SEP (US) 2022 மாநாட்டு தீர்மானம்

ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்!

ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5, 2022 வரை நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்காவின்) ஏழாவது தேசிய மாநாட்டில் இந்தத் தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரஸின் முழு அறிக்கையையும் பிற தீர்மானங்களையும் இங்கே படிக்க முடியும்.

1. சோசலிச சமத்துவக் கட்சி (SEP) உக்ரேனில் அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளால் தூண்டப்பட்ட ஏகாதிபத்திய பினாமிப் போரை நிராகரிப்பதுடன் கண்டிக்கிறது. அமெரிக்காவும் நேட்டோவும், தூண்டுதலற்ற ரஷ்ய ஆக்கிரமிப்பின் செயலுக்கு பதிலளிக்கவில்லை. அல்லது உக்ரேனில் அவர்கள் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவில்லை, அதன் நவ-நாஜிகளால் தொற்றுக்குள்ளான ஆட்சி உலகிலேயே மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது.

2. ரஷ்யாவிற்கு எதிரான போர் என்பது, 1990-91ல் ஈராக் மீதான முதல் ஆக்கிரமிப்புடன் தொடங்கப்பட்டு, 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தீவிரமடைந்த அமெரிக்க உலகளாவிய மேலாதிக்கத்திற்கான உந்துதலின் தொடர்ச்சியாகவும் தீவிரமாக்க்கலாகவும் உள்ளது. புட்டின் ஆட்சியில் இருக்க முடியாது என்ற பைடெனின் அறிவிப்பு போரின் அடிப்படை நோக்கங்களை வெளிப்படுத்தியது: ரஷ்யாவில் தற்போதைய ஆட்சியை அகற்றுவது, அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள கைப்பாவையால் மாற்றப்படுவது மற்றும் 'ரஷ்ய காலனித்துவ பிடியிலிருந்து விடுவிப்பது' என்று குறிப்பிடப்படும் ரஷ்யாவை ஒரு டஜன் அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்திரமற்ற அரசுகளாக உடைப்பது, அதன் மதிப்புமிக்க வளங்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிதி மூலதனத்திற்கு சொந்தமாகவும் சுரண்டப்படுவதாகும்.

3. அதீத பொறுப்பற்ற தன்மையுடன், அமெரிக்க ஏகாதிபத்தியம் அணு ஆயுதப் போரை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இதன் விளைவாக பூமியில் மனித உயிர்கள் அழிந்து போகக்கூடும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால புவி மூலோபாய இலக்கான ரஷ்யாவின் அழிவு மற்றும் யூரேசிய நிலப்பரப்பைக் கட்டுப்படுத்துவது ஆகியவை பென்டகன் மற்றும் சிஐஏ ஆல் சீனாவிற்கு எதிரான தாக்குதலுக்கான இன்றியமையாத தயாரிப்பாகவும் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது. முதலாம் உலகப் போரின் போது 'உலகின் மறுபங்கீடு' என லெனின் குறிப்பிட்டது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் பூகோளத்தின் வரைபடத்தை மீண்டும் வரையும் நோக்கத்தை கொண்டுள்ளது.

4. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதற்கான பைடெனின் முடிவு, அவர் கூறியது போல், 'என்றென்றும் போரின்' முடிவு அல்ல என்பது இப்போது வெளிப்படையாக தெரிய வேண்டும். இது ரஷ்யாவுடனான போரைத் தூண்டுவதற்கு முன்னதாக அமெரிக்க இராணுவ வளங்களை கவனமாகக் கணக்கிடப்பட்ட மறுசீரமைப்பு ஆகும். அங்கிருந்து அதன் அவசரமானதும், குழப்பமானதுமான வெளியேற்றம் உக்ரேனில் எதிர்பார்க்கப்பட்ட உடனடி மோதலின் கால அட்டவணையால் தீர்மானிக்கப்பட்டது.

