முன்னோக்கு

“போர் எந்திரத்திற்கு எதிரான கோபம்" என்ற பேரணி, "இடது" மற்றும் தீவிர வலதுக்கு இடையிலான கூட்டணியை ஊக்குவிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 24, உக்ரேனில் போர் தொடங்கியதில் இருந்து ஓராண்டு நிறைவைக் குறிக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும் தெளிவாக, இந்த ஆண்டு நிறைவுக்கு முந்தைய வாரங்களில், ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போராக ஆகியுள்ள இந்தப் போரைத் தொடர்ந்து நடத்துவதற்கு போர் டாங்கிகளையும் போர் விமானங்களையும் உக்ரேனுக்கு அனுப்புவது உள்ளடங்கலாக மோதலை இடைவிடாது விரிவாக்கி வருகின்றன. பைடென் நிர்வாகமும் ஐரோப்பிய அரசாங்கங்களும் துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான திட்டங்களைக் குறித்தும் திரைக்குப் பின்னால் விவாதித்து வருகின்றன. இந்த விரிவாக்கத்தின் தர்க்கம், அணுஆயுத பரிமாற்றத்திற்கு வழிவகுக்கும் அபாயத்தை அதீதமாக அதிகரித்துள்ளது.  

போரின் பரிணாமம் ஒரு போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதை அத்தியாவசியமாக்குகின்றது. உண்மையில் சொல்லப் போனால் இந்த முதலாளித்துவம் உருவாக்கி உள்ள அனைத்து பேரழிவுகரமான நிலைமைகளுக்கு எதிரான ஓர் இயக்கத்தின் சாராம்சமானது, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் கல்வியூட்டல் மற்றும் சுயாதீனமான அணிதிரட்டல் ஆகும். இதே முரண்பாடுகள் புரட்சிக்கான தூண்டுதலையும் உருவாக்குகின்றன என்ற புரிதலின் அடித்தளத்திலேயே சோசலிசவாதிகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அவர்களின் போராட்டத்தை அமைக்கிறார்கள்.

2016 இல், மூன்றாம் உலகப் போரை நோக்கிய மிகவும் முன்னேறிய போக்குகளைப் பகுப்பாய்வு செய்து, 'சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்' என்ற அதன் அறிக்கையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒரு புதிய போர்-எதிர்ப்பு இயக்கத்தின் அடிப்படை வேலைத்திட்டத்திற்கான அடித்தளத்தைத் தொகுத்தளித்தது. அது பின்வருமாறு எழுதியது:

  1. போருக்கு எதிரான போராட்டமானது, மக்களின் அத்தனை முற்போக்குக் கூறுகளையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டி, சமூகத்தின் மாபெரும் புரட்சிகர சக்தியான தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
  2. இந்தப் புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பானதாகவும் மற்றும் சோசலிசத்தன்மை உடையதாகவும் இருந்தாக வேண்டும். ஏனென்றால் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கும், இராணுவவாதம் மற்றும் போருக்கு அடிப்படை காரணமாக இருக்கின்ற இந்தப் பொருளாதார அமைப்புமுறைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டத்தின் வழியாக அல்லாமல் தீவிரமான ஒரு போருக்கு எதிரான போராட்டம் இருக்க முடியாது.
  3. ஆகவே, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, அத்தியாவசியமான வகையில், முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும், முழுமையாகவும் குழப்பத்திற்கிடமின்றியும், சுயாதீனமானதாகவும், அதற்கு விரோதமாகவும் இருந்தாக வேண்டும்.
  4. எல்லாவற்றுக்கும் மேலாக, புதிய போர்-எதிர்ப்பு இயக்கமானது, சர்வதேச தன்மையோடு, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஓர் ஒன்றுபட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த சக்தியை அணிதிரட்டக் கூடியதாக இருக்க வேண்டும்.

ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்க இயக்கத்தின் வளர்ச்சி ஒரு கற்பனாவாத கனவு அல்ல. ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பிரான்சில் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங்கள், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரிட்டனில் நூறாயிரக் கணக்கானவர்களின் வேலைநிறுத்தங்கள், இஸ்ரேலில் பிரதம மந்திரி பென்ஜமின் நெத்தன்யாஹூ மற்றும் அதிவலது பாசிச சக்திகளை உள்ளடக்கிய அவரது கூட்டணிக்கு எதிராக நடந்து வரும் நூறாயிரக் கணக்கானவர்களின் ஆர்ப்பட்டாங்கள் உட்பட, உலகம் முழுவதுமான வர்க்கப் போராட்ட அதிகரிப்பில் இன்று அதன் அறிகுறிகள் உள்ளன.   

அமெரிக்காவில் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வுகளுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. வர்க்கப் போராட்டத்தை நசுக்குவதற்குத் தொழிற்சங்க எந்திரம் மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சிகள் இருந்தும் கூட வேலைநிறுத்தங்களின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பில், இது மட்டுப்படுத்தப்பட்ட வெளிப்பாட்டை மட்டுமே கண்டுள்ளது. அமெரிக்க சமூகம் ஆழமான மற்றும் அளவிட முடியாத சமூக மற்றும் அரசியல் நெருக்கடியில் உள்ளது. பதட்டங்களை நாட்டிற்கு வெளியில் திருப்பி விடுவதற்கும் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர இயக்கத்தை முன்கூட்டியே தடுப்பதற்குமான ஒரு முயற்சியே கூட, போர் உந்துதலில் ஒரு குறிப்பிடத்தக்க காரணியாக உள்ளது.

போருக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் தான் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டம் அதன் மிகவும் ஒருங்குவிந்த வெளிப்பாட்டைக் காண்கிறது. அதே நேரத்தில் சமத்துவமின்மை மற்றும் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை, பாரியளவிலான சமூக ஆதாரவளங்களை ஆளும் வர்க்கம் மூன்றாம் உலகப் போருக்கான அதன் தயாரிப்புகளை நோக்கி திருப்பி விடுவதற்கு எதிரான போராட்டத்தில் இருந்தும் பிரிக்க முடியாது.

'போர் எந்திரத்திற்கு எதிரான கோபம்' என்ற தலைப்பில், பெப்ரவரி 19 இல் வாஷிங்டன் டி.சி.யில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டம், இந்த முன்னோக்கிற்கு முற்றிலும் நேரெதிரானது. தொழிலாள வர்க்கத்தை நோக்கியதாக இல்லாமல், இந்த போர்-எதிர்ப்பு பேரணி என்றழைக்கப்படுவது, தீவிர வலது மற்றும் வெளிப்படையான பாசிச சக்திகளுடன் ஒரு கூட்டணி மற்றும் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஏஞ்சலா மெக்ஆர்டில் தலைமையிலான லிபர்டேரியன் கட்சி (சுதந்திரவாதிகள் கட்சி - Libertarian Party) மற்றும் நிக் பிரானா தலைமையிலான 'மக்கள் கட்சி' (People’s Party) ஆகியவை இந்தப் பேரணியின் முதன்மை ஏற்பாட்டாளர்களாக உள்ளன.  

