கெய்ரோவின் கசாப்பு கடைக்காரனுடன் "காலநிலை பற்றிய உரையாடல்" ஜேர்மன் அரசாங்கத்தின் மனித உரிமை பிரச்சாரத்தை அம்பலப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மன் அரசாங்கத்தின் மனித உரிமைகள் பிரச்சாரம் மற்றும் காலநிலைக் கொள்கையை அம்பலப்படுத்தும் நிகழ்வாக ஒன்று இருக்குமானால், அது இந்த வார தொடக்கத்தில் பீட்டர்ஸ்பேர்க் காலநிலை பற்றிய கலந்துரையாடலாகும். ஜேர்மன் வெளியுறவு அமைச்சகத்தில் கூட்டத்தின் நட்சத்திர விருந்தினர் எகிப்திய சர்வாதிகாரி அப்தெல் பத்தா அல்-சிசி இனை தவிர வேறு யாருமல்ல.

ஜேர்மன் சான்சிலர் ஓலாப் ஷோல்ஸ் (SPD) மற்றும் வெளியுறவு மந்திரி அன்னலெனா பெயர்பொக் (பசுமைக்கட்சி) ஆகியோர் எகிப்தின் ஜனாதிபதி அப்தெல் பத்தா அல்-சிசியும் வெளியுறவு மந்திரி சமே ஷோக்ரி ஆகியோர் (AP Photo/Markus Schreiber)

வளங்கள் நிறைந்த நாட்டிற்கு எதிரான நேட்டோ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ஒரு 'பெரும் கொலைகாரன்' என்றும் ரஷ்யாவை 'பயங்கரவாத அரசு' என்றும் அரசாங்கத் தலைவர்களும், குறிப்பாக பசுமைவாதிகள் குறிப்பிடுகின்றனர். அந்த குணாதிசயப்படுத்தல் ஒரு சர்வதேச அரச தலைவருக்கு பொருந்தும் என்றால், அது கெய்ரோவின் கசாப்புக்கடைக்காரருக்கும் பொருந்தும்.

ஜூலை 3, 2013 இல் மேற்கத்திய ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அல்-சிசி, இஸ்லாமிய ஜனாதிபதி முகமது முர்சிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புகளைத் தொடர்ந்து, கொடூரமான பயங்கரவாத ஆட்சிக்கு தலைமை தாங்குகிறார். அவரது ஆட்சி இரத்தக்களரியுடன் தொடங்கியது.

ஏறக்குறைய சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்ட் 14, 2013 அன்று, அவரது தலைமையில் இராணுவம் மற்றும் பொலிஸ் பிரிவுகள் எகிப்திய தலைநகரில் ஆட்சிக்கவிழ்ப்பு எதிர்ப்பாளர்களின் இரண்டு எதிர்ப்பு முகாம்களை தாக்கி, பல பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,000 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றனர். மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதை 'எகிப்தின் நவீன வரலாற்றில் சட்டவிரோதமான படுகொலைகளின் மோசமான நிகழ்வான படுகொலை' என்று குறிப்பிட்டது.

அதன் பிறகு, நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான அரசியல் கைதிகள் நாட்டின் சித்திரவதைச் சிறைகளில் காணாமல் போயுள்ளனர். போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் சட்டத்தால் தடை செய்யப்பட்டுள்ளன. ஆட்சியை விமர்சிக்கும் கட்சிகள், அமைப்புகள் மற்றும் சுதந்திர ஊடகங்களும் நசுக்கப்படுகின்றன.

அல்-சிசியின் கீழ் அதிகரித்து வரும் மிருகத்தனத்துடன் மரண தண்டனையும் பயன்படுத்தப்படுகிறது. 2017 இல் குறைந்தது 402 பேருக்கும், 2018 இல் 717 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, 2,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு எகிப்தின் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்ப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மரணதண்டனைகள வழக்கமாக தூக்கிலிடப்படுவதன் மூலமே அதிகமாக நிறைவேற்றப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டில், மரணதண்டனைகளின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக மூன்று மடங்கால் 107 ஆக அதிகரித்தது.