5. போர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தூண்டப்பட்டாலும், சோசலிச சமத்துவக் கட்சி ரஷ்யாவின் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்க்கிறது. பென்டகன் மற்றும் நேட்டோவின் போலி-இடது முகவர்கள் பினாமி போருக்கான தங்கள் ஆதரவை நியாயப்படுத்துவதற்கு ஏற்றுக்கொண்ட ஒரு வரையறையான ரஷ்யா 'ஏகாதிபத்தியம்' என்ற கூற்றுக்களை நிராகரிக்கும் அதே வேளையில், 1990-91 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் மூலமும் அதன் சொத்துக்களை திட்டமிட்டு சூறையாடுவதன் மூலமும் ஆட்சிக்கு வந்த பிற்போக்கு ரஷ்ய ஆளும் வர்க்கத்தின் 'தேசிய பாதுகாப்பு' கொள்கைகளுக்கு சோசலிச சமத்துவக் கட்சி எந்த ஆதரவையும் அளிக்கவில்லை. சமூக முரண்பாடுகள் நிறைந்த ஒரு நாட்டின் மீது ஆபத்தான முறையில் ஆட்சி செய்யும் அரை-போனபார்ட்டிச எதேச்சதிகார ஆட்சியின் மீது புட்டின் அதிகாரத்தில் நிற்கிறார்.

6. அமெரிக்காவும் நேட்டோவும் தொடுத்துள்ள போர் ஏகாதிபத்திய விரிவாக்கத்தின் தொடர்ச்சியாக இருப்பதுபோல, உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு என்பது ரஷ்ய தன்னலக்குழுவின் பிற்போக்குத்தனமான கொள்கைகளின் தொடர்ச்சியாகவும், ரஷ்ய புரட்சியின் முழு முற்போக்கான பாரம்பரியத்தையும் மற்றும் 1922 இல் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தின் மூல ஸ்தாபகத்தில் பொதிந்துள்ள ஜனநாயகக் கொள்கைகளையும் மறுதலிப்பதாகும். ரஷ்யாவை ஏகாதிபத்தியம் இப்போது சுற்றி வளைப்பது என்பது அக்டோபர் புரட்சியின் மரபினை ஸ்ராலினிச ஆட்சி இறுதியாக காட்டிக்கொடுத்ததன் பேரழிவான விளைவு ஆகும்.

7. ரஷ்யாவின் கொள்கை, புட்டின் தானே கூறியது போல, ரஷ்ய பேரினவாதம் மற்றும் தேசியவாதத்தின் மறுமலர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இது ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவோ அல்லது உக்ரேன், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் ஒருபுறம் இருக்க, ரஷ்யாவில் உள்ள பரந்த தொழிலாளர்களை கூட ஈர்க்க இயலாது.

8. எவ்வாறாயினும், ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு சோசலிச சமத்துவக் கட்சியின் எதிர்ப்பு சோசலிச இடதுகளிடமிருந்து வந்ததே தவிர, ஏகாதிபத்திய வலதுகளிடமிருந்து அல்ல. போரை நியாயப்படுத்த பைடென் நிர்வாகத்தால் கூறப்பட்ட அனைத்து காரணங்களும் பொய்களின் ஒரு தொகுப்பு ஆகும்.

9. முதலாவதாக, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்குக் கட்டுப்பட்டு, 2014 பெப்ரவரியில் அமெரிக்க ஆதரவு பெற்ற தீவிர வலதுசாரி அமைப்புக்களின் ஆட்சிக்கவிழ்ப்பின் விளைவாக உருவான தன்னலக்குழுக்களின் ஊழல் நிறைந்த ஆட்சியான உக்ரேனிய அரசாங்கம் 'ஜனநாயகத்தை' பாதுகாப்பதற்காக போர் நடத்துகிறது என்ற கூற்று அம்பலமானது. உக்ரேனிய அரசாங்கத்தின் கொள்கையானது, அசோவ் பட்டாலியன் போன்ற வெளிப்படையான பாசிச குழுக்களை ஊக்குவிப்பதும், இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஒத்துழைப்பாளர்களான ஸ்டீபன் பண்டேரா மற்றும் உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு (OUN) ஆகியவற்றின் மறுசீரமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

