இலங்கை மோசமான சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நாட்டின் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள, முக்கியமான மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கடுமையான தட்டுப்பாடு குறித்து இலங்கை முழுவதிலும் உள்ள வைத்தியர்களும் ஏனைய சுகாதார ஊழியர்களும் தீவிரமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இலங்கையின், கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலைக்கு வெளியே, இலங்கை மருத்துவ அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் [AP Photo/Eranga Jayawardena] [AP Photo/Eranga Jayawardena]

நாட்டின் வீழ்ச்சியடைந்து வருவதும் மற்றும் நிதி பற்றாக்குறையில் உள்ளதுமான, பெரும்பாலான இலங்கையர்கள் நம்பியிருக்கும், இலவச பொது சுகாதார கட்டமைப்பில் இது மிகவும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. எவ்வாறெனினும். பொது மற்றும் தனியார் ஆகிய இரண்டு சுகாதார சேவைகளும் அடிப்படை மருத்துவப் பொருட்களின் பெரும் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.

சோதனைகளை இடைநிறுத்த வேண்டிய கட்டாயம் மற்றும் முக்கியமான அறுவை சிகிச்சை உட்பட பிரதான மருத்துவ நடைமுறைகளை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், நிலைமை மிகவும் மோசமாகி வருவதாக, இலங்கையின் முதன்மையான புற்றுநோய் சிகிச்சை மையமான அபேக்ஷா மருத்துவமனையின் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகள், மே 23 அன்று, ராய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.

“புற்றுநோயாளிகளுக்கு இது மிகவும் மோசமான நிலமை” என வைத்தியர் ரொஷான் அமரதுங்க செய்தி நிறுவனத்திடம் கூறினார். “சில சமயங்களில், நாங்கள் காலையில் சில அறுவை சிகிச்சைகளுக்குத் திட்டமிடுகிறோம் [ஆனால்] மருந்துப் பொருட்களின் விநியோகம் இல்லாததால் குறிப்பிட்ட நாளில் அவற்றைச் செய்ய முடியாமல் போகலாம்”, இந்த நிலைமை விரைவாக மாற்றியமைக்கப்படாவிட்டால், சில நோயாளிகள், “ஏறத்தாழ மரண தண்டனையை' எதிர்கொள்ள வேண்டும், என்று அவர் கூறினார்.

குறிப்பிட்ட சில மருந்துகளின் பற்றாக்குறையானது, ஏனைய துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, என வேறொரு அபேக்ஷா மருத்துவமனை மருத்துவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் (WSWS) கூறினார். லுகேமியா சிகிச்சை மருத்துவர்களிடம், ஜி-சி.எஸ்.எஃப். (granulocyte colony-stimulating factor) மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் இல்லை என்று அவர் கூறினார். சில நோயாளிகளின் உறவினர்கள், பொட்டாசியம் உப்புக் குப்பிகளை வெளிப்புற விநியோகஸ்தர்களிடம் தேடி வாங்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

கல்லீரல் செயலிழப்பு காரணமாக, இரத்தம் வாய்வழியாக வெளியேற்றப்படுவதால் அவதிப்படும் நோயாளிகளின் வாயின் ஊடாக கேமராக்களை அனுப்பப் பயன்படுத்தப்பட்ட கிளிப்களின் விநியோகம் தீர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது, என்று கண்டி தேசிய மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் WSWS இடம் கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் அண்மையில், அமெரிக்கா-நேட்டோவினால் நடத்தப்படும் ரஷ்யாவிற்கு எதிரான போரினாலும் தூண்டப்பட்ட நாட்டின் மோசமடைந்துள்ள நிதி நெருக்கடி காரணமாக, கடந்த ஐந்து மாதங்களாக, இலங்கையில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனையிலும் இந்த உயிராபத்தான பிரச்சினைகள் தோன்றியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கம், வீழ்ச்சியடைந்த வெளிநாட்டு நாணய கையிருப்பைக் கையாள்வதற்கான ஒரு அவநம்பிக்கையான முயற்சியின் பாகமாக, அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் எரிபொருள்கள் உட்பட பிரதான இறக்குமதிகளைக் குறைத்தது. இது நீண்ட மின்வெட்டுக்கும் வழிவகுத்தது.

