இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இந்தக் கட்டுரை 8 ஜூலை 2022 அன்று சிங்கள மொழியில் வெளியான கட்டுரையின் தமிழாக்கமாகும்.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) ’அனைத்துக் கட்சி ஐக்கியத்துக்கான ஒரு கலந்துரையாடலுக்கு சோசலிச சமத்துவக் கட்சிக்கு (சோ.ச.க.) விடுத்த அழைப்பை நிராகரித்து, சோ.ச.க. சார்பில் அதன் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர, ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு அனுப்பிய கடிதத்தை இங்கு பிரசுரிக்கின்றோம்.
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்,
திரு. சஜித் பிரேமதாச அவர்களுக்கு,
ஐயா,
‘அனைத்து கட்சி உடன்பாட்டுக்காக’ சோசலிச சமத்துவக் கட்சிக்குவிடுக்கப்பட்டஅழைப்பு
உங்கள் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் (ஐ.ம.ச.) மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. புத்திக பத்திரன, சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) தலைவர் விஜே டயஸ் அவர்களை, 05 ஜூலை 2022 அன்று தொலைபேசியில் அழைத்து நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண ‘சர்வ கட்சி உடன்பாட்டை’ எட்ட ஒரு கலந்துரையாடலுக்கு வருமாறு சோசலிச சமத்துவக் கட்சிக்கு அழைப்பு விடுத்தார். அந்தக் கலந்துரையாடலில் எமது கட்சி பங்கேற்பதை உறுதிப்படுத்தும் வகையில், மறுநாள் உங்கள் ஒருங்கிணைப்புச் செயலாளர் தினேஷ் குமாரகே, விஜே டயஸ் அவர்களை தொலைபேசியில் அழைத்தார்.
முதலில், சோசலிச சமத்துவக் கட்சி இந்த அழைப்பை முற்றாக நிராகரிக்கிறது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயம், இலங்கையில் ஆழமடைந்துவரும் சமூகப் பேரழிவிற்கு சோசலிச சமத்துவக் கட்சி ஏற்கனவே வழங்கியிருக்கும் தீர்வை, தொழிலாளர் - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் விளக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த திறந்த கடிதத்தை எடுத்துக்கொள்கிறேன்.
உணவு, மருந்து, எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு, நாளாந்த மின்வெட்டு, பணவீக்கம் போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர் - ஒடுக்கப்பட்ட மக்கள், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் பதவி விலகி மேற்கூறிய இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மூன்று மாதங்களுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். சோசலிச சமத்துவக் கட்சி அதன் தொடக்கத்தில் இருந்து நடந்து வரும் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தலையிட்டு, தொழிலாள வர்க்கத் தீர்வை முன்வைத்துள்ளது.
‘இலங்கையின் இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்து! நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திடு! சிக்கன நடவடிக்கையும் பட்டினியும் வேண்டாம்! அனைவருக்கும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகளைப் பெறக்கூடிய ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கு நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு!’ என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சி ஏப்ரல் 07 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“சோசலிச சமத்துவக் கட்சி, ‘கோட்டா போக வேண்டும்!’ என்ற உழைக்கும் மக்களின் கோரிக்கைகளுக்குப் பின்னால் நேரடியாக நிற்கிறது. ஆனால் அவருக்கு பதிலாக வரப்போவது என்ன? இராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்யக் கோருவது மட்டும் போதாது. முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வம் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும், தீவு முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சுரண்டப்படுவதையும் வறுமையையும் உறுதிப்படுத்த ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியான மற்றும் பிற்போக்கான ஜனாதிபதி ஆட்சி முறையின் இன்றைய அசிங்கமான முகம் அவர் மட்டுமே.”
அதன்படி, இராஜபக்ஷவின் முகத்தை மாற்றி, அதற்குப் பதிலாக ஐ.ம.ச. முன்மொழிந்த ‘அனைத்துக்கட்சி அரசாங்கம்’ அல்லது மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) முன்மொழிந்த ‘சமரச அரசாங்கம்’ அல்லது இந்த முதலாளித்துவ அரச இயத்திரத்துக்கு புதிய முகத்தை பொருத்தினாலோ, உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் இந்த பேரழிவிற்கு தீர்வு கிடைக்காது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் போலவே, அதற்குப் பதிலாக எந்த முதலாளித்துவ அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொடூரமான சிக்கன திட்ட நிரலை செயல்படுத்தும். அதேபோன்று, அந்தத் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்டவர்களை அடக்குவதற்கு, தற்போதுள்ள அரச இயந்திரத்தின் அனைத்து அடக்குமுறை கருவிகளும் பயன்படுத்தப்படும்.
சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) 4 பில்லியன் டொலர் கடனைக் கோரும் இராஜபக்ஷ அரசாங்கம் ஏற்கனவே அதன் உத்தரவுகளை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. பொதுச் சேவை வேலைகளை பாதியாகக் குறைத்தல், தனியார்மயமாக்கலை விரைவுபடுத்துதல், வற் போன்ற மறைமுக வரிகளை உயர்த்துதல், அதிக எண்ணிக்கையிலான மக்களை பாதிக்கும் வகையில் வருமான வரி வலையை விரிவுபடுத்துதல் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்ட உத்தரவுகளாகும்.
அண்மையில் இலங்கை வந்த சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள், பிரதமர் விக்கிரமசிங்க மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர், எதிர்பார்த்த கடனை வழங்குவதற்கு, கடனை திருப்பிச் செலுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கும் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் எனப்படுவது ஆகஸ்டில் செயல்படுத்தப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும், என்றனர். சமூகப் பேரழிவை ஆழமாக்கும் இன்னும் தொடர் மூர்க்கத்தனமான தாக்குதல்கள் விரைவில் கட்டவிழ்த்து விடப்படும் என்பதே இதன் பொருள்.
நெருக்கடிக்கான தீர்வுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே கூறிவரும் ஐ.ம.ச., இந்தத் தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு அனைத்து முதலாளித்துவக் கட்சிகள், மத்திய தர வர்க்க அமைப்புகள் மற்றும் போலி-இடது கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இந்த ‘உடன்பாட்டு பேச்சுவார்தைகளை” நடத்துகிறது. ஏற்கனவே, ‘பிரஜைகள் சக்தி’ போன்ற மத்தியதர வர்க்க அமைப்புகள், ஐ.ம.ச. உடன் ‘உடன்பாட்டு கலந்துரையாடல்களை’ நடத்தி, அத்தகைய முன்னணிக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளன.
2015 ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்குக் கொண்டு வர பிரஜைகள் சக்தி, ஜே.வி.பி மற்றும் போலி-இடது பிரிவினரும் சேவை செய்து, ‘நல்லாட்சியை’ உருவாக்கி ஜனநாயகத்தை மீண்டும் ஸ்தாபிப்பதாகவும், மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழிப்போம் என்றும் சபதம் செய்தனர். சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே, ‘நல்லாட்சி’ என்ற சாக்குப்போக்கின் கீழ், வாஷிங்டனால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு அவர்கள் பங்களிப்பு செய்தனர் என்பதை சுட்டிக்காட்டியது. பொருளாதார நலன்களுக்காக பெய்ஜிங்கின் பக்கம் சாய்ந்திருந்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை தங்கள் பக்கம் திரும்ப வைப்பதற்காக அழுத்தம் கொடுத்து வந்த வாஷிங்டனுடனும் இறுதியில் புதுடில்லியுடனும் சேர்ந்து செய்த சதியின் விளைவே இந்த ஆட்சி மாற்றம் ஆகும்.
ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன உத்தரவுகளை அமுல்படுத்தி, அதற்கு எதிராக எழுந்த வர்க்கப் போராட்டங்களை கொடூரமாக நசுக்கியது. அதே நேரம், சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ மூலோபாய தாக்குதல் பிரச்சாரத்தில் இலங்கை பெருகிய முறையில் ஒருங்கிணைக்கப்பட்டது. அன்றைய விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) தலைவர்களும், நீங்கள் உட்பட தற்போதைய ஐ.ம.ச. தலைவர்களும் அந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்து, தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சர்வதேச நிதிய மூலதனத்தின் தாக்குதல்களை அமுல்படுத்தியதோடு அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை நடைமுறைப்படுத்துவதிலும் பங்குபற்றினர்.
இறுதியில், விக்கிரமசிங்கவின் ஐ.தே.க.வுக்கு எதிராக வளர்ந்து வந்த பாரிய மக்கள் எதிர்ப்பில் இருந்து தம்மை விலக்கிக் கொள்ளும் சூழ்ச்சியாக நீங்கள் உட்பட ஒரு குழு ஐ.தே.க.யில் இருந்து பிரிந்தீர்களே அன்றி, ஐ.தே.க.யின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் கருத்து வேறுபாடு காரணமாக அல்ல. 2019 ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபாய இராஜபக்ஷ உங்களைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்தது, உங்களுக்கும் எதிராக வளர்ந்த வெகுஜன வெறுப்பைப் பயன்படுத்திக் கொண்டே ஆகும்.