10. ஜனவரி 6, 2021ல் நடந்த பாசிச ஆட்சிக்கவிழ்ப்பில், ஏறக்குறைய அதிகாரத்தைக் கைப்பற்றுவது தடுக்கப்பட்டு போரைத் தொடரும் அமெரிக்க அரசாங்கம் ஜனநாயகத்தை பாதுகாக்கிறது என்ற கூற்று மிகவும் நகைப்புக்குரியது, பைடென் இன்னும் இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்ட கட்சியை தனது 'நண்பர்கள்' மற்றும் 'சகாக்கள்' என்று குறிப்பிடுகிறார். மேலும், 'போர்க்குற்றவாளி' புட்டினுக்கு எதிராக 'மனித உரிமைகளை' நிலைநிறுத்துவதாகக் கூறும் போது, அமெரிக்க ஏகாதிபத்தியம் மில்லியன் கணக்கான அப்பாவி பொதுமக்களின் இறப்புகளுக்கும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகப்பெரிய அகதிகள் நெருக்கடிக்கும், அதன் சவுதி அரேபிய கூட்டாளிகள் போன்ற உலகெங்கிலும் சர்வாதிகாரங்களை வலுப்படுத்துவதற்கும் பொறுப்பாளியாகும்.

11. இரண்டாவதாக, 'தேசிய சுயநிர்ணயத்திற்காக' உக்ரேன் ஒரு போரை நடத்துகிறது என்ற கூற்று, போர் தொடங்கிய பின்னர் கியேவில் பேரினவாத ஆட்சி எடுத்த முதல் நடவடிக்கையான ரஷ்ய மொழி பேசும் மக்களில் ஒரு பெரும் பகுதியினரின் உரிமையை பறித்தது என்ற உண்மையால் மறுக்கப்படுகிறது. உக்ரேனிய அரசாங்கம், மேலும், போரில் சிக்கிய உக்ரேனியர்களின் வாழ்க்கை தொடர்பாக முழுமையான அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. அவர்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு ஏற்ப உக்ரேனிய ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பின்தொடர்வதற்கான பீரங்கி தீவனமாக நடத்தப்படுகிறார்கள்.

12. மூன்றாவதாக, போரானது பிப்ரவரி 24, 2022 அன்று உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கான ஒரு பதில் என்ற கூற்று, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவை இடைவிடாமல் விரிவாக்குவதன் மூலமும், ரஷ்யா மீதான தாக்குதல்களுக்கு உக்ரேனை நேட்டோ அரங்கமாக மாற்றுவதன் மூலமும் மோதலைத் தூண்டுவதற்கான ஏகாதிபத்திய சக்திகளின் திட்டமிட்ட முயற்சிகளை புறக்கணிக்கிறது. ரஷ்ய படையெடுப்பிற்கு முந்தைய மாதங்களில், நேட்டோவில் உக்ரேனை ஒருங்கிணைப்பதில் ரஷ்யாவின் ஆட்சேபனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பைடென் நிர்வாகம் மறுத்து, நவம்பர் 2021 இல், ரஷ்யாவை ஒரு மூலையில் தள்ளும் நோக்கில் ஒரு அமெரிக்க-உக்ரேனிய மூலோபாய கூட்டாண்மைக்கு ஒப்புதல் அளித்தது.

13. போரின் பின்னணியில் உள்ள உண்மையான உந்து சக்திகள் பின்வருமாறு: 1) அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் அரசியல் நலன்கள் மற்றும் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அதன் உந்துதல்; 2) ரஷ்யாவின் அபரிமிதமான மதிப்புமிக்க மற்றும் மூலோபாய ரீதியாக முக்கியமான மூலப்பொருட்களுக்கு நேரடி அணுகலைப் பெற அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் முயற்சி; மற்றும் 3) ஆளும் வர்க்கம் அதன் தீர்க்க முடியாத உள்நாட்டு நெருக்கடியை வெளிநாட்டில் போர் மூலம் தீர்க்கும் முயற்சி.

14. ரஷ்யாவுக்கு எதிரான போர் என்பது 30 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதிலிருந்து அமெரிக்கா பின்பற்றிய புவிசார் அரசியல் மூலோபாயத்தின் விளைவாகும். கடந்த மூன்று தசாப்தங்களாக, அமெரிக்கா தனது நிகரற்ற இராணுவ சக்தியைப் பயன்படுத்தி அதன் நீடித்த பொருளாதார வீழ்ச்சியை ஈடுசெய்யும் நோக்கில் தொடர்ச்சியான போர்களைத் தொடங்கியுள்ளது: 1990-91 இன் பாரசீக வளைகுடா போர்; 1999 இல் சேர்பியாவுக்கு எதிரான போர்; 2001 இல் ஆப்கானிஸ்தான் படையெடுப்பு; 2003 இல் ஈராக்கிற்கு எதிரான இரண்டாவது போர்; 2011 இல் லிபியாவுக்கு எதிரான போர்; மற்றும் சிரியாவில் சிஐஏ ஆதரவு உள்நாட்டுப் போர் ஆகியவை இவற்றில் அடங்கும்.

