முன்னோக்கு

அணுகுண்டுகள் தாங்கிச் செல்லும் B-52 குண்டுவீச்சு விமானங்களை அமெரிக்கா ஆஸ்திரேலியாவில் நிலைநிறுத்த உள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வடக்கு ஆஸ்திரேலியாவில் B-52 குண்டுவீச்சு விமானங்களை நிலை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் முன்னேறிய திட்டங்களை நேற்று ஓர் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. அமெரிக்காவின் தாக்குதல் திறன்களுக்கு முக்கியமான, அணுகுண்டுகள் தாங்கிச் செல்லும் திறன் கொண்ட குண்டுவீச்சு விமானங்களை நிலைநிறுத்துவது, ஆஸ்திரேலியா, இந்தோ-பசிபிக் பகுதி மற்றும் உலகையே இராணுவமயமாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் குறிக்கிறது.

இலக்கு தெளிவாக உள்ளது. ஆஸ்திரேலிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 'Four Corners' நிகழ்ச்சியின் நேற்றிரவு பகுதியில் பேசிய போர்-சார்பு சிந்தனைக் குழாமின் பிரதிநிதிகளும், மற்றும் பத்திரிகைகளில் இதுவரை கருத்துத் தெரிவித்தவர்களும், ஓர் உலகளாவிய அணுஆயுதப் பேரழிவை அச்சுறுத்தும் சீனா உடனான ஒரு போருக்குத் தயாரிப்பாக இந்த குண்டுவீச்சு விமானங்கள் அனுப்பப்படுவதாகப் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளனர்.

வேறு வார்த்தைகளில் கூறினால், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுடன் தொடர்ந்து அவர்களின் போரைத் தீவிரப்படுத்தி வரும் அதேவேளையில், அவர்கள் ஒட்டுமொத்த இந்தோ-பசிபிக் பகுதியையும் எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய ஒரு வெடி உலையாக மாற்றி வருகிறார்கள்.

பி-52 குண்டுவீச்சு விமானம் தென் கொரியாவின் பியோங்டேக்கில் உள்ள ஓசன் விமான தளத்தின் மீது பறக்கிறது. வடக்கு ஆஸ்திரேலியாவில் ஆறு அணுசக்தி திறன் கொண்ட B-52 குண்டுவீச்சு விமானங்களை நிலைநிறுத்த அமெரிக்கா தயாராகி வருகிறது [AP Photo/Ahn Young-joon, File]

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகளைப் பொறுத்த வரையில், ரஷ்யாவுக்கு எதிராக ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் போர், அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு முக்கிய அச்சுறுத்தலாக உள்ள சீனாவுக்கு எதிரான போருக்கு அவசியமான முன்னோட்டமாக உள்ளது. இது கடந்த மாதம் வெளியிடப்பட்ட சமீபத்திய அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் குறிப்பிடப்பட்டது, 'பெரும் சக்திகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் மோதலின்' ஒரு 'தீர்க்கமான தசாப்தத்தை' அது பிரகடனப்படுத்தியது. 'சர்வதேச ஒழுங்கை மறுவடிவமைக்க, உள்நோக்கமும் மற்றும் பெருகிய முறையில் ஆற்றலும் ஆகிய இரண்டையும் கொண்ட ஒரே போட்டியாளர்' சீனா என்று அது குறிப்பிட்டது, இதற்காக அமெரிக்கா அதன் வசம் உள்ள அனைத்தையும் கொண்டு எதிர்த்துப் போராடும்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்டகால வீழ்ச்சியாலும் மற்றும் ஒட்டுமொத்த உலகளாவிய முதலாளித்துவ அமைப்புமுறையின் ஆழமடைந்து வரும் நெருக்கடியாலும் உந்தப்பட்டு, அந்த குண்டுவீச்சு விமானங்களை நிலைநிறுத்துவது இந்தத் திட்டத்தின் நாசகரமான தாக்கங்களைச் சுட்டிக் காட்டுகிறது.

வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள டிண்டால் விமானப்படை தளத்தில் ஒரு 'படைப்பிரிவு செயல்பாடுகளுக்கான அமைப்பை' உருவாக்க அமெரிக்கா தயாரிப்பு செய்து வருவதாக 'Four Corners' நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. அது ஆறு B-52 குண்டுவீசிகளை நிலைநிறுத்தும் வகையில் ஒரு பரந்த விமானக் கொட்டகை மற்றும் தளவாட வைப்பு வசதிகளை உள்ளடக்கி இருக்கும், இந்த குண்டுவீச்சு விமானங்கள் வெப்ப மண்டல வறண்ட காலங்களின் போது அனேகமாக சுறழ்சி முறையில் அந்த இடத்தில் நிலைநிறுத்தப்படலாம். டிண்டால் தளத்தில் விமான எரிபொருள் நிரப்பறைகள் மற்றும் வெடிமருந்து சேமிப்பிடம் ஒன்றையும் அமெரிக்கா கட்டமைக்கும். இந்த இடத்தை ஆஸ்திரேலியா 'மேம்படுத்துகையில்', அதன் ஓடுபாதைகள் மற்றும் பிற வசதிகளை விரிவாக்கி வருகிறது.

இதற்கிடையே, டார்வினில் பதினொரு ராட்சத ஜெட் எரிபொருள் நிரப்பறைகளை அமெரிக்கா உருவாக்கி வருகிறது.

அமெரிக்க விமானப்படை இந்தத் திட்டங்களை உறுதிப்படுத்தியது, 'அமெரிக்க விமானப்படை குண்டுவீச்சு விமானங்களை ஆஸ்திரேலியாவில் நிலைநிறுத்த முடியும் என்பது, பயங்கரமான விமானப்படை பலத்தை நம்மால் காட்ட முடியும் என்பதைக் குறித்து எதிரிகளுக்கு ஒரு பலமான சேதியை அனுப்புகிறது,” என்றது குறிப்பிட்டது.

'Four Corners' நிகழ்ச்சி, மத்திய ஆஸ்திரேலியாவில் அமெரிக்க-ஆஸ்திரேலிய Pine Gap கூட்டு மையத்தின் மிகப் பெரிய ஒரு விரிவாக்கத்தையும் அறிவித்தது. யுரேஷியா முழுவதும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளைத் தொடுப்பதிலும் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக திட்டமிடுவதிலும் இந்த இராணுவ-உளவுத்துறை மையம் முக்கிய பங்கு வகிக்கிறது. 2015 இல் 33 ஆக இருந்த அதன் அதிசக்தி வாய்ந்த செயற்கைக்கோள் ஆண்டெனாக்களின் எண்ணிக்கை இன்று 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதை நாட்டிலஸ் பயிலகம் கண்டறிந்துள்ளது. இந்தளவிலான எண்ணிக்கை விரிவாக்கம், அதிகரித்தளவில் அதிநவீன உபகரணங்களை நிலைநிறுத்துவதுடன் சேர்ந்துள்ளது.

போர்வெறி மிக்க நியூ அமெரிக்கன் பாதுகாப்பு மையத்தின் பெக்கா வாஸர், 'Four Corners' நிகழ்ச்சியில் கூறுகையில், 'சீனாவின் பிரதான நிலப்பகுதி வரைச் சென்று தாக்கக்கூடிய குண்டுவீச்சு விமானங்களை வைத்திருப்பது, தைவான் மீதான அதன் எந்தவொரு நடவடிக்கையும் இதை இன்னும் கூடுதலாக விரிவாக்கம் இருக்கும் என்று சீனாவுக்கு ஒரு சமிக்ஞை அனுப்புவதில் மிகவும் முக்கியமானது,” என்றார். 150,000 மக்கள்தொகை கொண்ட டிண்டால் மற்றும் டார்வின், சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான எந்தவொரு அமெரிக்கப் போரிலும் தவிர்க்க முடியாத ஓர் இலக்காக இருக்கும் என்பதை இந்த நிலைநிறுத்தல் உறுதிப்படுத்துகிறது என்றவர் வெறித்தனமாகக் கூறினார்.

அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய இராணுவம் மற்றும் உளவுத்துறை வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள முர்டோக்கிற்குச் சொந்தமான Australian பத்திரிகையின் வெளியுறவுத்துறைப் பிரிவு ஆசிரியர் கிரெக் ஷெரிடன் இன்று காலை குறிப்பிடுகையில், B-52 ஐ நிலைநிறுத்துவது 'அதிகரித்து வரும் 'போருக்கு முந்தைய' சூழலுக்குக் கட்டியம் கூறுகிறது என்று எழுதியதுடன், “போர் ஏற்படுவதற்கான முழக்கங்கள் உலகெங்கிலும் ஒலிக்கின்றன. இது எச்சரிக்கை மணி அல்ல, இது யதார்த்தம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஷெரிடன் அப்பட்டமாக கூறினார்: “B-52 குண்டுவீச்சு விமானங்கள், சீன இராணுவத் தளங்கள் மீதும் தென் சீனக் கடலில் உள்ள சொத்திருப்புகள் மீதும் சக்தி வாய்ந்த மூலோபாயத் தாக்குதல்களைக் கொடுக்கக் கூடியவையாக இருக்கும், உண்மையில் இனிமேல் ஏதேனும் கட்டமைக்க வேண்டுமானால் தென் பசிபிக் பகுதியில் செய்யப்பட வேண்டும். அவை வடக்கு பிராந்தியத்திலிருந்து சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கே பறந்து சென்று, குண்டுகளை வீசிவிட்டு, மீண்டும் திரும்பி வர முடியும்,” என்றார்.

ஒரு சீன செய்தித் தொடர்பாளர் இன்று காலை எச்சரிக்கையில், பரந்த அமெரிக்க முனைவின் பாகமாக உள்ள இந்த நிலைநிறுத்தல், 'பிராந்திய பதட்டங்களை அதிகரித்துள்ளதுடன், பிராந்தியளவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கடுமையாக பாதித்துள்ளது, பிராந்தியளவில் ஆயுதப் போட்டியைத் தூண்டக்கூடும்' என்றார்.

வடக்கு ஆஸ்திரேலியாவுக்குப் போர்விமானங்களை அனுப்புவது அமெரிக்காவின் தாக்குதல் திறன்களைப் பன்முகப்படுத்துவதற்கும் மற்றும் பிராந்திய கூட்டாளிகளைப் போர் தயாரிப்புகளுடன் இன்னும் நெருக்கமாக இணைப்பதற்குமான அமெரிக்கத் திட்டத்தின் பாகமாக உள்ளது. வடக்கு ஆஸ்திரேலியா ஒரு முக்கிய பங்கு வகிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் B-52 ரக குண்டுவீசிகள் நிறுத்தப்பட்டு இருக்கும் குவாமில் உள்ள அமெரிக்கத் தளத்தைப் போல் இல்லாமல், சீனாவின் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளைத் தவிர்த்து பார்த்தால், பெரும்பாலும் பாரம்பரிய சீன ஏவுகணைகளிடம் இருந்து ஆஸ்திரேலியா எட்ட முடியாத தூரத்தில் உள்ளது.

இந்த நிலைநிறுத்தலை நியாயப்படுத்துவதில், போரை ஆதரிக்கும் பல்வேறு வர்ணனையாளர்களும் மற்றும் 'Four Corners' நிகழ்ச்சியும் கூட, தைவான் மீதான சீன படையெடுப்பால் தூண்டப்பட்ட ஒரு போர் அச்சுறுத்தலுக்கு ஒரு தற்காப்பு விடையிறுப்பாக இந்த B-52 குண்டுவீச்சு விமானங்கள் அனுப்பப்படுவதாக வாதிடுகின்றனர்.