அல்-சிசியின் பயங்கரவாதத்தை ஜேர்மன் அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது. கடந்த மாதம் தான், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா இயக்குனர் ஜோ ஸ்டோர்க், ஜேர்மனி மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் எகிப்து தொடர்பான தங்கள் நிலைப்பாட்டை மாற்றுமாறு அழைப்பு விடுத்தார். 'எகிப்தில் மனித உரிமைகள் நிலைமை பல தசாப்தங்களில் இருந்ததை விட தற்போது மோசமாக உள்ளது' என்று அவர் எச்சரித்தார். “எந்தவிதமான விமர்சனத்தை வெளிப்படுத்தலும் ஒருவரை சிறைக்குள் தள்ளுகிறது. குறிப்பாக அரசியல் கைதிகள் சித்திரவதைக்குள்ளாகுவது பரவலாக உள்ளது. ஆனால் சாதாரண மக்களும் காவல்துறையின் கைகளில் சென்றுமுடிவடைகின்றனர்.

ஆனால் ஜேர்மன் அரசாங்கத்தின் மனித உரிமை பாசாங்குக்காரர்கள் மத்தியில், அல்-சிசியின் பயங்கரவாதத்திற்கு ஒரு சிறிய எதிர்ப்புக்கூட வெளிப்படுத்தப்படவில்லை. மாறாக, அதிபர் ஓலாப் ஷோல்ஸ் (சமூக ஜனநாயகக் கட்சி) மற்றும் வெளியுறவு மந்திரி அன்னலெனா பெயர்பொக் (கிரீன்ஸ்) ஆகியோர் பேர்லினில் சர்வாதிகாரிக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அவருக்குப் பாராட்டு மழை பொழிந்தனர். ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், ஷோல்ஸ் எகிப்தின் பேரழிவுகரமான மனித உரிமை நிலைமை பற்றி ஒரு வார்த்தையில் கூட விமர்சிக்கவில்லை. மாறாக, அவர் சர்வாதிகாரிக்கு ஒரு மேடையை வழங்கினார்.

'மனித உரிமைகள் சம்பந்தமாக எகிப்தின் பல்வேறு முன்னேற்றங்கள் பற்றி அதிபருடன் பேசியதாக' அல்-சிசி பெருமிதம் கொண்டார். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு மதிப்புடனான வாழ்க்கையை வாழ்வதற்கு உரிமை உள்ளதாக தான் நம்புவதாகவும், அரசாங்கம் இந்த உரிமையைப் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளது.' இதற்காக, 'தேசிய மனித உரிமைகள் மூலோபாயம் உருவாக்கப்பட்டுள்ளது' என்று அவர் கூறினார்.

எந்த ஏகாதிபத்திய நலன்கள் அல்-சிசியுடன் கொலைகார கூட்டணிக்கு பின்னால் நிற்கின்றன என்பதை ஷோல்ஸ் தனது சொந்த கருத்துக்களில் தெளிவுபடுத்தினார். ஒருபுறம், இது பொருளாதார மற்றும் எரிசக்தி கொள்கை இலக்குகளை பற்றியது. 'எகிப்து தனது மிகப்பெரிய இரயில் பாதை உள்கட்டமைப்புத் திட்டத்தை ஒரு ஜேர்மன் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது' என்று அவர் மகிழ்ச்சியடைவதாக ஷோல்ஸ் கூறினார். இது 'நம்முடைய பொருளாதார உறவுகள் உண்மையில் எவ்வளவு நெருக்கமானவை' என்பதைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

சீமென்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது நிறுவனத்தின் 175 ஆண்டு வரலாற்றில் மிகப்பெரிய ஒப்பந்தமாகும். அதிவேக புகையிரதங்களுக்கான 2,000 கிலோமீட்டர் போக்குவரத்து வலையமைப்பை கட்டுவதற்கு 8.1 பில்லியன் யூரோ மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக மே மாத இறுதியில் நிறுவனம் தெரிவித்தது. இந்நிறுவனம் 41 அதிவேக இரயில்கள், 94 பிராந்திய இரயில்கள் மற்றும் 41 பண்ட இரயில் இயந்திரங்களை எகிப்துக்கு வழங்கும். கூடுதலாக, ஒப்பந்தத்தில் எட்டு இயக்கும் மற்றும் பண்ட இரயில் நிலையங்களின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பின் பராமரிப்பு ஆகியவை அடங்கும்.

ஜேர்மன் பொருளாதாரத் தடைகள் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான போர்த் தாக்குதலால் தூண்டப்பட்ட எரிவாயு நெருக்கடியுடன், எகிப்திய எரிசக்திக்கான பசியும் அதிகரித்து வருகிறது. 'நாங்கள் மிகவும் நெருக்கமாக ஒத்துழைக்க ஒப்புக்கொண்டோம், குறிப்பாக ஹைட்ரஜன் துறையில்' என்று ஷோல்ஸ் மகிழ்ச்சியடைந்தார். ஜேர்மனி தனது 'பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு' தேவையான ஹைட்ரஜனின் 'மிகப் பெரிய பகுதியை' மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் என்றார். எகிப்து இந்தப் பகுதியில் 'பேராவலுடன்' முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பது 'நமது நல்லுறவுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும்” என்றார்.

