UAW தொழிற்சங்க எந்திரம் ஜனநாயக விரோதமாக வாக்குப்பதிவை ஒடுக்குவதை எதிர்த்து வில் லெஹ்மன் வழக்கு தாக்கல் செய்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வியாழக்கிழமை, ஐக்கிய வாகனத் துறைத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளரும், ஒரு சோசலிசவாதியும் மாக் ட்ரக்ஸ் ஆலையின் ஒரு சாமானியத் தொழிலாளியுமான வில் லெஹ்மன், UAW சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தல்களில் தொழிலாளர்கள் வாக்குப்பதிவு செய்வதற்கான காலக்கெடுவை நீடிக்கக் கோரி, மிச்சிகன் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.

Lehman v. The UAWஎன்ற இந்த வழக்கு நீதிபதி டேவிட் எம். லோசனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த தொழிற்சங்கத்தின் மீது நீதிமன்றம்-வழிநடத்தும் கண்காணிப்புக் குழுவையும் மற்றும் UAW சங்கத்தையும் மேற்பார்வை செய்வதில் இவரே பொறுப்பேற்றுள்ளார். இந்த வழக்கு வரும் செவ்வாய்கிழமை, நவம்பர் 22 இல் விசாரணைக்கு வருகிறது.

இந்த ஒட்டுமொத்த தேர்தலிலும் நடத்தப்பட்டுள்ள ஜனநாயக விரோதத் தன்மைக்கு ஒரு விடையிறுப்பாக இந்த வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. UAW சங்கத் தலைமை மிகப் பெரும் ஊழல் மோசடியில் மூழ்கிய பின்னர் ஒரு பொது வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டதன் காரணமாக மட்டுமே முதல்முறையாக இந்த நேரடி தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. UAW சங்கத் தலைவர் ரே கார்ரி மற்றும் சாலிடாரிட்டி ஹவுஸ் (Solidarity House) எந்திரமும் இந்த நேரடித் தேர்தல்களை எதிர்த்தனர் என்றாலும், பெருவாரியாக 63.7 சதவீத உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

நேரடித் தேர்தல்களை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், சாலிடாரிட்டி ஹவுஸ் எந்திரம் பரந்த பெரும்பான்மை சாமானியத் தொழிலாளர்கள் இதில் பங்கேற்பதைத் தடுக்கும் விதத்தில் இதை ஒழுங்கமைக்கத் தீர்மானகரமாக இருந்தது. வாக்கெடுப்பை பெரிதும், UAW அதிகாரத்துவக் கட்டுப்பாட்டில் உள்ள சில ஆயிரக் கணக்கானவர்களுக்குள் மட்டுப்படுத்தி வைக்க அது முற்பட்டுள்ளது.

இதனால் தான், வழக்கு ஆவணங்கள் குறிப்பிடுவதைப் போல, ஒரு தேர்தல் நடக்கிறது என்பதைக் குறித்தே கூட உறுப்பினர்களுக்குத் தகவல் அளிக்கப்படவில்லை. பல தொழிலாளர்களுக்கு வாக்குச் சீட்டுகள் கிடைக்கவில்லை என்பதோடு, ஒரு வாக்குச்சீட்டைப் பெறுவதற்கு நீண்ட நடைமுறைகளைப் பின்பற்றி அதில் தோல்வி அடைய வேண்டியிருந்தது. வேறு சிலர் விஷயத்தில், தொழிலாளர்கள் பல வாக்குச்சீட்டுக்களைப் பெற்றிருந்தனர், குறைந்தபட்சம் ஒரு விஷயத்தைக் கூறுவதானால், நிர்வாக உறுப்பினர்கள் வாக்குச்சீட்டுக்களைப் பெற்றிருந்தனர். இந்தத் தேர்தல்கள் மற்றும் வாக்குப்பதிவு குறித்து தொழிலாளர்களுக்கு மின்னஞ்சல் கிடைக்கும் வகையில், தொழிலாளர்களுக்கான துல்லியமான மின்னஞ்சல் பட்டியல்களை UAW வேண்டுமென்றே உருவாக்க மறுத்துவிட்டது.

