போர் வெறியில் ஜேர்மன் பசுமைக் கட்சி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வார இறுதியில் நடைபெற்ற ஜேர்மன் பசுமைக் கட்சி மாநாடு ஒரு வெறுக்கத்தக்க காட்சியாக இருந்தது. பொண் நகரில் கூடியிருந்த 817 பிரதிநிதிகள் உக்ரேனில் போரை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளில் ஒருவரையொருவர் விஞ்சி நின்றனர்.

கூட்டத்தின் எந்த அம்சம் மிகவும் வெறுக்கத்தக்கது என்று சொல்வது கடினமானதாக இருந்தது: சமாதானம், நிராயுதபாணியாக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அணுசக்தியிலிருந்து எரிசக்தி பெறுவதை நிறுத்துதல் தொடர்பாக கட்சியின் முந்தைய வெறும் வாயளவிலான கருத்துக்களை பிரதிநிதிகள் நிராகரிப்பதை அவர்களின் புதிய அரசியல் நிலைப்பாட்டினால் நியாயப்படுத்தும் சூழ்ச்சி அல்லது பரந்த அளவிலான மக்களின் கவலைகள் மற்றும் தேவைகள் மீதான பசுமைவாதிகளின் அலட்சியம் மற்றும் அறியாமை போன்றவை இதில் வெளிப்பட்டன.

அன்னலேனா பெயர்பொக், ரொபேர்ட் ஹேபெக் டுசெல்டோர்ப் நகரில் 2021 இல் [Photo by Bündnis 90/Die Grünen Nordrhein-Westfalen / CC BY-SA 2.0]

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் பினாமி போர் அணுசக்தி மூன்றாம் உலகப் போராக அதிகரிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அணுசக்தி 'பேரழிவாகரமான' ஆபத்து பற்றி பேசினார். உக்ரேனில் தந்திரோபாய அணு ஆயுதங்கள் 25 சதவிகிதம் பயன்படுத்தப்படும் என்று முன்னாள் CIA இயக்குனர் லியோன் பனெட்டா மதிப்பிடுகிறார். இதற்கான பசுமைவாதிகளின் பதில் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதும், மேலும் இராணுவ விரிவாக்கத்திற்கு ஆதரவளிப்பதாகும்.

உக்ரேனில் போர்நிறுத்தம் கோரும் ஒரு பிரேரணையும் மற்றும் கியேவிற்கு கனரக ஆயுதங்கள் வழங்குவதை எதிர்க்கும் மற்றொன்றும் பிரதிநிதிகளால் பெருமளவில் நிராகரிக்கப்பட்டது. முதல் அணுகுண்டு வீசப்பட்ட பின்னர் ஐரோப்பா அழிக்கப்படும் என்று எச்சரித்த ஒரு பிரதிநிதியின் வாதத்தை ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பசுமைக் கட்சி உறுப்பினர் செர்ஜி லகோடின்ஸ்கி, கடுமையாக சாடினார். உக்ரேனியர்கள் 'சூரியகாந்திப் பூக்களால் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியாது' என்று அவர் கூறினார்.

ஜேர்மன் வெளியுறவு மந்திரி அன்னலெனா பெயர்பொக் உக்ரேனுக்கு அதிக ஆயுதங்கள் மற்றும் கனரக போர் டாங்கிகளை வழங்க வேண்டும் என்று கடுமையாக வாதிட்டார். 'நாங்கள் உக்ரேனை ஆதரிக்கிறோம், நாங்கள் சமாதானத்திற்கும் மனித உரிமைகளுக்குமான கட்சியாகவும் இருப்பதால் அல்ல, நாங்கள் சமாதானத்திற்கும் மனித உரிமைகளுக்குமான கட்சி என்பதாலாகும்.. என தனது போருக்கான ஆதரவை நியாயப்படுத்த கூறினார்.

கட்சித் தலைவர் ரிக்கார்டா லங் அவருக்கு ஆதரவளித்தார். “நாம் அதிக ஆயுதங்களை வழங்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் வேகமாக செயல்பட வேண்டும். தயக்கத்திற்கான நேரம் முடிந்துவிட்டது” என்றார்.

