மிகப்பெரிய அமெரிக்க-தென் கொரியா விமானப்படை பயிற்சிகள் வட கொரியா ஏவுகணை ஏவுதலைத் தூண்டுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரிய தீபகற்பத்தை சுற்றி அமெரிக்காவும் தென் கொரியாவும் இந்த வாரம் மிகப்பெரிய அளவிலான விமானப்படை பயிற்சிகளை நடத்தி வருகின்றன. திங்கள் முதல் வெள்ளி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த போர் பயிற்சிகள் வாஷிங்டன் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அதன் கூட்டாளிகளால் நடத்தப்படும் சமீபத்திய ஆத்திரமூட்டலாகும். இது வட கொரிய அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கை என்று சித்தரிக்கப்பட்டாலும், வாஷிங்டன், எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவிற்கு எதிரான அதன் இராணுவ கட்டமைப்பில் எந்தத் தளர்வும் இருக்காது என்ற சமிக்ஞையை அனுப்புகிறது.

B-52 குண்டுவீச்சு விமானங்கள் தென் கொரியாவின் பியோங்டேக்கில் உள்ள ஓசன் விமான தளத்தின் மீது பறக்கிறது. ஆறு அணுசக்தி திறன் கொண்ட B-52 குண்டுவீச்சு விமானங்களை வடக்கு ஆஸ்திரேலியாவில் நிலைநிறுத்த அமெரிக்கா தயாராகி வருகிறது [AP Photo/Ahn Young-joon, File]

Vigilant Storm என்றழைக்கப்படும் இந்த பயிற்சிகள், 2017 க்குப் பின்னர் முதல் முறையாக நடத்தப்படுகின்றன, மேலும் இரு இராணுவத்தினராலும் இதுவரை நடத்தப்பட்ட கூட்டுப் பயிற்சிகளில் இதுவே மிகப்பெரியது, இந்த ஆண்டு சுமார் 240 விமானங்கள் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பென்டகன் பத்திரிகை செயலாளர் பிரிகேடியர் ஜெனரல் பாட் ரைடர் நவம்பர் 1 அன்று, இப்பயிற்சிகள் “கொரிய குடியரசு மற்றும் பிராந்தியத்தில் உள்ள நமது நட்பு நாடுகளை பாதுகாக்க ஒன்றாக இணைந்து செயல்படும் வகையில் நமது படைகளின் இயங்கக்கூடிய தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட பயிற்சியாகும்” என்று தெரிவித்தார்.

ஜப்பானின் ஒகினாவாவில் நிறுத்தப்பட்டுள்ள F-35B மறைமுக போர் விமானங்கள் உட்பட, EA-18 மின்னணு போர் விமானங்கள், KC-135 டேங்கர்கள் மற்றும் U-2 உளவு விமானங்கள் என 100 க்கும் மேற்பட்ட விமானங்களை அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ளது. தென் கொரிய இராணுவப் பிரிவில் F-35A மறைமுக போர் விமானங்கள், F-15K போர் விமானங்கள் மற்றும் KF-16 போர் விமானங்கள் உட்பட 140 விமானங்கள் உள்ளன. ஒரு ஆஸ்திரேலிய விமானப்படை விமானமும் – KC-30A பல்முனை டேங்கர் போக்குவரத்து விமானம் – கூட இதில் பங்கேற்கிறது, இது பிராந்திய நட்பு நாடுகளுடனான அமெரிக்க போர் திட்டங்களில் கான்பெர்ராவும் தீவிரமாக ஒருங்கிணைவதற்கான அறிகுறியாகும். இந்த பயிற்சிகளை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் சுமார் 1,600 விமானங்கள் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க விமானப்படைகளின் கூற்றுப்படி, இராணுவங்கள் “பயிற்சி காலத்தில் நெருக்கமான விமான ஆதரவு, தற்காப்புக்கான எதிர்ப்பு விமானங்கள், மற்றும் 24 மணிநேர அவசரகால விமான நடவடிக்கைகள் போன்ற முக்கிய விமானப் பணிகளைச் செய்ய கூட்டு சேவைகளுடன் இணைந்து செயல்படும்.” மேலும், “தரையில் உள்ள ஆதரவுப் படைகள் தங்கள் அடிப்படை பாதுகாப்பு செயல்முறைகள் மற்றும் தாக்குதலின் போது உயிர்வாழும் திறன் ஆகியவற்றைப் பயிற்றுவிக்கும்” என்றும் அது கூறியது.

