ஓரியன் 23 : ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு, பிரான்ஸ் தனது மிகப்பெரிய இராணுவ பயிற்சியை நடத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த 25ம் திகதி, ஓரியன் 2023 என்ற பேரில், பிரெஞ்சு இராணுவத்தினுடைய   போர்ப் பயிற்சி நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான பாராசூட் படையினர்கள், தெற்கு பிரான்சின் டார்ன் பகுதியில் பாராசூட்டிலிருந்து குதித்து பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். மறுநாள் காலை, மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள சேட் பகுதியில் போர்க் கப்பல் பயிற்களையும் படையினர்கள் மேற்கொண்டனர்.

ஜனவரி 5, 2023 அன்று பிரெஞ்சு இராணுவத்தால் வழங்கப்பட்ட இந்த தேதியிடப்படாத புகைப்படம் AMX-10 RC டாங்கிகளைக் காட்டுகிறது. [AP Photo/Jeremy Bessat/Armee de Terre]

ஓரியன் 2023 இன் முதல் கட்டப் பயிற்சியில், 7,000 பிரெஞ்சு, அமெரிக்கன், இத்தாலியன், ஸ்பானிஷ், பெல்ஜியம் மற்றும் பிரிட்டிஷ் படையினர்கள் உள்ளனர், அவர்கள் அனைவரும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரை வழிநடத்தும் நேட்டோ கூட்டணியின் ஒரு பகுதியாக உள்ளனர். இந்த வாரத்தில், 2,300 ராணுவ வாகனங்கள் போர்ப் பயிற்சியில் ஈடுபடுத்தப்படும். இதில் 40 போர் விமானங்கள், 100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள், 30 போர்க்கப்பல்கள் மற்றும் சார்ல்ஸ் டு கோல் என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலும் அடங்கும்.

இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய ஜெனரல் ஈவ் மெட்டாயரின் கருத்துப்படி, 'இவ்வளவு நீண்ட காலத்திற்கு இந்த அளவிலான பயிற்சியை நாங்கள் ஒருபோதும் மேற்கொள்ளவில்லை' என்று தெரிவித்தார்.  'கிடைத்துள்ள வளங்களின் அளவு, வெவ்வேறு படைகளுக்கு இடையே உள்ள பலத்தின் அளவு, நான் இராணுவத்தில் சேர்ந்ததிலிருந்து கேள்விப்பட்டதே இல்லை' என்று மற்றொரு அதிகாரி France 3 செய்தி ஸ்தாபனத்திடம் கூறினார்.

எவ்வாறாயினும், பிரெஞ்சு மண்ணில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த வார போர்ப் பயிற்சிகள் சில வாரங்கள் மட்டுமே நீடிக்கும். 12,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை உள்ளடக்கிய ஆபரேஷன் ஓரியனின் இரண்டாம் கட்டமானது பிரான்சின் ஷாம்பெயின் பகுதியில் ஏப்ரல் நடுப்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதலாளித்துவ பத்திரிகைகளில், ஓரியன் 23 பயிற்சிகள், ரஷ்யாவிற்கு எதிரான ஒரு முழுமையான தரைப் போருக்கான நேட்டோவின் மிகவும் மேம்பட்ட தயாரிப்புகளின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட வெளிப்படையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உண்மையில், உக்ரேனுக்கு தாக்குதல் ஆயுதங்களை வழங்குவதன் மூலம், நேட்டோ சக்திகள் ஏற்கனவே ரஷ்யாவிற்கு எதிரான ஒரு நடைமுறைப் போரில் ஈடுபட்டுள்ளன.

அரசினுடைய செய்தி நிறுவனமான பிரான்ஸ்24, இந்தப் போர்ப் பயிற்சிகள், “சம பலம் கொண்ட எதிரி அரசுக்கு எதிராக அதிக தீவிர மோதலுக்கு பிரெஞ்சு இராணுவத்தை தயார்படுத்த உதவும்.… உலகளாவிய பூகோள அரசியல் எழுச்சியின் சூழலில், பலத்தை பயன்படுத்துவது இனி தடைசெய்யப்படவில்லை, மேலும் ஒரு பெரிய மோதலுக்கான வாய்ப்பு இனி அறிவியல் புனைகதையும் இல்லை' என்று தெரிவித்தது.

மாலியில், பிரான்சின் இரத்தம் தோய்ந்த ஏகாதிபத்தியப் போரில், நவீன போர்-குண்டுவீச்சு விமானம் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கு இராணுவத்தை அனுமதித்திருந்தாலும், அதன் தரை நடவடிக்கைகள் சிறிய சிறப்புப் படை குழுக்களை நம்பியிருந்தன. ஜெனரல் வின்சென்ட் டெஸ்போர்ட்ஸ் பிரான்ஸ் 24 இடம், ஓரியன் 23 பயிற்சிகள், 'இரண்டு தசாப்தங்களாக நாங்கள் சிறிய இராணுவ நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருவதால் நாம் இழந்த பெரிய கூட்டுப் படைகளை நிர்வகிப்பதற்கான அறிவை மீட்டெடுக்க அவசியமானது' என்று கூறினார்.

