முன்னோக்கு

இரயில்வே வேலைநிறுத்தத்தைத் தடுப்பதற்கான பைடென் மற்றும் காங்கிரஸின் நகர்வு என்ன வெளிப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வெள்ளை மாளிகை மத்தியஸ்தம் செய்த ஓர் ஒப்பந்தத்தை நிராகரித்த இரயில்வே தொழிலாளர்களின் தெளிவான வாக்களிப்பை மீறி, அதை ஒருதலைப்பட்சமாக திணிப்பதற்கான வாஷிங்டனின் நகர்வு, தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு மிகப் பெரிய தாக்குதலாகும். இது ஒரு மூலோபாய அனுபவமாகவும் உள்ளது, தொழிலாளர்கள் இதன் படிப்பினைகளைத் கற்றுக் கொள்ள வேண்டும்.

இரயில்வே தொழிலாளர்கள் மீது தொழிலாளர்-விரோத இரயில்வே தொழிலாளர் சட்டத்தின் மூலம் திணிக்கப்பட்ட, அரசு ஆணைக்கு இணங்கிய பல மத்தியஸ்த பேச்சுவார்த்தைகள் மூன்றாண்டுகள் முடிவின்றி நடத்தப்பட்ட பின்னர், அரசாங்கமும் தொழிற்சங்க எந்திரமும் செய்த முடிவில்லா கால தாமதங்களுக்கும் மற்றும் பெயரைக் கெடுக்கும் விதமான கடுமையான முறைகேடுகளுக்கும் உள்ளான ஒரு வாக்கெடுப்பில் அந்த ஆரம்ப ஏற்பாட்டையே அமலாக்க முனைந்த பின்னர், இறுதியில் தொழிலாளர்கள் டிசம்பர் 9 இல் ஒரு தேசிய வேலைநிறுத்தத்தைத் தொடங்க இருந்தனர். சம்பளத்துடன் கூடிய விடுப்பு (தொழிலாளர்களுக்கு இப்போது இது சுத்தமாக இல்லை) மற்றும் தொழிலாளர்கள் அவர்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட அனுமதிக்கும் விதமான வேலை நேர திட்டமிடல் போன்ற இன்றியமையா அடிப்படை கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் மூர்க்கமான முதலாளிமார்களை தொழிலாளர்கள் முகங்கொடுக்கிறார்கள்.

அதற்கு வேறுவிதத்தில், பைடென் நிர்வாகமும் காங்கிரஸும் வேலைநிறுத்த நடவடிக்கையைத் தடை செய்து அந்த ஒப்பந்தத்தைத் திணிக்க வேகமாக நகர்ந்து வருகின்றன. காங்கிரஸின் தலையீட்டைக் கோர இருப்பதாக பைடென் திங்கள்கிழமை இரவு அறிவித்தார், செவ்வாய்கிழமை காலை அவர் காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தார். காங்கிரஸில் ஒரு வாக்கெடுப்பு இரண்டு கட்சிகளின் தலைமையாலும் ஆதரிக்கப்படுகின்ற நிலையில், அது அனேகமாக புதன்கிழமை காலை நடத்தப்படலாம்.

இரயில்வே தொழிலாளர்கள் அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான இந்தப் போராட்டம், மார்க்சிசத்தின் இரண்டு அடிப்படை அம்சங்களை நிரூபிக்கின்றன, இவை வர்க்கப் போராட்டக் கோட்பாட்டின் இதயதானத்தில் அமைந்துள்ளன.

முதலாவதாக, உழைப்பு மதிப்பு கோட்பாட்டின் சரியான தன்மையை இது எடுத்துக்காட்டுகிறது —அதாவது, சமூகத்தின் அனைத்து செல்வங்களுக்கும் ஆதாரம் தொழிலாள வர்க்கத்தின் உழைப்பே ஆகும், மற்றும் இலாபங்களுக்கான ஆதாரம் தொழிலாளர்கள் மீதான சுரண்டலில் இருந்து உறிஞ்சப்படும் உபரி மதிப்பாகும். இதுவே முதலாளித்துவ சமூகத்தில் பொருளாதார சுரண்டலுக்கான ஆதாரமாக உள்ளது.

