முன்னோக்கு

விரக்தி, பிரமை மற்றும் பொறுப்பற்ற தன்மை: உக்ரேனில் போர் அணுசக்தி மோதலை நோக்கி செல்ல அச்சுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதனன்று, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ரஷ்ய இராணுவத்தின் பகுதியளவு அணிதிரட்டலை அறிவித்து, சுமார் 300,000 சேமப்படையினரை அழைத்தார். இது உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான ஏழு மாத கால அமெரிக்க-நேட்டோ போரில் ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தைக் குறிக்கிறது.

'ரஷ்யாவிற்கு எதிராக பேரழிவு ஆயுதங்களை -அணு ஆயுதங்களை- பயன்படுத்துவதற்கான சாத்தியம் மற்றும் ஒப்புதல் குறித்து முக்கிய நேட்டோ நாடுகளின் சில உயர்மட்ட பிரதிநிதிகள் அளித்த அறிக்கைகள்' பற்றி மேற்கோள் காட்டிய புட்டின் பின்வருமாறு குறிப்பிட்டார்:

ரஷ்யாவைப் பற்றி இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுபவர்களுக்கு, நம் நாட்டிலும் பல்வேறு வகையான ஆயுதங்கள் உள்ளன என்பதையும், அவற்றில் சில நேட்டோ நாடுகளின் ஆயுதங்களை விட நவீனமானவை என்பதையும் நினைவூட்ட விரும்புகிறேன். நமது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், ரஷ்யாவையும் நமது மக்களையும் பாதுகாப்பதற்கு, எங்களிடம் உள்ள அனைத்து ஆயுத அமைப்புகளையும் நாங்கள் நிச்சயமாகப் பயன்படுத்துவோம். இது ஒரு முட்டாள்தனம் அல்ல.

'எங்களிடம் உள்ள அனைத்து ஆயுத அமைப்புகளும்' என்ற குறிப்பு தெளிவாக உள்ளது. புட்டின் அணு ஆயுதப் போருடன் அச்சுறுத்தினார்.

ரஷ்யாவின் Sarmat கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெள்ளிக்கிழமை வடமேற்கு ரஷ்யாவில் உள்ள பிளெசெட்ஸ்க் ஏவுதளத்தில் இருந்து சோதனைக்காக ஏவப்பட்டபோது வெடித்து சிதறியது. (Russian Defense Ministry Press Service via AP, File)

புட்டின் தனது உரையில், 'மேற்கு நாடுகளின் அந்த பகுதியின் குறிக்கோள் நம் நாட்டை பலவீனப்படுத்துவதும், பிளவுபடுத்துவதும், இறுதியில் அழிப்பதும் ஆகும். அவர்கள் 1991 இல் சோவியத் ஒன்றியத்தை பிளவுபடுத்த முடிந்தது. இப்போது ரஷ்யாவிற்கும் அவ்வாறே செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர்கள் வெளிப்படையாகக் கூறுகிறார்கள். இது ஒருவருக்கொருவர் கொடிய பகையை ஏற்படுத்தும் பல பிராந்தியங்களாக பிரிக்கப்படும்.”

நேட்டோ 'உக்ரேனிய மக்களை பீரங்கித் தீவனமாக மாற்றி ரஷ்யாவுடன் போருக்குத் தள்ளியது' என்று அவர் வலியுறுத்தினார். உக்ரேனிய இராணுவம் 'நேட்டோ தரங்களின்படி பயிற்சியளிக்கப்பட்டு மேற்கத்திய ஆலோசகர்களிடமிருந்து உத்தரவுகளைப் பெறுகிறது' என்று அவர் கூறினார், 'இன்று நமது ஆயுதப்படைகள்' 'கூட்டாக மேற்கு நாடுகளின் முழு இராணுவ எந்திரத்திற்கும்' எதிராகப் போராடுகின்றன.

அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளின் நோக்கங்களைப் பற்றிய புட்டினின் கணக்கு ஒட்டுமொத்தமாக சரியானது. உக்ரேனிய இராணுவம், நேட்டோவின் முற்றிலும் சொந்தமான துணை நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. ரஷ்யாவை ஸ்திரமற்றதாக்கி இறுதியில் உடைக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா அதற்கு நேரடியாக பயிற்சி அளித்து, வழிநடத்தி, ஆயுதபாணியாக்குகிறது.

