முன்னோக்கு

உலகளாவிய வேலைநிறுத்த அலையும், புரட்சிகர தலைமைக்கான நெருக்கடியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகம் முழுவதும், சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பின் ஓர் அதிகரிப்பு, வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களின் வடிவில் அபிவிருத்தி அடைந்து வருகிறது.

இந்த வர்க்கப் போராட்ட அதிகரிப்பானது, தேவை இல்லாமல் பத்து மில்லியன் கணக்கானவர்களின் உயிர்களைப் பறித்த ஓர் உலகளாவிய பெருந்தொற்றுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரும், இன்னும் பில்லியன் கணக்கானவர்களுக்குப் பட்டினி, வறுமை மற்றும் பணவீக்கத்தை எரியூட்டி உள்ள ஏழு மாத கால உக்ரேன் போருக்குப் பின்னரும், வருகிறது. இந்த புறநிலை இயக்கத்திற்குத் தான், உலகை அணுஆயுதப் பிரளயத்தை நோக்கி உந்துகின்ற ஏகாதிபத்திய பைத்தியக்காரர்களின் கரங்களில் இருந்து கட்டுப்பாட்டை எடுத்து, சோசலிச சமத்துவத்தின் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்கும் சக்தி உள்ளது.

மாதாந்திர ஊதியத்தை உயர்த்தக் கோரி ஓய்வு பெற்றவர்கள், செப்டம்பர் 26, 2022 திங்கட்கிழமை, லெபனானின் பெய்ரூட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைய முயல்கின்றனர் [AP Photo/Bilal Hussein]

சர்வதேச தொழிலாள வர்க்கம் மிகப் பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது, ஆனால் இந்த சக்தியை வெளிப்படுத்த அது தொழிற்சங்க பிற்போக்கு அதிகாரத்துவத்தின் இரும்புப் பிடியில் இருந்து விடுபட்டு, புரட்சிகர சமூக சக்தியாக நனவுபூர்வமாக அதன் பாத்திரத்தை ஏற்க வேண்டும்.

அரசு மற்றும் நிதி மூலதனத்தின் கட்டமைப்புகளுக்குள் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட பாரிய அதிகாரத்துவங்களால் கட்டுப்படுத்தப்படும் தொழிற்சங்கங்கள், ஏகாதிபத்தியத்தின் கருவிகளாகச் செயல்படுகின்றன. பெருநிறுவனங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளுடன் சேர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் இந்த வளர்ந்து வரும் போராட்ட இயக்கத்தை நசுக்குவதற்கும் மிகவும் போர்க்குணமிக்கவர்களை தனிமைப்படுத்துவதற்கும் செயல்படுகின்றன. தொழிலாள வர்க்கம் நேரடியாக எதிர்கொள்ளும் பணி, அதிகாரத்துவ சர்வாதிகாரத்தை அடித்து நொறுக்குவதும், அதிகாரத்தை சாமானிய தொழிலாளர்களுக்கு மாற்றுவதும் ஆகும்.

தொழிலாள வர்க்கம், ஒவ்வொரு இடத்திலும், பணவீக்கத்தை எதிர்த்தும் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க/நேட்டோ போரால் பெரிதும் மோசமடைந்துள்ள இந்த அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராகவும் போராடி வருகிறது.

அர்ஜென்டினாவில், பிரிட்ஜ்ஸ்டோன் மற்றும் பைரெல்லியில் உள்ள 5,600 டயர் ஆலைத் தொழிலாளர்கள், பெருநிறுவனங்கள் மற்றும் இந்த பெருநிறுவனங்களுக்குச் சார்பான தொழிற்சங்கங்களுக்கு எதிராக ஒரு சக்தி வாய்ந்த வேலைநிறுத்தத்தை தொடங்கி, ஒட்டுமொத்த நாட்டின் வாகன உற்பத்தியையும் பாதிக்கச் செய்துள்ளனர். ஹைட்டியில், முக்கியமாக அந்நாட்டின் உள்கட்டமைப்பு சிதைந்து வருகையில், தாகத்தாலும், பட்டினி, வன்முறை, கொரோனா வைரஸ் மற்றும் இப்போது காலராவினாலும் தொழிலாளர்கள் உயிரிழந்து வருகின்ற நிலையில், வேலைநிறுத்தங்களும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களும் ஏழாவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

1.5 பில்லியன் மக்கள்தொகை கொண்ட ஆபிரிக்கா முழுவதும் வர்க்கப் போராட்டம் அபிவிருத்தி அடைந்து வருகிறது. தென் ஆபிரிக்காவில், அரசுக்குச் சொந்தமான டிரான்ஸ்நெட் நிறுவனம் வெறும் 1.5 சதவீத சம்பள உயர்வுகளை வழங்கியதை அடுத்து, பத்தாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வியாழக்கிழமை அந்நாட்டின் இரயில்வே மற்றும் துறைமுகச் செயல்பாடுகளை நிறுத்த திட்டமிட்டுள்ளதால், ஒரு பொது வேலைநிறுத்தம் அபிவிருத்தி அடைந்து வருவதாகத் தெரிகிறது. தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தாபோ எம்பெக்கி (Thabo Mbeki), அந்நாட்டில் 'அரபு வசந்தம் போன்றவொரு எழுச்சி' ஏற்படுமென ஜூலை மாதம் குறிப்பிட்டிருந்தார்.

