அமெரிக்காவும், தென் கொரியாவும் பெரிய அளவிலான கூட்டுப் போர் பயிற்சியை மீண்டும் தொடங்குகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவும், தென் கொரியாவும் கடந்த நான்கு ஆண்டுகளில் முதன்முறையாக மிகப்பெரிய அளவிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளை மீண்டும் தொடங்கியுள்ளன, இந்த நகர்வு நிச்சயமாக வட கொரியா மற்றும் பிராந்தியம் முழுவதிலும் பதட்டங்களை அதிகரிக்கும்.

மீளத் தொடங்கப்பட்ட இந்த பெரிய அளவிலான போர்ப் பயிற்சிகள், அணு ஆயுதங்களையும் தொலைதூரம் சென்று தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் வட கொரியா சோதனை செய்வதை நிறுத்துவதற்கு ஈடாக, இத்தகைய பயிற்சிகளை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங்-உன் க்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட 2018 ஆம் மறைமுக ஒப்பந்தத்தை தகர்க்கிறது.

ஜூலை 12, 2022 அன்று தென் கொரியாவின் வோன்ஜு விமானத் தளத்தின் மீது பயிற்சியின் போது இரண்டு விமானப்படை A-10 தண்டர்போல்ட் II கள் கொரிய விமானத்துடன் இணைந்து பறக்கின்றன (Photo: US Department of Defense) [Photo: US Department of Defense]

வட சீனா மற்றும் ரஷ்யாவின் தூர கிழக்கை ஒட்டி தென் கொரியாவில் நடைபெறும் இந்த இராணுவப் பயிற்சிகள், பைடென் நிர்வாகம் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக ஒரு பினாமி போரை நடத்தும் போதும், மற்றும் தைவான் குறித்து பெய்ஜிங்கை மோதலுக்குள் அது இழுக்கும் நேரத்திலும் நிகழ்கின்றன.

கடந்த வார ஆரம்பகட்ட பயிற்சிகளுக்குப் பின்னர் திங்களன்று Ulchi Freedom Shield (UFS) இராணுவப் பயிற்சிகள் தொடங்கப்பட்டது, இது செப்டம்பர் 1 ஆம் தேதி வரை தொடரும். அவற்றின் நோக்கம் மற்றும் அளவு விவரங்கள் குறைவாக இருந்தாலும், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவில் இருந்து ஆயிரக்கணக்கான, அநேகமாக பல்லாயிரக்கணக்கான இராணுவப் படையினர் இந்த பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Yonhap செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்தப் பயிற்சிகள் ஒரு ‘முற்றுமுழுதான போர் கருத்தை’ அடிப்படையாகக் கொண்டவை, மற்றும் கணினி உருவகப்படுத்தல் பயிற்சிகள், 13 பெரிய அளவிலான களப் பயிற்சி பயிற்சிகள் மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

இந்த பயிற்சிகள், இராணுவ விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் டாங்கிகள் உட்பட பரந்த அளவிலான ஆயுதங்களை உள்ளடக்கியது, மற்றும் கூட்டு விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் பயிற்சிகள் மற்றும் நீர் மற்றும் தரை வழி தாக்குதல் விமானங்களின் தரையிறக்க பயிற்சிகள் (amphibious landings) ஆகியவற்றை இது ஒத்திகை பார்க்கும்.

இதனுடன் தொடர்புடைய நான்கு நாள் குடிமக்கள் பாதுகாப்பு பயிற்சியும் திங்களன்று தொடங்கப்பட்டது, இதில் சுமார் 4,000 பொது நிறுவனங்களைச் சேர்ந்த 480,000 மக்கள் ஈடுபட்டனர்.

பெயரளவில், இந்த போர் பயிற்சிகள் தற்காப்பு பயிற்சிகளாக கூறப்படுகின்றன, ஆனால் உண்மையில் வட கொரிய தாக்குதலை முறியடித்து, தலைநகர் சியோலை பாதுகாக்கவும், பின்னர் எதிர் தாக்குதல் நடத்தவும் தான் இது நடத்தப்படுகின்றன. இருப்பினும், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவால் ஒப்புக்கொள்ளப்பட்ட, OPLAN 5015 இன் கீழான கூட்டுத் திட்டம், வட கொரியாவிற்கு எதிரான முன்கூட்டிய தாக்குதல்கள் மற்றும் அதன் உயர்மட்ட தலைவர்களை கொல்வதற்கான சிறப்புப் படைகளின் ‘திடீர் தலை துண்டிப்பு பயிற்சிகள்’ (‘decapitation raids’) ஆகியவற்றை உள்ளடக்கியது.

