இத்தாலியின் புளோரன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் நடந்த பாசிசத் தாக்குதலை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

கடந்த 4ம் திகதி சனிக்கிழமை, இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்றனர். இப் பேரணியில் 20,000 (போலீஸ் படி) முதல் 50,000 (CGIL தொழிற்சங்க கூட்டமைப்பு) வரையான மக்கள் கலந்து கொண்டதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், பாசிசத்திற்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட புளோரன்ஸ் வழியாக அணிவகுத்துச் சென்றனர்.

புளோரன்சில் பாசிசத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம், மார்ச் 4, 2023 அன்று பியாஸ்ஸா சாண்டிசிமா அன்னுன்சியாட்டாவில் ஆரம்பப் பேரணி

புளோரன்ஸ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடந்த பாசிசத் தாக்குதலால் இந்தப் போராட்டம் வெடித்தது. பிப்ரவரி 18 அன்று, அதிதீவிர வலதுசாரி 'Azione studentesca' அமைப்பின் உறுப்பினர்கள் விநியோகித்த துண்டுப் பிரசுரங்களை வாங்க மறுத்ததற்காக கிளாசிக் Liceo Michelangiolo பள்ளிக்கு வெளியே மாணவர்கள் தாக்கப்பட்டனர். அந்த துண்டுப் பிரசுரங்களின் உள்ளடக்கத்தால் ஆத்திரமடைந்த இரண்டு மாணவர்கள் அதனை தெளிவாக வெளிப்படுத்தியதால், அவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர்.

ஒரு ஆசிரியர் வரும் வரை, தரையில் விழுந்திருக்கும் ஒரு மாணவனை இரக்கமின்றி அடித்து உதைப்பதை ஒரு வீடியோ கானொளி காட்டுகிறது. இந்த சம்பவத்துக்கு பின்னர், தாக்குதல் நடத்திய ஆறு பேர்கள், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற அரச காவல்துறையின் ஒரு பிரிவினரின்.விசாரணையில் இருப்பதாக நம்பப்படுகிறது.

Liceo Michelangiolo பள்ளி நிர்வாகம் இரு தரப்பையும் கண்டித்து பொதுவாக 'வன்முறையை' கண்டிக்கும் கொள்கையற்ற கோழைத்தனமான அறிக்கையை வெளியிட்டது. அதே நேரம், அயலில் இருக்கும் லிசியோ லியோனார்டோ டாவின்சி பள்ளி முதல்வர் அன்னாலிசா சால்வினோ முற்றிலும் வித்தியாசமாக இந்த சம்பவத்துக்கு பதிலளித்தார். அவர் மாணவர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், இத்தாலிய கம்யூனிஸ்ட்டான அன்டோனியோ கிராம்சினைக் குறிப்பிட்டு, பாசிசத்தின் மீதான அலட்சிய அணுகுமுறைக்கு எதிராக எச்சரித்தார்.

இத்தாலியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் பெரிய கூட்டங்களில் பாசிசம் தோன்றவில்லை. இது அனைத்தும் ஒரு சாதாரண நடைபாதையின் விளிம்பில் தொடங்கியது. அங்கு அரசியல் தூண்டுதலால் தாக்கப்பட்டவர் அலட்சியமான வழிப்போக்கர்களால் தன்னைத்தானே தற்காத்துக் கொள்ள விடப்பட்டார். 'நான் அலட்சியத்தை வெறுக்கிறேன்,' என்று அன்டோனியோ கிராம்ஸ்கி கூறினார், ஒரு சிறந்த இத்தாலியரான அன்டோனியோ கிராம்சி, பாசிஸ்டுகள் மரணம் வரை அவரை சிறையில் அடைத்தனர், ஏனெனில் அவரது கருத்துக்களின் சக்தி பாசிஸ்டுக்களை முயல்களைப் போல பயமுறுத்தியது.