போராட்டக்காரர்கள் 11 ஆண்டுகளுக்கு முன்னர் அரபு வசந்த எழுச்சியைத் தூண்டிய துனிசியாவில், UGTT தொழிற்சங்கத்தின் தலைவர் குறிப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வரும் வாரங்களில் பாரிய வேலைநிறுத்தங்களை தடுக்க முடியாது என்று எச்சரித்தார். கேமரூன், மாலி, புர்க்கினா பாசோ மற்றும் ஐவரி கோஸ்ட் (Côte D’Ivoire) உட்பட 18 ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரானில் ஹிஜாப் 'முறையாக அணியவில்லை' என்பதற்காக 22 வயது மஹ்சா அமினியை மூர்க்கமாக பொலிஸ் படுகொலை செய்த சம்பவத்தின் மீது நடக்கும் பரந்த ஆர்ப்பாட்டங்களுடன் தொழிலாளர்களின் போராட்டங்களும் ஒத்துப் போகின்ற நிலையில், ஈரான் உட்பட மத்திய கிழக்கு மற்றும் ஆசியா எங்கிலும் வேலைநிறுத்தங்கள் நடந்து வருகின்றன. அண்டை நாடான ஈராக்கில், பல தசாப்தங்களாக அமெரிக்கப் போர் மற்றும் ஆக்கிரமிப்பினால் படுமோசமாகி விட்ட சமத்துவமின்மை மற்றும் வறுமை அதிகரித்து வருவதற்கு விடையிறுப்பாக இந்த வாரயிறுதியில் அந்நாடு முழுவதும் மிகப் பெரிய போராட்டங்கள் நடந்தன.

லெபனானில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர்களின் பணத்தைக் கேட்டு நான்கு வங்கிகளைச் சூறையாடிய நிலையில், தேசியளவில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. ஒரு பெய்ரூட் பெண்மணி அவரின் 22 வயது சகோதரிக்குப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பணம் செலுத்த தனது பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி, போலி கைத்துப்பாக்கி உடன் ஒரு வங்கியில் நுழைந்ததும் அவர் தேசியளவில் பிரபலமாகி விட்டார். இலங்கையில், விவசாய மற்றும் தொழில்துறை தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் தொடர்ந்து அத்தீவைச் சுற்றி வளைத்துள்ளன.

உலக ஏகாதிபத்தியத்தின் மையங்களிலும் சக்தி வாய்ந்த வேலைநிறுத்த இயக்கங்கள் உருவாகி வருகின்றன. ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போரை எரியூட்டுவதற்கு அரசாங்கங்கள் பில்லியன் மற்றும் பில்லியன் டாலர்களை வாரியிறைக்கையில், இலண்டன், பேர்லின் மற்றும் பாரிஸ் போன்ற நகரங்களில் பெருந்திரளான மக்கள் சகிக்க முடியாத நிலைமைகளை எதிர்கொண்டிருப்பதுடன், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மீது எரிச்சல் அடைந்துள்ளனர்.

பிரான்சில், எரிசக்தித் துறைத் தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தங்கள் அந்நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் 60 சதவீதத்தை முடக்கி உள்ளன. கடந்த வாரம் கால் மில்லியன் தொழிலாளர்கள் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தார்கள்.

இங்கிலாந்தில், 170,000 இரயில்வே தொழிலாளர்கள், தபால் துறைத் தொழிலாளர்கள், லிவர்பூல் மற்றும் ஃபெலிக்ஸ்டோவின் துறைமுகத் தொழிலாளர்களும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகளும் நடத்தி வரும் வேலைநிறுத்தங்கள், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தைத் திறம்பட 'தேசிய ஒற்றுமைக்காக' பயன்படுத்துவதற்கான பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் முயற்சிகளை மீறி வெடித்துள்ளன.

