முன்னோக்கு

தஞ்சம் கோருவதற்கான உரிமையை மீறி, வெள்ளை மாளிகை அமெரிக்க-மெக்சிக்கோ எல்லையில் புலம்பெயர்வுக்குத் தடை விதிக்கிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக்கட்டுரையை இங்கே காணலாம்.

செவ்வாய்கிழமை பைடென் நிர்வாகம் ஒரு புதிய குடியேற்றக் கொள்கையை அறிவித்தது. இது தெற்கு எல்லையில் நுழைவதற்கு ஏறக்குறைய புலம்பெயர்வோர் அனைவருக்கும் தடை விதிப்பதுடன், அவர்களின் தஞ்சம் கோரி விண்ணப்பதற்கான உரிமையையும் மறுக்கிறது.

இந்தப் புதிய கொள்கையானது, ஷரத்து 42 காலாவதியாகும் நாளான மே 11 இல் இருந்து நடைமுறைக்கு வரும். புலம்பெயர்வோர் கோவிட்-19 ஐ பரப்புகிறார்கள் என்ற மோசடியான சாக்குபோக்கின் கீழ், முன்னர்  அமெரிக்க சட்டத்தின் கீழ் தெளிவற்றதாக இருந்த பொது மருத்துவ வசதிகள் பற்றிய இந்தக் கொள்கையை, அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் புலம்பெயர்வைத் தடுக்க ட்ரம்ப் முதன்முதலில் பயன்படுத்தினார். பின்னர் கோவிட் பெருந்தொற்று முடிந்து விட்டது என்று பைடென் அறிவித்து விட்ட போதும் கூட, அப்பட்டமாக தடை விதிக்கும் இந்த கொடூரமான மற்றும் பாசாங்குத்தனமான கொள்கையைப் பைடென் தொடர்ந்தார்.

ஷரத்து 42 காலாவதியாவதால் ஏற்படும் இடைவெளியை நிரப்புவதே பைடெனின் புதிய கொள்கையினது நோக்கமாகும். தெற்கு எல்லையை கால்நடையாக கடக்க முயலும் புலம்பெயர்ந்தவர்கள் அனைவரும் நீதிமன்ற விசாரணையோ அல்லது தஞ்சம் கோருவதற்கான எந்தவித உரிமையோ இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்பதே இதன் அர்த்தமாகிறது.

இந்த நிர்வாகத்தின் போலி-சட்ட நீதிமுறை என்னவென்றால், மெக்சிக்கோ வழியாக வரும் புலம்பெயரும் அனைவருக்கும் மெக்சிக்கோவில் தஞ்சம் கோராமல் அமெரிக்காவில் தஞ்சம் கோரும் போது அவர்களுக்கான உரிமை மறுக்கப்பட வேண்டும். ஆனால் யதார்த்தம் என்னவென்றால் அகதிகள் வெளியேறி வரும் அனைத்து நாடுகளிலும் நிறைந்துள்ள அதே வன்முறையாலும், வறுமையாலும்தான மெக்சிக்கோவும் சிதைக்கப்பட்டுள்ளது.

மெக்சிக்கோ ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோரின் நிர்வாகம், 2012 இல் பதவியேற்றதில் இருந்து மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் புலம்பெயர்ந்தோரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பாகத் தொல்லைகளுக்கு உட்படுத்தி, அடித்து, துன்புறுத்தி வருகிறது. அதேவேளையில் அமெரிக்காவில் தஞ்சம் கோரும் பல ஆயிரக்கணக்கானோர் எல்லையில் கூடார முகாம்களில் வாடி வதைபடவும், குளிரிலும், பசியிலும், மெக்சிக்கோவின் இழிபெயரெடுத்த பெருங்கூட்டுக் குழுமங்களின் சூறையாடல்களுக்கும் விடப்பட்டுள்ளனர்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் புலம்பெயர்வோர்-விரோத கொள்கைகளை மாற்றுவதாகவும், தஞ்சம் கோருவதற்கான உரிமையை நிலைநிறுத்துவதாகவும் வாக்குறுதி அளித்தே பைடென் பதவிக்கு வந்தார். இப்போது அவர் நிர்வாகம் அறிமுகப்படுத்தும் கொள்கை, அந்த உறுதிமொழியைக் கேலிக்கூத்தாக்குவதுடன், சர்வதேச மற்றும் அமெரிக்க சட்டங்கள் இரண்டையும் முற்றிலும் மீறுகிறது. இவ்விரண்டு சட்டங்களும் தஞ்சம் கோருவதற்கான உரிமைக்கு உத்தரவாதமளிக்கின்றன. யூதப் படுகொலை மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட அகதிகளின் உரிமைகள் தொடர்பான 1951 மற்றும் 1967 விதிகள், வெளிப்படையாக தஞ்சம் கோருவதற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளித்து, 'அகதிகளை' நாடு கடத்துவதைச் சட்டவிரோதமாக்குகின்றன. தஞ்சம் கோருவதற்கு உரியவர்களுக்கான சட்டப்பூர்வ வார்த்தையாக 'அகதிகள்' (refugees) என்ற வார்த்தை கொடுக்கப்பட்டது. 'உடன்பாட்டில் உள்ள எந்த அரசும் ஒரு அகதியின் உயிருக்கோ அல்லது சுதந்திரத்திற்கோ அச்சுறுத்தலான பிரதேசங்களின் எல்லைகளுக்கு எந்த வகையிலும் அவரை திருப்பி அனுப்பவோ அல்லது வெளியேற்றவோ கூடாது,” என்று 1951 விதி பிரிவு 33 கூறுகிறது.

