முன்னோக்கு

நோர்ட் ஸ்ட்ரீம் குண்டுவெடிப்பில் அமெரிக்கா உடந்தையாக இருந்தமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ரஷ்யாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்பாதைகளை அழித்த தாக்குதல்களுக்கு அமெரிக்கா அல்லது அதன் கூட்டாளிகள் மீது பழி சுமத்தலாமா என்று மூன்று நாட்களுக்கு முன்னர் செப்டம்பர் 30, 2022 இல் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கெனிடம் ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

'நாங்களோ அல்லது மற்ற பங்காளிகளோ அல்லது கூட்டாளிகளோ தான் இதற்கு ஏதோவிதத்தில் பொறுப்பாகிறோம் என்று அதிபர் புட்டினின் அபத்தமான குற்றங்கள் பற்றி உண்மையில் நான் கூறுவதற்கு எதுவுமில்லை” என்று பிளிங்கென் கூறினார்.

அந்தத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா தான் பொறுப்பு என்ற ரஷ்ய அதிகாரிகளின் கூற்றுக்கள் பற்றி கேட்டதற்கு, அந்த குண்டுவெடிப்புக்குப் பின்னர் அமெரிக்க ஜனாதிபதி பைடென் கூறுகையில், “புட்டின் கூறுவதைக் கேட்காதீர்கள். அவர் கூறுவது உண்மையில்லை என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று பதிலளித்தார்.

ஆறு மாதங்களுக்குப் பின்னர், உளவுத்துறை அதிகாரிகளுடனான நேர்காணல்களின் அடிப்படையில், நியூ யோர்க் டைம்ஸூம்வாஷிங்டன் போஸ்டும், அந்த எரிவாயு குழாய்பாதைகளை ஓர் 'உக்ரேனிய-ஆதரவிலான குழு' தான் அழித்தது என்று வலியுறுத்தி, செவ்வாய்கிழமை செய்தி அறிக்கைகளை வெளியிட்டன.

ஜேர்மனியில் இருந்து செயல்படும் இரண்டு உக்ரேனியர்களுக்குச் சொந்தமான ஒரு படகில் இருந்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜேர்மன் பத்திரிகை Die Zeit ஒரு பிரத்யேகக் கட்டுரையில் குறிப்பிட்டது. அந்தக் கட்டுக்கதையின் அடிப்படையில்,Times of London குறிப்பிடுகையில் அந்தத் தாக்குதல் 'உக்ரேனில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனம்' மூலம் நடத்தப்பட்டதாக அறிவித்தது. 'அதிபர் செலென்ஸ்கியின் அரசாங்கத்துடன் தொடர்பில்லாத ஓர் உக்ரேனியரான சந்தேகத்திற்குரிய தனிப்பட்ட ஆதரவாளர் ஒருவரின் பெயர் பல மாதங்களாக உளவுத்துறை வட்டாரங்களில் பரவி வருகிறது. ஆனால், வெளியில் வெளியிடப்படவில்லை,” என்பதையும் அந்தப் பத்திரிகை சேர்த்துக் கொண்டது.

பால்டிக் கடலில் நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை ஒரு மூடிமறைப்பாக பயன்படுத்தி, அந்த எரிவாயு குழாய்பாதைகளை அழித்த அந்த வெடிகுண்டுகளை நேரடியாக அமெரிக்க கடற்படையே ஏற்பாடு செய்தது என்று மூத்த பத்திரிகையாளர் சீமோர் ஹெர்ஷின் ஓர் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இந்த செய்தி அறிக்கைகள் இப்போது வெள்ளமென வெளிவருகின்றன.

ஹெர்ஷ் அவருக்கு இராணுவம் மற்றும் அரசு எந்திரத்திற்குள்ளே உள்ள தொடர்புகளின் அடிப்படையில், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குச் சில மாதங்களுக்கு முன்னரே டிசம்பர் 2021 இல் இந்தத் தாக்குதலுக்கான திட்டம் தொடங்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கதையின் அனைத்து வகைகளிலும் பொதுவான ஒரு விஷயம் உள்ளது. செப்டம்பர் 30 இல் பிளிங்கென் பொய்யுரைத்தார் என்பதை இவை காட்டுகின்றன. அமெரிக்காவோ 'அல்லது மற்ற பங்காளிகளோ அல்லது கூட்டாளிகளோ' தான் தெளிவாக அந்தக் குண்டுவீச்சை நடத்தி இருந்தன.

