முன்னோக்கு

பெருந்திரளான வேலைவாய்ப்பின்மைக்கான சாத்தியக்கூறால் வோல் ஸ்ட்ரீட் உற்சாகமடைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நான்கு தசாப்தங்களில் இல்லாதளவில் பணவீக்கம் அதன் அதிகபட்ச மட்டத்திற்கு உயர்ந்துள்ள நிலையில், அமெரிக்க பெடரல் மற்றும் ஏனைய மத்திய வங்கிகள் தொடர்ந்து வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்ற நிலையில், உலக மந்தநிலைக்கான அபாயம் முன்னெப்போதும் விட பெரியளவில் அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடி மீது செயல்படும் இன்றியமையா வர்க்க இயக்கவியலை உள்ளடக்கி நேற்று ஒரு சம்பவம் நடந்தது.

அதன் பொருளாதார முன்மாதிரி கணிப்புகளின்படி, அடுத்த பன்னிரெண்டு மாதங்களில் அமெரிக்கப் பின்னடைவு கிட்டத்தட்ட நிச்சயமாக உள்ளது என்ற ப்ளூம்பேர்க் அறிக்கையைத் தொடர்ந்து, சமீப காலமாகப் பாதிப்பில் இருந்த வோல் ஸ்ட்ரீட் பங்குகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக உயர்ந்தன.

பெடரலின் கொள்கைகள், பெருநிறுவன விலை ஏய்ப்பு மற்றும் பெரும் இலாபங்களைக் கட்டுப்படுத்த நோக்கம் கொண்டவை இல்லை, மாறாக தொழிலாளர்களின் கூலிகளை வெட்ட நோக்கம் கொண்டவை என்பதை நன்கு அறிந்துள்ள, நிதிய ஊக வணிகர்கள் ஒரு பின்னடைவுக்கான சாத்தியகூறை எதிர்பார்த்து எச்சில் ஊற நிற்கிறார்கள்.

வெளியேறும் வெள்ளை மாளிகையின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கேரி கோஹன், வியாழன், மார்ச் 8, 2018, வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரைப் பற்றி பேசும்போது சிரிக்கிறார் [AP Photo/Evan Vucci]

பெடரல் மற்றும் பிற மத்திய வங்கிகளின் தாரக மந்திரமாக இருக்கும் 'பணவீக்கத்திற்கு எதிரான போராட்டம்' என்று அழைக்கப்படுவதன் வர்க்க உள்ளடக்கத்தை, ட்ரம்பின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் கேரி கோஹன் உச்சரித்தார்.

திங்கட்கிழமை யாஹூ பைனான்ஸ் உடனான ஒரு பேட்டியில் அவர் கூறுகையில், 'உண்மையிலேயே பணவீக்கம் குறைக்கப்படுவதை நாம் பார்க்க இருக்கிறோம் என்றால், நாம் வேலை அழிப்புகளைப் பார்க்கப் போகிறோம்,” என்றார்.

'பணவீக்கத்திற்கு எதிரான போராட்டம்' என்பதைப் பொறுத்த வரையில், கோஹ்ன் பின்புலத்தில் இருக்கும் கருத்தை வெளிப்படுத்திக் காட்டி இருக்கிறார், வாழ்க்கைத் தரங்களைச் சின்னாபின்னமாக்கி வரும் விலை உயர்வுகளுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும், உழைப்பு சக்தி, கூலிகள் என்ற ஒன்றை விலை கொடுப்பதில் அது ஒருமுனைப்பட்டு இருப்பதையும் அவர் தெளிவுபடுத்தி விடுகிறார்.

'அமெரிக்காவில் நம்மிடம் இப்போது ஒரு சிறிய தொழிலாளர் படை தான் இருக்கிறது ஆகவே வணிகங்கள் அவர்களை உழைப்பு சக்திக்குள் ஈர்க்க அதிக சம்பளம் கொடுக்க வேண்டி உள்ளது இது பணவீக்கத்தை அதிகரிக்கிறது. சம்பளங்கள் அதிகரிக்கின்றன, ஆகவே பணவீக்கம் அதிகரிக்கிறது,” என்றார்.

