சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பெருகிவரும் வெகுஜன எதிர்ப்புக்களுக்கு மத்தியில், இலங்கையின் எதேச்சதிகார ஜனாதிபதி உள்ளூராட்சித் தேர்தல்களை இரத்து செய்கிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக மீறி, இலங்கையின் தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மார்ச் 9 நாடளாவிய ரீதியில் நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தலை இரத்து செய்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்கும் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், பிரமாண்டமான அவமானகரமான தோல்வியை ஏற்படுத்தும் என்ற பீதியில், பல வாரங்களாக, தேர்தலை இரத்துச் செய்ய வேலை செய்து வருகிறது.

வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு அரசாங்கம் பணத்தை வழங்க மறுத்ததால், மார்ச் 9 அன்று திட்டமிட்டபடி வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று கடந்த வாரம் தேர்தல் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதன் போது, 'அத்தியாவசிய அரசாங்க செலவுகளுக்கு' மட்டுமே நிதியளிக்க ஜனாதிபதியின் உத்தரவை திறைசேரி மேற்கோள் காட்டியது.

நேற்று, பாராளுமன்றத்தில் பேசுகையில், விக்கிரமசிங்க, தேர்தல் நடக்காது என்றும், அதை நடத்த முயற்சிக்கும் அதிகாரிகள் மீது பொலிஸாரை ஏவுவேன் என்றும் ஆணவத்துடன் பிரகடனம் செய்தார்.

8 பெப்ரவரி 2023 அன்று கொழும்பு கோட்டைக்கு அருகில் அணிதிரட்டப்பட்டிருந்த இலங்கை இராணுவத் துருப்புக்கள் [Photo: Facebook Malainadu]

ஒரு சர்வாதிகாரியின் தோரணையை எடுத்துக்கொண்ட அவர், “தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. முதலில், ஒத்திவைக்க எந்தத் தேர்தலும் இல்லை”என இழிந்த முறையில் அறிவித்தார். தேர்தலை முன்னெடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேவையான கோரெண் (கோரம்) இல்லை என்று, இதற்கு முன்பு கூறப்படாத அபத்தமான கூற்றுடன் அவர் இந்த வலியுறுத்தலை நியாயப்படுத்தினார். உண்மையில், ஆணைக்குழு ஏற்கனவே ஒரு வருடம் காலதாமதமாகியுள்ள தேர்தலை ஏற்பாடு செய்யாமல் இருந்திருப்பின் -அனைத்து இலங்கையர்களின் ஜனநாயக உரிமைகள் பற்றி எதுவும் கூறாமல்- சட்டத்தை மீறியிருக்கும். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வர்த்தமானியில் வேட்புமனு அழைப்பு மற்றும் தேர்தல் திகதியையும் முன்னர் வெளியிட்டதன் மூலம் அரசாங்கமே இதை அங்கீகரித்துள்ளது.

திறைசேரி செயலர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு பணம் கொடுத்தால், “செயலாளரை பதவி நீக்கம் செய்து, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாரிடம் கேட்டுக் கொள்வேன். வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குப் பொறுப்பான அரசாங்க அச்சகத்துக்கும்ஃ இதுவே நடக்கும். அவர்கள் அனைவரும் வேலை இழப்பார்கள்,” என்று விக்கிரமசிங்க மேலும் கூறினார்.

எப்போதாவது தேர்தல் நடந்தால் அது எப்போது நடக்கும் என்று விக்கிரமசிங்க எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. அத்தகைய வாக்குறுதிக்கு ஒரு ரூபாய்க்கேனும் மதிப்பிருக்காது.

சமீப நாட்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில், 'பொருளாதார மீட்சி' ஏற்படும் வரையில் தேர்தல்கள் நடக்காது என்றும் அத்தகைய “பொருளாதார மீட்சி” “பொது ஒழுங்கில்” தங்கியிருக்கின்றது என்றும் அவர் கூறியிருந்தார். 'பொருளாதார மீட்சி' என்பது, சர்வதேச மூலதனத்திற்குக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக இலங்கையின் ஏழ்மையான தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களிடம் இருந்து தேவையான வருவாய் உபரிகளைப் பிழிந்து எடுப்பதே ஆகும்.