டைம்ஸ் மற்றும் போஸ்ட் செய்திகளைப் பொறுத்த வரையில், ஒரே நேரத்தில் நான்கு தனித்தனி எரிவாயு குழாய்பாதைகளையும் அழிக்கும் விதத்தில் கடலுக்கடியில் நடத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய அதிநவீன அந்த சர்வதேச பயங்கரவாத தாக்குதல், உக்ரேனிய அரசாங்கத்திற்கோ, ஜேர்மனி அல்லது அமெரிக்காவிற்கோ தெரியாமல், ஜேர்மனியில் இருந்து செயல்படும் உக்ரேனியர்களால் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நகைப்புக்குரியதாக உள்ளது. உண்மையில் அந்த 'உக்ரேனிய ஆதரவு' குழு தான் பொறுப்பு என்றாலும், அந்த குழாய்பாதையின் இருப்பை 'முடிவுக்குக் கொண்டு வர' சூளுரைத்திருந்த வெள்ளை மாளிகையின் வெளிப்படையாக கூறப்பட்ட விருப்பங்களை குறைந்தபட்சம் அது நிறைவேற்றியதாக இருந்தது.

அந்தக் குண்டுவீச்சை அமெரிக்க கடற்படை நடத்தி இருந்தாலும் சரி அல்லது அதன் உக்ரேனிய பினாமி படைகள் நடத்தி இருந்தாலும் சரி, அதற்காகத் தெளிவாக அமெரிக்காவைத் தான் பழி சுமத்த வேண்டியதாக உள்ளது.

உக்ரேன் போரின் பாகமாக அந்த எரிவாயு குழாய்பாதையை அமெரிக்கா 'முடிவுக்குக் கொண்டு' வரும் என்று பைடெனே அறிவித்திருந்தார். அது நடந்த பின்னர் அந்த அழிவைக் குறித்து அமெரிக்க அதிகாரிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஜனவரியில் அமெரிக்க நாடாளுமன்ற விசாரணையின் போது, அரசியல் விவகாரங்களுக்கான துணை வெளியுறவுத்துறைச் செயலர் விக்டோரியா நூலாண்ட் கூறுகையில், “நீங்கள் கூற விரும்புவது போல்,  நோர்ட் ஸ்ட்ரீம் 2 இப்போது கடலுக்கடியில் வெறும் ஒரு உலோகக் குப்பையாக கிடக்கிறது என்று அறிவதில் [அமெரிக்க] நிர்வாகம் மிகவும் மகிழ்ச்சி அடையுமென நினைக்கிறேன்,” என்றார்.

இந்த வெளிப்படுத்தல்கள், செப்டம்பர் 28 இல் உலக சோசலிச வலைத் தளம் எழுதியதை உறுதிப்படுத்துகின்றன:

இந்தக் குண்டுவெடிப்புகளில் ரஷ்ய சம்பந்தப்பட்டிருப்பது பற்றிய குற்றச்சாட்டுகள் மீது எந்த நம்பிக்கைத்தன்மையும் இல்லை என்பதோடு, அமெரிக்கா குற்றவாளியாக இருக்க பெரிதும் அதிக வாய்ப்புள்ளதை நோக்கி கவனத்தைத் திருப்புகின்றன. யார் இதனால் ஆதாயமடைகிறார், யாருக்கு இதைச் செயல்படுத்தும் நோக்கம் இருந்தது? என்பதே நோர்ட் ஸ்ட்ரீம் குண்டுவெடிப்பு குறித்து கேட்க வேண்டிய முதல் கேள்வியாக உள்ளது.