ஆனால் இது ஒரு பொய். தைவானை வேண்டுமென்றே போரின் ஒரு முக்கிய வெடிப்புப் புள்ளியாக மாற்றியது அமெரிக்கா தான். அடுத்தடுத்து வந்த அமெரிக்க நிர்வாகங்கள் தசாப்தங்களாக இருந்து வந்த வழமைகளுக்குக் குழிபறித்துள்ளன, இவற்றின் கீழ் அமெரிக்க அரசாங்கமும் சர்வதேச சமூகமும் சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை தைவான் உள்ளடங்கலாக மொத்த சீனாவுக்குமான சட்டபூர்வ அரசாங்கமாக நடைமுறையளவில் அங்கீகரித்தன. இராணுவப் பயிற்சியாளர்களுடன் சேர்ந்து தைபேயில் ஆயுத விற்பனையை வெகுவாக உயர்த்திய அமெரிக்கா, தைவானிய பிரிவினைவாதத்தைத் தூண்டிவிட்டு, ஒன்றன்பின் ஒன்றாக ஆத்திரமூட்டும் இராஜாங்க பயணங்களை நடத்தியது.

'சிறிய தைவான்' பற்றிய புதிய அக்கறைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாறாக, சீனாவின் பெருநிலப்பரப்பில் இருந்து வெறும் 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தப் பகுதி, ரஷ்யாவுடன் போரைத் தூண்டுவதற்கு அமெரிக்கா சாதகமாக்கிக் கொண்ட உக்ரேனைப் போல அதற்கு நிகரான ஒரு பாத்திரம் வகிக்கப் போகிறது. சீனாவை ஒரு படையெடுப்புக்குத் தூண்டுவதே இதன் நோக்கம், அது அமெரிக்கா தொடுக்கும் பகிரங்கப் போருக்குச் சாக்குபோக்காக பயன்படுத்தப்படும்.

வடக்கு ஆஸ்திரேலியாவை இராணுவமயப்படுத்துவது, தைவான் தொடர்பான சமீபத்திய அபிவிருத்திகளுக்கு ஒரு விடையிறுப்பாகவே அமெரிக்க ஆக்ரோஷம் அதிகரிக்கப்படுகிறது என்ற கூற்றுக்குப் பொய்யாகப் பயன்படுத்தப்படுகிறது.

சீனாவுக்கு எதிராக ஆசிய-பசிபிக் முழுவதிலும் ஒரு பரந்த இராணுவக் கட்டமைப்பை ஏற்படுத்தும் அமெரிக்காவின் 'ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்', 2011 இல், அப்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் கையெழுத்திட்டது. டார்வினில் ஒரு புதிய அமெரிக்கத் தளத்தை நிறுவுவதும் அதில் உள்ளடங்கி இருந்தது, இப்போது அங்கே 2,000 க்கும் அதிகமான கடற்படையினர் உள்ளதுடன், ஆஸ்திரேலியாவை அமெரிக்க போர் எந்திரத்துடன் ஒருங்கிணைக்கும் பிற நடவடிக்கைகளும் நடக்கின்றன.

“ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு' தொடங்கப்பட்ட போது தீட்டப்பட்ட, பென்டகனின் 'வான்வழி-கடல்வழி போர்' (Air-Sea Battle) மூலோபாயத்தின் கீழ், ஆஸ்திரேலியாவும் அதன் வடக்கு பகுதியும் சீனா உடனான போரின் போது ஒரு 'தெற்கு நங்கூரமாக' ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகிக்க உள்ளன. அது அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் போர் விமானங்களுக்கு ஒரு ஏவும் களமாகவும், சீனா பெரும்பாலும் அதன் மூலப்பொருட்கள் மற்றும் வர்த்தகத்திற்காக சார்ந்திருக்கும் அப்பிராந்தியத்தின் முக்கிய கடல் போக்குவரத்துகளை முடக்குவதற்குமான களமாகவும் இருக்கப் போகிறது.