தொழிலாள வர்க்கத்தைச் சுரண்டுவதற்கு முதலாளித்துவவாதிகளுக்காக முழுமையான மற்றும் கட்டுப்பாடற்ற உரிமை கோருவதே லிபர்டேரியன் கட்சியின் தளமாக உள்ளது. அது சோசலிசத்தை மட்டுமல்ல, அனைத்து சமூக சீர்திருத்தங்களையும் மிகத் தீவிரமாக எதிர்க்கிறது. லிபர்டேரியன் கட்சியின் தலைவருக்கான முன்னாள் வேட்பாளர் ரொன் பௌல் அந்தப் பேரணியின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக உள்ளார். இவர் வருமான வரி, குறைந்தபட்ச ஊதியச் சட்டங்கள், வேலையின்மைக் காப்பீடு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை நீக்க வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில், மெக்ஆர்டில் மற்றும் அவர் உறுப்பினராக இருக்கும் 'Mises Caucus' அணியின் வழிகாட்டுதலின் கீழ், லிபர்டேரிய கட்சியினர், 2017 இல் வேர்ஜீனியாவின் சார்லட்விலில் 'உரிமைகளை ஒருங்கிணைப்போம்' பேரணியில் ஈடுபட்டிருந்த யூத-எதிர்ப்புவாத பாசிச வலது குழுக்களை நோக்கி மிகவும் நேரடியான ஒரு நோக்குநிலையை ஏற்றுள்ளனர். 2021 ஆரம்பத்தில், கலிபோர்னியாவின் Mises வேட்பாளர் குழுவுக்கு ஒரு யூத-எதிர்ப்புவாத ஆத்திரமூட்டல்காரரை வரவேற்பதை மெக்ஆர்டில் பாதுகாத்தார், “ஹாலிவுட்டை யூதர்கள் நடத்துகிறார்களா இல்லையா என்ற கேள்வி' கேட்கும் ஒரு 'உண்மையை தேடுபவர்' ஒரு யூத-எதிர்ப்பாளர் இல்லை என்றவர் எழுதினார்.

'மக்கள் கட்சி' என்பது 'மக்கள் கட்சிக்கான இயக்கம்' (MPP) என்பதில் இருந்து உருவானது. இது ஆகஸ்ட் 2020 இல் அதன் தொடக்க மாநாட்டை நடத்தியது. அதன் பெயரிலேயே சுட்டிக் காட்டப்பட்டுள்ளவாறு, அதன் நோக்கம், சமூகரீதியில் 'மக்கள்' என்ற வடிவமற்ற வகைப்பாட்டுக்குள் தொழிலாள வர்க்கத்தை உள்ளடக்குவதுடன், வர்க்க அடிப்படையிலான அனைத்து அரசியலையும் எதிர்ப்பதாகும். சோசலிச அரசியலைத் தவிர மற்ற அனைத்து வகையான அரசியலுக்கும் இடமளிப்பதை 'மக்கள் கட்சியின்' வேலைத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதிவலதை நோக்கி MPP நோக்குநிலை ஏற்ற அந்நேரத்திலேயே உலக சோசலிச வலைத்தளம் அதைக் கவனத்தில் கொள்ளுமாறு அழைப்பு விடுத்தது. அது இந்த இடைப்பட்ட இரண்டரை ஆண்டுகளில் வெடித்து மேற்பரப்புக்கு வந்துள்ளது.

இந்தப் பேரணியில் பங்கேற்க லிபர்டேரிய கட்சியும் மக்கள் கட்சியும் பல்வேறு பேச்சாளர்களை ஒன்று கூட்டியுள்ளன. இதில் நகைச்சுவை நடிகர் ஜிம்மி டோர் மற்றும் The Grayzone இன் தலைமை ஆசிரியர் மேக்ஸ் புளூமெண்தல் ஆகியோரும் உள்ளடங்குவர். அமெரிக்கா மற்றும் நேட்டோவுக்கு இவர்களின் எதிர்ப்பு பல்வேறு தேசியவாத அரசாங்கங்களுக்கான ஆதரவு அடிப்படையில் உள்ளது. டோர் மற்றும் புளூமெண்தல் இருவருமே கோவிட்-19 பெருந்தொற்றுக்கான விடையிறுப்பாக இருந்த அடிப்படை சுகாதார நடவடிக்கைகளை எதிர்க்க அதிவலதுடனான கூட்டணியை ஊக்குவித்தார்கள் என்பதோடு, ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காட்டியுள்ளனர். பாசிச படைப்பிரிவான Boogaloo Boys உடன் ஒரு கூட்டணியை ஊக்குவித்ததே அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு டோரின் பிரதான விடையிறுப்பாக இருந்தது. 

