நிதிய ஒட்டுண்ணித்தனமும் சீனாவிற்கு எதிரான போர் உந்துதலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதிய பொருளாதார சிந்தனைக்கான நிறுவனத்தினுடைய (Institute for New Economic Thinking) வலைத்தளத்தின் ஒரு சமீபத்திய வெளியீடு, அமெரிக்கப் பொருளாதாரத்தின் உயர் தொழில்நுட்பத் துறையில் உள்ள நிதி ஒட்டுண்ணித்தனமானது, எவ்வாறு சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வளர்ந்து வரும் போரின் ஒரு முக்கிய உந்து சக்தியாக உள்ளது என்பது பற்றிய சில முக்கிய தகவல்களை வழங்கியுள்ளது. 

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில், டோங்குவான் நகரில் உள்ள ஹூஜி டவுனில் உள்ள அல்கோ எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி மின்னணு சாதனங்களை ஒருங்கிணைக்கிறார். [AP Photo/Ng Han Guan]

அமெரிக்க அரசியல் ஸ்தாபனம், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள், அத்துடன் அரசு புலனாய்வு அமைப்புகள் மற்றும் பல ஏகாதிபத்திய சிந்தனைக் குழுக்கள் ஆகியவை, சீனாவின் உயர் தொழில்நுட்ப மேம்பாடு என்பது, அமெரிக்காவின்  ஒரு இருப்பிற்கான அச்சுறுத்தலாக இருப்பதோடு, போர் உட்பட தேவையான அனைத்து வழிகளிலும் அது எதிர்கொள்ளப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளன.  

உடனடியாக எழும் கேள்வி என்னவென்றால், அமெரிக்கா ஏன் பின்தங்கிவிடும் அபாயத்தில் உள்ளது?

மேரி கார்பென்டர் மற்றும் வில்லியம் லாசோனிக் ஆகியோரின் முக்கிய அமெரிக்க நிறுவனமான சிஸ்கோ சிஸ்டம்ஸ் (Cisco Systems) இன் வரலாற்றில், “ஒரு காலத்தில் தொலைத்தொடர்பு அமைப்புகளும் இணையமும் தான் உலகளாவிய தலைமை” என்று ஆசிரியர்களால் விவரிக்கப்பட்ட கட்டுரை இந்த கேள்விக்கு சில பதில்களை வழங்குகிறது. 

கைப்பேசி தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பில் உலகளாவிய போட்டியாளர்களை விட அமெரிக்கா பின்தங்கியுள்ளது என்றும், ‘தேசிய தோல்வி’ என்று அவர்கள் அழைக்கும் இது சமூக பொருளாதார மற்றும் பூகோள அரசியல் பதட்டங்களை உருவாக்கியுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் இலாபத்தை பெருக்குவதற்காக அமெரிக்காவின் இராட்சத நிறுவனங்கள் நிதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தேவைப்படும் நிதியை அவர்களின் நிறுவனங்கள் வழங்க முடியாமல் கைவிடுகின்ற போக்கு குறித்து லாசோனிக் நீண்டகாலமாக ஆராய்ச்சி செய்து வருகிறார். 

அவரது அடிப்படை முன்னோக்கு என்னவென்றால், இந்த செயல்முறையை மெதுவாக்கலாம் அல்லது தலைகீழாக மாற்றலாம் என்றால், அமெரிக்க தொழில்துறை கடந்த காலத்தில் கொண்டிருந்த மேலாதிக்க பொருளாதார நிலையை மீண்டும் தக்கவைத்துக் கொள்ள முடியும். எவ்வாறாயினும், இந்த கண்ணோட்டம் ஒருபுறமிருக்க, முதலாளித்துவ வளர்ச்சியின் சக்கரத்தை திரும்பப் பெற முடியும் என்ற கருத்தின் அடிப்படையில், அமெரிக்கா அதன் மகிமைமிக்க நாட்களை மீட்டெடுக்கிறது என்பதாக கட்டுரை குறிப்பிடத்தக்க தகவல்களை வழங்குகிறது.

அமெரிக்கா பின்தங்கியுள்ளதற்கு முக்கிய காரணம், “அதிநவீன தகவல்தொடர்பு-உள்கட்டமைப்பு தயாரிப்புகளை உருவாக்குவதற்கு தேவையான நிறுவன பயிற்றுவித்தலில் முதன்மையாக முதலீடு செய்ய முக்கிய அமெரிக்க நிறுவனங்கள் புறக்கணிக்கின்றன” என்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். 

“1984 இல் ஸ்தாபிக்கப்பட்டு 1990 களில் பெரும் வளர்ச்சி கண்டு” பின்னர் “இணையப் புரட்சியில் முன்னணி உலகளாவிய நிறுவன வலையமைப்பு விற்பனையாளராக” மாற்றமடைந்த சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தை விட அமெரிக்காவில் எந்த நிறுவனமும் இந்த குறைபாட்டை எடுத்துக் காட்டவில்லை.”

