ஏகாதிபத்திய போருக்கு எதிரான இளைஞர்களின் உலகளாவிய இயக்கத்தை கட்டமைக்க ICFI மற்றும் IYSSE இன் கூட்டம் தீர்மானிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அக்டோபர் 9, ஞாயிற்றுக்கிழமை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) ஆகியவற்றின் பிரதிநிதிகள் உக்ரேனில் ரஷ்யாவுடனான அமெரிக்க-நேட்டோ போருக்கு எதிராக இளைஞர்களின் உலகளாவிய இயக்கத்தை ஒழுங்கமைக்க ஒரு கூட்டத்தை நடத்தினர்.

அமெரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, பிரேசில், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள IYSSE உறுப்பினர்கள் உட்பட 11 வெவ்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ரஷ்யாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு அரசியல் ஆதரவை அறிவித்துள்ள போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர்களின் உறுப்பினர்கள் பங்குபற்றியது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். கூட்டம் ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் நடத்தப்பட்டதுடன், அனைத்து உரைகளும் இரண்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன.

அடுத்த மாதம் இணையவழி உலகளாவிய கருத்தரங்கம் நடத்துவது உட்பட, மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க கூட்டம் ஒருமனதாக வாக்களித்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கமான IYSSE இன் சர்வதேச அமைப்பு ரீதியான தொடர்புகளை ஆழப்படுத்தவும் கூட்டம் தீர்மானித்தது.

கூட்டத்தின் தொடக்கத்தில், சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவரும், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த், அதன் நோக்கம், 'உக்ரேனில் மோதலுக்கு எதிரான ஒரு உலக போர் எதிர்ப்பு இயக்கத்தை அமைப்பதாகும். இது ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டப்பட்டதுடன், அதற்கு புட்டினின் ஆட்சியும் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளது”.

உக்ரேனில் நடைபெறும் மோதலை 'மூன்றாம் உலகப் போரின் ஆரம்பம்' என ICFI, புரிந்துகொள்கிறது என்று நோர்த் விளக்கினார்.

'உடனடியாக மோதலைத் தூண்டிய நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும், அதன் இன்றியமையாத நோக்கம் ரஷ்யாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியச் செய்வது, அமெரிக்கா மற்றும் நேட்டோ நட்பு நாடுகளின் கூட்டில் அதன் ஒருங்கிணைப்பு, மற்றும் அந்த வகையில் சீனாவுடனான போரின் முன்னோடியாக இருக்கும். இரண்டாம் உலகப் போரில், ஜேர்மனியின் முழக்கம் “இன்று ரஷ்யா, பின்னர் உலகம்.” என்பதாக இருந்தது. இன்று, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழக்கம் “இன்று ரஷ்யா, நாளை சீனா மற்றும் உலகம்” என்பதுதான்.

உக்ரேன் மோதல் அணு ஆயுதப் போராக உருவாகும் அபாயம் உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. எவ்வாறாயினும், தொடர்ச்சியான தோல்விகளுக்கு விடையிறுக்கும் வகையில் அணுவாயுதங்களைப் பயன்படுத்தலாம் என்ற புட்டினின் அரசாங்கத்தின் எச்சரிக்கைகள், மோதலை அதிகரிப்பதிலிருந்தும் ரஷ்யாவை இராணுவ ரீதியாக தோற்கடிப்பதிலிருந்தும் தங்களைத் தடுக்காது என்பதை, பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

'கோவிட்-19 இலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களின் மரணத்தை ஏற்றுக்கொண்ட அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் விருப்பம், சர்வதேச அளவில் இன்னும் மில்லியன் கணக்கானவர்களினதை ஏற்றுக்கொள்ளும் விருப்பமானது மிகப்பெரிய சமூக, அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மிகைப்படுத்திக் கூற முடியாது' என்று நோர்த் கூறினார். தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் வகையில் 'வைரஸுடன் வாழுங்கள்' என்று கோஷமெழுப்பிய ஆளும் வர்க்கம், 'அணுவாயுதத்துடன் வாழ்க' என்ற கோஷத்தையும் எழுப்பக்கூடிய ஆளும் வர்க்கமாகும். இரண்டு நிலைகளும் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பைத்தியக்காரத்தனமானவை. ஆனால் முதலாளித்துவம் சமூக மற்றும் அரசியல் பைத்தியகாரத்தனத்தின் சாம்ராஜ்யமாக சீரழிந்து விட்டது.”