இந்தாண்டு தொடக்கத்தில், பெடரல் மத்தியஸ்த வாரியத்தின் முன் நடந்த வாதங்களின் போது, இரயில்வே தொழிலாளர்களின் உழைப்பு 'அவற்றின் இலாபங்களுக்குப் பங்களிப்பு செய்யவில்லை' என்று இரயில்வே நிறுவனங்களால் ஆணவத்துடன் வாதாடப்பட்டது. ஆனால் திங்கட்கிழமை, 400 வணிகக் குழுக்கள் ஒரு வேலைநிறுத்தத்தைத் தடுக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு கடிதம் எழுதின, இரயில்வே தொழிலாளர்கள் வேலைகளை நிறுத்தினால் ஏற்படக்கூடிய பேரழிவுகரமான பொருளாதார விளைவுகளைக் குறித்து அவை எச்சரித்தன.

அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களிலும் சமூகரீதியில் மிகவும் சமத்துவமற்ற, அமெரிக்காவில், பிரபல பில்லியனர்களைச் சுற்றி தனிநபர் வழிபாட்டு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன, இவர்கள் 'வேலை உருவாக்குபவர்களாக' காட்டப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரும் சமூகரீதியில் ஒன்றுக்கும் பிரயோஜனமற்றவர்கள். இவர்கள் இல்லாமல் நாடு செயல்படும் — ஆனால் இரயில்வே தொழிலாளர்கள் இல்லாமல் நாடு செயல்பட முடியாது.

அமெரிக்காவில் மிகவும் இலாபகரமான இந்தத் தொழில்துறை சில மிகவும் மோசமான வேலையிட நிலைமைகளுக்கும் மையமாக இருப்பது தற்செயலானது இல்லை. தொடர்ச்சியான வேலை வெட்டுக்கள், கட்டாய மிகைநேர வேலைகள் மற்றும் பிற நடைமுறைகள் மூலமாக, இந்தத் தொழில்துறையைச் சொந்தம் கொண்டாடும் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் பில்லியனர்களால் இரயில்வே தொழிலாளர்களின் உழைப்பில் இருந்து பாரியளவிலான உபரி மதிப்பு உறிஞ்சப்படுகிறது. இவ்விதமான இந்த இலாபம், பங்குகளை வாங்கி விற்பதற்கும் மற்றும் பிற ஊக வணிகங்களுக்கும் மற்றும் ஒட்டுண்ணித்தனமான நடவடிக்கைக்கும் நிதியாக வழங்கப்படுகிறது.

இரண்டாவதாக, அரசின் தன்மை வர்க்க ஆட்சியின் கருவியாக இருப்பதை இது நிரூபிக்கிறது. 'நவீன அரசு நிர்வாகமானது,' 'வேறொன்றுமில்லை, ஒட்டுமொத்த முதலாளித்துவத்தின் பொது விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழு ஆகும்,' என்று 150 ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்ஸ் எழுதினார்.

அவ்விரு கட்சிகளும், தொழிலாளர்கள் நிராகரித்த ஓர் உடன்படிக்கையைத் திணிக்க உச்சபட்ச வேகத்தில் ஒன்றிணைந்து வருகின்றன. குடியரசுக் கட்சியின் பெரும்பாலானவர்கள் ட்ரம்பை அதிகாரத்தில் வைக்க ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை முயற்சித்த வாஷிங்டனில் உள்நாட்டுப் போர் சூழல் நிலவுகின்ற போதும் கூட, இது இதுவரை இருகட்சி ஒற்றுமைக்குத் தடையாக இருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

நினைவில் உள்ள சமீபத்திய காலத்தில் வேறெந்த முக்கிய சட்டமசோதாவும் இந்தளவுக்கு விரைவாக காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டிருக்காது, அனேகமாக இரண்டைத் தவிர: இந்தப் பெருந்தொற்றின் ஆரம்பக் கட்டங்களில் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை வோல் ஸ்ட்ரீட் மற்றும் மிகப் பெரும் பெருநிறுவனங்களுக்கு வாரிவழங்கிய2020 CARES பிணையெடுப்பு சட்டம், மற்றும் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான பினாமி போருக்கு நிதி வழங்குவதற்கான சட்டமசோதாக்கள். ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் குரல்வளையை நெரித்துக் கொண்டாலும் கூட, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு முக்கிய பிரச்சினைகள் என்றால் ஒன்று சேர்ந்து கொள்கிறார்கள்.