அமெரிக்காவுடனான தென் கொரிய இராணுவக் கூட்டணியின் கீழ், அந்நாட்டின் இராணுவத் தளங்களில் நிரந்தரமான உச்சபட்ச எச்சரிக்கையை பேணும் வகையில், போர் விமானங்கள் மற்றும் இராணுவத்தின் பிற கடினமான சாதனங்களுடன் 28,500 துருப்புக்களை அமெரிக்கா அங்கு நிலைநிறுத்தியுள்ளது. மேலும், போர் நிகழ்ந்தால், மிகப்பெரிய அளவிலான, கடுமையான ஆயுதங்களைக் கொண்ட தென் கொரிய இராணுவம் மற்றும் அதன் 550,000 பணியாளர்கள் மீது அமெரிக்க இராணுவம் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை (OPCON) கொண்டிருக்கும். தென் கொரியாவிற்கு கட்டளை இடமாற்றம் செய்வது குறித்து பல ஆண்டுகளாக மறைமுக பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன, ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை.

அமெரிக்காவும் தென் கொரியாவும் இத்தகைய இராணுவப் பயிற்சிகளை மீண்டும் தொடங்குவது அவசியம் என்று கூறுகின்றன, ஏனென்றால் வட கொரியா இந்த ஆண்டு 30 க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தி முடித்துள்ளது, மேலும் ஏழாவது அணுகுண்டு சோதனைக்கு அது தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. உண்மையில், மே மாதம் பதவிக்கு வந்த, தென் கொரியாவின் வலதுசாரி ஜனாதிபதியான யூன் சுக்-யோல், முன்கூட்டி தாக்குதல் நடத்தும் திறன், மற்றும் அமெரிக்காவுடனான பெரியளவிலான வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சிகளை மறுதொடக்கம் செய்வது உட்பட, வட கொரியாவை நோக்கிய கடுமையான இராணுவ நிலைப்பாட்டிற்கு பிரச்சாரம் செய்தார்.

கடந்த வாரம், ஆரம்பகட்ட கூட்டுப் பயிற்சிகளை தொடங்கவிருந்த நிலையில், ஜனாதிபதி யூன் கொரிய தீபகற்பத்தில் அமைதிக்கான ஒரு ‘தைரியமான முன்முயற்சி’ க்கு அறிவித்தார், அதாவது வட கொரியாவின் அணுசக்தி திட்டம் மற்றும் ஆயுதக் களஞ்சியத்தை அகற்றுவதற்கு ஈடாக, பியோங்யாங்கிற்கு ஒரு பெரிய உணவுத் திட்டத்தையும், உள்கட்டமைப்பை மேம்படுத்த பொருளாதார உதவியையும் வழங்குகிறார். இது நிராகரிக்கப்படும் என்று யூன் முன்கூட்டியே அறிந்த இந்த சலுகைகள் ஒரு ஏமாற்று வேலையாகும், ஏனெனில் வடகொரியாவின் பொருளாதாரத்தை முடக்கிய அமெரிக்க தலைமையிலான பொருளாதார மற்றும் இராஜதந்திர தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற வட கொரியாவிற்கு இன்றியமையாத சலுகை எதுவும் இதில் இல்லை.

