உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போருக்கு எதிராக பிரெஞ்சு மாணவர்கள் பேசுகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சமீபத்தில் பாரிஸில், உக்ரேன் போர் மற்றும் பிரான்சில் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டம் குறித்து மாணவர்களை பேட்டி கண்டனர். இந்த நேர்காணல்கள் ஏகாதிபத்திய போர் குறித்து இளைஞர்களின் பரந்த அடுக்குகளிடையே நிலவும் பாரிய அவநம்பிக்கையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளன. இது நிறுவனமயப்பட்ட நேட்டோ-சார்பு, போர்-சார்பு ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்படுகின்றன.

போர் குறித்து கரோலின் என்ற பெண்மணி கூறுகையில், 'நாங்கள் சோர்வடைந்துள்ளோம். பிரான்ஸ் உக்ரேனுக்கு பல பில்லியன்கணக்கான டாலர்களை அனுப்புகிறது, அதே நேரத்தில் பிரெஞ்சு மக்களுக்கு போதுமான பணம் இல்லை என்கிறது. இளைஞர்களைப் பொறுத்தவரை, உக்ரேனுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை அனுப்பும் போது 1 யூரோவாக இருந்த CROUS (மாணவர் சாப்பாட்டு அரங்குகள்) குறைந்த விலை உணவு நிறுத்தப்பட்டுள்ளது.'

உக்ரேனில் நேட்டோவின் இராணுவ விரிவாக்கத்திற்காக மக்ரோன் செலவிடும் பில்லியன் கணக்கான யூரோக்களுக்கும், தொழிலாளர்களிடமிருந்து அவர் பறிக்கும் பில்லியன் கணக்கான யூரோக்களுக்கும் இடையிலான அப்பட்டமான முரண்பாட்டை அவர் சுட்டிக்காட்டினார். ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கான தனது எதிர்ப்பை அவர் வலியுறுத்தினார்: 'நீங்கள் ஆண்டு முழுவதும் ஐந்து வாரங்கள் விடுமுறைக்காக வேலை செய்கிறீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் உழைக்கும்போது, அதன் முடிவில் நீங்கள் இன்னும் ஓய்வெடுக்கவும் அதை உண்மையிலேயே அனுபவிக்கவும் தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன்.'

கரோலின்

1997 ஆண்டில் நேட்டோ-ரஷ்யா ஸ்தாபகச் சட்டத்தில் நேட்டோ அளித்த உறுதிமொழிகளை நினைவுகூர்ந்து, உக்ரேனில் நேட்டோ ஒரு தற்காப்புப் போரை நடத்துகிறது என்ற வாதத்தை அவர் மறுத்தார்: 'என்னைப் பொறுத்தவரை, நேட்டோதான் ரஷ்யாவிற்கு வெகு அருகில் செல்ல விரும்புவதால் அதற்கு முழுப் பொறுப்பு இல்லை என்று ரஷ்யா கூறியுள்ளது. அவர்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதானது ரஷ்யாவைச் சுற்றிவளைத்து நேட்டோவை விரிவாக்குவதற்காக அல்ல. அவர்கள் இந்த ஒப்பந்தத்தை மதிக்கவில்லை, அவ்வளவுதான்.

உண்மையில், 1991ல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், நேட்டோவானது ரஷ்யாவின் எல்லைகளில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப்போவதில்லை என்று உறுதியளித்தது. ஆனால் 1990கள், 2000கள் மற்றும் 2010களில் வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் ஈராக், சோமாலியா, யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியா மீது படையெடுத்தபோது, அவைகள் கிழக்கு ஐரோப்பாவையும் நேட்டோவில் உள்வாங்கின. இப்போது நேட்டோ ரஷ்யாவிற்கு எதிராக தன்னை பாதுகாத்துக் கொள்வதாக கூறுகிறது, ஆனால் அதற்கு மாறாக பிரெஞ்சு துருப்புக்கள் தான் ரஷ்ய எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

காங்கோ (Congo) நாட்டு மாணவரான கொங்காவும் போர் குறித்து பேசினார்: 'உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்புவது உண்மையில் ஒரு நல்ல விஷயம் அல்ல, அது மோதல்களைத் தூண்டுகிறது. இது எதிர்காலத்தை மிகவும் ஆபத்தானதாக ஆக்குகிறது.'

