இலங்கையில் முதலாளித்துவக் கட்சி-தொழிற்சங்க கூட்டணிகள் வேண்டாம்! அரசாங்க-ச.நா.நி. சிக்கன நடவடிக்கைகளை தோற்கடி! ஜனநாயகம் மற்றும் சோசலிசத்துக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டை கட்டியெழுப்பு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), சர்வதேச நாணய நிதியத்தால் (ச.நா.நி.) கட்டளையிடப்பட்டுள்ள தொழிலாளர்களின் சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் கொடூரமான தாக்குதல்களுக்கு எதிராகப் போராடி வரும் தொழிலாளர்களுடன் நிற்கிறது.

சர்வதேச நிதி மூலதனத்திற்குக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கும், பெருவணிகத்தின் பிரமாண்ட இலாபங்களைப் பராமரிப்பதற்கும் பணத்தைப் பெறுவதற்காக, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை நெருக்குவதேப ச.நா.நி. சிக்கனத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

அரசாங்கம், எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி 'இடது' ஆதரவாளர்களுக்கு எதிராக, தொழிலாளர்கள் பிரச்சினைகளை தங்கள் சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ளுமாறும், வேலைத் தளங்கள், தொழிற்சாலைகள், பெருந்தோட்டங்கள் மற்றும் அயல்புறங்களில் தங்களுடைய அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்கு, சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை உருவாக்குமாறும் சோ.ச.க. வலியுறுத்துகிறது. கிராமப்புற உழைக்கும் மக்களையும் அவ்வாறே செய்யுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

9 ஜூலை 2022 சனிக்கிழமை, இலங்கையின் கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் செல்லும் தெருவில் கூடியுள்ள எதிர்ப்பாளர்கள். (AP Photo/Amitha Thennakoon) [AP Photo/Amitha Thennakoon]

ஜூலை 20 அன்று, சோ.ச.க., தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு அவர்களின் வர்க்க நலன்களுக்காக ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான அரசியல் அடிப்படையாக, நடவடிக்கை குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டை கட்டியெழுப்ப அழைப்பு விடுத்தது.

சோ.ச.க., அரசாங்கத்தின் தாக்குதல்களை எதிர்ப்பதாக பொய்யாகக் கூறிக்கொண்டிருக்கும், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.), எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகியவற்றின் கூட்டணியை நிராகரிக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. அரசாங்கத்தைப் போலவே, இந்தக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது அமைப்புகள் அனைத்தும் ச.நா.நி. இன் கொள்கைகளை அமுல்படுத்த உறுதிபூண்டுள்ளதுடன் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அமைதியின்மையைத் தடம் புரட்டவும் ஒடுக்கவும் தீவிரமாக முயன்று வருகின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “ச.நா.நி. தவிர நாடுவதற்கு வேறு வழி எதுவும் இல்லை” என்ற மந்திரத்தை மீண்டும் கூறுகிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் 'கடினமான காலங்கள் தவிர்க்க முடியாதவை' என்று அறிவித்தார். தாங்க முடியாத பணவீக்கம், வேலையின்மை மற்றும் அடிப்படை உணவுகள் மற்றும் மருந்துகள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் இல்லாததால், பலர் ஏற்கனவே பெருமளவில் உணவைத் தவிர்த்துக்கொண்டிருப்பதால் அல்லது குறைத்துக்கொண்டிருப்பதால், அவர் பேசும் பயங்கரமான காலங்கள் எத்தகையது என்பதை தொழிலாளர்களும் ஏழைகளும் கற்பனை செய்து பார்க்க முடியும்.

தேசிய அளவில், செப்டம்பரில் பணவீக்கம் 75 சதவீதத்தை எட்டியதோடு உணவு விலையதிகரிப்பு 102 சதவீதமாக இருந்ததுடன் ஊதியத்தின் உண்மையான மதிப்பையும் கிராமப்புற ஏழைகளின் அற்ப வருமானத்தையும் கடுமையாகக் கீழே தள்ளியது. அக்டோபர் மாதத்திற்குள் வறுமை கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் இருமடங்காக அதிகரித்து, 25.6 சதவீதமாக இருந்தது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகம் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கையை 45 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதாரச் சுருக்கம் 9.2 சதவீதமாக இருக்கும் என்றும் அரை மில்லியன் தொழில்களை அழித்துக்கொண்டு அடுத்த ஆண்டும் தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது உழைக்கும் மக்கள் மீது முதலாளித்துவ வர்க்கம் சுமத்தியிருக்கும் சுமை ஆகும்.