15. இந்த காலகட்டம் முழுவதும் ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு போர் தொடர்பாகவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதலின் தாக்கங்களையும் விளைவுகளையும் ஆய்வு செய்தது. 2016 ஆம் ஆண்டில் ICFI பின்வருமாறு கூறியது:

சென்ற கால் நூற்றாண்டு காலத்தில் அமெரிக்காவினால் தூண்டப்பட்ட போர்களை, ஒன்றோடொன்று இடைத்தொடர்புள்ள நிகழ்வுகளின் ஒரு சங்கிலியாக ஆய்வுசெய்யப்பட வேண்டும். உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முனைப்பின் மூலோபாய தர்க்கமானது, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலான நவகாலனித்துவ நடவடிக்கைகளையும் தாண்டி நீண்டுசெல்வதாகும். ரஷ்யா மற்றும் சீனாவுடன் துரிதமாய் தீவிரப்பட்டுச் செல்லும் அமெரிக்காவின் மோதல்களது உட்கூறுகளாகவே தற்போது நடைபெற்று வரும் போர்கள் இருக்கின்றன. [கால் நூற்றாண்டு போர்: உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதல் 1990-2016, டேவிட் நோர்த், ஜூலை 11, 2016]

16. அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்த மற்ற பிரதான ஏகாதிபத்திய சக்திகளும், அதேபோல், தங்கள் சொந்த பிற்போக்கு பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய நலன்களைப் பின்பற்றுகின்றன. உக்ரேனுடனான மோதல் ஜேர்மன் ஏகாதிபத்தியத்திற்கு நாஜி ஆட்சியின் சரிவுக்குப் பின்னர் மிகப்பெரிய மறு ஆயுதமாக்கல் பிரச்சாரத்தை செயல்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் தங்கள் சொந்த நலன்களை முன்னேற்றுவதற்காக போரில் பங்கேற்க ஆர்வமாக உள்ளன.

17. உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் உந்துதல் ரஷ்ய பிரதேசத்தின் பரந்த விரிவாக்கத்தை உடைப்பதில் ஆளும் வர்க்கத்தின் குறிப்பிட்ட பொருளாதார நலன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா பதினொரு நேர மண்டலங்களை உள்ளடக்கியது மற்றும் தங்கம், பிளாட்டினம், பல்லேடியம், துத்தநாகம், பாக்சைட், நிக்கல், பாதரசம், மாங்கனீசு, குரோமியம், யுரேனியம், இரும்புத் தாது, கோபால்ட் மற்றும் இரிடியம் உள்ளிட்ட மூலப்பொருட்கள், உலோகங்கள் மற்றும் தாதுக்களின் மகத்தான இருப்புக்களின் ஆதாரமாக உள்ளது. இந்த மூலப்பொருட்களில் பல, குறிப்பாக அரிதான பூமி கனிமங்கள், மேம்பட்ட தொழில்நுட்பத்தில் குறைக்கடத்திகள் (semiconductors) மற்றும் பிற கூறுகளின் உற்பத்திக்கு முக்கியமானவையாக உள்ளன.

18. லெனின் ஏகாதிபத்தியத்தை பற்றிய தனது பகுப்பாய்வில் வலியுறுத்தியது போல், “முதலாளித்துவம் எவ்வளவு வளர்ச்சியடைகிறதோ, மூலப்பொருட்களுக்கான தேவையும் அதிகளவில் எழுகின்றது, ஒட்டுமொத்த உலகம் முழுவதிலும் உள்ள மூலப்பொருட்களது ஆதாரங்களுக்கான போட்டியும் வேட்டையும் எந்தளவுக்குத் தீவிரமாகிறதோ, அந்தளவுக்கு காலனிகளைக் கைப்பற்றுவதற்கான போராட்டமும் மிகவும் கடுமையானதாக இருக்கும்.” 'இந்த கனிம வளங்கள் மீதான அணுகலும், கட்டுப்பாடும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு மட்டும் தேவையானதல்ல. இந்த பொருட்களின் மீதான கட்டுப்பாடு உலகளாவிய மேலாதிக்கத்திற்கான பரந்த உந்துதலின் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது, குறிப்பாக சீனாவுக்கு எதிராக.