தென் கொரியாவில் பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளை வாஷிங்டன் மீண்டும் தொடங்குவது திட்டமிடப்பட்ட ஆத்திரமூட்டலாகும். ட்ரம்ப் மற்றும் கிம் ஜோங்-உன் இடையே 2018 இல் எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மீறியது அமெரிக்காதானே தவிர, வட கொரியா அல்ல. எந்தவொரு பொருளாதார தடைகளையும் நீக்குவதற்கு முன்னர் வடகொரியா அணுவாயுதமற்றதாக வேண்டும் என்று வலியுறுத்தி ட்ரம்ப் மேலும் பேச்சுக்களை திறம்பட முறியடித்த போதிலும், பியோங்யாங் அணு ஆயுத சோதைனையை நடத்தவில்லை என்பதுடன் அதன் ஏவுகணை சோதனையை குறுகிய மற்றும் நடுத்தர தூர ராக்கெட்டுகளுக்கு மட்டுப்படுத்தியுள்ளது.

Ulchi Freedom Shield பயிற்சிகளை மறுதொடக்கம் செய்தால், வட கொரியா ஒருவேளை அணுசக்தி சோதனை நடத்தி அதற்கு பதிலளிக்கக்கூடும் என்றும், அது அமெரிக்க இராணுவ விரிவாக்கத்திற்கு சாக்குப்போக்கை வழங்கும் என்றும் பைடென் நிர்வாகம் கணக்கிட்டுள்ளது.

வட கொரியாவின் மேலதிக அணு ஆயுத சோதனைக்கு தென் கொரியாவில் ‘மூலோபாய இராணுவ தளவாடங்களை’ நிலைநிறுத்துவதன் மூலம் பதிலளிக்கப்போவதாக அமெரிக்கா கடந்த வாரம் அறிவித்துள்ளது. இந்த அமெரிக்க எச்சரிக்கையானது, கொரிய-அமெரிக்க ஒருங்கிணைந்த பாதுகாப்பு உரையாடலின் (Korea-US Integrated Defense Dialogue-KIDD) இரண்டு நாள் கூட்டத்தைத் தொடர்ந்தும், மற்றும் வாஷிங்டனும் சியோலும் ஒப்புக்கொண்ட கூட்டு மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவும் விடுக்கப்பட்டது.

குறிப்பிடப்படவில்லை என்றாலும், ‘மூலோபாய இராணுவ தளவாடங்கள்’ என்பவை, மூலோபாய குண்டுவீசிகள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது அணுசக்தி ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை சுமந்து செல்ல தகுதி வாய்ந்த விமானந்தாங்கிக் கப்பல்கள், அத்துடன் தந்திரோபாய அணு ஆயுதங்களை உள்ளடக்கியிருக்கலாம்.

இந்த அறிவிப்பு, ஆகஸ்ட் 11 அன்று தென் கொரிய பாதுகாப்பு மந்திரி லீ ஜொங்-சுப், வட கொரிய அணு ஆயுத சோதனைக்கு ‘மிகுந்த தீவிரத்துடன்’ பதிலளிக்கப் போவதாக எச்சரிக்கும் இதேபோன்ற அறிவிப்பை தொடர்ந்து வெளிவருகிறது. அதாவது, “தென் கொரிய இராணுவ திறன்களை மட்டுமல்லாது, அமெரிக்க மூலோபாய இராணுவ தளவாடங்களையும் திரட்ட நாங்கள் திட்டமிட்டுள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.

தென் கொரியாவில் அமெரிக்க மூலோபாய ஆயுதங்களை நிலைநிறுத்துவது வட கொரியாவிற்கு எதிரானது மட்டுமல்ல, மாறாக சீனாவுக்கும் ரஷ்யாவிற்கும் எதிரானது. பைடென் நிர்வாகம் ரஷ்யாவிற்கு எதிரான தனது பினாமி போரை தீவிரப்படுத்தும் அதேவேளை, தைவான் மீது குறிவைத்து, சீனாவுக்கு எதிராக அடுத்தடுத்து ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது, இது அணு ஆயுத சக்திகளை உள்ளடக்கிய உலகளாவிய மோதலின் ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது.

தென் கொரியா ஏற்கனவே அமெரிக்காவின் அணு ஆயுத போர் தயாரிப்புக்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது நிரந்தர அமெரிக்க இராணுவ தளங்களை வழங்குகிறது மற்றும் ஜப்பானுடன் சேர்ந்து, வடகிழக்கு ஆசியாவில் அமெரிக்க கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எதிர்ப்பு வலையமைப்பின் ஒரு பகுதியாகவும் உள்ளது. 2017 ஆம் ஆண்டில், பெருந்தொலைவு சென்று தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் கண்டறிந்து சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டதான தனது Terminal High Altitude Area Defense (THAAD) அமைப்பை அமெரிக்கா தென் கொரியாவில் நிலைநிறுத்தியுள்ளது.

