முன்னோக்கு

ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத் தலைவர் பதவிக்கு வில் லெஹ்மனின் இறுதிக்கட்ட பிரச்சாரம்: சாமானியத் தொழிலாளர்களுக்கு எதிராக அதிகாரத்துவத் தொழிற்சங்க எந்திரம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்காவில் ஐக்கிய வாகனத்துறைத் தொழிலாளர்கள் சங்கத் தலைமைக்கான தேர்தல் அதன் இறுதி வாரங்களில் உள்ளது. தேர்தலை மேற்பார்வையிடும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர் குழு, ஐக்கிய வாகனத் துறைத் தொழிலாளர்கள் சங்கத்தில் உள்ள கிட்டத்தட்ட 1 மில்லியன் தொழிலாளர்கள், நவம்பர் 28 இறுதி தேதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களைப் பெற்றிருக்கும் விதத்தில், இப்போதிருந்து ஒரு வாரத்திற்குள், அதாவது நவம்பர் 18 க்குள், வாக்குச்சீட்டுகளை அனுப்பி இருக்க வேண்டும் என்று தேதி வழங்கி உள்ளது.

இந்தத் தேர்தல்களில், தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் விருப்பங்களுக்கு வெளிப்பாட்டை வழங்கும் விதத்தில் ஒரு வேட்பாளர், வில் லெஹ்மன், சர்வதேச UAW சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். பல தசாப்தங்களாக வர்க்கப் போராட்டத்தை நசுக்க செயல்பட்டுள்ள தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவ எந்திரத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களின் பெருகி வரும் சாமானியத் தொழிலாளர் இயக்கத்திற்கு லெஹ்மன் பிரச்சாரம் ஒரு மையப்புள்ளியாக மாறியுள்ளது.

கடந்த வார இறுதியில் ஒரு பிரச்சார கூட்டத்தைக் காட்டிய இறுதி தேர்தல் காணொளி, லெஹ்மன் பிரச்சாரத்தின் தாக்கத்திற்கு பலமான வெளிப்பாட்டைக் கொடுத்தது. தொழிலாளர்கள் எதிர் கொண்டிருக்கும் பேரழிவுகரமான நிலைமைகள், முடிவின்றி தொடர்ச்சியாக விட்டுக்கொடுப்பு ஒப்பந்தங்களை செயல்படுத்த நிறுவனங்களுடன் செயல்படுவதில் UAW எந்திரம் வகிக்கும் பாத்திரம் மற்றும் போராடுவதற்கான தொழிலாளர்களின் விருப்பம் ஆகியவற்றை விவரித்த டஜன் கணக்கான தொழிலாளர்களின் காணொளி அறிக்கைகளை அது உள்ளடக்கி இருந்தது.

அந்தக் கூட்டத்தில் பேசிய பல தொழிலாளர்களில், மெக்சிகோவின் சிலெயோவைச் சேர்ந்த பல வாகனத் துறைத் தொழிலாளர்களும் இருந்தனர், அவர்கள் சர்வதேச ஒற்றுமைக்கு முறையீடு செய்தனர். 'சர்வதேச அளவில் போராடுவதற்கான தொழிலாளர்களின் எண்ணம் பிரமாதமானது' என்று மெக்சிகன் தொழிலாளர்களில் ஒருவர் கூறினார். 'இங்கே மெக்சிகோவில், மக்கள் பேசவே மிகவும் பயப்படுகிறார்கள். ஆனால் அந்த பயத்தை அசைத்து விட்டால், விஷயங்கள் வேறு விதமாக இருக்கும்,” என்றார்.

