முன்னோக்கு

பாரிய வேலைநிறுத்த இயக்கமும், ஐரோப்பாவில் போரும் புரட்சிகர நெருக்கடியும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஐரோப்பிய கண்டத்தின் அனைத்து இடங்களிலும் இருந்தும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களை உள்ளீர்த்து, ஐரோப்பாவில் ஒரு பாரிய வேலைநிறுத்த இயக்கம் வெடித்துள்ளது. என்ன கட்டவிழ்ந்து வருகிறது என்றால், ஏதோவொரு முதலாளித்துவ அரசாங்கத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படக்கூடிய வகையில், தொடர்ச்சியான பல தேசிய தொழிற்சங்கப் போராட்டங்கள் அல்ல. மாறாக, ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாளர்கள் இதே போன்ற கோரிக்கைகளை எழுப்பி வருவதோடு, மதிப்பிழந்த மற்றும் பரவலாக வெறுக்கப்படும் அரசாங்கங்களின் பொலிஸ் ஒடுக்குமுறை மற்றும் சட்ட அச்சுறுத்தல்களைச் சந்திக்கின்றனர் என்பதால், இதுவொரு சர்வதேச அரசியல் போராட்டமாகும்.

பெருந்திரளான மக்களிடையே அதிகரித்து வரும் கோரிக்கைகளுக்கு எந்த விட்டுக்கொடுப்புகளும் வழங்க முடியாது என்று அவர்கள் அறிவிக்கின்ற அதேவேளையில், பழமைவாத கட்சி, சமூக-ஜனநாயகக் கட்சி அல்லது பசுமை கட்சி என ஐரோப்பாவின் அனைத்து நிற அரசாங்கங்களும், உக்ரேனில் ரஷ்யாவுடனான நேட்டோ போரைப் பொறுப்பற்ற முறையில் தீவிரப்படுத்தி வருகின்றன. அவை தங்கள் இராணுவத்திற்காக நூறு பில்லியன் கணக்கான யூரோக்கள் மற்றும் பவுண்டுகளை செலவிட்டு வருவதுடன், டாங்கிகள், ஜெட் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுதங்களைக் கொடுத்து உக்ரேனிய ஆட்சியை முழுமையாக ஆயுதமயப்படுத்தி வருகின்றன. அவை மூன்றாம் உலகப் போர் வெடிப்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கான விலை அந்தந்த நாட்டின் தொழிலாள வர்க்கங்கள் மீது சுமத்தப்படும்.

செவ்வாய்கிழமை, பெப்ரவரி 7, 2023 இல் கிழக்கு பிரான்சின் ஸ்ராஸ்பேர்க்கில் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான ஓர் அணிவகுப்பில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் [AP Photo/Jean Francois Badias]

துருக்கிய-சிரிய எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்க பேரிடருக்கு அவர்கள் காட்டிய விடையிறுப்பு, அவர்களின் குற்றகரமான தன்மையைப் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. மில்லியன் கணக்கானவர்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டு, பத்தாயிரக் கணக்கானவர்கள் உயிரிழக்க நேரிட்டுள்ள இந்த சமூக பேரழிவுக்கு மத்தியில், ஐரோப்பிய சக்திகள், வாஷிங்டனுடன் சேர்ந்து, ஏற்கனவே நேட்டோவின் 12 ஆண்டு கால ஆட்சி மாற்ற போரால் பேரழிவுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு நாடான, சிரியா மீது முடங்கும் விதமான பொருளாதாரத் தடைகளைப் தொடர்ந்தும் பேணுகின்றன.

ஐரோப்பா முழுவதிலும் புறநிலைரீதியாக ஒரு புரட்சிகரமான சூழ்நிலை உருவெடுத்து வருகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் முதலாம் உலகப் போர் வெடித்த போது இருந்ததைப் போலவே, மாற்றீடுகள் அப்பட்டமாக வெளிவருகின்றன. ஒன்று, முதலாளித்துவ வர்க்கம் ஐரோப்பாவையும் உலகையும் அணுஆயுதமேந்திய அரசுகளுக்கு இடையிலான ஓர் உலகளாவிய போருக்குள் மூழ்கடிக்கும், அல்லது தொழிலாள வர்க்கம் போர்வெறி கொண்ட ஆளும் உயரடுக்குகளின் கரங்களில் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.