'அமெரிக்க வரலாற்றில் மிகவும் தொழிலாளர்களுக்கு நட்பான ஜனாதிபதி' என்ற பாசாங்குத்தனமான முத்திரையைத் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டுள்ள ஜனாதிபதி பைடென், இந்த ஒப்பந்தத்தைச் சுமத்த வருந்துவதாகவும், ஆனால் ஒரு வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும் 'உழைக்கும் மக்கள் குடும்பங்களை' பாதுகாக்க இது அவசியப்படுவதாகவும் குமுட்டும் அளவுக்குப் பாசாங்குத்தனமாக கூறுகிறார். ஆனால் அபாயம் என்று கூறப்படும் இதைத் தொழிலாளர்களுக்குச் சாதகமான விதிமுறைகள் ஏற்படுத்துவதன் மூலம் மிகவும் எளிதாக தீர்க்க முடியும்.

மாறாக, அந்த ஒப்பந்தத்தில் எந்த திருத்தங்களையும் பைடென் வெளிப்படையாக நிராகரித்துள்ளார். 'உழைக்கும் மக்களைப் பாதுகாக்கும்' பெயரில், பைடென் உழைக்கும் மக்கள் மீது நிர்வாக சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்துகிறார்.

பைடெனும் காங்கிரஸும் 'பொருளாதாரத்தைப்' பாதுகாப்பது பற்றி பேசும் போது உண்மையில் இலாபத்தைப் பாதுகாப்பதையே அர்த்தப்படுத்துகிறார்கள். என்ன விலை கொடுத்தாவது இவை பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு சிறிய பின்வாங்கலும் கூட தொழிலாள வர்க்கத்தில் மேற்கொண்டு எதிர்ப்பை ஊக்குவிக்கும் என்பதால், அதைச் சகித்துக் கொள்ள முடியாது.

முதலாளித்துவ அரசானது, சீர்திருத்தவாதிகள் வழக்கமாக வலியுறுத்துவது போல, சமூக மோதலில் நடுநிலையாளர் இல்லை. அது முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தும் ஒரு கருவியாகும்.

பெருநிறுவனங்களின் கட்டளைகளைச் சுமத்துவதில், பைடென் நிர்வாகம் தொழிற்சங்க எந்திரத்தின் முக்கிய சேவைகளை நம்பியுள்ளது, இரயில்வே தொழிலாளர்களுக்கு எதிரான ஜனநாயக விரோத சூழ்ச்சியில் முற்றிலும் உடந்தையாக உள்ள தொழிற்சங்க எந்திரம், ஆரம்பத்தில் இருந்தே, தொழிலாளர்களின் முன்முயற்சியைப் பலவீனப்படுத்தவும், முடிந்த வரை அதைத் தாமதப்படுத்தவும் முயன்றது. பைடென் இப்போது திணிக்க முயன்று வரும் இந்த ஒப்பந்தத்திற்கு அடித்தளமாக உள்ள ஜனாதிபதி அவசரகால ஆணையத்தை அமைக்கத் தொழிற்சங்கங்கள் தான் அழுத்தமளித்தன.

காங்கிரஸின் கரத்தைப் பலப்படுத்துவதற்காக ஒரு மோதலைத் தாமதப்படுத்தி வரும் அதேவேளையில், தொழிற்சங்க எந்திரம் ஜனநாயக நடைமுறைகளை ஏளனப்படுத்திய ஒரு வாக்கெடுப்பின் மூலம் அந்த உடன்படிக்கையைத் திணிக்க முயன்று அதில் தோல்வி அடைந்தது. வேறெதுவும் செய்ய முடியாது என்ற அடித்தளத்தில் அந்த உடன்படிக்கையை ஏற்குமாறு தொழிலாளர்களை ஒத்துக் கொள்ள வைக்க, அவர்கள் காங்கிரஸ் சபையின் தடை உத்தரவைத் தொழிலாளர்களுக்கு எதிரான ஓர் ஆயுதமாக பயன்படுத்தி அச்சுறுத்தினர்.