இந்தப் பேரணி அதிவலதை நோக்கி நோக்குநிலை கொண்டிருந்தாலும், இது ஸ்ராலினிச மக்கள் முன்னணியின் (Popular Front) பல கருத்துருக்களை உள்ளீர்த்து இருப்பதுடன், அரசியல் எதிர்ப்பை ஜனநாயகக் கட்சிக்குக் கீழ்படிய வைப்பதையும் ஏற்றுள்ளது. இது ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் டென்னிஸ் குசினிச் மற்றும் பசுமைக் கட்சி அரசியல்வாதிகள் ஜில் ஸ்டெயின் மற்றும் சிந்தியா மெக்கின்னி போன்ற நபர்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. தற்போது அமெரிக்க இராணுவத்தில் ஒரு செயலூக்கமான லெப்டினன்ட் கேர்னலாக உள்ள ஜனநாயகக் கட்சியின் முன்னாள் காங்கிரஸ் சபை பெண்மணி துல்சி கப்பார்டும் பேசுகிறார்.

இந்தப் பேரணியின் மிகவும் துர்நாற்றம் வீசும் கூறுபாடு பாசிசவாத பிரமுகர்கள் நேரடியாக இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகும். ட்ரம்பின் ஆதரவாளரும், 'MAGA கம்யூனிசத்தின்' ஊக்குவிப்பாளருமான ஜாக்சன் ஹிங்கிள் சிறப்புப் பேச்சாளர்களில் ஒருவராக உள்ளார். “அமெரிக்காவில் இருந்து தாராளவாதத்தை வேரோடு அகற்றுவதன் மூலமும், MAGA இயக்கத்தில் இருந்து உலகமயவாதிகளை (globalists) வெளியேற்றுவதன்' மூலமும் 'டொனால்டு ட்ரம்ப் வேலையை நிறைவு செய்வதே' தனது நோக்கம் என்றவர் கூறியுள்ளார். “உங்களை நீங்களே ஆயுதமயப்படுத்துங்கள்' என்ற தலைப்பில் 2015 இல் பாசிசவாத 'Oath Keeper” அமைப்பிற்கு முழக்க கீதம் எழுதிய ஒரு லிபர்டேரிய கட்சியாளரான ஜோர்டன் பேஜ் மற்றொரு பங்கேற்பாளராக உள்ளார்.

இந்தப் பேரணியில் கலந்து கொள்ளும் அதிவலது கூறுபாடுகளைப் பார்த்து, Veterans for Peace and Code Pink அமைப்பு உட்பட பல குழுக்கள் இதில் பங்கேற்க மறுத்துவிட்டன.

இந்தப் பேரணியில் உரையாற்றும் அமைதிவாத கட்டுரையாளரும் எழுத்தாளருமான கிறிஸ் ஹெட்ஜஸ் (Chris Hedges), “நிரந்தர கூட்டணிகள் எதுவும் இல்லை, நிரந்தர அதிகாரம் மட்டுமே' என்ற தலைப்பில் இந்த வாரம் அவருடைய சப்ஸ்டாக் பதிப்பில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவருடைய சொந்த பங்களிப்பை நியாயப்படுத்தி பாதுகாக்க முயன்றுள்ளார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீவிர விமர்சகராக பெயர் பெற்றுள்ள  ஹெட்ஜஸ் நோம் சொம்ஸ்கியால் பெரிதும் ஆதிக்கத்திற்குட்பட்டு, அறிவியல்ரீதியான  அரசியல் ஆய்வினை  நடுத்தர வர்க்க ஒழுக்கத்தால் பிரதியீடு செய்துள்ளார். ஆனால் அவர் எப்போதுமே மார்க்சியம், சோசலிசம், மற்றும் குறிப்பாக, ட்ரொட்ஸ்கிசத்திற்கு ஓர் எதிர்ப்பாளராக இருந்துள்ளார் என்பதோடு, அவர் அரசியலின் ஒரு அம்சமாக, இது முன்பினும் அதிக வெளிப்படையாக இருந்துள்ளது. அவர் எழுத்துக்கள் பின்வரும் விதத்தில் குணாம்சப்படுகின்றன 1) ஆழமாக வேரூன்றிய அரசியல் அவநம்பிக்கை; 2) ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக தொழிலாள வர்க்க அமைப்பிற்கு அவருடைய வெளிப்படையான எதிர்ப்பு. இது தான் இப்போது அவரை அதிவலது உடனான முற்றிலும் கோட்பாடற்ற பிற்போக்குத்தனமான கூட்டணியை நியாயப்படுத்த அழைப்பு விடுப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது.