நவ சமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற தோல்வியுற்ற போலி இடது கட்சிகள் மற்றும் 2015இல் சிறிசேன-விக்கிரமசிங்கவை அதிகாரத்துக்கு கொண்டு வர உதவிய, மக்கள் மத்தியில் அதிருப்திக்குள்ளான பிரஜைகள் சக்தி போன்ற அமைப்புகளின் மூலம் உங்கள் ‘அனைத்து கட்சி உடன்பாட்டுக்கு’ செல்லுபடித்தன்மையை பெற முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனால்தான், அரை நூற்றாண்டுக்கும் மேலாக சர்வதேச சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் போராடி வரும் சோசலிச சமத்துவக் கட்சி பக்கம் நீங்கள் திரும்பியுள்ளீர்கள்.
உங்கள் அழைப்பை நிராகரித்து, அரசாங்கம் மற்றும் ஐ.ம.ச. போன்ற எதிர்க்கட்சிகளின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் சமூக சக்தியை அணிதிரட்டுவதன் மூலம், கடுமையான சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு அவர்களின் தீர்வை முன்வைக்க, முதலீட்டாளர்களின் இலாபத்தை விட மனித நலன்களை முன்னிறுத்தி செயல்படும் வேலைத் திட்டத்தை தொழிலாள வர்க்கத்திற்கு முன்வைக்க சோசலிச சமத்துவக் கட்சி போராடுகின்றது.
ஏப்ரல் 7 அன்று சோசலிச சமத்துவக் கட்சி அறிக்கையில் கூறியதாவது:
“முதலாளித்துவவாதிகள் தங்களது தேசிய அரசுகள் மற்றும் தனியார் சொத்துக்களுக்குள் சுகபோகத்தை அனுபவிப்பதன் பேரில், தொழிலாள வர்க்கம் அதன் வயிற்றை இறுக்கிக் கட்டிக்கொள்ளக் கூடாது என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. மாறாக சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு அதன் சொந்த வர்க்கத் தீர்வை முன்வைக்க வேண்டும்.”
அந்த தொழிலாள வர்க்கத் தீர்வின் ஒரு பகுதியாக, வங்கிகள், பெருநிறுவனங்கள், பொது வாழ்க்கைக்கு இன்றியமையாத அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஏனைய வளங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்காக, வங்கிகள், பெரும் நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய பிரதான பொருளாதார மையங்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி கூறுகிறது.
‘தொழிலாள வர்க்கம், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களின் உறுதியான போராட்டத்தின் மூலம் மட்டுமே அடையக்கூடிய இந்த இன்றியமையாத ஜனநாயக அரசியல் மாற்றங்களின் நோக்கம், சோசலிச வழிகளில் பொருளாதாரத்தின் அடிப்படை மறுசீரமைப்பை முன்னெடுப்பதே ஆகும்’ என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.
தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசிய ஐக்கியம் இந்த வேலைத்திட்டத்திற்காக போராடுவதற்கு இன்றியமையாத காரணியாகும். ஜனாதிபதி இராஜபக்ஷவிற்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிரான மக்கள் எழுச்சியில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஏப்ரல் 28 மற்றும் மே 06 பொது வேலைநிறுத்தங்களில் பங்கேற்று, 1948 இல் பெயரளவு சுதந்திரத்தில் இருந்தே தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக நீங்கள் உட்பட முதலாளித்துவ ஆட்சியாளர்களால் ஊக்குவிக்கப்பட்ட இனவாத வேறுபாடுகளை தூக்கியெறிந்ததன் மூலம் தங்கள் மகத்தான சமூக சக்தியை வெளிப்படுத்தினர்.
இந்த சமூக அதிகாரத்திற்கு பயப்படும் ஐ.ம.ச. உட்பட முதலாளித்துவ ஆளும் வர்க்கம் மீண்டும் இன வேறுபாடுகளை முன்னுக்கு கொண்டு வர முயற்சிக்கும். 1948இல் தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை இல்லாதொழித்த கொழும்பின் ஆட்சியாளர்கள் 1956 ஆம் ஆண்டு சிங்களத்தை அரச கரும மொழியாக்கி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் எதிரான இந்த பாகுபாட்டை விரிவுபடுத்தினர். 1972 ஆம் ஆண்டு பௌத்தத்தை அரச மதமாக ஆக்கிய இந்த ஆட்சியாளர்கள் இனவாதத்தை பிரதானமாக தூக்கிப் பிடித்து 1983இல் அதனை ஒரு இனவாத யுத்தமாக ஆரம்பித்தனர். பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த 26 ஆண்டுகளாக நடந்த கொடூரப் போரின் ரத்தத்தில் நீங்கள் உட்பட ஐ.ம.ச. தலைவர்களின் கரங்கள் நனைந்திருக்கின்றன.
