முன்னோக்கு

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி, மார்க்சிசத்தை குற்றமாக்குவதற்கு எதிராக அரசியலமைப்பு புகாரை பதிவு செய்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூன் 2 அன்று, ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) ஜேர்மன் இரகசிய சேவையின் கண்காணிப்பு மற்றும் அவதூறுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வ அரசியலமைப்பு புகாரை தாக்கல் செய்துள்ளது.

கிறிஸ்தோப் வாண்ட்ரேயர் மற்றும் உல்ரிச் ரிப்பேர்ட் ஆகியோர் நீதிமன்ற அறையில், ஜேர்மன் இரகசிய சேவைக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் [Photo: WSWS]

பேர்லின் நிர்வாக நீதிமன்றம், இரகசிய சேவையினரால் சோசலிச சமத்துவக் கட்சி கண்காணிக்கப்படுவது பொருத்தமானது என்று தீர்ப்பளித்ததை அடுத்து, சோசலிச சமத்துவக் கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது.

பேர்லின் நிர்வாக நீதிமன்றத்தின் தீர்ப்பு, பிஸ்மார்க்கின் சோசலிச எதிர்ப்புச் சட்டங்களையும், நாஜிகளின் சிந்தனையை குற்றப்படுத்துவதையும் எதிரொலிக்கும் ஒரு சர்வாதிகாரவாதத்தின் அடிப்படையில் வெளிப்படையாக மேற்கோள் காட்டப்பட்டு கட்டமைக்கப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சியின் முறையீடு பாரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அரசாங்கமும் நீதிமன்றங்களும் சோசலிச சமத்துவக் கட்சியை உதாரணமாக எடுத்துக்காட்ட விரும்புகின்றன. ஜேர்மன் அரசாங்கம் ரஷ்யாவிற்கு எதிராக நடத்தும் பினாமிப் போர், ஹிட்லருக்குப் பின்னர் மிக விரிவான மறுஆயுதமாக்கல் மற்றும் பணவீக்கம், ஊதியவெட்டு மற்றும் வெகுஜன பணிநீக்கங்கள் மூலம் தொழிலாளர்கள் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நிலையில், இந்த மூர்க்கமான வர்க்கக் கொள்கைக்கு எதிராக இந்த அல்லது அதன் பெயரால் அழைப்பதற்கு எதிராக பேசும் எவரையும் மௌனமாக்குவதே அதன் நோக்கமாகும்.

உயர்நீதிமன்றம் அரசு மற்றும் கீழ் நீதிமன்றத்தில் உள்ள தீர்ப்பை பின்பற்றினால், அது சர்வாதிகாரத்தை நோக்கிய படியாக அமையும். தொழிலாளர்களின் ஒவ்வொரு வேலைநிறுத்தமும், மறுஆயுதமாக்கலுக்கு எதிரான ஒவ்வொரு எதிர்ப்பும் மற்றும் தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான ஒவ்வொரு ஆர்ப்பாட்டமும் அரசியலமைப்பிற்கு எதிரானவை என்று தடை செய்யப்படலாம். சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிரான தீர்ப்பு, இடதுசாரி தினசரி Junge Welt இற்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பில் ஏற்கனவே அதே வார்த்தையுடன் பயன்படுத்தப்பட்டது.

எனவே ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் வலதுசாரி ஆபத்தை எதிர்கொள்ளவும் விரும்பும் அனைவருக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியலமைப்பு புகாரை ஆதரிக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். change.org இல் எங்கள் மனுவில் கையொப்பமிட்டு, உலக சோசலிச வலைத் தளத்தைத் தொடர்பு கொண்டு மற்றும் உங்கள் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடையே இந்த அறிக்கையை பகிரவும்.

சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகள்

ஜூன் 2018 இல் இரகசிய சேவை (Verfassungsschutz) அதன் வருடாந்த அறிக்கையில் சோசலிச சமத்துவக் கட்சியை முதன்முதலில் 'இடதுசாரி தீவிரவாத அமைப்பாக' பட்டியலிடப்பட்டது. இந்த வழியில் ஒரு கட்சியினை பெயர்குறிப்பிடுவது உளவுத்துறை அமைப்புகளின் கண்காணிப்புடன் கைகோர்த்து ஒரு அடிப்படையானது அதன் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாகும். இது ஒரு தடை செய்வதற்கான முன்னோடியாகும்.