இருப்பினும், கடந்த 20 ஆண்டுகளில், நிறுவனத்தின் வழமையான செயல்பாடு கணிசமாக மாறிவிட்டது.

“2001 ஆம் ஆண்டு முதல், சிஸ்கோவின் உயர்மட்ட நிர்வாகமானது, 5G மற்றும் IoT (Internet of Things) சகாப்தத்தில் தகவல்தொடர்பு சாதனங்களில் உலகளவில் முன்னிலை வகிக்கத் தேவையான நிறுவனக் பயிற்றுவித்தலில் முதலீடுகளைச் செய்வதற்குப் பதிலாக, நிறுவனத்தின் பங்கு விலைக்கு நேர்மையற்ற ஊக்கத்தை அளிக்கும் நோக்கத்திற்காக, திறந்த சந்தை பங்குகளை திரும்ப வாங்குவதற்கு பெருநிறுவன பணத்தை ஒதுக்கீடு செய்ய அது தேர்ந்தெடுத்துள்ளது. 

அக்டோபர் 2001 முதல் அக்டோபர் 2022 வரை, சிஸ்கோ 152 பில்லியன் டாலர்களை செலவு செய்தது. இது அந்த காலகட்டத்தில் அதன் நிகர வருமானத்தில் 95 சதவீதமாகும். அதாவது, அதன் பங்கு விலையை உயர்த்துவதற்காக பங்குகளைத் திரும்பப் பெறுவதற்கு நிறுவனம் செலவிட்டது.

‘பங்குதாரர் மதிப்பை அதிகரிக்க’ செலவழித்த நிதிக்கு கூடுதலாக, சிஸ்கோ 55.5 பில்லியன் டாலர் இலாபப் பங்கீட்டை பங்குதாரர்களுக்கு வழங்கியது. இது அதன் நிகர வருமானத்தில் மற்றொரு 35 சதவீதத்தைக் குறிக்கிறது. இந்த செயல்பாடுகளின் போக்கானது, சில நேரங்களில் பங்குதாரர்களுக்கு நிதியளிக்க நிறுவனத்தை கடனில் வீழ வைத்தது. 

2001 க்குப் பிறகு நிறுவனத்தின் பங்கு விலையை உயர்த்துவது ஒரு முக்கிய வழிமுறையாக மாறியது. அதாவது, இதன் மூலம் மற்ற நிறுவனங்களை அது கையகப்படுத்த முடியும் என்பதோடு, அதன் உயர்மட்ட ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஊதியம் வழங்க முடியும். 

சிஸ்கோ மட்டும் தகவல்தொடர்பு சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமாக நிதியமயமாக்கத்தின் பாதையில் வீழ்ச்சி காணவில்லை என்று கட்டுரை குறிப்பிட்டது. தொழில்துறையில் ஒரு காலத்தில் முன்னிலை வகித்த லூசண்ட் டெக்னாலஜி நிறுவனம் கூட அந்த திசையில் சென்று தோல்வியுற்ற நிலையில், 2006 இல் பிரெஞ்சு நிறுவனமான அல்காடெல் நிறுவனத்தால் அது கையகப்படுத்தப்பட்டது.

மார்ச் 2018 இல் உயர் தொழில்நுட்ப நிதி ஒட்டுண்ணித்தனத்தின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் நடந்தது. அதாவது, அந்த நேரத்தில், ஜனாதிபதி ட்ரம்ப், ‘தேசிய பாதுகாப்பின்’ அடிப்படையில் பிறப்பித்த நிர்வாக உத்தரவானது, பெரும் தொழில்நுட்ப நிறுவனமான Qualcomm ஐ Broadcom நிறுவனம் கையகப்படுத்துவதற்கு தடைவிதித்தது.

சிங்கப்பூரில் செயல்படத் தொடங்கி பின்னர் அமெரிக்காவில் இடம் மாற்றப்பட்டதான Broadcom நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால் மட்டும் அது மறுக்கப்படவில்லை. மாறாக அதன் ஆவணங்கள் Qualcomm செயல்பாடுகளுக்கு அது மேலும் நிதியளிக்கும் அதேவேளை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான செலவினங்களை அது கடுமையாக குறைக்கும் என்பதைக் காட்டின. 

“இந்தத் துறையில் நிதியாக்கத்தின் தாக்கமானது, தகவல்தொடர்பு உள்கட்டமைப்பு வலையமைப்பின் வளர்ச்சியில் அமெரிக்காவிற்கு புதுமைகளை உருவாக்கும் திறனை இல்லாமலாக்கியுள்ளது” என்று ஆசிரியர்கள் நிறைவு செய்கிறார்கள். அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் “அமெரிக்காவின் போட்டித்தன்மை இழப்பிற்கு சீன போட்டியாளர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு பாதுகாப்புவாத நடவடிக்கைகளுடன் பதிலளிப்பதைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.”