இந்த வாதம் முழுக்க முழுக்க பொய்யானது. கடந்த வாரம் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் அறிக்கை உட்பட ஒவ்வொரு பொருளாதார அறிக்கையும் குறிப்பிடுவது போல, அமெரிக்காவிலோ அல்லது உலகின் பிற பகுதிகளிலோ, கூலிகள் பணவீக்க அதிகரிப்பு வேகத்திற்கு நிகராக இல்லை.

இந்தப் பணவீக்க சுழல், முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களினது நடவடிக்கைகளின் விளைவாகும். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மனிதகுலத்தில் இருந்து கோவிட்-19 ஐ அகற்றும் பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுத்ததால், அவை பங்குச் சந்தையில் கேடான பாதிப்பை ஏற்படுத்தவில்லை, வினியோகச் சங்கிலி நெருக்கடியை தொடங்கிவிட்டது.

உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரும், அனைத்து அரசாங்கங்களாலும் இராணுவ செலவினங்களில் செய்யப்பட்ட பெரும் அதிகரிப்பும், கடந்த ஒன்றரை தசாப்தத்தில் நிதிய அமைப்பு முறைக்குள் அதிமலிவு பணத்தைப் பாய்ச்சியதால் தோற்றுவிக்கப்பட்ட ஊகவணிகக் குமிழியும் இந்த விலைவாசி உயர்வுகளைத் தீவிரப்படுத்தி உள்ளன.

இதை விட, இந்த மாத தொடக்கத்தில் வர்த்தக வளர்ச்சி சம்பந்தமான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு (UNCTAD) ஓர் அறிக்கையில் தெளிவுபடுத்தியதைப் போல, உணவு மற்றும் எரிசக்தித் துறை நிறுவனங்களின் கட்டுக்கடங்கா இலாப ஏய்ப்பு உள்ளது, தனியார் முதலீட்டு நிதி நிறுவனங்களும் மற்றும் உணவுத்துறை, உலோகத் துறை, எரிசக்தித்துறை மற்றும் ஏனைய அத்தியாவசியப் பண்டங்கள் சம்பந்தப்பட்ட பிற நிறுவனங்களும் ஊக வணிகத்தில் ஈடுபடுகின்றன.

ஆனால் மத்திய வங்கிகளும், நிதி மூலதனத்தின் பிரதிநிதிகளும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அவர்களின் வர்க்கப் போர் திட்டநிரலின் பாதையில் இந்த உண்மையை ஒருபோதும் வர விடவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அமெரிக்க நிதித்துறைச் செயலர் லோரன்ஸ் சம்மர்ஸ் கூறிய கருத்துக்களையே வேலை அழிப்புகள் சம்பந்தமான கோஹ்னின் கருத்துக்களும் காட்டுகின்றன, வேலைவாய்ப்பின்மை விகிதத்தை பல ஆண்டுகளுக்கு 5-6 சதவீதத்தில் வைத்திருக்கவோ அல்லது வேலையின்மை விகிதத்தைக் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு 10 சதவீதத்தில் வைத்திருக்கவோ சம்மர்ஸ் அழைப்பு விடுத்தார்.

நிதியப் பிரபுத்துவம் அதன் திட்டநிரலைத் தொடர இரண்டு ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகிறது.

பொருளாதார முகப்பில், அது பெடரல் வங்கியின் முன்னாள் தலைவர் பௌல் வோல்க்கரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருகிறது, அவர் கூலி உயர்வு கோரிக்கைகளை ஒழிப்பதற்கும் வர்க்க உறவுகளைச் சீரமைப்பதற்காகவும் 1930 களுக்குப் பிந்தைய மிக ஆழமான பொருளாதார மந்தநிலையைத் தூண்ட, 1980 களில் வட்டி விகிதங்களை அதிகபட்ச உயரங்களுக்குக் கொண்டு சென்றார்.

