ஜேர்மன் அதிபர் ஷோல்ஸ் ரஷ்யாவிற்கு எதிரான மறுஆயுதமயமாக்கலுக்கும் போருக்கும் அழுத்தம் கொடுக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஒரு வருடத்திற்கு முன்பு, பெப்ரவரி 27, 2022 அன்று, ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் (சமூக ஜனநாயகக் கட்சி-SPD) ஜேர்மன் வெளியுறவுக் கொள்கையில் ஒரு 'புதிய சகாப்தம்' என்று பிரகடனப்படுத்தி தனது இழிவான பேச்சை வழங்கினார். நேட்டோவினால் தூண்டப்பட்ட உக்ரேன் மீதான ரஷ்யாவின் பிற்போக்குத்தனமான படையெடுப்பிற்குப் பின்னர், அவர் கியேவிற்கு விரிவான ஆயுதங்களை வழங்குவதாகவும், கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மன் இராணுவத்தின் (Bundeswehr) துருப்புக்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பையும் அறிவித்தார். அவரது உரையில் 100 பில்லியன் யூரோக்கள் இராணுவத்திற்கு சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டது. இது ஹிட்லருக்கு பின்னரான மிகப்பெரிய தயாரிப்பாகும்.

ஜேர்மனியின் பேர்லினில், மார்ச் 2, வியாழன் அன்று, உக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு மற்றும் ஜேர்மன் பாதுகாப்புக் கொள்கைக்கான 'திருப்புமுனை' பற்றிய அவரது பிரகடனத்தின் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஜேர்மன் பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார் 2023 [AP Photo/Markus Schreiber]

கடந்த 2ம் திகதி அன்று, அவரது உரையின் ஆண்டு நிறைவையொட்டி, ஷோல்ஸ் மீண்டும் ஒரு அரசாங்க அறிக்கையை பாராளுமன்றத்தில் வழங்கினார். அது ஒரு வருடத்திற்கு முன்பு அவரது போர் உரையை தொடர்ந்தது. தனது தலைமையின் கீழ் ஜேர்மன் அரசாங்கம் ரஷ்யாவிற்கு எதிரான போரை தீவிரப்படுத்தும் மற்றும் ஆக்கிரமிப்பு இராணுவ மற்றும் பெரும் சக்தி கொள்கைக்கு ஜேர்மனி திரும்புவதை விரைவுபடுத்தும் என்பதில் அதிபர் உறுதியாக இருந்தார்.

அணுஆயுத சக்தியான ரஷ்யாவை தோற்கடிக்கும் வரை உக்ரேனில் போரைத் தொடர வேண்டும் என்று வாதிட்ட ஷோல்ஸ், வெளிப்படையாக இராஜதந்திர தீர்வை நிராகரித்தார். 'உங்கள் தலைக்கு துப்பாக்கி குறி வைக்கப்பட்டிருக்கையில் உங்கள் சொந்த அடிபணிவை தவிர பேச்சுவார்த்தை நடத்த முடியாது' என்று அவர் விளக்கினார். 'ரஷ்யாவினால் எந்த இராணுவ வெற்றியும் பெறமுடியாது, ஏனென்றால் நாங்களும் எங்கள் கூட்டாளிகளும் உக்ரேனுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறோம்' என்றார்.

பின்னர் அவர் ஜேர்மன் அரசாங்கம் 'கடந்த 12 மாதங்களில் 14 பில்லியன் யூரோக்களுக்கு மேல்' கியேவிற்கு ஆதரவை வழங்கியுள்ளது என்று பெருமையாக கூறினார். ஆயுத விநியோகம் கியேவை 'தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் விடாமுயற்சியுடன்' இருக்கவும் அனுமதித்தது. 'இது பல மாதங்களாக மிகவும் திறம்பட செயல்பட்டு வரும் பீரங்கி மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் காரணமாகும்,' என்று ஷோல்ஸ் தொடர்ந்தார். 'நாங்கள் தொடர்ந்து எங்கள் ஆதரவை விரிவுபடுத்துகிறோம்: இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து Patriot  வான் பாதுகாப்பு அமைப்பு, மார்டர் கவச வாகனம் மற்றும் லியோபார்ட் 1 மற்றும் 2 ரக யுத்த டாங்கிகள்' வழங்கப்பட்டன.