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை பொறுத்தவரை, ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தில் ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதுதான் முக்கிய கேள்வியாகும். எவ்வாறாயினும், இளைஞர்களினதும், மாணவர்களினதும் வெகுஜன, சர்வதேச மற்றும் சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான தேவையை இது குறைக்காது என நோர்த் வலியுறுத்தினார்.

'தற்போதைய சூழ்நிலையும் போரின் தீவிர ஆபத்தையும் நாம் கருத்தில் கொள்ளும்போது, உலகின் இளைஞர்கள் எதிர்காலத்திற்கான அவர்களின் உரிமையை இழக்க நேரிடும் என்று மிகவும் நேரடியாகப் பொருள்படுகிறது' என்று அவர் கூறினார். நவீனகால முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் யதார்த்தம் இளைஞர்களை வறுமையினாலும், நோயினாலும் அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வதற்கான உரிமையையும் அச்சுறுத்துகிறது. ஏனென்றால் அணுஆயுத போரின் விளைவுகளின் யதார்த்தம் இதுதான்.”

வளாகங்களில் இளைஞர்களிடையே ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டமைப்பது குறிப்பாக முக்கியமானது என நோர்த் கூறினார், ஏனென்றால் 'போலி-இடதுகளின் பல தரப்பினரிடையே, ஏகாதிபத்தியத்தியத்தை பாதுகாப்பது, ஏகாதிபத்திய போரினை நியாயப்படுத்துதல் ஆகியவை பல்கலைக்கழகங்களில் ஊக்குவிக்கப்பட்ட சித்தாந்தங்களில் பிற்போக்குத்தனமான வெளிப்பாட்டைக் காண்கிறது.

'ஆனால் அந்த போராட்டத்தின் இன்றியமையாத நோக்குநிலை, அது வெற்றிபெற வேண்டுமானால், ஒரு புரட்சிகர மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தை கட்டியெழுப்புவதாக இருக்க வேண்டும். இளைஞர்கள் தாங்களாகவே ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்க முடியாது.

தொடக்க அறிக்கையைத் தொடர்ந்து கலந்து கொண்டவர்களின் பலரது உரைகள் இடம்பெற்றன.

ஜேர்மனியில் உள்ள IYSSE இன் முன்னணி உறுப்பினரான கிரிகோர், உலகம் முழுவதும் தொழிலாள வர்க்க இளைஞர்களின் அனுபவங்கள் மிகவும் ஒத்ததாக இருக்கிறது என்று கூறினார். 'இளம் தொழிலாளர்கள் அணுசக்தி யுத்தம், வறுமை, காலநிலை பேரழிவுகள், சர்வாதிகாரங்கள் மற்றும் ஆழ்ந்த சமூக மற்றும் அரசியல் நெருக்கடி ஆகியவற்றின் சாத்தியப்பாட்டை எதிர்கொள்கின்றனர்' என்று அவர் கூறினார். 'அதே நேரத்தில், இளம் தொழிலாளர்களும் தொழிலாள வர்க்க இளைஞர்களும் சர்வதேச அளவில் ஒருவரையொருவர் முன்னெப்போதும் இல்லாத வகையில் இணைத்துள்ளனர். மேலும் தொழிலாள வர்க்க இளைஞர்களின் உலகளாவிய ஒருங்கிணைந்த தன்மை ஒரு அமைப்புரீதியான வெளிப்பாட்டைக் காண வேண்டும்.'

