முன்னோக்கு

வாஷிங்டனின் ஆபத்தான அணுஆயுத கொள்கைகள் பேரழிவுக்கு அச்சுறுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கியூபா ஏவுகணை நெருக்கடியில் இருந்து 60 ஆண்டுகளை அடுத்த மாதம் குறிக்கும், அது, அப்போது, உலகை அணு ஆயுதப் போருக்கு மிக நெருக்கத்திற்குக் கொண்டு வந்திருந்தது.

அந்த நெருக்கடியின் இறுதிக் கட்டம் அக்டோபர் 22, 1962 இல் தொடங்கியது, அப்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி தொலைக்காட்சியில் தேசத்திற்கு உரையாற்றுகையில், புளோரிடா கடற்கரையில் இருந்து பல நூறு மைல்கள் தொலைவில் உள்ள கியூபாவுக்கு சோவியத் ஒன்றியத்தில் இருந்து அணு ஆயுதங்கள் ஏந்தும் ஏவுகணைகளைக் கூடுதலாகக் கைமாற்றுவதைத் தடுக்க அமெரிக்க கடற்படை ஒரு 'தனிமைப்படுத்தலை' நடைமுறைப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

நவம்பர் வரை அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்த போதினும், அக்டோபர் 28 இல் அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே ஏற்பட்ட ஓர் ஒப்பந்தத்துடன், அந்த நெருக்கடி நடைமுறையளவில் முடிவுக்கு வந்திருந்தது. கியூபாவில் இருந்து சோவியத் ஏவுகணைகளை திரும்பப் பெறுவதற்குப் பிரதியீடாக, துருக்கியில் இருந்து அமெரிக்கா அதன் ஏவுகணைகளைத் திரும்பப் பெறுவதாக இரகசிய வாக்குறுதி அளித்தது. இதற்கு இடைப்பட்ட ஆறு நாட்களில், உலகம், நாகரீகத்தையே முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய ஓர் அணு ஆயுதப் போரின் விளிம்பில் இருந்தது.

அந்த நெருக்கடியானது பல அம்சங்களில் தற்போதைய இந்த அமெரிக்க-நேட்டோ மோதலுடன் பொருந்துகிறது. முதலாவதாக, உக்ரேனைத் திறம்பட நேட்டோவுடன் இணைப்பது மீதும் மற்றும் ரஷ்யாவின் எல்லையில் உள்ள ஒரு நாட்டை இராணுவ ரீதியில் பாரியளவில் ஆயுதமயப்படுத்துவதன் மீதும் ரஷ்யாவுக்கு உள்ள எந்தவொரு கவலைகளையும் அமெரிக்கா இப்போது நிராகரிக்கின்ற அதேவேளையில், மேற்கு அரைக்கோளத்தில் சோவியத் இராணுவ பிரசன்னத்தைத் தவிர்ப்பதற்காக அவர்களே அணு ஆயுதப் போரில் ஈடுபடத் தயாராக இருந்தனர்.

இரண்டாவதாக, 'தனிமைப்படுத்தலை' தொடங்கிய அதேவேளையில், கென்னடி, அந்த நெருக்கடியின் உச்சக்கட்டத்தில், ஒரு பேச்சுவார்த்தைத் தீர்வின் மூலமாக ஏதாவது வழி காண விரும்பிய அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினருக்காகப் பேசினார். கியூபா மீது குண்டு வீசி படையெடுப்பு நடத்த — அதாவது சோவியத் ஒன்றியத்துடன் போர் நடத்த — இராணுவ மற்றும் அரசியல் ஸ்தாபகத்திற்குள் இருந்து வந்த அழைப்புகளைக் கென்னடி நிர்வாகம் எதிர்த்தது - இந்த உண்மை இறுதியில் ஓராண்டுக்குப் பின்னர் அவர் படுகொலைக்குப் பங்களித்தது.

'இந்த கிரகம் எப்போதாவது அணு ஆயுதப் போரில் நாசமாக்கப்பட்டால்,' அந்த நெருக்கடிக்குப் பின்னர் பேசிய ஓர் உரையில் கென்னடி கூறினார், 'ஆணு ஆயுதத் தாக்குதல்களால் 300 மில்லியன் அமெரிக்கர்கள், ரஷ்யர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் 60 நிமிடத்தில் அழிக்கப்பட்டால், அந்த நாசத்திற்குப் பின்னர் உயிர் பிழைத்திருப்பவர்கள் நெருப்பு, நஞ்சு, குழப்பம் மற்றும் பேரழிவுகளைச் சகிக்க வேண்டியிருந்தால், அப்படி உயிர் பிழைத்தவர்களில் ஒருவர் மற்றொருவரிடம் 'இது எப்படி நடந்து?' என்று கேட்பதையோ, 'அது ஒரே ஒருவருக்குத் தான் தெரியும்,' என்று விசித்திரமான பதிலை அவர் பெறுவதையோ நான் விரும்பவில்லை.” ஜப்பானின் அப்பாவி பொதுமக்கள் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியதில் உச்சத்தை அடைந்த இரண்டாம் உலகப் போர் முடிந்து 17 ஆண்டுகளுக்குப் பின்னர் கென்னடி இந்த வார்த்தைகளை பேசி இருந்தார்.