தற்போது, ரஷ்யாவிற்கு எதிராக நிலைகொள்வதற்கு ஒரு உண்மையான டாங்கிப்படை இராணுவத்தை நிறுவுவதற்கு ஜேர்மனி செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு மட்டும் ஏறக்குறைய 200 போர் டாங்கிகளுக்கு ஏற்றுமதி அனுமதிகளை வழங்கியுள்ளதுடன்  யுத்த டாங்கிகள் மற்றும் பிற கனரக ஆயுதங்களை வழங்குவதற்காக, பொதுவாக நடுநிலையான சுவிட்சர்லாந்து போன்ற பிற நாடுகளுக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறது.

ஷோல்ஸ் தனது உரையில், கியேவிற்கு கூடுதல் சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர் பீரங்கிகள், பலகுழல் ராக்கெட் லோஞ்சர்கள், பீரங்கி வெடிபொருட்கள், டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் சக்கர பீரங்கிகளை வழங்குவதாக உறுதியளித்தார். ஜேர்மனி 'மேலும் சுயமாக இயக்கப்படும் Geppard விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மற்றும் கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்பான IRIS-T ... வரும் வாரங்களில் தயாராக வைத்திருக்கும்.' அதே நேரத்தில், ஷோல்ஸ் 'நாங்கள் வெடிமருந்துகள் மற்றும் உதிரி பாகங்களின் நம்பகமான விநியோகத்தில் அதற்கான தொழில்துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்' எனக்கூறினார்.

ஷோல்ஸின் போர் பட்டியல் முடிவில்லாமல் தொடர்ந்தது. உக்ரேனிய இராணுவத்திற்கு வழங்கும் பயிற்சியில் ஜேர்மனி முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார். 'உக்ரேனில் இருந்து மொத்தம் 3,000 க்கும் மேற்பட்ட படையினர்   போரின் தொடக்கத்தில் இருந்து ஜேர்மன் இராணுவத்தின் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் 1,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஜேர்மனியில் உடனடியாக பயிற்சி தொடங்கப்படவுள்ளது' என்று அவர் கருத்து தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் முன்முயற்சிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில், ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேனிய படைகளுக்கு மத்திய பயிற்சி மைதானமாக உள்ளது.

அதிபர் தனது போர் நிகழ்ச்சி நிரலை நன்கு அறியப்பட்ட பிரச்சாரத்துடன் நியாயப்படுத்தினார். மத்திய கிழக்கு (ஈராக், சிரியா), மத்திய ஆசியா (ஆப்கானிஸ்தான்), வட ஆபிரிக்கா (லிபியா) மற்றும் ஐரோப்பாவில் (சேர்பியா) நேட்டோ போர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக முழு நாடுகளையும் அழித்திருந்தாலும், “ஐரோப்பிய சமாதான ஒழுங்கமைப்பை பாதுகாக்க' ஷோல்ஸ் உக்ரேனை ஆதரிப்பதாகக் கூறினார். அவரது அரசாங்கம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், 'நேட்டோ ஒரு போர்க் கட்சியாக மாறாமல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.' இத்தொடர்பாக, அவர் 'அமெரிக்க ஜனாதிபதியுடன் உடன்படுவதாக' தெரிவித்தார்.   

உண்மையில், பேர்லினும் வாஷிங்டனும் நீண்ட காலமாக 'போர்க் கட்சிகளாக' இருந்துள்ளன. டொன்பாஸில் உள்ள உக்ரேனிய இராணுவம் பெருகிய முறையில் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்படுவதால், அவர்கள் தங்கள் போர் முயற்சியை மேலும் அதிகரிக்கச் செய்கிறார்கள். தனிப்பட்ட உரையாடல் ஒன்றில் பைடெனைச் சந்திப்பதாக அவரது அரசாங்கம் அறிவித்த உடனேயே ஷோல்ஸ் அமெரிக்காவிற்குச் சென்றார். திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது: ஷோல்ஸ்  அங்கு வருவதற்கு முன்னர் உக்ரேனுக்கு மேலும் இராணுவ உதவியாக அமெரிக்க அரசாங்கம்  மற்றொரு $400 மில்லியன் உதவியை அறிவித்தது. இது இன்னும் ஒரு பெரிய நேட்டோ தலையீட்டிற்கு தயாராகி வருகிறது.

