மார்ச் 7, ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணிக்குப் பிறகு, பிரெஞ்சு பொருளாதாரம் முழுவதிலும் வேலைநிறுத்தங்கள் வெடித்துள்ளன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பரந்தளவில் வெறுக்கப்படும் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக மில்லியன் கணக்கான பிரெஞ்சு தொழிலாளர்களும் இளைஞர்களும் செவ்வாயன்று ஆறாவது முறையாக வீதிகளில் இறங்கிய பின்னர், பிரெஞ்சு பொருளாதாரம் முழுவதிலும் வேலைநிறுத்தங்கள் வெடித்து வருகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், எரிசக்தி துறைகள் மற்றும் வெகுஜன போக்குவரத்துத் துறைகள் ஆகியவைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், எரிபொருள் விநியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு பொருளாதாரம் முடக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

மார்ச் 8, 2023 புதன்கிழமை, தென்மேற்கு பிரான்சிலுள்ள டார்னோஸில் 'துறைமுகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றோம், துறைமுகம் நின்றுவிட்டது' என்று எழுதப்பட்ட பதாகையுடன் பயோன் துறைமுகத்திற்குச் செல்லும் சாலையை வேலைநிறுத்தம் செய்யும் துறைமுகத் தொழிலாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். [AP Photo/Bob Edme]

எரிசக்தித் துறையில், தொழிலாளர்கள் ஏற்கனவே கடந்த வாரம் நீண்ட கால வெளிநடப்பு செய்ய முடிவு செய்திருந்தனர். நாட்டின் நான்கு திரவமாக்கும் இயற்கை எரிவாயு முனையங்களில், மூன்று (ஃபோ-சுர்-மெரில் இரண்டு மற்றும் செயின்ட்-நாசரில் ஒன்று) ஒரு வார கால வேலைநிறுத்தங்களை அறிவித்துள்ளன. தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் தனிமைப்படுத்தப்பட்டவர்களும், பின்னர் பணவீக்கத்திற்குக் குறைவான ஊதிய உயர்வுகளை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக அரசாங்கத்தால் வலுக்கட்டாயமாக கோரப்பட்டவர்களுமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைத் தொழிலாளர்கள் திங்களன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அனைத்து டோட்டல் எனர்ஜி தளங்களிலும் வேலைநிறுத்தங்கள் நடந்து வருவதால், தற்போது பிரான்சில் எரிபொருள் விநியோகம் எதுவும் செய்யப்படவில்லை.

எரிசக்தித் துறையின் பிற பகுதிகளிலுள்ள தொழிலாளர்களும் திரளாக அணிதிரண்டனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல், அணுசக்திமின், நீர்மின் மற்றும் அனல் மின் நிலையங்களில் வேலைநிறுத்தங்களானது 5,000 மெகாவாட் மின்சார உற்பத்தியைக் குறைத்தன, இது ஐந்து அணுசக்தி உலைகளுக்கு சமமானதாகும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் அன்னொனே நகரிலுள்ள தொழிலாளர் மந்திரி ஒலிவியர் டுசோப்ட்டின் சுற்றுப்புறத்தில் ஓய்வூதிய வெட்டுகளுக்கு அவர் அளித்த ஆதரவை எதிர்த்து மின்சார விநியோகத்தை நிறுத்தினர்.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வேலை நிறுத்தத்தால் இந்த வாரம் முழுவதும் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படும். இந்த வாரம் முழுவதும் 20 முதல் 30 சதவீத விமானங்களை ரத்து செய்வதாக சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (DGCA) எச்சரித்துள்ளது. செவ்வாயன்று, பாரிஸ் சார்ஸ் டு கோல் விமான நிலையத்தில் 20 சதவீத விமானங்களும், பாரிஸ் ஓர்லி, போவே, போர்தோ, லில், லியோன், நான்ட், மார்சே, மோபெல்லியே, நீஸ் மற்றும் துலூஸ் விமான நிலையங்களில் 30 சதவீத விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

பாரிஸ் மற்றும் பிற முக்கிய நகரங்களில் வெகுஜன போக்குவரத்தில் வேலைநிறுத்தங்கள் தொடர்கின்றன. பாரிஸ்-கார் டு நோர்த், லே ஹவ்ர் மற்றும் துலூஸ் இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் பாரிஸ்-லு பூசே விமான நிலையத்தின் ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செவ்வாயன்று, வேலைநிறுத்தம் செய்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேகத்தை குறைத்தனர் மற்றும் சில சந்தர்ப்பங்களில் பிரான்ஸ் முழுவதும் போக்குவரத்து வலையமைப்புகளை முற்றிலுமாக மூடினர். நாடு முழுவதும், அனைத்து ரயில் ஓட்டுநர்களில் 76 சதவீதத்தினரும், கட்டுப்பாட்டாளர்களில் 55 சதவீதத்தினரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் மற்றும் திங்கள் முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரை பல நெடுஞ்சாலைகள் அடைக்கப்பட்டதால் நாடு முழுவதும் சரக்கு விநியோகம் நிறுத்தப்பட்டது.

