காத புத்தகக் கடைகளுக்கு சட்டம் மானியங்களை வழங்குகிறது மற்றும் உக்ரேனிய புத்தகங்களை வாங்குவதற்கான சான்றிதழ்களை குடிமக்களுக்கு வழங்குகிறது.

உக்ரேனிய கலாச்சார அமைச்சர், ஓலெக்ஸான்டர் தகாசெங்கோ இக் கட்டுப்பாடுகளை வரவேற்று, 'உக்ரேனிய ஆசிரியர்கள் தரமான உள்ளடக்கத்தை பரந்தளவிலான பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ரஷ்ய படையெடுப்பிற்குப் பின்னர் எந்தவொரு ரஷ்ய ஆக்கபூர்வமான தயாரிப்புகளின் இருப்பை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

சட்டங்கள் ஜனாதிபதி வோலோடிமையர் செலென்ஸ்கியால் கையொப்பமிட வேண்டும். அவர் அவ்வாறு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள், அமெரிக்காவும் நேட்டோவும் ஒரு ஜனநாயக ஆட்சியைப் பாதுகாக்கவில்லை, மாறாக உக்ரேனியரல்லாத 'அடையாளத்தை' நசுக்க ஒவ்வொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளும் ஒரு பேரினவாத மற்றும் தேசியவாத ஆட்சியை பாதுகாக்கின்றன என்பதற்கு மேலும் சான்றாகும்.

ரஷ்ய படையெடுப்பு பிற்போக்குத்தனமானது என்றாலும், உக்ரேனிய அரசாங்கத்தில் மேலாதிக்கம் செலுத்தும் உக்ரேனிய தீவிர வலதுசாரிகளால் அது பல தசாப்தங்களாக பசியுடன் இருந்த இனப் பிரத்தியேகவாதத்தின் வேலைத்திட்டத்தை விரைவுபடுத்த இது பயன்படுத்தப்படுகிறது. இது சமீபகாலமாக ஆட்சியில் அதிகரித்து வரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். இந்த மாத தொடக்கத்தில், உக்ரேனிய நீதிமன்றம் 11 எதிர்க்கட்சிகளின் தடையை செலென்ஸ்கி உறுதி செய்தது, இதில் மிகப்பெரிய எதிர்க் கட்சிகளின் தளமான வாழ்க்கை (For Life) கட்சியும் அடங்கும்.

தீவிரமடைந்துள்ள ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரோடு ஏகாதிபத்திய நாடுகளிலும் ஜனநாயக உரிமைகள் மீதான முழுமையான தாக்குதலும் சேர்ந்துள்ளது. அமெரிக்காவில் கருக்கலைப்பு சட்டங்களை அகற்றுவது மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளால் தேவாலயத்தையும் அரசையும் பிரிப்பதை தளர்த்துவதும் இந்த பிற்போக்குவாத அலையின் உச்சகட்டமாகும். பல மாதங்களாக குடியரசுக் கட்சியின் தீவிர வலதுசாரிகள் இனம் மற்றும் பாலியல் பிரச்சினைகளைக் கையாளும் புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களை பள்ளி நூலகங்களிலிருந்து அகற்ற முயற்சித்து வருகின்றனர். இந்தச் செயல்கள் அனைத்தும் முதலாளித்துவம் ஜனநாயகத்துடன் மட்டுமல்லாது, கலாச்சாரத்தின் குறைந்தபட்ச சுதந்திரமான வளர்ச்சியுடன் கூட இணக்கமற்று இருக்கும் ஒரு உலகளாவிய உள்ளடக்கத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

Loading