இந்த முடிவானது, இலத்தீன் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கையில் பெரும் அழிவுகரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். எண்ணற்ற மக்கள், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்திய சுரண்டலால் சீரழிக்கப்பட்ட சமூகங்களில் அவர்களுக்கு இன்னல் கொடுத்தவர்களின் பிடிகளுக்குள்ளேயே மீண்டும் திரும்ப அனுப்பப்படுவார்கள். கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படக்கூடிய நாடுகளுக்கே மக்களைப் பலவந்தமாக மற்ற நாடுகள் திருப்பி அனுப்புவதற்குத் தடை விதிக்கும் உடன்படிக்கையான, சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையை மீறி பலர் கொல்லப்படுவார்கள் அல்லது சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவார்கள்.

இன்னும் ஆயிரக்கணக்கானோர் ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள பெற்றோர்கள், குழந்தைகள் மற்றும் உறவினர்களிடமிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப்படுவார்கள். தமது நாடுகளுக்கு அனுப்பும் பில்லியன் கணக்கான டாலர் பணம் நஷ்டமாகும் போது, ஏற்கனவே கோவிட்-19 பெருந்தொற்று, காலநிலை மாற்றம் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரால் மோசமடைந்துள்ள பட்டினி நிலைமை மற்றும் வறுமை இன்னும் அதிகமாக எரியூட்டப்படும். இறுதியில், இந்தக் கொள்கையானது, தங்களைக் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக இன்னும் அதிக அபாயகரமான நிலைமைகளில் புலம்பெயர்வோர் பாலைவனங்களில் இன்னும் அதிக தூரங்களுக்கும், கடலின் உள்ளே வெகு தொலைவுக்கும் சென்று எல்லையைக் கடக்கும்படி அவர்களை நிர்பந்திக்கும். இதனால் பலர் இறக்க நேரிடும்.

இதைப் போல கடுமையான ஜனநாயக விரோத முன்னுதாரணங்கள் அமெரிக்க வரலாற்றில் மூன்றே மூன்று மட்டுந்தான் உள்ளன:

முதலாவது, சீனாவை ஒதுக்கி வைக்கும் சட்டம். இது 1882 இல் தொடங்கி 10 ஆண்டுகளுக்குச் சீன தொழிலாளர்களின் அனைத்து குடியேற்றத்தையும் தடை செய்தது.

இரண்டாவது 1924 ஜோன்சன்-ரீட் சட்டம்,.இது ரஷ்ய புரட்சிக்குப் பின்னர் தெற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் வறிய நாடுகளில் இருந்து புலம்பெயர்வு ஏற்படுவதைத் தடுத்தது. ஹிட்லர் இந்தச் செயலை ஆமோதித்து எழுதினார். யேல் சட்டத்துறை பேராசிரியர் ஜேம்ஸ் விட்மேன், அவர் 2017 ஆம் ஆண்டு புத்தகமான ஹிட்லரின் அமெரிக்க முன்மாதிரி  என்பதில் விளக்கியது போல, நாஜி சட்ட வல்லுநர்கள் சீனர்களை ஒதுக்கிய ஜோன்சன்-ரீட் சட்டங்களை வைத்து மூன்றாம் குடியரசின் இனவாத சட்டங்களை வடிவமைத்தார்கள்.