எண்பது சதவீத ரி.ஜி.விக்கள் (அதிவேக பிராந்தியங்களுக்கு இடையிலான ரயில்கள்) ரத்து செய்யப்பட்டன, இது பிரான்சிலிருந்து ஜெர்மனி மற்றும் ஸ்பெயினுக்கான சேவையை பாதித்தது. இல்-டு-பிரான்ஸ் தலைநகர் பிராந்தியத்தில், 80 சதவீதத்திற்கும் அதிகமான பிராந்திய ரயில்கள் இயங்கவில்லை, மேலும் பாரிஸ் மெட்ரோ சேவையில் பெரும் இடையூறு ஏற்பட்டது. லில்லில், பெரும்பாலான பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன. மார்சேயில் இரண்டு மெட்ரோக்கள் மற்றும் மூன்று டிராம்களில் ஒன்று மூடப்பட்டன, 85 சதவீத பேருந்துகள் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டன. நீஸில் டிராம்கள் நிறுத்தப்பட்டன.

தனியார் துறை உற்பத்தித் தொழிலாளர்களில் கணிசமான பகுதியினர் செவ்வாயன்று வேலைநிறுத்தம் செய்த பின்னர் நேற்று வேலைநிறுத்தத்தை நீட்டித்தனர். இதில் வாகன உற்பத்தியாளர்களான ஸ்டெல்லாண்டிஸ் மற்றும் ரெனோல்ட், மற்றும் உதிரிபாகங்கள் விநியோகிஸ்தர் வாலேயோ, விண்வெளி நிறுவனமான ஏர்பஸ், எஞ்சின் தயாரிப்பு நிறுவனமான சஃப்ரான் மற்றும் செயிண்ட்-நாசரிலுள்ள கடற்படை கப்பல் கட்டும் தளங்களிலுள்ள தொழிலாளர்களும் அடங்குவர்.

மற்றய முக்கிய பிரிவுத் தொழிலாளர்களும் வெளிநடப்பு செய்து வருகின்றனர். ஒப்பந்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலுள்ள இறைச்சி தயாரிப்பு தொழிலாளர்களும் இந்த வாரம் முழுவதும், நாடளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பாரிஸ் குப்பை சேகரிப்பாளர்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பாளர்களும் திங்களன்று முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். பாரிஸின் 20 மாவட்டங்களில் நான்கு ஏற்கனவே கழிவு சேகரிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் பாரிஸுக்கு வெளியேயுள்ள இவ்ரி-சுர்-சேயினிலுள்ள குப்பை எரியூட்டியிலுள்ள 70 ஊழியர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

செவ்வாயன்று மக்ரோனின் வெட்டுக்களுக்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து தொழிலாளர்களின் போராட்டங்களின் எழுச்சி தொடங்கியது, இது ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியதிலிருந்து மிகப் பெரியதாகும். ஸ்ராலினிச தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT), சமூக ஜனநாயக பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு (CDFT) மற்றும் தொழிலாளர் படை (FO) உட்பட அனைத்து முக்கிய தொழிற்சங்கங்களின் கூட்டணியால் இந்த ஒரு நாள் நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இறுதியில் அவர்கள் அழைப்பு விடுத்த ஆர்ப்பாட்டங்களில் 3.5 மில்லியன் மக்கள் கலந்து கொண்டனர். நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பரவியுள்ள 400 க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 40 பல்கலைக்கழகங்களும் மாணவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன அல்லது மூடப்பட்டன.