எந்தவொரு நேரத்திலும் சோசலிச சமத்துவக் கட்சியின் மீது குற்றவியல் அல்லது வன்முறைச் செயல் அல்லது அத்தகைய செயல்களுக்கு அழைப்பு விடப்பட்டதற்காக குற்றம் சாட்டப்படவில்லை. உண்மையில், தேர்தல்களில் பங்கேற்பது மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துவது போன்ற சட்டரீதியான வழிமுறைகள் மூலம் பிரத்தியேகமாக சோசலிச கருத்துக்களுக்கு பெரும்பான்மையான மக்களை வெற்றிகொள்ளும் நோக்கத்தை கட்சி தொடர்கிறது என்பதை அரசாங்கமும் நீதிமன்றங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அதன் சோசலிச கருத்துக்களுக்காவும் மற்றும் அது இராணுவவாதத்தையும் தேசியவாதத்தையும் நிராகரித்ததன் அடிப்படையில் மட்டுமே நியாயப்படுத்தப்பட்டன.

கட்சியின் ஜனநாயக உரிமைகள் மீதான இந்த அடிப்படைத் தாக்குதல், அரசு அமைப்பில் உள்ள வலதுசாரி தீவிரவாத வலைப்பின்னல்களில் இருந்து வந்தது. இரகசிய சேவையின் அப்போதைய தலைவரான ஹென்ஸ்-கியோர்க் மாஸன் ஒரு வெளிப்படையான வலதுசாரி தீவிரவாதி ஆவார். அவர் சோசலிச சமத்துவக் கட்சி மீதான தாக்குதலைத் திட்டமிட்டது மட்டுமல்லாமல், சமூக ஜனநாயகக் கட்சியில் (SPD) உள்ள தீவிர இடதுசாரி சக்திகளைப் பற்றியும் திட்டினார். தீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சிக்கு (AfD) ஆலோசனை வழங்கியதுடன் மற்றும் அவர்கள் அகதிகளை வேட்டையாடுவதைப் பாதுகாத்தார்.

அரசு அமைப்பினுள் உள்ள வலதுசாரி தீவிரவாத பயங்கரவாத வலைப்பின்னல்களுக்கு உயர் அதிகாரிகள் பாதுகாப்பு அளிக்கும் அதே வேளையில், பாசிச AfD அனைத்து ஸ்தாபகக் கட்சிகளாலும் ஆதரிக்கப்படகின்றது. மேலும் இரகசிய சேவை வலதுசாரி நடவடிக்கைகளை எதிர்க்கும் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கிறது. ஜேர்மன் இராணுவவாதம் மீண்டும் திரும்புவதற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருப்பதாலும், தொழிலாளர்களின் பெருகும் எதிர்ப்புக்கு ஒரு சோசலிச முன்னோக்கை வழங்குவதாலும் சோசலிச சமத்துவக் கட்சி இந்த வலதுசாரி சதியின் தாக்குதல் இலக்காகியுள்ளது.

2014 இல், அரசாங்கம் 'ஜேர்மனியின் இராணுவக் கட்டுப்பாட்டின் முடிவை' அறிவித்து, உக்ரேனில் ரஷ்ய எதிர்ப்பு சதியை ஆதரித்தபோது, சோசலிச சமத்துவக் கட்சி ஜேர்மன் பெரும் சக்தி அரசியலின் இந்த மறுமலர்ச்சியை எதிர்த்ததுடன் மற்றும் பல்கலைக்கழகங்களில் நாஜி குற்றங்களை சிறுமைப்படுத்துவதற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தை நடத்தியது. இது ஜேர்மனிக்கு அப்பாலும் குறிப்பிடத்தக்க பிரதிபலிப்பைச் சந்தித்தது. ஜேர்மனியில் உள்ள முக்கிய ஊடகங்கள் 'மிகவும் பயனுள்ள ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு' (Frankfurter Allgemeine Zeitung பத்திரிகையின் வார்த்தைகளில்) எதிராக முன்னோடியில்லாத அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டன. இதைத் தொடர்ந்து 2018 இல் சோசலிச சமத்துவக் கட்சி இரகசிய சேவையின் வருடாந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டது.

