சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்: இலங்கை ஆளும் உயரடுக்கு அதன் கொடூரமான சாதனையை கொண்டாடுகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை அரசாங்கம், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் சம்பந்தமாக அதிகரித்து வரும் கோபத்தின் மத்தியில், 4 பெப்ரவரி 1948 அன்று பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து நாடு உத்தியோகபூர்வமாக சுதந்திரம் பெற்றதன் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

உத்தியோகபூர்வ கொண்டாட்டத்தின் நாளில், கொழும்பு ஒரு அரண்காவலில் உள்ள நகரத்தை ஒத்திருந்தது. துப்பாக்கிகளுடன் ஆயுதபாணிகளான ஆயிரக்கணக்கான படையினர் வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்தனர். முக்கியமானதாகக் கருதப்படும் இடங்களில் தண்ணீர் பீரங்கி வாகனங்களுடன் பொலிசார் நிறுத்தப்பட்டிருந்தனர். உத்தியோகபூர்வ கொண்டாட்ட இடமான மத்திய கொழும்பில் உள்ள காலி முகத்திடலுக்கு பொதுமக்கள் நுழைவதைத் தடுக்க ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே சீல் வைக்கப்பட்டது.

பெப்ரவரி 4 அன்று கொழும்பில் நடைபெற்ற 75ஆவது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆயுதப்படைத் தலைவர்களுடன் வருகை தந்தபோது. [Photo: Sri Lanka president’s media division]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலி முகத்திடலில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் கௌரவிப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அவருக்குப் பின்னால் வெளிநாட்டு இராஜதந்திரிகள், அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில அரச அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். உத்தியோகபூர்வ நிகழ்விற்கு சாதாரண இலங்கை பிரஜைகள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. இரண்டு டசின் நிருபர்கள் மற்றும் தேசிய கீதத்தைப் பாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாடசாலை மாணவர்கள் குழு மட்டுமே கலந்துகொண்டனர்.

முந்தைய நாள் இரவு, கொழும்பில் மருதானையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த டசின் கணக்கான மக்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளால் ஆயுதபாணியாகி இருந்த கலகத் தடுப்புப் பொலிஸார் கொடூரமான முறையில் தாக்கினர். சுதந்திர தினத்தன்று, போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி (சோ.ச.க.) கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சுதந்திரத்தை' விமர்சிக்கும் ஒரு அரசியல் நிகழ்வை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

உத்தியோகபூர்வ சுதந்திர தின நடவடிக்கைகள், அதன் கொடூரமான கொள்கைகளுக்கு எதிரான உழைக்கும் மக்களின் வெகுஜன எழுச்சிக்கு அஞ்சி, விக்கிரமசிங்க அரசாங்கம் தங்கியிருக்கும் அடக்குமுறை ஆட்சியின் ஒரு தெளிவான அம்பலப்படுத்தல் ஆகும்.

கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூலையில் நடந்த, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை உள்ளடக்கிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களால் நாடு திக்குமுக்காடியது. இது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி பெறும் போராட்டங்களின் கூர்மையான வெளிப்பாடாகும். ஆர்ப்பாட்டக்காரர்கள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கோரியதோடு மட்டுமல்லாமல், '225 பேரை விரட்டவும்', அதாவது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்ய வேண்டுமென கோரியதோடு சுதந்திரத்தில் இருந்து முதலாளித்துவத்தின் '74 ஆண்டுகால சாபத்திற்கு' முடிவு கட்ட வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

28 ஏப்ரல் 2022 வியாழன், இலங்கையின் கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்சவை பதவி விலகக் கோரி நடந்த வேலைநிறுத்தம். [AP Photo/Eranga Jayawardena]

இந்த வெகுஜன இயக்கமானது முன்னிலை சோசலிசக் கட்சி போன்ற போலி-இடது குழுக்களின் ஆதரவுடன் தொழிற்சங்கங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டது. அவை, முதலாளித்துவ எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) கோரிய இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவாக வெகுஜனக் கோபத்தை திசை திருப்பிவிட்டன.

