முன்னோக்கு

ஓய்வூதிய வெட்டுக்கள் மற்றும் போரை நிறுத்த, மக்ரோன் அரசாங்கத்தை வீழ்த்து!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

மார்ச் 7 அன்று, வேலைநிறுத்தம் செய்த சுமார் 3 மில்லியன் தொழிலாளர்கள், பிரான்ஸ் முழுவதிலும் உள்ள நகரங்களில் அணிவகுத்துச் சென்று 'பொருளாதாரத்தை முடக்குவதற்கும்', ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களை நிறுத்துவதற்கும் அழைப்பு விடுத்தனர். 55 ஆண்டுகளுக்கு முன்பு 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, பிரான்சில் நடந்த இந்த மிகப்பெரிய வேலைநிறுத்த இயக்கம், சிறப்புமிக்க வரலாற்று தன்மையைக் கொண்டுள்ளதோடு, தொழிலாள வர்க்கத்திற்கும் மக்ரோன் அரசாங்கத்திற்கும் இடையே புரட்சிகர தாக்கங்களுடன் ஒரு மோதல் உருவாகியும் வருகிறது.

பொருளாதாரத்தின் மையத்தில் உள்ள முக்கியமான தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் பொருளாதாரத்தை நிறுத்துவதற்கான அழைப்புகளைப் பின்பற்றினர். பொதுத்துறை, இரயில் மற்றும் பொதுப் போக்குவரத்து, மின் நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள், அத்துடன் வாகனம், விண்வெளி மற்றும் கப்பல் கட்டுமானம் ஆகிய அனைத்தும் பாரிய வேலைநிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டன. மாணவர்கள் பாரிஸ், லியோன் மற்றும் ரென் பல்கலைக்கழகங்களில் முற்றுகை நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தனர் அல்லது வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுடன் அணிவகுத்துச் செல்ல தூதுக்குழுக்களை அனுப்பினர். எரிபொருள் நிலையங்களில் இருந்து எரிபொருளைக் குறைக்கவும் மற்றும் மக்ரோனை சரணடைய வைக்கவும், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் டிப்போக்களில் வேலைநிறுத்தங்கள் தொடர்கின்றன.

அணிவகுப்பில் லட்சக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றதையும் தாண்டி, தொழிலாள வர்க்கத்தில் வெடிக்கும் கோபம் உருவாகி வருகிறது. முக்கால்வாசி பிரெஞ்சு மக்கள் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களை எதிர்க்கின்றனர். இது, பில்லியன்கணக்கான யூரோக்களை ஓய்வூதியத்தில் இருந்து செல்வந்தர்களுக்கான வரிக் குறைப்புகளுக்கு நிதியளிப்பதையும், உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போரில் பிரான்ஸ் தனது பங்கேற்பை தீவிரப்படுத்திய நிலையில், 413 பில்லியன் யூரோ இராணுவக் குவிப்புக்கு ஒதுக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்ரோனை கட்டாயப்படுத்தி சரணடைய வைப்பதற்கு, வேலைநிறுத்தம் செய்பவர்கள் பொருளாதாரத்தை முடக்க வேண்டும் என்று 10 பிரெஞ்சு மக்களில் ஆறு பேர் விரும்புகிறார்கள் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சுப் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (PSE) பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:

  1. தொழிலாள வர்க்கம் மக்ரோன் அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும். பாரிய பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, மக்ரோன் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை குறைத்து, பொறுப்பற்ற முறையில் அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான போரைத் தூண்டி வருகிறார். அவரது அரசாங்கம் ஒரு சீர்திருத்தப்படக்கூடிய ஜனநாயக ஆட்சி அல்ல, மாறாக பொதுமக்களுக்கு விரோதமான ஒரு நிதியியல் தன்னலக்குழுவின், எதுக்கும் வருந்தாத ஒரு கருவியாகும்.
  2. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். இந்தப் போர், அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கிய ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் ஒரு முழுமையான போராக வெடிக்க அச்சுறுத்துகிறது. இந்த யுத்தத்தை நிறுத்துவது என்பது, பல பில்லியன் யூரோக்களை பொதுமக்கள் கொலை இயந்திரத்திலிருந்து எடுத்து முக்கியமான சமூகத் தேவைகளுக்குச் செலுத்துவதற்கு அத்தியாவசியமான முன்நிபந்தனையாக உள்ளது.
  3. நிதியப் பிரபுத்துவத்தை மொத்தமாக வளப்படுத்திய மற்றும் சர்வதேச அளவில் பேரழிவு தரும் பணவீக்கத்தைத் தூண்டும் வங்கிகளுக்கு பிணை எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் பாரிய நிதியை முடக்க வேண்டும். 2020ல் கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இந்த பிணை எடுப்புகளானது, பிரெஞ்சு பில்லியனர்களின் செல்வத்தை மட்டும் 200 பில்லியன் யூரோக்களாக உயர்த்தியுள்ளன. இந்தப் பொது நிதிகள் முக்கியமான சமூக தேவைகளை பூர்த்தி செய்யவதற்கு பாவிக்கப்பட வேண்டும். மற்றும் பாரிய தொழில்துறைகளை, பொது உடைமையின் கீழ் வைக்கவும், அதனால் அவை உழைக்கும் மக்களுக்கு வேலை மற்றும் மலிவு சேவைகளை வழங்கவும் முடியும்.
  4. எல்லாவற்றிற்கும் மேலாக, முதலாளித்துவ சார்பு தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு எதிரான கிளர்ச்சியுடன், பிரான்சின் எல்லைகளுக்கு அப்பால், ஐரோப்பா முழுவதும் மற்றும் சர்வதேச அளவிலும் பொது வேலைநிறுத்தத்தை பரந்தளவில் விரிவுபடுத்த வேண்டும். நாடுகடந்த பெருநிறுவனங்களால் நடத்தப்படும் உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில், ஆளும் முதலாளித்துவ உயரடுக்குகள் ஏற்கனவே ரஷ்யா, உக்ரேன் மற்றும் அனைத்து நேட்டோ சக்திகளையும் போருக்குள் இழுத்துவிட்ட நிலையில், தொழிலாள வர்க்கத்தின் அத்தியாவசிய கோரிக்கைகள் எதையும் ஒரே நாட்டில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதன் மூலம் நிறைவேற்ற முடியாது.

ஐரோப்பா கண்டம் முழுவதும் பரந்த வேலைநிறுத்தங்கள் பரவி வரும் நிலையில், பிரான்சில் வளர்ச்சியடைந்துவரும் இந்த போராட்ட இயக்கம், ஐரோப்பா முழுவதிலும் வெளிப்படும் புறநிலைரீதியான புரட்சிகரமான சூழ்நிலையின் கூர்மையான வெளிப்பாடாகும். ஜேர்மனி மற்றும் பிரிட்டனில் பணவீக்கம் மற்றும் ஊதிய சிக்கனத்திற்கு எதிராக அல்லது ஸ்பெயினில் சுகாதார வெட்டுக்களுக்கு எதிராக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்திற்கு அணிவகுத்து வருகின்றனர். பெல்ஜியம், இத்தாலி மற்றும் கிரேக்கத்தில் நாடு தழுவிய அளவில் ரயில் வேலைநிறுத்தங்கள் நடந்து வருகின்றன. கிரேக்கத்தில், ஒரு பயங்கரமான இரயில் விபத்தில் 57 பேர் கொல்லப்பட்ட பின்னர், வலதுசாரி மிட்சோடாக்கிஸ் அரசாங்கத்திற்கும் மற்றும் முழு ஆளும் உயரடுக்கின் பல தசாப்தங்களாக பேரழிவு தரும் ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிராக ஒரு வெடிக்கும் இயக்கம் உருவாகியுள்ளது.

கடந்த மாதம் துருக்கிய-சிரிய நிலநடுக்கங்களின் போது பல்லாயிரக்கணக்கான அல்லது நூறாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற, தரமற்ற வீடுகளைக் கட்டுவதில் அரசாங்கமும் முழு அரசியல் ஸ்தாபனமும் உடந்தையாக இருந்ததற்கு எதிராக வெடிக்கும் கோபம் துருக்கியில், அதிகரித்து வருகிறது. யுத்தத்திற்காக பில்லியன்களை செலவழித்தாலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கான சரியான நேரத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையைக் கூட அரசாங்கம் ஒழுங்கமைக்கத் தவறியுள்ளது.

இது ஒன்று அல்லது மற்றொரு தேசிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படக்கூடிய தொழிற்சங்கப் போராட்டங்களின் தொடர் அல்ல. அவை கொடிய முதலாளித்துவத்தின் சர்வதேச நெருக்கடியின் விளைபொருட்கள் ஆகும். ஒவ்வொரு நாட்டிலும், பணவீக்கம், சிக்கனம், சுற்றுச்சூழல் சீரழிவு, அடக்குமுறை மற்றும் யுத்தம் போன்ற உலகளாவிய பிரச்சினைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் இதே போன்ற கோரிக்கைகளை எழுப்புகின்றனர். எல்லா இடங்களிலும் அவர்கள் மதிப்பிழந்த முதலாளித்துவ அரசாங்கங்களால் சட்டரீதியான அச்சுறுத்தல்கள் அல்லது பொலிஸ் அடக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர். இது பிரான்சில் மட்டுமல்ல, ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் புரட்சிகர வெடிப்புகளைத் தூண்டுகிறது.