சமீபத்திய நிகழ்வுகள் சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது மற்றும் வழக்கு உண்மையில் என்ன என்பதைக் காட்டுகிறது. ஜேர்மன் டாங்கிகள் மீண்டும் ரஷ்யாவிற்கு எதிராக உருள்கின்றன. உலகத்தில் மூன்றாவது பெரிய இராணுவ வரவு-செலவுத் திட்டத்துடன் இராணுவம் பலப்படுத்தப்பட்டுள்ளது. போருக்கான செலவு தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்பட வேண்டும், இதை எதிர்க்கும் எவரும் வாயடைக்க செய்யப்படவேண்டும் எனக் கூறப்படுகின்றது. இராணுவவாதத்தின் மீள் வருகையானது பரந்துபட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளுடன் பொருந்தாதுள்ளது.

அதனால்தான் அரசாங்கம் இரகசிய சேவையை முழுமையாக ஆதரித்துள்ளது. இரகசிய சேவையின் வருடாந்த அறிக்கையில் இணைக்கப்பட்டதற்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி புகார் அளித்தபோது, உள்துறை அமைச்சகம் 56 பக்க விளக்கத்துடன் பதிலளித்தது. இது சோசலிசக் கருத்துக்களுக்கு எதிரான ஆவேசமான தூற்றல் போன்றுள்ளதே தவிர சட்ட ஆவணம் அல்ல. இது AfD கட்சி தலைமையகத்தில் எழுதப்பட்டிருக்கலாம். அதில், புறநிலை வர்க்க முரண்பாடுகளைக் குறிக்கும், இராணுவம் மற்றும் இரகசிய சேவைகளை ஜனநாயகமற்றவை என்று விமர்சிக்கும் அல்லது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் அல்லது ட்ரொட்ஸ்கி பற்றி நேர்மறையாகக் குறிப்பிடும் அனைத்து அரசியலும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அரசாங்கம் அறிவிக்கிறது.

டிசம்பர் 13, 2021 அன்று, பேர்லின் நிர்வாக நீதிமன்றம் இந்த சர்வாதிகார வாதத்தை முழுமையாக ஆதரித்து, அதற்கு மேலும் சென்றது. மே 9, 2022 அன்று, உயர் நிர்வாக நீதிமன்றமும் இந்த தீர்ப்புக்கு எதிரான சோசலிச சமத்துவக் கட்சியின் மேல்முறையீட்டை நிராகரித்தது மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான சர்வாதிகார மற்றும் சர்வாதிகார தாக்குதல்களை உறுதி செய்தது. இந்த தீர்ப்பும் அதன் உறுதிப்பாடும் எந்த சட்ட அடிப்படையும் இல்லாததுடன் மற்றும் முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும்.

அரசாங்கமும் நீதிமன்றங்களும் எதை தடை செய்ய விரும்புகிறது

அரசாங்கமும் நீதிமன்றங்களும் தங்கள் போர்-சார்பு போக்கிற்கு பெருகும் எதிர்ப்பு, தொற்றுநோயின் போதான 'உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை' கொள்கைகள், பரவலான பணவீக்கம், பாரிய பணிநீக்கங்கள் மற்றும் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் காணப்படும் தாங்கிக்கொள்ள முடியாத நிலைமைகள் ஆகியவற்றிற்கு மிகவும் பதட்டமாக நடந்து கொள்கின்றன. பெரும்பான்மையானவர்கள் இந்தக் கொள்கைகளை நிராகரிக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்திருப்பதுடன், மேலும் அவர்கள் ஒரு சமூக வெடிப்புக்கு அஞ்சுகிறார்கள். எனவே எதேச்சாதிகார அரசின் அப்பட்டமான மரபுகளை நாடி மற்றும் அவர்கள் இந்த எதிர்ப்பை தடை செய்ய முடியும் என்று நம்புகின்றனர். இதற்கான போலி-சட்ட நியாயப்படுத்தலுக்காக ஜேர்மன் வரலாற்றின் மோசமான மரபுகளுக்கு திரும்புகிறது.