அதே நேரத்தில், வோல்க்கர் தாக்குதலுக்குப் பின்னரும் அதன் போதும் தொழிற்சங்க எந்திரம் வகித்த பாத்திரத்தை அது தொடரவும் ஆழமாக்கவும் தொழிற்சங்க எந்திரத்தை அது நம்பி உள்ளது: அதாவது, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளில் தீவிரப்படுத்தப்பட்டு வரும் வெட்டுக்களுக்கு எதிராகவும் மற்றும் தசாப்தங்களாக திணிக்கப்பட்டு இந்தப் பெருந்தொற்றின் போக்கில் தீவிரப்படுத்தப்பட்ட அதிகரித்தளவில் சகிக்கவியலா வேலையிட நிலைமைகளுக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான போராட்டத்தை, அவசியமான எந்த வழிவகை மூலமாகவாவது ஒடுக்குவதற்காக அது தொழிற்சங்கத்தை நம்பி உள்ளது.

உலகளாவிய நிதி அமைப்பு முறையில் பெடரல் வட்டி விகிதம் முக்கிய பங்கு வகிப்பதன் காரணமாக, அதன் அதிகரிப்புகள் உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு நாடுகளாவது அடுத்தாண்டு பொருளாதார சுருக்கத்தை சந்திக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. ஒன்றோடொன்று தொடர்புடைய வட்டி விகிதங்களை உயர்த்துவதால் ஓர் உலகளாவிய மந்தநிலை தூண்டப்பட்டு வருகிறது என்று உலக வங்கியும் UNCTAD உம் குறிப்பிட்டுள்ளன.

ஒரு தீய சுழற்சி செயல்பட்டில் உள்ளது. அமெரிக்க வட்டி விகித உயர்வுகள் மற்ற நாணயங்களுக்கு எதிராக டாலரின் மதிப்பை அதிகரித்து வருகின்றன. நாணயத்தின் மதிப்பு குறைவது என்பது பெரும்பாலும் அமெரிக்க டாலரின் நிர்ணயிக்கப்படும் அவற்றின் இறக்குமதி செலவுகளை அதிகரித்து, பணவீக்கத்திற்கு எரியூட்டி வருகிறது. பின்னர் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் அவற்றின் விகிதங்களை அதிகரிக்கின்றன, இது இன்னும் அதிக பொருளாதார சுருக்கத்திற்கு வழிவகுக்கிறது.

பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் எட்வர்ட் லூசி சமீபத்தில் குறிப்பிட்டது போல, பெடரல் தான் 'உலகளாவிய சுருக்கத்தின் இயந்திரம்' என்பதோடு, 'அமெரிக்காவின் வேகமாக வளர்ந்து வரும் ஏற்றுமதிக்கு நிதிய வேதனையாக' உள்ளது.

ஆனால் இங்கிலாந்தில் ஏற்பட்டு வரும் நிதி நெருக்கடி எடுத்துக் காட்டி இருப்பதைப் போல எந்த விதத்திலும் கூலிகள் மட்டுமே ஒரே இலக்கு இல்லை. தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பிரித்தெடுக்கப்படும் உபரி மதிப்பைத் தொடர்ந்து நிதி மூலதனத்தின் கருவூலங்களுக்குள் பாய்ச்சினால் மட்டுமே, கடந்த ஒன்றரை தசாப்தங்களாக ஏற்பட்டுள்ள பாரியளவிலான கடன் மற்றும் ஊக மூலதன மாளிகையைக் காப்பாற்றி வைக்க முடியும்.

ஒருபுறம் அதற்குத் தீனி போடும் உபரி மதிப்பு திரட்சியை, கூலிகளைக் குறைப்பதன் மூலம் விரிவாக்க வேண்டும், மறுபுறம் அத்தியாவசிய சமூக சேவைகளை வெட்டியாக வேண்டும். இது தான் கடந்த மாதத்தில் பிரிட்டனில் ஏற்பட்ட நிதி சூறாவளியின் அர்த்தமாகும்.

ட்ரஸ் அரசாங்கத்தின் சிறிய வரவு-செலவுத் திட்ட கணக்கை நிதி மூலதனம் நிராகரிப்பது 45 பில்லியன் பவுண்டு வரி வெட்டுக்கள் மூலம் பெருநிறுவனங்களுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் அதிக பணத்தைப் பொழிய வேண்டும் என்பதற்காக அல்ல மாறாக இத்தகைய நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்பதற்காக ஆகும். அதாவது, ஏற்கனவே வெறுமையாக்கப்பட்டுள்ள சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சமூக சேவைகளில் இன்னும் கூடுதலாக வெட்டுக்களைச் செய்வதன் மூலம் அவற்றுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பதற்காக ஆகும்.