தற்போதைய இந்த நெருக்கடியின் சூழலில், அக்டோபர் 1962 இன் பயங்கர சம்பங்களுக்குப் பின்னர் அணு ஆயுதப் போர் அபாயத்தை அதன் உச்சபட்ச புள்ளிக்கு அதிகரித்து வரும் ரஷ்யா உடனான மோதலை மிகப் பெரியளவில் விரிவாக்குவதை எதிர்க்க, அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தில், அல்லது அந்த விஷயத்தில், நேட்டோவில் உள்ள ஐரோப்பிய சக்திகளிலும், எந்தவொரு பிரிவும் இல்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

உக்ரேன் போரில் அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளின் பாரிய தலையீட்டால் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்ட ரஷ்யாவில் உள்ள புட்டின் அரசாங்கம், அச்சுறுத்தல்களுடன் விடையிறுத்து வருகிறது. வடக்கு உக்ரேனில் அதன் இராணுவத் தோல்விக்குப் பின்னர், புட்டின் மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் இருவருமே, இந்த மோதலில் நேட்டோ மேற்கொண்டு தலையிட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று அச்சுறுத்தி உள்ளனர்.

ஏகாதிபத்திய சுற்றிவளைப்புக்கு ரஷ்யத் தன்னலக்குழுவின் அவநம்பிக்கையான விடையிறுப்பை வெளிப்படுத்தும் இந்த அச்சுறுத்தல்கள், மிகவும் உண்மையானவை. ரஷ்யாவிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் உள்ளன, அத்துடன் உலகில் எந்த இடத்திற்கும் பாய்ந்து இரண்டே மணி நேரத்தில் அமெரிக்காவின் ஒவ்வொரு முக்கிய நகரையும் தரைமட்டமாக்கி விடும் விதமான, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் உள்ளன.

பின்வாங்குவது சாத்தியமில்லை என்பதே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளின் பொதுவான பிரகடனமாக உள்ளது. புட்டினின் “அணு ஆயுதங்களைப் பற்றிய கருத்துக்கள், உக்ரேனுக்கு ஆதரவளிக்கும் எங்களின் தீர்மானத்தை, உறுதியை, ஒற்றுமையை அசைத்து விட முடியாது,” என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத் துறைக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்தார். ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின லாம்ப்ரெக்ட் கூறுகையில், 'உக்ரேனின் வெற்றிகளுக்கு [புட்டினின்] எதிர்வினை, உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க மட்டுமே எங்களை ஊக்குவிக்கிறது' என்றார். புட்டினின் 'அணு ஆயுதங்கள் பற்றிய வாய்சவுடால்,' 'எங்களைத் தொந்தரவூட்டவில்லை' என்று டச்சு பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்தார்.

உக்ரேன் மீதான போரைத் தொடர்ந்து விரிவாக்க வாஷிங்டன் போஸ்ட் புதன்கிழமை வெள்ளை மாளிகையை ஊக்குவித்தது, இந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் அவர்கள் பேசும் போது அதை அவர்கள் செய்ய இருப்பதாக பைடெனும் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கெனும் தெளிவுபடுத்தினர்.

'புட்டின் அவநம்பிக்கை அடைந்து வருகிறார்' என்று போஸ்ட் இன் ஆசிரியர் குழு எழுதியது. 'உக்ரேனும் மேற்கு நாடுகளும் இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.' அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான புட்டினின் அச்சுறுத்தல்களைக் குறிப்பிட்டு போஸ்ட் குறிப்பிடுகையில், 'திரு. புட்டின் அவரது அச்சுறுத்தல்களை செயல்படுத்தத் தயாராவதை விட அவற்றைக் கொண்டு அடிபணிய வைக்க நினைப்பது மோசமான விஷயமாக இருக்கும்,” என்று நிறைவு செய்தது.