மேற்கொண்டு எதையும் கருத்திலெடுக்காமல், அரசாங்கமும் நீதிமன்றங்களும் பின்வரும் நிலைப்பாடுகள் அரசியலமைப்பிற்கு எதிரானவை என அறிவிக்கின்றன:

  • நீதிமன்றங்களின்படி, ஜேர்மனியில் கார்ல் மார்க்ஸ் அல்லது பிரெட்ரிக் ஏங்கெல்ஸை நேர்மறையாகக் குறிப்பிடும் எந்தக் கட்சியும் இருக்க முடியாது. ஏனெனில் சோசலிச சமத்துவக் கட்சி 'வரலாற்று பிரதிபலிப்பில் ஈடுபடவில்லை, மாறாக மார்க்ஸ், ஏங்கெல்ஸ், ட்ரொட்ஸ்கி மற்றும் லெனின் ஆகியோரின் எழுத்துக்களின் அடிப்படையில் ஒரு அரசியல் நிகழ்ச்சிநிரலை பின்பற்றுகிறது' என்பதால், நிர்வாக நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, சுதந்திர ஜனநாயக அடிப்படை ஒழுங்கிற்கு எதிராக அது இயக்கப்படுகிறது.
  • குறிப்பாக, “மார்க்சிச வர்க்க சிந்தனையும் வர்க்கப் போராட்டத்திற்கான பிரச்சாரமும்” அரசியலமைப்புச் சட்டத்துடன் பொருத்தமற்றதாக அறிவிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மோசமான சமூக சமத்துவமின்மை, ஊதிய வெட்டுக்கள், பணவீக்கம் மற்றும் பாரிய ஆட்குறைப்புகளுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அத்தகைய எதிர்ப்புகளை வரவேற்கும் மற்றும் ஆதரிக்கும் எவரும் குற்றவாளிகளாக ஆக்கப்படுவார்கள். இந்த மதிப்பீட்டின்படி, தொழிலாளர் போராட்டங்களை முதுகில் குத்தி 'சமூக கூட்டு' என்ற பெயரில் அவற்றை ஒடுக்கும் கட்சிகள் மட்டுமே சட்டபூர்வமானதாக இருக்கும்.
  • மேலும், 'ஏகாதிபத்தியம்' மற்றும் 'இராணுவவாதத்திற்கு' எதிரான எந்தவொரு கிளர்ச்சியும்' மற்றும் 'தேசிய அரசுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிராகரிப்பவர்கள்' தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். நிர்வாக நீதிமன்றம், ஆயுதப் படைகள் மற்றும் இரகசிய சேவையை 'இழிவுபடுத்துவது' மற்றும் அவை 'ஜனநாயக விரோதமானது மற்றும் மக்களுக்கு எதிராக இயக்கப்படுகின்றது' என்று அறிவிப்பதும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்கிறது.
  • இறுதியாக, அரசு அமைப்புகளின் ஜனநாயக சட்டபூர்வமான தன்மையை சந்தேகிப்பது குற்றமாக கருதப்படும். சோசலிசம் இல்லாமல் ஜனநாயகம் இல்லை, ஜனநாயகம் இல்லாமல் சோசலிசம் இல்லை என்று சோசலிச சமத்துவக் கட்சி அறிவித்தபோது, 'சுதந்திரமான ஜனநாயக அடிப்படை ஒழுங்கில் இருந்து விலகும் ஜனநாயகம் பற்றிய புரிதல்' என்பதற்கு இது சான்றாகும் என்று உயர் நிர்வாக நீதிமன்றம் குறிப்பிடுகின்றது. இவ்வகையில், அரசியலின் மீது வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் அதிகாரம் குறித்த பிரச்சினையை எழுப்புவோர் அல்லது பொருளாதாரத்தை ஜனநாயகப்படுத்த அழைப்பு விடுப்பவர்களை அரசியல் சாசனத்தின் எதிரியாக நீதிமன்றங்களும் அரசாங்கமும் முத்திரை குத்துகின்றன.

