பல்கலைக்கழகங்களில் அரசியலில் ஈடுபடுவதற்கான ஐ.வை.எஸ்.எஸ்.இ.யின் ஜனநாயக உரிமை மீது கை வைக்காதே! 

ஜயவர்தனபுர மானுடவியல் பீட மாணவர் ஒன்றியம், அதன் பொது மாணவர் சங்கம் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் ஒரு திறந்த கடிதம்.

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

தலைவர்,

மானுடவியல் பீட  மாணவர் சங்கம்,

ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்.

தலைவர்,

பொது மாணவர் சங்கம்,

ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்.

வசந்த முதலிகே,

ஒருங்கிணைப்பாளர்,

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் 

23 பெப்ரவரி 2023 அன்று, ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில், மானுடவியல் பீட மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று, சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர்கள் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பின் உறுப்பினர் சகுந்த ஹிரிமுத்துகொடவுக்கு எதிராக மேற்கொண்ட குண்டர் நடவடிக்கையையும், அதை அறிந்து உடனேயே அவரது பாதுகாப்புக்காக அங்கு  வந்த, ஐ.வை.எஸ்.எஸ்.இ. இற்கு தலைமை வழங்கும் சோசலிச  சமத்துவக் கட்சியினதும் (சோ.ச.க.), உலக சோசலிச வலைத் தளத்தின்  ஆசிரியர் குழுவினதும் இரண்டு உறுப்பினர்களான பாணி விஜேசிறிவர்தன மற்றும் வசந்த ரூபசிங்க ஆகியோருக்கு எதிரான குண்டர்களின் அச்சுறுத்தலையும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. வண்மையாகக் கண்டிக்கின்றது.

இதே பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று 6 மாதங்களுக்கு முன்னர் தனது பட்டப்படிப்பை முடித்த ஹிரிமுத்துகொட, பெப்ரவரி 23 அன்று மாலை பிரயோக விஞ்ஞான பீட வளாகத்தில் அதே பல்கலைக்கழக மாணவர் ஒருவருடன் அரசியல் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பிரிவு விடுத்த அழைப்பின் பேரில். பெப்ரவரி 7 அன்று, 'மக்கள் போராட்டமும் மார்க்சியமும்' என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய விரிவுரையில் கலந்து கொண்ட குறித்த மாணவன், சோசலிச சமத்துவக் கட்சியும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் ஈடுபட்டுள்ள தொழிலாள வர்க்க சர்வதேச சோசலிச அரசியலைப் பற்றி மேலும் அறிய விரும்பியிருந்த நிலையில், ஹிரிமுத்துகொட அது தொடர்பாக  கலந்துரையாடவே அங்கு சென்றிருந்தார்.

பொதுக் கல்வி உட்பட சமூக உரிமைகளையும், பேச்சு சுதந்திரம் உட்பட ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பது மேற்கண்ட சோசலிச சமத்துவக் கட்சியின் உரையில் விரிவாகக் விளக்கப்பட்டது. போலி-இடது முன்னிலை சோசலிஸ்ட் கட்சியினால் (மு.சோ.க.) இயக்கப்படும் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் (அ.ப.மா.ஒ.) மாணவர் அரசியல் என்று அழைக்கப்படுவது, குறித்த புகழ்சான்ற மார்க்சிச கோட்பாடுகளுக்கு முற்றிலும் விரோதமானது என்பது அங்கு தெளிவுபடுத்தப்பட்டது.

மாணவர்களை தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் திரும்ப விடாமல் தடுத்து, முதலாளித்துவ அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து உரிமைகளை நிலைநாட்ட முடியும் என்ற மாயையில் அவர்களை சிக்க வைத்து, முதலாளித்துவ அமைப்பை பாதுகாப்பதே மாணவர் அரசியலின் நோக்கம் என்றும் அந்த உரையில் வலியுறுத்தப்பட்டது.

அ.ப.மா.ஒ. மற்றும அதன் தலைமையிலான மாணவர் சங்கங்களின் நடைமுறையை ஆராய்ந்த ஹிரிமுத்துகொட, “மாணவர் அரசியலின்” எதிர்போக்குத்தனத்தை அந்த மாணவருக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில், அங்கு பாய்ந்து வந்த இரண்டு மாணவர் ஆர்வலர்கள், பெப்ரவரி 14 அன்று பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக குற்றம் சாட்டி அந்த மாணவன் மீது தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தினர். அதற்கு ஹிரிமுத்துகொட தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய போது, ​​மேற்படி மோதலில் அவரும் ஈடுபட்டதாக குற்றம் சுமத்திய இரு செயற்பாட்டாளர்களும், நீங்கள் இங்கு என்ன செய்கின்றீர்கள் என ஹிரிமுத்துகொடவிடம் கேட்டனர்.

