முன்னோக்கு

அதிகரித்து வரும் விலைகள் அமெரிக்கத் தொழிலாளர்களை விளிம்புக்குத் தள்ளுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உத்தியோகபூர்வ பணவீக்க விகிதம் 9.1 சதவீதத்தை எட்டிய அதேவேளையில் சம்பள உயர்வுகளோ தொடர்ந்து அந்த மட்டத்தை விட வெகு குறைவாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க தொழிலாளர்களின் கூலிகளின் நுகர்வு சக்தி கடந்த மாதம் மற்றொரு கூர்மையான வீழ்ச்சியை சந்தித்தது.

அமெரிக்கத் தொழிலாளர் புள்ளிவிபர ஆணையத்தின் விபரங்கள்படி, ஜூன் 2021 மற்றும் ஜூன் 2022 க்கு இடையில் நிஜமான சம்பளம் 3.1 சதவீதம் சரிந்தது. ஜூன் மாதத்தில் மட்டும், நிஜமான சராசரி வாராந்திர வருவாய்கள் 1 சதவீதம் குறைந்தன. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் சமீபத்திய புள்ளிவிவரங்கள், நிஜமான கூலிகளின் இந்த வீழ்ச்சியை 4.4 சதவீதமாகக் குறிப்பிட்டன.

தொழிலாள வர்க்கம் மீதான பணவீக்கத்தின் இந்த பேரழிவுகரமான தாக்கம், பெடரலின் குறைந்தபட்சக் கூலியின் நுகர்வு சக்தியில் ஏற்பட்டுள்ள சரிவால் எடுத்துக் காட்டப்படுகிறது. 2009 இல் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 7.25 டாலரில் முடங்கி உள்ள பெடரலின் குறைந்தபட்ச கூலி 66 ஆண்டுகளில் இல்லாத அதன் மிகவும் குறைந்த மதிப்பில் நிற்கிறது. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களால் ஒரே மாதிரியாக அமலாக்கப்பட்ட, குறைந்தபட்ச கூலி மீதான இந்த 13 ஆண்டு கால முடக்கம், 1938 இல் ரூஸ்வெல்ட் நிர்வாகத்தின் போது அது கொண்டு வரப்பட்டதற்குப் பிந்தைய, கூலி உயர்த்தப்படாத ஒரு நீண்ட கால கட்டமாகும்.

ஒப்பிட்டுப் பார்த்தால், தற்போதைய டாலர்களில் குறைந்தபட்சக் கூலியின் நிஜமான மதிப்பு 1968 இல் 12.12 டாலராகும்.

பணவீக்கத்தின் அதிகரிப்பானது, வங்கிகள் மற்றும் நிதிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ட்ரில்லியன் கணக்கான டாலர் பாரிய பிணையெடுப்பு உட்பட, இந்தப் பெருந்தொற்றுக்கு ஆளும் வர்க்கத்தின் குற்றகரமான மற்றும் திறமையற்ற விடையிறுப்புக்கு தொழிலாளர்களை விலைக் கொடுக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு வர்க்கக் கொள்கையின் பாகமாக உள்ளது. அதே நேரத்தில், மருத்துவக் கவனிப்பு மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் நிதி பஞ்சத்தில் விடப்பட்டு வருகின்ற நிலையில், அரசாங்கமோ போர் எந்திரத்திற்கு பாரிய தொகைகளை வாரியிறைத்துள்ளது. ஜனநாயகக் கட்சி பைடென் நிர்வாகத்தின் கீழ் இராணுவச் செலவுகள் இப்போது உச்சபட்ச அளவில் உள்ளது.

இதன் விளைவாக, தொழிலாளர்கள் அதிகமாகப் பணம் செலுத்தி வரும் அதேவேளையில் நுகர்வு சரிந்து வருகிறது. சான்றாக, எரிவாயு விலைகள் 60 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், எரிவாயுக்காக செலவிடப்படும் மொத்த டாலர் தொகை 50 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது, தொழிலாளர்கள் பயணத்தையும் போக்குவரத்தையும் குறைக்க நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள் என்பதே இதன் அர்த்தமாகும்.

தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் சீரழிக்கப்பட்டு வருகின்ற அதேவேளையில், உலகில் பில்லியனர்களின் செல்வ வளமோ பெருமளவில் அதிகரித்துள்ளது. உலகின் 10 மிகவும் பணக்காரப் பில்லியனர்கள் அவர்களின் சொத்துக்களை 700 பில்லியன் டாலர்களில் இருந்து 1.5 ட்ரில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக்கி உள்ளனர். இதற்கிடையில், மற்றொரு 160 மில்லியன் பேர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர், இந்த எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும்.

கூலிகள் மீதான பேரழிவுகரமான தாக்குதலுக்கு எதிராகத் திருப்பிப் போராடுவதற்காக தொழிலாளர்கள் தொடங்கிய வேலைநிறுத்தங்களின் பெருகி வரும் அலையை ஒடுக்க உதவுவதற்காக, பைடென் நிர்வாகம் தொழிற்சங்கங்களை நோக்கி திரும்பி உள்ளது. வரலாற்றிலேயே தனது நிர்வாகம் தான் மிகவும் 'தொழிற்சங்கம் சார்ந்த' நிர்வாகம் என்று குறிப்பிடும் பைடென், தொழிலாளர் போராட்டங்களின் ஒழுங்கமைப்பைச் சீர்குலைக்கவும் மற்றும் காட்டிக் கொடுக்கவும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை ஒரு முக்கிய கருவியாகப் பார்க்கிறார்.

'கூலி விலை சுழற்சி' (wage price spiral) குறித்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் என்ன கூறினாலும், சம்பள உயர்வுகள் பணவீக்க விகிதத்தை விட சராசரியாக மிகக் குறைவாகவே உள்ளன. மார்ச் மாதம் நெடுகிலும், தொழிற்சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வுகள் ஆண்டுக்கு ஆண்டு 3.5 சதவிகிதம் அதிகரித்தது, இது உத்தியோகபூர்வ பணவீக்க விகிதத்தில் பாதிக்கும் குறைவாகும். இதைத் தொழிற்சங்கத்தில் இல்லாத தொழிலாளர்களின் 4.9 சதவீத சம்பள உயர்வுடன் ஒப்பிட்டால், அது தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை வெட்டுவதில் தொழிற்சங்கங்கள் வகிக்கும் பாத்திரத்தை எடுத்துக் காட்டுகிறது.

இந்தக் காலக்கட்டத்தில், தொழிற்சங்கங்கள் பல தொடர்ச்சியான முக்கிய வேலைநிறுத்தங்களை காட்டிக் கொடுத்தன, வெறும் ஒரு சிலவற்றைப் பெயரிட்டுக் கூறுவதானால், வொல்வோ ட்ரக்ஸ், ஜோன் டீர், கெல்லாக்ஸ் மற்றும் நாபிஸ்கோ ஆகியவை உள்ளடங்கும். கூலி உயர்வுகள் சராசரியாக 2-4 சதவீத வரம்பில் இருந்தன.

ஜனாதிபதி அவசர குழுவைக் கூட்டி இரயில்வே தொழிலாளர்களின் ஒரு வேலைநிறுத்தத்தை தடுக்க கடந்த வாரம் பைடென் நிர்வாகம் தலையீடு செய்ததைத் தொழிற்சங்கங்கள் ஆதரித்ததில், தொழிற்சங்கங்கள் வகிக்கும் பாத்திரம் மீண்டும் கூர்மையாக அம்பலமானது. “பூமியின் நரகம்' என்று சிலர் விவரிக்கும் நிலைமைகளை முகங்கொடுத்து வரும் தொழிலாளர்கள், முன்னதாக 99.5 சதவீத வித்தியாசத்தில் வேலைநிறுத்தத்தை அங்கீகரித்து வாக்களித்தனர்.

சமீபத்திய நாட்களில், ஐக்கிய வாகனத் துறை தொழிலாளர்கள் சங்கம் மிச்சிகன் ஈவர்ட்ஸில் உள்ள வாகன உற்பத்தி நிறுவனமான வெட்ராவில் நடந்த போராட்டங்களை முடக்கி உள்ளதுடன், ஜிஎம் சப்சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் குறைந்தக் கூலி ஒப்பந்த தொழிலாளர்கள் மீது ஒரு விற்றுத் தள்ளப்பட்ட உடன்படிக்கையைத் திணித்தது.

