இலங்கை பெற்றோலிய ஊழியர்கள் அத்தியாவசிய சேவைகள் சட்டங்களை மீறி, தனியார்மயமாக்கலுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன (CPC) ஊழியர்கள், கடுமையான அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் விடுத்த அச்சுறுத்தல்களை மீறி, தனியார்மயமாக்கலுக்கு எதிராக செவ்வாய்கிழமை எதிர்ப்பு வேலைநிறுத்தம் ஒன்றை நடத்தினர்.

தொழில் நுட்ப வல்லுநர்கள், எழுத்தர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட பல்வேறு நிலைகளில் உள்ள சுமார் 4,000 தொழிலாளர்கள் இந்த தொழிற்துறை நடவடிக்கையில் பங்கேற்றனர். இதனால் கொலன்னாவ விநியோக நிலையம், முத்துராஜவெல களஞ்சியசாலை, கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் உட்பட அனைத்து ஆலைகளும் முடங்கின. தலைநகரில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பாராளுமன்றம் அருகே உள்ள சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

22 ஆகஸ்ட் 2022 அன்று கொழும்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிலாளர்கள் நடத்திய எதிர்ப்பு அணிவகுப்பு

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு பணிந்து நண்பகல் வேளையில் தொழிற்சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன. தனியார் நிறுவனங்களுக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும் மற்றும் விநியோகம் செய்வதற்கும் உரிமையை வழங்கும் விசேட பெட்ரோலிய ஏற்பாடுகள் சட்டத்தில் அரசாங்கம் கொண்டு வந்த திருத்தம் மீதான பாராளுமன்ற விவாதத்துடன் இணைந்து இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் பெருகும் எதிர்ப்பை தடம் புரளச் செய்யவும் நசுக்கவுமே இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்தனவே அன்றி, தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒரு உண்மையான போராட்டத்தை நட்த்துவதற்கு அழைப்பு விடுக்கவில்லை.

சில மணி நேரங்களுக்குள் அடையாள வேலைநிறுத்தத்தை கலைத்த பின்னர், தொழிற்சங்கத்தின் பேச்சாளர் பந்துல சமன் குமார, இந்த மசோதா 'எப்படியாவது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்' என்பதால், 'சேவைகளை சீர்குலைத்து வேலைநிறுத்தத்தை தொடர்வது பிரயோசமானது அல்ல' என்றார். தொழிற்சங்கங்கள் 'பாராளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றுவதை தோற்கடிக்க மாற்று வழிகளைக் தேடும்' என்றார்.

அந்தக் கூற்று போலியானது. பல மாதங்களாக, அரசாங்கம் அதன் திட்டங்களை முன்னெடுக்க அனுமதித்த தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் எதிர்ப்பை கரைத்துவிடுவதற்காக பயனற்ற போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. அவை எதிர்காலத்திலும் அவ்வாறே செய்யும்.

ஒரு தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்துடன் பின்வருமாறு கூறினார்: “நான் தனியார்மயமாக்கலை எதிர்த்து வேலைநிறுத்தத்தில் பங்கேற்றேன். தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க பல வீண் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த தொழிற்சங்கங்களை நான் நம்பவில்லை. பொது நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதைத் தடுக்க தொழிலாள வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டம் தேவை. நான் WSWS கட்டுரைகளை வாசிப்பதோடு, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான, தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்க ஒப்புக்கொள்கிறேன்.”

பொறியியலாளர் ஒருவர் கூறியதாவது: “தொழிலாளர்களை மிரட்டி தனியார்மயமாக்கும் நடவடிக்கையை அரசு தொடர்கிறது. இருப்பினும், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சங்கங்களின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ஊழியர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தொழிற்சங்க தலைவர்கள் போராட்டங்களை தவறாக வழிநடத்துகின்றனர். தொழிற்சங்க தலைவர்களின் போலித்தனத்தை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவ அமைப்பை ஒழித்து, நமது உரிமைகளைப் பாதுகாக்க நாம் நம்மை ஒழுங்கமைக்க வேண்டும்.”