ஆஸ்திரேலியாவில் IYSSE இன் முன்னணி உறுப்பினரான ஏவ்ரிம், ஆளும் வர்க்கத்தால் ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலின் பின்னணியில், வளாகங்களில் IYSSE கட்டியமைக்க்கப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளை மதிப்பாய்வு செய்தார். IYSSE இன் உலகளாவிய தன்மை மற்றும் சர்வதேச அமைப்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். 'IYSSE இல் உள்ள 'சர்வதேசம்'(‘I’) என்பது ஒரு காரணத்திற்காக இருக்கின்றது' என்று அவர் கூறினார். 'நாங்கள் ஒரு சர்வதேச இயக்கம் என்பதை மாணவர்களுக்கு வலியுறுத்துகிறோம்.'

பிரித்தானியாவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் உதவி தேசிய செயலாளரான ரொம் ஸ்கிரிப்ஸ் பின்வருமாறு கூறினார்: 'குறிப்பாக பல்கலைக்கழகங்களில் இளைஞர்களை அத்தியாவசியப் பிரிவினராக வரையறுப்பதை விலக்கும் முயற்சிகளை நாங்கள் எதிர்கொள்கிறோம். அவர்கள் இப்போது போரினால் அவசரமாக எழுப்பப்பட்டுள்ள சோசலிச சர்வதேசியத்தின் பாரம்பரியத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். உயர் நடுத்தர வர்க்கத்தின் அமைப்புகள், 'சர்வதேச தொழிலாள வர்க்க ஒற்றுமைக்கு எதிராக அடையாள அரசியலை' ஊக்குவித்ததாக அவர் கூறினார்.

போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர்களின் பிரதிநிதியான தோழர் ஆண்ட்ரி, ரஷ்யாவில் உள்ள இளம் சோசலிஸ்டுகள் எவ்வாறு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் தொடர்பைத் தொடங்கினர் மற்றும் ஸ்ராலினிசத்தின் பாத்திரம் பற்றிய அதன் அரசியல் முன்னோக்கு மற்றும் பகுப்பாய்வுடன் உடன்பட்டனர் என்பதை விளக்கி ஒரு அறிக்கையை அளித்தார்.

'எங்கள் அமைப்பு ஒரு ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பாக இருப்பதால், மிக முக்கியமான அடுத்த படி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இளைஞர் அமைப்பான IYSSE உடன் நமது ஒருங்கிணைப்பு ஆகும்' என்று அவர் கூறினார். 'ரஷ்யா, உக்ரேன் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செல்வாக்கைக் கட்டியெழுப்புவதில்' IYSSE இன் பணிகளில் ஒருங்கிணைப்பது முக்கியமானதாக இருக்கும்.

துருக்கியில் உள்ள சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான Ulaş Ateşçi, 60கள் மற்றும் 70களின் போர் எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டு இன்று ஏகாதிபத்தியத்தின் வெளிப்படையான ஆதரவாளர்களாகியுள்ள நடுத்தர வர்க்க இடதுகளின் பரிணாம வளர்ச்சியை மதிப்பாய்வு செய்தார்.

'2003 இல் ஈராக் ஆக்கிரமிப்புக்கு முன் இருந்த மாபெரும் உலகளாவிய போர் எதிர்ப்பு இயக்கம் நடுத்தர வர்க்கப் போக்குகளால் உருக்குலைக்கப்பட்டது' என்று அவர் கூறினார். “அதிலிருந்து, சர்வதேச அளவில் போலி-இடதுகளின் முக்கிய செயல்பாடு ஏகாதிபத்தியப் போரை, குறிப்பாக லிபியா மற்றும் சிரியாவிற்கு எதிரான போர்களைப்போல், இப்போது உக்ரேன் மீதான ரஷ்யாவிற்கு எதிரான போரை நியாயப்படுத்துவதாகும். இன்று, சர்வதேச அளவில் பெரும்பான்மையான போலி-இடது போக்குகளும், தொழிற்சங்கங்களும் ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்திய பிரச்சாரத்தின் முக்கிய ஆதரவாளர்களாக உள்ளன.