அந்த மோதலுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தான் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர் என்றும் கூறிய ஹிரிமுத்துகொட, பல்கலைக்கழகத்தில் தலையிடுவதற்கு தனக்குள்ள ஜனநாயக உரிமையை வலியுறுத்தி அவர்களுக்கு சவால் விடுத்தார். அப்போது ஆத்திரமடைந்த அந்த இருவரும், இங்கு “கட்சி அரசியல்” செய்ய முடியாது என்றும், “மாணவர் அரசியல்” மட்டுமே இங்கு உள்ளது என்றும் கூறி, உடல் ரீதியாக தாக்க முயன்றனர். அத்துடன், மானுடவியல் மாணவர் சங்க ஆர்வலர்கள் குழுவொன்றை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்கு அழைக்க ஏற்பாடு செய்தனர்.

தான் எதிர்நோக்கிய நிலைமை குறித்து ஹிரிமுத்துகொட தனது கட்சியினருக்கு அறிவித்துக்கொண்டிருந்த போது, குண்டர்கள் போல் நடந்து கொண்ட இந்த செயற்பாட்டாளர்கள், அவரது கைத்தொலைபேசியை பறித்துக்கொண்டனர். ஒரு ஆர்வலர் 'தான் சஸ்பென்ட் (வகுப்பில் இருந்து தடை) ஆகியிருக்கிறேன், இல்லையெனில் உன் முகம் தூளாவதற்கு அடிப்பேன்' என்று மிரட்டினார். சுமார் பத்து பேர் கொண்ட இந்த குழுவில், மானுடவியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவர்களான லக்ஷான் சந்தருவன், ரணிந்து ரத்நாயக்க, ஹசித பியூமல் பண்டார ஆகியோர் இருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

இதற்கிடையில், பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று அதிகாரி ஒருவர் அந்த இடத்திற்கு வந்து ஹிரிமுத்துகொடவை ஒழுக்காற்று கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். “பல்கலைக்கழக துணைக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்கிறாயா?”, “கட்சி அரசியலைக் கொண்டு வந்து மாணவர்களை பிளவுபடுத்துகிறாய்”, “மீண்டும் பல்கலைகழகத்துக்கு வாந்தால் நாங்கள் பார்த்துக்கொள்வோம்” என கூறிக்கொண்டே மாணவர் குழு அவரை பின் தொடர்ந்து வந்தது. ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர் ஒழுக்காற்று அதிகாரி அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, ​​மாணவர் குண்டர் கும்பல் நுழைவாயிலுக்கு முன்னால் நின்று அவரது கைபேசியை சோதனை செய்தது.

பல்கலைக்கழகங்களில் கட்சி அரசியலுக்கு இடமில்லை என்று கூறும் உங்கள் அமைப்புகள், பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிட்ட கட்சி அரசியலில் ஈடுபட்டு வருகின்றன. அது முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) அரசியல் என்பது உங்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றாகத் தெரியும்.

உங்கள் அமைப்புகள் பல்கலைக்கழகங்களில் கட்சி அரசியலில் ஈடுபட்டுள்ள நிலைமையில், ஏனைய கட்சிகள், குறிப்பாக தொழிலாள வர்க்க அனைத்துலகவாதத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும்  பல்கலைக்கழகங்களில் அரசியலில் ஈடுபடுவதை வலுக்கட்டாயமாகத் தடுக்கும் இந்தக் கொள்கைகள் முற்றிலும் ஜனநாயக விரோதமானதும்  மோசடித்தனமானதுமாகும்.

இந்த வஞ்சகக் கொள்கைக்கு மாறாக, ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஆனது பல்கலைக்கழகங்களிலும் ஏனைய இடங்களிலும், வெளிப்படையாகவே சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதற்கு தலைமை வகிக்கும் உலகத் தொழிலாள வர்க்கக் கட்சியான நான்காம் அகிலத்தின் பதாகைகளின் கீழ் தோன்றுகின்றது. நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் அமைப்பின் பெயரிலேயே வெளிப்படையாக தோன்றுவது மார்க்சிஸ்டுகளின் பாரம்பரியம் ஆகும். முன்னிலை சோசலிசக் கட்சி என்ற போலி-இடது கட்சியும் அதன் தலைமையிலான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் அந்த மரபுகளை முற்றிலும் புறக்கணிக்கின்றன.

அதே சமயம் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். ஒரு நாளும் ஒத்துப் போகாத அரசியல் வேறுபாடுகள் இருக்கும் போது கூட, உங்களைப் போன்ற அமைப்புக்களுக்கும் அவற்றின் தலைமைக்கும் எதிரான ஒவ்வொரு ஜனநாயக-விரோதத் தாக்குதலையும் அரச வேட்டையாடலையும் எதிர்த்துப் போராடிய ஒரு புகழ்பெற்ற சவால் செய்யமுடியாத வரலாற்றை சோசலிச சமத்துவக் கட்சியும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.யும் கொண்டுள்ளன.