முன்னதாக Vigilant Ace என்றழைக்கப்பட்ட இந்த கூட்டு விமானப்படைப் பயிற்சிகள் 2015 ஆம் ஆண்டு தொடங்கி 2017 ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் நடத்தப்பட்டன, அப்போது அமெரிக்கா மற்றும் தென் கொரியாவில் இருந்து மொத்தம் சுமார் 230 விமானங்கள் அவர்களால் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டன. பொருளாதார ஆதரவிற்கான தெளிவற்ற வாக்குறுதிகள் மற்றும் நாட்டை ‘முற்றிலும் அழித்துவிடுவதற்கான’ அச்சுறுத்தல்களின் கலவையுடன் சீனாவின் சுற்றுப்பாதையில் இருந்து பியோங்யாங்கை வெளியேற்றுவதற்கான அப்போதைய ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக வாஷிங்டன் பயிற்சிகளை நிறுத்தியது.

நிலைமையைத் தணிப்பதற்கு முயற்சிப்பதை விட, வாஷிங்டன் இப்போது, ஆகஸ்டில் நடத்தப்பட்ட Ulchi Freedom Shield இராணுவப் பயிற்சிகள் உட்பட, தென் கொரியாவுடன் பெரிய அளவிலான போர்ப் பயிற்சிகளை மீண்டும் தொடங்குவதன் மூலம் பிராந்தியத்தில் வேண்டுமென்றே பதட்டங்களைத் தூண்டி வருகிறது, வட கொரியாவைத் தூண்டுகிறது, மற்றும் பியோங்யாங்கை பதிலடி கொடுக்க நினைக்கத் தூண்டும் சூழ்நிலையை உருவாக்குகிறது. பிராந்தியத்தை இராணுவமயமாக்குவதையும் சீனாவின் நுழை வாயிலில் இராணுவ ஒத்திகைகளை நடத்துவதையும் மேலும் நியாயப்படுத்த இந்த பதில்களை சாக்காக பற்றிக் கொள்ள வாஷிங்டன் உத்தேசித்துள்ளது.

நவம்பர் 1 அன்று, வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வாஷிங்டனை ‘அமைதி மற்றும் பாதுகாப்பை அழிப்பதில் முக்கிய குற்றவாளி’ என்று கண்டனம் செய்தது. அமைச்சகம் மேலும், ‘கடுமையான இராணுவ ஆத்திரமூட்டல்களில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டால், DPRK [வட கொரியா] மிகுந்த சக்திவாய்ந்த பின்தொடர்தல் நடவடிக்கைகளை எடுக்கும்’ என்று கூறியது.

நவம்பர் 2 அன்று, பியோங்யாங் குறைந்தது 23 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் (SRBM) மற்றும் தரையிலிருந்து விண்ணுக்குப் பாயும் ஏவுகணைகள், அத்துடன் 100 பீரங்கி குண்டுகளை ஜப்பான் கடல் மற்றும் மஞ்சள் கடலில் ஏவியது. ஒரு SRBM, சர்வதேச கடற்பகுதியில் தரையிறங்குவதற்கு முன்னதாக இரு கொரியாக்களையும் பிரிக்கும் ஜப்பானின் நடைமுறை கடல் எல்லையைக் கடந்தது என்று தென் கொரிய இராணுவம் கூறியது. 1950-1953 கொரியப் போருக்குப் பின்னர் வட கொரிய ஏவுகணை இந்த எல்லைக்கு தெற்கே சென்றது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. சியோல் எல்லைக்கு வடக்கே உள்ள சர்வதேச கடற்பகுதியில் போர் விமானங்களில் இருந்து மூன்று வான்வெளி ஏவுகணைகளை ஏவியது.

இறுதியில், இந்த கடுமையான பதட்டங்களுக்கான பொறுப்பு வாஷிங்டனிடம் உள்ளது, இது இவ்விரு நாடுகளின் 2018 உச்சிமாநாட்டில் ட்ரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் இடையே எட்டப்பட்ட நடைமுறை ஒப்பந்தத்தை இரத்து செய்துள்ளது, அதன் கீழ் வட கொரியா அதன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (intercontinental ballistic Missile-ICBM) மற்றும் அணு ஆயுத சோதனைகளை நிறுத்தியது, அதற்கு ஈடாக அமெரிக்கா தென் கொரியாவுடனான கூட்டு போர் பயிற்சிகளை நிறுத்தியது.

பியோங்யாங் அதன் பேரம் பேசுதல் முடிவில் நிலைநின்றது, மேலும் பதிலீடாக பொருளாதார உதவி பெற முடியும் என்றும், முடக்கும் அமெரிக்க தலைமையிலான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படும் என்றும் நம்பியது. ஆனால் அது நடக்கவில்லை. வாஷிங்டன் வட கொரிய நிலைமையை சீர்குலைக்க அனுமதித்தது, பியோங்யாங் புதிய சோதனைகளை நடத்தாத வரை, உக்ரேனில் ரஷ்யாவுடன் மற்றும் தைவான் குறித்து சீனாவுடன் போரைத் தூண்டுவதில் அமெரிக்கா தனது சக்தியைக் குவிக்க அனுமதித்தது. ஜனவரி 2021 இல் ஜோ பைடென் பதவிக்கு வந்த பின்னரும் இந்த நிலைமை ஆரம்பத்தில் தொடர்ந்தது.