முதலாம் உலகப் போரில், தொழிலாள வர்க்கம் போருக்கு எதிராக அதன் முதல் மிகப்பெரிய அரசியல் எதிர்த்தாக்குதலைத் தொடுக்க ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஆனது. ரஷ்யாவில் 1917 பெப்ரவரி புரட்சி ஜார் ஆட்சியைக் கவிழ்த்தமை, அக்டோபர் 1917 புரட்சியில் விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் கீழ் போல்ஷிவிக் கட்சியின் தலைமையில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு வர வழிவகுத்தது. ஆனால் இன்று, முதலாளித்துவம் மனிதகுலத்தை மூன்றாம் உலகப் போருக்குள் இழுக்க முயன்று வரும் நிலையில், தொழிலாள வர்க்கம் சக்தி வாய்ந்த போராட்டங்களின் ஓர் அலையைத் தொடங்கி உள்ளது.

மில்லியன் கணக்கானவர்களைப் போராட்டத்திற்குள் நகர்த்தி வரும் உணர்வுகள், அதன் தொடக்க நிலையில் முதலாளித்துவ எதிர்ப்பு, இராணுவவாத எதிர்ப்பு மற்றும் சோசலிச தன்மையைக் கொண்டுள்ளன. பல தசாப்தங்களாக வழங்கப்பட்ட அரசு பிணையெடுப்புகள் ட்ரில்லியன் கணக்கான யூரோக்கள் மற்றும் பவுண்டுகளைப் பெரும் பணக்காரர்களிடம் ஒப்படைத்த நிலையில், தொழிலாளர்கள் முக்கிய சமூகச் சேவைகள் மற்றும் ஓய்வூதியங்களை ஒழிக்க முயலும் சிக்கன நடவடிக்கைகளையும், அல்லது ஓர் உலகளாவிய பணவீக்க அதிகரிப்புக்கு மத்தியில் நிஜமான கூலிகளைக் குறைக்கும் ஒப்பந்தங்களைக் கோபத்துடன் நிராகரிக்கின்றனர். ரஷ்யாவுடனான முற்றுமுதலான போருக்குள் பாரியளவிலான சமூக செல்வ வளத்தைத் திசைதிருப்புவதற்காக, அவர்கள் வறுமையை ஏற்க தயாராக இல்லை.

பிரான்சில், ஓய்வூதிய வயதை உயர்த்துவதன் மூலம் ஓய்வூதியத்தில் இருந்து பத்து பில்லியன் கணக்கான யூரோக்களை குறைக்கும் மக்ரோனின் திட்டத்திற்கு எதிராக 3 மில்லியன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இராணுவ செலவினங்களில் 40 சதவீத அதிகரிப்பு மற்றும் ரஷ்யாவுடனான போருக்காக உக்ரேனுக்கு டாங்கிகளை அனுப்புவதாக மக்ரோன் அறிவித்ததும் இந்த எதிர்ப்பு அதிகரித்தது. மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு 70 சதவீத எதிர்ப்பு இருப்பதையும், பொருளாதாரத்தை முடக்கி வெட்டுக்களை நிறுத்தும் விதமான ஒரு சமூக வெடிப்புக்கு — அதாவது, நடைமுறையளவில் மக்ரோனுக்கு எதிரான ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு — 60 சதவீத ஆதரவு இருப்பதையும் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

பிரிட்டனில், இரயில்வே, தபால்துறை, தொலைத்தொடர்புத்துறை தொழிலாளர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பொதுப்பணித்துறை தொழிலாளர்கள் இப்போது ஏழு மாதங்களாக நீடித்து வரும் ஒரு வேலைநிறுத்தத்தில் சேர்ந்துள்ள நிலையில், மில்லியன் கணக்கானவர்களை இது சூழ்ந்து வருகிறது. முக்கிய தொழில்துறைகள் மற்றும் சேவை துறைகளின் வேலைநிறுத்தங்களைக் குற்றகரமாக்குவதற்கான அரசாங்க திட்டங்களுக்கு முன்னால், தொழிற்சங்க அதிகாரத்துவமும் வேலைநிறுத்தங்களைக் கைவிடுமாறு அழைப்பு விடுக்க தொடர்ந்து முயற்சி செய்வதற்கும் மத்தியிலும் வேலைநிறுத்தங்கள் தொடர்கின்றன.

