மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ஜூலை 30 சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் விஜே டயஸின் இறுதிச் சடங்கில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தலைவர் டேவிட் நோர்த் இணையவழியாக வழங்கிய புகழஞ்சலி பின்வருமாறு. அவரது 81வது பிறந்தநாளுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் மாரடைப்பால் அவர் காலமானார். இறுதிச் சடங்கு பற்றிய அறிக்கையை இங்கே காணலாம்.
அன்புள்ள தோழர்களே,
தோழர் விஜே டயஸ் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் கொழும்பில் உங்களோடு இருக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். ஆனால் சரீர ரீதியான இடைவெளியானது இன்று நாம் உணரும் ஆழ்ந்த இழப்பின் உணர்வைக் குறைத்துவிடாது, அல்லது உலகம் முழுவதிலும் உள்ள அனைத்துலகக் குழு உறுப்பினர்களுக்கும் இலங்கையில் உள்ள பிரிவினருக்கும் இடையே உள்ள வலுவான ஒற்றுமையின் பிணைப்புகளையும் அந்த இடைவெளியால் சிதைக்க முடியாது. கடந்த 35 ஆண்டுகளாக, அதாவது ஒரு நூற்றாண்டின் மூன்றில் ஒரு பங்கு, தோழர் விஜே இலங்கைப் பகுதிக்கு தலைமை தாங்கி வந்துள்ளார்.
விஜே டயஸுக்கு விடைகொடுப்பதற்கு இன்று இங்கு கூடியிருக்கும் அனைவரும் வரலாற்றின் முன்னிலையில் இருப்பதை அறிவார்கள். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கட்டியெழுப்பும் போராட்டத்தில் அறுபது வருடங்களாக விஜே டயஸ் ஒரு மகத்தான பாத்திரத்தை வகித்தார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிவிக்க முடியும். விஜேயின் வாழ்க்கை வரலாறு எழுதப்படும்போது, அது இலங்கையின் முழு நவீன வரலாற்றையும் உள்ளடக்கியதாகவே இருக்கும். லங்கா சம சமாஜக் கட்சி அது ஸ்தாபிக்கப்பட்ட மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை காட்டிக் கொடுத்து பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தில் நுழைந்தபோது அவருக்கு 22 வயது. விஜே தனது வாழ்நாளின் எஞ்சிய 58 ஆண்டுகளை அந்த காட்டிக்கொடுப்பின் துன்பகரமான விளைவுகளில் இருந்து மீள்வதற்கும், தொழிலாள வர்க்கத்தில் உண்மையான புரட்சிகர ட்ரொட்ஸ்கிசத்தின் ஆளுமையை மீண்டும் நிறுவவுதற்கும் அர்ப்பணித்தார்.
விஜே மற்றும் கீர்த்தி பாலசூரிய தலைமையிலான இளம் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் குறிப்பிடத்தக்க காரியாளர்கள், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை 1968 இல் ஸ்தாபித்தனர். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ட்ரொட்ஸ்கிசக் கொள்கைகளைப் பாதுகாக்க நிர்ப்பந்திக்கப்பட்டது, ட்ரொட்ஸ்கி ஒருமுறை அத்தகைய சூழ்நிலைகளை விவரித்தது போல, 'நீரோட்டத்திற்கு எதிராக நீந்த வேண்டி இருந்தது. ஆனால் விஜே, கீர்த்தி, ரட்நாயக்க மற்றும் அவர்களது தோழர்கள் வரலாற்று உண்மையின் பலம், நான்காம் அகிலத்தின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் சரியான தன்மை மற்றும் இலங்கையிலும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தின் மீது இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையுடன் போராட்டத்தை தொடர்ந்தனர்.