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினால் உக்கிரமடைந்த உலகப் பொருளாதார நெருக்கடியின் ஒரு பகுதியே இலங்கையின் பொருளாதாரக் கொந்தளிப்பு ஆகும். பணவீக்கத்தை எதிர்த்துப் போராடும் சாக்குப்போக்கில், மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தி, இலங்கை போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் கடன் நெருக்கடியை அதிகப்படுத்துகின்றன.

தொழிலாளர்கள் மத்தியில் அமைதியின்மை அதிகரித்துள்ள நிலையில், எதிர்க் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடதுகளும் தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான போராட்டத்தையும் தடம் புரளச் செய்யவும் நசுக்கவும் தங்கள் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த வியாழன் அன்று, தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் (TUCC) மற்றும் ஜே.வி.பி. கட்டுப்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த வெகுஜன இயக்கமும், அரசாங்கம் தொழிலாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க வேண்டும், பணவீக்கத்தை குறைக்க வேண்டும் மற்றும் அரசின் அடக்குமுறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரி ஒரு பொது ஆர்ப்பாட்டத்தை நடத்தின. ஜே.வி.பி மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களும், 'அரசாங்கத்தைத் துரத்துவது' மற்றும் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு 'பொதுத் தேர்தலை' நடத்துவது மட்டுமே ஒரே தீர்வு என்று அறிவித்தனர்.

நவம்பர் 2 அன்று, இதே கோரிக்கைகளை முன்வைத்து ஐ.ம.ச. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) ஆதரவுடன் சில தொழிற்சங்கங்களால் கொழும்பில் மற்றொரு பேரணி நடத்தப்பட்டது. முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் அதன் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் (அ.ப.மா.ஒ.), 'விக்கிரமசிங்கவையும் அரசாங்கத்தையும் வெளியேற்றுவதற்கான முதல் படி' என்று கூறிக்கொண்டு, இந்த பேரணியை ஒழுங்கமைப்பதில் ஒரு பிரதான பங்கை ஆற்றின.

1964ல் லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.) தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தைக் காட்டிக் கொடுத்து, முதலாளித்துவ ஸ்ரீ.ல.சு.க. உடன் ஒரு கூட்டணி அரசாங்கத்திற்குள் நுழைந்ததில் இருந்தே, தொழிலாளர்களும் கிராமப்புற உழைப்பாளிகளும் இத்தகைய வர்க்க ஒத்துழைப்பு கூட்டணிகளுடன் கசப்பான அனுபவங்களைக் கொண்டுள்ளனர். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கொழும்பு அரசாங்கங்கள் முன்னெடுத்த ஏறத்தாழ மூன்று தசாப்த கால இனவாதப் போரையும், இரண்டு முறை, அதாவது 1971 மற்றும் 1988-90 இல் சிங்கள கிராமப்புற இளைஞர்களுக்கு எதிரான இரத்தக்களரி அடக்குமுறையையும் அவர்கள் கடந்து வந்துள்ளனர்.

தொழிற்சங்கங்கள் மற்றும் 'இடதுகளின்' உதவியுடன் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பொதுத் தேர்தலுக்காக ஜே.வி.பி. மற்றும் ஐ.ம.ச. பிரச்சாரம் செய்கின்றன. எதற்காக? அத்தகைய அரசாங்கத்தாலேயே வாழ்க்கை நிலைமைகள் மீதான ச.நா.நி. இன் கொடூரமான தாக்குதல்களை கட்டவிழ்த்து விட முடியும், ஏனெனில் விக்கிரமசிங்கவிற்கு அவ்வாறு செய்வதற்கான சட்டபூர்வமான தன்மை இல்லை என்று அவர்கள் கூறிக்கொள்கின்றனர்.

அரசாங்கத்தின் மீதான அவற்றின் விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும், எதிர்க்கட்சிகள், அவசரகால பொருளாதார நிவாரணத்திற்காக ச.நா.நி. கோரும் கொடூரமான நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதில் மாற்றீடுகள் எதுவும் இல்லை என்று விக்கிரமசிங்கவுடன் உடன்படுகின்றன. கடந்த வாரம் இந்த கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் பாரதூரமான எதேச்சதிகார அதிகாரங்களை அப்படியே வைத்துக்கொண்டு, அரசியலமைப்பில் ஒப்பனை மாற்றங்களைச் செய்வதற்கு அதில் திருத்தம் செய்தன.