பல்கலைக்கழகங்களில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.இ.  அரசியல் செய்வதை  தடை செய்வதன் மூலம், அந்த அரசியலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்த எங்களுக்கு உள்ள, அதே போல், அந்த அரசியல் கருத்துக்களை தெரிந்துகொள்ள மாணவர்களுக்கும் உள்ள கருத்துச் சுதந்திரத்துக்கான அடிப்படை ஜனநாயக உரிமையை நீங்கள் மீறுகின்றீர்கள்.

அன்று அ.ப.மா.ஒ.க்கு தலைமை தாங்கிய மக்கள் விடுதலை முன்னணியே (ஜே.வி.பி.), 'மாணவர் அரசியலை' தூக்கிப் பிடித்து பல்கலைக்கழகங்களில் தொழிலாள வர்க்க சோசலிச அரசியலை தடை செய்வதை தொடங்கி வைத்தது. ஜே.வி.பி.யில் இருந்து மு.சோ.க. அமைப்புரீதியாக பிரிந்து சென்றிருந்தாலும், அது அதன் பிற்போக்கு அரசியல் கொள்கைகளையே முன்கொண்டு செல்கின்றது. 

பல்கலைக்கழக 'துணை கலாச்சாரத்தை' பாதுகாக்கும் போர்வையிலேயே நீங்கள் இந்த குண்டர் நடவடிக்களை முன்னெடுக்கின்றீர்கள். ஐ.வை.எஸ்.எஸ்.இ.க்கு  எதிராக பாய்வதன் மூலம் அந்த 'துணைக் கலாச்சாரத்தின்' கலாச்சார சீரழிவு ஆழமாக வெளிப்பட்டுள்ளது. உங்கள் “துணைக் கலாச்சாரம்” சம்பந்தமாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு ஒரு அபகீர்த்தியான வரலாறே உள்ளது. 2002 நவம்பரில், “பகிடிவதையை” எதிர்த்த சமந்த விதானகே என்ற மாணவனின் தலையில் கணினி மொனிட்டரை தூக்கிப் போட்டு கொலை செய்யப்பட்டார். “பகிடி வதையை” நியாயப்படுத்தும் இந்த “துணைக் கலாச்சாரத்தை” தூக்கிப் பிடித்தே, ஒரு மாணவர் குழு இந்த கொலையை செய்ய ஊக்குவிக்கப்பட்டது.

துணைக் கலாச்சாரம் என்ற போர்வையின் கீழ், பல்கலைக்கழக மாணவர்களிடையே ஜனநாயக அரசியல் விவாதங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன. நீங்கள் உட்பட மாணவர் சங்கத் தலைவர்கள் கூறுவது போல், பல்கலைக்கழகங்களுக்குள் கட்சி அரசியல் பிரவேசிப்பதால் மாணவர்களிடையே மோதல்கள் ஏற்பட்டு, மாணவர் ஒற்றுமை இல்லாமல் போகப் போவதில்லை. மாறாக, மாற்று அரசியல் கருத்துகளைக் கொண்ட மாணவர்களை வலுக்கட்டாயமாக ஒடுக்குவதற்கு உங்கள் தலைமையில் மாணவர் சங்கங்கள் செய்யும் வேலைகளாலேயே மாணவர்களுக்கு இடையிலான மோதல்களுக்கு முக்கியக் காரணம் ஆகும்.

அதுமாத்திரமன்றி, உங்கள் மாணவர் சங்கங்கள், தங்கள் அரசியல் எதிரிகளை ஒடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்துடனும், சில வேளைகளில் பொலிசுடனும் கூட கூட்டுச் சேருமளவுக்கு பிற்போக்கானவை ஆகும். ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினருக்கு எதிரான ஜனநாயக விரோத தலையீட்டில், உங்களது அமைப்பு, அடக்குமுறை அரசு எந்திரத்தின் ஒரு அங்கமான பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு சொந்தமான ஒழுக்காற்று அதிகாரி அலுவலகத்துடன் உங்கள் அமைப்பு வெட்கமின்றி அணிசேர்ந்தது, இந்த அடக்குமுறை எந்திரம் நீங்கள் உட்பட மாணவர் ஆர்வலர்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற நிலைமையிலேயே ஆகும்.