துருக்கியில், வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக 100இக்கும் அதிகமான தன்னிச்சையான திடீர் வேலைநிறுத்தங்களும் மற்றும் மருத்துவத்துறை தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தங்களும் கடந்தாண்டு நடந்துள்ளன. அங்கே பெருந்திரளான உழைக்கும் மக்களிடையே சமூகக் கோபம் ஒரு புரட்சிகர வெடிப்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 13 மில்லியன் மக்கள் வசிக்கும் 10 நகரங்களில் ஏற்கனவே 20,000 உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலநடுக்கம், நீண்ட காலத்திற்கு முன்னரே முன்கணிப்பட்டிருந்தும் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதோடு, பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் தலைவிதிப்படி நடக்கட்டும் என பெரிதும் கைவிடப்பட்டுள்ளார்கள் என்ற உண்மை, அந்நாடெங்கிலும் பாரிய கோபத்திற்கு எரியூட்டி வருகிறது.

ரஷ்ய எரிபொருள் ஏற்றுமதிகள் ஐரோப்பாவுக்கு வெட்டப்பட்டதால் சூழப்பட்டு, ஜேர்மனியில், நிஜமான கூலிகள் மீது பணவீக்கத்தின் அழிவார்ந்த பாதிப்புக்கு எதிராக வேலைநிறுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இரண்டரை மில்லியன் ஆசிரியர்கள், தபால்துறை தொழிலாளர்கள், மருத்துவமனை மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள், போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் மற்றும் பிற பொதுத்துறை பணியாளர்கள், பெரும் சம்பள வெட்டுக்களை உள்ளடக்கிய ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் 'அடையாள வேலைநிறுத்தங்களில்' ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவுடனான போருக்காக ஜேர்மனியை முழுமையாக மீளஇராணுவமயப்படுத்தும் அரசியல் ஸ்தாபகத்தின் திட்டத்திற்கு அங்கே பெருந்திரளான மக்கள் எதிர்ப்பு உள்ளது.

'தொழில்துறை நடவடிக்கை ஐரோப்பாவின் பொருளாதாரங்களை இறுக்கி வருகிறது' என்பதால் 'முடக்கத்திற்கு' (mayhem) எதிராக பிரிட்டனின் வலதுசாரி பத்திரிகை Daily Mail சீறி வரும் நிலையில், ஐரோப்பா முழுவதும் இதே வடிவம் மீண்டும் மீண்டும் பின்பற்றப்படுகிறது. இத்தாலியில், விமானச் சேவைத் தொழிலாளர்கள் மற்றும் விமான நிலைய தொழிலாளர்கள், இரயில்வே தொழிலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் உள்ளூர் போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த மாதம் தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். ஸ்பெயினில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், விமானச் சேவை தொழிலாளர்கள், மருத்துவத் துறை தொழிலாளர்கள், அமேசன் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போர்த்துக்கலில், இரயில்வே தொழிலாளர்கள், மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நடவடிக்கை உட்பட, வேலைநிறுத்தங்கள் பத்து ஆண்டுகளில் உச்சத்தில் உள்ளன.

கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்கு ஐரோப்பிய அரசாங்கங்கள் எந்தவித விஞ்ஞானப்பூர்வ கொள்கையையும் நிராகரித்ததால் ஏற்பட்ட நோய் மற்றும் மரணத்தின் சுமையால் பாதிக்கப்பட்ட, மருத்துவத் துறை, கல்வித்துறை மற்றும் போக்குவரத்துத்துறை தொழிலாளர்களால் ஒவ்வொரு நாட்டிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதே குறிப்பிடத்தக்க முக்கியத்துவமாக உள்ளது.