தொழிலாளர்கள் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான வெகுஜன எழுச்சியின் அரசியல் படிப்பினைகளை பெற வேண்டும். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள், வறியவர்கள் மற்றும் ஏனைய பிரிவினர் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் இராஜினாமா செய்யக் கோருவதற்கும் நாட்டின் பேரழிவுகரமான சமூக நிலைமைகளுக்கு முடிவுகட்டுவதற்கும் உறுதியான பிரச்சாரத்தில் இணைந்தனர். இந்த மாபெரும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் கவிழிந்ததுடன் அவரது சகோதரர் கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறி பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், இன்று விக்கிரமசிங்க ஆட்சிக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் அதே தொழிற்சங்கங்களும் போலி-இடது குழுக்களும், வேண்டுமென்றே போராட்ட நடவடிக்கையை ஏப்ரல் 28 மற்றும் மே 6 இல் ஒரு நாள் வேலைநிறுத்தங்களுக்கு மட்டுப்படுத்தி, ஜே.வி.பி. மற்றும் ஐ.ம.ச. முன்வைத்த இடைக்கால முதலாளித்துவ அரசாங்கத்தை அமைக்கும் கோரிக்கைகயை ஆதரிப்பதற்கு கீழ்ப்படுத்தியதன் மூலம், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தையும் தடுத்தன. இந்த காட்டிக்கொடுப்பு, ச.நா.நி. கோரிக்கைகளை அமுல்படுத்துவதில் சாதனைபடைத்த, அமெரிக்க கைக்கூலியான விக்கிரமசிங்கவை புதிய தலைவராகக் கொண்ட வலதுசாரி அரசாங்கம் தொடர்வதற்கு வழி வகுத்தது.

ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து, விக்கிரமசிங்க எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்க தனது எதேச்சதிகார அதிகாரங்களை அதிகளவில் பயன்படுத்தி வந்துள்ளார். அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது இராணுவ-பொலிஸ் அடக்குமுறைக்கு உத்தரவிட்ட அவர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாட்டாளர்கள் மீதான தடுப்புக் காவலில் கையெழுத்திட்டதுடன் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு எதிராக அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தைப் பயன்படுத்தினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மிகமோசமாக மதிப்பிழந்துபோன இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) விக்கிரமசிங்கவின் நேரடி ஆதரவுடன், மீண்டும் தலை தூக்குவதற்கும், 2025 வரை எந்தத் தேர்தலையும் ஒத்திவைப்பதற்கும் முயல்கிறது.

ஆயினும், முன்னிலை சோசலிசக் கட்சியின் ஒரு தலைவரான துமிந்த நாகமுவ, நவம்பர் 2 ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக பேசும் போது, 'இராஜபக்ஷக்களின் முயற்சிகளைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால், அவர்கள் மீண்டும் எழுச்சி பெறுவார்கள்,' என்று அறிவித்தார். உண்மையில், முன்னிலை சோசலிசக் கட்சியும் அதன் முதலாளித்துவ கூட்டாளிகளும் தொழிற்சங்கங்களும், வெகுஜன இயக்கத்தை தடம் புரளச் செய்தமைக்கும் இராஜபக்ஷக்கள் மீண்டும் எழுவதற்கு இடமளித்தமைக்கும் நேரடிப் பொறுப்பாளிகள் ஆவர்.

இராஜபக்ஷக்களுடன் ஒப்பிடுகையில் ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி. ஒரு 'குறைவான தீமை' என்று முன்னிலை சோசலிசக் கட்சியும் ஏனைய போலி-இடது குழுக்களும் கூறிக்கொள்வது ஒரு பொய்யாகும். எதிர்க்கட்சிகள் அமைக்கும் எந்த அரசாங்கமும், உழைக்கும் மக்கள் மீது புதிய சுமைகளை சுமத்துவதன் மூலமும், தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு எதிர்ப்பையும் ஒடுக்குவதன் மூலமும் முதலாளித்துவத்தைப் பாதுகாக்க உதவும்.