ரஷ்ய எல்லைக்குள் தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்குவது தொடர்பாக அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்திற்குள் உள்ள 'விவாதம்' குறித்த நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரைக்கு புட்டின் பதிலளித்திருக்கக்கூடும். 'நம் நாட்டை பலவீனப்படுத்துவது, பிளவுபடுத்துவது மற்றும் இறுதியில் அழிப்பது' என்ற நோக்கத்தைப் பொறுத்தவரை, இது ஐரோப்பாவுக்கான முன்னாள் அமெரிக்க இராணுவ தளபதி பென் ஹோட்ஜஸால் ஒப்புக் கொள்ளப்பட்டது. அவர் கடந்த வாரம் கூறினார், அமெரிக்கா '[புட்டினின்] ஆட்சியினது மட்டுமல்ல, மாறாக ரஷ்ய கூட்டமைப்பினது உடைவின் தொடக்கத்தைப் பார்த்து வருகிறது' என்றார்.

வடக்கு உக்ரேனில் ரஷ்யா சந்தித்த இராணுவ பேரழிவின் பின்னர் அவரது அறிக்கை வந்துள்ளது, இதில் உக்ரேனிய படைகள் சில நாட்களுக்குள் டஜன் கணக்கான மைல் நிலப்பரப்பைக் கைப்பற்றின. கார்கிவ் தோல்விக்குப் பின்னர், WSWS எழுதியது:

கிரெம்ளின், இந்த இராணுவப் பேரழிவில் இருந்து ஒரு பாரிய இராணுவ விரிவாக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று முடிவெடுக்கும் என்பதை ஒருவரும் நிராகரிக்கவில்லை, அது நேட்டோவின் விரிவாக்கத்திற்கு மட்டுமே வழிவகுக்கும். சுயமுரண்பாடாக, ஏகாதிபத்தியத்துடன் ஒரு இணக்கத்தை அடைவதற்கான கிரெம்ளினின் அவநம்பிக்கையான முயற்சிகள் ஒரு வெப்ப அணுவாயுத போரைத் தூண்டக்கூடிய தொடர்ச்சியான நடவடிக்கைகளையும் விலக்கவில்லை.

இதுதான் இப்போது நடக்கிறது. தற்போதைய மோதல் அணுவாயுத வெடிப்பை அச்சுறுத்துகிறது என்ற புட்டினின் எச்சரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், புட்டின் தனது உரையை ஆற்றிய சில மணிநேரங்களுக்குப் பின்னர், பைடென் நெருப்பில் எண்ணெயை ஊற்றி பதிலளித்தார். ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய பைடென், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரிய தரைப் போர் 'ஒரு மனிதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட போர்' என்று அறிவித்தார். புட்டினின் கவலைகள் கற்பனையானவை என்று வலியுறுத்தினார். 'ரஷ்யா அச்சுறுத்தப்பட்டதால் தான் செயல்பட வேண்டியிருந்தது என்று புட்டின் கூறுகிறார்,' 'ஆனால் யாரும் ரஷ்யாவை அச்சுறுத்தவில்லை, ரஷ்யாவைத் தவிர வேறு யாரும் மோதலை நாடவில்லை' என்று பைடென் கூறினார்.

அமெரிக்க பொதுமக்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் எண்ணற்ற அறிக்கைகளால் முரண்படும் இந்த அறிக்கைகளை பைடென் வெளிப்படையாக நம்பவில்லை.

பைடென் தனது உரையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிரந்தர பண்பாக இருக்கும் வெட்கக்கேடான பாசாங்குத்தனத்துடன் போரின் தோற்றம் பற்றிய பொய்யான விளக்கத்தை இணைத்தார். 'ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைகளை வெட்கமின்றி மீறியதற்காக ரஷ்யாவைக் கண்டனம் செய்தார். நாடுகள் தங்கள் அண்டை நாடுகளின் நிலப்பரப்பை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பதற்கு எதிரான தெளிவான தடையை விட முக்கியமானது எதுவுமில்லை.' என்று அவர் ரஷ்யாவைக் கண்டித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை அமெரிக்கா பலமுறையும் அப்பட்டமாக மீறியுள்ளது என்பதை உலகம் மறந்துவிட வேண்டும் என்று பைடென் விரும்புகிறார். இது அரசியல் நோக்கங்களை அடைய போரை பயன்படுத்துவதை தடை செய்கிறது. 2003 ஆம் ஆண்டு ஈராக் மீதான படையெடுப்பு, 'ஐ.நா. சாசனத்திற்கு இணங்கவில்லை' மற்றும் 'சட்டவிரோதமானது' என்று அப்போதைய ஐ.நா பொதுச்செயலாளர் கோஃபி அன்னன் கூறினார். ஆனால் யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா உட்பட அமெரிக்க இராணுவத்தால் அழிக்கப்பட்ட பல நாடுகளில் இதுவும் ஒன்று மட்டுமே. இதில் யேமனுக்கு எதிராக சவூதி அரேபியா மற்றும் பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேலின் அமெரிக்க ஆதரவு போர்களையும் ஒருவர் சேர்க்க வேண்டும்.