அந்தக் குற்றத்திற்கு ரஷ்யா மீது பழிசுமத்தும் முயற்சியில் ஒட்டுமொத்த அமெரிக்க ஊடகங்களும் முழுமையாக உடந்தையாய் இருப்பதை இந்த வெளிப்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன. ரஷ்ய எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதலுக்கு விடையிறுத்து வாஷிங்டன் போஸ்ட் செப்டம்பர் 27 இல் பின்வருமாறு எழுதியது:

இந்தக் கசிவுகள் பெரும்பாலும் ஒரு செய்தியை அறிவுறுத்துவதாக இருக்கலாம்: அதாவது, ரஷ்யா ஐரோப்பாவுக்கு எதிரான அதன் எரிசக்தி போரில் ஒரு புதிய முகப்பைத் திறந்து வருகிறது. முதலாவதாக, அது நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்பாதைகள் வழியாக செல்லும் வினியோகங்கள் உட்பட வினியோகங்களை நிறுத்தி, எரிவாயு வினியோகத்தை ஆயுதமாக்கியது. இப்போது, அது ஒரு காலத்தில் அதன் எரிசக்தியை வினியோகிக்கப் பயன்படுத்திய எரிசக்தி உள்கட்டமைப்பை அதுவே தாக்கி இருக்கலாம்.

ஓர் அமெரிக்க சிந்தனைக் குழுவான ஹெரிடேஜ் அறக்கட்டளை அறிவித்தது, 'நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்பாதைகள் மீதான ரஷ்யாவின் தாக்குதல் என்பது புட்டின் உண்மையிலேயே எரிசக்தியை ஆயுதமாக்கி உள்ளார் என்பதையே அர்த்தப்படுத்துகிறது,” என்றது.

முக்கியமாக, அமெரிக்காவின் பொய்கள் அம்பலப்படுத்தப்பட்ட பின்னரும் கூட, இந்த மூடிமறைப்பு தொடர்ந்தது. ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் கூறுகையில், அந்தத் தாக்குதலில் உக்ரேன் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரம் ரஷ்யா நடத்திய ஒரு 'ஏமாற்றும்' நடவடிக்கையாக இருந்திருக்கலாம் என்று பரிந்துரைத்தார். நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பேர்க் புதன்கிழமை கூறுகையில், '[அதன்] பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எங்களால் தீர்மானிக்க முடியவில்லை,” என்றார்.

அமெரிக்காவோ அல்லது உக்ரேனில் உள்ள அதன் பினாமி படைகளோ சம்பந்தப்பட்டிருந்தன என்பதன் மீதான அம்பலப்படுத்தல் ஒரு சரியான வடிவத்தில் பொருந்துவதாக உள்ளது. ரஷ்ய பாசிசவாத புத்திஜீவி டாரியா டுகினாவின் படுகொலை மற்றும் கெர்ச் பாலம் மீதான குண்டுவீச்சு ஆகியவையும் இதில் உள்ளடங்கும். இந்தக் கெர்ச் பாலம் குண்டுவீச்சு தாக்குதல்களை உக்ரேனிய அரசாங்கம் மீது சாட்டி அடுத்தடுத்து ஊடகச் செய்திகள் வரும் வரையில், அதற்கும் அமெரிக்க மற்றும் உக்ரேனிய அதிகாரிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர்கள் திட்டவட்டமாக அறிவித்து கொண்டிருந்தார்கள்.

செப்டம்பர் 30 குண்டுவெடிப்பை அமெரிக்கா நடத்தியது என்பதை பிளிங்கென் திட்டவட்டமாக மறுத்து வெறும் ஒரு சில நிமிடங்களிலேயே அந்தத் தாக்குதலுக்கான அமெரிக்காவின் நோக்கத்தை அவர் மிகத் தெளிவாக விவரித்தார். பிளிங்கென் அறிவித்தார்:

மேலும் இறுதியாக இது ஒரு மகத்தான வாய்ப்பாகவும் உள்ளது. ரஷ்ய எரிசக்தியைச் சார்ந்திருப்பதை ஒரேயடியாக அகற்றுவதற்கும், அவ்விதத்தில் விளாடிமீர் புட்டின் அவருடைய ஏகாதிபத்திய வடிவங்களை முன்னெடுப்பதற்கு ஒரு கருவியாக எரிசக்தியை ஆயுதமாக்குவதையும் தடுக்க இதுவொரு பாரிய வாய்ப்பாக உள்ளது. இது மிகவும் குறிப்பிடத்தக்கது. இது வரவிருக்கும் ஆண்டுகளுக்கு மிகப் பெரிய மூலோபாய வாய்ப்பை வழங்குகிறது.