பேர்லின் ஹைட்ரஜனைப் பற்றி மட்டும் கவலைப்படவில்லை. 'ஜேர்மனிக்கு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதன் மூலமோ அல்லது ஹைட்ரஜன், காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் துறையில் எரிசக்தி துறையில் ஜேர்மனியுடன் கூட்டுக்கு எகிப்து தயாராக உள்ளது' என்று அதிபர் ஷோல்ஸிடம் தான் உறுதிப்படுத்தியதாக அல்-சிசி கூறினார். எகிப்து, 'ஜேர்மனியுடனான கூட்டாண்மை மற்றும் வெளிப்படையான கலந்துரையாடலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது' என்று அவர் கூறினார்.

இந்த 'கலந்துரையாடலின்' கட்டமைப்பிற்குள், அல்-சிசி முன்னர் 2011ல் எகிப்திய புரட்சியால் வீழ்த்தப்பட்ட கொடுங்கோலன் ஹோஸ்னி முபாரக்கின் கீழ் செய்ததைப்போல் அப்பிராந்தியத்தில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஒரு உள்ளூர் ஆளுநரின் பாத்திரத்தை வகிக்கிறார். 'மத்திய கிழக்கு சமாதான முன்னெடுப்புகள் தொடர்பாக பாரம்பரியமாக நெருங்கிய ஒருங்கிணைப்பு...' இருந்தது என்று ஷோல்ஸ் செய்தியாளர் கூட்டத்தில் விளக்கினார். எகிப்து 'இந்த செயல்பாட்டில் ஒரு சிறந்த பங்கை' வகித்தது மற்றும் 'காசா பகுதியில் நிலைமையை ஸ்திரப்படுத்த உதவியது. அதற்காக அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எகிப்திய பக்கத்திலிருந்து காசாவை மூடுவதற்கும், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் போர்க் கொள்கையை ஆதரிப்பதற்கும் அல்-சிசியை ஷோல்ஸ் பாராட்டுகிறார்.

அல்-சிசியின் ஆட்சிக்கு பேர்லின் முற்றுமுழுதாக ஆயுதங்கள் வழங்கி எகிப்தில் மட்டுமல்ல, அப்பகுதி முழுவதிலும் உள்ள மக்களை ஒடுக்கும் அதன் செயல்பாட்டை சாதகமாக்கியது. மொத்தம் 4.34 பில்லியன் யூரோக்கள் ஏற்றுமதியுடன், 2021ல் ஜேர்மன் இராணுவ உபகரணங்களுக்கான மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக எகிப்து இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டு, ஜேர்மன் ஆயுத ஏற்றுமதி தரவரிசையில் எகிப்து இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, அல்-சிசி உடனான நெருங்கிய கூட்டணி பசுமைவாதிகளின் 'மதிப்பினால் உந்தப்படும் வெளியுறவுக் கொள்கை' என்று அழைக்கப்படுவதை அம்பலப்படுத்துகிறது. கடந்த ஆண்டு கூட்டாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, வெளியுறவுக் கொள்கை உறவுகள் மற்றும் ஆயுத ஏற்றுமதிகள் முற்றிலும் பொருளாதார அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படக்கூடாது, மாறாக மனித உரிமைகள் நிலைமையின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்ற கூற்றை பெயர்பொக் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார். ஒரு பசுமைக் கட்சி தேர்தல் சுவரொட்டி கூட, 'போர் மண்டலங்களுக்கு ஆயுதங்களும், தளபாடங்களும் இல்லை' என்று எழுதப்பட்டிருந்தது.

1998ல் மத்திய அரசின் ஒரு கூட்டாளியாக, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கொசோவோவில் முதல்முதலாக ஜேர்மன் போர்ப் பணியை ஏற்பாடு செய்த ஒரு கட்சி குரல் கொடுக்கும் அத்தகைய அறிக்கைகள் எதற்கும் மதிப்புடையவை அல்ல. ஆயினும்கூட, பசுமைவாதிகள் இப்போது ஆக்கிரோஷமாக உக்ரேனுக்கு மேலும் மேலும் கனரக ஆயுதங்களை வழங்குவதை ஆதரிப்பதையும், ரஷ்யாவுடன் தொடர்புபட்டதாக இல்லை என்றவுடன் அவர்களின் மனித உரிமை வார்த்தைஜாலங்களைக் கைவிடுவதும் சில இளம் வாக்காளர்கள் ஆச்சரியப்படுத்தியிருக்கலாம்.