ஜூலை மாதம் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறி இராஜினாமா செய்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) ஒரே  பாராளுமன்ற உறுப்பினரான, செல்வாக்கற்ற விக்கிரமசிங்கவை, இலங்கை ஜனாதிபதியாக ஜனநாயக விரோதமாக நியமிப்பதற்கு இந்தக் காட்டிக்கொடுப்பு வழி வகுத்தது.

இலங்கை முதலாளித்துவ வர்க்கம் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார பேரழிவை எதிர்கொள்கிறது. உலகெங்கிலும் உள்ள நாடுகளைப் போலவே, இந்த நெருக்கடி கோவிட்-19 தொற்றுநோயால் ஆழமடைந்தது, பின்னர் உக்ரைனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரால் ஆழப்படுத்தப்பட்டது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையினால் விநியோகச் சங்கிலி சீர்குலைந்ததுடன் ஏற்றுமதியை கடுமையாகக் குறைத்த அதே நேரம், எண்ணெய் மற்றும் பிற இறக்குமதிகளுக்கான விலைகள் அதிகரிப்பு பணவீக்கத்தைத் தூண்டி, நாட்டின் ஏற்கனவே குறைந்த வெளிநாட்டு இருப்புக்களை காலியாக்கியது.

இராஜபக்ஷவைத் தொடர்ந்து விக்கிரமசிங்கவும் பிணை எடுப்பு கடனுக்காக சர்வதேச நாணய நிதியத்தை (IMF) நாடினார். பல்லாயிரக்கணக்கான அரச தொழில் அழிப்பு, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், வருமான வரி அதிகரிப்பு மற்றும் விலை மானியங்களில் வெட்டுக்கள் உட்பட ஆழமான சிக்கன நடவடிக்கைகளை நிபந்தனைகளாக சர்வதேச நாணய நிதியம் விதித்தது.

சர்வதேச நாணய நிதிய கொள்கைகள் உணவு, மருந்து, எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தி, பணவீக்கத்தை கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கு தள்ளியுள்ளது.

சமீபத்திய உலக வங்கி அறிக்கையின்படி, இலங்கையின் வறுமை விகிதம் கிட்டத்தட்ட 26 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2.3 மில்லியன் பிள்ளைகள் உட்பட 5.7 மில்லியன் மக்களுக்கு அவசரமாக மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக யுனிசெஃப் அறிக்கை காட்டுகிறது. உலகில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள பிள்ளைகளின் விகிதாச்சாரத்தில் இலங்கையும் ஒன்று. பத்தில் மூன்று குடும்பங்கள் அல்லது 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர்.

கடந்த டிசம்பரில் தொடங்கி, அஞ்சல், துறைமுகம், பெட்ரோலியம், வங்கி, சுகாதாரம், தொலைத்தொடர்பு மற்றும் பெருந்தோட்டங்கள் உட்பட துறைகளில், விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு புதிய அலை எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்கள் வெடித்துள்ளன.

இரண்டாம் உலகப் போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. 1947 இல் இந்தியாவிற்கும், 1948 இல் இலங்கைக்கும் சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்கள் எடுத்த முடிவு இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஏகாதிபத்திய ஒழுங்கின் ஒரு பகுதியாகும்.

