வில் லெஹ்மனின் வழக்குக்கு பதிலளிக்குமாறு அமெரிக்க தொழிலாளர் அமைச்சருக்கு மத்திய நீதிபதி உத்தரவிட்டார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளியன்று, ஐக்கிய வாகன தொழிற்சங்க (UAW) தலைவர் பதவிக்கான வேட்பாளர் வில் லெஹ்மன், நடந்துகொண்டிருக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் காலக்கெடுவை நீட்டிக்க தனது வழக்கைத் தாக்கல் செய்த மறுநாள், மத்திய நீதிபதி டேவிட் எம். லோசன் இந்த வழக்கிற்கு அமெரிக்க தொழிலாளர் அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். திங்கட்கிழமை பணிகள் முடிவதற்குள் லெஹ்மன் எழுப்பிய பிரச்சினைகள் தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்குமாறு மத்திய அரசுக்கு அந்த உத்தரவு அறிவுறுத்துகிறது.

இந்த வழக்கில், UAW இன் தகுதியுள்ள உறுப்பினர்களில் 9 சதவீதத்தினர் மட்டுமே இதுவரை வாக்களித்துள்ள தேர்தலுக்கு எவரும் அறியக்கூடிய அறிவிப்பை வழங்கத் தவறியதன் மூலம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான சாமானிய தொழிற்சங்க உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளை மீறுகிறது என்று லெஹ்மன் வாதிட்டார். மற்றும் வாக்களிக்க சரியான நேரத்தில் தொழிலாளர்கள் வாக்குச்சீட்டுக்களை கோருவதிலும், பெறுவதில் பரவலான சிக்கல்கள் உள்ளன.

UAW தலைவர் பதவிக்கு வில் லெஹ்மனுக்கு ஆதரவை தெரிவிக்கும் தொழிலாளர்கள்

தேர்தல் காலக்கெடுவை 30 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும், தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள 1 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களை பாதிக்கும் இந்தப் பிரச்சனைகளை தீர்க்க பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் லெஹ்மன் கேட்டுக்கொள்கிறார்.

தற்போதைய தொழிலாளர் அமைச்சரான மார்டி வால்ஷ், தொழிலாளர்களின் சங்கத்தின் தலைவராகவும், மாசசூசெட்ஸில் மாநில பிரதிநிதியாகவும், பொஸ்டனின் நகரசபைத் தலைவராகவும் இருந்தவராவார். 2021 இல் தொழிலாளர் துறையின் தலைவராக ஜனாதிபதி பைடெனால் பின்னர் நியமிக்கப்பட்டார்.

1999 ஆம் ஆண்டு ஜனாதிபதி கிளிண்டனால் பரிந்துரைக்கப்பட்ட மிச்சிகனின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதியான லோசன், 2020 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசாங்கத்தின் UAW இற்கு எதிரான அமெரிக்காவிற்கு எதிரான ஐக்கிய வாகன தொழிற்சங்க வழக்கிற்கு தலைமை தாங்கினார். இது ஒப்புதலளிக்கும் ஆணை மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றின் கீழ் தற்போதைய தலைமைத்துவத்திற்கான தேர்தல்கள் நடைபெறுவதற்கு காரணமானது.

இந்த வழக்கில் லோசன் 'வில்லியம் லெஹ்மன் எதிர் ஐக்கிய வாகன தொழிற்சங்க விவகாரத்தில் தலையிட அரசாங்கத்தை வழிநடத்தும் ஆணை' என்ற தலைப்பில் ஒரு ஆணைக்கு வெள்ளிக்கிழமை கட்டளையிட்டார்.

ஒரு ஆறு பக்க உத்தரவில், லோசன் ஜனவரி 29, 2021 இன் ஒப்புதலளிக்கும் ஆணையை பற்றிக் குறிப்பிடத் தொடங்கினார். இது UAW அதிகாரத்துவத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் பரவலான ஊழல் மற்றும் குற்றங்களை அம்பலப்படுத்திய கூட்டாட்சி விசாரணையின் விளைவாகும்.