அமெரிக்கா சீனாவை ஒரு மூலோபாய போட்டியாளராக அறிவித்து, 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட நாட்டிற்கு எதிரான போருக்கு திட்டமிட்டு தயாராகி வருகிறது. பசுமைவாதிகள் இந்த பாதையின் பின்னால் நிற்கிறார்கள். 'சீனா நமது ஜனநாயக வாழ்க்கை முறையை அச்சுறுத்துகிறது. அதனால்தான் நாங்கள் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்' என்று முன்னாள் கட்சியின் தலைவர் ரய்ன்ஹார்ட் புட்டிகோஃபர் நியாயப்படுத்தினார்.

ஜேர்மன் தேசிய கூட்டணி உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு மாறாக, மத்திய அரசாங்கம் 36 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள போர் விமானங்களுக்கான உபகரணங்களையும் ஆயுதங்களையும் சவுதி அரேபியாவிற்கு வழங்கி வருகிறது. பசுமைக் கட்சிக்கு இது ஒரு பிரச்சனை இல்லை! அத்தகைய ஏற்றுமதிக்கு கட்சி மாநாடு பச்சைக்கொடி காட்டியது.

இந்த குற்றவியல் கொள்கைக்கு பெயர்பொக் ஒரு புதிய நியாயப்படுத்தலைக் கொண்டு வந்தார். சவூதி ஆட்சிக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ஐரோப்பிய கூட்டுத் திட்டத்தில் இருந்து ஜேர்மனி விலகினால், ஜேர்மன் இராணுவத்தை ஆயுதமாக்குவதற்கான செலவுகள் அதிகரிக்கும். இதனால் சமூக நலன்களுக்கான பணம் பற்றாக்குறையாக இருக்கும். 'சமூகத் துறையில் நாங்கள் இன்னும் அதிகமாகச் செலவைக்குறைக்க நான் விரும்பவில்லை. பின்னர் லிசா [பசுமைக் கட்சி குடும்ப மந்திரி லிசா பாஸைக் குறிப்பிடுகிறார்] அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் குழந்தைகளுக்கான நிதி இருக்காது' என்று வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தினார்.

'ஆயுத ஏற்றுமதி மூலம் சமூகப் பாதுகாப்பை உருவாக்குதல்' - பசுமைவாதிகளுக்கான உண்மையான புதிய முழக்கம்! என்று பெயர்பொக் கூறியதற்கு எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிக்கப்பட்டது.

கட்சி மாநாடு, பசுமைக் கட்சியினரின் வர்த்தக முத்திரையான காலநிலைக் கொள்கையையும் போர்க் கொள்கைக்கு தியாகம் செய்தது. ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் விளைவாக ஏற்பட்ட எரிவாயு பற்றாக்குறையை ஈடுகட்ட, திட்டமிட்ட அணுமின் நிலையத்தை கட்டுவதை தாமதப்படுத்தவும், நிலக்கரியால் எரியும் மின் நிலையங்களை மீண்டும் செயல்படுத்தவும் கட்சி ஒப்புக்கொண்டது.

பசுமைவாதிகள் ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே தங்கள் மூலவேர்களுக்கு உண்மையானவர்களாக இருந்தனர். கட்சி மாநாட்டில் சர்ச்சைக்குரிய விவாதம் இன்னும் சாத்தியம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக முற்றிலும் துணைப் பிரச்சினைகள் பற்றி வாதிட அனிமதிக்கப்பட்டது. இளம் முன்னணிக்குவருபவர்களான லூசியா நொயபவர் (Luisa Neubauer -Fridays for Future) மற்றும் ரிமோன் டிசினுஸ் (Timon Dzienus -Green Youth) ஆகியோர் கட்சியை 'சுற்றுச்சூழல் மிகை யதார்த்தவாதம்' மற்றும் 'காலநிலை இலக்குகளை காணவில்லை' என்று குற்றம் சாட்ட அனுமதிக்கப்பட்டனர். லிக்னைட் சுரங்கத்திற்கு வழி வகுக்கும் வகையில் சிறிய குக்கிராமமான லுட்ஸெராத் இனை இடிப்பது தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸில் காரசாரமான விவாதம் நடைபெற்றதுடன் உடனடியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உண்மையில், இந்த சிறிய கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் ஏற்கனவே வெளியேறிவிட்டனர்.