அணு ஆயுதப் போரின் நிஜமான ஆபத்தைக் காட்டி அமெரிக்காவை அடிபணிய வைக்க முடியாது —அல்லது, மற்றவர்கள் குறிப்பிட்டதைப் போல, “அதைரியப்படுத்த' முடியாது— என்பது என்ன அர்த்தப்படுத்துகிறது? அதன் அர்த்தம் என்னவென்றால் அமெரிக்க ஆளும் வர்க்கம் பின்விளைவுகளைப் பொருட்படுத்தாமல் போரின் விரிவாக்கத்தைத் தொடரும் என்பதே ஆகும். இணைக்கம் ஆவதால் ஏற்படும் விளைவுகளுக்கு எதிராக, மனிதகுல நாகரிகத்தின் நிர்மூலமாக்கலுக்கு இட்டுச் செல்லக் கூடிய இந்த போர் விரிவாக்கத்திற்குக் கொடுக்கப்படும் விலைகளை அளவிடுவதில், அணு ஆயுதப் போர் அபாயத்தை ஏற்கத் தக்க விளைவாக அவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள்.

இது, உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் குறிப்பிடத்தக்க பிரிவுகளுடன் சேர்ந்து, ஆளும் வர்க்கத்தை பீடித்துள்ள, நம்ப முடியாத அளவிலான பொறுப்பற்றத்தன்மை மற்றும் போர் வெறித்தனத்தைப் பற்றி பேசுகிறது.

அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து அரசு எந்திரத்திற்குள் தீவிர விவாதங்கள் நடந்து வருகின்றன. செவ்வாய்கிழமை நடந்த அணு ஆயுத மூலோபாயம் சம்பந்தமான செனட் ஆயுதச் சேவைக் கமிட்டியின் ஓர் அசாதாரண விசாரணையில், துணை ஜனாதிபதியின் வசிப்பிடத்தை வாஷிங்டனுக்கு வெளியே நகர்த்தலாமா என்ற விவாதங்களும் உள்ளடங்கி இருந்தன. 'ஜனாதிபதி, துணைத் தலைவர் மற்றும் தலைமை இல்லாமல் போனால், நாம் தலை துண்டிக்கப்பட்டவர்களாக ஆகி விடுவோம், இரண்டாவது தாக்குதல் இல்லாத காரணத்தால் [அணு ஆயுதங்களை] செலுத்துவது குறித்து முடிவெடுக்க அங்கே யாரும் இருக்க மாட்டார்கள்,” என்பதால், “நம் தலைமையை வெவ்வேறு இடங்களில் வைக்க' வேண்டுமா என்று செனட்டர் அங்குஸ் கிங் வினவினார்.

எப்படியிருந்தாலும், போர் நடத்தப்பட வேண்டும். இந்த வார தொடக்கத்தில் WSWS குறிப்பிட்டதைப் போல, 'படுபாதாளத்தின் விளிம்பு வரை வந்த பின்னரும், “வெற்றியை நோக்கி முன்னேறுவோம்!” என்பதே அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பாக உள்ளது.

இந்த சமூக-அரசியல் நோய் எதை விளக்குகிறது? அனைத்திற்கும் முதலில், புவிசார் அரசியல் நலன்கள் உள்ளன. அமெரிக்க மற்றும் நேட்டோ சக்திகள் ஏகாதிபத்தியத்தின் நேரடி சுரண்டலுக்கு உதவும் வகையில் ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் அல்லது அந்நாட்டின் மிகப் பெரும் நிலப்பரப்பைத் துண்டாடும் வகையில் ஒரு மோதலுக்குள் ரஷ்யாவை இழுத்து வரும் நோக்கில், அவை உக்ரேனில் போரைத் தூண்டிவிட்டன. சோவியத் ஒன்றிய கலைப்பைத் தொடர்ந்து வந்த மூன்று தசாப்தங்கள் முடிவில்லா போராக இருந்தன, இவ்வாறு இராணுவப் பலத்தைக் கொண்டு அமெரிக்கா அதன் பொருளாதார வீழ்ச்சியைச் சரி கட்ட விரும்பியது.

இந்த மோதல் நெடுகிலும், ரஷ்யாவின் முழுமையான சரணடைவு இல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் எந்தவொரு தீர்வு காணப்படுவதையும் அமெரிக்கா எதிர்த்துள்ளது. வடக்கு உக்ரேனில் ஏற்பட்ட ரஷ்ய தோல்விக்குப் பின்னர், அமெரிக்க ஆளும் வர்க்கம் இரத்த வாசனையை நுகர்கிறது. அனைத்திற்கும் மேலாக, ரஷ்யா உடனான அதன் மோதலை அது தீவிரப்படுத்தி வரும் அதே வேளையில், அமெரிக்கா சீனாவுக்கு எதிராக இன்னும் அதிகமான போர் வெறி அச்சுறுத்தல்களை வெளியிட்டு, தைவான் விவகாரத்தில் பேரழிவுகரமான போருக்கு அடித்தளம் அமைத்து வருகிறது.