மக்ரோனை வீழ்த்துவது என்பது ஒரு புதிய பாராளுமன்ற ஆட்சியைக் கொண்டுவரும் பிரெஞ்சு அரசியல் ஸ்தாபனத்திற்கு விட்டுவிடக்கூடிய ஒரு பணி அல்ல. மாறாக, அது அதிகாரத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தின் மூலமும், முதலாளித்துவத்தையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் தூக்கிவீசி, ஐரோப்பாவின் ஐக்கிய சோசலிச அரசுகளை கட்டியெழுப்புவதன் மூலமும் நிறைவேற்றப்பட வேண்டும்.

தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு, தொழிலாள வர்க்க முன்முயற்சிகளை அடிபணிய வைக்கும் அனைத்து முயற்சிகளையும் PES எதிர்க்கிறது. அத்தோடு, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் ஒழுங்கமைக்கவும் ஒருங்கிணைக்கவும் அதிகாரத்துவங்களைச் சாராமல், சாமானிய நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப PES அழைப்பு விடுக்கிறது.

இது சோசலிச சமத்துவக் கட்சியை, பிரான்சில் உள்ள குட்டி முதலாளித்துவ போலி-இடது கட்சிகளுக்கு சமரசம் செய்ய முடியாத எதிர்ப்பில் வைக்கிறது. போலி இடது கட்சிகள் அனைத்தும், அமெரிக்காவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான போருக்கு ஏற்ப அல்லது வெளிப்படையாக ஆதரவளித்து, வரவிருக்கும் சமூக வெடிப்பை தாமதப்படுத்தவும், அதைத் தவிர்க்க முடியாவிட்டால், மக்ரோனை வீழ்த்துவதற்கான போராட்டத்தைத் தடுக்கவும் வேலை செய்கின்றன. தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் (CGT) ஸ்ராலினிச முதலாளியான பிலிப் மார்ட்டினெஸ், பிரதம மந்திரி எலிசபெத் போர்னுடனான தனது 'மரியாதை நிமித்தமான அழைப்புகளை' பெருமையாகக் கூறும்போது, அடிபணியா பிரான்ஸ் (LFI)​​ கட்சித் தலைவர் ஜோன் லூக் மிலோன்சோன், மக்ரோனிடம் தனது சமூக வெட்டுக்களுக்கு வாக்கெடுப்பு அல்லது புதிய தேர்தலை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்த சக்திகளை இயக்கும் முதலாளித்துவ-சார்பு முன்னோக்கு, பப்லோவாத புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியிலிருந்து (NPA) பிரிந்து, நிரந்தரப் புரட்சிப் பிரிவு என்ற அமைப்புக்கு தலைவரான ஜுவான் சிங்கோவால் சுருக்கமாக முன்வைக்கப்பட்டது.

கடந்த வார இறுதியில், நிரந்தரப் புரட்சி இணையதளத்திற்கு வழங்கிய ஒரு நேர்காணலில், 'நிலைமை புரட்சிகரமாக இல்லை, இந்த மதிப்பீட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன்' என்று சிங்கோ அறிவித்தார்.

பிரெஞ்சு பாராளுமன்றவாதத்தின் தேசிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம், முதலாளித்துவத்தின் கீழ் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கு சிங்கோ அழைப்பு விடுத்தார். ''அவர்கள் ஒரு ஜனநாயக வேலைத்திட்டத்தின் கூறுகளை உருவாக்க வேண்டும், அது சட்டமன்றம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒரு சபையான பாராளுமன்றத்தை உருவாக்குவது போன்றது'' என்று அவர் குறிப்பிட்டார். 'முதலாளித்துவ பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை அனுபவிப்பதற்கான வெகுஜன இயக்கத்திற்கு' உதவுவதே இந்த முன்மொழிவின் பின்னணியில் உள்ள நோக்கம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொழிலாள வர்க்கத்திற்கு வைக்கப்பட்ட ஒரு அரசியல் பொறியாகும். மக்ரோனுடன் எந்தவொரு உடன்பாடும் வைக்கமுடியாது.  முதலாளித்துவ பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை அனுபவிக்க தொழிலாளர்களுக்கு உதவும் இலக்கைப் பொறுத்தவரை, அது பிற்போக்குத்தனமானது மற்றும்  அடிப்படையில் தவறானது. 1789 பிரெஞ்சுப் புரட்சியின் தொடக்கத்தில், பாரிஸ் மக்கள் பாஸ்டில் கோட்டையைக் கைப்பற்றியபோது, ​​நிலப்பிரபுத்துவ எஜமானர்களால் முடிந்ததை விட, முதலாளித்துவ ஆளும் தன்னலக்குழு 2023 இல் மக்களை ஜனநாயக ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.