ஒரு பெரிய சர்வதேச நெருக்கடி அணுஆயுதப் போரை நோக்கி இட்டுச் செல்கிறது என்ற வெளிப்படையான அறிவிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த பேரழிவை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி பைடெனிடம் முற்றிலும் எந்த திட்டமும் இல்லை என்ற உண்மையை மறைப்பதற்காக பாசாங்குத்தனமாக அறநெறியை உருவாக்கினார்.

1960களில் பனிப்போரின் உச்சக்கட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி அறிவித்தார், “ஒருபோதும் பயத்தால் பேச்சுவார்த்தை நடத்த வேண்டாம். ஆனால் பேச்சுவார்த்தைக்கு ஒருபோதும் பயப்பட வேண்டாம். கியூபா ஏவுகணை நெருக்கடி வெடித்தபோது, கென்னடி மற்றும் சோவியத் அதிபர் நிகிதா க்ருஷ்சேவ் இருவரும் படுகுழியில் இருந்து விலகிச் செல்ல ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டதால் ஒரு அணுவாயுதப் போரை தவிர்க்க முடிந்தது.

இதற்கு நேர்மாறாக, பனிப்போரின் போது எந்த நேரத்திலும் இல்லாத வகையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வெளிப்படையான மற்றும் ஐயத்துக்கிடமற்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரேனின் இராணுவ நோக்கங்களை அடைவதைத் தவிர போரின் எந்தவொரு விளைவையும் முற்றிலுமாக நிராகரித்தன. இதை ஆளும் வர்க்கம் எதிர்கொள்ளும் நெருக்கடி மற்றும் விரக்தியால் மட்டுமே விளக்க முடியும்.

புட்டின், ரஷ்ய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக, ரஷ்ய தேசியவாதத்தின் வரலாற்று ரீதியாக திவாலான கொள்கைகளை முன்னெடுத்து வருகிறார். சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பேரழிவு விளைவுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், ரஷ்யா 'நாடுகளின் சமூகத்திற்குள்' (“community of nations,”) வரவேற்கப்படும் என்ற மாயையைத் தொடரும் அதே வேளையில், ரஷ்ய தன்னலக்குழு இப்போது ஏகாதிபத்தியத்தின் யதார்த்தத்தை எதிர்கொண்டுள்ளது.

ஏகாதிபத்திய சக்திகள், தங்கள் சொந்த வழியில், மிகுந்த அவநம்பிக்கையுடன் உள்ளனர். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளின் ஆளும் வர்க்கம் ஒரு சமூக வெடிமருந்து பீப்பாயின் மீது அமர்ந்துள்ளது. பல தசாப்தங்களாக வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்து வரும் தொழிலாள வர்க்கத்தின் மீது அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், மேலும் சுரண்டல் மற்றும் துயரத்தை மட்டுமே உறுதிப்படுத்தும் முதலாளித்துவ ஒழுங்கின் மீது அது பெருகிய முறையில் அதிருப்தி அடைந்து வருகிறது.

ரஷ்யாவின் இராணுவத் தோல்விக்குப் பின்னர், வெள்ளை மாளிகையும் நேட்டோவும், தாக்கப்படலாம் என உணர்கின்றது, தங்களின் நடவடிக்கைகளில் பெருகிய முறையில் கட்டுப்பாடின்றி, பாரிய அபாயங்களை எடுத்து வருகின்றன. ஊடகங்களின் வெற்றிகரமான தொனியை தி எகனாமிஸ்ட் வெளிப்படுத்தியது. நீண்ட தூர ATACMS ஏவுகணை போன்ற இன்னும் கூடுதலான ஆயுதங்களை அமெரிக்கா நாட்டிற்கு வழங்கினால் உக்ரேனில் 'வெற்றி' உறுதி செய்யப்படலாம் என்று அது அறிவித்தது.