ஜேர்மனியில், ஏழு மில்லியன் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தங்கள் ஒரே நேரத்தில் காலாவதி ஆவதால் முன்னெச்சரிக்கை வேலைநிறுத்தங்கள் உருவாகி வருகின்றன, வாழ்க்கைச் செலவுகள் மீதும் போராட்டங்கள் அதிகரிக்கின்றன. ஜேர்மனி, கிரீஸ், நோர்வே, கொசோவோ, ஹங்கேரி மற்றும் சேர்பியா உட்பட ஐரோப்பாவில் ஆசிரியர்களின் வேலைநிறுத்த அலை வீசுகிறது. பெல்ஜியத்திலும் இரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கனடாவில், 55,000 கல்வித் துறை உதவிப் பணியாளர்கள் ஃபோர்டு அரசாங்கத்தின் சிக்கன ஆட்சி முறைக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய தயாராகி வருகிறார்கள்.

உலக ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் கட்டுப்பாட்டு மையமாக விளங்கும் அமெரிக்காவில் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி குறிப்பாக குறிப்பிடத்தக்கதாகும். AFL-CIO சங்கம் செயற்கையாக வர்க்கப் போராட்டத்தை நசுக்கிய பல தசாப்தங்களுக்குப் பின்னர், தொழிலாளர்கள் இத்தகைய மிகப் பெரிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களை எதிர்த்து வருவதுடன், அவர்கள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான ஒரு பாதைக்காகப் பாடுபட்டு வருகிறார்கள்.

125,000 க்கும் அதிகமான இரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய ஆர்வமாக உள்ளனர், அமெரிக்க பொருளாதாரத்தையே நடைமுறையளவில் முடக்கி விடக்கூடிய ஒரு வேலைநிறுத்தத்தைத் தடுக்க இரயில்வே சேவை நிறுவனங்களுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து வரும் இரயில்வே தொழிற்சங்கங்களுக்கு எதிராக சுயாதீனமான போராட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர்.

'இது பரவக்கூடும்' என்ற டீம்ஸ்டர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சிஸ்கோ (Sysco) நிறுவனம் பணி அமர்த்தி உள்ள ஒட்டுனர்கள் மற்றும் சரக்குக் கிடங்குத் தொழிலாளர்கள் மத்தியில் வேலைநிறுத்தங்கள் உருவாகி வருகின்றன. ஓஹியோவின் கொலம்பஸில் க்ரோஜெர் நிறுவனத்தின் மளிகைக் கடைத் தொழிலாளர்கள் சமீபத்தில் மூன்றாவது முறையாக ஒருங்கிணைந்த உணவு மற்றும் வர்த்தகத் துறை தொழிலாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த பெருநிறுவன சார்பான ஓர் உடன்படிக்கையை நிராகரித்தனர், தற்போது அவர்கள் அதே ஒப்பந்தம் மீது நான்காவது முறையாக வாக்களிக்க நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள்.

மேற்கு கடற்கரையில், 25,000 துறைமுகத் தொழிலாளர்கள் ஜூன் மாதத்தில் இருந்து ஒப்பந்தம் இல்லாமல் வேலை செய்து வருகிறார்கள், அதேவேளையில் 50,000 கலிபோர்னியா பல்கலைக்கழகப் பணியாளர்களும் மற்றும் 50,000 தெற்கு கலிபோர்னியா மளிகைக் கடைத் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தங்களும் காலாவதி ஆக உள்ளன. நியூ யோர்க்கின் ஸ்டேட்டன் தீவில் உள்ள JFK8 அமசன் தொழிலாளர்கள், பகுதியாக நெருப்பில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அவர்களை நிர்வாகம் வேலைக்குத் திரும்பச் செய்ய முயன்றதும், திடீரென்று நேற்று தன்னிச்சையாக வெளிநடப்பு நடவடிக்கையில் இறங்கினார்கள்.

கார்னெல் பல்கலைக்கழகத்தின் தகவல்படி, 2022 இன் முதல் பாதியில் 80,000 தொழிலாளர்களை உள்ளடக்கிய 180 வேலைநிறுத்தங்கள் இருந்தன, இது 2021 முதல் பாதியில் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும். தொழிலாளர் நடவடிக்கையைக் கண்காணிக்கும் கார்னலின் கண்காணிப்புப் பிரிவு இயக்குனர் ஜானி கல்லாஸ், கார்டியனுக்குக் கூறுகையில், “நாம் இலையுதிர் காலத்தை நோக்கி செல்கையில், வேலைநிறுத்தங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது,” என்றார்.

வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலம் நெருங்கி வருகையில், வர்க்கப் போராட்டம் இன்னும் கூடுதலாக வெடிப்பதைக் குறித்து ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

'எல்லாப் பகுதிகளின் அரசாங்கங்களும் பிரதான உணவுகள் மற்றும் எரிபொருள் விலைகள் மீதான பணவீக்க பாதிப்புகளால் பீடிக்கப்பட்டு இருப்பதால், உலகம் முன்னொருபோதும் இல்லாத மக்கள் அமைதியின்மையின் அதிகரிப்பை முகங்கொடுக்கிறது,” என்று Verisk Maplecroft செப்டம்பரில் எச்சரித்தார்.