IYSSE அழைப்பாளரும், இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழுவின் உறுப்பினருமான கபிலா, உக்ரேனில் போரின் தாக்கம், தொற்றுநோயின் இரண்டு வருடங்கள், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பிற அடிப்படை சமூக சேவைகளில் வெட்டுக்கள் அனைத்தும் எல்லா நாடுகளுக்கும் பொதுவானவை என்று கூறினார். 'இந்த நிலைமைகள் முதலாளித்துவ அரசாங்கங்களினதும், பிற தேசியவாத அமைப்புகளினதும் தேசியவாத திட்டங்களின் திவால்நிலையை அம்பலப்படுத்துகின்றன' என்று அவர் விளக்கினார்.

இலங்கை உட்பட தெற்காசியாவில் உள்ள ஆளும் வர்க்கங்கள் சர்வதேச நிதி மூலதனம் மற்றும் ஏகாதிபத்தியப் போருடன் இணைந்துள்ளன. அதே நேரத்தில் இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்ப்புகளுக்கு வழிவகுத்த போலி-இடது அமைப்புகள் அரசியல் ஸ்தாபகத்திற்குப் பின்னால் எதிர்ப்பை திசைதிருப்புவதற்கு இயங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

பிரேசிலில் உள்ள சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான தோமஸ் காஸ்டன்ஹீரா, அந்நாட்டில் முன்னர் இருந்த இளைஞர் இயக்கங்களின் அனுபவங்களை மதிப்பாய்வு செய்தார். ஸ்ராலினிசம் மற்றும் பப்லோவாதத்தின் செல்வாக்கின் மூலம் இந்த இயக்கங்கள் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு அடிபணியச் செய்வதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன. 'இன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கின் கீழ், பிரேசிலில் உள்ள இளைஞர்கள் ஒரு புதிய, புரட்சிகர மற்றும் சோசலிச முன்னோக்குடன் தொழிலாள வர்க்கத்தை நோக்குநிலை கொண்டவர்களாக இருப்பார்கள்' என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் IYSSE இன் முன்னணி உறுப்பினரான கிளாரா வெயிஸ், தற்போதைய போர் 'அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பின் அடிப்படையிலும் மற்றும் சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளிப்பட்ட தன்னலக்குழு ஆட்சிகளின் பிற்போக்குத்தனமான பிரதிபலிப்பின் அடிப்படையில் இது சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் விளைவு” என்று வலியுறுத்தினார்.

ஆசியா, ஆபிரிக்கா, முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் மையங்களில் உள்ள இளைஞர்களின் முழு தலைமுறையும் முதலாளித்துவத்தினது பேரழிவு விளைவுகளையும் மற்றும் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து வந்த சமூக எதிர்ப்புரட்சியினையும் எதிர்கொள்கிறது என்று அவர் குறிப்பிட்டார். 'அதே நேரத்தில், மார்க்சிசத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் அனைத்து வகையான பிற்போக்கு சித்தாந்தங்கள் மற்றும் வரலாற்று பொய்மைப்படுத்தல்களை ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்கள் தொழிலாள வர்க்க இயக்கத்தின் வரலாற்றில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர்,' என்று அவர் கூறினார்.

'எங்கள் இயக்கத்திற்கு வெளியே இந்தப் போரை எதிர்க்கும் மற்றும் முதலாளித்துவத்தை ஒரு சோசலிச நிலைப்பாட்டில் இருந்து எதிர்க்கும் போக்கு இல்லை. மேலும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் இருந்தே போருக்கும் ஸ்ராலினிசத்திற்கும் எதிரான மார்க்சிச போராட்டத்தைப் பற்றி பேச முடியும்.'