யதார்த்தம் என்னவெனில், விக்கிரமசிங்கவும் இலங்கை முதலாளித்துவமும் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை தீவை அதிரவைத்த, கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து விரட்டிய, அதற்கு முன்னதாக அவரது சகோதரரான மகிந்த ராஜபக்ஷவை இராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்த பாரிய வெகுஜன எழுச்சி மீண்டும் தலைதூக்குவதையிட்டு பீதியடைந்துள்ளனர்.

விக்கிரமசிங்க கடந்த வாரம் பேசும்போது, 'நாடு அராஜகத்திற்கு செல்ல அனுமதிக்க மாட்டேன்' என்று சபதம் செய்தார். இதன் மூலம், அவர் முதலாளித்துவ அரசின் முழுப் பலத்தையும் பயன்படுத்தி, மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளை நசுக்கி, ஆளும் வர்க்கத்தின் கொடூரமான சமூகச் செலவு வெட்டுக்கள், தனியார்மயமாக்கல் மற்றும் மின்சார கட்டணம் மற்றும் ஏனைய கட்டண உயர்வுகளை கட்டவிழ்த்துவிடும் 'பொருளாதார மீட்புத் திட்டத்திற்கு' எதிராக வளரும் வெகுஜன சவாலை ஒடுக்குவதில் உறுதியாக இருக்கிறார். ஏற்கனவே, இந்தத் திட்டம் பாரிய வறுமைக்கு வழிவகுத்துள்ளது. மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு உண்ணும் உணவின் எண்ணிக்கையைக் குறைக்கத் தள்ளப்பட்டுள்ளனர்.

23 பெப்ரவரி 2023 அன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர உரையாற்றினார்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), உள்ளாட்சித் தேர்தல்களை அரசாங்கம் எதேச்சதிகாரமாக இரத்து செய்வதை கடுமையாக எதிர்க்குமாறு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது. 'உள்ளூராட்சி தேர்தலை தடுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் நகர்வுகளை சோசலிச சமத்துவக் கட்சியாகிய நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்' என்று சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் தீபால் ஜயசேகர நேற்று கொழும்பில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 'இது உழைக்கும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதலாகும்' என்று அவர் குறிப்பிட்டார்.

தீவை அழிக்கும் சமூகப் பொருளாதார நெருக்கடிக்கு அதன் சொந்த சோசலிச தீர்வை அபிவிருத்தி செய்யும் சோசலிச சமத்துவக் கட்சி உள்ளூராட்சித் தேர்தல்களில் தலையிட்டு, தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரட்டுவதற்கான அதன் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போராட்டம், சர்வதேச முதலாளித்துவத்தால் கொடுக்கக் கூடியது எது என்பதில் அன்றி, வெகுஜனங்களின் தேவைகளில் இருந்தே தொடங்குகிறது.

வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர், மத்திய பெருந்தோட்ட மாவட்டத்தில் மஸ்கெலியா மற்றும் கொழும்புக்கு அருகில் உள்ள கொலன்னாவ ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கு அது நிறுத்தியுள்ள 53 வேட்பாளர்கள், பல வாரங்களாக, அமெரிக்கா-நேட்டோ ரஷ்யா மீது தூண்டிவிட்டுள்ள போருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராக ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கு ஆதரவைத் திரட்ட போராடி வருகின்றனர். 

'விக்கிரமசிங்கவின் நடவடிக்கை, வெகுஜனங்களின் ஜனநாயக உரிமைகள் மீதான அவரது அரசாங்கத்தின் பரந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாகும்' என்று ஜயசேகர கூறினார். “சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள அரசாங்கத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் போராட்டங்களை நசுக்குவதற்கான தயாரிப்பிலேயே இது மேற்கொள்ளப்படுகிறது.”

ஒரு சமீபத்திய கருத்துக் கணிப்பு, அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு வெறும் 10 சதவீதமாக இறங்கியுள்ளதாக காட்டியுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல்களில் ஒரு மோசமான தோல்வி, அரசியல் ஸ்தாபனத்திற்குள் உள்-மோதலை தீவிரப்படுத்தும் என்ற அரசாங்கத்தின் அச்சத்தை சோ.ச.க. பொதுச் செயலாளர் விளக்கினார். ஆனால், அதன் மிகப் பெரிய கவலை என்னவென்றால், அத்தகைய தோல்வி அதன் சட்டவிரோத தன்மையை மேலும் அம்பலத்துக்கு கொண்டுவந்து எதிர்ப்பைத் தூண்டவும் உதவும் என்பதாகும்.