ஒழுக்காற்று கண்காணிப்பாளரும், மாணவர் குண்டர் குழுவின் குற்றச்சாட்டை ஆதரித்து, ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர் ஹிரிமுத்துகொட 'அனுமதியின்றி பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தார்' மற்றும் 'மாணவர்களிடையே மோதலை ஏற்படுத்தினார்' என்றும் குற்றம் சாட்டினார். ஹிரிமுத்துகொட அதற்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், பல்கலைக்கழகத்தில் அரசியல் செய்வதற்கு தனக்கு ஜனநாயக உரிமை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது பிரசன்னம் மோதலை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்த அவர், மாணவர் சங்க செயற்பாட்டாளர்கள் குழுவே மோதலைத் தூண்டியதாக வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த ஒழுக்காற்று அதிகாரி, தேவைப்பட்டால் 'ஹிரிமுத்துகொடவை பொலிஸாரிடம் ஒப்படைப்போம்' என அச்சுறுத்தினார். மாணவர் ஆர்வலர்களிடமிருந்து தொலைபேசியை வாங்கி ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினரிடம் ஒப்படைக்க ஒழுக்காற்று அதிகாரி மறுத்துவிட்டார். பல்கலைக்கழகம் என்பது ஒரு “நிறுவனம்” என்றும், அதற்குள் “ஜனநாயக உரிமைகள் இல்லை” என்றும் வெளியாட்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு 'துணைவேந்தரிடம்' அனுமதி பெற வேண்டும் என்றும், அவர் மேலும் கூறினார்.

தொலைபேசியை அபகரிப்பதற்கு முன், ஹிரிமுத்துகொட வழங்கிய தகவலின் அடிப்படையில் அவரைப் பாதுகாக்க அங்கு வந்த சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவினதும் இரு உறுப்பினர்களுக்கு எதிராகவும் குண்டர் அதிகாரத்தைப் பிரயோகித்த மாணவர் கும்பல், அவர்களது தொலைபேசிகளையும் வலுக்கட்டாயமாகப் பரிசீலிக்க முயன்றனர். அவர்கள் ஒழுக்காற்று அதிகாரிகளுடன் சேர்ந்து, இரண்டு சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களையும் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற்றினர்.

இந்த ஜனநாயக விரோதத் தலையீடு, உங்கள் அமைப்பின் பலத்தை அன்றி, முதலாளித்துவ முறைமையின் ஆழமடைந்துவரும் நெருக்கடிக்கு மத்தியில், அரசாங்கங்களை வற்புறுத்தி கோரிக்கைகளை வென்றெடுக்கும் உங்கள முன்னோக்கின்  வங்குரோத்து மேலும் கூர்மையாக வெளிப்படும் சூழ்நிலையில்,  மாணவர்கள் மத்தியில் சர்வதேச சோசலிச முன்னோக்கு வேரூன்றும் என்ற பீதியையே அம்பலப்படுத்துகிறது.

இந்த அமைப்புகளுடன் மாணவர்கள் முன்நோக்கிச் செல்ல முடியாது. இந்த முதலாளித்துவ சார்பு அமைப்புகளில் இருந்து பிரிந்து, தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்புவதன் மூலமும், சர்வதேச சோசலிச முன்னோக்கிற்காகப் போராடுவதன் மூலமும் மட்டுமே அவர்கள் தங்கள் உரிமைகளை பாதுகாக்க முடியும்.

அந்த முன்னோக்கில் மாணவர்களையும் இளைஞர்களையும் அணிதிரட்டவே ஐ.வை.எஸ்.எஸ்.இ. போராடுகிறது. முதலாளித்துவ அமைப்பு எதிர்கொள்ளும் நெருக்கடியில் இருந்து தலைதூக்கும் மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தல், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் இத்தகைய முன்நோக்குக்காகப் போராடும் ஒரே அமைப்பு ஐ.வை.எஸ்.எஸ்.இ. மட்டுமே.

பயமுறுத்தவோ அல்லது எங்கள் அரசியலை மட்டுப்படுத்தவோ அனுமதிக்க மாட்டோம். நாங்கள் எப்பொழுதும் வெளிப்படையாக எங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளதோடு, அவற்றை பகிரங்கமாக விவாதிக்கவும் விரும்புகிறோம். ஆனால் தடைபோடுவதை மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடு விதிப்பதை ஏற்க நாங்கள் தயாராக இல்லை. இதற்காக நாங்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவு திரட்டுவோம்.

இப்படிக்கு 

உண்மையுள்ள,

கபில பெர்னாண்டோ

ஐ.வை.எஸ்.எஸ்.இ. ஒருங்கிணைப்பாளர்

இலங்கை: 'மக்கள் போராட்டத்தின் செயல் திட்டம்' பற்றிய கலந்துரையாடல்: தொழிலாளர்-ஒடுக்கப்பட்ட மக்களை முதலாளித்துவ அரசோடு கட்டிவைக்கும் வஞ்சகப் பொறி

இலங்கையின் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி வலது-சாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றது

Loading