தற்காலிக பகுதிநேர தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாது என்று UAW சங்க நிர்வாகிகள் பொய்களைப் பரப்பியதுடன், தொழிற்சாலைகளுக்கு வெளியே வேட்பாளர்களுடன் பேசவிடாமல் தொழிலாளர்களைச் சட்டவிரோதமாக மிரட்ட முயன்றனர். கார்ரியின் குழு, பிரச்சாரத்திற்காக தொழிற்சங்க ஆதாரவளங்களைப் பயன்படுத்தியதன் மூலம் பெடரல் சட்டத்தை மீறியது என்பது தெரிந்திருந்த போதும் கூட, கண்காணிப்புக் குழு, அதன் பங்கிற்கு, தொழிலாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கவும் மற்றும் வாக்குச்சீட்டுக்கள் அனுப்ப வேண்டிய முகவரிகளை வழங்குவதற்கும், UAW சங்கத்தின் பலமாக வேரோடிய தலைமையையே முற்றிலுமாக சார்ந்துள்ளது.

வாக்குப்பதிவு எண்ணிக்கை, வாக்காளர்கள் ஒடுக்கப்படுவதன் தெளிவான ஆதாரமாக உள்ளது. வாக்குகள் எண்ணப்படுவதை உறுதிப்படுத்த, நவம்பர் 18, வெள்ளிக்கிழமைக்குள் வாக்குச்சீட்டுக்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுமென கண்காணிப்புக் குழு காலக்கெடு வைத்திருந்தது. ஆனால் இதுவரை வெறும் 9 சதவீத உறுப்பினர்களே வாக்களித்துள்ளனர் — நவம்பர் 17 வியாழன் நிலவரப்படி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான UAW உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களில் 95,943 பேர் மட்டுமே வாக்கு செலுத்தி உள்ளனர்.

இந்த மோசடி செயல்முறையைத் தடுக்க வில் லெஹ்மன் பிரச்சாரக் குழு நீதிமன்றத்திற்குச் சென்றது.

அந்த வழக்கு குறிப்பிடுவதைப் போல, 'தேவையான அறிவிப்பை வழங்குவதற்கான ஆதாரவளங்களும் வழிவகைகளும் UAW க்கு உள்ளன, ஆனால் வேண்டுமென்றே பிடிவாதமாக அவ்வாறு செய்ய மறுக்கிறது. இதனால், கண்கூடாகவே UAW உறுப்பினர்களின் சிறு பகுதியினர் மட்டுமே தேர்தலில் பங்கேற்கின்றனர். … இன்னும் கவலைக்குரிய உண்மை என்னவென்றால், கண்காணிப்புக் குழுவிடம் லெஹ்மன் விவரமாக எடுத்துக்காட்டி உள்ளவாறு, தேர்தலைப் பற்றி அறிந்த கணிசமான எண்ணிக்கையிலான தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் வாக்களிக்க வாக்குச்சீட்டுக் கிடைக்காததால் அவர்களால் பங்கேற்க முடியவில்லை, பலர் இதற்காக பெரும் பிரயத்தனத்தோடு நீண்ட விடாமுயற்சி செய்திருந்தனர்.”

UAW தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வில் லெஹ்மனுக்கு ஆதரவைக் காட்டும் தொழிலாளர்கள்

தங்களுக்குத் தேர்தல் குறித்து தெரிவிக்கப்படவே இல்லை என்றும், வாக்குச்சீட்டுகள் கிடைக்கவில்லை, கண்காணிப்புக் குழுவிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் ஒரு வாக்குச்சீட்டைப் பெற முடியவில்லை என்றும், தற்காலிக பகுதிநேர தொழிலாளர்கள் (TPTs) வாக்களிக்க முடியாது என்று கூறப்பட்டது என்றும், தங்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டது என்றும் கூறிய டஜன் கணக்கான தொழிலாளர்களின் அறிக்கைகளும் அந்த வழக்கு ஆவணங்களில் உள்ளடக்கப்பட்டு இருந்தன. வில் லெஹ்மன் பிரச்சாரக் குழுவிடம் இருந்து மட்டுமே தங்களுக்குத் தகவல் வந்தது என்று பலர் குறிப்பிட்டிருந்தனர்.

'கேரி குழு இந்தத் தேர்தலில் முறைகேடு செய்ய அல்லது களவாட முயன்று வருகிறது' என்று டெட்ராய்ட் மாக் உற்பத்தி ஆலை தொழிலாளர் ஒருவர் அந்த வழக்கில் கூறினார். “இந்தத் தேர்தல் குறித்து ஆலையில் எந்த அறிவிப்பும் இல்லை. அவர்கள் வாக்களிக்கலாம் என்று UAW யாருக்கும் கூறவில்லை. வில் லெஹ்மன் பிரச்சார குழுவைச் சந்திக்கும் வரை தேர்தல் பற்றி எனக்கு தெரியாது.” ஸ்டெல்லாண்டிஸின் வாரன் ட்ரக் உற்பத்தி ஆலையின் மற்றொரு தொழிலாளி எழுதினார், “இந்தத் தேர்தல் எப்படி இந்தளவுக்குச் சத்தமில்லாமல் நடத்தப்படுகிறது என்பது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. உங்கள் (வில் லெஹ்மன்) பிரச்சார பதாகையை நாங்கள் பார்த்திருக்காவிட்டால், எங்களில் பலருக்குத் தேர்தல் நடப்பதே தெரிந்திருக்காது.”