கற்பனையாக, இந்த போர்ப் பயிற்சிகள், காட்சி ஊடகங்களில் பரவலாக வெளியிடப்பட்டுள்ளது. ரஷ்யாவைப் பற்றிய மெல்லிய மறைமுகக் குறிப்பில், 'மெர்குரி' என்றழைக்கப்படும் எதிர் சக்தியானது 'ஆர்ன்லேண்ட்' என்று அழைக்கப்படும் ஒரு பிரெஞ்சு ஆதரவு பகுதியை ஆக்கிரமித்துள்ளது. மேலும் பிரெஞ்சு இராணுவத்தின் குறிக்கோள், ஆக்கிரமிக்கப்பட்ட ஆர்ன்லேண்ட் பகுதியில் ஒரு பாலத்தை நிறுவி, மெர்குர் படைகளை பின்னுக்குத் தள்ளத் தொடங்குவதாகும். ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு உக்ரேன் அல்லது கிரிமியாவில் நடத்தப்படும் இத்தகைய காட்சி சந்தேகத்திற்கு இடமின்றி ரஷ்யாவுடன் நேரடி மோதலுக்கான நேட்டோவின் போர்க்கள திட்டங்களில் ஒரு முக்கியமான பகுதியாகும்.

ஓரியன் 23 இன் இன்னொரு குறிக்கோளானது, பிரெஞ்சு அரசின் போருக்கான தளத்தைத் தயாரிப்பதாகும். ஓரியன் பயிற்சி நடவடிக்கையானது ஒரு உருவகப்படுத்தப்பட்ட ''தகவல் போரையும்'' உள்ளடக்கியிருந்தது. அங்கு இரு தரப்பினரும் தங்கள் செயல்களின் அறிக்கையை கட்டுப்படுத்த வேலை செய்தனர். உக்ரேனியப் படைகள் செய்த போர்க்குற்றங்களை வெள்ளையடிப்பதுடன் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரேனிய நவ-நாஜி இராணுவக் குழுக்கள் ஆற்றிய பங்கு பற்றிய பொதுக்கருத்தை நசுக்க நேட்டோ சக்திகளின் முயற்சிகளுக்கு ஏற்ப இது உள்ளது.

பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத் தளத்தின்படி, இந்த பயிற்சியானது இராணுவம் அல்லாத பல அமைச்சகங்களையும் உள்ளடக்கியதோடு, 'பிரெஞ்சு தேசத்தின் ஒற்றுமைக்காக உழைக்கும் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர்களின் ஆற்றல்களையும் ஒன்றிணைக்கிறது.'' இதனை வேறுவார்த்தைகளில் கூறினால், பொலிஸ் மற்றும் பெயரளவில் பிரெஞ்சு அரச இயந்திரத்தின் சிவிலியன் பிரிவுகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்காகவும், மொத்தப் போர் ஏற்பட்டால், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் மீதான ஒடுக்குமுறையை அதிகரிக்கவும் தயாராகி வருகின்றன என்பதைக் குறிக்கிறது.

ஆபரேஷன் ஓரியன் பிரான்சில் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்புக்கு மத்தியில் நடக்கிறது. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் பரவலாக இழிவுபடுத்தப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக அணிவகுத்துச் செல்லும் மில்லியன் கணக்கான மக்களுக்கு, 'இனி பணம் இல்லை' என்று கூறி அவர் நியாயப்படுத்துகிறார்.

பிரெஞ்சு ஆளும் வர்க்கம் மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளின் ஏகாதிபத்திய அபிலாஷைகளை தொடர்வதற்கு, ​​நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்கள் வீசப்படுகின்றன. ஒரியோன் 23ஐ ஏற்பாடு செய்ய 35 மில்லியன் யூரோக்கள் செலவாகிறதுடன், பில்லியன் கணக்கான யூரோக்கள் பெறுமதியான இராணுவ உபகரணங்களை இதற்கு ஈடுபடுத்துகிறது. இது மிகப் பெரிய பிரெஞ்சு இராணுவ மறுசீரமைப்பின் ஒரு பகுதி மட்டுமேயாகும். கடந்த ஜனவரியில், மக்ரோன் 2030 ஆம் ஆண்டிற்குள் பிரெஞ்சு இராணுவத்திற்காக 413 பில்லியன் யூரோக்களை செலவிடுவதாக உறுதியளித்துள்ளார் (2020-2025க்கான 300 பில்லியன் யூரோக்களுடன் ஒப்பிடும்போது). கடந்த ஆண்டு அக்டோபரில் நிறைவேற்றப்பட்ட ஒரு சிறப்புத் சட்ட திருத்தத்தில், இராணுவத்திற்கு 2023 பட்ஜெட்டில் மேலும் 3 பில்லியன் யூரோக்கள் சேர்க்கப்பட்டது.