இத்தகைய நீண்ட காலத் திட்டங்கள் இப்போது செயலுக்குக் கொண்டு வரப்பட்டு வருகின்றன என்பதற்கு இந்த B-52 களின் நிலைநிறுத்தம் ஓர் எச்சரிக்கையாகும்.

இது, அமெரிக்கத் தலைமையிலான ஒட்டுமொத்த உலகளாவிய போர் திட்டத்துடன் சேர்ந்து, மக்களுக்கு எதிரான ஒரு சதி வடிவத்தை எடுக்கிறது. B-52 களை அனுப்பும் திட்டங்கள் ஒருபோதும் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை, மிகக் குறைவாக பொது வெளியில் அறிவிக்கப்பட்டது. மாறாக, அவை அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள், இராணுவங்கள் மற்றும் புலனாய்வு அமைப்புகளுக்கு இடையே மூடிய கதவுக்குப் பின்னால் நடந்த விவாதங்களில் கொண்டு வரப்பட்டன. அவை அமெரிக்க ஒப்பந்தப் புள்ளி ஆவணங்கள் மூலம் 'Four Corners' நிகழ்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்டன.

குறிப்பாக B-52 களின் விஷயத்தில், இந்த இரகசியம் முக்கியமானது. விமானங்களும் மற்றும் அணுஆயுத குண்டுகள் தாங்கிச் செல்லும் பிற போர்விமானங்களும் முன்னர் ஆஸ்திரேலியாவில் நின்று சென்றுள்ளன என்றாலும், அவை ஒருபோதும் அந்த நாட்டில் நிலைநிறுத்தப்பட்டதில்லை, ஆஸ்திரேலியா உத்தியோகப்பூர்வமாக அணுஆயுதம் இல்லா நாடாகும். எவ்வாறிருப்பினும், அமெரிக்கா, கொள்கை முடிவுகளின்படி, அதன் அணுஆயுதம் தாங்கும் ஏதேனும் போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் அணுஆயுதம் ஏந்தி சென்றதா என்பதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ செய்யவில்லை.

வேறு வார்த்தைகளில் கூறினால், அணுஆயுதம் இல்லா நாடாக ஆஸ்திரேலியாவின் நிலை எந்தவித பொது விவாதமும் இல்லாமல் நடைமுறையளவில் மாற்றப்பட்டு உள்ளது. முக்கியமாக, முந்தைய தாராளவாத தேசிய அரசாங்கத்தின் கீழ் தொடங்கப்பட்டதாக தெரியும் இந்தத் திட்டம், தற்போதைய தொழிற்கட்சி நிர்வாகத்தால் நிறைவு செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல அது, செப்டம்பர் 2021 இல் வெளியிடப்பட்ட பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுடனான இராணுவக் கூட்டணியான AUKUS ஐ முன்நகர்த்தி வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆஸ்திரேலியா அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுகிறது மற்றும் புதிய சகாப்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுக்கான ஏவுதளமாகவும் ஆகி உள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் போரை எதிர்க்கிறார்கள் மற்றும் அமைதியை விரும்புகிறார்கள் என்பதை அரசாங்கங்கள் அறிந்திருப்பதால், ஆஸ்திரேலியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும், இந்த இராணுவ வேலைத்திட்டம் இரகசியமான போர்வையின் கீழ் நடத்தப்படுகிறது.

முதலாளித்துவம் தயாரிப்பு செய்து வரும் இந்த பேரழிவைத் தடுக்கும் நோக்கில், இந்த உணர்வு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவான அரசியல் இயக்கமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதையே, வேகமாக அணு ஆயுதங்களை உள்ளிழுக்கும் ஒரு மோதலுக்கான முன்னேறிய தயாரிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. இத்தகைய இயக்கத்திற்கான ஓர் அடித்தளம், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதும் போருக்கு எதிரான வெகுஜனங்களின் வெறுப்பிலும், வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியிலும் உள்ளது.

Loading