பெரும் வர்த்தகர்களின் பேர்போன பிரதிநிதியும் அமெரிக்க சார்பு கைக்கூலியுமான விக்கிரமசிங்க, கடந்த ஜூலை மாதம், இராஜபக்ஷவின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஆளும் வர்க்க சதி மூலம் ஜனாதிபதி பதவிக்கு உயர்த்தப்பட்ட போது, பாராளுமன்றத்தில் அவருடைய கட்சியின் ஒரே பிரதிநிதியாக இருந்தார். அவரை பதவிக்கு கொண்டுவர தொழிற்சங்கங்களின் ஆதரவுடனான எதிர்க்கட்சிகள் உடந்தையாக இருந்தன.

தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயார்படுத்தும் நிலைப்பாட்டில் இருந்து கடந்த ஆண்டு கொந்தளிப்பான நிகழ்வுகளின் படிப்பினைகளை ஜயசேகர மீளாய்வு செய்தார். வெகுஜன எழுச்சியானது தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சமூக பலத்தையும், முதலாளித்துவத்தால் தூண்டிவிடப்பட்ட வகுப்புவாத பிளவுகளை முறியடிக்கும் அதன் திறனையும் நிரூபித்தது. ஆனால், தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தன்னை உருவாக்கிக் கொண்டு கிராமப்புற மக்களை அதன் பின்னால் அணிதிரட்டிக்கொள்ள வேண்டியதன் அவசரத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டியது.

வெகுஜனங்களின் போர்க்குணம் மற்றும் வெகுஜன இயக்கத்தின் பரவல் இருந்தபோதிலும், ஆளும் வர்க்கத்தால் இராஜபக்ஷவின் விலகலைப் பயன்படுத்திக் கொள்ள முடிந்ததுடன், அரசாங்கத்தை மறுசீரமைத்து அந்த முயற்சியை மீண்டும் மேற்கொள்ள ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்புகளை எதிர்க்கட்சிகள் ஆதரித்தன.

வெகுஜன எழுச்சியின் தொடக்கத்தில் இருந்த்தே, அரசாங்கம் மற்றும் முதலாளிகளின் தாக்குதல்களுக்கு எதிர்ப்பை ஒழுங்கமைக்கும் வழிமுறையாக, முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவத்தின் அனைத்து அரசியல் பிரதிநிதிகளிடமிருந்தும் முற்றிலும் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பவும் தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்யவும் சோசலிச சமத்துவக் கட்சி போராடியது.

'எரியும் சமூக மற்றும் ஜனநாயக பிரச்சனைகளுக்கு முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் தீர்வு இல்லை' என்று ஜயசேகர தொடர்ந்தார். “இராஜபக்ஷவின் மதிப்பிழந்த பாராளுமன்றக் கூட்டாளிகளால் அமைக்கப்பட்ட முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்திற்கு மாறாக, 'சுயாதீனமான தொழிலாளர் ஆட்சியதிகாரத்தினதும் புரட்சிகர அரசியல் பதிலீட்டினதும் ஒரு அங்கமாக, இந்த நடவடிக்கைக் குழுக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டை கட்டியெழுப்புவதற்கான பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கினோம்.'

நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் சிரச தொலைக்காட்சி, எம்டிவி, டிஎன்எல், கெபிடல் நியூஸ், சமூகம் மீடியா மற்றும் பிரதான தமிழ் பத்திரிகையான வீரகேசரி உட்பட ஆறு பிரதான ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

அரசாங்கம் தேர்தல்களை இரத்து செய்வது தொடர்பில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடும் பல்வேறு எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைத்து செயற்படுமா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, ஜயசேகர பின்வருமாறு பதிலளித்தார்: உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் வெறித்தனமான தமிழ் விரோத பேரினவாதத்தை ஊக்குவிப்பது உட்பட ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு தாங்களே உடந்தையாக இருந்த நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, அவை அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் ஜனநாயக விரோத சிக்கன நடவடிக்கைகளை ஆதரிக்கின்றன.