இந்தத் தடைகள் சோசலிச சமத்துவக் கட்சியை மட்டுமல்ல, எண்ணற்ற ஏனைய அமைப்புகளையும் கட்சிகளையும் பாதிக்கும். 1989 வரை, சமூக ஜனநாயகக் கட்சியின் வேலைத்திட்டம் கூட பின்வருமாறு அறிவித்தது: 'சோசலிசம் ஜனநாயகத்தின் மூலம் மட்டுமே யதார்த்தமாகும், ஜனநாயகம் சோசலிசத்தின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.' மேலும், மார்க்சிச இலக்கியங்களை விநியோகிக்கும் புத்தக விற்பனையாளர்கள், அதிக ஊதியம் கேட்டு வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், அல்லது சமாதான ஆர்வலர்கள் ஆகியோரை ஒரு தீர்ப்பிலேயே குற்றவாளிகளாக்கலாம்.

பாசிசத்தின் துர்நாற்றம்

மார்க்சிசம் மற்றும் வர்க்கப் போராட்டத்தைத் தடை செய்வதில், பிஸ்மார்க் சமூக ஜனநாயகக் கட்சிக்கு எதிரான தனது சோசலிச-விரோத சட்டங்களை நியாயப்படுத்த ஒருமுறை பயன்படுத்திய அதே காரணத்தையே அரசாங்கமும் நீதிமன்றங்களும் பின்பற்றுகின்றன. 'தற்போதுள்ள அரசு அல்லது சமூக அமைப்பைத் தூக்கியெறிவதை நோக்கமாகக் கொண்ட சமூக ஜனநாயக, சோசலிச அல்லது கம்யூனிச அபிலாஷைகளை பொது அமைதிக்கு, குறிப்பாக மக்களின் வர்க்கங்களின் நல்லிணக்கத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வெளிப்படுத்தப்படும்' எந்தவொரு அமைப்பிற்கும் எதிராக இவை இயக்கப்பட்டன.

இந்த அரசால் திணிக்கப்பட்ட வர்க்க நல்லிணக்கம், நாஜிக்களின் மக்கள் சமூகத்தின் (Volksgemeinschaft) இதயத்திலும் இருந்தது. இது, இன ரீதியாக தூய்மையான 'மக்கள் சமூகம்' ஆகும். மே 1933 இல் புத்தகங்கள் எரிக்கப்பட்டபோது, தீப்பிடித்தபோது ஒலித்த முழக்கங்களில் ஒன்றாக பின்வருவது இருந்தது: “வர்க்கப் போராட்டம் மற்றும் இயங்கியல் சடவாதத்திற்கு எதிராக, மக்கள் சமூகம் மற்றும் வாழ்க்கைக்கான ஒரு இலட்சிய அணுகுமுறைக்காக! நான் மார்க்ஸ் மற்றும் காவுட்ஸ்கியின் எழுத்துக்களை சுடரிடம் ஒப்படைக்கிறேன்”.

அவர்களின் வரலாற்று முன்னோடிகளைப் போலவே, அரசாங்கமும் நீதிமன்றங்களும் இன்று சோசலிச சிந்தனைகளை மட்டுமல்ல, அவற்றின் போர்-சார்பு கொள்கைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் கொள்ளை ஆகியவற்றுடன் ஒத்துப்போகாத ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும் எதிர்க்கின்றன. எனவே, பெரும்பான்மையான மக்கள் கூட அரசு அமைப்புகளை அடிப்படையாக மாற்ற முடியாது என்று அவர்கள் அறிவிக்கிறார்கள். ஏனெனில் இவை 'முழு மக்களின் விருப்பத்தை' பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்கின்றனர். எனவே புதிய, உண்மையான ஜனநாயக அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் கோரிக்கை அரசியலமைப்பிற்கு முரணானது என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

இந்த ஆச்சரியமூட்டும் தர்க்கம், அரசியலமைப்பை போலல்லாமல், 'மனித கண்ணியத்தை அல்லாது அரசை முக்கியமானதாக வைக்கிறது,' என்று சோசலிச சமத்துவக் கட்சி தனது அரசியலமைப்பு புகாரின் அடிப்படையில் உறுதிப்படுத்துகிறது. இது பாசிசத்தின் தர்க்கத்தைப் பின்பற்றுகிறது, இது குடிமக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மேலாக அரசின் நிபந்தனையற்ற அதிகாரத்தை வைக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சியை பாதுகாக்க!