பிரான்ஸ் சுமார் 2 பில்லியன் யூரோக்களை, மோதலின் தொடக்கத்திலிருந்தே உக்ரேனுக்கு ஆயுத விநியோகம் மற்றும் பிற உதவிகளுக்காக செலவிட்டுள்ளது. ஜனவரி 2023 இல், டசின் கணக்கான AMX-10 RCR இலகுரக டாங்கிகளை, உக்ரேனியப் படைகளுக்கு வழங்குவதற்கு உறுதியளித்த முதல் நேட்டோ தலைவர் மக்ரோன் ஆவார். இந்த ஆண்டு, பிரான்ஸ் 7.5 மில்லியன் யூரோ செலவிலான 30 சுயமாக இயக்கப்படும் பீரங்கிகளை உக்ரேனுக்கு வழங்குவதை நிறைவு செய்யும். மேலும், தற்போது பிரெஞ்சு மண்ணில் 2,000 ம் உக்ரேன் ராணுவத்தினர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

பரவலாக வெறுக்கப்பட்ட மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராகவும், ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனை பிரான்ஸ் ஆயுதம் ஏந்துவதற்கு ஆழ்ந்த மக்கள் எதிர்ப்பிற்கும் எதிராகவும் மில்லியன் கணக்கான மக்கள் அணிவகுத்து வருகின்றனர். ஓரியன் 23 பயிற்சிகள் மூலம் ரஷ்யாவுடனான போருக்கு பிரெஞ்சு இராணுவம் பகிரங்கமாகத் தயாராகி வருவது அவசியமான கேள்வியை எழுப்புகிறது:  மக்ரோனால் எப்படி இவ்வளவு துணிச்சலாக நூற்றுக்கணக்கான பில்லியன்களை இராணுவத்திற்கு செலுத்தி, ரஷ்யாவிற்கு எதிராக இரத்தக்களரியான போரைத் தயாரிக்க முடிகிறது?

போலி-இடது கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் ஆதரவினால் மட்டுமே ஜனாதிபதி இந்தக் கொள்கையை நிறைவேற்ற முடிந்தது. பெயரளவிற்கு மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தத்தை எதிர்க்கும் போலி-இடது அடிபணியாத பிரான்ஸ் கட்சித் தலைவர் ஜோன் லூக் மிலோன்சோன் மற்றும் பிரெஞ்சு சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளுடனான NUPES (புதிய மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஒன்றியம்) கூட்டணி. போருக்கான நிதியுதவிக்கும் தொழிலாள வர்க்கத்தின் மீதான மக்ரோனின் தாக்குதலுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறது.

மிலோன்சோன் மற்றும் தொழிற்சங்கங்கள் போரின் தொடக்கத்தில் இருந்து உக்ரேனுக்கு நேட்டோவின் ஆயுத விநியோகத்தை ஆதரித்து வருகின்றன. உக்ரேன் மீதான பிற்போக்குத்தனமான படையெடுப்பிற்கு புட்டினைத் தூண்டிவிடுவதற்கு, நேட்டோவின் பல ஆண்டுகால முயற்சிகளைத் தொடர்ந்தும் இவை வெள்ளையடித்து வந்ததோடு, இறுதியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெற்றியும் பெற்றன.

இதே சக்திகள் பிரான்சின் மறுஆயுதமயமாக்கலுக்கான பாரிய முதலீடுகளையும் ஆதரிக்கின்றன. இந்த மாத தொடக்கத்தில், சோசலிஸ்ட் கட்சியின் (PS) உறுப்பினரான அன்னா பிக் மற்றும் ஜோன்-லூக் மெலன்சோனின் NUPES கூட்டணி இணைந்து கையொப்பமிட்ட பாராளுமன்ற அறிக்கை, பிரான்ஸை 'ஒரு பெரிய மோதலின் கருதுகோளுக்கு' தயார்படுத்துவதற்கான பயிற்சிகளுக்கு இன்னும் கூடுதலான நிதியுதவிக்கு அழைப்பு விடுத்தது.

ஓரியன் 23 பயிற்சிகளை, முன்னெப்போதும் இல்லாத அளவு ஐரோப்பாவில் முழுமையான போருக்கான தயாரிப்புகளின் மிகவும் முன்னேறிய நிலை பற்றிய எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு, ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரின் மற்றொரு பெரிய விரிவாக்கம், அணுவாயுத சக்திகளுக்கு இடையே ஒரு உலகளாவிய மோதலாக வெடிக்கும் அச்சுறுத்தலையும் கொண்டுள்ளது. 

பிரான்சையும் இதர நேட்டோ நாடுகளையும் ஆளுகின்ற நிதிய தன்னலக்குழுவானது, போரின் இழப்புகள் மற்றும் செலவுகளை பெருமளவில் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்துகிறது. இந்த நிலைமையில், ஓய்வூதிய வெட்டுக்கள், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான பிற தாக்குதல்களை எதிர்க்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ரஷ்யா மீதான நேட்டோவின் போருக்கு எதிரான போராட்டத்தை தமது கையில்  எடுக்க வேண்டும்.

Loading