விஜே ஒரு அசாதாரணமான அடக்கமான மனிதராக இருந்தார், அவர் -எனக்கு நினைவிருக்கும் வரையில்- கட்சியின் தலைமைத்துவத்துக்கு தான் செய்த சொந்த பங்களிப்புகளின் பக்கம் ஒருபோதும் கவனத்தை திருப்ப முயலவில்லை. ஆனால், 18 டிசம்பர் 1987 அன்று தோழர் கீர்த்தியின் அகால மரணத்தின் அதிர்ச்சியை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் எதிர்கொண்ட நிலையில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைமையை ஏற்கும் பொறுப்பை விஜே ஏற்றுக்கொண்டார். தமிழ் மக்களுக்கு எதிராக கொழும்பு ஆட்சியால் கட்டவிழ்த்து விடப்பட்ட இரத்தக்களரி போரின் மத்தியில் பொதுச் செயலாளராக ஆனார். அவரது தலைமையின் கீழ், கொழும்பு ஆட்சி மற்றும் ஜே.வி.பி.யால் ஊக்குவிக்கப்பட்ட சிங்கள இனவாதத்திற்கு எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்-சோசலிச சமத்துவக் கட்சி வளைந்து கொடுக்காமல் இருந்த அதே நேரம், புலிகளின் குட்டி முதலாளித்துவ தேசியவாதத்திற்கு எந்த அரசியல் விட்டுக்கொடுப்பும் செய்ய மறுத்தது.
கிட்டத்தட்ட அவரது முழு அரசியல் பணியின் போது, தோழர் விஜே, பிற்போக்கு சக்திகள் தாக்குதலில் ஈடுபட்டிருந்த நிலைமைகளின் கீழும், ல.ச.ச.க., தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய சந்தர்ப்பவாத அமைப்புகளால் காட்டிக் கொடுக்கப்பட்ட தொழிலாள வர்க்கம் பின்வாங்கிய நிலைமையின் கீழும், போராட வேண்டியிருந்தது.
ஆனால் அவரது வாழ்க்கையின் இறுதி மாதங்களில், தோழர் விஜே தொழிலாள வர்க்கத்தின் மறுஎழுச்சியைக் கண்டார். ஆளும் வர்க்கத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தும் வாய்ப்பை அவர் உற்சாகத்துடன் வரவேற்றார். அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், சக்தி வாய்ந்த தன்னிச்சையான இயக்கத்திற்கு அரசியல் தலைமையை வழங்க, விஜே தனது எஞ்சியிருந்த பலத்தை வெளிக்கொணர்ந்து, தனது பரந்த அனுபவத்தை பயன்படுத்த முன்வந்தார்.
சமீபத்தில் ஜூலை 9 அன்று, இராஜபக்ஷ ஆட்சியின் நெருக்கடிக்கு அதன் பிரதிபலிப்பை வகுப்பதற்காக, சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் தோழர் விஜே பங்கேற்றார். ஒரு இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்திற்கு எந்தவொரு அரசியல் ஆதரவையும் வழங்குவதற்கு எதிராக, அவர் சக்திவாய்ந்த முறையில் பேசியதோடு, அரச அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்தின் கைக்கு மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கக் கூடிய, தொழிலாளர் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க கட்சி எடுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவாக வாதிட்டார்.