இந்த பாசிச மரபுகள் திரும்புவது அரசாங்கத்தின் இராணுவவாத பெரும்-அதிகார அரசியலுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி அனைத்துநாடுகளும் திரும்பியதன் பின்னணியில் பார்க்க வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும், ஆளும் உயரடுக்குகள் தங்கள் மதிப்பிழந்த வேலைத்திட்டமான போர் மற்றும் சமூகத் தாக்குதல்களைத் திணித்து, மேலும் மேலும் வெளிப்படையாக சர்வாதிகார நடவடிக்கைகளைப் பயன்படுத்துகின்றன. டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியும் அதற்கு எதிராக ஜனநாயகக் கட்சியினர் செயல்பட மறுப்பதும் அமெரிக்காவில் இந்த செயல்முறை எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

ஜேர்மனியில், அரசாங்கம் பாசிச AfD இன் வேலைத்திட்டமான கடுமையான அகதிகள்-எதிர்ப்புக் கொள்கைகள், தொற்றுநோய்களில் 'உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை' என்ற கொள்கையை மறுஆயுதமயமாக்கல் செலவுகளின் பயங்கரமான அளவுகளுடன் நடைமுறைக்குக் கொண்டுவருகிறது. அரசாங்கம், பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து முன்வைக்கப்பட்ட 'ஒருங்கிணைந்த நடவடிக்கை' முன்முயற்சி ஹிட்லரின் ஜேர்மன் தொழில்முன்னணியின் (Deutschen Arbeitsfront) புதிய பதிப்பை உருவாக்குகிறது. இது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக பாரிய ஊதிய வெட்டு மற்றும் பரந்தளவாலான பணிநீக்கங்களைச் செயல்படுத்தும்.

சோசலிச சமத்துவக் கட்சி மீதான தாக்குதல் இந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும். தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களுக்கு ஒரு சோசலிச முன்னோக்குக்கு திரும்புவதைத் தடுப்பதை நோக்கமாகும். எனவே சோசலிச சமத்துவக் கட்சி இன் பாதுகாப்பு என்பது உண்மையான ஊதிய வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்தின் மையக் கூறுபாடு ஆகும்.

ஜேர்மனியில் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக எப்பொழுதும் மீண்டும் ஒருமுறை குற்றமானதாக்கப்பட வேண்டும் எனக்கூறப்படும் மார்க்சிச தொழிலாளர் இயக்கத்தால் எதேச்சதிகார அரசுக்கு எதிராக போராடவேண்டியிருந்தது. வைய்மர் குடியரசின் மட்டுப்படுத்தப்பட்ட பாராளுமன்ற ஒழுங்கமைப்புக் கூட 1919 இல் தொழிலாளர்கள் மற்றும் சிப்பாய்கள் குழுக்கள் மன்னரை தூக்கியெறிந்த பின்னரே நிறுவப்பட்டது. இறுதியில், ஹிட்லரை குடியரசுத் தலைவராக நியமித்ததற்கு தொழிலாளர் கட்சிகள் மட்டுமே எதிராக வாக்களித்தன. அந்த நேரத்தில், சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (KPD) விசுவாசமான தொழிலாளர்களை அணிதிரட்டி, நாஜிக்களை எதிர்க்கக்கூடிய ஒரு ஐக்கிய முன்னணி முன்னோக்கிற்காக ட்ரொட்ஸ்கிஸ்டுகள் போராடினார்கள்.

இன்றும்கூட, அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பது ஒரு பரந்த அணிதிரட்டலில் தங்கியுள்ளது. எனவே ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் வலதுசாரி ஆபத்தை எதிர்க்கவும் விரும்பும் அனைவருக்கும் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியலமைப்பு புகாரை ஆதரிக்குமாறு மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறோம். change.org இல் எங்கள் மனுவில் கையொப்பமிட்டு, உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்புகொண்டு உங்கள் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடையே இந்த அறிக்கையைப் பகிரவும்.

மேலும் படிக்க

Loading