19. இறுதியாக, அமெரிக்காவின் இராணுவக் கொள்கையானது தீர்க்க முடியாத அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியால் இயக்கப்படுகிறது, இது கோவிட்-19 தொற்றுநோயால் பெருமளவில் மோசமடைந்துள்ளது. வெறும் இரண்டரை ஆண்டுகளில், அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கோவிட் நோயால் இறந்துள்ளனர். உயிர்களை விட இலாபங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஆளும் வர்க்கத்தின் வேண்டுமென்றே எடுத்த முடிவின் விளைவுதான் தொற்றுநோயால் ஏற்படும் மரணத்தின் மகத்தான அளவாகும்.

20. இந்த பேரழிவுகரமான தாக்கமானது, சமூக சமத்துவமின்மையின் தீவிர மட்டங்களால் ஏற்கனவே கிழிந்துள்ள ஒரு சமூகத்துடன் குறுக்கிடுகிறது. உயரும் விலைவாசி மற்றும் சுரண்டலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தின் பல வெளிப்பாடுகள் ஏற்கனவே உள்ளன. உள் நெருக்கடி மற்றும் வர்க்க மோதலை எதிர்கொள்ளும் அவநம்பிக்கையான ஆளும் வர்க்கம், ஒரு தவறான 'தேசிய ஐக்கியத்தை' அமுல்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாக போருக்கு திரும்புவது இதுதான் முதல் முறை அல்ல.

21. அவர்களின் மூர்க்கமான உட்பூசல் இருந்தபோதிலும், ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே போரை நடத்துவது குறித்து அடிப்படை வேறுபாடுகள் எதுவும் இல்லை. இதில் பேர்னி சாண்டர்ஸ் மற்றும் அலெக்சாண்டிரியா ஒகாசியோ-கோர்ட்டெஸ் உட்பட, அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அல்லது அதன் உறுப்பினர்களால் ஆதரிக்கப்படும் ஜனநாயகக் கட்சியின் பிரிவும் அடங்கும், இவர்கள் அனைவரும் பாரிய இராணுவ ஆயுதமயமாக்கல் அல்லது உக்ரேனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

22. அமெரிக்காவில் உள்ள அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) உட்பட, உயர் நடுத்தர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் போலி-இடது அமைப்புகளை இந்த போர் முற்றிலும் அம்பலப்படுத்தியுள்ளது. ரஷ்ய 'ஏகாதிபத்தியத்தை' எதிர்க்கும் போர்வையில், DSA, சர்வதேச அளவில் பல்வேறு பப்லோவாத மற்றும் 'அரசு முதலாளித்துவ' அமைப்புகளுடன் சேர்ந்து, அமெரிக்கா மற்றும் நேட்டோவுடன் தங்களை இணைத்துக்கொண்டு உக்ரேன் ஏகாதிபத்தியத்தால் ஆயுதமாக்கப்படுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு அவர்கள் அளிக்கும் ஆதரவு, லிபியா, சிரியா மற்றும் பிற நாடுகளுக்கு எதிரான ஏகாதிபத்தியப் போர் தொடர்பாக அவர்கள் பின்பற்றிய கொள்கையின் உச்சகட்டமாகும்.