இந்தத் தேர்தல் பிரச்சாரம், அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள சமூக மற்றும் அரசியல் உறவுகள் பற்றிய சில அடிப்படை உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

முதலாவதாக, ஆயிரக் கணக்கானவர்களைப் பணியில் அமர்த்தி உள்ள தொழிற்சங்க எந்திரத்திற்கும், இவர்களின் வருமானம் இவர்களை மக்கள்தொகையில் உயர்மட்ட 5 அல்லது 1 சதவீதத்தினரில் நிறுத்தும் நிலையில், இவர்களுக்கும் சாமானியத் தொழிலாளர்களுக்கும் இடையே நிலவும் பரந்த சமூகப் பிளவை இது அம்பலப்படுத்தி உள்ளது. இந்த அதிகாரத்துவ எந்திரத்திடம் இருந்து அதிகாரத்தைக் கடைநிலை வேலையிடத்திற்கு மாற்ற, ஒவ்வொரு வேலையிடத்திலும் சாமானியத் தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதற்கு லெஹ்மனின் அழைப்பு செயல் வடிவம் கொடுத்துள்ளது, சமீபத்திய வாரங்களில் பல முக்கிய தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் இதுபோன்ற குழுக்களை நிறுவி உள்ளனர்.

ஒரு பொது வாக்கெடுப்பின் காரணமாக UAW அதிகாரத்துவம் நேரடியாக தேர்தல்களை நடத்துவதை முதல் முறையாக ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, பல முன்னாள் UAW தலைவர்கள் மற்றும் பிற உயர்மட்ட நிர்வாகிகளைச் சிறைச்சாலைக்கு அனுப்பி உள்ள மிகப் பெரியளவிலான ஊழல் காரணமாக அந்தப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவர்கள் விரும்பாத தேர்தல்களை முகங்கொடுத்துள்ள UAW சங்கம், அதன் ஆளும் வர்க்க ஆதரவாளர்களுடன் சேர்ந்து, தற்போதைய தலைவர் ரே கர்ரி மற்றும் நீண்டகால UAW அதிகாரத்துவவாதி ஷான் ஃபைன் ஆகியோர் உட்பட அதிகாரத்துவ எந்திரத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களை வைத்து இந்தத் தேர்தலை நடத்தி விட விரும்பியது.

வில் லெஹ்மனின் பிரச்சாரம் இந்தத் திட்டங்களைத் தகர்த்துள்ளது. இதனால், UAW இல் உள்ள அதிகாரத்துவவாதிகள் வாக்குப்பதிவு எண்ணிக்கையைக் குறைக்க அவர்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளனர். ஒவ்வொரு தொழிலாளருக்கும் வாக்குச்சீட்டு கிடைக்க வேண்டும் மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னர் உரிய நேரத்தில் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது ஒருபுறம் இருக்கட்டும், ஒரு தேர்தல் நடப்பதைக் குறித்து தொழிலாளர்களுக்குத் தெரிவிப்பதைக் கூட சாத்தியமானளவுக்கு அவர்கள் குறைவாகவே செய்துள்ளனர்.

தொழிற்சாலைகளில் மிகவும் சுரண்டப்படும் தொழிலாளர்களான தற்காலிக பகுதி நேரத் தொழிலாளர்கள் வாக்களிக்க முடியாது என்று (இதுவொரு பொய்) உள்ளூர் UAW கிளை நிர்வாகிகள் கூறியதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். வாக்குச்சீட்டுக்கள் அக்டோபர் 28 க்குள் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டு விட்டதாக (இது மற்றொரு பொய்) UAW நிர்வாகிகள் தொழிலாளர்களுக்குக் கூறி வருவதாக மற்றவர்கள் தெரிவித்தனர்.

வாக்குச் சீட்டுகளை அனுப்புவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், கண்காணிப்பு குழுவிடம் இருந்து வாக்குச்சீட்டைப் பெறுவதில் மிகுந்த சிரமங்கள் இருப்பதாகவும், இதுவரை தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் பல தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். நவம்பர் 10 நிலவரப்படி, 86,396 வாக்குச்சீட்டுக்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன, அல்லது மொத்த UAW உறுப்பினர் எண்ணிக்கையில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே வாக்குச்சீட்டுக்களைப் பெற்றுள்ளனர்.