பெருந்திரளான மக்களின் அதிகரித்து வரும் கோரிக்கைகளால் ஆளும் வர்க்கத்தில் ஏற்பட்டுள்ள பீதியும் அச்சமும், ரஷ்யாவுடனான அதன் போரை விரிவாக்குவதற்குப் பின்னால் உள்ள ஒரு முக்கிய உந்துசக்தியாகும். அது முற்றிலும் நிதானம் இழந்து, போரை விரிவாக்குவதானது குறைந்தபட்சம் தற்காலிகமாவது வர்க்க போராட்டத்தின் அதிகரிப்பைக் ஒடுக்க அனுமதிக்கும் என்ற அவநம்பிக்கையான மற்றும் பொறுப்பற்ற சூதாட்டத்தில் இறங்கி வருகிறது.

அதற்கு நேர்மாறாக, போருக்கான எதிர்ப்பானது சமூக மற்றும் அரசியல் போராட்டங்களில் ஒரு தீர்க்கமான காரணியாகவும், முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே ஒரு பகிரங்கமான அரசியல் மோதலாகவும் மாறி வருகிறது. இந்த மாதம் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில், இராணுவச் செலவின அதிகரிப்புகளுக்கு நிதியுதவி வழங்க ஒரு பொது விடுமுறையை நீக்குவதற்கான திட்டங்களுக்கு எதிராக, ஒரு மதிப்பீட்டின்படி 50,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐரோப்பா முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்கள், பொது சுகாதாரம் மற்றும் ஓய்வூதியங்கள் போன்ற சமூக சேவைகள் மற்றும் கூலிகளுக்கு பணம் இல்லை ஆனால் முடிவின்றி போர் வரவுசெலவு திட்டம் அதிகரிக்கப்படுவதாக மீண்டும் மீண்டும் குறை கூறுகிறார்கள்.

முதலாம் உலகப் போரின் முதலாண்டில், அப்போது வெளிப்படையாக அரசியல்ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டு சுவிட்சர்லாந்திற்கு நாடுகடத்தப்பட்டிருந்த போல்ஷிவிக் கட்சி தலைவர் விளாடிமிர் லெனின், உலகப் போர் வெடிப்பானது உலக சோசலிசப் புரட்சிக்கான புறநிலை நிலைமைகளையும் உருவாக்கி இருந்ததை வலியுறுத்தினார். உலகப் போரை ஆதரித்த மற்றும் புரட்சிக்கான சாத்தியக்கூறை மறுத்த ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகளை அவர் சமரசமின்றி எதிர்த்தார். லெனின் ஒரு புரட்சிகர சூழ்நிலையைப் பின்வருமாறு குணாம்சப்படுத்தினார்:

பின்வரும் மூன்று முக்கிய அறிகுறிகள்: (1) ஆளும் வர்க்கங்கள் எந்த மாற்றமும் இன்றி தங்கள் ஆட்சியைத் தக்கவைக்க முடியாத நிலையில் …; (2) ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் துன்பமும் தேவையும் வழக்கத்தை விட அதிகமாக வளர்ந்திருக்கும் போது; (3) மேற்கூறிய காரணங்களின் விளைவாக, பெருந்திரளான மக்களின் சுயாதீனமான வரலாற்று நடவடிக்கையில் இறங்குவதில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், லெனினின் இந்தப் பகுப்பாய்வு, ஐரோப்பாவில் நடந்து வரும் இந்த நெருக்கடியின் புறநிலையான புரட்சிகர தன்மையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டு, 1991 இல் சோவியத் ஒன்றியம் அவற்றால் கலைக்கப்பட்ட பின்னர், ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் அப்போது ஆட்சி செய்ததைப் போலவே, இனி அந்த பழைய வழியில் ஆட்சி செய்ய முடியாதிருந்தது.

