வரலாற்று விவாதத்தில், UAW தலைவர் வேட்பாளர் வில் லெஹ்மன், தொழிற்சங்க அதிகாரத்துவத்தை ஒழிக்கவும், சாமானிய தொழிலாளர்களுக்கு அதிகாரமளிக்கவும் அழைப்பு விடுத்தார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளம் வரும் நாட்களில் விவாதத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை பிரசுரிக்கும். முழு காணொளியையும் WillforUAWpresident.org/debatelive இல் காணலாம் மேலும் கீழே பதிவிடப்பட்டுள்ளது.

வியாழன் இரவு ஒரு வரலாற்று விவாதத்தில், UAW தலைவர் வேட்பாளரும், சாமானிய தொழிலாளர் குழு தொழிலாளியுமான வில் லெஹ்மன், ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் (UAW) தொழிற்சங்க அதிகாரத்துவத்தை ஒழித்து, வேலைத் தளத்தில் சாமானிய தொழிலாளர்களின் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான தனது பிரச்சாரத்திற்கு ஒரு சக்திவாய்ந்த வாதத்தை முன்வைத்தார்.

இந்த விவாதம் முன்னாள் நியூ யோர்க் டைம்ஸ் நிருபர் ஸ்டீவன் கிரீன்ஹவுஸால் நடத்தப்பட்டது மற்றும் பாரிய ஊழல் ஊழலை தொடர்ந்து UAW இன் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளரால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் லெஹ்மனை தவிர, UAW தலைவர் ரே கர்ரி, நீண்டகால UAW அதிகாரத்துவ அதிகாரி ஷான் ஃபைன், உள்ளூர் 163 தளத்தின் தலைவர் மார்க் கிப்சன் மற்றும் பிரையன் கெல்லர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பென்சில்வேனியாவின் மாக்கன்கியில் உள்ள மாக் ட்ரக்ஸில் ஒரு அடுக்குத் தொழிலாளியான லெஹ்மன் தனது தொடக்க அறிக்கையில், தனது பிரச்சாரம் சாமானிய தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கிறது மற்றும் முன்னெடுக்கப்படுகிறது என்பதை தெளிவாக நிறுவினார்.

'தேர்தல் நடைபெறுவதற்கான ஒரே காரணம், நிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் வாங்கி எங்களை விற்றதற்காக UAW இன் தலைமை தண்டிக்கப்பட்டதால் தான்' என்று அவர் கூறினார். இது, ஒரு சில மோசமான மனிதர்கள் சம்பத்தப்பட்ட பிரச்சினை அல்ல, ஆனால் ஒட்டுமொத்த அதிகாரத்துவம் தொடர்பான பிரச்சினை. UAW அதிகாரத்துவம் நிர்வாகத்தின் ஒரு பகுதியாகும். எங்கள் சந்தா தொகை பணத்தில் 100,000டாலர்களுக்கு மேல் சம்பாதிக்கும் 450 அதிகாரத்துவத்தினர் உள்ளனர். பணக்கார 15 UAW நிர்வாகிகள் 2021ல் மட்டும் 3 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளனர். 2004 முதல் ரே கர்ரி மட்டும் 2.7 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளார்.

'ஒவ்வொரு தொழிற்சாலையிலும், பணியிடத்திலும் உள்ள தொழிலாளர் குழுக்களைக் கொண்டு எந்திரத்தின் ஆட்சியை மாற்றியமைப்பது அவசியமானது, உண்மையான சாமானிய தொழிலாளர்களின் அதிகாரத்தை உருவாக்குவது அவசியம். தொழிலாளர்கள்தான் முடிவுகளை எடுக்க வேண்டும் மற்றும் நமது பணியிடங்களில் உண்மையான தொழிலாளர் ஜனநாயகத்தை நிறுவ வேண்டும். இதன் பொருள், நிறுவனம் விரும்புகிறது என UAW கூறுவதை அல்ல மாறாக நமக்குத் தேவையானதற்காக போராடுவதற்கு, பொறுப்பற்ற எந்திரத்திலிருந்து அதிகாரத்தை சாமானிய தொழிலாளர்களுக்கு மாற்றுவதாகும்.”

சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கிற்கான அழைப்புடன் சாமானிய தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தை இணைத்த லெஹ்மனுக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள எந்திரத்தின் பல்வேறு பிரதிநிதிகளின் முயற்சிகளின் வடிவத்தையே விவாதம் எடுத்தது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

விவாதத்தின் ஒரு கட்டத்தில், கிரீன்ஹவுஸ் லெஹ்மனின் பிரச்சார அறிக்கையிலிருந்து மேற்கோள் காட்டி ஒரு கேள்வியை முன்வைத்தார், அந்த அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது, 'UAW என்பது பெயரளவில் மட்டுமே ஒரு தொழிற்சங்கம். இரண்டு முன்னாள் தலைவர்கள் உட்பட அதன் தலைமை, எங்களின் சந்தா தொகையை கொள்ளையடித்ததற்காகவும், நிறுவனங்களிடமிருந்து இலஞ்சத்திற்கு ஈடாக எங்களை விற்றதற்காகவும் தண்டிக்கப்பட்டது. இது ஒரு சில மோசமான மனிதர்களின் வழக்கு அல்ல. UAW அதிகாரத்துவம் என்பது நிறுவனங்களின் துணைப்பிரிவாகும், இது குறைந்த ஊதியம் மற்றும் பயங்கரமான வேலை நிலைமைகளுக்கு எதிர்ப்பை அடக்குகிறது. அது எங்களை ஒன்றிணைக்காது.”

கிரீன்ஹவுஸ் கேட்டார், 'நீங்கள் UAW தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அந்த அதிகாரத்துவத்துடன் நீங்கள் எவ்வாறு பணியாற்றுவீர்கள்?”

லெஹ்மன் பதிலளித்தார், “அவர்களில் எவருடனும் பணியாற்றும் எண்ணம் எனக்கு இல்லை. ஆரம்பத்திலிருந்தே, நான் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை நோக்கி, நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கி, நாமே முடிவுகளை எடுத்தோம். பல தசாப்தங்களாக எங்களை விற்றுவிட்ட அதே அதிகாரத்துவ முறைகளைப் பயன்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. நான் தொழிற்சாலை தளத்தில் இருக்கும் தொழிலாளர்களை, அவர்களை ஒழுங்கமைக்கப் பார்க்கிறேன், ஏனென்றால் எல்லா சக்தியும் அங்குதான் இருக்கிறது.'

'[அங்கே] இரண்டு தனித்தனி அடுக்குகளைப் பற்றி நாங்கள் பேசுகிறோம்,' என்று அவர் மேலும் கூறினார். 'இங்குள்ள அதிகாரத்துவத்தினர் இதை விரும்ப மாட்டார்கள், ஆனால் நான் அவர்களிடம் பேசவில்லை. தொழிலாளர்கள் எங்கிருந்தாலும், எந்தத் துறையில் வேலை செய்தாலும் அவர்களிடம் பேசுகிறேன். நாம் மனிதத் தேவைகளின் அடிப்படையில் சமூகத்தை மறுசீரமைக்க வேண்டும். தனியார் இலாப நோக்கு அமைப்பு அல்ல, நிறுவனங்களுடன் பேரம் பேசுவதும் நிறுவனங்கள் அனுமதிப்பதாகச் சொல்வதைச் செய்வதும் அல்ல, எங்களுக்காக செயற்படும் ஒரு அமைப்பு தேவை.”

அதற்கு பதிலளித்த மற்ற வேட்பாளர்கள் அனைவரும் எந்திரத்தை பாதுகாக்க வரிசையாக நின்றனர். அதிகாரத்துவ எந்திரத்தை ஒழிப்பதற்கான எந்தவொரு முயற்சியும் 'பிளவுபடுத்தும்' என்று கெல்லர் அறிவித்தார். 'யாரேனும் ஒருவர் உள்ளே வந்து முழு அதிகாரத்துவத்தையும் எப்படி வெளியேற்றப் போகிறார்கள்' என்று தனக்குத் தெரியாது என்று ஃபைன் கூறினார். கிப்சன், 'நாங்கள் இங்கு ஒருங்கிணைக்க வந்துள்ளோம், பிளவுபடுத்துவதற்கு அல்ல' என அறிவித்தார். UAW எந்திரத்தின் கையால் பொறுக்கியெடுக்கப்பட்ட பிரதிநிதியான கர்ரி, தேசியவாத சொல்லாடல்களை உமிழும் அதே வேளையில் ஊழலில் சிக்கித் தவிக்கும் 'நிர்வாகக் குழுவை' பாதுகாக்க பணிவுடன் முயன்றார்.