23. சோசலிச சமத்துவக் கட்சி ரஷ்யா மற்றும் சீனாவை 'ஏகாதிபத்தியம்' என்று வகைப்படுத்துவதை நிராகரிக்கிறது. அனைத்து வரலாற்று மற்றும் பொருளாதார உள்ளடக்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட இந்த சிறப்புப்பெயர் ஒரு நோக்கத்திற்கு உதவுகிறது: ரஷ்யா மற்றும் சீனாவின் 'காலனித்துவமாக்கலில் இருந்து விடுவிப்பதற்கான' கொள்கையை நியாயப்படுத்தவும் சட்டபூர்வமாக்கவும், அதாவது, இந்த நாடுகளை அமெரிக்கா மற்றும் நேட்டோ ஏகாதிபத்தியத்தால் கட்டுப்படுத்தப்படும் தொடர்ச்சியான கைப்பாவை ஆட்சிகளாக உடைப்பதாகும். ரஷ்ய மற்றும் சீனா ஏகாதிபத்தியம் என்ற 'தத்துவம்' என்பது சோவியத் ஒன்றியம் 'அரசு முதலாளித்துவம்' மற்றும் 'ஏகாதிபத்தியம்' என்ற பொய்யான கூற்றுகளுடன் சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பை நிராகரித்த சாக்ட்மன் மற்றும் பிறரின் நிலைப்பாடுகளின் தொடர்ச்சியாகும்.

24. போருக்கு எதிரான அதன் எதிர்ப்பை காட்டுகையிலும், சோசலிச சமத்துவக் கட்சி ரஷ்ய கலாச்சாரத்திற்கு எதிரான சர்வதேச பிரச்சாரத்தை கண்டிக்கிறது. போருக்கான உந்துதலின் இந்த முக்கியமான கூறு, ரஷ்ய இசைக்கலைஞர்கள், திரைப்பட இயக்குநர்கள், விளையாட்டு வீரர்கள், பிற தனிநபர்கள் மற்றும் ரஷ்ய மொழி, இலக்கியம், இசை, திரைப்படம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிராக இன்னும் பரந்த அளவில் எடுக்கப்பட்ட பாரபட்சமான நடவடிக்கைகளை உள்ளடக்கியது. ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரம், உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை நிராகரிப்பதுடன், மறுக்கிறது. இது, பல நாடுகளில் ரஷ்யர்கள் மற்றும் ரஷ்ய மொழி பேசும் நபர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட வெறுக்கத்தக்க குற்றங்களை தூண்டியுள்ளது. சர்வதேசரீதியான ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரத்தின் ஒரு விளைவு என்னவென்றால், அது ரஷ்யாவிற்குள் புட்டின் ஆட்சியை நியாயப்படுத்தலை உருவாக்குகின்றது. இவ்வாறு, உலகம் முழுவதும், இந்த பிரச்சாரம் அரசியல் நனவை குழப்பி, தீங்கு விளைவித்து, போருக்கான எதிர்ப்பை அச்சுறுத்தி, மேலும் சர்வதேச ஐக்கியத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் புறநிலை உந்துதல் முயற்சிக்கு எதிராகச் செயல்படுகின்றது.

25. போரை எதிர்ப்பதற்கான சமூக அடிப்படை, சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். பிப்ரவரி 24, 2022 அன்று வெளியிடப்பட்ட உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் அதன் ஆரம்ப அறிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு எழுதியது:

அமெரிக்காவிற்குள்ளும் மற்றும் உலகெங்கிலும் ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, தொழிலாள வர்க்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளின் மூலமாக மட்டுமே ஒரு பேரழிவின் அபாயம் தவிர்க்கப்பட முடியும்.

வரலாற்றுரீதியாக காலாவதியாகிப் போன ஒரு அரசியல் கட்டமைப்பாக உள்ளதும், உலகப் பொருளாதாரத்தின் மேலாதிக்கத்திற்கும் உற்பத்தி சக்திகள் உலகளாவிய அளவில் ஒன்றை ஒன்று பரஸ்பர சார்ந்திருப்பதற்கும் பொருந்தாது முரண்பட்டதாக உள்ளதுமான “தேசிய அரசினை” பாதுகாப்பதை நிராகரிப்பது என்பது இந்த வேலைத்திட்டத்தின் ஒரு அடிப்படைக் கோட்பாடாக இருக்கிறது.

ட்ரொட்ஸ்கி மேலும் கூறினார், “போரின் சமயத்தில் தன்னை தேசிய அரசுடன் பிணைத்துக் கொள்ளாதிருப்பதும், போர் வரைபடத்தை அல்லாமல் வர்க்கப் போராட்ட வரைபடத்தை பின்பற்றுவதும், அமைதிக் காலத்தில் தேசிய அரசின் மீது சமரசமற்ற போரை ஏற்கனவே அறிவித்த ஒரு கட்சியால் மட்டுமே இது சாத்தியமாகக் கூடியதாகும்.” “வர்க்கப் போராட்ட வரைபடத்தை” பின்பற்றுவது என்பதன் அர்த்தம், ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பை, சுரண்டல், சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறை ஆகியவற்றுக்கு எதிராக சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தில் வேரூன்றியிருக்கும்படி செய்வது என்பதேயாகும்.