1991 இக்குப் பின்னர் இருந்து, அது ஈராக், யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, மாலி மற்றும் அதற்கு அப்பாலும் வெளிநாடுகளில் நேட்டோ போர்களை நடத்தியதுடன், உள்நாட்டில் இடைவிடாத சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனியை சோவியத் தோற்கடித்த காலக்கட்டத்தில் அது ஏற்றுக் கொண்ட சீர்திருத்தவாத வேஷத்தை அது முற்றிலுமாக கைவிட்டு, இன்று அது வெளிப்படையாகவே பாசிசக் கட்சிகள் மற்றும் பொலிஸ்-அரசு ஆட்சி வடிவங்களை ஊக்குவிக்கிறது. ஒரு கொடூர ஒட்டுண்ணித்தனமான நிதியியல் பிரபுத்துவமாக உள்ள அதன் செல்வவளம், வெளிநாடுகளில் இடைவிடாத இராணுவ விரிவாக்கத்தையும், உள்நாட்டில் சமூக வெட்டுக்கள் மற்றும் வங்கி பிணையெடுப்புகள் மூலம் மக்கள் பணத்தைக் கையளிப்பதால் முடுக்கி விடப்படும் ஊக பங்குச்சந்தை வெறித்தனங்களையும் சார்ந்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று உலக வரலாற்றில் ஒரு தூண்டுதல் நிகழ்வாக இருந்தது. அது பல தசாப்தங்களாக வளர்ந்து வந்த வர்க்க மோதல்களைத் தீவிரத்தன்மையில் பண்புரீதியாக ஒரு புதிய உச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஆளும் உயரடுக்கின் காகிதச் செல்வம் பெருமளவில் ஒரு புதிய சுற்று வங்கிப் பிணையெடுப்புகளால் ஊதிப் பெரிதாக்கப்பட்டது, ஆனால் வெகுஜனங்களின் மரணம் மற்றும் துயரங்களுக்கு அது காட்டிய உதாசீனமான அலட்சியத்தால் அது மதிப்பை இழந்தது. கூர்மையாக வலதை நோக்கி திரும்பியும், தற்கொலைக்கு நிகராக ரஷ்யா உடனான போரைத் தூண்டியும், உள்நாட்டில் போராட்டங்கள் மீதான இராணுவ-பொலிஸ் ஒடுக்குமுறையை அதிகரித்தும் அது விடையிறுத்தது. 

தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்தவரை, துயரம் மற்றும் தேவையின் கடுமையான தீவிரப்பாட்டையே இந்தப் பெருந்தொற்று குறித்தது. ஐரோப்பாவில் கோவிட்-19 ஆல் இரண்டு மில்லியன் பேர் இறந்தனர், அதேவேளையில் பாரிய புதிய வங்கி பிணையெடுப்புகளில் இருந்து பணம் திடீரென செலுத்தப்பட்டதால் ஒரு பணவீக்க சுழற்சியைத் தூண்டியது. தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் இடையிலான விட்டுக்கொடுப்பு ஒப்பந்தங்கள் மற்றும் 'சமூக பேச்சுவார்த்தை'க்கு எதிராக ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கம் தொடங்கியுள்ள போராட்டங்களின் இந்த சர்வதேச அலையானது, சுயாதீனமான வரலாற்று நடவடிக்கைக்குள் அது நுழைவதைக் குறிக்கிறது.

எழுச்சி அடைந்து வரும் உலகளாவிய வர்க்க போராட்ட வெடிப்பின் ஒரு முன்னேறிய வெளிப்பாடாக உள்ள இந்தக் கண்டம் தழுவிய தொழிலாள வர்க்கத்தின் வேலைநிறுத்த இயக்கத்திற்கு வெடிப்பார்ந்த சமூகக் கோபம் எரியூட்டி வருகிறது. முதலாளிகளுக்கு எதிராக அல்லது தேசிய அரசாங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் இந்தப் போராட்டங்கள் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு புறநிலைரீதியான ஒருங்கிணைந்த சர்வதேச தாக்குதலின் பாகமாக உள்ளன என்ற நனவைத் தொழிலாள வர்க்கத்தில் அபிவிருத்தி செய்வதே தீர்க்கமான கேள்வியாகும்.

இன்றைய உலகளாவிய ஒருங்கிணைக்கப்பட்ட பெருந்திரளான சமூகத்தின் செல்வத்தை உருவாக்கும் உழைக்கும் மக்களுக்கு, இந்த செல்வம் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை உண்டு. அத்தியாவசிய சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், எப்போதும் விரிவாக்கப்பட்டு வரும் போரை நிறுத்தவும், பொருளாதாரம் மீதான நிதிய பிரபுத்துவத்தின் கட்டளைகளை உழைக்கும் மக்கள் தகர்க்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் முன்னேறிய அடுக்குகளிடையே இத்தகைய ஒரு புரிதலை அபிவிருத்தி செய்வது ஏகாதிபத்திய போர் மற்றும் சோசலிசத்திற்கான போரில் இத்தகைய போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதற்கான அடித்தளத்தை அமைக்கும்.