விசாரணையை நடத்திய நீதித்துறை, UAW மூத்த தலைவர்களிடையே ஒரு திட்டமிட்ட 'ஊழல் கலாச்சாரம்' இருந்தது என்ற முடிவிற்கு வந்தது. இத்தலைமையானது 'நெறிமுறையற்ற, பேராசை மற்றும் சுய இன்பம் கொண்ட நடத்தை' கொண்டிருந்தது என வகைப்படுத்தப்பட்டது.

தனியார் மாளிகைகள், இலத்திரனியல் கருவிகள், ஆடம்பர உணவு மற்றும் கோல்ஃப் கிளப்புகளில் மில்லியன் கணக்கான டாலர்கள் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை செலவழித்த UAW அதிகாரிகள் பிடிபட்டனர். ஒரு சட்ட அமுலாக்கச் பரிசோதனையில் முன்னாள் UAW தலைவரின் வீட்டில் 'பணக் குவியல்கள்' பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய UAW அதிகாரிகள், நிறுவனங்களின் முகவர்களிடம் இருந்து இலஞ்சம் வாங்கும் போது பிடிபட்டனர்.

அரசாங்கத்திற்கும் UAW க்கும் இடையில் உடன்பாட்டிற்கு வந்த ஒப்புதலளித்தல் ஆணையின் கீழ், லாசன் சட்ட நிறுவனமான Jenner & Block LLP இன் நீல் எம். பரோஃப்ஸ்கி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை ஒரு சுயாதீன கண்காணிப்பாளராக மேற்பார்வை நியமித்தார்.

மற்றவற்றுடன், UAW க்கு தேசிய தலைமையை தேர்ந்தெடுக்கும் முறையை தலைமைத் தேர்தல்கள் வரலாற்று ரீதியாக நடத்தப்பட்ட பிரதிநிதிகள் காங்கிரஸால் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மாறாக 'ஒரு உறுப்பினர், ஒரு வாக்கு' என்ற நேரடி தேர்தல் செயல்முறைக்கு மாற்ற வேண்டுமா என்ற கேள்விக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த ஒப்புதலளித்தல் ஆணை தேவையாகும்.

ஜூலை மாதம் UAW நடத்திய 38வது அரசியலமைப்பு மாநாட்டில் தொழிற்சங்க சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதன் விளைவாக கடந்த ஆண்டு இறுதியில் இந்த வாக்கெடுப்பு 63 சதவீதத்திற்கு 37 சதவீதம் என்ற வித்தியாசத்தில் எப்படி நிறைவேற்றப்பட்டது என்பதை லோசன் தனது உத்தரவில் விவரிக்கிறார். அதே மாநாட்டில் தலைமைப்போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்ட லெஹ்மன், UAW அதிகாரத்துவத்தை ஒழித்து அதிகாரத்தை அடித்தளத்திலுள்ள சாமானிய தொழிலாளர்களுக்கு மாற்ற இயங்கி வருகிறார்.

'நவம்பர் 17, 2022 அன்று, UAW உறுப்பினர் வில்லியம் லெஹ்மன் ஒரு புகாரைத் தாக்கல் செய்தார். அதில் UAW மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளரை பிரதிவாதிகளாகப் பெயரிட்டார்' என்று நீதிபதி லோசன் எழுதினார்.

நீதிபதி தொடர்ந்தார், 'அவரது புகாரில் தொழிற்சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு தேர்தல் பற்றிய பயனுள்ள அறிவிப்பை வழங்கத் தவறிவிட்டது என்று குற்றம் சாட்டினார். முக்கியமாக உறுப்பினர் பட்டியலைப் பராமரிக்கும் முறைகளிலும் உறுப்பினர்களுக்கு கடிதங்களை விநியோகிக்கும் முறைகளிலும் உள்ள பல குறைபாடுகள் காரணமாக, இதன் விளைவாக தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தேர்தல் அல்லது வாக்களிக்கும் உரிமை பற்றி தெரியாது' எனக் குறிப்பட்டிருந்தார்.