இதன் விளைவாக உருவான சமூக நெருக்கடியானது ஜனாதிபதி இராஜபக்ஷவையும் அவரது ஆட்சியையும் பதவி விலகுமாறும், தட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருமாறும் கோரும் வெகுஜன எதிர்ப்புக்களை துரிதப்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டங்களில், மருத்துவர்கள், தாதியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் முன்னணியில் இருந்தனர்.

இலங்கை, தனது மருந்துப் பொருட்கள் மற்றும் ஏனைய மருத்துவப் பண்டங்களில் 80 வீதத்திற்கும் மேலாக இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இறக்குமதி செய்வதற்காக கடன் கேட்டு, பகிரங்க கடிதம் எழுதியபோதிலும், தங்களிடம் அமெரிக்க டொலர் இல்லை என வங்கிகள் அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

188 அல்லது நோயாளிகளுக்குத் தேவையான 646 அடிப்படை மருந்துகளில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு, அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவில் இல்லை என, ஒரு விசேட குழுவிடம் மே 16 அன்று, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் சஞ்சீவ முனசிங்க கூறினார். இதில், இதய நோயாளிகளுக்கு முக்கியமாகத் தேவைப்படும் ஒரு மருந்து உட்பட, பதினான்கு மருந்துகள் அத்தியாவசியமானது என்றார். அறுவை சிகிச்சை உபகரணங்களும் பற்றாக்குறையாக உள்ளது.

மருந்து மற்றும் சத்திரசிகிச்சை உபகரண விநியோகஸ்தர்களுக்கு 34 பில்லியன் ரூபாவை (100 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அமைச்சினால் செலுத்த முடியவில்லை, என்பதை முனசிங்க ஒப்புக்கொண்டார்.

இராஜபக்ஷ அரசாங்கம் அண்மைய மாதங்களில் பல்வேறு மருந்துப் பொருட்களின் விலைகளை கிட்டத்தட்ட 90 வீதத்தால் கடுமையாக அதிகரித்துள்ளது. மருந்துகளின் விலை மார்ச் 11 அன்று 29 சதவீதமும், ஏப்ரல் 11 அன்று 20 சதவீதமும், ஏப்ரல் 30 அன்று 40 சதவீதமும் உயர்ந்துள்ளது.

இந்த மோசமான நிலைமை காண்படுவது அரசு நடத்தும் பொது மருத்துவமனைகளில் மட்டும் அல்ல. தனியார் மருத்துவமனைகள், மயக்க மருந்துகள் உட்பட 70 க்கும் மேற்பட்ட இன்றியமையா மருந்துகள், அவற்றின் களஞ்சியத்தில் பற்றாக்குறையாக இருப்பதாகத் தெரியவந்துள்ளன. இதனால் குறைந்த செயல்திறன் கொண்ட மாற்று மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் பேரழிவு பற்றி மருத்துவர்கள் பலமுறை எச்சரித்துள்ளனர். கடந்த மாத தொடக்கத்தில், இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) அறிவித்ததாவது: “வழக்கமான சத்திரசிகிச்சை நடவடிக்கைகள் போன்ற சில சேவைகளை குறைக்கவும் மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு கிடைக்கக்கூடிய உபகரணங்களின் பயன்பாட்டை மட்டுப்படுத்தவும் ஏற்கனவே தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இது ஒரு நல்ல கொள்கை அல்ல, ஏனெனில் அவசரநிலை அல்லாத சூழ்நிலைகள், சில மணிநேரங்களில் உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளாக மாறக்கூடும்.

சில வாரங்களுக்குள் நிலைமை சரிசெய்யப்படாவிட்டால், “அவசர சிகிச்சையும் சாத்தியமில்லை. இது ஒரு பேரழிவுகரமான எண்ணிக்கையில் மரணங்களை ஏற்படுத்தும், இது கோவிட், சுனாமி மற்றும் உள்நாட்டுப் போரின் ஒருங்கிணைந்த இறப்பு எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கலாம்” என அது எச்சரித்துள்ளது.