போரை நிறுத்துவதற்கும் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், வேலையிடங்கள் மற்றும் பள்ளிகளில், தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து சுயாதீனமாக, சக்தி வாய்ந்த சர்வதேச சாமானிய தொழிலாளர் போராட்ட அமைப்புகளைக் கட்டியெழுப்புவது அவசியமாகும். தொழிற்சங்க அதிகாரத்துவம், முதலாளிகள் மற்றும் முதலாளித்துவ அரசுடனான அதன் கொடுக்கல் வாங்கல்களுக்காகவும், ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் போர் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கும் தொழிலாளர்களை அடிபணிய செய்ய இயங்குகின்றது என்ற உண்மையை வெடிக்கும் ஒவ்வொரு வேலைநிறுத்தமும் உறுதிப்படுத்துகிறது. இந்தப் புதிய போராட்ட அமைப்புகள் மூலமாக மட்டுமே, வங்கிகளின் சிக்கன நடவடிக்கை கோரிக்கைகளுக்கு எதிராகவும் ரஷ்ய மீதான நேட்டோ போருக்கு எதிராகவும் சர்வதேசரீதியில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த முடியும்.

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தின் ஓர் இன்றியமையா கூறுபாடாக சாமானிய தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியைக் (IWA-RFC) கட்டியெழுப்ப அழைப்பு விடுப்பதுடன், அதற்காக போராடியும் வருகிறது. இந்த வர்க்கப் போராட்டம் ஐரோப்பா முழுவதும் பொது வேலைநிறுத்தங்கள் வெடிப்பதை நோக்கிப் பரிணமித்து வருவதால், இந்த முன்முயற்சி எடுக்கப்பட்டதன் பொருத்தமான நேரம் முன்பினும் அதிகமாக தெளிவாகிறது.

தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் எதிர்கொண்டு வரும் மகத்தான அரசியல் பணிகள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை (ICFI) அதன் சர்வதேச அரசியல் தலைமையாகக் கட்டியெழுப்புவதை இன்றைய இன்றியமையாத பணியாக்குகிறது.

மிகப் பெரிய பொது வேலைநிறுத்தம் கூட, முதலாளித்துவம் மூன்றாம் உலகப் போரில் மூழ்குவதையும், அதன் இடைவிடாத சமூகத் தாக்குதல்களையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான அடக்குமுறையையும் தடுத்து நிறுத்தாது. அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்து சக்திகளும் தொழிலாள வர்க்கத்தை உறுதியான எதிரிகளாக எதிர்கொள்கின்றன என்ற ஒரு புரிதலுடன் தொழிலாள வர்க்கம் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும். இன்னும் அதிகமான இடதுசாரி முதலாளித்துவ அரசாங்கங்களைத் தேர்ந்தெடுக்க முயல்வதன் மூலம் இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியாது. மாறாக ஐரோப்பா எங்கிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களின் அதிகாரம் மற்றும் சோசலிசத்தை ஸ்தாபிக்கும் வகையில் அதன் போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் கட்டியெழுப்பிய அமைப்புகளுக்கு அதிகாரத்தைக் கைமாற்றுவதற்காகப் போராடுவதன் மூலமாகவே இதைத் தீர்க்க முடியும். 

ஜேர்மனியில் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் பிரிட்டனில் தொழிற்கட்சி போன்ற முன்னாள் சீர்திருத்தவாதக் கட்சிகள், ஆட்சியில் இருந்தாலும் சரி அல்லது எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அவை சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போருக்கான வெறித்தனமான கட்சிகளாகவே உள்ளன.  ஸ்ராலினிசத்தின் 'தனியொரு நாட்டில் சோசலிசம்' என்ற தத்துவ ஆதரவாளர்களின் போலி-இடது அரசியல் வழிதோன்றல்களோ அல்லது ட்ரொட்ஸ்கிசத்தை விட்டு ஓடிய குட்டி-முதலாளித்துவ ஓடுகாலிகளோ கூட ஒரு மாற்றீட்டைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.