பெற்றோலியப் பொதுத் தொழிலாளர் சங்கம் (PGWU), இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம் மற்றும் இலங்கை முற்போக்கு சங்கம் உட்பட 11 தொழிற்சங்கங்களின் கலவையான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்க கூட்டு (TUC) இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த தொழிற்சங்கங்கள் முறையே மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியையும் சார்ந்தவையாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்ட கொடூரமான சிக்கன திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறார். தொழிலாளர்களின் எந்தவொரு எதிர்ப்பையும் கொடூரமாக நசுக்கத் தீர்மானித்துள்ள அவர், தனது முன்னோடியான கோட்டாபய இராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்ட அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துகிறார்.

தற்போது அரசாங்கம் மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் சுகாதார சேவைகளை இந்த கொடூரமான சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளின் உத்தரவுகளை மீறும் எந்தவொரு நபரும் அல்லது அமைப்பும் 'ஒரு நீதவான் முன்னிலையில் ஒரு சுருக்க விசாரணைக்குப் பிறகு' தண்டனையை எதிர்கொள்ள நேரும் மற்றும் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை 'கடுமையான சிறைத்தண்டனை' மற்றும்/அல்லது 2,000 முதல் 5,000 ரூபாய் (11-25 டொலர்) வரை அபராதம் விதிக்கப்படும். தண்டனை பெற்றவர்களின் 'அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள்' அரசால் கைப்பற்றப்படலாம் மற்றும் அவரது பெயர் 'தொழில் அல்லது தொழிலுக்காக பராமரிக்கப்படும் எந்தப் பதிவேட்டில் இருந்தும் நீக்கப்படும்.'

திங்களன்று, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, எந்தவொரு தொழிற்சங்கமோ அல்லது எந்தவொரு தொழிலாளியோ இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன சேவைகளை சீர்குலைத்தால், அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

போராட்டத்தின் போது தொழிலாளர்கள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் கூடியிருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன மனித வள முகாமையாளர் எச்சரித்தார். இந்த மிரட்டல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அக்டோபர் 4 அன்று, இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் செயலாளர் பண்டார அரம்பேகும்புரவை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் இடைநீக்கம் செய்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைகளின் கீழ் தனியார்மயமாக்கப்படும் பிரதான தொழிற்துறைகளில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் ஒன்றாகும். இலங்கை-இந்தியா எண்ணெய் நிறுவனம் (எல்ஐஓசி), சீனாவின் சினோபெக், பெட்ரோலியம் டெவலப்மென்ட் ஓமன் மற்றும் ஷெல் ஆகிய நிறுவனங்கள் சந்தையில் நுழைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 1,200 நிரப்பு நிலையங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை அத்தகைய நிறுவனங்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நகர்வுகள் சேமிப்பு மற்றும் சுத்திகரிப்பு உட்பட அனைத்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மற்ற வசதிகளையும் தனியார்மயமாக்க வழிவகுக்கும்.

இலங்கையின் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட ஒரு பரந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தனியார்மயமாக்கல் ஆகும். சீர்திருத்தங்கள் என்று அழைக்கப்படும் ஏனையவை, அனைத்து அரச நிறுவனங்களையும் தனியார்மயமாக்குதல் அல்லது 'வணிகமயமாக்குதல்', பொதுக் கல்வி மற்றும் சுகாதார சேவைகளைக் வெட்டிக் குறைத்தல் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களிடமிருந்து பணத்தைப் பெற வரிகள் மற்றும் விலைகளை அதிகரிப்பதும் அடங்கும்.