உலகப் பொருளாதார பேரவை கடந்த வாரம் அறிவிக்கையில், தொழிலாளர்களின் நிஜமான சம்பளம் குறைந்து வருவதாகவும், 'சமூக அமைதியின்மை அதிகரித்து வருகிறது' என்றும் அறிவித்தது. பல நாடுகளில், 'மேற்கொண்டு செலவு செய்வது கட்டுப்படுத்தப்படுகிறது அல்லது சாத்தியமின்றி உள்ளது, அதுவும் சில அரசாங்கங்கள் நிதி ஒதுக்கீட்டுக்கு இடமின்றி இயங்குகின்றன, வாழ்க்கைச் செலவு நெருக்கடியைக் கையாளும் அவற்றின் திறன் குறைந்து வருகிறது,” என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதனால், 2008 நிதித்துறை பொறிவுக்குப் பின்னரும் மற்றும் மீண்டும் 2020 இல் இந்தப் பெருந்தொற்று தொடங்கிய போது வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்குப் பிணை வழங்க முடிந்த இந்த முதலாளித்துவ அரசாங்கங்களால், இந்த குளிர்காலத்தில் உலகின் 'மிகவும் பணக்கார' நாடுகளின் தொழிலாளர்களது வீடுகளுக்கு வெப்பமூட்டக் கூட 'சாத்தியமில்லாது' உள்ளது.

ஏகாதிபத்தியப் போரை நிறுத்துவதற்கும், கோவிட்-19 பரவுவதை நிறுத்துவதற்குத் தேவையான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மனிதகுலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உலகச் செல்வ வளங்களை மறுபங்கீடு செய்வதற்கும் இந்த இயக்கத்திற்கு ஆற்றல் உள்ளது. ஆனால் தொழிற்சங்க அதிகாரத்துவங்களால் தசாப்த காலமாக தொழிலாளர்களின் இயக்கம் ஒடுக்கப்பட்டுள்ள நிலைமையை முறிக்க, வர்க்கப் போராட்டத்தின் இந்தத் தன்னியல்பான அபிவிருத்தி மட்டும் போதுமானதில்லை. இதற்கு அரசியல் தலைமை தேவைப்படுகிறது.

'உலக அரசியல் நிலைமை ஒட்டுமொத்தமாக பாட்டாளி வர்க்கத் தலைமையின் வரலாற்று நெருக்கடியாகப் பிரதானமாக குணாம்சப்பட்டுள்ளது,” என்று நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணத்தில் லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார். அது இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் 1938 இல் இருந்ததைப் போலவே இன்றும் உண்மையாகும்.

தொழிலாள வர்க்கம் முன்னெப்போதையும் விட மிகவும் பெரிதாகி, தொழில்நுட்ப ரீதியில் மிகவும் முன்னேறி உள்ளது. ஆனால் தொழிலாளர்களின் போராட்டத்தை விரிவாக்குவதும், போராட்டத்தில் ஏனைய பிரிவுகளை ஐக்கியப்படுத்தி சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அளப்பரிய சமூக சக்தியை இணைத்துக் கொள்வதும், தொழிற்சங்கங்களில் ஒழுங்கமைக்கப்படாத பெருந்திரளான தொழிலாளர்களிடையே கூட்டாளிகளை வென்றெடுப்பதும், பன்னாட்டு பெருநிறுவனங்களுக்கு எதிரான பொதுவான போராட்டத்தில் தேசிய எல்லைகளைக் கடந்துச் செல்வதுமே ஒவ்வொரு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணியாகும். இதன் அர்த்தம், போராட்டங்கள் இந்த முதலாளி அல்லது அந்த அரசியல்வாதிக்கு எதிராக அல்ல, மாறாக நனவுபூர்வமாக ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக வழி நடத்துவதாகும்.

மே 2021 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் நிறுவப்பட்ட சாமானியத் தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் நோக்கம் இது தான், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பெரும் பிரயத்தனப் போராட்டங்கள் அனைத்தையும் ஓர் ஒருங்கிணைந்த உலக இயக்கமாக ஒருங்கிணைத்து வழி நடத்துவதே இதன் நோக்கமாகும். அனைத்திற்கும் மேலாக, என்ன தேவைப்படுகிறது என்றால், எழுச்சி பெற்று வரும் போராட்டங்களை முதலாளித்துவ அமைப்பு முறை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு ஒரு சவால் என்ற திசையில் வழி நடத்த ஒரு சோசலிச தலைமையைக் கட்டியெழுப்ப வேண்டி உள்ளது.

Loading