ஹெட்ஜஸின் கருத்துப்படி, “நாங்கள் பெருநிறுவன சக்தியையும் போர் இயந்திரத்தையும் மட்டும் வீழ்த்த மாட்டோம். ஒரு இடது-வலது கூட்டணி இருக்க வேண்டும். அதில் விரும்பத்தக்க கருத்துக்கள் கொண்டிராதவர்கள் மட்டுமல்ல மாறாக வெறுப்பவர்களும் கூட உள்ளடங்கி இருப்பார்கள், அப்படியில்லை என்றால் நாம் ஓரங்கட்டப்பட்டு பயனற்றவர்களாக ஆகிவிடுவோம்.” இது அரசியல்ரீதியில் தீவிர வலதுடன் ஒரு கூட்டணி அமைக்க அனுமதிக்கிறது என்பது மட்டுமல்ல, இதுவொரு அவசிய தேவை, “அரசியல் வாழ்வின் யதார்த்தம்' என்று ஹெட்ஜஸ் வலியுறுத்துகிறார்.

வேறு எந்த சமூக அல்லது அரசியல் பிரச்சினையையும் விலக்கி விட்டு அதிவலதுடன் கூட்டு சேர்ந்து போருக்கு எதிரான ஓர் இயக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என்று ஹெட்ஜஸ் வாதிடுகிறார். 'பெப்ரவரி 19 பேரணி, பல லிபர்டேரிய கட்சியினர் கூறுவதைப் போல, சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் காப்பீடு அகற்றுவதைக் குறித்ததோ அல்லது குறைந்தபட்ச கூலியை ஒழிப்பது பற்றியதோ அல்ல,” என்று எழுதும் அவர், “குறைந்தபட்சம் ஒரு பேச்சாளரால் கண்டிக்கப்பட்ட LGBTQ சமூகத்தின் (ஓரினப்பாலினர், இருபாலினம், திருநங்கை மற்றும் பிற பன்முகத்தன்மையான மக்கள் கூட்டு) உரிமைகளைக் கண்டிக்கும் பேரணி அல்ல. இது நிரந்தரப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேரணியாகும். இந்த வலதுசாரி பங்களிப்பாளர்கள் மற்ற பிரச்சினைகளைச் சுற்றி ஒழுங்கமைத்தால், நான் தடைக் கம்பிகளின் மறுபுறத்தில் நிற்பேன்” என்கிறார்.

முதலாவதாக, போருக்கு எதிரான எதிர்ப்பு அவர்களின் ஜனநாயக-விரோத மற்றும் தொழிலாளர்-விரோத சமூக அரசியல் திட்டநிரலுக்கு எந்த வகையிலும் உதவாது என்று இந்த அதிவலது சக்திகளின் வாதத்தை நியாயப்படுத்தும் ஹெட்ஜின் வலியுறுத்தல் அபத்தமானது. வெளிப்படையாகவே, இது தொழிலாளர்களையும் இளைஞர்களையும் திசைதிருப்பி நோக்குநிலை பிறழச் செய்வதில் அவர்களுக்கு உதவுவதுடன், அவர்களின் பிற்போக்குத்தனமான அரசியலுக்கு ஒரு மோசடியான 'முற்போக்கு' மறைப்பை வழங்குகிறது.