தொழிலாளர்களுக்குத் தேர்தல் பிரச்சார செய்தியை மின்னஞ்சலில் அனுப்ப ரே கர்ரி குழு தொழிற்சங்க வளங்களைச் சட்டவிரோதமாக பயன்படுத்தி இருப்பதாக, இந்த வாரம், மற்ற வேட்பாளர்களுக்கு கண்காணிப்புக் குழு ஓர் அறிவிப்பு அனுப்பியது—விரும்பிய முடிவைக் கொண்டு வர UAW மீதான அதன் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதற்கான தொழிற்சங்க எந்திரத்தின் முயற்சிகளுக்கு இது வெறும் ஒரேயொரு வெளிப்பாடாகும்.

ஆனால் UAW எந்திரத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதல், ஓர் உலகளாவிய நிகழ்வுபோக்கின் ஒரு வெளிப்பாடு மட்டுமே ஆகும்.

அமெரிக்காவில், விட்டுகொடுப்பு ஒப்பந்தங்களைத் திணிக்க நிறுவனத்துடனும் மற்றும் பைடென் நிர்வாகத்துடனும் ஒத்துழைத்து வரும் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு எதிராக இரயில்வே தொழிலாளர்கள் உறுதியாகப் போர் தொடுக்கும் நிலையில் உள்ளனர். 100,000 இரயில்வே தொழிலாளர்களை உள்ளடக்கிய 12 தொழிற்சங்கங்களின் எந்திரம், தொழிலாளர்களின் 'வேண்டாம்' வாக்குகள் மற்றும் வேலைநிறுத்தத்தை அங்கீகரிக்கும் வாக்குகளை மீண்டும் மீண்டும் புறக்கணித்து, அடிப்படையில் அதே ஒப்பந்தங்களில் வாக்களிக்க அவர்களை மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்தியது, வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரஸ் சபையின் சார்பாக வேலைநிறுத்த காலக்கெடுவைத் தள்ளி வைத்ததுடன், தொழிலாளர்கள் போராடினால் அவர்கள் போக்கில் அவர்களை விட்டுவிடுவோம் என்று அச்சுறுத்தியது.

ஒவ்வொரு நாட்டிலும் இதே அடிப்படை உறவு தான் நிலவுகிறது. கடந்த வார இறுதியில், கனடாவில், முக்கிய தொழிற்சங்கங்கள் தலையிட்டு ஒன்ராறியோவில் 55,000 பள்ளிக் கல்வித்துறை உதவிப் பணியாளர்களின் வெளிநடப்பால் தூண்டப்பட்ட ஒரு பொது வேலைநிறுத்த இயக்கத்தின் குரல்வளையை நெரித்தன. பிரிட்டனில், தொழிற்சங்க காங்கிரஸ் (TUC) மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புக்கள் இரயில்வே தொழிலாளர்கள், தகவல் தொடர்புத் துறைத் தொழிலாளர்கள், அஞ்சல் துறைத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பிற பிரிவுகளிலும் வளர்ந்து வரும் வேலைநிறுத்த இயக்கத்தைத் தடுக்க செயல்பட்டுள்ளன. பிரான்சில், ஸ்ராலினிச CGT தொழிற்சங்கம் கடந்த மாதம் சுத்திகரிப்புத் துறைத் தொழிலாளர்களின் ஒரு சக்தி வாய்ந்த வேலைநிறுத்தத்தின் குரல்வளையை நெரிக்க இமானுவல் மக்ரோன் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றியது.

இரண்டாவதாக, இந்தப் பிரச்சாரம், தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒழுங்கமைக்கும் போக்கில், ஜனநாயகக் கட்சியிலும் மற்றும் அதைச் சுற்றியும் செயல்படும் அமைப்புகளால் நீண்டகாலமாக ஊக்குவிக்கப்படும் இன மற்றும் பாலின அடையாள அரசியலின் பிற்போக்குத்தனமான தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது.