தொழிற்சங்க எந்திரம், நிர்வாகத்தின் ஒரு நீட்சி என்பது மட்டுமல்ல; அது முதலாளித்துவ அரசுக்கான தொழில்துறை பொலிஸ் படையாக உள்ளது.

1991 க்குப் பின்னர் ஒரு தேசிய இரயில்வே வேலைநிறுத்தத்திற்கு எதிராக இந்தச் சட்டமசோதா மூலமாக காங்கிரஸ் தலையிடுவது இதுவே முதல் முறை என்றாலும், இது வெறுமனே கடந்த கால சம்பவம் மீண்டும் நடக்கிறது என்றாகாது. இது பாரிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ் கட்டவிழ்கிறது.

காங்கிரஸ் தலையிட வேண்டுமென்ற பைடெனின் கோரிக்கையானது, அவரின் வர்க்கக் கொள்கையை மறைப்பதற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்துடன் பகிரங்கமான முன்கூட்டிய மோதல்களைத் தொழிற்சங்க அதிகாரத்துவத்தைப் பயன்படுத்தி தவிர்க்கப்பதற்குமான அவர் முயற்சிகள் முடிவுக்கு வருவதன் தொடக்கமாகும். இந்த மூலோபாயம், தொழிற்சங்க எந்திரம் மற்றும் அரசாங்கம் இரண்டையும் நோக்கிய தொழிலாளர்களின் அளப்பரிய அன்னியப்பட்ட விரோத உணர்வுக்கு எதிராக தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

சாமானியத் தொழிலாளர் அமைப்புகளை உருவாக்குவதற்கான இயக்கம் வளர்ந்து வருகிறது, இந்த அமைப்புகள் மூலமாக அவர்களின் நலன்களுக்காகத் தொழிலாளர்கள் தொழிற்சங்க எந்திரத்தில் இருந்து சுயாதீனமாக போராட முடியும். இரயில்வே தொழிலாளர்கள் மத்தியில், இது சாமானிய இரயில்வே தொழிலாளர் கமிட்டி என்ற வடிவம் எடுத்துள்ளது, இது தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்பை ஒழுங்கமைப்பதிலும் அணித்திரட்டுவதிலும் முன்னணி பாத்திரம் வகித்துள்ளது.

அதே நேரத்தில், UAW சங்க எந்திரத்தை ஒழித்து அதிகாரத்தைக் கடைநிலைக்கு மாற்றுவதற்கான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் UAW சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட வில் லெஹ்மனின் பிரச்சாரம் சாமானியத் தொழிலாளர்கள் மத்தியில் பரந்த ஆதரவைப் பெற்றுள்ளது.

ஆனால் காங்கிரஸின் தலையீடு, தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக இருப்பது மிக முக்கியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இரும்புக்கவசத்தை உடைப்பது மட்டுமல்ல, மாறாக அவர்களிடம் இருந்து அரசியல் சுயாதீனம் அடைவதும் ஆகும். முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் ஒரு கருவியாக செயல்படும் ஓர் அரசியல் அமைப்புமுறை முற்றிலுமாக தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது. தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த வரலாற்று நலன்களுக்கு ஒத்துப் போகும், அவர்களின் சொந்த அரசியல் வேலைத்திட்டம் தேவை, இது இலாப நோக்கத்தை ஒழிக்கும் இலக்கில் இருப்பதால் அதனுடன் மோதுகிறது.

அரசியல் அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுத்து, இலாபத்திற்காக அல்லாமல் சமூகத்தை மனிதத் தேவைகளுக்காக ஒழுங்கமைக்க, சோசலிச வழிகளில் அதை மறுகட்டமைக்க வேண்டியதன் அவசியத்தைத் தொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். இதுவே காங்கிரஸ் தலையீட்டின் மிகவும் அடிப்படை படிப்பினையாகும்.

Loading