இரண்டாவதாக, அவருடைய அதிவலது ஒத்துழைப்பாளர்கள் 'மற்ற பிரச்சினைகளைச் சுற்றி ஒழுங்கு' செய்தால் அவர் 'தடைக் கம்பிகளுக்கு மறுபுறம்' இருப்பார் என்ற ஹெட்ஜின் வாதம் சுத்த குதர்க்கவாதமாகும். அமெரிக்க தேசியவாதம் மற்றும் யூத-எதிர்ப்புவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் போரை விமர்சிக்கும் போது, அவர்கள் 'மற்ற பிரச்சினைகளைச் சுற்றி ஒழுங்கமைக்காமல்' வேறு என்ன செய்து கொண்டிருக்கிறார்களாம்? அனைத்திற்கும் மேலாக, “போர் எந்திரத்தை' எதிர்ப்பதில் மட்டுமல்ல, மாறாக 'பெருநிறுவன அதிகாரத்தைக் கவிழ்ப்பதை' எதிர்ப்பது என்ற கூற்றின் மூலம், ஒரு 'இடது-வலது கூட்டணி' என்பது அவசியமான 'அரசியல் வாழ்வின் யதார்த்தம்' என்ற அவருடைய முந்தைய வலியுறுத்தலுடன் ஹெட்ஜஸ் முரண்படுகிறார்.

மூன்றாவதாக, மிக அடிப்படையாக, பல்வேறு பிரச்சினைகளைச் சுற்றி ஒருவர் கூட்டணிகளைத் தேர்ந்தெடுத்து முடிவு செய்யலாம் என்ற வாதம் அரசியல் சந்தர்ப்பவாதத்தின் தனித்துவமான முத்திரையாகும். வியட்நாம் போருக்கு எதிரான போராட்டங்களின் போது, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி, முன்னாள் ட்ரொட்ஸ்கிச கட்சியான சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி மற்றும் பிற குழுக்களும் போருக்கு எதிரான பரந்த எதிர்ப்பை ஜனநாயகக் கட்சிக்கு அடிபணியச் செய்ய இந்த நிலைப்பாட்டை தான் முன்னெடுத்தன. இப்போது, எதிர்ப்பை அதிவலதுக்குக் கீழ்படிய வைப்பதற்காக ஹெட்ஜஸ் அதை முன்னெடுத்து வருகிறார்.

இறுதியாக, அவர் எந்த அரசியல் சக்திகளுடன் அணிசேர்ந்து வருகிறாரோ அவை 'போர் எந்திரத்திற்கு' எதிரான எதிர்ப்பாளர்கள் என்ற ஹெட்ஜஸின் வாதம் அரசியல் சூழ்ச்சியின் ஒரு பயற்சியாகும். பகுப்பாய்வின் இறுதியில், பைடென் நிர்வாகத்தின் போர்க் கொள்கை உடனான அவர்களின் கருத்து வேறுபாடுகள், முற்றிலும் தந்திரோபாய தன்மை கொண்டவை. அமெரிக்காவில் அரசியல் வலதுசாரிகளிடையே 'அமெரிக்கா முதலில்' என்ற போர்-எதிர்ப்பு தோரணையின் நீண்ட வரலாறு உள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக, அடோல்ஃப் ஹிட்லரின் தீவிர அபிமானியான சார்லஸ் லிண்ட்பெர்க் தலைமையிலான அரசியல் இயக்கம் இந்தப் போக்கின் மிகவும் மோசமான உதாரணமாகும்.