விஜே தனது வாழ்க்கையின் இறுதி நாட்களில், ஜூலை 20 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு முக்கிய வேலைத்திட்ட அறிக்கையை வரைவதில் அரசியல் குழு மற்றும் அனைத்துலகக் குழுவுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கு அர்ப்பணித்திருந்தார். சோசலிச சமத்துவக் கட்சி ஒரு 'இடைக்கால அரசாங்கத்துக்கு,' எந்த ஆதரவையும் பங்கேற்பையும் நிராகரித்தது ஏன் என்பதை விளக்கினார். அந்த அறிக்கை வாழ்நாள் அரசியல் அனுபவத்தை வெளிப்படுத்தியது:
ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது பற்றிய பேச்சுக்களில் பங்குகொள்ள மறுத்த சோசலிச சமத்துவக் கட்சி, 1964இல் ட்ரொட்ஸ்கிசத்தின் இன்றியமையாத அரசியல் கோட்பாடுகளை லங்கா சம சமாஜக் கட்சி பேரழிவுகரமாக காட்டிக் கொடுத்ததன் கசப்பான அரசியல் படிப்பினைகளில் இருந்து கற்றுக்கொண்டது. பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் மத்தியில், தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த '21 அம்ச கோரிக்கைகள்' இயக்கத்திற்கு முகங்கொடுத்த முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான பிரதமர் சிறிமா பண்டாரநாயக்க, முதலாளித்துவ ஆட்சிக்கு முட்டு கொடுக்க லங்கா சம சமாஜக் கட்சியின் (LSSP) தலைவர்களின் பக்கம் திரும்பினார். பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ 'சிங்களவர்களுக்கு முதலிடம்' அரசாங்கத்திற்குள் லங்கா சம சமாஜக் கட்சி நுழைந்துகொண்டமை '21 அம்ச கோரிக்கைகள்' இயக்கத்தின் முடிவை மட்டும் குறிக்கவில்லை. அது வெகுஜனங்களை நம்பிக்கையிழக்கச் செய்து, வர்க்கப் போராட்டத்தின் இழப்பில் இன-மொழிரீதியான மோதல்களை ஊக்குவித்ததுடன், பிற்போக்கு இனவாத அரசியலுக்கும் பல தசாப்தகால உள்நாட்டுப் போரின் ஆதிக்கத்திற்கும் வழி வகுத்தது.
லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பின் பாதையில் சோசலிச சமத்துவக் கட்சி செல்லப் போவதில்லை. முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அனைத்து வகையான நேரடி மற்றும் மறைமுக ஆதரவையும் நாங்கள் நிராகரிக்கிறோம். தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தின் தூண்களான சோசலிச சர்வதேசியவாதம் மற்றும் சுயாதீன வர்க்க அரசியலையும் லங்கா சம சமாஜக் கட்சி நிராகரித்தற்கு நேர் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம், 1968ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பிரிவாக ஸ்தாபிக்கப்பட்டது.
விஜே இறப்பதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு அவரது தலைமையில் வெளியிடப்பட்ட கடைசி அரசியல் அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சி எழுதியது:
மனிதகுலத்தின் சோசலிச எதிர்காலத்திற்கான கூட்டுப் போராட்டத்திற்காக இந்தியாவிலும் தெற்காசியா முழுவதிலும், சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களுக்கு நாங்கள் ஒரு சிறப்பான வேண்டுகோளை விடுக்கிறோம். இலங்கையில் உள்ள போர்க்குணமிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும் சோசலிச சர்வதேசியத்திற்கான புரட்சிகரப் போராட்டத்தில் உங்கள் பங்களிப்பைச் செய்யுமாறும் நாங்கள் அழைக்கிறோம்.
தோழர் விஜே தனது நீண்ட ஆயுளை, 'சோசலிச சர்வதேசியத்திற்கான புரட்சிகரப் போராட்டத்திற்கான' சக்திவாய்ந்த அழைப்புடன் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது எவ்வளவு பொருத்தமானது.
தோழர் விஜே டயஸ், முதுமையிலும், அவரது இளமைக்காலத்தின் இலட்சியங்களை குறைவில்லாமல் நிலைநிறுத்தி போராட்டத்தின் மத்தியில் மரணமடைந்தார். தைரியம், ட்ரொட்ஸ்கிசக் கொள்கைகளுக்கான அர்ப்பணிப்பு மற்றும் சோசலிசத்தின் மீதான விசுவாசம் ஆகிய அவரது அடியொற்றிய மரபு, மனிதகுலத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மாபெரும் வர்க்கப் போர்களில், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எழுச்சியூட்டும் முன்மாதிரியாக இருக்கும்.
விஜே டயஸின் நினைவு நீடூழி வாழ்க
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி நீடூழி வாழ்க
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு நீடூழி வாழ்க
டேவிட் நோர்த்