இந்த ஆண்டு வெகுஜன எழுச்சியானது, தொழிலாள வர்க்கத்திற்கு புரட்சிகர தலைமையும் அரசியல் முன்னோக்கும் இல்லாவிட்டால் ஏற்படும் ஆபத்தை கூர்மையாக வெளிப்படுத்தியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் இந்த தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தொடர்ந்து போராடி வருகின்றன. முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் எதிர்கொள்ளும் பிரமாண்டமான சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு கிடையாது என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களின் சுயாதீன நடவடிக்கைக் குழுக்கள், அவர்களின் அவசர சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பின்வரும் கோரிக்கைகளுக்காகப் போராட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிகிறது:

  • அனைத்து வெளிநாட்டுக் கடன் செலுத்தலையும் நிராகரி! சர்வதேச வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ச.நா.நி. மற்றும் உலக வங்கியின் சிக்கனக் கோரிக்கைகளை ஏற்காதே!
  • பில்லியனர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் பிரமாண்ட செல்வத்தை கைப்பற்று!
  • உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு முக்கியமான அனைத்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனைய வளங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தின் மீதான தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டை நிறுவு! வங்கிகள், பெருநிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய பிரதான பொருளாதார மையங்களை தேசியமயமாக்கு!
  • ஏழை மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் அனைத்து கடன்களையும் இரத்து செய்! விவசாயிகளுக்கு உர மானியம் உட்பட அனைத்து மானியங்களையும் மீண்டும் வழங்கு!
  • கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வேலை நிலைமைகளுடன் அனைவருக்கும் தொழில் உத்தரவாதம் வேண்டும்! வாழ்க்கைச் செலவுப் புள்ளிக்கு ஏற்ப ஊதியம் வேண்டும்!

அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் கொள்ளையடிக்கும் சர்வதேச நிதி வழிகாட்டிகளாலும் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் நரக வாழ்க்கைக்குள் இழுத்துத் தள்ளப்படுவதால், இந்த திட்டத்தை செயல்படுத்துவது அவசரத் தேவையாகும்.

ஜனநாயகம் மற்றும் சோசலிசத்துக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டிற்கான நமது அழைப்பானது சோசலிச வழியில் சமூகத்தை மறுசீரமைப்பதற்காக அர்ப்பணித்துக்கொண்ட ஒரு தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தின் மூலம், தனது சொந்த ஆட்சியை ஸ்தாபிப்பதன் பேரில், தொழிலாள வர்க்கம் அதனது சக்திகளை ஒருங்கிணைத்து, கிராமப்புற மக்களின் ஆதரவுடன் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு அரசியல் மூலோபாயத்தை உருவாக்குகிறது..

இந்த புரட்சிகர வேலைத்திட்டத்திற்காக போராடுவதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கமானது விக்கிரமசிங்க ஆட்சியினதும் அதே போல் எதிர்க் கட்சிகளதும் பிற்போக்கு சூழ்ச்சிகளை தோற்கடிக்க முடியும்.

சோ.ச.க.யின் மூலோபாயமானது தெற்காசியாவிலும் சர்வதேச அளவிலும் சோசலிசத்திற்கான பரந்த போராட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ச.நா.நி. சிக்கன திட்ட நிரலுக்கு எதிரான, இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த இயக்கமானது, பிராந்தியம் முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களின் சொந்த வர்க்க பலத்தின் மீதான நம்பிக்கையை அளவிடமுடியாத அளவிற்கு வலுப்படுத்துவதோடு கிராமப்புற உழைப்பாளிகளின் ஒடுக்கப்பட்ட தட்டினரை அதன் பக்கம் வென்றெடுக்கச் செய்யும்.

பணவீக்கம் மற்றும் வேலை அழிப்புகளுக்கு எதிராக ஏற்கனவே இதேபோன்ற போராட்டங்களில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட உலகம் முழுதும் உள்ள அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளே, இலங்கைத் தொழிலாளர்களின் கூட்டாளிகள் ஆவர். சர்வதேச தொழிலாளர்களுடன் தங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக இலங்கை தொழிலாளர்கள், நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியில் இணைந்துகொள்ள வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியை இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கும் வகையில் வெகுஜனப் புரட்சிகரக் கட்சியாகக் கட்டியெழுப்புமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

Loading