26. அதன் மிக அடிப்படையான மட்டத்தில், ஏகாதிபத்தியப் போர் முதலாளித்துவ அமைப்பின் அடிப்படை முரண்பாடுகளில் இருந்து எழுகிறது — உலகப் பொருளாதாரம் மற்றும் உலகத்தை போட்டி தேசிய-அரசுகளாகப் பிரிப்பதற்கு இடையே, இதில்தான் உற்பத்திச் சாதனங்களின் தனியார் உடைமை வேரூன்றியுள்ளது. எவ்வாறாயினும், அதே முரண்பாடுகள்தான் உலக சோசலிசப் புரட்சிக்கான புறநிலை அடிப்படையையும் உருவாக்குகின்றன. ஏற்கனவே போரின் விளைவுகள், அமெரிக்காவிற்குள் சமூக மோதல்களை மிகப்பெரிய அளவில் தீவிரப்படுத்தி வருகின்றன. உயரும் பணவீக்கத்தின் தாக்கம், கார்த் தொழிலாளர்கள், விமானத் தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், கல்வியாளர்கள், சேவைத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகள் மத்தியில் வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் வெடிப்பது உட்பட வர்க்கப் போராட்டத்தை உந்துகிறது.

27. போருக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தின் ஒரு முக்கியமான அங்கமாக, அமெரிக்காவில் ஒரு சக்திவாய்ந்த ஏகாதிபத்திய-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சி தீர்மானித்துள்ளது. அமெரிக்கா உலக ஏகாதிபத்தியத்தின் மையம் என்பதும், வளரும் உலக மோதலுக்கான இடம் என்பதும் அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சி மீது மகத்தான அரசியல் பொறுப்புகளை சுமத்துகிறது.

28. ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை உடனடியாக நிறுத்துமாறு சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது. அமெரிக்கா மற்றும் முழு உலக மக்களுக்கும் எதிரான ஒரு சதியாக இந்தப் போர் நடத்தப்படுகிறது. அதன் காரணங்கள் மற்றும் விளைவுகள் குறித்து எந்த விவாதமும் இல்லாமல் இது திணிக்கப்பட்டுள்ளது. நேட்டோ இராணுவக் கூட்டணியை கலைப்பதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாரிய இராணுவ எந்திரத்தை கலைப்பதற்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இதற்கு ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதியளிக்கப்படுகிறது. இராணுவ எந்திரத்திற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் மூலம் செலுத்தப்படுகிறது.

29. முழு ஆளும் வர்க்கத்திற்கும் அதன் இரு கட்சிகளான ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதைத் தவிர இந்த திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அமெரிக்காவில் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சியானது ரஷ்யா மற்றும் உக்ரேன் உட்பட ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களை போர் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஐக்கியப்படுத்தும் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

30. அமெரிக்க மக்களிடையே போருக்கு பாரிய எதிர்ப்பு இருக்கின்றபோதிலும், இந்த எதிர்ப்புக்கு ஒரு வேலைத்திட்டம், முன்னோக்கு மற்றும் தலைமைத்துவம் இல்லாதுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியின் பணி, தொழிலாள வர்க்கம் மற்றும் அதன் முன்னணிப் படையினருக்குள், வெளிநாட்டில் போருக்கும் உள்நாட்டில் சுரண்டலுக்கும் இடையே உள்ள பிரிக்க முடியாத தொடர்பைப் பற்றிய புரிதலை வளர்த்தெடுப்பதும், மேலும் இந்த நிகழ்ச்சிப்போக்கில் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமையை கட்டியெழுப்புவதும் ஆகும். அது, உலக சோசலிசப் புரட்சியின் ஒரு அங்கமாக, அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதையும் அமெரிக்க பொருளாதாரத்தின் சோசலிச மறுசீரமைப்பையும் நோக்கமாகக் கொண்டிருக்கும்.

Loading