இருப்பினும், ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளில் வாஷிங்டனிடம் இருந்து எந்த நிவாரணமும் கிடைக்கப் பெறாத நிலையில், பியோங்யாங் இதுபோன்ற ஏவுகணை சோதனைகளை நிறுத்தியதிலிருந்து அதன் முதல் ICBM சோதனையை மார்ச் மாதம் நடத்தியது. பைடெனுக்கும் அப்போது புதிதாக பதவிக்கு வந்த தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோலுக்கும் இடையே சியோலில் நடந்த ஒரு ஆத்திரமூட்டும் உச்சிமாநாட்டிற்குப் பின்னர், மே மாதம் இரண்டாவது முறையாக இது தொடர்ந்தது.

அவர்களின் உச்சிமாநாட்டில், பைடெனும் யூனும் அமெரிக்க மூலோபாய சொத்துக்களை பிராந்தியத்திற்கு பயன்படுத்த ஒப்புக்கொண்டனர், அதே நேரத்தில் ஜனவரி 2018 க்குப் பின்னர் முதல் முறையாக விரிவாக்கப்பட்ட தடுப்பு மூலோபாயம் மற்றும் ஆலோசனைக் குழுவை (Extended Deterrence Strategy and Consultation Group) மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டனர். இந்த குழு, அணு ஆயுதங்களின் பயன்பாடு உட்பட விரிவாக்கப்பட்ட தடுப்பு என்று அழைக்கப்படுவது தொடர்பான மூலோபாய மற்றும் கொள்கை சிக்கல்களைப் பற்றி விவாதிக்க வாஷிங்டன் மற்றும் சியோலுக்கு வாய்ப்பளிக்கிறது. வாஷிங்டனின் போர் திட்டமிடலின் மற்றொரு முக்கிய கோரிக்கையாக, ஜப்பானுடனான நெருக்கமான உறவுகளையும் யூன் தொடர்கிறார்.

பைடென் நிர்வாகம் செப்டம்பர் முதல் பியோங்யாங்கின் ஏவுகணை ஏவுதல்களை வேண்டுமென்றே துரிதப்படுத்தியுள்ளது, இதில் பல SRMB கள் அடங்கும், ஆனால் ICBM ஐ ஏவவில்லை. வடபகுதி அவ்வாறு செய்யவிருப்பதாக வாஷிங்டன் பல மாதங்களாக கூறி வந்த போதிலும், பியோங்யாங்கும் கூட ஏழாவது அணுகுண்டு சோதனையை நடத்துவதைத் தவிர்த்தது. இது பியோங்யாங்கைத் தூண்டும் அதே நேரத்தில் அதன் சொந்த இராணுவ விரிவாக்கத்தை மறைக்க வடிவமைக்கப்பட்ட அமெரிக்க போர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

இது, கடந்த மூன்று தசாப்தங்களாக மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்கா தனது குற்றவியல் போர்களில் பயன்படுத்தியுள்ள அதே செயல்முறையாகும்: அதாவது, உத்தேசித்த இலக்கின் மீது பழிசுமத்துதல், அனைத்து விகிதாசாரத்திலிருந்தும் அச்சுறுத்தலை பெரிதாக்குதல், அழுத்தத்தை அதிகரித்தல், பாதிக்கப்பட்ட நாட்டிற்கு எதிராக பொருளாதார முற்றுகைகளை சுமத்துதல் மற்றும் அச்சுறுத்துதல், மேலும் அதற்கான எந்தவொரு பதிலையும் போர் உந்துதலை மேலும் அதிகரிப்பதற்கான சாக்குபோக்காக பற்றிக் கொள்ளுதல் ஆகியவை அடங்கும். குறிப்பிடத்தக்க வகையில், பைடென் நிர்வாகம், வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது போன்ற பாசாங்கையும் கைவிட்டுள்ளது.

பியோங்யாங்கின் பதிலின் அளவோடு ஒப்பிடுகையில், தற்போதைய Vigilant Storm இராணுவப் பயிற்சிகளின் சுத்த அளவானது, இந்த போர் பயிற்சிகள் தற்காப்பு தன்மை கொண்டவை என்ற அமெரிக்க கூற்றுக்களை பொய்யாக்குகிறது. வட கொரியா 26 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு வறிய நாடாகும், இது உலகப் பொருளாதாரத்தில் இருந்து பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம், அமெரிக்கா மட்டும் ஒரு பாரிய இராணுவத்தை களமிறக்குகிறது, மேலும் இறுதியில் கொரிய தீபகற்பத்தின் நிலைமையைப் பயன்படுத்தி பெய்ஜிங்குடன் போரைத் தூண்டுகிறது, இதை வாஷிங்டன் அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு மிகப்பெரிய தகுதியுள்ள சவாலாக பார்க்கிறது.

Loading