அந்த நேரத்தில் நான்காம் அகிலத்தின் இந்தியப் பிரிவான இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி (BLPI) இந்த 'சுதந்திரத்தின்' உண்மையான வர்க்கத் தன்மை பற்றிய தொலைநோக்கு மார்க்சிச பகுப்பாய்வை வழங்கியது. 'சுதந்திரம்: உண்மையானதா அல்லது போலியானதா' என்ற தலைப்பில் இலங்கை பற்றிய சக்திவாய்ந்த அறிக்கையில் BLPI தலைவர் கொல்வின் ஆர். டி சில்வா பின்வருமாறு எழுதினார்:

'அவர்கள் பிரகடனப்படுத்தும் 'சுதந்திரத்தில்' 'மகிழ்வதற்கு' மக்களுக்கு ஒன்றுமில்லை... அவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் புதிய அந்தஸ்து சுதந்திரம் அல்ல. உண்மையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு இலங்கையின் அடிமைத்தனத்தின் சங்கிலிகளை மறுவடிவமைப்பதாகும். ஒடுக்கப்படுபவர்களை மற்றும் கிளர்ச்சியாளர்களை அடக்கி வைக்கும் பொறுப்பு முதல் முறையாக இலங்கையின் சொந்த முதலாளித்துவ வர்க்கத்திற்கே விடப்பட்டுள்ளது.'

இந்த போலி சுதந்திரத்தை நிராகரித்து, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் 1948ல் உத்தியோகபூர்வ கொண்டாட்டங்களை புறக்கணித்து, அதற்கு பதிலாக காலி முகத்திடலில் 50,000 தொழிலாளர்கள் கலந்து கொண்ட ஒரு பாரிய கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்.

1948 இல் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கவின் ஐ.தே.க. அரசாங்கம் அதன் முதல் நடவடிக்கையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமையை இல்லாதொழித்தது. தொழிலாள வர்க்கத்தை இன அடிப்படையில் பிளவுபடுத்தும் இந்த பிற்போக்கு அரசியல் நடவடிக்கையை பி.எல்.பீ.ஐ. எதிர்த்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஏற்பாடுகளுக்கு பி.எல்.பீ.ஐ. இன் அரசியல் அடிபணிவும் சந்தர்ப்பவாத லங்கா சமசமாஜக் கட்சியுடன் (ல.ச.ச.க.) 1950 இல் இணைந்துகொண்டமையும் ஒரு புறம் இருக்க, இலங்கையின் சுதந்திரம் சம்பந்தமான அதன் பகுப்பாய்வும் கொள்கை ரீதியான பிரபலிப்பும் பலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்து வந்த தசாப்தங்களில், ல.ச.ச.க. சிங்கள ஜனரஞ்சகவாதத்திற்கும் முதலாளித்துவ ஆட்சிக்கும் தகவமைத்துக் கொண்டது. சோசலிச சர்வதேசியவாதத்தை கைவிட்டு, 1964ல் சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அரசாங்கத்தில் இணைந்தபோது, இந்த கீழ்நோக்கியச் சரிவு இறுதியில் ல.ச.ச.க.யின் மாபெரும் காட்டிக்கொடுப்புக்கு வழிவகுத்தது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து மைக்கேல் பப்லோ மற்றும் எர்னஸ்ட் மண்டேல் தலைமையில் நான்காம் அகிலத்தில் தலைதூக்கி 1953ல் ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து பிரிந்து போன ஒரு சந்தர்ப்பவாதப் பிரிவான பப்லோவாத திருத்தல்வாத போக்கு ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்புக்கு உதவியது.

ல.ச.ச.க. பண்டாரநாயக்க அரசாங்கத்திற்குள் நுழைந்ததன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கத்தை நசுக்கியதுடன் முதலாளித்துவ உயரடுக்கின் சிங்கள மேலாதிக்க சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டது. 1972 இல், ஸ்ரீ.ல.சு.க.-ல.ச.ச.க. கூட்டணி அரசாங்கம், ஸ்டாலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன், பௌத்த மதத்தை நாட்டின் முதன்மை மதமாகவும், சிங்களத்தை ஆட்சி மொழியாகவும் ஆக்கி புதிய அரசியலமைப்பை திணித்தது.

ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்பானது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை உருவாக்கியது. இந்த குழப்பத்தை மாவோயிசம், காஸ்ட்ரோயிசம் மற்றும் சிங்கள தேசபக்தி ஆகியவற்றின் கலவையை அடிப்படையாகக் கொண்டு அந்த வருடங்களில் தலைதூக்கிய ஜே.வி.பி. சுரண்டிக்கொண்டது. வடக்கில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளும் ஏனைய ஆயுதக் குழுக்களும் தோன்றின.

இந்த அடக்குமுறைக் கூட்டரசாங்கம் வலதுசாரி ஐ.தே.க. அதிக பாராளுமன்ற பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வர வழி வகுத்தது. அதன் தலைவரான ஜே.ஆர். ஜயவர்தன, ஒரு எதேச்சதிகார நிறைவேற்று ஜனாதிபதி அரசியலமைப்பை திணிக்கவும் திறந்த சந்தை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தவும், நலன்புரி திட்டங்களை வெட்டவும் மற்றும் ஏராளமான அரச நிறுவனங்களின் தனியார்மயமாக்கலைத் தொடங்கவும் இதைப் பயன்படுத்தினார். 1980ல், அரச ஊழியர்கள் இந்தத் தாக்குதல்களை எதிர்த்து ஒரு பொது வேலைநிறுத்தத்தைத் தொடங்கிய போதிலும், அது அரசாங்கத்தால் நசுக்கப்பட்டது. தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பைப் சுரண்டிக்கொண்ட அரசாங்கம் சுமார் 100,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்தது.

1983 இல், ஒரு திட்டமிட்ட தமிழர்-விரோத பிரச்சாரத்திற்குப் பிறகு, ஜயவர்த்தன அரசாங்கம் புலிகளுக்கு எதிரான போரைத் தூண்டியது. மறுபக்கம் அது தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தவும் பலவீனப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது.

ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு இலங்கை முதலாளித்துவ அரசாங்கமும், 2009 மே மாதம் முடிவடைந்த இரத்தக்களரி 26 ஆண்டுகால யுத்தத்தின் போது, தொழிலாள வர்க்கப் போராட்டங்களை நசுக்குவதற்கு இந்த மோதலைப் பயன்படுத்தியது. போரின் போது ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்ததுடன் பலர் ஊனமுற்றனர். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு போரினால் அழிந்தது. போரை முன்னெடுப்பதற்கு கொழும்பு பெற்ற பாரிய வெளிநாட்டுக் கடன்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மற்றொரு முக்கிய காரணியாகும்.

இந்த மோதலின் போது ஒவ்வொரு கொழும்பு அரசாங்கமும் அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகளுடனும் இந்தியாவுடனும் நெருக்கமாக செயற்பட்டன. அனைத்து தமிழ் முதலாளித்துவக் கட்சிகளைப் போலவே, புலிகளும் 'சர்வதேச சமூகத்திடம்’’, அதாவது ஏகாதிபத்திய சக்திகளிடம், அதன் பிரிவினைவாத நோக்கத்தை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஜே.வி.பி. உட்பட இலங்கையின் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளும் இந்தப் போரை ஆதரித்தன.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த ஐ.ம.ச.யின் தலைவர் சஜித் பிரேமதாச, உத்தியோகபூர்வ சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கவில்லை. இது, விக்கிரமசிங்க மற்றும் அவரது அரசாங்கத்தில் இருந்து அரசியல் ரீதியாக தன்னை தூர விலக்கி நிற்கும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியாகும். எவ்வாறாயினும், 'அனைத்து இலங்கையர்களுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாக,' அனைவரும் ஒன்றுபட்டு நிற்குமாறு அழைப்பு விடுத்து, அவர், தேசியவாத ட்வீட் ஒன்றை வெளியிட்டார்.

ஜே.வி.பி. சுதந்திர தினத்தன்று தனி அறிக்கை எதையும் வெளியிடவுமில்லை பொலிஸ் அணிதிரட்டலை விமர்சிக்கவுமில்லை, மாறாக நிகழ்வுக்கு அதிக பணம் செலவழித்ததற்காக விக்கிரமசிங்கவை கண்டித்தது.