உண்மையில் மிகப் பெரிய அமெரிக்க எரிசக்தித்துறை நிறுவனங்கள் இந்த 'வாய்ப்பு' மூலம் பாரியளவில் இலாபம் ஈட்டின. அவை முன்பில்லாதளவில் ஐரோப்பாவிற்கு அதிகபட்ச விலைகளில் திரவு இயற்கை எரிவாயுவை விற்பனை செய்துள்ளன. இது சாதனையளவுக்கு அதிகபட்ச இலாபங்களை அவற்றுக்குக் கொடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டாளிகள் போரை கூடுதலாக விரிவாக்குவதை நியாயப்படுத்த அதையொரு 'வாய்ப்பாக' பயன்படுத்தின.

கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனுக்கும் ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸிற்கும் இடையிலான விவாதங்களில், இந்தக் குண்டுவீச்சு மீதான உத்தியோகப்பூர்வக் கட்டுக்கதைத் தோல்வி அடைந்திருப்பது ஒரு முக்கிய கருப்பொருளாக இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மக்களின் எதிர்வினையையும் இந்த அம்பலப்படுத்தல் மீதான சீற்றத்தை எப்படி கையாள்வது, இந்தக் குற்றகரமான நடவடிக்கை போருக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை விரிவாக்குவதற்கு வழியமைத்து விடாமல் இருப்பதை எப்படி உறுதிப்படுத்துவதே என்பதே பைடென் மற்றும் ஷோல்ஸின் கவலையாக இருந்தது.

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்பாதை மீதான குண்டுவீச்சில் அமெரிக்கா உடந்தையாய் இருந்தது மீதான வெளிப்பாடு மிகவும் அச்சுறுத்தலான கவலையளிக்கும் கேள்விகளை எழுப்புகின்றன. ரஷ்யாவுக்கு எதிராக மட்டுமல்ல மாறாக ஜேர்மனிக்கு எதிராகவும், செயலளவில் ஒரு போர் நடவடிக்கையாகவும் சர்வதேச பயங்கரவாத நடவடிக்கையாகவும் இருக்கக்கூடிய ஒன்றை அமெரிக்கா மேற்கொள்ளும் என்றால், அது இன்னும் என்னென்ன செய்யக்கூடும்?

உக்ரேன் போரில் அமெரிக்கா மிகவும் கடுமையான மற்றும் தொலைநோக்காக நோக்கங்களை சூளுரைத்த பின்னரும், போர்க்களத்தில் உக்ரேனிய இராணுவம் மிகப் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது என்ற தவிர்க்கவியலாத உண்மையும் உள்ளது. இந்தப் போரைக் கூடுதலாக விரிவாக்குவதற்கோ, இத்தகைய நோக்கங்களை அடைவதற்குத் தேவைப்படும் நேட்டோ துருப்புகளை அனுப்புவதற்கோ பொதுமக்களிடையே ஆதரவு இல்லை.

ஒரு பொறுப்பற்ற பொய் அம்பலமானதும் அதன் இடத்தில் அதை விடப் பெரிய, அதைவிட அதிகமாக பொறுப்பற்ற பொய்யை ஜோடிப்பதன் மூலம் விடையிறுப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்றில் ஒரு திட்டவட்டமான போக்காக இருந்துள்ளது. இந்த நோக்கத்திற்குப் பொருந்தும் விதமான மற்றொரு அமெரிக்க ஆத்திரமூட்டல் பற்றி தொழிலாள வர்க்கம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Loading