முதலாளித்துவத்தை ஆதரிக்கும் அதே வேளையில், புரட்சியாளர்களாக காட்டிக் கொள்ளும் அதிகாரத்துவவாதிகள் மற்றும் போலி-இடது மோசடிப் பேர்வழிகளிடம் இருந்து சுயாதீனமாக தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைப்பதை நோக்கமாகக் கொண்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சாமானிய நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப PES போராடுகிறது. அத்தகைய கொள்கையின் அவசியம் 20 ஆம் நூற்றாண்டின் புரட்சிகரப் போராட்டங்களில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் பெரும் அனுபவங்களிலிருந்து பாய்கிறது.

வரலாற்றில் பலமுறை, பிரான்சில் நடந்த போராட்டங்கள் சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு ஒரு புரட்சிகர காற்றழுத்தமானியாக செயல்பட்டன. புரட்சி மூலம் இரண்டாம் உலகப் போர் வெடிப்பதைத் தவிர்க்க, 1936 மே-ஜூன் பிரெஞ்சு பொது வேலைநிறுத்தம் தொழிலாள வர்க்கத்திற்கு கிடைத்த கடைசி சிறந்த வாய்ப்பாக இருந்தது. அது பின்னர், யுத்தத்தின் போது நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பா முழுவதும், பாசிச ஆட்சிக்கு எதிராக வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆயுதமேந்திய கிளர்ச்சிகளைத் தொடங்கிய மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு உத்வேகம் அளித்தது. 1968 மே-ஜூன் பிரெஞ்சு பொது வேலைநிறுத்தமானது, ஒரு சர்வதேச போராட்ட அலையைத் தூண்டியதோடு, ஐரோப்பாவில் கிரேக்கம், போர்த்துக்கல், பிரிட்டன் மற்றும் ஸ்பெயினில் வலதுசாரி அரசாங்கங்களை வீழ்த்தியது.

ஆனால் வரலாற்றில் பல முறை, அதே போல் பிரெஞ்சு தொழிலாளர்களும் புரட்சிகர வாய்ப்புகளின் அரசியல் துரோகங்களுடன் கசப்பான அனுபவங்களை குவித்து வைத்துள்ளனர். தொழிலாளர்களின் புரட்சிகர முன்முயற்சிகள் கைநழுவி, முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்த தொழிலாளர் அதிகாரத்துவங்களின் கைகளில் வீழ்ந்தனர். தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் புரட்சியைத் தவிர்ப்பதற்காக தொழிலாளர்களின் போராட்டங்களை விற்றுத்தள்ளி, மோசமான தோல்விகளுக்கு வழிவகுத்தன.

1936ல், தீவிர முதலாளித்துவக் கட்சி, சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுக்கு இடையேயான மக்கள் முன்னணி மத்தினியோன் ஒப்பந்தங்களில் தொழிலாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதன் மூலம், முதல் தாக்குதலை இவை தடுத்தன. பின்னர் ட்ரொட்ஸ்கிக்கு எதிராக ஒரு இராணுவக் கட்டமைப்பையும் எதிர்ப்புரட்சிகர அவதூறு பிரச்சாரத்தையும் இவை தொடங்கின. மக்கள் முன்னணி அரசாங்கம், மத்தினியோன் உடன்படிக்கையின் கட்டமைப்பிற்கு எதிராக வெடித்த வேலைநிறுத்தங்களையும் நசுக்கியது. இது ஒரு புதிய உலகப் போருக்கு வழி வகுத்ததோடு, 1940 இல் பிரான்சின் தோல்விக்கு இட்டுச் சென்றதுடன், பிரெஞ்சு அரசியல் ஸ்தாபனத்தால் நாஜி ஒத்துழைப்பு ஆட்சியும் பிரான்சில் நிறுவப்பட்டது.