'சமாதானம்,' 'ஜனநாயகம்' மற்றும் சர்வதேச சட்டத்தின் பாதுகாப்பு என்று கூறப்படும் அனைத்து பேச்சுகளும் ஏகாதிபத்திய போரின் கொள்ளையடிக்கும் தன்மையையும் அதன் உண்மையான இலக்கையும் மறைக்க மட்டுமே உதவுகின்றன. அதன் இலக்கு உக்ரேனில் ரஷ்யா மீதான இராணுவ வெற்றி மற்றும் பூகோள மூலோபாய ரீதியாக மத்தியில் இருக்கும் மூலவளங்கள் நிறைந்த நாட்டை அடிபணியச் செய்து, கொள்ளையடிப்பதாகும்.

ஷோல்ஸ் தனது உரையில் 'இந்தப் போருக்கு ஒரே ஒரு மனிதன் மட்டுமே பொறுப்பு' என்றும் அதை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றும் கூறினார். 'மற்றும் அந்த மனிதனின் பெயர் விளாடிமிர் புடின்' என்றும் கூறினார். இந்தக் கூற்று முற்றிலும் முட்டாள்தனமானது. ரஷ்ய படையெடுப்பு பிற்போக்குத்தனமானது, ஆனால் அதற்கு ஒரு வரலாறு மற்றும் வரலாற்று காரணங்கள் உள்ளன, மேலும் அது ஏகாதிபத்திய சக்திகளால் தயாரிக்கப்பட்டு தூண்டப்பட்டது.

'உண்மையில், ரஷ்யாவுடனான மோதல் என்பது 1991ல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதில் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தொடங்கப்பட்ட முடிவற்ற தொடர் போர்கள் மற்றும் தலையீடுகளின் தொடர்ச்சி ஆகும்' என்று உலக சோசலிச வலைத்தளம் ரஷ்ய படையெடுப்பின் ஓராண்டு நிறைவைக் குறித்த முன்னோக்கில் 'ரஷ்யாவுடனான மோதல் நேட்டோவின் பல தசாப்தங்களாக ரஷ்யாவின் எல்லைகளுக்கு விரிவாக்கப்பட்டதன் மூலம் தூண்டப்பட்டது' என்று எழுதியது. 

ஆரம்பம் முதலே அதில் ஜேர்மனி முக்கிய பங்காற்றியது. பேர்லின் பெப்ரவரி 2014 இல் கியேவில் வலதுசாரி சதியை ஆதரித்து, ரஷ்ய-எதிர்ப்பு ஆட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வர Svoboda மற்றும் Right Sector போன்ற பாசிச சக்திகளுடன் கூட்டணி வைத்தது. அதைத் தொடர்ந்து, உக்ரேனிய இராணுவம் திட்டமிட்டு போருக்காகத் தயார் செய்யப்பட்டது. கடந்த டிசம்பரில், ஷோல்ஸின் முன்னோடியான அங்கேலா மெர்க்கல், மின்ஸ்க் ஒப்பந்தம் போன்ற இராஜதந்திர முயற்சிகள் உக்ரேனை ஆயுதமாக்குவதற்கு தேவையான நேரத்தைப் பெற்றுக்கொள்ள மட்டுமே உதவியது என்று ஒப்புக்கொண்டார்.

கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மன் நேட்டோ துருப்புக்களின் அளவு ரஷ்யாவிற்கு எதிரான போர் தயாரிப்பிற்கு சமமானது என்று ஷோல்ஸ் தனது உரையில் குறிப்பிட்டார். மேலும், ஜேர்மன் இராணுவம் லிதுவேனியாவில் ஒரு படைப்பிரிவைக் கொண்டுள்ளதோடு, போலந்து மற்றும் ஸ்லோவாக்கியாவின் வான் பாதுகாப்பினையும் ஆதரிக்கிறது. இந்த ஆண்டு நேட்டோவின் விரைவான தாக்குதல் படையை வழிநடத்துவதோடு, 'இதற்காக நாங்கள் 17,000 படையினரை உயர் தயார் நிலையில் வைத்திருக்கிறோம்' என்று அவர் கூறினார். 2025 முதல், ஜேர்மனி ஆரம்பத்தில் 30,000 படையினரை எதிர்கால நேட்டோ இராணுவக் கட்டமைப்பிற்காக தொடர்ந்து மற்றும் உயர் செயல்பாட்டுத் தயார்நிலையில் நிலைநிறுத்தவுள்ளது.