'முழுத் தலைமுறையினரின் எதிர்காலத்தையும் அழிக்கும் வகையில்' தற்காலம் போன்ற காலங்களில்தான் சர்வாதிகாரம் காலூன்ற முடியும் என்பதை அவர் துல்லியமாக சுட்டிக்காட்டி, பின்வரும் எச்சரிக்கையுடன் தனது கடிதத்தை முடித்தார்:


எல்லைகளின் மதிப்பைப் போற்றுபவர்கள், 'மற்றவர்களுக்கு' எதிராக தங்கள் சொந்த முன்னோர்களின் இரத்தத்தை வணங்குபவர்கள், இன்னும் சுவர்களை எழுப்புபவர்களை அவர்களின் பெயரால் அழைத்து தனிமைப்படுத்த வேண்டும். கலாச்சாரம் மற்றும் கருத்துகளின் வலிமையுடன் அவர்களை எதிர்த்து போராட வேண்டும். இந்த கேவலமான எழுச்சி தானே மறைந்துவிடும் என்ற மாயையில் நாம் இருக்கக்கூடாது. பல ஒழுக்கமான இத்தாலியர்களும் 100 ஆண்டுகளுக்கு முன்பு நம்பினர், ஆனால் அது அப்படி நடக்கவில்லை.

இந்த கடிதம் கல்வி அமைச்சர் கியூசெப் வால்டிதாராவை கோபப்படுத்தியது, தீவிர வலதுசாரி லெகா கட்சியின் (Lega), உறுப்பினரான அவர், பள்ளி அதிபரை கண்டிப்பதாக அச்சுறுத்தினார். பிப்ரவரி 23 அன்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், அவர் இந்தத் தாக்குதலை 'மாணவர்களுக்கு இடையேயான அபத்தமான சண்டை' என்றும், 'இதுபோன்ற செய்திகளைப் பரப்புவது ஒரு அதிபரின் வேலை அல்ல' என்றும் கூறினார். சால்வினோவின் கடிதத்தின் உள்ளடக்கம் 'உண்மையுடன் எந்த தொடர்பும் இல்லை. பாசிச அச்சுறுத்தல் அல்லது வன்முறை அல்லது எதேச்சதிகாரத்தை நோக்கி இத்தாலி நகரவில்லை' என்று அமைச்சர் கூறினார்.

பாசிச அலியன்சா தேசியக் கட்சியில் (fascist Alleanza Nazionale party) இருந்து வந்த அமைச்சர் வால்டிதாரா, தீவிர வலதுசாரி நிலைப்பாட்டை எடுத்துள்ளார். “எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் மக்களின் அடையாளத்தை நினைவில் கொள்வதற்கும், பாசிசத்திற்கும் அல்லது அதைவிட மோசமான நாசிசத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை’’ என்று அவர் கூறினார். இறுதியாக, 'இந்த அணுகுமுறை பள்ளி எல்லைக்கு அப்பாற்பட்ட அணுகுமுறையாக மாறினால், இதற்கு நடவடிக்கை எடுப்பது அவசியமா என்பதுபற்றி பார்ப்போம்' என்று பள்ளி அதிபரை அமைச்சர் மிரட்டினார்.

பாசிச ஃபிராடெல்லி டி இத்தாலியா (Fratelli d'Italia -FdI) கட்சியின் தலைவரும், இத்தாலிய பிரதம மந்திரியுமான ஜியோர்ஜியா மெலோனியை பொறுத்தவரை, அவர் இதுவரை இந்த சம்பவம் குறித்து மௌனம் சாதித்து வருகிறார். மெலோனியே பல ஆண்டுகளுக்கு முன்பு, இத்தாலியில் உள்ள தீவிர வலதுசாரி மாணவர் இயக்கமான 'Azione studentesca' க்கு தலைமை தாங்கினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முசோலினியின் ஆதரவாளர்கள் அணிதிரளும் இயக்கமான Movimento Sociale Italiano (MSI) யில் இருந்து, இந்த பாசிச இளைஞர் அமைப்பு மற்றும் அதன் முன்னோடிகளை அறிந்த கொள்ளலாம். புளோரன்சில், 'Azione studentesca' வின் தலைமையகம் மெலோனியின் ஆளும் FdI உள்ள அதே கட்டிடத்தில் உள்ளது.

கல்வி அமைச்சரின் இந்த மிரட்டல் நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தன்னிச்சையாக, புளோரன்சில் இருக்கும் பள்ளி மாணவர்கள் நகரம் முழுவதும் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தனர், மேலும் அமைச்சர் வால்டிதாராவுக்கு எதிராக ஒரு பெரிய கோபம் இணையத்தில் பரவியது. இறுதியாக, 'பள்ளி மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காக' மார்ச் 4 சனிக்கிழமையன்று, புளோரன்சில் ஒரு தேசிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயம் மிகப்பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பான CGILக்கு ஏற்பட்டது.