இலங்கையின் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயகத் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு விரோதமான எதிர்க்கட்சிகள், மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளிடம் முறையீடு செய்வதன் மூலமே விக்கிரமிசிங்க தேர்தலை இரத்து செய்தமைக்கு பிரதிபலிக்கின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் தொடங்கி இந்த நாடுகள் அனைத்தும் ஏகாதிபத்திய கொள்ளையடிப்பு மற்றும் பினோஷே மற்றும் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஈரானின் ஷா தொடக்கம் இன்று எகிப்தின் அல்-சிசிஇ வரையிலான கொடூரமான தொழிலாள வர்க்க-விரோத சர்வாதிகாரத்தை நிலைநாட்டியது உட்பட சூழ்ச்சிகளின் நீண்ட மற்றும் இரத்தக் களறி வரலாற்றைக் கொண்டுள்ளன. தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான மூன்று தசாப்த கால இரத்தக் களறி உள்நாட்டுப் போரில் அவை இலங்கை அரசாங்கங்களுக்கு ஆதரவளித்தன.

கொள்ளையடிப்பு மற்றும் கைப்பற்றல் மூலம் தங்கள் நெருக்கடியை ஈடுசெய்யும் அவநம்பிக்கையான முயற்சியில், அவை இப்போது வாஷிங்டனின் தலைமையில் ரஷ்யாவுடன் போரை தூண்டிவிட்டு, அதை நாடகபாணியில் தீவிரப்படுத்தி வருவதுடன் உலகை அணு ஆயுத வெடிப்புக்கு நெருக்கமாக கொணர்ந்துள்ளன. 

எல்லாவற்றுக்கும் மேலாக, வாஷிங்டனும் அதன் நட்பு நாடான இந்தியாவும், சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவ-மூலோபாய தாக்குதலுக்கு இலங்கை தீவை இன்னும் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வதற்கு இலங்கையின் பொருளாதார நெருக்கடியை இரக்கமின்றி பயன்படுத்திக்கொள்கின்றன. கடந்த வாரம் கூட 29 பென்டகன் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அரசாங்கத்துடன் இரகசியப் பேச்சுக்களை நடத்துவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.

நிச்சயமாக, அனைத்து மேற்கத்திய சக்திகளும் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்திற்குப் பின்னால் நிற்கின்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் 'அரசியலமைப்புக்கு முரணான முயற்சிகள்' தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

புதன்கிழமை பாராளுமன்றத்தில் பேசிய ஜே.வி.பி பிரச்சார செயலாளர் விஜித ஹேரத், சர்வதேச நாணய நிதியத்தின் கழுகுகளை ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக தூக்கிப் பிடிக்க முயற்சித்தார். “உதவிகளைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு மக்கள் ஆணை தேவை என்று சர்வதேச நாணய நிதியம் தெளிவாக அறிவித்துள்ளது,” என அவர் அறிவித்தார். தனது கட்சி ஆர்ப்பாட்டங்களை நடத்தும், சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் மற்றும் 'ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும்' என்றும் ஹேரத் கூறினார்.

கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷவின் கட்சியில் இருந்து பிரிந்த ஒரு குழுவான சுதந்திர மக்கள் காங்கிரஸ், 'மக்களின் வாக்குரிமையைச் சுற்றியுள்ள தற்போதைய நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி' வெளிநாட்டு தூதரகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் இலங்கையின் அபிவிருத்திகளை ஒரு முன்னோடியாகவும் எச்சரிக்கையாகவும் கருத வேண்டும். எல்லா இடங்களிலும் முதலாளித்துவம் ஜனநாயக ஆட்சி வடிவங்களை தகர்த்து, தொழிலாள வர்க்கப் போராட்டங்களை குற்றமாக்க முற்படுவதுடன் பாசிச பிற்போக்குத்தனத்தை வாந்தி எடுக்கின்றன. ஏகாதிபத்தியப் போர் மற்றும் முதலாளித்துவ சிக்கனத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் போன்ற ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதானது, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரட்டலையும், எல்லைகள் மற்றும் கண்டங்களுக்கு அப்பால் அதன் போராட்டங்களை ஒன்றிணைப்பதையும் மற்றும் தொழிலாளர் ஆட்சி அதிகாரத்திற்கான போராட்டத்தையும் அவசியமாக்கியுள்ளது.

ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்காக!

உள்ளூராட்சித் தேர்தலை முடக்கும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்திடு! ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு! 

விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் வேலைநிறுத்தமும் ஆர்ப்பாட்டமும் செய்தனர் 

இலங்கை சோ.ச.க. உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகிறது

Loading