அதுமட்டுமன்றி, 1988-89இல் 60,000க்கும் மேற்பட்ட கிராமப்புற இளைஞர்களைக் கொன்ற உங்கள் தந்தை ஜனாதிபதி ஆர். பிரேமதாச தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கம் நடத்திய படுகொலையின் இரத்தக்களரியில் அந்த அரசாங்கத்தில் இருந்த ஐ.ம.ச. தலைவர்களின் கைகள் நனைந்துள்ளன.
தொழிலாள வர்க்கத்தின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும், மற்றும் 1968 இல் ஸ்தாபிக்கப்பட்ட அதன் முன்னோடி அமைப்பான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் மட்டுமே, இனவாத யுத்தத்துக்கும் கிராமப்புற இளைஞர்களின் படுகொலைக்கும் எதிராக ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க நிலைப்பாட்டில் நின்று போராடியது.
54 வருட கால வரலாற்றில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், சோசலிச சமத்துவக் கட்சியும் இலங்கையின் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் இனவாத அரசியலுக்கு எதிராக சிங்களம் மற்றும் தமிழ் பேசும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தப் போராடியுள்ளன. போர் தொடங்கிய பின், ‘இனவாதப் போரை நிறுத்து!’, ‘வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இலங்கைப் இராணுவத்தை வெளியேற்று!’ என்ற கோஷங்களின் கீழ் பிரச்சாரம் செய்து, உலக சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசு என்ற வடிவத்தில் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவரும் தொலைநோக்குப் பார்வையின் கீழ், சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை அணிதிரட்ட சோசலிச சமத்துவக் கட்சியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் போராடின.
கோவிட்-19 தொற்றுநோய் வேகமாகப் பரவிக்கொண்டிருந்தபோது, முதலாளிகளின் இலாப நலன்களுக்காகத் தொழிலாளர்களின் உயிரைக் பொருட்படுத்தாமல் வேலை செய்ய வைத்து, அரசாங்கத்துடன் வட்டமேசை கலந்துரையாடல்களில வலம் வந்து, இராஜபக்ஷ அரசின் கொலைகாரக் கொள்கையை நீங்கள் ஆதரித்தீர்கள். சோசலிச சமத்துவக் கட்சி அந்தக் கொள்கைக்கு எதிராக, முழு சுகாதாரப் பாதுகாப்பின் கீழ் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை மட்டுமே பராமரிக்க வேண்டும் என்றும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் வரை அத்தியாவசியமற்ற தொழில்கள், நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை மூடி வைக்க வேண்டும் என்றும் -ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தேவையான அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக வழங்குவதன் மூலம் ஆன்லைன் கல்வியை பராமரிக்க வேண்டும் என்றும்- தொற்றுநோயை ஒழிப்பதற்கான சர்வதேச மூலோபாயத்தின் அடிப்படையில் கோரியது.
ஐ.ம.ச., அதன் ‘சர்வக் கட்சி கலந்துரையாடல்களுக்கு’ சோசலிச சமத்துவக் கட்சியை அழைப்பதன் மூலம், சோசலிச சமத்துவக் கட்சியின் இந்த நற்பெயரை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றது.
உங்களின் அழைப்பை மீண்டும் அவமதிப்புடன் நிராகரிக்கும் சோசலிச சமத்துவக் கட்சி, இலங்கையின் மக்கள் எழுச்சியில் அதற்கு தலைமைத்துவத்தையும் சர்வதேச சோசலிசப் பார்வையையும் வழங்கக்கூடிய வெகுஜனப் புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்ப போராடுகிறது. இங்கு, சோசலிச சமத்துவக் கட்சியானது ஏகாதிபத்திய யுத்தம், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் சமூக அவலத்திற்கு முடிவுகட்டக்கூடிய ஒரே சமூக சக்தியான, இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தையே, தனது சமூக அடித்தளத்தளமாக,பார்க்கிறது.
இப்படிக்கு,
தீபால் ஜெயசேகர,
பொதுச் செயலாளர்,
சோசலிச சமத்துவக் கட்சி
மேலும் படிக்க
- இலங்கை: "மக்கள் போராட்டத்தின் செயல் திட்டம்" பற்றிய கலந்துரையாடல்: தொழிலாளர்-ஒடுக்கப்பட்ட மக்களை முதலாளித்துவ அரசோடு கட்டிவைக்கும் வஞ்சகப் பொறி
- சர்வகட்சி ஆட்சியை நிராகரி! சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கை வேண்டாம்! தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டை கட்டியெழுப்ப போராடு!
- இலங்கையில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் எதிர்கொள்ளும் தீர்க்கமான அரசியல் பிரச்சினைகள்
- ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்காக!