விலை உயர்வுகளும், எரிபொருள், உணவு மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளின் பற்றாக்குறையும் உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடிப்பதற்கு வழி வகுத்துள்ளன. இலங்கையில் தொழிலாளர்களின் பாரிய எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள், ஜனாதிபதி கோத்தபயவை இராஜினாமா செய்ய நிர்பந்தித்ததுடன், அந்நாட்டை விட்டே அவர் தப்பி ஓடினார். பிரிட்டனில், கடந்த மாதம் இரயில்வே தொழிலாளர்கள் பல தொடர்ச்சியான தேசிய வேலைநிறுத்தங்களை நடத்தினர். ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிலாளர்களின் கோபத்தை வெறுமனே சிதறடிக்கும் நோக்கில் தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டங்களை வெறும் எதிர்ப்பு நடவடிக்கைகளாக மட்டுப்படுத்த முயன்றுள்ளன.

தொழிற்சங்கங்கள் கூலிகளை ஒடுக்குவது அதிகரித்த செலவுகளைத் தொழிலாளர்களின் தோள்களில் சுமத்துவதுடன் கை கோர்த்துச் செல்கிறது. வாடகை, மருத்துவக் காப்பீட்டுத் தவணைகள், மருந்துச் செலவுகள், மாணவர் கடன்கள், குழந்தைக் கவனிப்பு ஆகியவை அதிகரித்ததால் கடந்த தசாப்தத்தில் குடும்பங்கள் எவ்வாறு 'வறண்டு போயின' என்பதை நியூ யோர்க் டைம்ஸ் ஓர் அறிக்கையில் விவரித்தது. டைம்ஸ் கூற்றுப்படி, “முதலாளிகள் சார்ந்த மருத்துவக் காப்பீட்டுக்குக் குடும்பத்தின் மாத தொகை 2011 மற்றும் 2021 க்கு இடையில் 47 சதவீதம் அதிகரித்தது, சம்பளப் பிடித்தங்களும் கைச் செலவுகளும் ஏறக்குறைய 70 சதவீதம் உயர்ந்தன. மெடிக்கேர் D பிரிவின் பிராண்ட் மருந்துகளுக்கான சராசரி விலை 2009 மற்றும் 2018 க்கு இடையே 236 சதவீதம் அதிகரித்தது. 1980 மற்றும் 2018 க்கு இடையே, இளங்கலைப் பட்டக் கல்விக்கான சராசரி செலவு 169 சதவீதம் அதிகரித்தது.”

வர்க்கப் போராட்டத்தைக் கூடுதலாக பலவீனப்படுத்தும் வகையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வேலைவாய்ப்பின்மையை அதிகரிக்கும் வகையில் வட்டி விகிதங்களைக் கூர்மையாக அதிகரித்து வருகிறது. ஜூன் மாதம் 0.75 சதவீத வட்டி விகித உயர்வைத் தொடர்ந்து, இந்த மாத இறுதியில் பெடரல் ஆளுநர்கள் ஒன்று கூடும் போது முக்கிய பெடரல் வட்டி விகிதத்தில் 0.75 இல் இருந்து 1 சதவீதம் வரை மற்றொரு அதிகரிப்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பணவீக்க நெருக்கடியானது, பல ஆண்டு கால வங்கி பிணையெடுப்புகளாலும், நிதிய தன்னலக்குழுவை வளப்படுத்தும் நோக்கில் பணம் அச்சடித்ததாலும் தூண்டப்பட்டது என்கின்ற நிலையில், இந்த ஆளும் வர்க்கம் இன்னும் குறைந்த கூலிகளை ஏற்குமாறு தொழிலாளர்களை நிர்பந்திப்பதற்கான ஒரு வழிவையாக மில்லியன் கணக்கான தொழிலாளர்களை வேலைவாய்ப்பின்மைக்கு அனுப்புவதன் மூலம், அது உருவாக்கி உள்ள இந்த நெருக்கடியைத் தீர்க்க முயல்கிறது.