ஜேர்மன் போர் கொள்கை கிழக்கு ஐரோப்பா மற்றும் ரஷ்யாவிற்கு அப்பால் நீண்டுள்ளது. 2013-14ல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆக்கிரோஷமான வெளிநாட்டு மற்றும் பெரும் சக்திக் கொள்கைக்கு திரும்புவதை நடைமுறைப்படுத்த, உக்ரேனில் உள்ள மோதலை ஆளும் வர்க்கம் பயன்படுத்துகிறது. 20 ஆம் நூற்றாண்டில் இழந்த இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு, ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டும் 21 ஆம் நூற்றாண்டில் உலகின் மறுபகிர்வுக்கான போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஐரோப்பாவை அதன் தலைமையின் கீழ் ஒழுங்கமைக்கத் தயாராகிறது.

அவரது உரையில், ஷோல்ஸ் சீனாவை அச்சுறுத்தியதுடன், 'சர்வதேச அளவில் போட்டித்தன்மை கொண்ட பூகோள அரசியலில் ஐரோப்பா, 21 ஆம் நூற்றாண்டின் பன்முனை உலகில் தனக்கென சொந்தமாக உள்ளது மற்றும் தரநிலைகளை அமைக்கிறது' என்று பாராட்டினார். அவரது அரசாங்கம் ஏற்கனவே இந்த திசையில் முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 'உக்ரேன், மொல்டோவா மற்றும் எதிர்காலத்தில் ஜோர்ஜியா' ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒருங்கிணைக்கப்படுதல் மற்றும் 'ஐரோப்பாவில் பாதுகாப்புத் துறையின் நெருக்கமான ஒருங்கிணைப்பு' ஆகியவை இதில் அடங்கும். குறிப்பாக, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுடன் இணைந்து திட்டமிடப்பட்ட FCAS விமானப் போர் அமைப்பு மற்றும் 'ஐரோப்பாவின் வான் பாதுகாப்பை வலுப்படுத்த ஜேர்மனியால் தொடங்கப்பட்ட ஐரோப்பிய வான் பாதுகாப்பு (European Sky Shield) முன்முயற்சி' ஆகியவற்றை ஷோல்ஸ் பாராட்டினார்.

அவரது உரையின் மற்றொரு பகுதி ஜேர்மனியின் விரிவான இராணுவமயமாக்கலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இராணுவத்திற்கான சிறப்பு நிதியத்தால் நிதியளிக்கப்படும் பாரிய பாதுகாப்புத் திட்டங்களில்   F-35 போர் விமானங்களை வாங்குவதற்கு 'இந்த ஆண்டு ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்' என ஷோல்ஸ் குறிப்பிட்டார்.  மேலும், 'இராணுவத்தின் கையிருப்பில் இருந்து உக்ரேனுக்கு நாங்கள் வழங்கிய தானியங்கி பீரங்கிகள், வெடிமருந்துகள் மற்றும் பிற பொருட்களின் கையிருப்பை மீண்டும் நிரப்புவது எதிர்வரும் மாதங்களில் கவனிக்கப்படும்' என்றார்.