அந்தப் பிரச்சார காணொளியில் எல்லா இன மற்றும் பாலினத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் அந்தப் பிரச்சாரத்தை ஆதரிக்கிறார்கள், ஏனென்றால் அது அவர்களின் பொதுவான வர்க்கக் கவலைகளை வெளிப்படுத்துகிறது. தொழிலாளர்களைப் போராட்டத்திற்குள் தள்ளுவது என்னவென்றால் அது இன, பாலின மற்றும் பாலியல் அடிப்படையில் பதவிகளைப் பெறுவதற்காக ஒருமுனைப்பட்டுள்ள உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் பிரிவுகளது சுயநலமான கவலைகள் இல்லை, மாறாக சமூக சமத்துவமின்மை, அதிகரித்து வரும் பணவீக்கம், கடுமையாகப் பிழிந்தெடுக்கும் வேலை நேரங்கள், பாதுகாப்பற்ற நிலைமைகள் மற்றும் பெரும் எண்ணிக்கையில் பணிநீக்கங்களுக்கான சாத்தியக்கூறு என வர்க்கச் சுரண்டலின் யதார்த்தங்களே தொழிலாளர்களைப் போராட்டத்திற்குள் தள்ளுகின்றன.

ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்க எந்திரத்துடன் இணைந்து பணியாற்ற மறுப்பதற்காக WSWS ஐ 'குறுங்குழுவாதக் குழு' என்று கண்டனம் செய்யும் அதேவேளையில், தொழிலாளர்கள் மத்தியில் மகத்தான ஆதரவைப் பெற்று வரும் ஓர் உண்மையான சாமானியத் தொழிலாளர் குழு பிரச்சாரத்தை எதிர்கொண்டுள்ள அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள், லேபர் நோட்ஸ், ஜாகோபின் பத்திரிகை மற்றும் இன்னும் எண்ணற்ற போலி இடது அமைப்புகள் விடையிறுப்பாக மவுனம் காக்கின்றன, அவை வாய் திறக்க வேண்டி வந்தாலும், முற்றுமுதலான விரோதத்துடன் வெளிப்படுகின்றன.

மூன்றாவதாக, இந்தப் பிரச்சாரம் சோசலிசத்தை நோக்கி தொழிலாளர்களின் ஈர்ப்பை வெளிப்படுத்தி உள்ளது. லெஹ்மன் வெளிப்படையாக ஒரு சோசலிஸ்டாக பிரச்சாரம் செய்துள்ளார் என்பதோடு, உண்மையில் சோசலிசம் என்றால் என்ன என்பதைத் தொழிலாளர்களுக்கு விளக்க இந்தப் பிரச்சாரத்தைப் பயன்படுத்தினார். தொழிலாள வர்க்க இயக்கத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான பிரிக்க முடியாத தொடர்பைப் பற்றிய வரலாற்றுப் புரிதலில் இருந்து தொழிலாளர்களைப் பிரிக்க, ஆளும் வர்க்கம் நீண்டகாலமாக பொய்கள் மற்றும் வரலாற்றுப் பொய்மைப்படுத்தல்களைச் சார்ந்துள்ளது. இது இப்போது உடைந்து வருகிறது.

WSWS இன் சர்வதேச ஆசிரியர் குழு தலைவர் டேவிட் நோர்த் கடந்த ஆண்டு வொல்வோ ட்ரக்ஸ் வேலைநிறுத்தத்தின் போது எழுதுகையில், “அமெரிக்க தொழிலாள வர்க்கம் புரட்சியைக் கண்டு அஞ்சவில்லை. அது சோசலிசத்திற்கு எதிரானதும் இல்லை. அது எதை ஒரு தீர்வாக வழங்குகிறது, அதை எப்படி கைவரப் பெறுவது என்பதை புரிந்து கொள்ள வேண்டி உள்ளது,” என்றார்.

ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினரின் பாசிசவாத வெறித்தனங்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் பிற்போக்குத்தனமான அடையாள அரசியல் உள்ளடங்கலாக, முதலாளித்துவ அரசியலின் அனைத்து சேற்று அழுக்குகளையும் அகற்றி அதைக் கீழறுப்பதற்கான அடித்தளத்தையும் இந்த UAW தேர்தல் பிரச்சாரம் எடுத்துக்காட்டுகிறது. இந்த வாரம் முடிவடைந்த இடைக்காலத் தேர்தல்கள், தீவிர சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகளின் கீழ் ஒட்டுமொத்த ஆளும் வர்க்க அரசியல் அமைப்புமுறையின் கொடுமையான தன்மையை எல்லாவற்றையும் விட அதிகமாகவே அம்பலப்படுத்தியது.