மூன்றாவது முன்னுதாரணமாக இருப்பது, 2017 இன் ஆரம்பத்தில் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக ஆணை ஏழு முக்கிய இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்குத் தடைவிதித்தது. இது அந்நாடெங்கிலுமான விமான நிலையங்களில் மிகப்பெரும் தன்னிச்சையான ஆர்ப்பாட்டங்களைச் சந்தித்தது.

தஞ்சம் கோருவதற்குத் தடை விதிக்கும் நடவடிக்கை வரலாற்றுரீதியில் பிற்போக்குத்தன்மையானது என்ற போதும், பெருநிறுவன ஊடகங்கள் இந்த தடையை ஆமோதிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மீது ஏறக்குறைய முழுமையாக மவுனமாக உள்ளன. இவை ரஷ்யாவின் உண்மையான மற்றும் கற்பனையான குற்றங்களை முடிவின்றி கண்டிப்பதிலேயே முழுமூச்சாக ஒருமுனைப்பட்டுள்ளன. அது அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள், தஞ்சம் கோருவதற்கு தடை விதிக்கப்பட்டதைக் குறித்து நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் அல்லது CNN ஆகியவற்றில் முதல் பக்கத்தில் எந்தவொரு கட்டுரையும் வரவில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியம் 'ஜனநாயகத்தின்' பாதுகாவலன் என்றும், ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரில் அதை பாதுகாத்து வருகிறது என்பதே பொய் என்பதை தஞ்சம் கோருவதற்கான இந்தத் தடை நடவடிக்கை அம்பலப்படுத்துகிறது என்பதை ஊடகங்களின் மவுனம் ஆமோதிப்பதாக உள்ளது.

ஜூன் 2022 இல், பைடென் 'உலக அகதிகள் தினத்தை' குறிக்கும் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் தஞ்சம் கோருவோர்களுக்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக அமெரிக்காவைச் சித்தரித்ததுடன், 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அவர்களது தாய்நாடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மைக்காக 'உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர்' மீது பழிசுமத்தினார்.

அந்த 100 மில்லியனில் பெரும்பாலானவர்கள், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா என அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கடந்த மூன்று தசாப்த கால போர்களால் சீரழிக்கப்பட்ட நாடுகளை விட்டு வெளியேறி வருபவர்கள் என்ற உண்மையை பைடெனின் அறிக்கை மறைத்து விட்டது. அவர் கூறினார், ரஷ்யாவைப் போல் இல்லை, அமெரிக்கா 'அகதிகளை வரவேற்று பாதுகாக்கிறது', “அகதிகளின் தேவைகளுக்கு தமது பொறுப்பெடுப்பதில் உலகையே வழிநடத்துகிறது,” என்றார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாசாங்குத்தனம் மற்றும் பொய்களுக்கு எல்லையே இல்லை. கடந்த வாரம் பேசிய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், உக்ரேனியர்களை ரஷ்யா நாடுகடத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை, அந்த அரசாங்கம் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை' நடத்தி வருவதற்கு ஆதாரமாக மேற்கோளிட்டார்.

'குழந்தைகள் உட்பட நூறாயிரக்கணக்கானவர்களை ரஷ்ய அதிகாரிகள் உக்ரேனில் இருந்து ரஷ்யாவுக்கு வலுக்கட்டாயமாக நாடு கடத்தி உள்ளனர்' என்று ஹாரிஸ் கூறினார். 'அவர்கள் குழந்தைகளை அவர்களின் குடும்பங்களிடம் இருந்து கொடூரமாக பிரித்துள்ளனர்,' என்றார்.

ரஷ்ய அரசாங்கம் இந்த கூற்றுக்களை மறுத்துள்ளது, அதேவேளையில் புலம்பெயர்ந்தோர் குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடமிருந்து பிரிப்பதில் தான் அமெரிக்கா உலகிற்கு வழிகாட்டுகிறது என்பதை யாரும் தீவிரமாக மறுக்க முடியாது.