சனிக்கிழமை நண்பகல் தொடக்கப் பேரணியில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் புளோரன்ஸ் தொழிலாளர்களும் ஒன்று கூடினர். பிராந்தியம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள், அதிபர் சால்வினோவுக்கு தங்கள் ஒற்றுமையைக் காட்ட முன் வந்தனர். புளோரன்ஸ் நகரம் ''பாசிசத்திற்கு எதிரானது'' என்பதை பதாகைகள் வலியுறுத்தின. அமைச்சர் வால்டிதாராவை ராஜினாமா செய்யக் கோரும் பதாகைகளில், முசோலினிக்கு பொருத்தமான அவரது உருவங்கள் வரையப்பட்டிருந்தன.

புளோரன்சில் பாசிசத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம், பியாஸ்ஸா சாண்டா குரோஸில் நிறைவு பேரணி, மார்ச் 4, 2023

ஐந்து நட்சத்திர இயக்கத்தின் (M5S) தலைவர் காண்டே மற்றும் ஜனநாயகக் கட்சியின் (PD) செயலாளரான ஷ்லீனின் சந்திப்பை பற்றியே ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தின. இந்தப் போராட்ட அணிதிரட்டலின் வெடிப்புத்தன்மையை அகற்றும் முயற்சியில், 'அடிப்படை மோதல்களில்' 'ஒத்துழைப்பு'க்காக ஷ்லீனின் அழைப்புவிடுத்தார். ஃபிராடெல்லி டி இத்தாலியா, லெகா மற்றும் பெர்லுஸ்கோனியின் ஃபோர்ஸா இத்தாலியா ஆகிய கட்சிகளின் அரசாங்கத்திற்கு எதிராக சண்டையிடும் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்றுசேர்ந்து செயல்படும் என்று  அவை சுட்டிக்காட்டின.

இது சிறிதளவு முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்பது போல் தோன்றினாலும், உண்மையில், 'மைய-இடது' முகாமின் வலதுசாரி, தொழிலாள வர்க்க விரோதக் கொள்கைகள்தான் மெலோனி அதிகாரத்திற்கு வருவதற்கு வழி வகுத்தது. கடந்த தேர்தல்களுக்கு முன், PD மற்றும் M5S ஆகிய கட்சிகள், தங்கள் 'ஒத்துழைப்பின்' ஒரு பகுதியாக Lega கட்சியுடன் ஒரு கூட்டணியை கூட உருவாக்கின.

சனிக்கிழமையன்று, இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், பரந்த கோரிக்கைகளை எழுப்புவதற்கான வாய்ப்பாக இப் போராட்டத்தை பயன்படுத்திக் கொண்டனர். எடுத்துக்காட்டாக, குறைந்தபட்ச ஊதியம், புதிய குடியேற்றக் கொள்கை, சுகாதாரம் மற்றும் கல்வியில் முதலீடு (இராணுவத்தை விட) மற்றும் பள்ளிகளில் பாசிச எதிர்ப்புப் பிரச்சினைகளை பேசுவதற்கு ஆசிரியர்களுக்கு உள்ள சுதந்திரம் என்பன இதில் உள்ளடங்கும். கடந்த காலங்களில் PD அல்லது M5S அரசாங்கத்தால் எடுத்துக் காட்டியுள்ளபடி, இக் கட்சிகளால் இந்த கோரிக்கைகளை ஒருபோதும் உணர முடியாது.

எப்படியிருந்தாலும், இந்த சவால்கள் ஜியோர்ஜியா மெலோனி அரசாங்கத்தின் நெருக்கடியின் மீது கடுமையான வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அமைதியின்மை மற்றும் எதிர்ப்புக்கள் என்பன இத்தாலி முழுவதும் வளர்ச்சியடைந்து வருகின்றன. மத்தியதரைக் கடலில் கொலைகார அகதிகள் கப்பல் விபத்துக்களுக்கு பொறுப்பான மிருகத்தனமான அகதிகள் கொள்கை மட்டுமல்ல, ஆழ்ந்த சமூக நெருக்கடிகள் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரில் அரசாங்கத்தின் இராணுவவாதம் மற்றும் உக்ரேனுக்கு மெலோனியின் ஆயுத விநியோகம் ஆகியவையும் இந்த நெருக்கடிகளுக்கு  பங்களிக்கிறது.

Loading