அதே நேரத்தில், பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் மற்றும் அவரும் பாதுகாப்புத் தொழிற்துறையினருடன் 'ஜேர்மன் இராணுவத்திற்கும் மற்றும் பிற ஐரோப்பிய படைகளுக்கும் விரைவான, யூகிக்கக்கூடிய மற்றும் திறமையான ஆயுத விநியோகத்தை நோக்கி விரைவாக நிலைமையை மாற்றுவது பற்றி' பேசினார். ஜேர்மனியில் 'முக்கியமான ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகளின் தொடர்ச்சியான உற்பத்தி' மற்றும் 'உற்பத்தி திறனை உருவாக்க நீண்ட கால ஒப்பந்தங்கள் மற்றும் முன்பணம் செலுத்துதல்' மற்றும் 'ஒரு தொழில்துறை தளம்' எங்களுக்கு தேவை என அவர் தெரிவித்தார். சமாதானத்திற்கும் ஒரு முற்றுமுழுதான போருக்கான தயாரிப்பிற்கும் வெளிப்படையாக எந்த தொடர்பும் இல்லை என்பதை இவை அனைத்தும் தெளிவுபடுத்துகின்றன.

வாழ்க்கைத் தரத்தின் மீது பாரிய தாக்குதல்களின் வடிவத்திலும், போர்க்களங்களில் பீரங்கித் தீவனமாகவும், இராணுவ பைத்தியக்காரத்தனத்தின் செலவுகள் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்படுகின்றன. ஏற்கனவே கடந்த ஆண்டு, மறுஆயுதமயமாக்கலை நிரந்தரமாகக்குவதற்காக சிறப்பு நிதி அடிப்படை சட்டத்தில் பொறிக்கப்பட்டபோது, தொற்றுநோய்க்கு மத்தியில் சுகாதார வரவுசெலவுத் திட்டம் பாரியளவில் குறைக்கப்பட்டது. இப்போது போர் வரவுசெலவுத் திட்டம் மீண்டும் அதிகரிக்கப்பட உள்ளது. ஷோல்ஸின் உரைக்கு முன்பே, பிஸ்டோரியஸ் ஆண்டுதோறும் கூடுதலாக 10 பில்லியன் யூரோக்களைக் கோரினார். பொது செலவீனங்களின் மீது  மேலும் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

ஆனால் ஏகாதிபத்தியப் போரையும் ஜேர்மன் இராணுவவாதத்தின் வெடிப்பையும் உந்தித் தள்ளும் அதே முரண்பாடுகள் அவற்றைக் கடப்பதற்கான புறநிலை அடிப்படையையும் உருவாக்குகின்றன. இறுதியில் அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்களாலும் பின்பற்றப்படும் இராணுவவாத மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கொள்கைகளுக்கு எதிர்ப்பு உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது. சமீபத்திய நாட்களில், ஜேர்மனியில் பல்லாயிரக்கணக்கான பொதுச் சேவை ஊழியர்கள் எச்சரிக்கை வேலைநிறுத்தங்களில் பங்கேற்றுள்ளனர். ஓய்வூதியங்கள், வேலைகள் மற்றும் ஊதியங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான விரிவான வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்ட எதிர்ப்புக்கள் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றன.

'வெகுஜன வேலைநிறுத்த இயக்கம், போர் மற்றும் ஐரோப்பாவில் புரட்சிகர நெருக்கடி' என்ற அறிக்கையில், ஐரோப்பாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகள் பின்வருமாறு அறிவித்தன: 'மில்லியன் கணக்கானவர்களைப் போராட்டத்திற்குள் நகர்த்தி வரும் உணர்வுகள், அதன் தொடக்க நிலையில் முதலாளித்துவ எதிர்ப்பு, இராணுவவாத எதிர்ப்பு மற்றும் சோசலிச தன்மையைக் கொண்டுள்ளன.  தொழிலாள வர்க்கத்தினுள் வளர்ந்து வரும் புரட்சிகர இயக்கத்தை சோசலிசத்திற்கான நனவான இயக்கமாக மாற்றுவதே எமது பணியாகும். இதன் பொருள், போருக்கு எதிரான போராட்டத்தை, அதன் வேரான முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடன் இணைப்பது மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிகளை தொழிலாள வர்க்கத்தின் புதிய வெகுஜனக் கட்சிகளாகக் கட்டியெழுப்புவது அவசியமாகும். ஜேர்மனியில் ஆளும் வர்க்கத்தின் ஆக்ரோஷமான போர்ப் போக்கும், பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளாலும் அது ஆதரிக்கப்படுவதும், இந்தப் பணிகள் நாளுக்கு நாள் மிகவும் முக்கியமானதாக இருப்பதைக் காட்டுகிறது.

Loading