வட்டி விகித உயர்வுகளால் அடமானக் கடனின் வட்டி விகிதச் செலவுகள் உயரும் என்பதோடு, கடன் அட்டைகள், மாணவர் கடன் மற்றும் கார் கடன்களில் அதிக வட்டி விகிதங்களை அர்த்தப்படுத்தும். 30 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்தில் மிகவும் கூர்மையான இந்த வட்டி விகித அதிகரிப்பின் விளைவாக, ஒரு மந்தநிலை ஏற்படக் கூடிய சாத்தியக்கூறு பார்க்கப்படுகிறது, இதனால் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் அவர்களின் ஒரே வாழ்வாதாரமான வேலை இழப்புகளை முகங்கொடுக்கிறார்கள்.

நிதிய தன்னலக்குழுவின் கொள்கையை எதிர்க்க, தொழிலாள வர்க்கம் அதன் சமூக நலன்களைப் பாதுகாப்பதற்கான உறுதியான போராட்டத்திற்குக் குறைவற்ற ஒரு போராட்டத்தைத் தொடுக்க வேண்டும். தற்போதைய நெருக்கடிக்குத் தொழிலாள வர்க்கம் பொறுப்பல்ல, அதற்காக அது பணம் செலுத்தக் கூடாது என்பதே அடிப்படை கோட்பாடாக இருக்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு அவர்களின் போராட்டங்களை நடத்த, பெருநிறுவனம் சார்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளில் இருந்து சுயாதீனமான அமைப்புகள் அவசியமாகும். உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிகளின் உதவியோடு, தொழிலாளர்கள் அவர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களைப் பாதுகாப்பதற்காகச் சாமானிய தொழிலாளர் குழுக்களைக் கட்டமைக்கத் தொடங்கி உள்ளனர். சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியைப் பரந்தளவில் விரிவாக்குவது அவசியமாகும்.

இத்தகைய குழுக்கள், தொழிற்சங்கத்தில் இணைந்துள்ள மற்றும் தொழிற்சங்கத்தில் இணையாத தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மக்களின் போராடி வரும் மற்ற பிரிவுகளுடன், தொழிலாளர்களின் பரந்த பிரிவுகளை ஐக்கியப்படுத்தி, குறிப்பிடத்தக்களவில் நிஜமான கூலி உயர்வுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்புக்கு ஏற்பட எல்லா கூலிகள் மற்றும் சலுகைகளைப் பட்டியலிடுவது அத்துடன் மருத்துவக் கவனிப்பு மற்றும் ஓய்வூதியங்களுக்கு முழுமையாக நிதி ஒதுக்கீடுகள் ஆகியவற்றுக்காக போராட வேண்டும். கோவிட்-19 இல் இருந்து பாதுகாப்பு மற்றும் நிலைமைகள் பாதுகாப்பின்றி இருந்தால் உற்பத்தியை நிறுத்துவதற்கான உரிமை உட்பட முடிவில்லா கூடுதல் நேர வேலைகள் மற்றும் பாதுகாப்பற்ற நிலைமைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு தொழிலாளர்கள் கோர வேண்டும்.

இத்தகைய கோரிக்கைகளை நிறைவேற்ற, உலகின் பில்லியனர்கள் முறைகேடாக சம்பாதித்த செல்வ வளத்தைப் பறிமுதல் செய்து சமூக முன்னுரிமைகளை அடிப்படையிலேயே மாற்றி அமைப்பது அவசியமாகும். முதலாளித்துவ போர் எந்திரம் கலைக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடுகள் கல்வி, பட்டினி ஒழிப்பு, வீடற்ற நிலைமை மற்றும் காலநிலை மாற்றம் முன்நிறுத்தும் பயங்கர அச்சுறுத்தல் போன்ற அத்தியாவசியமான சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தப்பட வேண்டும்.

வங்கிகள் மற்றும் பிற மிகப் பெரிய தொழில்துறைகள், எண்ணெய் நிறுவனங்கள், மருத்துவத் துறை பெருநிறுவனங்கள், விமான நிறுவனங்கள், சேவை நிறுவனங்கள் மற்றும் அடிப்படைத் தொழில்துறைகள் என இவற்றை, தனியார் இலாபத்திற்காக அல்ல ஒட்டுமொத்தமாக சமூகத்தின் நலன்களுக்காகத் தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் பொதுவுடைமையின் கீழ் நிறுத்த வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக, இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டத்திற்கு, தொழிலாள வர்க்கத்தில் ஒரு சர்வதேச சோசலிச தலைமையை, அதாவது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவைக் கட்டமைப்பது அவசியமாகும்.

Loading