நேட்டோவின் நவ-காலனித்துவ போர்களில் ஆபிரிக்காவின் இரத்தம் தோய்ந்த அனுபவத்தை அவர் நினைவு கூர்ந்தார்: 'ஆரம்பத்தில் நான் கடாபியை (2011 லிபிய போரில்) தூக்கியெறிவதற்கு ஆதரவாக இருந்தேன். போராட்டக்காரர்களை ஒடுக்கும் ஒரு சர்வாதிகார ஆட்சி என்று ஊடகங்கள் எங்களுக்கு அதைத் தெரிவித்து பிரச்சாரம் செய்தன. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு, நான் அதை சற்று ஆழமாக யோசித்தபோது, இது ஒரு மோசமான விஷயம் என்பதை உணர்ந்தேன். அப்போதிருந்து, தொடர்ந்து ஒரு ஆயுத வன்முறையால் லிபியா மூழ்கடிக்கப்பட்டுள்ளது, மேலும் முழுப் பகுதியும் நிலைகுலைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

இஸ்லாமிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக பிரான்ஸ் மாலியை ஆக்கிரமித்தபோது அங்கு வாழ்ந்த கொங்கா, 'மாலியில் பிரான்சின் இருப்புக்கு எதிராக சராசரியாக 10 பேரில் 8 பேர் இருப்பதாக நான் கூறுவேன். அவர்களின் கருத்துப்படி, பிரெஞ்சுப் படைகள் ஜிகாதிகளை ஆதரித்து அவர்களின் தாக்குதல்களை நடத்த அனுமதிக்கின்றன.'

பிரெஞ்சு ஆதரவுடன் மாலி மீது விதிக்கப்பட்ட தடையின் விளைவாக, 'உணவு மற்றும் அடிப்படை பொருட்களின் விலைகள் அங்கு மிகவும் உயர்ந்தது. அது கடினமாக இருந்தது. மக்களின் சராசரி வருமானம் மாதத்திற்கு சுமார் 80-100 யூரோக்களாக இருந்தது, பணவீக்கத்துடன் அது உண்மையில் வேதனையாக இருந்தது.'

உக்ரேனில், நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு பேரழிவுகரமான இராணுவ விரிவாக்கத்தின் பாரிய ஆபத்தை கொங்கா வலியுறுத்தினார்: 'இந்த போரில் ரஷ்யா தோல்வியடையாது. ஒரு அணுசக்தி சக்தியாக, இந்த போரில் தோல்வியடைவது அதற்கு ஆபத்தானது, எனவே அது அனைத்து வழிகளையும் பயன்படுத்தும். இந்த போரில், வெற்றியாளர்கள் அல்லது தோல்வியாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், அதனால்தான் நான் ஆயுதங்களை அனுப்புவதை விட இராஜதந்திர தீர்வை விரும்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

பிரான்சில் நிறுவனமயப்பட்ட மற்றும் போலி-இடது அரசியல் கட்சிகளிடையே போர் குறித்த விவாதமும் எதிர்ப்பும் இல்லாததை அவர் விமர்சித்தார்: 'நான் பிரெஞ்சு மாணவர்களுடன் பேசுகிறேன்; அபாயங்கள் அவர்களுக்குத் தெரியும், ஆனால் அவர்கள் விஷயத்தின் தீவிரத்தை முழுமையாக அறிந்திருக்கவில்லை.... அரசியல் கட்சிகளுக்கு இதில் உண்மையில் அக்கறை இல்லை என்ற எண்ணம் எனக்கு உள்ளது. அவர்கள் அணிதிரட்டலுக்கு அழைப்பு விடுத்தால், அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அது செய்யப்படவில்லை. இருக்கும் சக்திகளும், ஊடகங்களும் நமக்குத் தெரிய வேண்டியதை மட்டுமே சொல்கின்றன. விவாதங்கள் குறைந்து போய், மேலும் மேலும் பரப்புரைகள் தான் நடக்கின்றன” என்று கொங்கா மேலும் தெரிவித்தார்.  

பல்கலைக்கழக ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக சோர்போன் சதுக்கத்தில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

இத்தாலிய மாணவரான லோரென்சோ, உக்ரேனில் நடக்கும் போர் 'ஒரு மோசமான நிலைமை' என்று கூறினார். இந்த மோதலின் முடிவு என்னவாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. நான் பயப்படுகிறேன், ஆனால் இந்த விஷயத்தைப் பற்றிய அடிப்படைகள் அல்லது அறிவு எனக்கு இல்லை.'

ரஷ்யாவில் சண்டையிடும் யோசனையைப் பற்றி தான் மகிழ்ச்சியடைய மாட்டேன் என்று லோரென்சோ வலியுறுத்தினார்: 'நான் நினைக்கிறேன், யாரும் இருக்க மாட்டார்கள். போர் நேர்மறையானது அல்ல. மனித மாண்பை மதிக்காத பொருளாதார, அரசியல் நலன்கள் இதன் பின்னணியில் உள்ளன. ... ஈராக்கில் முன்கூட்டிய போர் நடந்தது, ஆனால் பேரழிவு ஆயுதங்கள் எதுவும் அங்கு இல்லை (வாஷிங்டன், லண்டன் மற்றும் ரோம் ஆகியவை 2003 இல் ஈராக் மீதான தங்கள் படையெடுப்பை நியாயப்படுத்துவதற்காக அங்கு இருப்பதாக கூறின). இளைஞர்களாகிய நாம் இதைப் பற்றிப் பேசுகிறோமா என்று தெரியவில்லை. நமக்குத் தெரியாதது, ஆனால் பொதுமக்களாக நம்மைப் பாதிக்கும் நலன்கள் இவைகளாக இருக்கின்றன' என்று லோரென்சோ தெரிவித்தார்.