நீதிபதி எழுதினார், 'லெஹ்மன் தொழிற்சங்கம் அதன் உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமைகளை மீறியுள்ளது மற்றும் அதன் உயர் அதிகாரிகளின் தேர்தல்களில் 'சமமான குரல்' வேண்டும் என்று குற்றம் சாட்டுகின்றார்'. சட்டதிட்டங்கள் மற்றும் வழக்குகளை மேற்கோள் காட்டி இந்த உரிமைகளை நிலைநாட்ட ஒரு தொழிற்சங்க உறுப்பினர் ஒரு சிவில் வழக்கு கொண்டு வரலாம் என்பதை அங்கீகரித்தார்.

நீதிபதி தொடர்ந்தார்: 'தேர்தலின் காலக்கெடு குறித்து தொழிற்சங்கம் அனைத்து உறுப்பினர்களுக்கும் 'செயல்திறன் வாய்ந்த அறிவிப்பை' வழங்கத் தவறியதாலும், சரியான நேரத்தில் வாக்குச் சீட்டுக்கான அணுகலை வழங்கத் தவறியதாலும், IEB [சர்வதேச நிர்வாக வாரியம்] அதிகாரிகள் தேர்தலில் தங்கள் கருத்தைக் கூறவிருந்த தொழிற்சங்க உறுப்பினர்களின் வாக்குரிமையை விரக்தியடையச் செய்ததாக லெஹ்மன் குற்றம் சாட்டினார்.

'புகார் தாக்கல் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே,' லோசன் எழுதினார், '(1) வாக்குச் சீட்டுகள் கோரப்படும் மற்றும் பெறுவதற்கான காலக்கெடுவை 30 நாட்களுக்கு நீட்டிக்கும், மேலும் (2) தொழிற்சங்கம் தேர்தல் குறித்து அதன் உறுப்பினர்களுக்கு பயனுள்ள அறிவிப்பைத் தெரிவிக்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளுமாறு 'ஒரு உத்தரவை லெஹ்மன் கோரினார்.

லோசன் தொடர்ந்தார்: 'லெஹ்மன் உட்பட நான்கு தொழிற்சங்க உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களால் இந்த பிரேரணை ஆதரிக்கப்படுகிறது. அவர்களில் இருவர் தாங்கள் வாக்குச் சீட்டுகளைக் கோரியதாகவும் ஆனால் இன்னும் அவற்றைப் பெறவில்லை எனச் சான்றளித்தனர்.' இந்தத் தொழிலாளர்கள் 'தங்கள் சக ஊழியர்களிடையே 'தேர்தலைப் பற்றி யாருக்கும் தெரியாது' என்றும் வலியுறுத்துகின்றனர். மேலும் ஒருவர் தனது பணித் தளத்தில் 'தேர்தல் குறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லை' என்று சான்றளித்தார்'.

'இணையத்தில் கண்காணிப்பாளர்களால் பராமரிக்கப்பட்டு வரும் கணக்கின்படி, நவம்பர் 16, 2022 வரை 94,000 வாக்குகளுக்கு சற்று அதிகமாகவே வழங்கப்பட்டதாக லெஹ்மன் சுட்டிக்காட்டுகிறார். இது இதேபோன்ற குறிப்பிடத்தக்க குறைந்த வாக்குப்பதிவை பிரதிபலிக்கிறது' என்று லோசன் எழுதினார்.

'லெஹ்மன் விவகாரத்தில் புகாரை மதிப்பாய்வு செய்த பின்னர் மற்றும் தேர்தலின் போது தொழிற்சங்கத்தின் நடத்தை பற்றிய குற்றச்சாட்டுகள் மற்றும் தேர்தலை கண்காணிப்பாளரின் மேற்பார்வை பற்றிய குற்றச்சாட்டுகளை பரிசீலித்த பின்னர், அரசாங்கத்தின் கருத்து உள்ளெடுக்கப்படுவது உதவியானதாக இருக்கும் என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளது' என்று லோசன் எழுதினார். உரிமைகோரல்களின் முழுமையான தகவலறிதல் தீர்ப்பிற்கு உதவியாகவும் மற்றும் ஒருவேளை அவசியமாக இருக்கலாம்' என லோசன் எழுதினார்.