இரண்டாவதாக, அமெரிக்காவுக்கு உள்ளேயும் அனைத்து முக்கிய முதலாளித்துவ நாடுகளுக்கு உள்ளேயும் நெருக்கடி நிலவுகிறது. சர்வதேச அளவில் 20 மில்லியன் பேர் கொல்லப்பட்டுள்ள மற்றும் அமெரிக்காவில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ள, தொடர்ந்து கொண்டிருக்கும் பெருந்தொற்று பாதிப்புடன் சேர்ந்து, தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் பணவீக்கம், சந்தைகளில் அபிவிருத்தி அடைந்து வரும் விற்றுத்தள்ளல்கள் மற்றும், ஆளும் வர்க்கத்திற்கு மிகவும் அபாயகரமாக, வர்க்கப் போராட்டத்தின் அதிகரிப்பு ஆகியவையும் சேர்ந்துள்ளன. ஓர் அவநம்பிக்கையான ஆளும் உயரடுக்கு வெளிநாட்டு போர் மூலம் உள்நாட்டு நெருக்கடியை எப்படியாவது தீர்க்க முயல்வது இதுதான் முதல் முறை அல்ல.

ஊடகங்களின் எல்லா விவாதங்களும் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்தே உள்ளன என்றாலும், அமெரிக்கா மட்டுந்தான் அத்தகைய ஆயுதங்களை இதுவரை பயன்படுத்திய ஒரே நாடு என்ற வரலாற்று உண்மையையும், இது சம்பந்தமாக, வலியுறுத்த வேண்டி உள்ளது. ஓர் அணு ஆயுத விடையிறுப்பைப் தூண்டக் கூடிய ஒரு விரிவாக்கத்தில் இருந்து அமெரிக்க ஆளும் வர்க்கத்தை 'தடுக்க' முடியாது என்றால், “முன்கூட்டிய' தாக்குதலுக்குத் தன்னை அது தயார் செய்து கொள்வதில் இருந்து அதை எது தடுத்துவிடும்? அமெரிக்க இராணுவக் கோட்பாடு இந்தச் சாத்தியக்கூறை ஒருபோதும் ஒதுக்கி விடவில்லை.

இந்தச் சூழ்நிலையில் மிகப் பெரும் ஆபத்தே, தொழிலாள வர்க்கம் அது எதிர்கொண்டிருக்கும் அச்சுறுத்தலை அறியவில்லை என்பது தான். அரசின் பிரச்சார அங்கமாக விளங்கும் ஊடகங்கள், மக்களை எச்சரிக்க எதுவும் செய்வதில்லை. ஆளும் வர்க்கம் அதன் கொள்கைகளை நியாயப்படுத்த பயன்படுத்தும் எல்லா பொய்களும் சவால் செய்யப்படாமல் போய் விடுகின்றன. செல்வச் செழிப்பான உயர்மட்ட நடுத்தர வர்க்கம், ஜனநாயகக் கட்சியைச் சுற்றி உள்ள போலி-இடது அமைப்புகள் இவர்களுக்காக பேசும் நிலையில், இந்த வர்க்கம், எதற்கெடுத்தாலும், போருக்கான அதன் கோரிக்கையில் இன்னும் அதிக வெறித்தனமாக இருக்கிறது, அதன் சௌகரியமான வாழ்க்கை முறையை எதுவும் பாதிக்காது என்று அது நம்புகிறது.

வெகுஜனங்கள் மத்தியில், போருக்கு பரந்த ஆதரவு இல்லை, அவர்களின் அரசாங்கம் மில்லியன் கணக்கான மக்களை தியாகம் செய்யும் என்பதன் மீது அவநம்பிக்கை மட்டுமே உள்ளது. ஆனால் முதலாளித்துவ அரசாங்கங்கள் அத்தகைய கொலைபாதகக் கணக்கீடுகளைச் செய்ய முழுமையாகத் தகுதி உடையவை என்பதையே, வரலாற்று அனுபவம் — மற்றும், மிக சமீபத்தில், கோவிட்-19 பெருந்தொற்று அனுபவமும்— காட்டுகிறது.

மனித குலத்தை அச்சுறுத்தும் இந்தப் பேரழிவு தவிர்க்கப்பட வேண்டுமானால், தொழிலாள வர்க்கத்தின் போருக்கு எதிரான கோபம் நனவுபூர்வமாக ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இது அமெரிக்கா முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களின் அதிகரித்து வரும் போராட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும். அது போருக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கும் ஒரு சோசலிச, சர்வதேசியவாத மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்துடன் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.

Loading