அக்டோபர் 5 அன்று, 'அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் சுமையை குறைப்பதன் மூலம், 2 முதல் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுவதன் ஊடாக நாம் [வெளிநாட்டு] இருப்புக்களை விரிவாக்க முடியும்' ஏன்று விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் அமெரிக்கா தலைமையிலான ரஷ்யாவிற்கு எதிரான போரினால் மோசமடைந்துள்ள உலக முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதில் ஆளும் வர்க்கம் உறுதியாக உள்ளது. மத்திய வங்கியும் அரசாங்கமும் பாரியளவிலான வெளிநாட்டுக் கடன்களை தற்காலிகமாகத் திருப்பிச் செலுத்தவில்லை மற்றும் சர்வதேச கடன் வழங்கும் திமிங்கிலங்களுக்கு செலுத்துவதற்கு அரசாங்கத்தின் திறைசேரியை நிரப்ப முற்படுகின்றன.

தனியார்மயமாக்கலுக்கு தொழிலாளர்களின் எதிர்ப்பு மற்றும் வேலைகள் மற்றும் நிலைமைகளுக்கு அச்சுறுத்தல் உருவாகியுள்ள நிலையில், சமீபத்திய மாதங்களில் இந்த தொழிற்சங்க கூட்டமைப்பு பல போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆகஸ்ட் 22 அன்று, இந்த திட்டத்தை திரும்பப் பெறப்போவதில்லை என்று அறிவித்த மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு அழுத்தம் கொடுப்பதன் பேரில் இந்த கூட்டமைப்பு ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. செப்டம்பர் 20 அன்று, அது வஞ்சத்தனமாக கடவுளிடம் பிரார்த்தனை செய்ய ஏற்பாடு செய்து, அரசாங்கத்தின் நகர்வுகளை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டது.

இந்த தொழிற்சங்கங்களை கட்டுப்படுத்தும் அரசியல் கட்சிகள் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை முழுமையாக ஆதரிக்கின்றன. சமூக உரிமைகள் மீதான விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு அனைத்து தொழிற்சங்கங்களும் பொறுப்பாகும். தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு சுயாதீனமான போராட்டத்தையும் அவை எதிர்க்கின்றன.

ஏப்ரலில் இருந்து, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் வெகுஜனப் போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் ஜனாதிபதி இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் இராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தினர். ஏப்ரல் 28 மற்றும் மே 6 அன்று, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பொது வேலைநிறுத்தங்களில் இணைந்தனர்.

எவ்வாறாயினும், முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி-இடது குழுக்களால் ஆதரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், அந்த போராட்டங்களை காட்டிக்கொடுத்து, முதலாளித்துவ இடைக்கால ஆட்சிக்காக, எதிர்க்கட்சியான ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.யும் விடுத்த அழைப்புக்குப் பின்னால் அவற்றைத் திசைதிருப்பிவிட்டன.

தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மூலம் தனியார்மயமாக்கலை நிறுத்தவும் தங்கள் உரிமைகளுக்காகவும் போராட முடியாது. அவை முதலாளித்துவ அமைப்புடன் பிணைக்கப்பட்டுள்ளன, அதனால் முதலாளித்துவ நெருக்கடியின் சுமையை தொழிலாளர்களின் முதுகில் கட்டிவிடுவதை ஆதரிக்கின்றன.

அரசாங்கம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டம் இன்றி, தொழிலாள வர்க்கம் தனது உரிமைகளைப் பாதுகாக்க முடியாது என்பதையே தனியார்மயமாக்கலுக்கு எதிரான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தொழிலாளர்களின் போராட்டம் மீண்டும் காட்டியுள்ளது. அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைக்கு எதிராகப் போராட, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் ஒவ்வொரு வேலைத் தளத்திலும் சுற்றுப்புறத்திலும் சுயாதீன நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டும்.

எவ்வாறாயினும், சோசலிச கொள்கைகளுக்காக போராடாமல், தொழிலாளர்களும் ஏழைகளும் கண்ணியமான வேலைகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கான தங்கள் உரிமையைப் பாதுகாக்க முடியாது. அதாவது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் பிரதான தொழில்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரிக்க வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இந்த வேலைத்திட்டத்திற்காக போராடுவதற்கு ஒரு சோசலிச வெகுஜன இயக்கத்திற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக, ஜனநாயகம் மற்றும் சோசலிசத்துக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டிற்கு பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்கு, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பில் இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Loading