லெஹ்மன் பதிலளித்தார், “நாட்டின் அடிப்படையில் தொழிலாள வர்க்கமாகிய எங்களைப் பிரிக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். அது தொழிலாள வர்க்கத்திற்கு இழப்புகளை மட்டுமே விளைவித்தது. ... நான் உருவாக்கும் ஒரே பிரிவு இதுதான்: தொழிலாளர்கள், ஒட்டுண்ணிகள் அல்ல.”

'எங்கள் அணிகளில் ஊழலை நாங்கள் கொண்டிருந்தோம்' அது தொழிற்சங்கத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது என சீர்திருத்தவாதியாகக் காட்டிக் கொண்டிருந்த ஃபைனின் அறிக்கையைத் தொடர்ந்து லெஹ்மன் பதிலளித்தார்:

'மீண்டும், அனைத்து தொழிலாளர்களும் கேட்கிறார்கள், 'நாங்கள்' வேலை செய்யும் உற்பத்தி தளத்தில் 'எங்கள் அணிகளில்' எந்த ஊழலையும் கொண்டிருக்கவில்லை. எங்களிடம் எந்த ஊழலும் இல்லை. ஊழல் செய்தது அதிகாரத்துவம்தான். இது ஒரு கூட்டாட்சி கட்டுப்பாட்டாளரின் கண்காணிப்பில் இருக்கும் அதிகாரத்துவம். … நாங்கள் வெறுக்கும் ஒப்பந்தங்களுக்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம். அதிகாரத்துவத்தால் நாம் பிளவுபட்டுள்ளோம். … அதிகாரத்துவம் தங்களின் வசதியான நிலைகளைத் தக்க வைத்துக் கொள்ள [எல்லாவற்றையும்] வணிகத்திற்கு விட்டுக் கொடுத்துள்ளது. நாங்கள் ஒரே மாதிரியாக இல்லை. தொழிலாளர்கள் அதிகாரத்துவங்களிலிருந்து இருந்து வேறுபட்டவர்கள், மேலும் ஒவ்வொரு தொழிலாளியும் தங்கள் கைகளில் நேரடியாக அதிகாரம் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.”

இந்த அறிக்கைக்குப் பிறகு, கர்ரி மற்றும் ஃபைன் இருவரும் பதிலளிக்க மறுத்துவிட்டனர். 'நான் திருப்திகரமாக இருக்கிறேன்,' என ஃபைன் அறிவித்தார்.

விவாதத்தின் போக்கில், லெஹ்மன் சோசலிசத்திற்கான ஒரு சக்திவாய்ந்த வாதத்தை முன்வைத்தார். 'நான் ஒரு சோசலிஸ்ட்' என்று லெஹ்மன் கூறினார்.

'இதைப் பார்க்கும் ஒவ்வொரு தொழிலாளியும் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நாம் தான் அனைத்து இலாபத்தையும் உருவாக்குகிறோம். மற்ற அனைவரும் அந்த இலாபத்தில் ஒரு ஒட்டுண்ணிகள் மட்டுமே. அனைத்து அதிகாரத்துவங்களும், அனைத்து நிறுவனங்களும். எங்களுக்கு அவை தேவையில்லை. அவர்களுக்கு நாம் தேவை. தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், மருத்துவமனை செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள், நாங்கள் தான் சமூகத்தை முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறோம். அவை உரிமையாளர்கள் அல்ல. அது தொழிலாள வர்க்கமாகிய நாம் தான், அந்த இலாபத்தை எவ்வாறு விநியோகிக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.”

அவரது முடிவுரையில், UAW இல் உள்ள தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை லெஹ்மன் சுருக்கமாகக் கூறினார். இந்த அறிக்கை, முழுமையாக அறிவித்தது:

சகோதர சகோதரிகளே, UAW அதிகாரத்துவத்திடம் இருந்து நாம் அதிகாரத்தை நம் கைகளில் எடுக்க வேண்டும். இந்த அதிகாரத்துவத்தினர் எங்களுக்கு அவை தேவை என்று கூறுகின்றனர், ஆனால் எங்களுக்கு அவை தேவையில்லை. மாறாக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாகமாக நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய சாத்தியமான சக்தியை திறக்க நாம் அதிகாரத்துவத்தை ஒழிக்க வேண்டும்.