விக்கிரமசிங்க அரசாங்கம் மற்றும் அதன் சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்துடன் ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.க்கு அடிப்படை வேறுபாடுகள் எதுவும் கிடையாது. இரு கட்சிகளுமே அதிகரித்து வரும் அரசாங்க விரோத வெகுஜன போராட்டங்களைப் பற்றி கவலை கொண்டுள்ள போதிலும், தாம் ஆட்சிக்கு வந்தால் அதே சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவோம் என்று சுட்டிக்காட்டியுள்ளன.

கொண்டாடுவதற்கு சுதந்திரம் இல்லை என்று அறிவித்த போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.), நாடு முழுவதும் மக்கள் மன்றங்களை அமைக்கப் பிரச்சாரம் செய்கிறது. இது, எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் மக்களுக்குச் சேவை செய்ய அழுத்தம் கொடுக்கும் என்று அது கூறுகிறது. இது மக்களை பாராளுமன்ற கட்டமைப்பிற்குள் சிக்க வைத்து முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கத்தின் வளர்ச்சியை தடுக்கும் ஒரு அப்பட்டமான சூழ்ச்சியாகும்.

8 டிசம்பர் 2022 அன்று கொழும்பில் தனியார்மயமாக்கலுக்கு எதிராக ஸ்ரீலங்கா டெலிகொம் ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்திற்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்கு விருப்பமும் திறனும் கொண்ட ஒரே கட்சியாகும். அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.), நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவாக 1968 இல் ஸ்தாபிக்கப்பட்டது. ல.ச.ச.க.யின் காட்டிக்கொடுப்புக்கு எதிராகவும் அந்த காட்டிக்கொடுப்பின் தோற்றுவாய் பப்லோவாத சந்தர்ப்பவாதமே என்ற புரிதலின் அடிப்படையிலுமே பு.க.க. உருவாக்கப்பட்டது.

லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில், முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தைப் பாதுகாக்க பு.க.க. தொடர்ந்து போராடியது. நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு விளக்குவது போல், முதலாளித்துவ வளர்ச்சி தாமதமான நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக மற்றும் சோசலிச அபிலாஷைகளைத் தீர்க்க இலாயக்கற்றது. இலங்கையில் மீண்டும் மீண்டும் நிரூபணமாகிவருவது இதுவே ஆகும்.

அரசாங்கத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதற்கும், தங்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்கும், முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, வேலைத் தளங்கள், அயல் பிரதேசங்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புமாறு தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது.

முதலாளித்துவ முறைமைக்குள் வெகுஜனங்களின் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது. வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொழிலாளர்களே கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து வெளிநாட்டு கடன்களையும் நிராகரிப்பதன் மூலமும், வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந் தோட்டங்களை தேசியமயமாக்குவதன் மூலமும், அவற்றை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதன் மூலமும் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

இந்த வேலைத்திட்டத்திற்காகப் போராட, இந்த நடவடிக்கை குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டை கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது. இலங்கை, தெற்காசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒரு பாகமாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடுவதற்கு, கிராமப்புற ஏழைகளின் ஆதரவுடன் தொழிலாள வர்க்கத்தின் அத்தகைய அதிகார மையத்தை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானது.

சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை நமது முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தைப் படிக்குமாறும், சோசலிச எதிர்காலத்திற்காகப் போராட அதில் சேருமாறும் வலியுறுத்துகிறது.

உண்மையான சுதந்திரமா அல்லது போலிச் சுதந்திரமா?

இலங்கைப் பாராளுமன்றம் கொடூரமான “புனர்வாழ்வு” சட்டத்தை நிறைவேற்றியது

இலங்கை சோ.ச.க. உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகிறது

Loading