CGT இன் புள்ளிவிவரங்களின்படி, பாரிஸில் 700,000 பேர் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு செய்தனர். மற்றய முக்கிய நகரங்களில், முந்தைய எதிர்ப்பு பேரணிகளை விட பங்குபற்றியவர்களின் வியத்தகு முறையில் உயர்ந்திருந்தது. தொழிற்சங்கங்களின் கூற்றுப்படி, மார்சேயில் ஜனவரி 31 அன்று 150,000 ஆக இருந்த பங்குபற்றியவர்களின் ஆர்ப்பாட்ட அணிவகுப்பு எண்ணிக்கை 245,000 ஆக இருந்தன. நான்தில் 100,000 பேர் அணிவகுப்பு செய்தனர் (ஜனவரி 31 அன்று 65,000 பேருடன் ஒப்பிடும்போது); போர்தோவில் 100,000 பேர் அணிவகுத்தனர் (ஜனவரி 31 அன்று 75,000 பேருடன் ஒப்பிடும்போது) மற்றும் துலூஸில் 120,000 பேர் அணிவகுத்தனர் (ஜனவரி 31 அன்று 80,000 பேருடன் ஒப்பிடும்போது).

போராட்டக்காரர்கள் மீண்டும் கொடூரமான போலீஸ் அடக்குமுறையை எதிர்கொண்டனர். தலைநகரில் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாரிஸ் போலீஸ் தலைமை அதிகாரி லோரன்ட் நுனெஸ் தெரிவித்துள்ளார். ரென் மற்றும் மார்சேயில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். மக்ரோனின் சீர்திருத்தத்திற்கு எதிரான வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக பள்ளிகளை ஆக்கிரமித்த மாணவர்கள் மீதும் வன்முறை நடத்தப்பட்டது. மார்சேயிலுள்ள தியர் உயர்நிலைப் பள்ளியை ஆக்கிரமித்த மூன்று உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர், பழைய துறைமுகத்தில் நடந்த மோதல்களில் பல போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மக்ரோனை வீழ்த்துவது, வாழ்க்கைத் தரங்கள் மீதான ஆளும் வர்க்க தாக்குதல்களை நிறுத்துவது மற்றும் உக்ரேனில் ரஷ்யா மீதான அமெரிக்க-நேட்டோ போரின் பொறுப்பற்ற விரிவாக்கத்தை நிறுத்துவது போன்ற ஒரு புரட்சிகர கொள்கையை மேற்கொள்வதற்கான வலிமையை தொழிலாள வர்க்கம் கொண்டுள்ளது என்பதை செவ்வாயன்று ஆர்ப்பாட்டமும் நடந்துகொண்டிருக்கும் வேலைநிறுத்தங்களின் அலையும் காட்டுகின்றன.

மக்ரோன் அரசாங்கமும் முதலாளித்துவ செய்தி ஊடகங்களும் வெட்டுக்களுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் பூதாகரமாக்க முயற்சித்த போதிலும், வேலைநிறுத்தம் பாரிய மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளது. சமீபத்திய எலாபே கருத்துக் கணிப்பில் மக்ரோனின் வெட்டுக்களை 74 சதவிகிதத்தினர் எதிர்க்கின்றனர், 64 சதவிகிதத்தினர் அவர்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை ஆதரிக்கின்றனர், மேலும் 60 சதவிகிதத்தினர் அவற்றை நிறுத்த 'நாட்டை முடக்குவதை' ஆதரிக்கின்றனர்.

பிரெஞ்சு தொழிற்சங்க அதிகாரத்துவங்களானது வர்க்கப் போராட்டத்தின் இந்த வெடிப்பிற்கு விடையிறுக்கும் வகையில், பொதுமக்களின் கோபத்தை தணிக்க முயற்சிக்கும் வகையில் மக்ரோனிடம் அவரது சீர்திருத்தங்களை திரும்பப் பெறுமாறு மீண்டும் கையாலாகாத முறையில் கெஞ்சியுள்ளன. அனைத்து தொழிற்சங்க கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் மக்ரோனுக்கு வேண்டுகோள் விடுத்தார், 'ஜனாதிபதியின் மௌனம் ஒரு தீவிரமான ஜனநாயக பிரச்சினையாகும்' என்றும் மக்ரோனால் 'அவசரமாக வரவேற்கப்பட வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டார்.

'ஜனநாயகப் பிரச்சினை' என்பது தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் மக்ரோன் பேச மறுப்பதல்ல, அவர்கள் உண்மையில் பிரதம மந்திரி எலிசபெத் போர்ன் போன்ற உயர் அதிகாரத்துவத்துடன் தங்கள் கொள்கையை ஒருங்கிணைக்கின்றனர். மக்ரோனும் வங்கிகளும் ஜனநாயகத்தை காலால் மிதித்துக் கொண்டிருக்கின்றன: அதாவது அவர்கள் உழைக்கும் மக்களை வறுமையில் தள்ளும் ஒரு ஒருங்கிணைந்த கொள்கையை செயல்படுத்தி வருகின்றனர் மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் எவரையும் தாக்குவதற்கு போலிஸை அனுப்புவதன் மூலம் இது உருவாக்கும் பாரிய மக்கள் எதிர்ப்பை சமாளிக்க முயற்சிக்கின்றனர்.

தொழிலாளர்கள் தேசிய தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கு அடிபணிந்து இருக்கும் வரை, அவர்களின் போராட்டங்கள் படிப்படியாக பிரெஞ்சு அரசால் தனிமைப்படுத்தப்பட்டு ஒடுக்கப்படும். உண்மையில், தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் ஒருபோதும் எந்த வேலைநிறுத்த ஊதியத்தையும் செலுத்துவதில்லை என்பதால், தங்கள் பில்லியன்-யூரோ வரவுசெலவுத் திட்டங்களை முற்றிலும் தங்கள் சொந்த செலவுகளுக்கு அர்ப்பணிக்கின்றன, தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்தால் விரைவில் பாரிய நிதிய அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். அனைத்திற்கும் மேலாக, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொழிலாளர்களை இன்னும் பரந்த அளவில் அணிதிரட்டுவதற்கு திட்டமிட்டு மறுத்து வருகின்றன.

இது தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் பிற்போக்குத்தனமான அரசியலை பிரதிபலிக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்று நோய் வெடித்த 2020 நிதிய வீழ்ச்சிக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல டிரில்லியன் யூரோ வங்கி பிணையெடுப்புகளுக்கான ஆதரவு அறிக்கைகளில் CGT எந்திரம் கையெழுத்திட்டது மட்டுமல்லாமல், ஓய்வூதியங்களைக் குறைப்பதன் மூலம் இராணுவ வரவுசெலவுத் திட்டத்தில் 90 பில்லியன் யூரோ அதிகரிப்புக்கு மக்ரோன் நிதியளிப்பதற்கும், ரஷ்யாவுடனான போரில் அமெரிக்க-நேட்டோவிற்கு அதன் ஆதரவு அறிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளது. எவ்வாறெனினும், பேச்சுவார்த்தைகள் மூலம் மக்ரோனுடன் உடன்பாடுகளை எட்டுவதற்கான முன்னோக்கிற்கு உறுதிபூண்டுள்ள அதிகாரத்துவத்தினர், இந்த வலதுசாரி கொள்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை கழுத்தை நெரிக்க முயல்கின்றனர்.

பிரான்ஸ் முழுவதிலும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக தங்கள் சொந்த சாமானிய குழுக்களை அமைப்பது மிக முக்கியமானதாகும். இத்தகைய போராட்ட அமைப்புக்களுடன் மட்டுமே பிரெஞ்சு தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவிலுள்ள தங்களுடைய வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்த முடியும், அவர்கள் அனைவரும் பணவீக்கம், வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக தீவிரமடைந்து வரும் அமெரிக்க-நேட்டோ போர் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர், அத்தோடு தங்களுடைய போராட்டங்களை ஒரு சர்வதேச புரட்சிகர இயக்கமாக கட்டமைக்க முடியும்.

பிரெஞ்சு வேலைநிறுத்தங்கள் ஐரோப்பாவையும் உலகையும் உலுக்கி வரும் தொழிலாளர்களின் போராட்டங்களின் பரந்த அலையின் ஒரு பாகமாகும். சமீபத்திய வாரங்களில், இங்கிலாந்து மற்றும் ஜேர்மனியில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பணவீக்கத்திற்கு எதிராகவும் ஊதியங்களை பாதுகாக்கவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இத்தாலி, பெல்ஜியம் மற்றும் கிரேக்கத்தில் இந்த வாரம் இரயிவே வேலைநிறுத்தங்கள் நடக்கின்றன. ஸ்பெயினில் அரசு மருத்துவமனை அமைப்பைப் பாதுகாக்க வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. போர்த்துக்கலில், நூறாயிரக்கணக்கானவர்கள், குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் வளர்ந்து வரும் இந்த இயக்கத்தை அதன் அரசியல் கடமைகள் குறித்து நனவடையச் செய்வதே இன்று முக்கியமான கேள்வியாகும்: அதாவது உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ போரை நிறுத்துவது, சமூக செல்வத்தின் மாபெரும் அளவானது சொத்துடைமை வர்க்கங்களுக்கு மாற்றப்படுவது முடிவுக்குக் கொண்டுவருவது, மற்றும் அரசு அதிகாரத்திற்காகவும் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தில் முதலாளித்துவ அரசாங்கங்களை வீழ்த்துவதாக இருக்க வேண்டும்.

Loading