கூட்டத்தின் முடிவில், டேவிட் நோர்த் கலந்துரையாடலின் முக்கியத்துவத்தையும், உலகம் முழுவதிலுமிருந்து வரும் பேச்சாளர்களின் பரந்த பிரதிநிதித்துவத்தையும் வலியுறுத்தினார். இருப்பினும், 'பங்கெடுத்துக்கொண்ட பேச்சாளர்களினதும் நாடுகளின் அளவின் பிரதிநிதித்துவத்தை விட முக்கியமானது, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முழு வரலாற்றிலும் வேரூன்றிய பண்புரீதியான ஒருங்கிணைந்த முன்னோக்கு ஆகும்.'

'இந்தப் போரில், 20 ஆம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொள்கிறோம். மேலும் இந்த பிரச்சனைகள் நமக்கு முன்னுள்ள ஆண்டுகளில் உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், அது மனித நாகரிகத்தின் முடிவைக் குறிக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

'அதனால்தான் நாம் முன்வைக்கும் கேள்வி மிகவும் முக்கியமானது: 'இளைஞர்கள், அவர்களுக்கு ஒரு எதிர்காலம் இருக்கவேண்டுமென்றால் அதற்காகப் போராட வேண்டும், அந்தப் போராட்டம் சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கானதும், முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்கான போராட்டத்தையும் உள்ளடக்கியது.”’

அதே நேரத்தில், போருக்கு எதிரான இளைஞர்களின் இயக்கத்தைக் கட்டியெழுப்புவது, 'ஏதோ ஒரு விதத்தில் இளைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டிருக்கும் ஸ்ராலினிசம், பப்லோவாதம், சமூக ஜனநாயகம், முதலாளித்துவ தேசியவாதம், சமகால அடையாள அரசியலின் எல்லையற்ற வடிவங்களான அனைத்து பிற்போக்கான போக்குகளுக்குமான எதிர்ப்பின் அடிப்படையில் இருக்க வேண்டியதுடன் மற்றும் சமாதான காலத்தில் போரை எதிர்க்கும் மற்றும் போர் காலங்களில் சமாதானத்தை எதிர்க்கும் அமைதிவாதத்தின் பல்வேறு வகையான பாசாங்குத்தனத்திற்கு எதிராகவும் இருக்கவேண்டும்”.

எதிர்க்கப்பட வேண்டிய மற்றொரு போக்கு, “அவநம்பிக்கையின் தொற்று மற்றும் நான் குறிப்பிட்ட அனைத்துப் போக்குகளாலும் ஊக்குவிக்கப்படும் ஒரு கண்ணோட்டமான மாற்றம் சாத்தியமற்றது என்பதில் நம்பிக்கையுமாகும். எங்கள் கட்சி நம்பிக்கையின் கட்சி, எனவே எதிர்காலத்திற்கான கட்சியாகும். எதிர்காலத்தை வெல்ல முடியும், ஆனால் இளைஞர்கள் அதற்காக போராட வேண்டும் மற்றும் சரியான வரலாற்று கண்ணோட்டத்தின் அடிப்படையில் போராட வேண்டும். புரட்சி சாத்தியம், முதலாளித்துவம் தூக்கியெறியப்படலாம், ஆனால் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் தலைமையை கட்டியெழுப்புவதே பெரும் பிரச்சனை என்பதை அனைத்து வரலாறும் நிரூபிக்கிறது”.

உலக சோசலிச வலைத் தளம் வரும் நாட்களில் IYSSE ஏற்பாடு செய்துள்ள வரவிருக்கும் கூட்டம் பற்றிய விவரங்களை வெளியிடும். அனைத்து மாணவர்களையும் இளைஞர்களையும் இன்றே IYSSE இல் சேரவும் மற்றும் ஏகாதிபத்திய போருக்கு எதிராக ஒரு இயக்கத்தை கட்டமைக்க ஊக்குவிக்கிறோம்.

Loading