1968ல், CGT தொழிற்சங்க அதிகாரத்துவமும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் (PCF) பொது வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், முதலாளித்துவ அரசுடனான கிரெனெல் உடன்படிக்கைகளில் ஒரு காட்டிக்கொடுப்பை ஒழுங்கமைக்கவும் வாரக்கணக்கில் உழைத்தன. ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து பிரிந்த பல்வேறு பப்லோவாத துரோகிகளுடன் சேர்ந்து, அவர்கள் முதலாளித்துவ சாகசக்காரரும் முன்னாள் நாஜி ஒத்துழைப்பாளருமான பிரான்சுவா மித்திரோனின் புதிதாக நிறுவப்பட்ட சோசலிஸ்ட் கட்சியை (PS) ஆதரித்தனர். எவ்வாறாயினும், PS 1981 இல் அதிகாரத்திற்கு வந்த உடனேயே, அது ஆப்பிரிக்காவிலும் அதற்கு அப்பாலும் சிக்கன மற்றும் நவ-காலனித்துவப் போர்களின் கருவியாக இருந்தது. மக்ரோனின் பிரதம மந்திரியாக தன்னை முன்னிறுத்திய மெலன்சோனும் மற்றும் மக்ரோனும் இந்தக் கட்சியில் இருந்துதான் இறுதியில் உருவெடுத்தனர்.

ட்ரொட்ஸ்கி 1935 இல் அதிகாரத்துவத்தின் இத்தகைய காட்டிக்கொடுப்புகளைத் தடுப்பதற்கு சாமானிய நடவடிக்கை குழுக்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். ரஷ்யாவில் அக்டோபர் 1917 புரட்சியில் ஆட்சியைக் கைப்பற்றிய தொழிலாளர் குழுக்களின் (சோவியத்) அனுபவத்தை வரைந்து, 1936 பொது வேலைநிறுத்தத்திற்கு முன்னர் அத்தகைய குழுக்களை உருவாக்க அவர் அழைப்பு விடுத்தார். அவர் ஸ்ராலினிசம், மார்சோ பிவேர் போன்ற 'இடது' சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தீவிர முதலாளித்துவக் கட்சி ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டணியை எதிர்த்தார். ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்:

சீர்திருத்தவாதிகளும் ஸ்ராலினிஸ்டுகளும் எல்லாவற்றிற்கும் மேலாக தீவிரவாதிகளை பயமுறுத்த அஞ்சுகின்றனர். ஐக்கிய முன்னணியின் எந்திரம் ஆங்காங்கே வெகுஜனங்களின் இயக்கங்கள் தொடர்பாக மிகவும் உணர்வுபூர்வமாக ஒழுங்கற்ற பாத்திரத்தை வகிக்கிறது. மார்சோ பிவேர்ட் வகையறா 'இடதுகள்', இந்த எந்திரத்தை வெகுஜனங்களின் கோபத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. இப்போராட்டத்தின் செயல்பாட்டில், இப்போதைய கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், ஒரு புதிய கருவியை உருவாக்க, போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு உதவுவதன் மூலம் மட்டுமே நிலைமையை காப்பாற்ற முடியும். நடவடிக்கைக் குழுக்கள் இந்த நோக்கத்திற்காக துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கான முதல் நிபந்தனை, கட்சி மற்றும் தொழிற்சங்க எந்திரத்தின் எதிர்புரட்சிகர எதிர்ப்பை உடைப்பதற்கான ஒரே வழிமுறையாக நடவடிக்கைக் குழுக்கள் பற்றிய தெளிவான புரிதல் ஆகும்.

இந்த வரிகள் 88 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் எதிரொலிக்கின்றன. ஐரோப்பாவும் உலகமும் ஒரு புதிய உலகப் போரின் விளிம்பில் நிற்கும்போது, முதலாளித்துவத்திற்கு எதிரான வெடிக்கும் கோபம் சர்வதேச அளவில் தொழிலாளர்களிடையே எழுகிறது. போரை நிறுத்துதல், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் மற்றும் சோசலிச சமுதாயத்தை உருவாக்குதல் போன்ற புரட்சிகர சாத்தியங்கள் மகத்தானவை. ஆனால் இந்த சாத்தியத்தின் மீது செயல்படும் வகையில், சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் சாமானிய நடவடிக்கை குழுக்களின் விரிவாக்கத்துடன், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை புரட்சிகர ட்ரொட்ஸ்கிச முன்னணிப் படையாக கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கிறோம். தொழிலாள வர்க்கம், சோசலிசத்திற்காகவும், ஐரோப்பாவின் ஐக்கிய சோசலிச அரசுகளுக்காகவும் போராட வேண்டும்.

Loading