இந்த விவாதங்கள் பசுமைக் கட்சியின் பாதையை மாற்றாது, அது இன்னும் வலதுசாரிப்பக்கம் வளைந்து சென்று கொண்டிருக்கிறது. பசுமைக் கட்சியை போர், முதலாளித்துவ அரசு மற்றும் முதலாளித்துவ ஒழுங்கின் கட்சியாக மாற்றுவது பூர்த்தியடைந்துவிட்டது. 'நாங்கள் இந்த அரசை தாங்குபவர்கள்' என்று ஓமிட் நூரிபூர் பெருமையுடன் அறிவித்தார். நூரிபூர் ரிக்கார்டா லாங்குடன் இணைந்து கட்சிக்கு தலைமை தாங்குகிறார்.

'Bündnis 90/Green Party இன் ஸ்தாபகப் பிரமுகர்கள் இரண்டு ஜேர்மன் அரசுகளிலும் கிளர்ச்சி மற்றும் அமைப்பினை அவமதிக்கும் உணர்வுடன் முன்னர் ஒன்றுகூடியிருந்தனர்' என தெரிவித்த Süddeutsche Zeitung பத்திரிகை 'இன்று, அவர்களின் கட்சி அரச ஒழுங்கமைப்பைக் காப்பாற்றுவதை அதன் மிகவும் புனிதமான பணியாகக் கருதுகிறது' என எழுதியது.

Tagesspiegel பத்திரிகை 'இன்று பசுமைவாதிகள் இன்னும் தீவிரமயமானவர்கள் - ஆனால் தீவிரமான யதார்த்தமானவர்கள். ... பொறுப்பின் நெறிமுறை ஒருவரை முதலில் நாட்டைப் பற்றியும் பின்னர் கட்சியைப் பற்றியும் சிந்திக்கத் தூண்டுகிறது. இதை உணராதவர்கள் தங்கள் பொறுப்பை உணரத் தவறுகிறார்கள். நெறிமுறைக் கருத்துக்கள் நேற்றைய தினத்திற்குரியவை” என எழுதியது.

பசுமைக் கட்சி மாநாட்டிற்கு ஆதரவளித்தவர்கள் [Photo on Twitter]

பசுமைக் கட்சி மற்றும் அரசு இணைவது ஜேர்மனியின் சமூகப் பிளவுக்கு நேர்மாறான விகிதத்தில் உள்ளது. பொருளாதாரத் தடைகள், உயரும் பணவீக்கம், விண்ணை முட்டும் வாடகைகள் மற்றும் மந்தநிலை ஆகியவற்றின் விளைவுகள் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை ஆழமாக்குகின்றன. கடுமையான வர்க்கப் போராட்டங்கள் சமூக ஜனநாயகவாதிகள், பசுமைவாதிகள் மற்றும் தாராளவாதிகளின் ஆளும் அரசாங்கத்துடன் மோதல்களை முன்னறிவிக்கின்றன. பசுமைவாதிகள் கூர்மையாக வலதுசாரிப் பக்கம் நகர்வதன் மூலம் அதற்கு பதிலளிக்கின்றனர்.

கட்சி யாருக்கு சேவை செய்கிறது என்ற சந்தேகத்தை போக்க, பசுமைவாதிகள் மாநாட்டிற்கு நிதியுதவி செய்ய பெரிய நிறுவனங்களை அழைத்தனர். அதில் ஏனையவற்றுடன் ஆயுதத் துறையின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்வழங்குனர் சங்கமான Gesamtmetall, இரசாயன நிறுவனம் Bayer, மத்திய வீட்டுவசதி அமைப்பு, நில வியாபார தொழில்முனைவோர், ஜேர்மன் கோழிவளர்ப்புத் தொழில் மற்றும் மலிவுவிலை அங்காடித் தொடரான Lidl ஆகியவை உள்ளடங்கின. ஜேர்மன் தொழில்துறை சங்கத்தின் தலைவர் சீக்பிரைட் ருஸ்வுர்ம் மாநாட்டில் விருந்தினர் பேச்சாளராக தோன்றினார்.

Loading