'தொழிலாளர் துறை, தொழிலாளர் மேலாண்மை தரநிலைகள் அலுவலகம் (OLMS) மூலம் தொழிலாளர் அமைச்சர், 'தொழிலாளர் சங்கங்களின் ஒருமைப்பாட்டை உறுதி செய்தல்,' மற்றும் 'தொழிற்சங்க ஜனநாயகத்தை உறுதி செய்தல்' ஆகியவற்றை முக்கிய கடமையாக கொண்டிருக்கின்றார் என்று லோசன் தொடர்ந்தார். அதனுடன் தொழிற்சங்க நிர்வாகிகளின் தேர்தல்களைக் கண்காணித்தல் மற்றும் உரிய அமலாக்க நடவடிக்கையை மேற்கொள்வதும் அடங்கும்”.

இந்த அடிப்படையில், 21 நவம்பர் 2022 திங்கட்கிழமை பணிநாள் முடிவதற்குள், வழக்கில் நேரடியாக தலையிடுவதன் மூலமாகவோ அல்லது நடுநிலையான நபரை (நீதிமன்றத்தின் நண்பர்) நியமிப்பதன் மூலமாகவோ லெஹ்மனின் வழக்குக்கு பதிலை தாக்கல் செய்யுமாறு லோசன் அரசுக்கு உத்தரவிட்டார். இந்த விரைவு காலஅட்டவணை மிகவும் குறுகியதாக உள்ளது. அதன் பதிலைத் தயாரிக்க அரசாங்கத்திற்கு ஒரே ஒரு பணிநாளை மட்டுமே திறம்பட வழங்குகிறது. வெள்ளியன்று, லோசன் UAW மற்றும் கண்காணிப்பாளருக்கு அதே அவசர காலக்கேட்டில் தங்கள் சுருக்கங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

வெள்ளிக்கிழமை நீதிபதியின் தீர்ப்புகளுக்குப் பின்னர், தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்று தெரிவிக்க அதிகமான தொழிலாளர்கள் தொடர்ந்து முன் வந்தனர். சனிக்கிழமையன்று, டெக்சாஸில் உள்ள GM ஆர்லிங்டனில் UAW உறுப்பினர் ஆண்ட்ரே ஸ்பான், லெஹ்மனுக்காக பிரச்சாரம் செய்தவர்களிடம், 'எனக்கு இன்னும் வாக்குச் சீட்டு கிடைக்கவில்லை' என்று கூறினார். அதே ஆலையில் 23 ஆண்டுகள் பணியிலுள்ள கிறிஸ்டி மேகி, நீதிபதியின் உத்தரவுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வாக்குச் சீட்டுக்கான காலக்கெடு முடிந்தாலும், தனக்கும் ஒன்று கிடைக்கவில்லை என்று கூறினார்.

'இன்றுதான் வாக்குச் சீட்டு கிடைத்தது,' என்று GM ஆர்லிங்டனில் 38 ஆண்டுகள் பணிபுரியும் ஒரு தொழிலாளியான டேவிட் ரிவர்ஸ் கூறினார். அதாவது வாக்குச்சீட்டை தபாலில் பதிவுசெய்வதற்கான காலக்கெடு முடிந்து ஒரு நாள் கழித்தை அது வந்தது. 'என் மனைவிக்கு ஒன்றும் கிடைக்கவில்லை' என்று அவர் மேலும் கூறினார்.

காலக்கெடு நீட்டிக்கப்படாவிட்டால், நவம்பர் 28 ஆம் தேதிக்குள் பெறப்பட்ட வாக்குகள் மட்டுமே நவம்பர் 29 ஆம் தேதி முதல் எண்ணப்படும்.

வெள்ளியன்று நீதிபதியின் உத்தரவானது லெஹ்மன் தனது வழக்கில் வெற்றி பெற்றதாகவோ அல்லது நீதிபதி லெஹ்மனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிப்பதையோ அர்த்தப்படுத்துவதில்லை. இந்த வழக்கில் செவ்வாய்கிழமை வாதங்கள் கேட்கப்பட்ட பின்னர், காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்பது உள்ளிட்ட வழக்கின் தகுதிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading