‘போர் இயந்திரத்திற்கு எதிரான கோபம்’ பேரணியின் பின்னணியில் உள்ள சக்திகள்: லிபர்டேரியன் கட்சியானது யூத எதிர்ப்பு மற்றும் பாசிச வலதுசாரிகளின் பக்கம் திரும்புகிறது 

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பெப்ரவரி 19 அன்று, வாஷிங்டன் டி.சி. யில், லிபர்டேரியன் கட்சியும் ‘மக்கள் கட்சியும்,’ நோக்குநிலையற்ற நடுத்தர வர்க்க நபர்கள் மற்றும் வெளிப்படையான பாசிசவாதிகளுடன் சேர்ந்து, ‘போர் இயந்திரத்திற்கு எதிரான கோபம்’ என்ற பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன. 

‘போர் இயந்திரத்திற்கு எதிரான கோபம்’ பேரணியில் மேடையில் ‘மக்கள் கட்சி’ நிக் பிரானா (இடது, பின்னப்பட்ட தொப்பி) உள்ளார். பிரானாவின் வலதுபுறத்தில் ஜாக்சன் ஹிங்கிள் (கறுப்புக் கண்ணாடியுடன்) மற்றும் லிபர்டேரியன் கட்சியின் தலைவர் ஏஞ்சலா மெக்ஆர்டில் ஆகியோர் உள்ளனர். தண்ணீர் போத்தலுடனும் , தொப்பியுடனும் மெக்ஆர்டலுக்குப் பின்னால் ஜேசன் பேஜ் இருக்கிறார். இவர் Oath Keepers மற்றும் Stewart Rhodes இன் ஆதரவாளராவார் [Photo: People's Party]

லிபர்டேரியன் கட்சியின் தலைவர் ஏஞ்சலா மெக்ஆர்டிலும் மக்கள் கட்சியின் நிக் பிரானாவும், உக்ரேனில் நடந்த போருக்கு எதிராக ‘இடது மற்றும் வலதுசாரிகளை’ ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியாக இந்த நிகழ்ச்சியை ஒழுங்கமைத்துள்ளனர். உலக சோசலிச வலைத் தளம், இதை ஒரு ‘பிற்போக்குத்தனமான அரசியல் வினோத நிகழ்ச்சி’https://www.wsws.org/ta/articles/2023/02/23/ilqk-f23.html  என்று குறிப்பிட்டது.

உலக சோசலிச வலைத் தளமானது, இந்நிகழ்ச்சியின் முக்கிய ஒழுங்கமைப்பாளர்களையும் பேச்சாளர்களையும் மேலும் பகுப்பாய்வு செய்யவுள்ளது. இது நிகழ்ச்சியின் முற்றிலும் பிற்போக்குத்தனமான தன்மையை உறுதிப்படுத்துகிறது. இந்தக் கட்டுரை லிபர்டேரியன் கட்சி மற்றும் அதன் பாசிச வலதுசாரிகளின் வெளிப்படையான நோக்குநிலை மீது கவனம் செலுத்துகிறது. 

லிபர்டேரியன் கட்சி, Mises Caucus பிரிவு மற்றும் ‘வலதுசாரிகளை ஒன்றுபடுத்துங்கள்’ 

பேரணியின் பின்னணியில் உள்ள மைய அரசியல் முன்னோக்கானது லிபர்டேரியன் கட்சியால் வழங்கப்பட்டது. இது, உத்தியோகபூர்வ ‘Rage’ வலைத் தளத்தில் மக்கள் கட்சிக்கு மேலாக பேரணியின் முக்கிய ஒழுங்கமைப்பாளராக பட்டியலிடப்பட்டுள்ளது. 

லிபர்டேரியன் கட்சியின் தலைவர் ஏஞ்சலா மெக்ஆர்டில், பிரானாவுடன் இணைந்து ‘Rage’ பேரணியை வழிநடத்தினார். 19 பேச்சாளர்களில், ரான் போல், ஸ்காட் ஹார்டன், மற்றும் டேனியல் மெக்ஆடம்ஸ் ஆகிய மூன்று பேர் லிபர்டேரியன் கட்சியின் முன்னாள் அல்லது தற்போதைய உறுப்பினர்களாவர்.

இந்த நிகழ்ச்சியை ஒழுங்கமைப்பதில் லிபர்டேரியன் கட்சியின் முக்கிய பங்கு குறித்து கருத்துத் தெரிவிக்கையில், Grayzone இன் மாக்ஸ் புளூமென்தால், பெப்ரவரி 16 அன்று சக பேச்சாளரான ஸ்காட் ஹார்டனுடன் பேரணியை வலையொளியில் விளம்பரம் செய்கையில், இந்த நிகழ்ச்சிக்கு ‘லிபர்டேரியன் கட்சியால் தான் பெருமளவு திட்டமிடப்பட்டது’ என்று குறிப்பிட்டார்.

லிபர்டேரியன் கட்சியினர் பேரணிக்கான அரசியல் முன்னோக்கை வழங்கியதோடு, அதற்கு பெரிதும் நிதியளித்துள்ளனர். பேரணியின் ஐந்து ‘வெள்ளி ஸ்பொன்சர்களில்’ ஒருவராக இருப்பதற்கு Mises Caucus குறைந்தது 1,000 டாலர்கள் நன்கொடை அளித்துள்ளது.

2016 இல் டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் ஒட்டுமொத்த அமெரிக்க ஆளும் வர்க்கமும் வலதிற்கு மாறியதைத் தொடர்ந்து, லிபர்டேரியன் எப்போதும் தீவிர வலதுசாரி -முதலாளித்துவப் பொருளாதாரத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை, கட்சியின் உறுப்பினர்கள், முக்கியமாக Mises Caucus இல் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டவர்கள், பாசிச ஆயுதக் குழுக்கள் மற்றும் யூத விரோத சக்திகளை நோக்கி குறிப்பிடத்தக்க வகையில் திரும்பியுள்ளனர்.  

Mises Caucus என்பது லிபர்டேரியன் கட்சியில் உள்ள ஒரு மிகப்பெரிய பிரிவாகும். மேலும் 2022 இல் நெவாடாவின் ரெனோவில் நடந்த தேசிய மாநாட்டைத் தொடர்ந்து தேசிய அமைப்பின் கட்டுப்பாட்டை அது தன் கையில் எடுத்துக்கொண்டது. மெக்ஆர்டில் Caucus இற்கான கலிபோர்னியா ஒழுங்கமைப்பாளராகவும், முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

கடந்த ஆண்டு கட்சியின் தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கான தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மெக்ஆர்டில், Caucus இன் ஆதரவுடன், லொஸ் ஏஞ்சல்ஸ் மாவட்டத்தில் வரையறுக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி ஆணைகளை மாற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.

கட்சியின் தடுப்பூசி எதிர்ப்புக் குழுவின் ஆதரவைப் பெற்ற பிறகு, மார்ச் 2021 இல் லிபர்டேரியன் கட்சியின் அலபாமா மாநில மாநாட்டில் ‘Hotep Jesus,’ என்றழைக்கப்பட்ட தீய யூத எதிர்ப்பு பிரையன் ஷார்ப் என்பவரைக் கண்டிக்க அவர் மறுத்தபோது மெக்ஆர்டில் தான் போட்டியிடுவதை உறுதிப்படுத்தினார்.

ஷார்ப் முன்பு கன்சர்வேடிவ் அரசியல் நடவடிக்கை மாநாட்டிற்கு அழைக்கப்பட்டார் என்பதுடன், Fox News இல் நேர்காணல் செய்யப்பட்டார்.

ஷார்ப் தனது வலைப்பதிவில், ‘யூதர்களை தூற்றுவதற்கு பயப்படாத’ தீவிர வலதுசாரிகளை முன்பு பாராட்டினார். அவர் 2017 இல் வேர்ஜீனியாவின் சார்லோட்டஸ்வில்லில் ‘வலதுசாரிகளை ஒன்றுபடுத்துங்கள்’ பேரணியை ஆதரித்தார். அப்போது அவர், “கறுப்பர்கள் யதார்த்தத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்… இது கறுப்பர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அல்ல. இது வலது மற்றும் இடதுசாரிகளின், அதாவது சுதந்திரத்திற்கும் பழமைவாதத்திற்கும் இடையேயான ஒரு சர்ச்சையாகும். ஒருவேளை வெள்ளையர்களுக்கும் யூதர்களுக்கும் இடையிலானதாகக் கூட இருக்கலாம்” என்று எழுதினார்.

2021 அலபாமா மாநாட்டில், லிபர்டேரியன் கட்சி உறுப்பினர் ஒருவர், ஷார்ப்பின் ‘யூத எதிர்ப்பு கருத்துக்கள்’ அடங்கிய வரலாற்றை வைத்துப் பார்த்தால் தேசிய மாநாட்டிற்கு அவரை எப்படி அழைத்திருக்க முடியும் என்று மெக்ஆர்டிலிடம் கேட்டார்.

அதற்கு மெக்ஆர்டில், “உங்கள் கேள்வியின் அடிப்படையை நான் நிராகரிக்கிறேன். உண்மையைத் தேடுபவராகவும், என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ளவும் முயற்சிக்கும் ஒருவரை, மற்றும் யூதர்கள் ஹோலிவுட்டை நடத்துகிறார்களா இல்லையா என்ற கேள்வியைக் கேட்டவரை ஒரு யூத விரோதியாக நான் உண்மையில் நினைக்கவில்லை” என்று பதிலளித்தார்.  

Mises Caucus, Mises Institute மற்றும் ஜெஃப் டீஸ்ட் 

லிபர்டேரியன் கட்சிக்குள் நிகழும் இந்த பாசிச அரசியல் மாற்றத்திற்கான ஒரு ஆரம்ப அறிகுறி, கட்சியை Mises Caucus கையகப்படுத்தியதில் இருந்து வெளிப்படுத்தப்பட்டது.

Mises Caucus, தற்போது ஜெஃப் டீஸ்ட் தலைமையில் Mises Institute என்று பெயரிடப்பட்ட நிறுவனமாகவுள்ளது. ஆகஸ்ட் 20, 2017 இல் மைக்கேல் ஹெய்ஸால் இது ஸ்தாபிக்கப்பட்டது. தற்போதைய தலைவர் மெக்ஆர்டில் உட்பட பல முன்னணி லிபர்டேரியன் கட்சியினர் Mises Caucus இன் வாரியக் குழு உறுப்பினர்களாக இருந்துள்ளனர். மேலும், பலர் அலபாமாவின், ஆபர்னில் அமைந்துள்ள நிறுவனத்தில் ‘பயிற்சி பெற்றவர்களாவர்’. 

Ludwig von Mises Institute ஆனது, ரான் போலின் நிதியுதவியுடன், பிற்போக்குத்தன ஆஸ்திரிய பொருளாதார நிபுணரின் பெயரிடப்பட்டு 1982 இல், லெவெலின் ராக்வெல் (Llevellyn Rockwell) ஆல் நிறுவப்பட்டது. தெற்கு வறுமைச் சட்ட மையத்தின் (Southern Poverty Law Center-SPLC) 2000 ஆம் ஆண்டு அறிக்கை, Mises Institute ஐ அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தை ஆதரித்த ‘Neo-Confederate’ என்று வகைப்படுத்தியது.

ஜனவரி 11, 2023 அன்று Reason.com இன் நேர்காணலில், ஹெய்ஸ், லிபர்டேரியன் கட்சியானது, கட்சியை வளர்க்கும் முயற்சியில் Mises Caucus இன் தலைமையில் மேற்கொண்டு வரும் புதிய வகை ‘முனைப்புக்கான’ ஒரு உதாரணமாக ‘Rage’ பேரணியை சுட்டிக்காட்டினார்.

‘போர் எதிர்ப்பு பேரணி’ என்பது, தீவிர வலதுசாரி Mises Caucus இன் தலைமையின் கீழ் பயிரிடப்பட்ட புதிய ‘பழங்களின்’ அறுவடை ‘முதல் அறுவடைக்கு’ எடுத்துக்காட்டாக இருக்கும் என்று ஹெய்ஸ் விளக்கினார். 

Mises Institute இன் தலைவரான ஜெஃப் டீஸ்ட், ஹெய்ஸ் மற்றும் மெக்ஆர்டில் இருவருக்கும் நெருக்கமானவர் ஆவார். டீஸ்ட், வலைப்பதிவுகளிலும், வலதுசாரி நிகழ்வுகளிலும் அவர்கள் இருவருடன் தோன்றியுள்ளார்.

ஆகக்குறைந்தது 2014 முதல் டீஸ்ட் Mises Institute இல் இருந்து வருகிறார். டீஸ்ட் இந்நிறுவனத்தின் தலைவராக இருப்பதற்கு முன்பு, வலதுசாரிகளை ஒன்றுபடுத்துங்கள் பேரணியின் இணை ஒழுங்கமைப்பாளரான பாசிச பாட்ரிக் கேசியின் சமீபத்திய நேர்காணலில் அவர் விளக்கியது போல், ‘ரான் போலுடன் கேபிடோல் ஹில்லில் அவர் பணிபுரிந்தார்.’

கேசி, Identity Evropa நவ நாஜி குழுவின் தலைவர்களில் ஒருவராக இருந்தார் என்பதோடு, வலதுசாரிகளை ஒன்றுபடுத்துங்கள் பேரணியைத் தொடர்ந்து அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இப்பேரணியை ஒழுங்கமைப்பதில் Identity Evropa முக்கிய பங்கு வகித்தது. கேசி அமைப்பின் கட்டுப்பாட்டை தன் கையில் எடுத்துக் கொண்டதன் பின்னர், குழுவை சார்லோட்டஸ்வில்லில் இருந்து விலக்கிவைக்கும் முயற்சியில், அவர் அதற்கு ‘அமெரிக்கர்கள் அடையாள இயக்கம்’ என்று மறுபெயரிட முயன்றார். இருப்பினும், இது வெற்றிபெறவில்லை. மேலும் 2020 இல் குழுவிற்குள் தீவிரமாக உறுப்பினர்களை ஒழுங்கமைப்பதை கேசி நிறுத்தினார்.

2019 ஆம் ஆண்டில், கேசி, ‘கிரோய்ப்பர்’ பிரிவினரை ஊக்குவிக்கவும், ‘அமெரிக்காவின் முதல் அரசியல் நடவடிக்கை மாநாட்டை’ தொடங்கவும் ஹிட்லர்-லோவர் நிக் பியூன்டெஸ் உடன் இணைந்து செயல்பட்டார். ஜனவரி 6 வரை, இவர்கள் இருவரும், ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு ஆதரவாக தங்கள் ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டி ட்ரம்பின் ‘திருட்டை நிறுத்துங்கள்’ (‘Stop the Steal’) பிரச்சாரத்தை ஆதரித்தனர். பியூன்டெஸூம் கேசியும் ஜனவரி 6 அன்று கேபிடோலில் இருந்தனர். இருப்பினும் இருவர் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை. 

பாசிச பாட்ரிக் கேசி (இடது) மிசஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் டீஸ்டை தனது வலைப்பதிவில் பெப்ரவரி 23, 2023 அன்று நேர்காணல் செய்தார் [Photo: Patrick Casey]

ஆட்சிக் கவிழ்ப்பில் அவர்களின் பங்கு குறித்து, பியூன்டெஸூம் கேசியும் ஜனவரி 6 தேர்வுக் குழுவால் நேர்காணல் செய்யப்பட்டனர். குழுவிற்கு அளித்த தனது வாக்குமூலத்தில் கேசி, ‘அமெரிக்கா முதல் இயக்கத்தில் நிக் பியூன்டெஸூடன் அதிகாரப்பூர்வமற்ற தலைமைப் பதவியில்’ தான் இருப்பதையும், ஜனவரி 6 ஆம் தேதிக்கு முன்னதாக அவர் மாநிலத் தலைநகரங்களிலும் பல நிகழ்வுகளிலும் தேர்தலை முறியடிக்கும் ட்ரம்பின் முயற்சிகளுக்கு ஆதரவாகப் பேசியதையும் ஒப்புக்கொண்டார்.   

கடந்த வாரம் கேசி உடனான தனது நட்பார்ந்த நேர்காணலில், டீஸ்ட், “வாஷிங்டன் டி.சி. யில் ரான் போலை நான் சந்தித்து, அங்குள்ள அவரது ஊழியர்களுடன் சேர்ந்து அவருக்காக நான் வேலை செய்ய ஆரம்பித்தேன்…” என்று விளக்கினார். டீஸ்ட் மேலும், ‘லியு ராக்வெல்லை அவர் சந்தித்ததாகவும், சில ஆண்டுகளுக்குப் பிறகு நிறுவனத்தில் சேர்ந்ததாகவும்’ கூறினார்.  

கேசி உடனான அவரது ஒரு மணிநேர நேர்காணலில், இந்த இருவரும் முதலாளித்துவ அமைப்பையும் தனியார் சொத்துக்களையும் பாதுகாத்ததோடு, புலம்பெயர்ந்தோர், பொது உரிமைகள் சட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அவர்கள் தாக்கிப் பேசினர்.

‘தொழில்முனைவோரை’ ‘ஈடுபடுமாறு’ அழைத்து, டீஸ்ட், “இந்த நாட்டில் சில செல்வந்தர்கள் எங்களுக்குத் தேவை. அதாவது இதை இரத்து செய்ய மிகவும் கஷ்டப்படும் சிலர் தேவை. நீங்கள் 5 டாலர்கள், 10 டாலர்கள், 20 டாலர்கள்… 100 மில்லியன் டாலர்கள் வரை; அல்லது 200 மில்லியன் டாலர்கள் வரை மதிப்புடையவர்களாக இருந்தால், ஆண்டுக்கு 40,000 டாலர்கள் கிடைக்கும் ஒரு இளைஞன் இந்த விடயத்தை எதிர்த்துப் போராடி வெளியேறியிருக்க வேண்டும் இல்லையா. நீங்கள் இந்த நாட்டைப் பற்றி அக்கறை கொண்டிருந்தால், இந்த விடயத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், யதார்த்தத்தை எதிர்கொள்வதற்கும் நீங்கள் உண்மையில் கடமைப்பட்டுள்ளீர்கள். அதுதான் நடக்கப் போகிறது” என்று கூறினார்.

கேசியின் பாசிச பார்வையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்து, டீஸ்ட், “இது சாரமற்றதாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது, அது எப்படி வேலை செய்யும் என்பதல்ல. மக்கள் விலை கொடுக்க வேண்டி வரும்” என்று அறிவித்தார்.

‘நிச்சயமாக!’ என்று கூறி கேசி புன்னகையுடன் பதிலளித்தார்.

வலதுசாரிகளை ஒன்றுபடுத்துங்கள் இயக்கத்தில் இருந்து ‘போர் இயந்திரத்திற்கு எதிரான கோபம்’ வரை 

கேசிக்கும் டீஸ்டுக்கும் இடையேயான உறவு பல ஆண்டுகளுக்கு முந்தையது என்பதில் சந்தேகமில்லை. வலதுசாரிகளை ஒன்றுபடுத்துங்கள் பேரணிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘ஒரு புதிய லிபர்டேரியனுக்காக’ என்ற தலைப்பில் 2017 இல் பேசுகையில், டீஸ்ட் “வலுவான… உயரடுக்கில் உள்ள… பணக்கார குடும்பங்கள் அடங்கிய” “சமூகத்தை ஒழுங்கமைப்பதற்கு ஆழ்ந்த நடைமுறை அணுகுமுறையை,” பின்பற்றுவதற்கு அழைப்பு விடுத்ததோடு, லிபர்டேரியன் தேசியவாதத்தின்’ எழுச்சியை ‘பற்றிக் கொண்டு’ ‘உலகளாவியவாதத்தை’ நிராகரிக்க வேண்டும் என்று கூறினார்.  

லிபர்டேரியன் தங்களை நாஜிக்களாக உருமாற்றிக் கொள்ள வெளிப்படையாக அழைப்புவிடுத்து டீஸ்ட் தனது உரையை நிறைவு செய்தார். ‘இரத்தமும் மண்ணும் கடவுளும் தேசமும் இன்னும் மக்களுக்கு முக்கியம்,’ என்றும் ‘லிபர்டேரியன் இதை பொருத்தமற்ற ஆபத்தின் பேரில் புறக்கணிக்கிறார்கள்’ என்றும் அவர் கூறினார். 

டீஸ்டின் உரைக்குப் பின்னர், நவ நாஜி கிறிஸ்டோபர் கான்ட்வெல் போன்ற லிபர்டேரியன் கட்சியின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், சார்லோட்டஸ்வில்லில் நடந்த பாசிச வெறியாட்டத்தில் கலந்து கொண்டனர். இது, மற்றொரு நவ நாஜி ஜேம்ஸ் அலெக்ஸ் பீல்ட்ஸ் ஜூனியர் தனது காரை எதிர்ப்பு போராட்ட அணிக்குள் ஓட்டிச் சென்று, இனவெறி எதிர்ப்பு செயல்பாட்டாளர் ஹீதர் ஹெயரை கொன்றதில் சென்று முடிந்தது.

பீல்ட்ஸ், ஹேயரைக் கொன்று டசின் கணக்கில் மற்றவர்களை காயப்படுத்திய அந்த நாளில், நவ நாஜி ஷாண்டன் சிம்சன் பீல்ட்ஸ் ஜூனியருக்குப் பின்னால் நின்றவாறு புகைப்படம் எடுக்கப்பட்டார்.

கடந்த மாதம் வாஷிங்டனில், சிம்சனும், நவ நாஜி மேத்யூ ஹெய்ம்பாக்கும் பத்திரிகையாளர் மோலி காங்கரால் ‘Rage’ பேரணியில் புகைப்படம் எடுக்கப்பட்டனர்.

2020 ஆம் ஆண்டில், நடந்த யூனிகோர்ன் கலகமானது, சிம்சன் ஒஹியோ தேசிய காவல்படையில் உறுப்பினராக இருந்ததையும், காவல்துறை எதிர்ப்பு வன்முறை எதிர்ப்பாளர்களை அடக்குவதற்கான ட்ரம்பின் பாசிச முயற்சிகளின் ஒரு பகுதியாக அவர் வாஷிங்டன் டி.சி. க்கு அனுப்பப்பட்டதையும் வெளிப்படுத்தியது.

வாஷிங்டன் டி.சி. க்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட டெலிகிராம் இடுகைகளில், சிம்சன் சக நவ நாஜிகளிடம் இவ்வாறு கூறியுள்ளார்: “அவர்கள் எனது பிரிவை ஊக்கப்படுத்தினர். நாங்கள் சுட்டுக் கொல்ல உண்மையான வெடிமருந்துகளைப் பெறுகிறோம். அதாவது Rahowa வை அறிகிறோம். [RaHoWa என்பது இனப் புனிதப் போரின் நவ நாஜிக் கருத்தாக்கத்தைக் குறிக்கிறது.]”

ஹெய்ம்பாக் தனது முதிர் பருவ வாழ்நாள் முழுவதும் ஒரு பாசிசவாதியாக இருந்துள்ளார். தற்போது செயல்படாத பாரம்பரிய தொழிலாளர் கட்சி உட்பட பல நவ நாஜி அமைப்புகளை அவர் நிறுவியுள்ளார். 

நவம்பர் 23, 2021 அன்று வலதுசாரிகளை ஒன்றுபடுத்துங்கள் பேரணியை ஒழுங்கமைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்ததற்காக, ஒரு நடுவர் மன்றம் ஹெய்ம்பாக்கையும் அவர் நிறுவிய அமைப்பையும் பொது சதியில் குற்றவாளியாகக் கண்டறிந்தது.

‘Rage’ பேரணி நடந்த நாளில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், பேரணிக்கு முன்னைய ஒரு நேரடி ஒளிபரப்பில், ‘Rage’ பேரணியில் ஹெய்ம்பாக்கும் அவரது தோற்றமும் நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களுக்கு அதிர்ச்சியாக இருக்காது என்பதை சிம்சன் வெளிப்படுத்தினார் என்று It’sGoingDown.org வலைத்தளம் கூறியது. ஹெய்ம்பாக் “சம்பந்தப்பட்ட சிலருடன் அதிக தகவல்தொடர்புகளைக் கொண்டிருந்தார்…” என்று சிம்சன் கூறியுள்ளார்.

‘Rage’ பேரணியில், ஹெய்ம்பாக்கும் அவரை பின்பற்றுபவர்களும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து தங்கள் பாசிச பிரச்சாரத்தைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். 

RT நிருபர் காலேப் மௌபின் நடத்தும் அரசியல் புதுமைகளுக்கான மையம் (CPI), ‘Rage’ பேரணியின் ‘சிறந்த ஆதரவாளர்களில்’ ஒன்றாக இருந்தது. 

‘Rage’ பேரணிக்குப் பின்னர், CPI ஏற்பாடு செய்திருந்த ‘after-party’ இல் ஹெய்ம்பாக் பாசிச பிரச்சாரத்தை வழங்குவது புகைப்படம் எடுக்கப்பட்டது.

CPI இன் முன்னாள் உறுப்பினரான பெஞ்சமின் ரூபின்ஸ்டீன், CPI ஆனது ‘ஹெய்ம்பாக்கையும் அவரது குழுவினரையும்’ ‘ஏனைய ஒழுங்கமைப்பாளர்களுக்குத் தெரியாமல் நிகழ்வுக்கு அழைத்திருந்ததை’ ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். 

ஹெய்ம்பாக் மற்றும் சிம்ப்சன் “Atomwaffen உறுப்பினரால் கட்டுப்படுத்தப்பட்ட நாஜிக்கள் என்று ஒப்புக்கொள்ளப்பட்டவர்கள், அது விவாதத்திற்குரிய தலைப்பு அல்ல' என்று ரூபின்ஸ்டீன் குறிப்பிட்டார். 

நெருங்கிய அரசியல் உறவுமுறை இருப்பதோடு அல்லாமல், நேரடி தகவல் தொடர்பானது ‘போர் இயந்திரத்திற்கு எதிரான கோபம்’ பேரணியின் முதன்மை ஒழுங்கமைப்பாளரான லிபர்டேரியன் கட்சியுடன் நாஜிக்களை வெளிப்படையாக இணைக்கிறது. பேரணியில் பங்கேற்ற ‘இடதுசாரிகள்’ என்று கூறப்படுபவர்கள் இந்த தீவிர வலதுசாரி சக்திகளுக்கு அரசியல் நம்பகத்தன்மையும் சட்டப்பூர்வமான தன்மையும் வழங்குவதற்கு முன்நின்று பணியாற்றினர்.

Loading