இந்த நடவடிக்கைகள் ட்ரம்பின் கீழ் தொடங்கப்பட்டன, ஆனால் பைடென் நிர்வாகத்தின் கீழ் கணிசமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த மூலோபாயமானது, Huawei போன்ற நிறுவனங்களை முடக்குவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய சில்லு (chip) தொழில்நுட்பங்களைத் தடை செய்வதையும், அத்துடன் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் கொரிய நிறுவனங்களுக்கு சாதகமாக உலகளாவிய தரநிலைகளை திணிக்க முயல்வதையும் மையமாகக் கொண்டுள்ளது. 

எவ்வாறாயினும், இந்த தீவிரமடைந்து வரும் மோதலைத் தவிர்த்திருக்கலாம் என்று ஆசிரியர்கள் கருதுவதோடு, “நூற்றாண்டின் தொடக்கத்தில் சிஸ்கோவின் போக்கைப் பொறுத்தவரை, இந்த முக்கியமான துறையில் அமெரிக்காவின் உலகளாவிய வலிமையை பராமரிப்பதையும் மேம்படுத்துவதையும் இலக்காகக் கொண்ட ஒரு தொழில் கொள்கையில் அது ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்க முடியும்” என்று கூறுகின்றனர்.

“அமெரிக்காவின் ‘இழந்த தசாப்தங்கள்’ என்று ஒருவர் இப்போது அழைக்கும் சகாப்தத்தில் இந்தப் புதுமையான திறன்களை அமெரிக்கா வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் உணர்ந்திருக்க முடியும். Huawei போன்ற நிறுவனம் இந்த உலகளாவிய தலைமை இழப்பை அமெரிக்காவின் மீது சுமத்தவில்லை. மாறாக பங்குகளை திரும்ப வாங்குவதில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் வீணடிக்கப்பட்டன.”

இந்த பகுப்பாய்வில் உள்ள அடிப்படைக் குறைபாடானது, உயர்மட்ட நிறுவன அதிகாரிகளின் மோசமான ‘தேர்வுகளின்’ விளைவாக, பங்குகளை திரும்பப் பெறும் சிக்கலை முன்வைக்கிறது. இது அமெரிக்க பொருளாதாரத்திலும் அதன் ஒட்டுமொத்த நிதிய அமைப்பிலும் செயல்படும் சக்திவாய்ந்த சக்திகளை புறக்கணிக்கிறது.

குறிப்பாக லாசோனிக் நன்கு அறிந்து இதை ஆவணப்படுத்தியிருப்பதை வைத்துப் பார்த்தால், சிஸ்கோ நடத்தும் ஒட்டுண்ணி நடவடிக்கைகளின் வகை அமெரிக்க பெருநிறுவன உலகின் பரந்த பிரிவுகள் முழுவதும் காணப்படுகிறது. எந்தவொரு பகுதியிலும் உள்ள புற்றுநோய்க் கொத்து தனிநபர்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்க முடியாது என்பது போல, இதைத் தேர்வுகளுக்குக் கீழே வைக்க முடியாது. 

ஒட்டுண்ணித்தனம் என்பது, அமெரிக்கப் பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளின் மீதான நிதி மூலதனத்தின் மேலாதிக்கத்தின் விளைவு ஆகும். பெருநிறுவனங்கள், பங்குதாரர் மதிப்பை அதிகரிப்பதற்கான அதன் தேவைகளை பூர்த்தி செய்யாவிட்டால், அவை விரோதமான கையகப்படுத்துதல் அல்லது மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உடப்படுத்தப்படுவது போன்ற ‘தேர்வுகளை’ எதிர்கொள்கின்றன.

மார்க்ஸ் விவரித்தபடி, இந்த ஒட்டுண்ணி நடவடிக்கைகள் முதலாளித்துவ அமைப்பின் அத்தியாவசிய தர்க்கத்தை மிக உயர்ந்த மட்டத்தில் வெளிப்படுத்துகின்றன. அதாவது, பணத்தை இன்னும் மிகப்பெரிய அளவுகளில் பணமாக மாற்றுவதாகுமே தவிர உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை அல்லது புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை உருவாக்குவது அல்ல. 

முதலாளித்துவ அமைப்பின் மரபணுவினுள்ளும்  மற்றும் தனியார் இலாப உந்துதலுக்குள்ளும் அமைந்துள்ள இந்த கொள்ளையடிக்கும் செயல்பாடானது, அமெரிக்காவின் பொருளாதார நிலை மேலும் சரிவடைவதை காணக்கூடிய விளைவுகளைக் கொண்டுள்ளது. அந்த வீழ்ச்சியை, அதன் மிகப்பெரிய போட்டியாளரான சீனாவிற்கு எதிராக இராணுவ வழிமுறைகளை பிரயோகிப்பதன் மூலம் அது கடக்க முற்படும்.     

இந்த நிகழ்போக்கின் இன்றியமையாத தர்க்கமான உலகப் போரை, இப்போது நாகரிகத்தின் அழிவிற்கு அச்சுறுத்தும் முதலாளித்துவ இலாப அமைப்பை தூக்கியெறிவதை இலக்காகக் கொண்ட ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், போர்-எதிர்ப்பு வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே தடுக்க முடியும் என்ற உண்மையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Loading