ஜேர்மனியில் இடதுகட்சி (Die Linke), பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) மற்றும் ஜோன் லூக் மெலோன்சோன், ஸ்பெயினில் பொடொமோஸ், மற்றும் சிரிசா ('தீவிர இடதுசாரிகளின் கூட்டணி') போன்ற செல்வச் செழிப்பான நடுத்தர வர்க்க சக்திகளின் பிரிவுகள் அதன் முன்வரலாற்றால் அம்பலப்பட்டுள்ளன. கிரீஸில் அதிகாரத்தில் உள்ள சிரிசா, சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் அதன் சூளுரைகளைக் கைவிட்டது, அதற்கு மாறாக அது ஓய்வூதியங்கள் மற்றும் சமூகச் செலவினங்களைக் குறைத்து வருவதுடன், அகதிகளுக்கு வதை முகாம்களைக் கட்டியெழுப்பி வருகிறது. இன்று அதிகாரத்தில் உள்ள பொடெமோஸ் (Podemos) உக்ரேனிய நவ-நாஜி அசோவ் பட்டாலியனுக்கு ஆயுதங்கள் வழங்கி வருவதுடன், வங்கிகளைப் பிணையெடுத்து வருகிறது, வேலைநிறுத்தம் செய்யும் கனரக வாகன ஓட்டுனர்கள் மற்றும் உலோகத்துறை தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்த கலகம் அடக்கும் பொலிஸை அனுப்புகிறது.

பிரிட்டனின் தொழிற்கட்சியின் தலைமையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜெர்மி கோர்பினும் அவரது போலி-இடது ஆதரவாளர்களும், அக்கட்சியின் வலதுசாரிக்கு எதிராக எந்த போராட்டமும் நடத்த மறுத்துள்ளதுடன், தமது தலைமையை அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்த எதிர்ப்பாளரும் வெறித்தனமான போர்வெறியர் கெய்ர் ஸ்டார்மரிடம் கட்சியை திரும்ப ஒப்படைத்து விட்டனர். மெலோன்சொன் மற்றும் இடதுகட்சி போன்ற சக்திகள் தேர்தல்களில் மில்லியன் கணக்கான வாக்குகளை வென்றுள்ளனர் என்றாலும், போருக்கு எதிரான வெகுஜன உணர்வை அணித்திரட்ட எந்த முறையீடு செய்வதையும் அவர்கள் கண்டிப்பாகத் தவிர்த்து விட்டனர்.

அக்டோபர் புரட்சிக்கு அடித்தளமாக இருந்த நிரந்தரப் புரட்சி முன்னோக்கு மற்றும் மார்க்சிசத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பாதுகாப்பது மட்டுமே இந்த வலதுசாரி, போர்-ஆதரவு பிரிவுகளுக்கு எதிரான ஒரே மாற்றீடாக உள்ளது. இது, முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து நிதிய பிரபுத்துவத்தின் செல்வங்களைப் பறிமுதல் செய்யவும் மற்றும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளைக் கட்டியெழுப்பவும் தொழிலாள வர்க்க போராட்டத்திற்கு அரசியல் மற்றும் வரலாற்று அடித்தளத்தை வழங்குகிறது.

ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, விரிவாக்கப்பட்டு வரும் இந்த போர் மற்றும் புரட்சிகர நெருக்கடிக்கு, தொழிலாளி வர்க்கத்தில் மார்க்சிச புரட்சிகர நனவை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதன் மூலம் பதிலளிக்கும். இங்கே இந்த இயக்கத்தின் அளவு மற்றும் அதன் புறநிலையான புரட்சிகர சாத்தியக்கூறுக்கும் மற்றும் வர்க்க விரோத சக்திகளின் மிச்சசொச்ச செல்வாக்குக்கும் இடையே ஒரு இடைவெளி உள்ளது. இதை உறுதியான போராட்டம் மூலமாக கடந்தாக வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இந்தப் புரட்சிகர இயக்கத்தை நாங்கள் ஒரு நனவுப்பூர்வமான சோசலிச இயக்கமாக மாற்றப் போராடுவோம். இதன் அர்த்தம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும், அதன் பிரிவுகளையும் சோசலிச புரட்சிக்கான புதிய பாரிய கட்சிகளாகக் கட்டுவதாகும்.

Loading