வாக்களிக்கும் காலத்தை நீட்டிப்பதே இந்த நிலைமையைச் சீர்செய்வதற்கும் நியாயமான மற்றும் ஜனநாயக முறையில் தேர்தலை உறுதி செய்வதற்கும் ஒரே வழி என்று அந்த வழக்கு உறுதியாக வாதிடுகிறது. 'ஒட்டுமொத்த உறுப்பினர்களின் உண்மையான கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் ஒரு நியாயமான தேர்தலில் பங்கேற்பதற்கு லெஹ்மனின் மற்றும் ஒட்டுமொத்த UAW உறுப்பினர்களின் உரிமையை உறுதி செய்ய, தகுதியுள்ள எல்லா உறுப்பினர்களும் வாக்குச்சீட்டுக்களைப் பெற்று வாக்களிப்பதற்கு வாய்ப்பு பெறுவதை உறுதிப்படுத்த இந்தத் தேர்தல் 30 நாட்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும்,” என்று அது குறிப்பிடுகிறது. “மொத்த உறுப்பினர்களுக்கும் தேர்தல் குறித்து தெரியப்படுத்தி வாக்குச்சீட்டுக்களை வழங்கும் நோக்கில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்த நீதிமன்றம் பிரதிவாதிகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்,” என்று அது குறிப்பிட்டது.

இந்த அடிப்படையான வாதம் இன்றியமையாதது. தொழிலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்றால் தேர்தலே அர்த்தமற்றதாகிறது. வாக்குப்பதிவைக் குறைக்க தனிப்பெரும் ஆர்வம் கொண்ட தலைமை, வாக்குகளை ஒடுக்குவதற்காக, எந்திரத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து தில்லுமுல்லு செய்யும் ஒரு தேர்தல் என்பது நியாயமானது இல்லை.

ஆயிரக்கணக்கில் அதிக ஊதியம் பெறும் செயல்பாட்டாளர்களைக் கொண்ட பெருநிறுவன-சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் சமானியத் தொழிலாளர்களுக்கும் இடையில் உள்ள பரந்த சமூகப் பிளவை வில் லெஹ்மனின் பிரச்சாரம் அம்பலப்படுத்தி உள்ளது. பெருநிறுவன அமெரிக்கா தொழிலாள வர்க்கத்தின் மீது அதன் சர்வாதிகாரத்தைப் பயன்படுத்துகின்ற இந்த வேளையில், வாக்குகளை ஒடுக்குவதற்கான அதிகாரத்துவத்தின் இந்த முயற்சியானது, தொழிலாள வர்க்கத்தின் மீது ஒரு பொலிஸ் படையாக அது வகிக்கும் பாத்திரத்தின் ஒரு நீட்சியாகும்.

மறுபுறம், மிக அடிப்படையான ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்வதற்கான லெஹ்மனின் இந்தப் போராட்டமானது, இந்த எந்திரத்திற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டி, உண்மையான ஜனநாயக அமைப்புகளாக சாமானியத் தொழிலாளர் குழுக்களை உருவாக்கி, அதைக் கொண்டு அவர்கள் ஒன்றிணைந்து அவர்களின் நலன்களுக்காக போராட செய்வதற்கான பிரச்சாரத்தின் ஒரு நீட்சியாக மற்றும் வெளிப்பாடாக உள்ளது.

லெஹ்மனின் வழக்கு முடிவு இந்த செவ்வாய்கிழமை காலை தீர்மானிக்கப்படும். இந்த வழக்கு தொடர்பான அறிக்கையையும், லெஹ்மன் வழக்கறிஞரின் காணொளி அறிக்கையையும் பகிர்ந்து மற்றும் விநியோகிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் எமது வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறது. இந்த வழக்கை சாத்தியமானளவுக்கு வாகனத் துறைத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினரிடையேயும் பரவலாக அறியச் செய்யுங்கள்!

Loading