இந்த மதிப்பீடுகள் முன்னெப்போதும் இல்லாதவை. நாட்டின் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை தற்போது 16,500 க்கும் அதிகமாக உள்ளது. 2004 டிசம்பர், சுனாமியின் விளைவாக 30,000 இலங்கையர்கள் இறந்தனர். மேலும் கொழும்பின் 26 ஆண்டுகால தமிழர்-விரோத இரத்தக்களரி போரில் குறைந்தது 150,000 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் தமிழ் பொதுமக்கள் ஆவர்.

மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் உருவாக்கப்பட்ட சுகாதாரப் பேரழிவின் அளவை இலங்கையின் முதன்மையான மருத்துவ சங்கத்தின் இந்த எச்சரிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த நிலைமை, பெருகிவரும் பணவீக்கத்தால் ஏற்படும் பட்டினியுடன் இணைந்து, வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு சமூக பேரழிவை உருவாக்கவுள்ளது. கடந்த மாதம், வருடாந்திர தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு 33.8 சதவீத உயர்வையும், உணவுக் குறியீடு 45.1 சதவீத உயர்வையும் காட்டியது.

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில், “அனைத்து குடிமக்களின் வாழ்விலும் அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும்” என்று எச்சரித்தார். மக்கள் 'சில தியாகங்களைச் செய்ய' தயாராக வேண்டும் என்றும் அவர் அறிவித்தார்.

அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றும் அரச செலவீனங்கள் 'எலும்பு வரை வெட்டப்பட வேண்டும்' என்றும் விக்கிரமசிங்க கடந்த வாரம் அறிவித்தார்.

இலங்கையின் ஆளும் உயரடுக்கின் ஈவிரக்கமற்ற அணுகுமுறை, கடந்த மூன்று வருடங்களாக, நடந்துகொண்டிருக்கும் கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில், பாதுகாப்பு அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை ஒப்பிடுவதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

2020 இல் பாதுகாப்புக்கான வரவு செலுவுத் திட்ட ஒதுக்கீடு 290 பில்லியன் ரூபாவாக இருந்த அதேவேளை, சுகாதாரச் செலவுக்கான ஒதுக்கீடு வெறும் 254 பில்லியன் ரூபாவாகும்; 2021 இல் பாதுகாப்புக்கான செலவு 380 பில்லியன் ரூபாயும், சுகாதாரத்துக்காக 286 பில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு, 373 பில்லியன் ரூபா பாதுகாப்புக்காகவும், 225 பில்லியன் ரூபா சுகாதாரத்திற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது, இது கடந்த மூன்று ஆண்டுகளில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட மிகக் குறைந்த தொகையாகும்.

தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு போதுமான சுகாதார சேவை மற்றும் பிற அடிப்படை சமூக தேவைகளை வழங்குவதற்கு தேவையான நிதியை இலங்கை முதலாளித்துவம் ஒருபோதும் வழங்காது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

அதனாலேயே, பெரிய நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் இதர முக்கிய பொருளாதார மையங்களை தேசியமயமாக்கி, அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரிப்பதன் மூலம், தொழிலாள வர்க்கம் அனைத்து அத்தியாவசிய உற்பத்தி மற்றும் விநியோகத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே மோசமான சமூக நெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஒரே வழி ஆகும். இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர்களின் நேச சக்திகள் யாரெனில், உலகெங்கிலும் இதேபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் சர்வதேச தொழிலாள வர்க்க சகோதர சகோதரிகளே ஆவர்.

சோசலிச சமத்துவக் கட்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் விலகி, ஒவ்வொரு வேலைத் தளத்திலும், தொழிற்சாலையிலும், தொழிலாள வர்க்க புறநகர் பகுதிகளிலும் நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புமாறு தொழிலாளர்களை கேட்டுக்கொள்வதோடு, மேலும் இந்த அவசரமாகத் தேவைப்படும் சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காக போராட வேண்டும் என்றும் வலியறுத்துகின்றது.

மேலும் படிக்க

Loading