ஆளும் வர்க்கத்தின் போர்வெறியையும், ஜனநாயக ஆட்சி வடிவங்களுக்கு எதிரான சூழ்ச்சியையும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக மட்டுமே எதிர்க்க முடியும். இதுவே கூட வர்க்கப் போராட்ட வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும், இது தொழிற்சங்க எந்திரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சாமானியத் தொழிலாளர்களது கிளர்ச்சிகர அமைப்புகள் மூலமாக மட்டுமே சாத்தியமாகும்.

இடைக்காலத் தேர்தல்களுக்குப் பின்னர், அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒரு சமூக வெடிப்பை முகங்கொடுக்கிறது. இரயில்வே தொழிலாளர்கள் உடனான மோதலைத் தவிர, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கல்வித்துறை பணியாளர்களான 48,000 க்கும் அதிகமான UAW உறுப்பினர்கள் அடுத்த வாரம் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்; ஒப்பந்தம் இல்லாமல் வேலை செய்து வரும் 22,000 க்கும் அதிகமான வெஸ்ட் கோஸ்ட் துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய ஆர்வமாக உள்ளனர்; பத்தாயிரக் கணக்கான விமானிகள் ஒப்பந்தங்களை நிராகரித்து, வேலைநிறுத்தம் செய்வதை அங்கீகரித்து வாக்களித்துள்ளனர்; சளிக் காய்ச்சல் மற்றும் பிற சுவாச நோய்களின் வெடிப்புடன் சேர்ந்து பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரப் பணியாளர்கள் ஒரு பேரழிவுகரமான குளிர்காலத்தை எதிர்கொள்கின்றனர்; அதிக வேலை மற்றும் குறைவான பணியாளர்களுடன் கல்வியாளர்கள், சகிக்க முடியாத சூழ்நிலையில் பணிபுரிகின்றனர். தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரும் பணவீக்கத்தை முகங்கொடுப்பதுடன், வேலையின்மையை அதிகரிக்கவும் மற்றும் கூலி உயர்வு கோரிக்கைகளைப் பலவீனப்படுத்தவும் வட்டி விகிதங்களை அதிகரிக்கும் பெடரல் ரிசர்வின் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பெரும் எண்ணிக்கையிலான வேலை வெட்டுக்களையும் எதிர்கொள்கின்றனர்.

இந்தத் தேர்தல்களுக்குப் பின்னர், பைடென் நிர்வாகம் ட்ரம்பின் சக குடியரசுக் கட்சி சதிகாரர்களுடன் ஒருமனதான இருகட்சி கூட்டுறவுக்கு அழைப்பு விடுக்கிறது. ஆனால், விரக்தியோடு ஒரு கற்பனையான 'தேசிய ஒற்றுமை'க்கான இந்த முறையீடுகள், அடிமட்டத்தில் அபிவிருத்தி அடைந்து வரும் பாரியளவிலான சமூக வெடிப்பைக் குறித்து ஆளும் வர்க்கத்திற்குள் நிலவும் தீவிர பதட்டத்தை வெளிப்படுத்துகின்றன.

UAW சங்கத் தேர்தல்களின் இறுதி வாரங்களில், வாக்குகளைக் குறைப்பதற்கான தொழிற்சங்க எந்திரத்தின் முயற்சிகளைத் தோற்கடிக்க, சாத்தியமான அளவுக்கு மிகப் பரந்தளவில் வில் லெஹ்மனுக்கு வாக்குப்பதிவு கிடைப்பதற்காக முடிந்த வரை ஆக்ரோஷமாக போராடுவது அவசியமாகும். எவ்வாறிருப்பினும், தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும், அது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வர்க்கப் போராட்டத்தில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது, இது வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் விரிவுபடுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.

வில் லெஹ்மன் பிரச்சாரம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்: WillforUAWPresident.org.

Loading