ரே கர்ரி மற்றும் ஷான் ஃபைன் அனுபவம் உள்ளவர்கள். அவர்கள் எங்களை விற்கும்போது எங்கள் சந்தா தொகையில் ஆறு எண்ணிக்கை பணம் சம்பாதித்த அனுபவம் அவர்களுக்கு உண்டு. மிக மோசமான ஊழல் நடந்த ஆண்டுகளில், UAW தலைவர்கள் இலஞ்சம் வாங்கிக்கொண்டும், நமது சந்தா தொகையில் ஒருவருக்கொருவர் ஆடம்பரப் பரிசுகளை வாங்கிக்கொண்டும் இருந்தபோது, இவர்கள் அங்கே இருந்தார்கள், அவர்களின் சம்பளம் அதிகரித்துக்கொண்டே இருந்தது, அவர்கள் குப்பை மேட்டின் உச்சிக்கு உயர்ந்தனர். ரே கர்ரியும் UAWவும் நேரடித் தேர்தல்களை முதலில் எதிர்த்தனர்! அவர்களின் 'அனுபவம்' நேர்மறையானது என்று அவர்கள் கூறுவதைக் கேட்க எனக்கு வயிறு வலிக்கிறது.

இந்த விவாதத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் சாமானிய தொழிலாளர்களின் அனுபவங்கள் என்ன? கர்ரி 272,000 டாலர்கள் மற்றும் ஃபைன் 156,000 டாலர்கள் சம்பாதிக்கும் அதே வேளையில், UAW ஊதியம் மிகக் குறைவாக இருப்பதால், இரண்டு வேலைகளில் வேலை செய்யும் வீடற்ற வாகனத் தொழிலாளர்கள் உள்ளனர், UAW அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று UAW கூறுவதால் வேலையில் காயம் மற்றும் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர். UAW அதிகாரத்துவம் அதை அனுமதிப்பதால், நிறுவனங்கள் தாங்கள் விரும்பியதை மட்டுமே செய்ய முடிகிறது. UAW ஆலைகளை மூடி, முழு சமூகங்களையும் அழித்த லார்ட்ஸ்டவுன் மற்றும் ஹாம்ட்ராம்க் போன்ற நகரங்களின் அனுபவம் என்ன? நிலையான வருமானம் பெறும் ஓய்வு பெற்றவர்களின் அனுபவம் பற்றி என்ன? தொழிற்சங்க சந்தா தொகையை செலுத்தும் TPTகள் [தற்காலிக பகுதிநேர தொழிலாளர்கள்], ஆனால் எந்தப் பலனும் கிடைக்காதவர்கள், தங்கள் அண்டை வீட்டுக்காரர்கள் செய்யும் அதே வேலையைச் செய்து குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் பற்றி என்ன? இந்த அதிகாரத்துவவாதிகளின் திட்டம், தங்களை வளப்படுத்தவும், நிறுவனங்களுக்கு இலாபம் ஈட்டவும் நம் அனைவரையும் கொள்ளையடிப்பதாகும்.

முழு தொழிலாள வர்க்கத்திற்கும் விஷயங்களை மாற்றும் சக்தி உள்ளது, ஆனால் அதற்கு அதிகாரத்தை நாமே எடுக்க வேண்டும். ஒருவரையொருவர் இணைத்துக்கொள்ளவும், நமக்குத் தேவையானவற்றிற்காகப் போராடுவதற்கு மாற்று அதிகாரக் கட்டமைப்பை உருவாக்கவும் நமது பணியிடங்களில் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க வேண்டும். மெக்சிகோ, கனடா மற்றும் உலகம் முழுவதும் உள்ள வாகனத் தொழிலாளர்களுடன் நமது போராட்டங்களை இணைக்க வேண்டும். இரயில் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், எஃகு தொழிலாளர்கள் மற்றும் கப்பல்துறை தொழிலாளர்களுடன் இணைந்து நாம் போராட வேண்டும் — தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளும், இரு அரசியல் கட்சிகளையும் கட்டுப்படுத்தி, முதலாளித்துவத்தின் கீழ் அரசாங்கத்தை நடத்தும் நிறுவனங்களின் ஒரே வலையமைப்பால் சுரண்டப்படுகின்றனர்.