2021 இல், பைடென் நிர்வாகம் புலம்பெயர்ந்தோரின் 122,000 குழந்தைகளை அமெரிக்கா முழுவதும் உள்ள தங்குமிடங்களில் அடைத்து வைத்திருப்பதாக CBS செய்தி அறிக்கை கூறுகிறது. டொனால்ட் ட்ரம்பின் கீழ், அவருடைய நாஜி ஆலோசகர் ஸ்டீபன் மில்லரின் குதர்க்க மனதில் உதித்த ஒரு பாசிசவாத கொள்கையில் பத்தாயிரக் கணக்கான குழந்தைகள் வேண்டுமென்றே அவர்களின் குடும்பங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். ஷரத்து 42 இன் கீழ், ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்கள் புலம்பெயர்ந்தோர் கோவிட்-19 ஐ பரப்ப வாய்ப்பிருப்பதாக பொய்யான இனவாத சாக்குபோக்கில் நூறாயிரக் கணக்கான புலம்பெயர்ந்தோர் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

அரசியலமைப்பைத் தூக்கியெறிவதற்காக ஜனவரி 6, 2021 ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் இருந்து இரண்டு ஆண்டுகள் ஒதுங்கியிருந்தவர்களும், பெரிதும் இராணுவமயமாக்கப்பட்ட நாடுகடத்தும் அரசு எந்திரத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களுமாக உள்ள தீவிர வலதுசாரிக் பிரிவுகளுக்கு பைடென் நிர்வாகத்தின் இந்த முடிவு ஒரு பெரிய விட்டுக்கொடுப்பாகும். ரஷ்யாவுக்கு எதிரான போரைத் தொடர, அதிகரித்தளவில் பாசிசவாத குடியரசுக் கட்சியுடன் 'ஒருமனதான இருகட்சி முறையை' பேணுவதற்குப் பெரும் முயற்சித்துவரும் ஜனநாயகக் கட்சி, அரசியல் அமைப்புமுறையை முன்பினும் அதிகமாக வலதுக்கு நகர்த்தி வருகிறது.

புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல் ஒரு சர்வதேச நிகழ்வாகும். ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யா உடனான மோதலை விரிவாக்கி வரும் நிலையில், வலதுசாரி தேசியவாதக் கூறுபாடுகள் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளைத் தாக்குவதற்குத் துணிகிறார்கள். அதேவேளையில் ஒரு நாடு மாற்றி ஒரு நாடு புலம்பெயர்வோருக்கு அவற்றின் கதவுகளை மூடி வருகின்றன.

பிரிட்டன் உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன், பிரிட்டனில் தஞ்சம் கோருவதற்காக அகதிகள் முயற்சி செய்த சம்பவத்தை ஒரு 'படையெடுப்பாக' சித்தரித்தார். அதில் அதிவலது குண்டர்கள் கடந்த வாரம் லிவர்பூலுக்கு வெளியே நோல்சியில் அகதிகள் தங்கியிருந்த ஒரு விடுதியில் புலம்பெயர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பிரிட்டன் எங்கிலும் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக 'முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள்' அதிகரிப்பதைக் குறித்து எச்சரித்து அகதிகளுக்கான அமைப்புகள் இம்மாத ஆரம்பத்தில் ஒரு கடிதம் வெளியிட்டன.

ஜேர்மன் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2022 இல் புலம்பெயர்ந்தோர் மீதான வன்முறைத் தாக்குதல்கள் பாரியளவில் அதிகரித்தன. அந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 65 தனித்தனி சம்பவங்கள் நடந்திருந்தன. ஜூன் 2022 இல், பெட்ரோ சான்செஸின் ஸ்பானிஷ் அரசாங்கம் வட ஆபிரிக்காவில் மெலிலா எல்லையைக் கடக்கும் போது டஜன் கணக்கான புலம்பெயர்ந்தோரைப் படுகொலை செய்தது.

புலம்பெயர்ந்தோரின் உரிமைகளைப் பாதுகாப்பதும், அடக்குமுறை நாடு கடத்தல் எந்திரங்களை அகற்றுவதும் மற்றும் அதிவலதுக்கு எதிரான போராட்டமும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். இது தான் 'உக்ரேன் போரை நிறுத்துவது எப்படி’’ என்ற தலைப்பில் அமெரிக்க கிழக்கத்திய நேரப்படி பெப்ரவரி 25, சனிக்கிழமை மதியம் 1:00 மணிக்கு, WSWS நடத்தும் இணையவழி கூட்டத்தின்   கருப்பொருளாகும்.

Loading