காலநிலை மாற்றக் கொள்கைக்கும் இது பொருந்தும். ஐரோப்பாவின் பெரும் பகுதிகளில் கொடிய வெப்ப அலை மற்றும் உலகளவில் மோசமான காலநிலை பேரழிவு இருந்தபோதிலும், பீட்டர்ஸ்பேர்க் காலநிலை உரையாடலில் தனது தொடக்க உரையில், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் பெயர்பொக் ஒரு புதிய நடவடிக்கையையும் அறிவிக்கவில்லை. மாறாக, கூட்டத்திற்குத் தயாரிப்பதில் தனது 'எகிப்திய பங்காளிகளுடன்' தீவிர ஒத்துழைப்பை அவர் பாராட்டினார் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான போர்த் தாக்குதலுடன் தனது சொந்த வரையறுக்கப்பட்ட காலநிலை தொடர்பான இலக்குகளை கைவிட்டதை நியாயப்படுத்தினார்.

'ரஷ்யப் போரின் காரணமாக ஐரோப்பா மற்றும் ஜேர்மனியின் காலநிலை உறுதிமொழிகளில் இப்போது பின்வாங்குகிறதா என்று எங்களிடம் கேட்பவர்களின் கருத்துக்களை நான் கேட்கிறேன்' என்று அவர் இழிந்த முறையில் அறிவித்தார், 'நான் வெளிப்படையாகச் சொல்கிறேன்: நாங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். குறுகிய காலத்தில், ரஷ்ய எரிவாயு மற்றும் எண்ணெயை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக எங்களுக்கு விருப்பமற்ற முடிவுகளை எடுக்கவேண்டும். நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களை குறுகிய காலத்திற்கு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்” என்றார்.

பசுமைவாதிகள் தங்கள் சொந்த பிரச்சார வாக்குறுதிகளை ஆக்கிரோஷத்துடன் கால்களால் மிதித்து, அரசாங்கத்தில் மிகப்பெரிய போர்வெறியர்களாக செயல்பட்டு, மேலும் இரத்தக்களரி சர்வாதிகாரிகளுடன் ஒப்பந்தங்களை உருவாக்குவது அவர்கள் ஆதரவளிக்கும் சமூக அடுக்குகளின் பிற்போக்குத்தனமான வர்க்க நலன்களிலிருந்து உருவாகிறது. இந்த மேல் நடுத்தர வர்க்கங்களின் செல்வம், ஆக்கிரமிப்பு போர் மற்றும் பெரும் அதிகாரக் கொள்கைகளுடன் எவ்வளவு நேரடியாக இணைக்கப்பட்டிருக்கிறதோ, அந்த அளவுக்கு அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எதிர்ப்பைக் கண்டு அஞ்சுகிறார்கள்.

கடந்த வாரம் செய்தி நிறுவனம் Redaktionsnetzwerk Deutschland நடத்திய குழு விவாதத்தில், ஜேர்மனியில் 'மக்கள் எழுச்சிகள்' ஏற்படும் அபாயம் குறித்து பெயர்பொக் எச்சரித்தார். ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயுவை வழங்கும் Nord Stream 1 எரிவாயுக்குழாயிற்கான விசையாழியை வழங்குமாறு கனடாவை ஜேர்மனி ஏன் கோரியது என்று கேட்டதற்கு, 'எங்களுக்கு எரிவாயு விசையாழி கிடைக்கவில்லை என்றால், எங்களுக்கு இனி எரிவாயு கிடைக்காது, என்றார்.

ஜேர்மனியாகிய எங்களால் உக்ரேனுக்கு எந்த ஆதரவையும் வழங்க முடியாதிருக்கும், ஏனென்றால் நாங்கள் இங்கு மக்கள் எழுச்சிகள் தொடர்பாக கவனம் செலுத்திக்கொண்டு இருப்போம்” என்றார்.

இந்தப் பின்னணியில், பேர்லினில் அல்-சிசி இற்கான வரவேற்பும் ஒரு எச்சரிக்கையாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் போர், சமூகத் தாக்குதல்கள் மற்றும் கொரோனா வைரஸினால் அழிக்கப்படவிடுவதற்கான அதன் வெறுக்கத்தக்க கொள்கைகளுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை ஒடுக்க எகிப்திய இராணுவ சர்வாதிகாரத்தின் அதே மிருகத்தனமான முறைகளையே கையாளும்.

Loading