மாற்றி அமைக்கப்பட்ட டோரி அரசாங்கம் 'நம்பிக்கையை மீட்டமைப்பதற்காக' இந்த மாத இறுதியில் முக்கிய வெட்டுக்களை அறிவிக்க தயாராகி வருவதால், இந்த வேலைத்திட்டம் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிதிக் கண்காணிப்பு அறிக்கை குறிப்பிட்டதைப் போல, இந்த வர்க்கப் போர் திட்டநிரல் உலகளவில் பின்பற்றப்பட வேண்டும். அதிகப் பணவீக்க பின்னணியில், நாணயம் மற்றும் நிதிக் கொள்கையால் ஒரே மாதிரியாக கடன் மற்றும் வட்டி விகிதங்களின் அதிகரிப்பு 'தனித்துவமாக' இருப்பதாக அது கூறியது, அதாவது அரசாங்கங்கள் அவற்றின் வரவு-செலவுக் கணக்கை 'இறுக்கமான போக்கில்' வைத்திருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.

ஆனால் உலகெங்கிலுமான அரசாங்கங்கள் அவற்றின் போர் வரவு-செலவுத் திட்டங்களுக்குத் தொடர்ந்து அதிகளவில் ஆதார வளங்களை ஒதுக்கி வரும் நிலையில், இந்த 'இறுக்குதல்' இராணுவச் செலவினங்களுக்கு பொருந்தாது.

பணவீக்கத்தைப் பொறுத்த வரை, “அது உயர்ந்தால் உயரட்டும்' என்பதே கொள்கையாக உள்ளது, “விலைக் கட்டுப்பாடு, மானியங்கள் அல்லது வரி வெட்டுக்கள் மூலமாக விலை உயர்வுகளை மட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் வரவு-செலவு திட்டத்திற்குச் செலவு மிக்கதாகவும் இறுதியில் பயனற்றதாகவும் இருக்கும்' என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

உள்நாட்டில் கட்டவிழ்த்து விடப்படும் வர்க்கப் போருக்கும், அணுஆயுத விளைவுகள் கொண்டிருக்கக் கூடிய அதிகரித்து வரும் உலகப் போர் அபாயங்களுக்கும் என்ன விடையிறுப்புக் காட்ட வேண்டும்? இது தான் உலகளாவிய முதலாளித்துவ அமைப்பு முறையின் மையமாக உள்ள அமெரிக்காவிலும் ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் முக்கிய கேள்வியாகும்.

உலக சோசலிச வலைத் தளமும் அனைத்துலகக் குழுவும் ஒரு தெளிவான வேலைத்திட்டத்தை முன்னெடுத்து உள்ளன: அதாவது, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இரும்புப் பிடியை உடைக்கவும், தொழிலாள வர்க்கம் அதன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அதன் சுயாதீனமான போராட்டங்களை முன்னெடுக்கவும் ஒவ்வொரு தொழில்துறையிலும் வேலையிடத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை அபிவிருத்தி செய்வதாகும். அமெரிக்காவில் ஐக்கிய வாகனத் துறை தொழிலாளர்களின் தலைவர் பதவிக்கு வில் லெஹ்மனின் பிரச்சாரம் இந்தப் போராட்டத்தின் மிக உயர்ந்த வெளிப்பாடாகும்.

அதன் மீது சுமத்தப்படும் மிகப் பல சூறையாடல்களின் உடனடி வடிவங்கள் என்னவாக இருந்தாலும், அவை ஒட்டுமொத்தமாக ஆழமடைந்து வரும் இந்த அமைப்புமுறை நெருக்கடியில் வேரூன்றி உள்ளன என்பதோடு இந்த இலாபகர அமைப்பு முறையின் சர்வாதிகாரத்தை கவிழ்க்க சோசலிசத்திற்கான போராட்டமே அடிப்படை அச்சு என்ற புரிதலின் அடிப்படையில், இந்த முன்னோக்கு ஓர் அரசியல் வேலைத்திட்டத்திற்கான அவசியத்தை எழுப்புகிறது.

Loading