இறுதிப் பகுப்பாய்வில், போருக்கான வலதுசாரி போலி-எதிர்ப்பு, வெளியுறவுக் கொள்கையின் சில அம்சங்களில் ஆளும் வர்க்கத்திற்குள் உள்ள ஒரு சர்ச்சையை பிரதிபலிக்கிறது. உக்ரேனில் தற்போதைய போர், அமெரிக்காவில் வதிவிடப்பத்திரங்கள் அற்றவர்களை நாடுகடத்துவது மற்றும் சீனாவுடனான எதிர்கால போருக்கான தயாரிப்புகள் போன்ற அமெரிக்க ஆளும் வர்க்கம் எதிர்கொள்ளும் மற்ற அழுத்தமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை சிதறடிப்பதாக நம்பும் முன்னாள் இராணுவப் பணியாளர்கள், அவர்களின் பார்வையில் முற்றிலும் பாசிசவாதிகளுக்குப் பஞ்சம் இல்லை என்று இணையத்தில் காணலாம். 

'போர் எந்திரத்திற்கு எதிரான கோபம்' என்ற இந்தப் பேரணி போருக்கு எதிரான ஓர் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதில் இல்லை, மாறாக இளைஞர்களைக் குழப்பி நோக்குநிலை பிறழச் செய்வதில் பாத்திரம் வகிக்கிறது. ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் மற்றும் பிற போலி-இடது குழுக்கள் வெளிப்படையாக ஆதரிப்பதால், ஹெட்ஜஸ் மற்றும் அவரது பரிவாரங்களின் உதவியோடு, வலதுசாரிகள் தங்களைப் போருக்கு எதிரான ஓர் எதிர்ப்பாளராக மோசடியாக காட்டிக் கொள்ள உதவுகிறது.

'போர் எந்திரத்திற்கு எதிரான கோபம்' என்ற இந்தப் பேரணியின் தீவிர வலதுசாரி வாய்சவடால் பேச்சுக்கு முன்னரே பரிதாபகரமாக மண்டியிடும் விதத்தில், பெப்ரவரி 19 பேரணியை ஒழுங்கமைப்பவர்கள் முழுமையான சரணாகதி முன்னோக்கில் போய் நிற்கிறார்கள். அந்தப் பேரணியின் முடிவில் வெள்ளை மாளிகையை நோக்கி செல்லும் ஓர் ஊர்வலம் கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளது, வேறு யாரிடமும் இல்லை, ரஷ்யாவுக்கு எதிரான போரை முன்னின்று நடத்தி வரும் ஜனாதிபதி ஜோ பைடெனிடமே கோரிக்கைகளை முன்வைக்க உள்ளது.

இந்த அடிப்படையில் முன்னோக்கிய பாதையைக் காண முடியாது. போருக்கு எதிரான ஓர் உண்மையான இயக்கம், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் டிசம்பர் 10 பேரணியில் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். அது ஒரு சோசலிச புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை நோக்கி நோக்குநிலை கொண்ட ஓர் உலகளாவிய இயக்கத்திற்கான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

அந்தப் பேரணிக்கு அழைப்பு விடுத்து IYSSE அதன் அறிக்கையில் பின்வருமாறு எழுதியது: “உலக வரலாற்றில் தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரிய தலையீடான ரஷ்யப் புரட்சி, முதலாம் உலகப் போரின் முதல் உலகளாவிய மனிதகுல படுகொலைகளை முடிவுக்குக் கொண்டு வந்ததைப் போலவே, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் தலையீடு தான் இன்று மூன்றாம் உலகப் போரை நோக்கிய விரிவாக்கத்தை நிறுத்தும்.'

ஏற்கனவே போராட்டத்தில் நுழைந்திருக்கும் இந்தப் பாரிய சமூக சக்தியால்தான், வாஷிங்டனிலும் நேட்டோ நாடுகளின் தலைநகரங்களிலும் உள்ள போர்வெறியர்களைத் துடைத்தழித்து, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையின் அடிப்படையில் ஏகாதிபத்திய போரை எதிர்த்து, போருக்கு மூலவேரான இந்த முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கு முடிவு கட்ட முடியும்.

Loading