எனக்கு வாக்களிக்குமாறு நான் உங்களிடம் கேட்கிறேன், ஆனால் அதை மட்டும் நான் உங்களிடம் கேட்கவில்லை. ஒரு நிலைப்பாட்டை எடுத்து இந்த இயக்கத்தை கட்டியெழுப்ப உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நமக்காக யாரும் அதைச் செய்யப் போவதில்லை. நீங்கள் என்னுடன் உடன்பட்டால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நீங்கள் தனியாக இல்லை. உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் போராட விரும்புகிறார்கள். இந்தத் தேர்தலில் போட்டியிட உறுதிமொழி எடுத்துக்கொண்டு, எழுந்து நின்று போராடும்படி கேட்டுக்கொள்கிறேன். அதை நீங்கள் உங்களுக்காக மட்டும் செய்யாமல், உங்கள் குழந்தைகளுக்காகவும், உங்கள் சக ஊழியர்களுக்காகவும் செய்யுங்கள். ஒரு சர்வதேச சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழு மூலோபாயத்துடன் நாம் தொழிலாள வர்க்கத்தின் சக்தியை கட்டவிழ்த்து வரலாற்றின் போக்கை மாற்ற முடியும்.

விவாதத்தைத் தொடர்ந்து சில மணிநேரங்களில், லெஹ்மனின் பிரச்சாரத்திற்கு தொழிலாளர்கள் ஆதரவு செய்தியை அனுப்பினர். மிச்சிகனில் உள்ள ஃபிளின்ட்டில் உள்ள ஒரு GM தொழிலாளி, “என்ன ஒரு விவாதம்! லெஹ்மன் சிறப்பாக அடையாளம் காட்டினார்! அவர்கள் அனைவரும் ஆரம்பத்தில், வில் அடிப்படையில் முழு தொழிற்சங்கத்தையும், அதன் மூலம் அதன் உழைக்கும் உறுப்பினர்களையும் எதிர்க்கிறார் என்ற தவறான கருத்தை தள்ள முயற்சித்தனர். ஆனால் அவரது பதில்கள், வர்க்க அடுக்குகளையும் அதிகாரத்துவத்தின் ஒட்டுண்ணித்தனத்தையும் விளக்குவதில் சிறப்பாக இருந்தன' என்றார்.

கடந்த ஆண்டு UAW எந்திரத்தால் மூடப்பட்ட ஒரு வரலாற்று வேலைநிறுத்தத்தின் தளமான வேர்ஜீனியாவின் டப்ளினில் உள்ள வோல்வோ டிரக்ஸ் நியூ ரிவர் வலி ஆலையில் ஒரு தொழிலாளி, 'வில் நெற்றியில் உதைத்தார், ஓல்' ரே [கர்ரி] ஒரு வார்த்தைகூட உண்மை சொல்லவில்லை. ஓய்வு பெற்றவர்களைப் பற்றி, அவரது மொழியில் கூறினார், ‘அவர்களுக்கு நாம் என்ன செய்ய முடியும், அவர்கள் ஓய்வு பெற்றவர்கள், நிறுவனம் அவர்களைப் பற்றி எங்களிடம் பேசுவது கூட இல்லை?’ மேலும் அவர் அங்கே அமர்ந்து, இன்னும் அதிகமாகப் பெற்றிருப்பதாகக் கூறுகிறார்.” என்றார்.

டேனா கார்ப்பரேஷனில் உள்ள ஒரு தொழிலாளி, அங்கு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு அதிக அளவில் வாக்களித்தனர், ஆனால் கடந்த ஆண்டு அவர்கள் மீது ஒரு விற்பனை ஒப்பந்தம் கட்டாயப்படுத்தப்பட்டது, 'நான் விவாதத்தின் ஒரு பகுதியை பார்க்க முடிந்தது, மேலும் அமெரிக்க தொழிலாளர்கள் அதில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதைப் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக இருந்தது, அவர்களில் எவரையும் உண்மையில் விட்டுவிடக்கூடாது.”

UAW ஜனாதிபதிக்கான வில் லெஹ்மனின் பிரச்சாரம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, WillforUAWPresident.org ஐப் பார்வையிடவும்.

Loading