ஒன்று அணுசக்தி யுத்தத்தின் அச்சுறுத்தல் கற்பனையானது என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள், அல்லது வெப்ப அணுவாயுத போரின் வாய்ப்பு அவர்கள் தேவையில்லாமல் கவலைப்பட வேண்டிய ஒன்றல்ல. படுகுழியின் விளிம்பிற்குச் சென்றபின், அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பதில்: 'வெற்றியை நோக்கி!' என்பதாக உள்ளது.

ஏகாதிபத்தியவாதிகளின் விரக்தியானது, ஒன்று எங்கே முடிவடைகிறது, மற்றொன்று தொடங்குகிறது என்று சொல்ல முடியாத அளவுக்கு சுய-மாயையுடன் கலந்திருக்கிறது. ஒருபுறம், புட்டின் ஒரு 'அரக்கன்' என்றும், கண் இமைக்கும் நேரத்தில் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தும் பைத்தியக்காரன் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். மறுபுறம், அவர்கள் அணு ஆயுதப் போரின் அபாயத்தை நிராகரிக்கிறார்கள், டச்சு பிரதம மந்திரி மார்க் ருட்டவின் பதிலில் சுருக்கமாக, புட்டினின் 'அணு ஆயுதங்கள் பற்றிய வாயடிப்பு நம்மை உறைய வைக்கிறது' என்று கூறினார்.

மோசமானது தவிர்க்கப்பட்டாலும், நிலைமை அணு ஆயுதப் போரில் இறங்கவில்லை என்றாலும், விரிவாக்கத்தின் சுழல் நூறாயிரக்கணக்கான மக்களுக்கு மரணத்தை அச்சுறுத்துகிறது. மேலும் ரஷ்யாவுடனான மோதலில், ஏகாதிபத்திய சக்திகளால் முற்றிலும் தவிர்க்கமுடியாததாக பார்க்கப்படும் உக்ரேன் தொழிலாளர்கள் உட்பட மில்லியன் கணக்கானவர்கள் வறுமை மற்றும் இடப்பெயர்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாவர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் மூலோபாயத் தேவைகளைப் பின்தொடர்வதில் எத்தனை உயிர்களைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார் என்று பைடெனைக் கேட்க ஊடகங்களில் யாரும் கவலைப்படவில்லை. எவ்வாறாயினும், கோவிட்-19 தொற்றுநோய்க்கான ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பில் இதற்கான பதில் தெளிவாகத் தெரிகிறது. இதில் அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் மரணம் அமெரிக்க நிறுவனங்களின் இலாபகரமான நடவடிக்கைகளுக்கு எந்த இடையூறும் இல்லை என்பதை உறுதிப்படுத்த ஏற்றுக்கொள்ளக்கூடிய செலவாக பார்க்கப்பட்டன.

இந்த பேரழிவு சுழலில் இருந்து வெளியேற ஒரே வழி, நெருக்கடியில் வெகுஜனங்கள் தலையிடுவதுதான். ஏகாதிபத்திய போரை எதிர்க்கும் திறன் கொண்ட ஒரு சக்திவாய்ந்த சமூக சக்தி உள்ளது: அது சர்வதேச தொழிலாள வர்க்கம். உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீதான பெரும் தாக்குதலுடன் போரும் சேர்ந்து வருகிறது, உண்மையான அடிப்படையில் ஊதியங்கள் வீழ்ச்சியடைந்து வருகின்றன.

வாழ்க்கைத் தரங்களின் சரிவால் உருவாக்கப்பட்ட நெருக்கடியானது வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய எழுச்சிக்கு வழிவகுத்தது. இது அமெரிக்காவில் உள்ள இரயில் தொழிலாளர் இயக்கம் மற்றும் ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா முழுவதும் வேலைநிறுத்தங்கள் வெடித்ததன் மூலம் சக்திவாய்ந்த முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தொழிலாள வர்க்கம், ஏகாதிபத்திய சக்திகளின் போர்வெறி மற்றும் புட்டின் ஆட்சி மற்றும் ரஷ்ய தன்னலக்குழுவின் பிற்போக்குத்தனமான பதில் இரண்டையும் நிராகரிக்க வேண்டும். அவர்கள் போராட்டத்தில் நுழையும்போது, உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப வேண்டும். ஆளும் வர்க்கத்தின் உலகப் போர் கொள்கையை, தொழிலாளர்கள் தமது வர்க்கப் போரின் மூலோபாயத்தாலும் சமூகத்தின் சோசலிச மாற்றத்திற்கான போராட்டத்தாலும் எதிர்க்க வேண்டும்.

Loading