இத்தகைய ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் தற்காப்புக்கு ஏற்றவை என்று கூறினாலும், அவை முழுமையாக அணுகுண்டு தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. மாறாக, ரஷ்யா மற்றும்/அல்லது சீனாவின் பதிலடி கொடுக்கும் திறனை முற்றிலும் அகற்றும் வகையில் அவற்றின் மீது பேரழிவுகரமான அணுசக்தி தாக்குதலை நடத்த பென்டகன் முனைகிறது. அதாவது, THAAD அமைப்புகள் எஞ்சியிருக்கும் எதிரிகளின் அணுசக்தி ஏவுகணைகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு ஆயுத தாக்குதலை அமெரிக்கா ஒருபோதும் கைவிடவில்லை.

குறிப்பிடத்தக்க வகையில், இந்த மாத தொடக்கத்தில், ஹவாயில், தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக ஏவுகணை பாதுகாப்பு பயிற்சி என்றழைக்கப்படும் பயிற்சிகளை அமெரிக்கா நடத்தியுள்ளது. உயர்மட்ட உளவுத்துறை பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது உட்பட, அதன் இரண்டு இராணுவ நட்பு நாடுகளின் மீது அமெரிக்கா கணிசமான அழுத்தத்தை பிரயோகித்துள்ளது. கூட்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளின் செயல்பாட்டிற்கு விரைவான உளவுத்துறை பகிர்வு இன்றியமையாதது என பென்டகன் கருதுகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற KIDD பேச்சுவார்த்தைகள், தென் கொரியாவிற்கு அமெரிக்க மூலோபாய இராணுவ தளவாடங்களை அனுப்புவது பற்றி மட்டும் எச்சரிக்கவில்லை, மாறாக டோக்கியோவிற்கும் சியோலுக்கும் இடையிலான இராணுவத் தகவல் ஒப்பந்தத்தின் பொதுப் பாதுகாப்பு (General Security of Military Information Agreement-GSOMIA) மற்றும் முத்தரப்பு இராணுவ ஒத்துழைப்பை மீளுறுதி செய்தது. இந்த கூட்டம் 2018 இல் இடைநிறுத்தப்பட்ட அமெரிக்க-தென் கொரிய இராணுவ ஒருங்கிணைப்பு அமைப்பை மீண்டும் செயல்படுத்தியது, அதாவது வட கொரியாவிற்கு எதிராக ‘நீட்டிக்கப்பட்ட தடுப்பு’ நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு, விண்வெளி, குவாண்டம் கம்ப்யூட்டிங், இணைய பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர தானியக்கம் உள்ளிட்ட களங்களில் உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அதிக ஒத்துழைப்பை வழங்குவது பற்றி இதில் விவாதிக்கப்பட்டது.

தென் கொரியாவின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு திட்ட (South Korea’s Defense Acquisition Program) நிர்வாகம் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், புதிய கண்காணிப்பு செயற்கைக்கோள்கள், தரையிலிருந்து தரைக்கு வழிகாட்டும் தந்திரோபாய ஆயுதங்கள், முன்கூட்டியே எச்சரிக்கும் ரேடாருடன் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் தரையிலிருந்து விண்ணுக்கு பெருந்தொலைவு பாயும் ஏவுகணை அமைப்புகள் உட்பட, கிட்டத்தட்ட 200 திட்டங்களில் அது வேலை செய்து வருவதாக அறிவித்தது.

வட கொரியா ஒரு சௌகரியமான சாக்குப்போக்கை அளிக்கும் அதேவேளை, தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் அமெரிக்கா இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும், இராணுவ பிரச்சன்னத்தை அதிகரிப்பதும், ரஷ்யா மற்றும் சீனா இரு நாடுகளுக்கும் எதிரான ஒரு பரந்த போருக்கான தயாரிப்பு ஆகும்.

Loading