செப்டாரியா என்பவர், பிரான்சில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார கஷ்டங்கள் பற்றி உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார். அவரது தந்தை மற்றும் சகோதரர் பிரெஞ்சு இராணுவத்தில் உள்ளனர். 'எனது குடும்பத்தின் உதவியுடன் கூட, மாத இறுதியில் சாப்பிடுவதில் எனக்கு பிரச்சினைகள் உள்ளன. எனவே, வேலை செய்ய வேண்டிய மாணவர்கள் தங்கள் படிப்பின் மேல் கவனத்தை எவ்வாறு செலுத்த முடியும் என்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. நான் வேலை செய்ய முயற்சித்தேன், ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை.'

Septaria 

இந்தப் பெண் மேலும் கூறியதாவது: எனது சகோதரர் சில காலத்திற்கு முன்பு ஆபிரிக்கா சென்றார். குறிப்பாக விபத்தில் அவர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்ததால் நான் மிகவும் கவலை அடைந்தேன். நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், அவர் அதில் பாதிக்கப்பட வில்லை, ஆனால் இது எங்களுக்கு ஒரு நிலையான கவலையாகும். என் தந்தையைப் பொறுத்தவரை, அவர் கிட்டத்தட்ட அவரது தொழில் வாழ்க்கையின் முடிவில் இருக்கிறார், அவருக்கு ஏற்கனவே எவ்வளவோ கொடுத்திருக்கும் போது அவரிடம் அதிகமாக கேட்கப்படுகிறது என்று நான் பயப்படுகிறேன்.'

உலக சோசலிச வலைத் தள ஊடகவியலாளர்களுடன் பேசுவதில் தான் மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார்: 'சரி, வாருங்கள், போருக்குச் செல்வோம்' என்று சொல்லும் அளவுக்கு ஆபத்தான மக்கள் இன்னும் இல்லாமல் இருப்பதைக் கண்டு நான் ஆறுதலாக உணர்கிறேன்' என்று இந்தப் பெண்மணி தெரிவித்தார்.

ஒரு மொராக்கோ மாணவரான வாலிட் என்பவர், பிரெஞ்சு பத்திரிகைகளில் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகள் மீதான கண்டனங்களின் பாசாங்குத்தனத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்: 'எப்போதும் ஒரு இரட்டை நிலைப்பாடு உள்ளது. அது ஏகாதிபத்திய நலன்களைப் பொறுத்தது. சவூதி அரேபியா எங்கு செல்கிறார்கள் என்பதை நன்கு அறிந்தே பிரான்ஸ் எப்போதும் ஆயுதங்களை விநியோகம் செய்கிறது. சவூதி அரேபியா ஏமனிலுள்ள மக்களைக் கொல்லும். இதுதான் இந்த முதலாளித்துவ அமைப்புமுறையின் நலன்களின் வேலையாக இருக்கிறது' என்று கூறினார்.

சர்வதேச அளவில் இளைஞர்களை அணிதிரட்டவும், தொழிலாளர்களின் போராட்டங்களின் தற்போதைய எழுச்சியில் தலையிடவும், போரை நிறுத்த ஐரோப்பா மற்றும் உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தவும் உலக சோசலிச வலைத் தள முன்னோக்கிற்கும் வாலிட் தனது அனுதாபத்தை வெளிப்படுத்தினார்.

“மொராக்கோவில், மக்களுக்கு இடையிலான ஒற்றுமை எப்போதும் பலனளிக்கும் என்று நாங்கள் எப்போதும் நினைக்கிறோம். நிச்சயமாக, இந்த நேரத்தில் அங்கு வேலை செய்ய போதுமான வழிகள் நம்மிடம் இல்லை, போர்கள் இருந்தபோதிலும், ஆனால் கொள்கையளவில் நம் அனைவருக்கும் இடையே ஒற்றுமையைக் காட்ட வேண்டும்... அதே நேரத்தில் கண்டனங்கள், அடக்குமுறை அல்லது ஆதிக்க சூழ்நிலைகள் உள்ளன. ஆனால் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே எப்போதும் இந்த ஒற்றுமை உணர்வு உள்ளது.”

“இந்த நேரத்தில் பிரான்சில் இது ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான மக்களின் போராட்டம். இது உழைக்கும் வர்க்கங்களுக்கு இடையிலான ஒற்றுமை. ஆனால் அதைச் செய்ய, உங்களுக்கு நிறைய வேலை செய்ய வேண்டியதாக இருக்கிறது, தங்கள் நாட்டை மாற்றுவதில் ஆர்வமுள்ள அனைத்து மக்களுக்கும் இடையில் உண்மையில் கூட்டணிகள் தேவையாக உள்ளது” என்று வாலிட் தெரிவித்தார்.

Loading